காணி தொடர்பான ஆவணங்களை மீண்டும் கொண்டுவர அமைச்சர் மஹிந்தானந்த பணிப்பு

யாழ்ப்பணம் மாவட்ட செயலகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட காணி தொடர்பான ஆவணங்களை நாளை மீண்டும் மாவட்ட செயலகத்திற்கு கொண்டுவருமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பணிப்புரை விடுத்துள்ளார்

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட வாழ்வாதர குழுவின் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டத்தொடர், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் மஹிந்தானந்த, காணி விவகார அமைச்சர் எஸ். எம் சந்திரசேன மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு தலைவர் ஆகியோருடன் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் இந்த பணிப்புரையை விடுத்தார்.

மேலும் எதிர்வரும் காலங்களில், காணி ஆவணங்களை அனுராதபுர அலுவலகத்திற்கு கொண்டு செல்வதை உடனடியாக நிறுத்துமாறும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

ஜெனீவா தீர்மானம் – இந்தியாவின் ஆதரவைப் பெற பிரித்தானியா முயற்சி

ஜெனீவாவில் சிறீலங்கா தொடர்பில் கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு பிரித்தானியா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் தரிக் அகமட் அவர்கள் தற்போது இந்தியாவில் உள்ளார். அவர் ஜெனீவா விவகாரம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திவருகின்றார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஹார்ஸ் வி சிறிக்லா ஆகியவர்களை அவர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பிராந்திய உறுதித்தன்மை, இந்திய மற்றும் பிரித்தானிய உறவு உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் ஜெனீவா விவகாரங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா வழமை போல தமிழ் மக்களுக்கு எதிராக இந்த வாக்களிப்பில் கலந்து கொள்வதை தவிர்க்க முற்பட்டு வருகின்றது. ஆனால் இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தி வருகின்றது.

அதேசமயம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சிறீலங்கா அதிபர் கோத்தபாயா ராஜபக்சா தீர்மானத்திற்கு எதிர்த்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகாண சபை தேர்தலை 3 மாத காலத்திற்குள் நடத்த முடியும் – ரொஷான் ரணசிங்க

மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறையில் அதாவது கலப்பு தேர்தல் முறைமையில் நடத்துவதா என்பது குறித்து உறுதியான தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபை தேர்தலை மூன்று மாத காலத்திற்குள் நடத்த முடியும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தலை பிற்போடவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

தேர்தலை எம்முறைமையின் பிரகாரம் நடத்துவது என்ற சிக்கல் மாத்திரமே காணப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு பிற்போட்டுள்ளது.கலப்பு தேர்தல் முறைமை முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே முரண்பாடுகளுக்கு மத்தியில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது.

தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டு மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த ஆளும் தரப்பின் கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். இவ்விடயம் குறித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எத்தரப்பினரது அழுத்தங்களுக்கு அடிபணிந்து மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மாகாண சபை தேர்தலைபிற்போட்டது. இதற்கு மக்கள் விடுதலை முன்னணியினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஆதரவு வழங்கினார்கள். தற்போது அரசாங்கம் மாகாண சபை தேர்தலை பிற்போடுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

சுதந்திரக் கட்சியை கடுமையாக சாடும் பொதுஜன பெரமுன – காரணம் என்ன ?

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் சுதந்திர கட்சி தனிப்பட்ட கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்பட முடியாது.

கூட்டணியின் பொதுக் கொள்கைக்கு அமையவே செயற்பட வேண்டும். தனிப்பட்ட பகைமையை கருத்தற் கொண்டு சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சுக்களை குறிப்பிடுகிறார்கள் என சமுர்த்தி, மனைபொருளாதார, நுண்கடன் , தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் பங்காளி கட்சியினராக இருந்துக் கொண்டு சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை குறிப்பிடுவது அவதானத்திற்குரியது.

அரசாங்கம் மக்களின் வெறுப்புக்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இவர்கள் குறிப்பிடும் கருத்து சமூகத்தின் மத்தியில் அரசாங்கம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் சுதந்திர கட்சியினர் தனிப்பட்ட கொள்கைக்கு அமைய செயற்பட முடியாது.

கூட்டணியின் பொதுக் கொள்கைக்கு அமைய ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும். தனிப்பட்ட பகைமையினை முன்வைத்தே சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கம் தொடர்பில் வெறுக்கத்க்க பேச்சுக்களை குறிப்பிடுகிறார்கள்.

பாகிஸ்தானுக்கு ஏற்றவாறு நாம் செயற்படுவதில்லை – சரத் வீரசேகர

பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஏற்றவாறு நாம் செயற்படுவதில்லை. எமது அரசாங்கத்திற்கு ஏற்றவாறுதான் செயற்பட முடியும்.

இவ்வாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மிரிஹான பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் புர்கா மற்றும் நிகாப் அணிவதை தடை செய்யும் அமைச்சரவை பத்திரத்தில் நான் கைச்சாத்திட்டுள்ளேன்.

