ஐ.நா.தீர்மானத்தை நிராகரித்தால் நெருக்கடிகள் அதிகரிக்கும் : 3 தெரிவுகளே அரசுக்கு உள்ளன என்கிறார் தயான்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய பிரேரணையில் இலங்கை பற்றி மீளாய்வுக்காலம் ஆறுமாதங்களாக சுருக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக நிரகாரித்தால் மேலும் மேலும் நெருக்கடிகளே அதிகரிக்கும் என்று ஐ.நா.வுக்கான முன்னாள் வதிவிடப்பிரதிநிதியும் எதிர்க்கட்சித்தலைவரின் சர்வதேச உறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகருமான கலாநிதி.தயான் ஜயத்திலக தெரிவித்திருந்தார்.

தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு மூன்று தெரிவுகளே காணப்படுகின்றன என்றும் அதில் எதனைத் தெரிவு செய்யப்போகின்றது என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் நிறைவேற்றப்படும் இலங்கை பற்றிய தீர்மானத்தினை நிராகரிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து அறிவதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை உள்ளிட்ட நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்காது.

துரதிஷ்டவசமாக, தற்போது பதவியில் உள்ள ஆளும் தரப்பினருக்கு அவ்விதமான சமிக்ஞைகள் எதனையும் கடந்த காலத்திலும் சரி தற்போதும் சரி வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே அதனை எதிர்ப்பதாக கருத்தக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் தற்போதைய பிரேரணை நிறைவேற்றப்படுமாக இருந்தால் இலங்கை முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ளது. அந்த விடயங்களை மேற்கொண்டே ஆக வேண்டும்.

ஏனெனில் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கையினை சமர்ப்பிக்கும் காலம் ஆறு மாதங்களாக சுருக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் நல்லிணக்க, மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களுக்கான செயற்பாடுகளைக் காண்பிக்க வேண்டும் அவ்வாறு இல்லாது விட்டால் மேலும் மேலும் நெருக்கடிகளே ஏற்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகரிக்கும்.

தற்போதை நிலையில் ஆட்சியாளர்களுக்கு மூன்று தெரிவுகளே காணப்படுகின்றன. முதலாவதாக முற்றாக ஐ.நா.தீர்மானத்தினை எதிர்த்து சர்வதேசத்தினைப் பகைத்துக்கொண்டு நடைபெறுவைக்கு முகங்கொடுப்பதாகும்.

இரண்டாவதாக, மாகாண சபைமுறைகளின் அதிகாரங்களை நீக்கி தேர்தலை நடத்தவிட்டு பின்னர் புதிய அரசியலமைப்பின் பெயரில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நீக்கிவிட்டு அதிகாரக்குவிப்பைச் செய்து இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தினை காலங்கடத்தி ஏமாற்றுவதோடு அவ்வப்போது நெருக்கங்களையும் விரிசல்களையும் காண்பித்து சீரற்ற நிலைமைகளை பேணுதல். அதுமட்டுமன்றி இனக்குழுமங்களை மையப்படுத்திய நெருக்கடிகளை ஏற்படுத்துதல் மூன்றாவதாக, நிலைமைகளைப் புரிந்து ஐ.நா.தீர்மானத்திற்கு அமைவாக உள்நாட்டில் தேசிய ரீதியிலான வெளிப்படைத்தன்மையுடனான பொறிமுறையொன்றை ஏற்படித்தி ஒவ்வொரு ஆறுமாதகாலத்திற்கும் மீளாய்வு செய்யப்படும்போது முன்னேற்றகரமான நிலைமைகளை வெளிப்படுத்தல்.

இந்தத் தெரிவுகளுக்குள் ஒன்றை கையிலெடுக்கும் போது அதற்கான பிரதிபலன்களும் உடனுக்குடனே கிடைக்கும் என்றார்.

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களிற்கும் ஊடகவியலாளர்களிற்கும் ஜனாதிபதி கடும் எச்சரிக்கை

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர் தான் நினைக்கும் விதத்தில் நாட்டை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது குறித்தும் எச்சரித்துள்ளார்.

