இலங்கையைப் பொறுத்தவரை இன்று கவலைக்குரிய தினமாகும் – தினேஷ் குணவர்தன

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு மேற்குலக நாடுகளினால் முடியாமல் போயுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஒரு நாடு தொடர்பில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, அதனை அந்த நாடு ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில் பிரேரணையில் உள்ள விடயங்களை அமுல்படுத்துமாறு அழுத்தம் பிரயோகிக்க முடியாது.

எனவே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் உள்ளகப்பொறிமுறைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டதையடுத்து இன்று செவ்வாய்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இலங்கையைப் பொறுத்தவரை இன்று கவலைக்குரிய தினமாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித்தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ பிரதமராகத் தெரிவானார்.

அதனைத்தொடர்ந்து ஏற்கனவே எமது நாடு மிகமோசமான பாதையில் பயணிப்பதற்குக் காரணமாக அமைந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தோம்.

உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலினால் பாரிய நெருக்கடி நிலையொன்றுக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழ்நிலையில், அதனை எதிர்கொள்வதற்கு அவசியமான உதவிகளே வழங்கப்பட வேண்டும்.

மாறாக ஒவ்வொரு நாடுகளுக்கு எதிராகத் தீர்மானங்கள் கொண்டுவரப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்தவகையில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை உள்ளடக்கியதாக அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதனை எதிர்க்குமாறு நாம் ஏனைய நாடுகளை வலியுறுத்தியிருந்தோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைப் பொறுத்தமட்டில், அது அதன் கொள்கைகளுக்கு முரணாக செயற்பட முடியாது.

குறிப்பாக ஒவ்வொரு நாடுகளையும் மையப்படுத்திய தனித்த தீர்மானங்களை முன்வைத்து, அவற்றை நிறைவேற்ற முடியாது.

எனினும் அதற்கு முரணாகவே பிரிட்டன் தலைமையிலான நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றை முன்வைத்தன.

இருப்பினும் அதன் மீதான வாக்கெடுப்பின் போது அந்தப் பிரேரணைக்குப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் செலுத்தப்பட்டிருப்பதுடன் 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஆகவே மொத்தமாக 47 உறுப்புநாடுகளில் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகள் மாத்திரமே கிடைத்திருப்பதுடன் ஏனைய 25 நாடுகள் அதனை நிராகரித்திருக்கின்றன.

இந்நிலையில் ஒரு நாடு தொடர்பில் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, அதனை அந்த நாடு ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில் பிரேரணையில் உள்ள விடயங்களை அமுல்படுத்துமாறு அழுத்தம் பிரயோகிக்க முடியாது.

அதேவேளை ஏற்கனவே கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைய தொடர்பில் ஆராய்வதற்கென உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான விசேட ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருக்கிறார்.

அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, இதுவிடயத்தில் நாட்டின் சுயாதீனத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் உள்ளகப்பொறிமுறைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அதேவேளை எமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு அனைத்து நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருக்கின்றது. முக்கிய தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் அவ்வமைப்பினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

எனினும் நாம் போரை முடிவிற்குக்கொண்டுவந்து, அனைத்து இனமக்களும் அமைதியாக வாழக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்பியிருக்கின்றோம்.

வெளிநாடுகளின் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைதருவதற்குப் பெரிதும் விரும்புகின்றார்கள். எனினும் எமக்கெதிராகத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கும் நாடுகள் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

அதேவேளை மாகாணசபைத்தேர்தலை நடத்துவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், கடந்த அரசாங்கத்திலேயே மாகாணசபைத்தேர்தல் நடத்தப்படுவதைத் தடுக்கும் வகையிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே மீண்டும் மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்கான அனுமதி பெறப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஜெனிவா தீர்மானம் சம்பந்தமாக ரெலோ அதிருப்தி – ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

இன்று மனித உரிமைப் பேரவையில் தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுத்தரும் முகமாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை அங்கத்துவ நாடுகளில் பெரும்பான்மை அனுசரணையோடு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்தப் பிரேரணையில் உள்வாங்கப்பட்ட விடயங்கள் நீதி வேண்டி நிற்கும் தமிழ் மக்களுக்கு சர்வதேச ரீதியிலே பரிகார நீதியை பெற்றுக்கொள்ள வழி அமைத்திருக்கவில்லை என்பதை நாம் ஆழ்ந்த கவலையோடு அவதானிக்கிறோம்.

