முஸ்லிம்களின் ஜனாஸாக்களை ’குப்பியாவத்த மயானத்தில் அடக்கலாம்’ – மரிக்கார்

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான இடங்களைத் தேடி அலைய வேண்டாமெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தெமட்டகொட- குப்பியாவத்த மயானத்தைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

‘கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பிலான இழுபறி தொடருமாயின், அதற்கான முழுப்பொறுப்பையும் சுகாதார சேவைகள் பணிப்பாளரே ஏற்கவேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

‘கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யலாமென, வர்த்தமானியைத் திருத்தி, சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ளார். எனினும், உரிய இடமில்லையெனக் கூறி, சுகாதார பணிப்பாளர், காலத்தைக் கடத்தி வருகின்றார்’ என்றும் மரிக்கார் எம்.பி குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர்,
சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பிலான பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கை, பேராசிரியை ஜெனிபர் பெரேராவால் டிசெம்பர் 28ஆம் திகதி, சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. அதனடிப்படையில், உரிய இடத்தைத் தேடாமல், கடந்த இரண்டு மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் எனவும் கேள்வியெழுப்பினார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவால் தெமட்டகொட- குப்பியாவத்த மயானம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அங்கு 2.5 அடி ஆழத்திலேயே நிலக்கீழ் நீர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த மயானம், மருதானை பள்ளிவாசலுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்த அவர், ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக, அந்த மயானத்தை வழங்க விருப்பம் தெரிவித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளருக்குக் கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார்.

பேராசிரியை ஜெனிபர் பெரேராவின் அறிக்கையை, இரண்டு மாதங்களாக, மறைத்து வைத்தவர்கள், சடலங்களைப் பலவந்தமாகப் புதைத்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்த அவர், அடக்கம் செய்யும் விவகாரத்தில் இழுபறி தொடர்ந்தால், அதற்கான முழுப்பொறுப்பும் சுகாதார பணிப்பாளரையே சாரும் என்றார்.

இராணுவத்தை பாதுகாக்க புதிய சட்டங்கள் தேவைப்படின் அதனையும் நிறைவேற்றுவோம் – ஜெனிவா அமர்வுகள் குறித்து அரசாங்கம் உறுதி

அப்பாவி தமிழ் இளைஞர் யுவதிகளை பலவந்தமான முறையில் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளாக்கியவர்கள் இன்று சர்வதேச அரங்கில் மனித உரிமை குறித்து வாதிடுகிறார்கள்.

ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிகொள்ளும் . இராணுவத்தினரை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டங்கள் தேவையாயின் இயற்றப்படும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் . பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை நேற்று சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய ஆரம்பமானது..கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள 38 மாணவர்கள் 40 விசேட பரீட்சை நிலையங்கள் ஊடாக பரீட்சைக்கு தோற்றியுள்ளார்கள்.

ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக் கொள்ளும். இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளரது அறிக்கை இலங்கையின் சுயாதீனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டது.

இறுதி கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு தேவையான சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை. மாறாக 2019 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஆணையாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

அப்பாவி தமிழ் இளைஞர்களை பலவந்தமான முறையில் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளாக்கியவர்கள் இன்று சர்வதேச அரங்கில் மனித உரிமை பேரவை குறித்து வாதிடுகிறார்கள். இவர்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

30 வருட கால யுத்தத்தை நிறைவு செய்த இராணுவத்தினரை அரசியல் பழிவாங்களுக்குட்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது .

இராணுவத்தினரை பாதுகாக்க தற்போதை சட்டம் போதுமானதாக அமையாவிடின் புதிதாக சட்டத்தை உருவாக்குவோம். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு நாட்டு மக்கள் இவ்விடயத்தை கருத்திற் கொண்டு ஆணையை வழங்கியுள்ளார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக இலங்கை 70 வருட காரமாக இணக்கமாக செயற்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை முழுமையாக செயற்படுத்தியுள்ளோம். ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு எதிராக செயற்படுகிறார்.ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக் கொள்ளும் என்றார்.

Posted in Uncategorized

இரணைத்தீவில் ஜனாஸா அடக்கமா..? கடுமையாக விமர்சித்துள்ள ஹக்கீம்

கொரோனாவினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை இரணைதீவில் நல்லடக்கம் செய்யலாமென்ற தீர்மானத்தை மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீம் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் இதுபற்றி விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

@Rauff_Hakeem

“உடல் (ஜனாஸா) களை இரணைத்தீவுக்கு அப்புறப்படுத்த எத்தனிக்கின்றனர். தவறான கதைகளைப் புனைந்துரைத்து, நெடுகிலும் அவர்கள் செய்வதே சரி என்று நிரூபிக்கவே விரும்புகின்றனர். நம்பிக்கை இழந்து , அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள சமூகத்தை துன்புறுத்துவதில் அவர்கள் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. பரிதாபகரமான இனவெறி தலைவிரித்தாடுகின்றது”.