வலப்பனையில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.ஊடகங்க நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஊடக சுதந்திரம் குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது

ஊடக நிறுவனங்களில் புதுமையானவர்களே உள்ளனர். ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவனத்தின் உரிமையாளரின் சுதந்திரம் அல்ல. அதுவல்ல ஊடக சுதந்திரம். அது ஒரு மாஃபியா. ஊடக உரிமையாளருக்கு தேவையான விதத்தில் நாட்டைக் கொண்டு செல்வதற்கு முயல்வதாக இருந்தால் அது ஒரு மாஃபியா. அதுவே இடம்பெறுகின்றது.

நாட்டில் அரசர்கள் இல்லை. மகாராஜாக்களும் இல்லை. மகாராஜாக்கள் இந்தியாவில் இருந்தார்கள். இங்கு மாஃபியாவே இடம்பெறுகின்றது. மன்னர் நிர்வாகிகள் நாட்டை நிர்வகிக்க முயல்வதாக இருந்தால், அது என்னுடன் முடியாது.

அதற்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். தேவையெனின் கற்பிக்கும் முறையும் எனக்குத் தெரியும். நான் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். 14 மாதங்கள் நான் நாட்டை நிர்வகித்துள்ளேன். எந்தவொரு ஊடகத்திற்கும் எந்தவொரு அழுத்தத்தையும் விடுக்கவில்லை. எனினும், அவர்கள் இதனை தவறாக பயன்படுத்தினால் அதற்கும் சட்டங்கள் உள்ளன. செய்ய முடியுமான முறைகளும் உள்ளன. அதனை நான் செயற்படுத்துவேன்.

அந்த ஊடகம் மாத்திரம் அல்ல தேசிய சிந்தனையில் உள்ள ஊடகங்களிலும் சிலர் கும்புக் மரங்களை வெட்டியதாக பொய்யான தகவல்களை வௌியிட்டிருந்தனர். யார் என்று நான் தேடிப் பார்த்தேன். அந்த ஊடகமே யுத்த காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்டது. அவர்களே தற்போது நுழைந்து இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்ட குழுவினரே மீண்டும் எழுந்துள்ளனர்.

இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கான இலக்கை அடைய ஜெனிவா முக்கிய பங்காற்றும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்கான இறுதி இலக்கினை எட்டுவதற்கான முக்கிய பங்காற்றும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வீரகேசரிக்கு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக பொறுப்புக்கூறல் இலக்குகளை அடைய முடியுமா ?,

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் பிரித்தானியாக கொண்டுவந்துள்ள பிரேரணை நிறைவேற்றப்படுமா?,

இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்தால் பிரித்தானியாவின் அடுத்த கட்ட செயற்பாடு என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் கொழும்பில் உள்ள இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலத்திடம் மின்னஞ்சல் மூலமாக வினவியபோது, அதன் பேச்சாளர் ஒருவர் வழங்கிய பதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நல்லிணக்கத்தை அடைவதற்கும், நீதியினைப் பெற்றுக்கொள்வதற்கும், அதேபோன்று உண்மையினைக் கண்டறிவதற்குமான சிறந்த வழியாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவை என்ற கட்டமைப்பு என்பதே சரியான வழியாக இருக்குமென 2020பெப்ரவரி, ஜுன், செப்டம்பர், ஆகிய மாதங்களில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட எமது அறிக்கைகளில் இணை அனுசரணை வழங்கும் குழுவானது மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

