சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துவதன் மூலமே பரிகார நீதியை பெற்றுக் கொள்ள முடியும்- தமிழர் தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட அழைப்பு

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொள்ள முடியுமெனத் தெரிவித்துள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தற்போது மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் 46.1 என்ற உத்தேச தீர்மானம் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராது என்றும் குற்றஞ்சாடியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராத இது போன்ற தீர்மானங்களை இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கும் தமது சுய நலன்களை அடிப்படையாகவும் கொண்டே வல்லரசு நாடுகள் கொண்டு வருவதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து தமிழினப் படுகொலைகளுக்கு நீதி கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். அதில் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் பாரப்படுத்த வேண்டுமென பிரதான கோரிக்கையாகும் முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைய மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி மொன்று நடாத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிலுமொரு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஆகையினால் அனைத்து தரப்பினரும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனக் கோருகின்றோம்.

இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு சர்வதேசத்திடமே தமிழ் மக்கள் நீதியை கோருகின்றனர். அதனடிப்படையிலையே இலங்கையை சர்வதேச நீதிமன்றின் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

இவ்வாறு சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துவதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகார நீதியை பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தவிர்த்து தற்போது கொண்டு வரப்படும் 46.1 என்ற தீர்மானத்தால் தமிழ் மக்களுக்கான நீதி கிடைத்து விடாது. குறிப்பாக கடந்த முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை விடவும் வலு குறைந்ததாகவே இந்த தீர்மானம் அமைந்துள்ளது.

ஆகையினாலே தான் சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்கு பாரப்படுத்த வேண்டுமெனக் கோருகின்றோம். இதனையே ஜ.நா.வின் இன்னாள் முன்னாள் ஆணையாளர்கள் கூட சொல்லியிருக்கின்றனர்.

எனவே தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கு ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் ஒருமித்த நிலைப்பாட்டில் இந்தக் கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும். அவ்வாறு நாம் அனைவரும் ஒருமித்த குரலில் அல்லது நிலைப்பாட்டில் இருப்போமேயானால் அதுவே நீதிக்கான எமது கோரிக்கையை வலுப்படுத்தும் என்றார்.

Posted in Uncategorized

மாநில உரிமை, தமிழீழத்துக்கு வாக்கெட்டுப்பு! மதிமுக தேர்தல் உறுதி!

ம.தி.மு.க தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது, தமிழகத்தின் வாழ்வு உரிமைகளைப் பாதுகாக்க, பல்வேறு களங்களில், போராடி வரும் ம.தி.மு.க., தொடர்ந்து மக்கள் முன்னேற்றத்துக்கு தொண்டு ஆற்ற உறுதி மேற்கொண்டுள்ளது. 2021 -ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை மக்கள் முன் வைக்கிறது.
ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 55 வாக்குறுதிகளை அளித்துள்ளது.

1. மாநில உரிமையை பாதுகாக்க குரல் கொடுப்போம், 2. மதசார்பின்மையை பேணுவோம், 3. சமூக நீதியை பாதுகாப்போம், 4. இந்தி, சமஸ்கிருதம் மொழி திணிப்பை எதிர்ப்போம், 5.வேளாண்மையை பாதுகாப்போம், 6. விளைநிலங்களை பாதிக்கும் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்,7. நில அளவை சீரமைக்கப்படும்,

8. பாசனம், நீர் மேலாண்மை உறுதிப்படுத்தப்படும், 9. நதிநீர் இணைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும், 10. ஆற்றுநீர் பங்கீட்டு சிக்கல்கள் நீக்கப்படும், 11. தொழில்துறை பாதுகாக்கப்படும், 12. பொதுத்துறை காக்கப்படும், 13. மின்சார விநியோகம் சீரமைக்கப்படும். 14. தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படும்,

15. ஆசிரியர், அரசு ஊழியர்கள் நலன் காக்கப்படும். 16. போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும், 17. தொழிலாளர் ஈட்டுறுதிக்கழகம் அமைக்கப்படும், 18. ஊழல் ஒழிக்கப்படும், 19. ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும், 20. முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும்,