தமிழ் தேசியக் கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் ஒன்றிணைந்து சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி தமிழ் மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும் என்றும் அதற்கு வலுசேர்க்க சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்றும் முன்வைத்த கோரிக்கைகளை இந்த பிரேரணை கருத்தில் கொள்ளவில்லை என்பதில் நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம்.

தொடர்ந்தும் இந்த பிரேரணைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டாலும் இலங்கை அரசாங்கத்தினால் அவை இணை அனுசரணை வழங்க படாமலும், வழங்கினாலும் அவை நிறைவேற்ற படாமலும் இழுத்தடிப்பு செய்கின்ற நிலைமை கடந்த பல வருடங்களாக காணப்படுகிறது. ஆகவே மேலும் மனித உரிமைச் பேரவையில் இந்த நீதியை பெற்றுத் தருவதற்கான பிரேரணையை நிறைவேற்றும் முகமாக சர்வதேச நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்து ஐநா செயலாளரிடம் நாயகத்திடம் கையளிப்பதன் மூலமே எமது மக்களுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேற்கொண்டு மனித உரிமைப் பேரவையில் இந்த விடயத்தினை இழுத்தடிப்பு செய்வது எம் மக்களுக்கான நீதியை பெற்றுத் தருவதற்கான சந்தர்ப்பங்களை அரிதாக்கிக் கொண்டு செல்வதை நாம் அவதானிக்கிறோம்.

அதே நேரம் இந்தியா எமது அண்மையில் இருக்கும் எங்கள் நலன்களில் அக்கறை கொண்ட நாடாக நாம் நம்பி வந்ததோடு இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தோம். இந்த சந்தர்ப்பத்தில் , எமது மக்களுக்கான நீதியைப் பெற சர்வதேச மட்டத்தில் இந்தியாவின் ஆதரவு மிக அவசியம் என்பதை வலியுறுத்துவதோடு நடுநிலைமை போக்கானது எமது தமிழ்த் தேசிய இனம் அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் எம்மக்களுக்கான நீதியை சர்வதேச சமுகத்தின் நேர்மையான ஆதரவோடு, இந்தியாவின் காத்திரமான பங்களிப்பின் மூலமாக எங்களுக்கான பரிகார நீதி, புலன் விசாரணை மற்றும் அரசியல் தீர்வு என்பவற்றை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் பரிபூரண இந்தியாவினுடைய ஆதரவைப் பெறுவதற்கும் அரசியல் ரீதியான நகர்வினை மேற்கொள்ள நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம்.

இதன் முதல்படியாக இந்திய பிரதமர் உட்பட அரசியல் தலைவர்களை சந்திக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்.

பூகோள நலன் சார்ந்த அரசியல் நகர்வுகளில் நம் மக்களுக்கான நீதியையும் தீர்வினையும் பெற்றுக்கொள்ள எமது கட்சி முன்னெடுக்கவிருக்கும் முயற்சிகளுக்கு நம் தேசத்திலும் புலம்பெயர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் பரிபூரண ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் கோரி நிற்கிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானத்தை வழக்கம்போல நிராகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திற்கு எதிராக சீனா வாக்களித்துள்ளது.

மேலும் இந்த பிரேரணை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.

இதேவேளை ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாக அறிவித்துள்ள அதேவேளை வாக்களிப்பில் இருந்து விலகுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான ஐ.நா. ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவிப்பு!