உள்ளுரில் வினைத்திறன் மிக்க பொறிமுறைகள் தோற்றம் பெறாதிருக்கும் நிலையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதலை அடைவதற்கான இறுதி வழிமுறையை எட்டுவதற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது தொடர்ந்தும் மிக முக்கியமான பங்கினைக் கொண்டிருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை தொடர்ந்தும் வைத்திருத்தல் இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாடு மீதான சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கவனத்தினை சமிக்ஞையிடுதல், ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரசன்னத்தை உறுதிப்படுத்தி தொடர்ச்சியான அறிக்கையிடலை மேற்கொள்வதற்கும் சாட்சியங்களை சேகரித்து பேணுதல், ஆகிய விடய ங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினை கோருவதற்கான புதிய தீர்மானமொன்றிற்கு ஆதரவினைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் மிகவும் கடினமாக செயற்பட்டு வருகின்றோம். இதுவரையிலான பொறுப்புக்கூறும் கடப்பாட்டின் பலாபலன்களை பாதுகாப்பதற்கு இது மிகவும் முக்கியமானதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் பதவிக்கு கோவிந்தன் கருணாகரம் தெரிவு!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் பதவிக்கு வாக்கெடுப்பில் வெற்றியீட்டிய கோவிந்தன் கருணாகரம் தெரிவு,

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று மாலை 2 மணியளவில் புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பமானது,

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு பொதுக்குழு கூட்டம் இடம்பெற்றது.

இதில் செயலாளர் பதவிக்கு கோவிந்தன் கருணாகரன் (ஜனா) மற்றும் கென்றி மகேந்திரன் ஆகியோர் இருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இறுதியில் வாக்கெடுப்பில் வெற்றியீட்டிய பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பில் ரெலோ கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்துவைப்பு!

தமிழ் ஈழ விடுதலைஇயக்கம் (ரெலோ) கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் 20.03.21 அன்று புதுக்குடியிருப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களினால் கட்டத்தின் பெயர்பலகையினை திரைநீக்கம் செய்துவைத்துள்ளதுடன் கட்டத்தினை நாடாவெட்டி திறந்துவைத்துள்ளார்.

இதன்போது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,விநோநோகராதலிங்கம்,கோவிந்தன் கருணாகரம்,மற்றும் முன்னால் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

Posted in Uncategorized

கரைத்துறைப்பற்று தவிசாளர் பதவி விலகினார்

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பி்ரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை தமிழ் தேசியகூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

அதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை ஆட்சிகாலப்பகுதியில் இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு வகிப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிளட் மற்றும் ரெலோ கட்சிகளிற்கிடையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்ப்படுத்தப்பட்டிருந்தது.

அதற்கமைய தவிசாளர் பதவியை பிளட்டுக்கு வழங்கும் நோக்குடன் வவுனியா தெற்குதமிழ் பிரதேசசபையின் தவிசாளர் து.நடராயசிங்கம் தனது பதவியை கடந்தவாரமளவில் ராஜினாமா செய்திருந்தார்.

இதேவேளை இரண்டுதினங்களின் பின்னர் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் பிளட்டை சேர்ந்த தவிசாளர் பதவி விலகல் முடிவினை எடுக்கவில்லை என தெரிவித்து தனது ராஜினாமா முடிவினை மீளப்பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் தனது பதவியை இன்று ராஜினாமாசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பதவி விலகல் கடிதத்தை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் அரசியில் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலைமுன்னணியின் நிர்வாக செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக அந்த கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் சந்திரகுலசிங்கம் மோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் மீண்டும் பதவி விலகல் கடிதத்தை சமர்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Posted in Uncategorized

இந்தியாவின் ஆலோசனை எமக்கு தேவையில்லை : இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

மாகாணசபை தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும். இவ்விடயத்தில் இந்தியாவின் ஆலோசனை பெற வேண்டிய தேவை கிடையாது.

வெள்ளை யானையாக கருதப்படும் மாகாண சபை முறைமையினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல தயாரில்லை என தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

மருதானையில் நேற்று முன்தினம் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வெள்ளை யானையாக சித்தரிக்கப்பட்டுள்ள மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியமற்றது என்பது பெரும்பாலான மக்களின் அபிப்பிராயமாக காணப்படுகிறது.