21. மக்கள் நல்வாழ்வுக்கு உறுதி அளிக்கப்படும். 22. மகளிர், குழந்தைகள் நலன் காக்கப்படும், 23. பிற்படுத்தப்பட்டோர் நலன் காக்கப்படும், 24. பட்டியலின பழங்குடியினர் நலன் உறுதிப்படுத்தப்படும், 25. சிறுபான்மையினர் நலன் பேணப்படும், 26. இளைஞர் மாணவர் நலன் பாதுகாக்கப்படும், 27. மீனவர் நலன் காக்கப்படும்.

28. மாற்றுத்திறனாளிகள் நலன், 29. வணிகர் நலன், 30. ஊடகத்துறை நலன், 31. மனித உரிமைகள் காக்கப்படும்.

32. கொடுங்கோன்மை சட்டங்களை எதிர்ப்போம், 33. ஈழத்தமிழர் இனப்படு கொலைக்கு நீதி பெறுவோம், 34. தமிழ் ஈழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வற்புறுத்துவோம், 35. தமிழை ஆட்சி மொழியாக்க வற்புறுத்துவோம், 36. கல்வி, 37. தமிழக ரெயில்திட்டங்கள், 38. விமான நிலையங்கள் மேம்பாடு ஆகியவை வற்புறுத்தப்படும். 39. மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

40. ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படும். 41. நியூட்ரினோ திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம், 42. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், 43. சீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்படும், 44. கால நிலை சட்டம் இயற்ற வலியுறுத்துவோம், 45. மணல் கொள்ளையை தடுப்போம், 46. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு தொடரும், 47. காட்டுப்பள்ளி துறைமுகம், 48. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் காக்கப்படும், 49. தொல்லியல் ஆய்வு நடைபெறும், 50. தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வரப்படும், 51. சுற்றுலா வளர்ச்சி மேம்படுத்தப்படும், 52. சட்டம் நீதித்துறை சீரமைக்கப்படும், 53. வெளிநாட்டு தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படும், 54. ஏழு தமிழர்கள் விடுதலைக்காக பாடுபடுவோம், 55. அடக்குமுறை எதிர்க்க அணி திரள்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதில்லை; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அவரை ஒரு போதும் சந்திக்கப் போவதில்லை அவரை சந்திக்கும் விருப்பமும் இல்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.

தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே எங்கள் உறவுக்ள அதிகம் காணாமல் ஆக்கப்பட்டனர். அந்த பின்னர் மகிந்த ராஜபக்ஷ அரசின் காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு அரசோ அவ்வரசில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவினாலோ எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

மாறாக தங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபியும் காரணம் எனத் தெரிவித்த தாய்மார்களை நீதி மன்றில் நிறுத்தப் போவதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாம் அவரை எப்படி சந்திக்க முடியும்? அவ்வாறு சந்தித்ததாலும் அமைச்சரால் எங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் தொடர்பில் என்ன நியாயத்தை பெற்றுத் தரமுடியும் எனத் தெரிவித்த கனகரஞ்சனி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இலங்கை அரசினால் நீதி கிடைக்கும் என்ற நம்பிகை அற்றுப் போய்விட்டது.

இந்நிலையில் அந்த அரசின் பிரதிநிதியாக உள்ள அமைச்சரை சந்திப்பதில் பயனில்லை என்றும் சர்வதேசமே எமக்கான நீதியை பெற்றுத் தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்த அவர் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் சார்பாக நாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதற்கு தயாரில்லை என்பதனை உறுதியாக தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

ரெலோ வலி கிழக்கு தவிசாளரின் கோரிக்கை; வாதரவத்தைக்கான போக்குவரத்தை ஆரம்பிக்க அமைச்சர் பணிப்புரை

வாதரவத்தை கிராமத்திற்கான பொதுப் போக்குவரத்து சேவையினை உடன் ஆரம்பிக்குமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் விடுத்த கோரிக்கையை ஏற்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம அதிகாரிகளுகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இன்றைய தினம் (17) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகமவும் கலந்து கொண்டார். அவரிடம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ், போருக்கு முன்னர் கிராமங்கள் பலவற்றக்கு இடம்பெற்ற சேவைகளை இலங்கை போக்குவரத்துச் சபை நிறுத்தியுள்ளது.

இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். பாதிககப்பட்ட மக்களை நோக்கி அரசின் பொதுப்போக்குவரத்துச் சேவைகள் சீராக இடம்பெறவேண்டும். அச்செழு கிராமத்திற்கான போக்குவரத்து சேவைகளும் இடம்பெறுவதில்லை. எனவே நிறுத்தப்பட்டுள்ள சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து மீளவும் போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்படவேண்டும். வாதரவத்தைக்கான சேவை முன்னுரிமை அடிப்படையில் அவசியமாகவுள்ளது எனக்கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து போக்குவரத்துச் சபை அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டறித்த அமைச்சர், வாதரவத்தைக்கான போக்குவரத்துச் சேவையினை தாமதமின்றி ஒழுங்குபடுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதேவேளை வடக்கிற்கு வெளியேயான பயணங்களின்போது பேருந்துகள் உணவுக்காக தரிக்கும் இடங்கள் உணவுப்பண்டங்களை அதிகமான விலைக்கு விற்பனை செய்கின்றனர். கட்டுபாடு அற்ற விலைக்கு பொருட்களைவிற்பனை செய்யாத இடங்களில் பேருந்துகளை நிறுத்துவதைத் தவிர்க்குமாறும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் கோரிக்கை விடுத்தார். இதற்கு அரச பேருந்துகள் நூறுகிலோ மீற்றருக்கு ஒரு அங்கீகாரம் பெற்ற உணவகத்திலேயே நிறுத்த பணிக்கப்பட்டுள்ளது. அவ் இடங்களில் போக்குவரத்து சபையின் உரிமம் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அங்கு விலைகள், சுகாதார நடைமுறைத்தவறுகள் இடம்பெறின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சர்வதேச நீதி கோரி யாழில் மாபெரும் எழுச்சி பேரணி

இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிி இடம்பெற்றதுு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நல்லை ஆதீனம் முன்பாக நிறைவடைந்துள்ளது.

குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிலிருந்து பேரணியாக இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமாகியிருந்தது.

இதையடுத்து, சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் தற்போது இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாகச் சென்று பேரணி நிறைவடைந்தது.

குறித்த போராட்டத்தில், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், சிவில் சமூகத்தினர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

காணி தொடர்பான ஆவணங்களை மீண்டும் கொண்டுவர அமைச்சர் மஹிந்தானந்த பணிப்பு

யாழ்ப்பணம் மாவட்ட செயலகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட காணி தொடர்பான ஆவணங்களை நாளை மீண்டும் மாவட்ட செயலகத்திற்கு கொண்டுவருமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பணிப்புரை விடுத்துள்ளார்

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட வாழ்வாதர குழுவின் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டத்தொடர், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் மஹிந்தானந்த, காணி விவகார அமைச்சர் எஸ். எம் சந்திரசேன மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு தலைவர் ஆகியோருடன் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் இந்த பணிப்புரையை விடுத்தார்.