அமைச்சரவையில் கலந்துரையாடி, இவ்விடயத்தை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் சென்று பல செயற்பாடுகள் உள்ளன என மேலும் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

மதரீதியான அடிப்படைவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை இருவருடகாலத்திற்கு விசாரணைகளின்றித் தடுத்துவைக்கக்கூடிய வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆணை உடனடியாக இரத்துச்செய்யப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

‘இலங்கை ‘மத ஒருமைப்பாடின்மைக்கு வழிவகுக்கும் ஆணை சிறுபான்மை சமூகத்தை அச்சுறுத்துகின்றது’ என்ற தலைப்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

மதரீதியான அடிப்படைவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை இருவருடகாலத்திற்கு விசாரணைகளின்றித் தடுத்துவைக்கக்கூடிய வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆணை உடனடியாக இரத்துச்செய்யப்பட வேண்டும். கடந்த 9 ஆம் திகதியிடப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்ட விதிமுறைகள் தொடர்பான 2021 ஆம் ஆண்டு முதலாம் இலக்க வர்த்தமானி அறிவித்தலானது மிகவும் மோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த அறிவித்தலானது இன, மத சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளுக்குப் புறம்பாக அவர்களை இலகுவாக இலக்குவைக்கக்கூடிய வாய்ப்பை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு வழங்குவதாக அமைந்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையிலான தீர்மானமொன்றை நிறைவேற்றுவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில் இலங்கையானது மோசமான சட்டங்கள் அடங்கிய களஞ்சியத்திற்குள் தற்போது புதிய சட்டமொன்றைச் சேர்த்திருக்கிறது. அது சித்திரவதைகளுக்கு உட்படல் மற்றும் விசாரணைகளின்றி நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்படல் ஆகிய ஆபத்துக்களில் இன, மத சிறுபான்மையினரைத் தள்ளியிருக்கிறது. மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்து ஐக்கிய நாடுகள் சபையின் கரிசனைகளை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, ராஜபக்ஷ அரசாங்கம் ஒரு பழிவாங்கல் செயற்பாட்டுடன் அதனை எதிர்கொள்கின்றது.

Posted in Uncategorized

இலங்கை ரூபாவின் விற்பனை விலை 200 ரூபாவை கடந்தது

அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை விலை 200 ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை விலை 200.06 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளுக்கு பின்னர் இன்றைய தினமே இலங்கை ரூபாவின் விற்பனை விலை 200 ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1000 ரூபா சம்பளம் அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான தீர்மானமாகும்

தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம் அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான தீர்மானமாகும். இதற்கு எதிராக தோட்ட கம்பனிகள் செயற்பட்டால் அரசாங்கம் அதற்கு எதிராக பின் நிற்கப் போவதில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த சம்பள பிரச்சினை தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினார். நியாயமான தீர்வொன்றை இந்த விடயத்தில் எட்டுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது எனவும் அமைச்சர் கூறினார்.

கொள்கை ரீதியில் அரசாங்கம் மேற்கொண்ட 1000 ரூபா சம்பள விடயத்திற்கு நிறுவனங்கள் உடன்பாடு தெரிவிக்கவில்லை. இதனாலேயே சம்பள நிர்ணய சபையின் ஊடாக இதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு எதிராக நிறுவனங்கள் செயற்பட்டால், கொள்கை ரீதியில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் என்ற நிலைப்பாட்டை செயற்படுத்த ஒருபோதும் அரசாங்கம் பின்நிற்காது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!

சட்டமா அதிபரின் ஆலோசணைக்கு அமைவாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளளார்.

பயங்கரவாதத் தடை சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாத் சாலி கடந்த 10 ஆம் திகதி நாட்டின் சட்டம் தொடர்பாக ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை சட்டக் கோவை, பயங்கரவாத தடைச் சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சட்டங்களின் கீழ் அவர் குற்றமிழைத்துள்ளதாக சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அறிவுறுத்தியிருந்தார்.

Posted in Uncategorized

சர்வதேச நீதி கோரி யாழில் நடைபெறவுள்ள பேரணிக்கு அணிதிரளுங்கள் -ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் அழைப்பு

நாளையதினம் யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இருந்து நல்லூர் பின் வீதி வரை நடைபெறவுள்ள சர்வதேச நீதி கோரிய பேரணிக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.

குறித்த விடையம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி தலைவருமான சபா.குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்.

இறுதிப் போரில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு ஐ நா மனிதவுரிமைப் பேரவையில் பரிகார நீதி கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்பதை ஐ நா மனிதவுரிமைப் பேரவையின் ஆணையாளரின் 12/02/2021 அறிக்கை தெட்டத் தெளிவாக கூறியுள்ளது.

அத்துடன் சர்வதேச நீதிப் பொறிமுறைகளின் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையும் ஆணையாளர் உறுதிபடக் கூறியுள்ளார்.

இதன் பிற்பாடு பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு உறுதியாக ஒரே நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவு படுத்த இப்படியான ஐனநாயகப் போராட்டங்கள் அவசியமானதுடன் அதனை அனைத்து தரப்பினரும் ஆதரித்து நீதி வேண்டிய குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். இந்த நிலைப்பாட்டில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் உறுதியாக பல முனைகளிலும் பணியாற்றி வருவதுடன் இனத்துக்கான நீதி பலவீனமடைவதை எந்த வகையிலும் அனுமதிக்கப் போவதில்லை.

அந்தவகையில் நடைபெறவுள்ள பேரணிக்கும் இளைஞர் அணி தமது முழுமையான ஆதரவை வழங்குவதுடன் தமிழ்த் தேசிய சக்திகள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.