மாகாண சபை தேர்தல் அவசியமான , இல்லையா என்பது தொடர்பில் நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் இவ்விடயத்தில் இந்தியாவிடமும், இந்திய மக்களிடமும் ஆலோசனைகளை கோருவது பயனற்றது.

பலவீனமான மாகாண சபை முறைமையினை தொடர்ந்து வலுப்படுத்த நாம் தயாரில்லை.மாகாண சபை முறைமையின் கீழ் வீண் செலவுகள் மாத்திரமே மிகுதியாகுகின்றன.

மாகாண சபை தேர்தலை விடுத்து உள்ளூராட்சிமன்றங்களை பலப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற சபைகளிலும் அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

மாகாண சபை முறைமையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. குறைபாடுகளுடன் மாகாண சபைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது. ஆகவே மாகாண சபை முறைமை குறித்து உறுதியான தீர்மானம் வெகுவிரைவில் எடுக்கப்படும் என்றார்.

Posted in Uncategorized

முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைக்கும் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் அதிகரிக்கலாம்: சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கையில் முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படாவிட்டால், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்றும் அதன் விளைவாக நிலைபேறான சமாதானத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அஞ்சுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இலக்கு வைக்கப்படும் இலங்கையின் முஸ்லிம் சமூகமும் அதிகரித்துவரும் ஓரங்கட்டப்படலும் என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

அண்மைக் காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தீர்மானங்கள் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்திருப்பதுடன் அந்தச் சமூகத்தை ஓரங்கட்டும் வகையிலும் அமைந்துள்ளன. அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள், தீர்மானங்கள் மற்றும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள் என்பன இலங்கையின் மொத்த சனத்தொகையில் 9 சதவீதமாக உள்ள முஸ்லிம் சமூகத்தின் மீது பாகுபாடு காண்பிக்கும் வகையில் அமைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்மைக்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயத் தகனத்திற்கு உட்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானம் மற்றும் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து இடம்பெற்ற வன்முறைகள் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடமுடியும்.

இம்மாதத்தில் கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதிக்கு இடைப்பட்ட 9 நாட்களில் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், அமைச்சரவை யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் என்பன பதிவாகியுள்ளன.

அவற்றின் புர்கா மற்றும் நிகாபை தடைசெய்வதற்கான அமைச்சரவை யோசனை, மத்ரஸா பாடசாலைகளைத் தடைசெய்வதற்கான அமைச்சரவை யோசனை, நாட்டில் வெளிவரும் அனைத்து இஸ்லாமிய நூல்களையும் கண்காணிப்பிற்கு உட்படுத்தல், இன மற்றும் மத ரீதியிலான அடிப்படைவாதச் செயல்கள், வன்முறைகளில் ஈடுபடுவோரைப் புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் போன்ற விடயங்கள் பதிவாகியுள்ளன.

Posted in Uncategorized

கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்திய மேஜர் விடுவிப்பு

இலங்கையின் பிரித்தானியாவுக்கான லண்டன் தூதுரக முன்னாள் பிரதானி மேஜர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரித்தானிய உயர் நீதிமன்றம், இன்று (20) இரத்துச் செய்துள்ளது.

லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு இலண்டனில் போராட்டம் நடத்தியிருந்த தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக பிரியங்க பெர்னாண்டோ சைகை மூலம் காட்டியிருந்தமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பிரியங்க பெர்னாண்டோவை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.

அத்துடன், அவருக்கு 2400 பவுண்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டது. குறித்த அபராத தொகையை பிரியங்க பெர்னாண்டோ செலுத்தாத நிலையில் அவரை உடனடியாக கைதுசெய்யுமாறு மேற்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனாலும், அவரை கைதுசெய்யமுடியாது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்படி உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.