இலங்கையில் பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் கால அவகாசம் வழங்குவது சாத்தியமான விடயமல்ல என்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையினால் அதன் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

குறித்த பதிவில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்கும் ஏதுவான வகையில் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைக்கு உறுப்புநாடுகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அத்தோடு பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் காலம் வழங்குவதென்பது சாத்தியமான அல்லது பொறுப்புவாய்ந்த அணுகுமுறையாக இருக்காது என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை முழுமையாக ஆதரிக்கின்றோம்” என பதிவிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றம் 22 ஆதரவு: 11 எதிர்ப்பு: 14 தவிர்த்தது

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு குறித்து பிரித்தானியா தலைமையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 4 மணியாளவில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததுடன் 11 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் 14 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்திருந்தன.

இந்நிலையில், இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானம் அமைந்துள்ளதாக வாக்கெடுப்பின் போது பிரித்தானியா தெரிவித்துள்ளது.

அத்துமீறிய தலையீடாகவே இலங்கைக்கு எதிரான தீர்மானம் அமைந்துள்ளது எனவும் இலங்கை அதனை கடுமையாக எதிர்ப்பதாகவும் அமர்வில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் அரசியல்மயப்பட்ட இரட்டை நிலைப்பாட்டையுடையதென ஜெனிவா அமர்வில் சீனா தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் பொறுப்புக்கூறலிலும் இலங்கையின் ஈடுபாட்டை தாம் வரவேற்பதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.

நடுநிலையற்ற இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தாம் எதிர்ப்பதாக ஜெனிவாவில் ரஷ்யா அறிவித்துள்ளது.

இலங்கை தமிழர்களின் அனைத்து வித அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து 13 அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என ஜெனிவாவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, இலங்கை குறித்த தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனா, பாகிஸ்தான்,பங்களதேஷ்,கியூபா,ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக ஜெனிவாவில் வாக்களித்துள்ளன.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

குறித்த பிரேரணையை பிரித்தானியா தலைமையிலான ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன.

47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாமென இலங்கை நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், நோபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய வலய நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கைக் கோரியுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த விடயம் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், வாக்களிப்பில் பங்கேற்காமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், இலங்கைக்கு ஆதரவளிக்க சீனா தீர்மானித்துள்ளதாக ஜெனீவாவிற்கான சீனாவின் நிரந்தர வதிவிட பிரிதிநி குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும் என்றதன் அடிப்படையில் இலங்கையை சீனா ஆதரிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை தொடர்பாக இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் சில திட்டமிடல் பிரச்சினைகள் காரணமாக வாக்கெடுப்பை ஒத்திவைக்க ஜெனீவாவில் உள்ள அதிகாரிகள் தீர்மானித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம், இந்த தீர்மானத்தை ஆதரிக்க பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துள்ளதால், வாக்களிப்பு சிறீலங்காவுக்கு எதிராக முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஐ.நா.வில் சிறீலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் -ப.சிதம்பரம்

ஐ.நா. வில் சிறீலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்ட தொடர் தற்போது ஜெனீவாவில் இடம்பெற்று வரும் நிலையில், சிறீலங்காவில் இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு சிறீலங்கா அரசை பொறுப்பேற்குமாறு வலியுறுத்தும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

சிறீலங்காவுக்கு எதிரான இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதை ஏற்று இந்தியாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இந்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக 6 நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் வாக்கெடுப்புக்கு இன்று (22) வரவுள்ள நிலையில், அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் அதற்கான நீதி வழங்கப்படாத நிலை உள்ளது. இது தொடர்பான விவாதம் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான தீர்மானம் இன்று மார்ச் 22ஆம் திகதி மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும் படி இலங்கை அரசு இந்தியாவைக் கேட்டுக்கொண்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக பிரிட்டன் உள்ளிட்ட ஆறு நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கும் கடிதமும் எழுதியிருந்தோம். இந்நிலையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று அந்நாட்டு அமைச்சர் தெரிவித்திருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய நிலை குறித்து கருத்து தெரிவித்த இந்திய பிரதிநிதி, 1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 13வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று இலங்கை தரப்பில் கூறியிருந்தாலும் இந்திய அரசு தரப்பில் இதுவரை எந்த உறுதியான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இன்று ( 22 ) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை மார்ச் 23ஆம் திகதி நடைபெறும் என்று தெரிகிறது. பெரும்பாலான நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க உள்ள நிலையில் நிச்சயமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்தச் சூழலில் இந்திய அரசு அந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தாலோ அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தாலோ அது முழுக்க முழுக்க தமிழர் விரோத நிலைப்பாடாகவே கருதப்படும். எனவே, இந்திய அரசு தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