இந்தியா, மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கு இடையில் சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆலோசனை செயலகம்

இந்தியா, மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கு இடையில் சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான முத்தரப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசனை செயலகம் இன்று (01) கொழும்பில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த செயலகம் கொழும்பில் அமைந்துள்ள இலங்கை கடற்படை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கிடையிலான சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான முத்தரப்பு தேசிய பாதுகாப்பு மாநாட்டின் பலனாக புதிய செயலகம் ஸ்தாபிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய நிகழ்வில் தேசிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, கடற்படைத் தளபதி, இந்தியா மற்றும் மாலைதீவுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்து சமுத்திரம் உலகின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியென்பதால், இந்த செயலகத்தினூடாக முழு உலகத்திற்கும் நன்மை கிடைக்குமென வௌிவிவகார அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இந்த புதிய செயலகம் 24 மணித்தியாலங்களும் இயங்குமென கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் உளுகேதென்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, மாலைதீவுகள் மற்றும் இலங்கையின் சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசனை மாநாடு கடந்த வருடம் நவம்பர் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டின் கண்காணிப்பு நாடுகளாக பங்களாதேஷ், சீஷெல்ஸ் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகள் பங்கேற்றிருந்தன.

Posted in Uncategorized

காங்கேசன்துறை – காரைக்கால் பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

இந்தியாவின் காரைக்காலுக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று இந்திய அரசின் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்திற்கும் (Sagarmala Development Company Ltd), இந்த்ஶ்ரீ பயணிகள் கப்பல் தனியார் நிறவனத்திற்கும் (INDSRI FERRY SERVICES PVT LTD) இடையில் இன்று கைச்சாத்தானது.

இதில் சாகர்மாலா அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில் அதன் முகாமைத்துவ பணிப்பாளர் திரு திலீப்குமார் குப்தா. இந்த்ஶ்ரீ பயணிகள் கப்பல் சேவை சார்பில் சோ நிரஞ்சன் ந ந்தகோபன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்!

இருநாடுகளுக்கிடையலும் பயணிகள் போக்குவரத்து சுமுகமாக தொடங்கியதும் இந்த சேவையை விரைந்து ஆரம்பிக்க இருப்பதாக நிரஞ்சன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

7ம் திகதி கறுப்பு ஞாயிறு ; பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி இவ்வாறு கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படவிருப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையையும் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் 46 ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில், தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா முன்பு இன்றையதினம்(01) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சுவிஸிலுள்ள ஈழத் தமிழர்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பிற்பகல்- 02.30 மணியளவில் ஆரம்பமான இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் ஒருமணி நேரமாக தமிழ் உறவுகள் நீதி கேட்டு உரத்த குரலில் உரிமைக்கான குரல்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

சுவிட்ஸர்லாந்தில் கோவிட் தொற்று உச்சம் பெற்றிருக்கும் இந்நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பல நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு தமது உணர்வினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை – தமிழ் சிவில் சமூக அமையும் சுட்டிக்காட்டு

இலங்கை தொடர்பில் பிரித்தானியா, அமெரிக்கா உட்பட்ட நாடுகளைக் கொண்ட குழுமத்தினால் ஐ. நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் அடிப்படையான கோரிக்கைகளை கூட பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி கடிதம் ஒன்று தமிழ் சிவில் சமூக அமையத்தினால் அந்த நாடுகளுக்கு இன்று (01.03.2021) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆங்கில மூலத்திலான கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் சுருக்கம் பின்வருமாறு:

1) 15.01.2021 தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் உள்ளடங்கலான பொது அமைப்புக்கள் இணைந்து விடுத்த கோரிக்கையானது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலை உட்பட அனைத்து குற்றங்கள் தொடர்பில் விசாரணை ஒன்றிற்காக பாரப்படுத்துவதற்கான முனைப்புக்களை எடுக்க வேண்டும் என்பது தொடர்பிலானது. ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது தொடர்ந்து இலங்கை விவகாரத்தை ஜெனீவாவில் வைத்திருந்து நேரத்தை வீணடிக்கும் நேரம் கொண்டதென தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் உத்தேச வரைபில் முன்வைக்கப்பட்டுள்ள யுத்த மீறல்கள் சம்பந்தமான ஆதாரங்களை சேர்ப்பது தொடர்பிலான பந்தியானது (உத்தேச வரைபு பந்தி 6) இவ்விடயம் தொடர்பில் தனித்துவமான பொறிமுறையை உருவாக்கத் தவறுகிறது என்றும் சிரியா மற்றும் மியான்மார் தொடர்பில் உருவாக்கப்பட்ட பொறிமுறை போன்றதொரு பொறிமுறை தானும் பிரேரணையில் உள்ளடக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரேரணையில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் 18 மாதங்களிற்குப் பின் ஐ. நா மனித உரிமை ஆணையாளர் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது நீதிக்கான தேடலை இன்னுமொரு 18 மாதங்கள் கிடப்பில் போடும் எண்ணமே அன்றி வேறில்லை என தமிழ் சிவில் சமூக அமையம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

சிரியா விவகாரத்தில் 14 தடைவைகள் சீனா மற்றும் ரஷியாவின் வீற்றோக்கள் மத்தியிலும் பிரேரணைகளை ஐ நா பாதுகாப்பு சபையில் முன்வைத்த மேற்குலக நாடுகள் இலங்கையை கொண்டு போவதற்கு கூட தயங்குவது ஏன் என தமிழ் சிவில் சமூக அமையம் கேள்வி எழுப்பியுள்ளது.

2) காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள உத்தேச பிரேரணையின் முகவுரைப் பந்தி ஒன்பது, 2017 க்குப் பின் காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பதையும் தொடர்ந்து தமிழ் மக்களின் காணிகள் பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விடயத்தையும் மூடி மறைக்கின்றது எனவும் தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

3) 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் பிரேரணையின் பந்தி தொடர்பில்: ஒருதலைப்பட்சமாக 13ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்யும் முயற்சியை நாம் கண்டிக்கும் அதே வேளை 13ஆம் திருத்தம் அரசியல் தீர்வுக்கான ஓர் ஆரம்பப் புள்ளி தானும் இல்லை என தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக் காட்டியுள்ளது. சுயநிர்ணய உரிமையின் பிரகாரம் தாம் தமக்கு உகந்த தீர்வை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

4) இலங்கையில் தொடந்து இடம்பெற்று வரும் மீறல்கள் தொடர்பில் ஐ. நா விசேட அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் ஐ நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பிரசன்னம் வடக்கு கிழக்கில் அவசியம் எனவும் இவை பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக் காட்டியுள்ளது.

5) காணாமல் போனோர் அலுவலகம், மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியன அவை உருவாக்கப்பட்ட போதே வழுக்கள் நிறைந்த பொறிமுறைகளாகவே இருந்தவை என்றும் அவற்றை முற்றாக தற்போதைய இலங்கை அரசாங்கம் முடக்கியுள்ள சூழலில் அவை பலப்படுத்தப்பட வேண்டும் என உத்தேச பிரேரணை கோருவது முரண் நகையானது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேற்படி விடயங்களை மேற்கோள் காட்டி உங்கள் ஊடகத்தில் இக்கடிதம் தொடர்பில் செய்தி பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

கலாநிதி கு. குருபரன்
தமிழ் சிவில் சமூக அமையத்தின் சார்பில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள்,பேராயரிடம் கையளிப்பு

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகள் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களிடமும் , பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சட்டப்பணிப்பாளர் ஜெனரல் ஹரிகுப்த றோஹனதீரவினால் இன்று திங்கட்கிழமை மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரிடமும் , அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரிடமும் அறிக்கை பிரதிகள் கையளிக்கப்பட்டன.

அதனையடுத்து இன்றைய தினம் மாலை கொழும்பு – பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் அறிக்கை கையளிக்கப்பட்டது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 செப்டெம்பர் 22 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இவ் ஆணைக்குழுவினால் 2019 டிசம்பர் 20 ஆம் திகதி முதலாவது இடைக்கால அறிக்கையும் , 2020 மார்ச் 2 ஆம் திகதி இரண்டாவது இடைக்கால அறிக்கையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து சுமார் ஒரு வருடத்தின் பின்னர் இவ்வாண்டு பெப்ரவரி முதலாம் திகதி முழுமையான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் 6 பேர் அடங்கிய குழு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டி வெவ்வேறு கருத்துக்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி , ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை இதனை நிராகரித்துள்ள அதே வேளை ஆளுந்தரப்பின் பங்காளி கட்சியான சுதந்திர கட்சியும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரெலோவின் உத்தியோகபூர்வ பேச்சாளராக சுரேந்திரன் நியமனம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உத்தியோகபூர்வ பேச்சாளராக குருசாமி சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது(28-02-2021).

இதன்போது கட்சிக்கு பேச்சாளர் ஒருவர் அவசியம் என்று அனைவராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கு ஒரு பேச்சாளர் தேவை என்ற காரணத்தினால் எமது கட்சியின் பேச்சாளராகக் குருசாமி சுரேன் அவர்கள் செயற்படுவார்.

அதனை ஏகமனதாக தலைமைக்குழு தெரிவு செய்துள்ளது. அவர் அனைத்து விடயங்களையும் கையாளுகின்ற அதேநேரம், எமது கட்சி எடுக்கின்ற தீர்மானங்களையும், அரசியல் ரீதியாக இங்கிருக்கின்ற தூதரகங்களைச் சந்திக்கின்ற செயற்பாடுகளையும் அவர் ஊடாகவே இனி மேற்கொள்ளப்படும்.

Posted in Uncategorized