அச்சுறுத்தல்கள், தடைகளையும் தாண்டி சர்வதேச நீதிவேண்டி மட்டக்களப்பில் எழுச்சிப் பேரணி

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் மத்தியில் சர்வதேச நீதிகோரி மாபெரும் பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த நீதிகோரிய எழுச்சிப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் சர்வதேச நீதிகோரி முன்னெடுக்கப்பட்டு வந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தின் 17 ஆவது நாளான இன்று அதனை நிறைவுறுத்தும் வகையிலும், இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிகோரிய வகையிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தப் போராட்டமானது மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் குறித்த போராட்டத்தில் ஈடுபடுவோர் என்ற ரீதியில் 25 பேருக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

குறிப்பாக காந்தி பூங்கா,மாமாங்கம் ஆகிய பகுதிகளிலில் போராட்டம் நடாத்துவதற்கு நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்ததுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் வட-கிழக்கு ஒருங்கிணைப்பாளர்களான தவத்திரு வேலன் சுவாமிகள், எஸ்.சிவயோகநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலருக்கும் நேற்றைய தினம் தடை உத்தரவுகள் வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்பட்டதுடன் மாமாங்கேஸ்வரர் ஆலய மதில்களிலும் தடை உத்தரவுகள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று காலை மட்டக்களப்பு நகரில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நீர்த் தாரைத் தாக்குதல் மேற்கொள்ளும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததுடன் கலகமடக்கும் பொலிஸாரும் நிறுத்தப்பட்டு மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக அச்சநிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

பொலிஸாரின் அச்சுறுத்தல்கள் மற்றும் நீதிமன்றத் தடை உத்தரவுகள் காரணமாக போராட்டம் நடைபெறும் இடம் திடீரென மாற்றப்பட்டது. மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குள் தடையுத்தரவு காரணமாக அவை மாற்றப்பட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் முன்னெடுக்கப்பட்டது.

சித்தாண்டி மாவடிவேம்பு மருங்ககையடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஒன்றுகூடியவர்கள் அங்கிருந்து பேரணியாக சித்தாண்டி சந்திப் பிள்ளையார் ஆலயம் வரையில் சென்றனர்.

தமிழர் தாயகத்தினை அங்கீகரிக்கவும், இந்திய இராணுவத்தினை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்றுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதி தாய் உண்ணாவிரதம் ஆரம்பித்த இன்றைய தினத்தில் தமிழர்களுக்கான நீதிகோரிய இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தமிழர் தாயகப்பகுதியை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும்,அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தவேண்டும், தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் ஊடாகத் தீர்வினை வழங்க வேண்டும், ஐநாவில் கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானத்தினை
நிராகரிப்போம், கடத்தப்பட்டுக் காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், மேய்ச்சல் தரை நிலத்தினை மீட்டுத்தாருங்கள்,எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் உட்பட பல்வேறு கோஷங்கள் இந்தப் பேரணியின் போது எழுப்பப்பட்டன.

இந்தப் பேரணி ஆரம்பமான நிலையில் அங்கு வந்த ஏறாவூர் பொலிஸார் தடையுத்தரவு உள்ளதாக கூறி போராட்டத்தினை நிறுத்துமாறு கோரிய நிலையிலும் அவற்றினைக் கருத்தில் கொள்ளாமல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போலியான தடையுத்தரவினைக் காட்டி பேரணியை தடுக்கமுனைவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைப் பொலிஸார் வீடியோ, புகைப்படம் எடுத்த போது அதற்கு எதிரான கோஷங்களையும் பேரணியில் சென்றோர் எழுப்பினர்.

தடைகள் அனைத்தையும் தாண்டி முன்னெடுக்கப்பட்ட பேரணியானது சித்தாண்டி சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றதும் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கு ஐ.நா மனித உரிமை பேரவைக்கு அனுப்பிவைக்கும் மனுவொன்றும் வாசிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி இயக்கத்தின் வட-கிழக்கு ஒருநினைப்பாளர்களான தவத்திரு வேலன் சுவாமிகள், எஸ்.சிவயோகநாதன், யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,பா.அஅரியநேந்திரன், ஞா. சிறிநேசன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் மற்றும் ஏனைய பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் இறுதியில் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதிக்குச் சென்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி இயக்கத்தினர் அங்கு சமாதியில் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.