ஈழத்தமிழர் பிரச்னைக்கு இந்தத் தீர்மானம் முழுமையான தீர்வளிக்குமென்றோ இனப்படுகொலைக்கு முழுமையான நீதியை வழங்குமென்றோ கூறமுடியாது என்றாலும், தொடர்ந்து இலங்கை அரசை சர்வதேசக் கண்காணிப்பில் வைத்திருக்கவும் ஈழத்தமிழர் அமைப்புகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுத்த கோரிக்கையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை என்பதை நோக்கி நகர்த்துவதாகவும் இது நிச்சயம் அமையும். எனவே, அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீா்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்: 2009-இல் தமிழ் மக்களை இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது. 12 ஆண்டுகளைக் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. இப்போதும் தமிழா்களுக்கு எதிராக இன ரீதியான அத்துமீறல்கள் இலங்கை அரசால் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மாா்ச் 23-ஆம் தேதி தீா்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த தீா்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்.

இந்தியாவுடனான நட்புறவில் இலங்கை எப்போதும் நாடகத்தன்மையோடு நடந்துகொண்டு, சீனாவுடனே உறவை மேம்படுத்தி வருகிறது. இது எதிா்காலத்தில் இந்தியாவுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருக்கும்.

பிரதமா் நரேந்திரமோடி சென்னையில் பிப்ரவரி 14-ஆம் திகதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இலங்கையில் தமிழா்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும், சமஉரிமையுடனும் வாழ்வதை உறுதி செய்வோம் என்று கூறினாா். அந்த அடிப்படையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீா்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.

இலங்கையின் போா்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சாா்பில், கொண்டுவரப்படும் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இலங்கைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளா் ஜெயநாத் கொலம்பகே அளித்துள்ள பேட்டியும் – அந்தப் பேட்டியின் மீது இதுவரை எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதி காக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் மௌனமும், உலகத் தமிழா்கள் இடையேயும், தமிழகத்திலும், பேரதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈழத் தமிழா்கள் மீதான இலங்கை அரசின் போா்க்குற்றம் தொடா்பாக ஐ.நா. மன்றத்தில் திங்கள்கிழமை எடுத்துக் கொள்ளப்படும் தீா்மானத்தின் மீதான விவாதத்தின் போது – அந்த தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பது மட்டுமின்றி, இலங்கையின் போா்க்குற்ற விசாரணை சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குச் சென்றிடும் வகையில் – உறுப்பு நாடுகளின் ஆதரவை திரட்டி – உரிய திருத்தங்களுடன் அந்தத் தீா்மானம் நிறைவேறிட பிரதமா் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழா்களை அவமதித்து, அவா்களுக்கு அநீதி இழைத்து, இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் எடுத்திட வேண்டாம் என்றும் – தமிழ் நெஞ்சங்களின் நிரந்தரமான பழிச்சொல்லுக்கு ஆளாகிட வேண்டாம் என்று பிரதமரைக் கேட்டுக் கொள்வதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளாா்

இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா மேற்கொண்டுள்ள தீர்மானம் அதிர்ச்சி அளிக்கின்றது!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை மீதான வாக்கெடுப்பின் போது, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா மேற்கொண்டுள்ள தீர்மானம் அதிர்ச்சி அளிப்பதாக, தமிழ்நாடு மாநில எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க ஸ்டாலின் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என, இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்காமல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருப்பது தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின்போது கூட, ஈழத் தமிழர்கள் தொடர்பான அக்கறையுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற வாக்கெடுப்புகளில் இந்தியா இலங்கைக்கு எதிராகவே வாக்களித்துள்ளமையை பா.ஜ.க அரசு மறந்து செயற்படுவதாகவும், மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, இலங்கைத் தமிழர்களை அவமதித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் என, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாடு மாநில எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Image

Posted in Uncategorized