மேலும் எதிர்வரும் காலங்களில், காணி ஆவணங்களை அனுராதபுர அலுவலகத்திற்கு கொண்டு செல்வதை உடனடியாக நிறுத்துமாறும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

ஜெனீவா தீர்மானம் – இந்தியாவின் ஆதரவைப் பெற பிரித்தானியா முயற்சி

ஜெனீவாவில் சிறீலங்கா தொடர்பில் கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு பிரித்தானியா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் தரிக் அகமட் அவர்கள் தற்போது இந்தியாவில் உள்ளார். அவர் ஜெனீவா விவகாரம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திவருகின்றார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஹார்ஸ் வி சிறிக்லா ஆகியவர்களை அவர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பிராந்திய உறுதித்தன்மை, இந்திய மற்றும் பிரித்தானிய உறவு உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் ஜெனீவா விவகாரங்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா வழமை போல தமிழ் மக்களுக்கு எதிராக இந்த வாக்களிப்பில் கலந்து கொள்வதை தவிர்க்க முற்பட்டு வருகின்றது. ஆனால் இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தி வருகின்றது.

அதேசமயம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சிறீலங்கா அதிபர் கோத்தபாயா ராஜபக்சா தீர்மானத்திற்கு எதிர்த்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

மாகாண சபை தேர்தலை 3 மாத காலத்திற்குள் நடத்த முடியும் – ரொஷான் ரணசிங்க

மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறையில் அதாவது கலப்பு தேர்தல் முறைமையில் நடத்துவதா என்பது குறித்து உறுதியான தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபை தேர்தலை மூன்று மாத காலத்திற்குள் நடத்த முடியும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தலை பிற்போடவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

தேர்தலை எம்முறைமையின் பிரகாரம் நடத்துவது என்ற சிக்கல் மாத்திரமே காணப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு பிற்போட்டுள்ளது.கலப்பு தேர்தல் முறைமை முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே முரண்பாடுகளுக்கு மத்தியில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது.

தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டு மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த ஆளும் தரப்பின் கட்சி தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். இவ்விடயம் குறித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எத்தரப்பினரது அழுத்தங்களுக்கு அடிபணிந்து மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மாகாண சபை தேர்தலைபிற்போட்டது. இதற்கு மக்கள் விடுதலை முன்னணியினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஆதரவு வழங்கினார்கள். தற்போது அரசாங்கம் மாகாண சபை தேர்தலை பிற்போடுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.

சுதந்திரக் கட்சியை கடுமையாக சாடும் பொதுஜன பெரமுன – காரணம் என்ன ?

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் சுதந்திர கட்சி தனிப்பட்ட கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்பட முடியாது.

கூட்டணியின் பொதுக் கொள்கைக்கு அமையவே செயற்பட வேண்டும். தனிப்பட்ட பகைமையை கருத்தற் கொண்டு சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சுக்களை குறிப்பிடுகிறார்கள் என சமுர்த்தி, மனைபொருளாதார, நுண்கடன் , தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் பங்காளி கட்சியினராக இருந்துக் கொண்டு சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை குறிப்பிடுவது அவதானத்திற்குரியது.

அரசாங்கம் மக்களின் வெறுப்புக்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இவர்கள் குறிப்பிடும் கருத்து சமூகத்தின் மத்தியில் அரசாங்கம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் சுதந்திர கட்சியினர் தனிப்பட்ட கொள்கைக்கு அமைய செயற்பட முடியாது.

கூட்டணியின் பொதுக் கொள்கைக்கு அமைய ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும். தனிப்பட்ட பகைமையினை முன்வைத்தே சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கம் தொடர்பில் வெறுக்கத்க்க பேச்சுக்களை குறிப்பிடுகிறார்கள்.

பாகிஸ்தானுக்கு ஏற்றவாறு நாம் செயற்படுவதில்லை – சரத் வீரசேகர

பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஏற்றவாறு நாம் செயற்படுவதில்லை. எமது அரசாங்கத்திற்கு ஏற்றவாறுதான் செயற்பட முடியும்.

இவ்வாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மிரிஹான பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் புர்கா மற்றும் நிகாப் அணிவதை தடை செய்யும் அமைச்சரவை பத்திரத்தில் நான் கைச்சாத்திட்டுள்ளேன்.

அமைச்சரவையில் கலந்துரையாடி, இவ்விடயத்தை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் சென்று பல செயற்பாடுகள் உள்ளன என மேலும் அவர் தெரிவித்தார்.