சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறையை இலங்கை உடனடியாக நிறுத்த வேண்டும் – ஐ.நா.முன்னாள் அதிகாரிகள், மனித உரிமை அமைப்புக்கள்

பயங்கரவாதத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைக் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை முடிவிற்குக் கொண்டுவந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் விசேட நிபுணர்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் இலங்கையின் மந்தகரமான செயற்பாடுகள் தொடர்பில் அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கை குறிப்பாக சில முக்கிய விடயங்கள் தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தியிருக்கிறது.

போர்க்குற்றங்களை புரிந்ததாக ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெயரிடப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்குப் பதவியுயர்வுகள் வழங்கப்படல் உள்ளடங்கலாக சிவில் அரச நிர்வாகத்தில் அதிகரித்து வரும் இராணுவமயமாக்கம், சுயாதீன நீதித்துறையில் தலையீடுகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு உள்ளடங்கலாக அரசியலமைப்பின் ஊடாக உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கள் வலுவிழக்கச்செய்யப்பட்டுள்ளமை, மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான விசாரணைகளில் புதிய அரசியல் தலையீடுகள் ஏற்படல், சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அநாவசியமான கண்காணிப்புக்கள் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவங்கள் மீள நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதே ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் நோக்கமாக இருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். கடந்த 2009 ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பில் செயலாற்றுவதற்கு சர்வதேச சமூகம் தவறிவிட்டது.

எனினும் நாம் மீண்டும் தோற்கக்கூடாது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்யும் நோக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் 30 1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதென்பது சற்று மந்தகரமான முறையில் இடம்பெற்றாலும் குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவை ஸ்தாபிக்கப்பட்டன.

எனினும் உண்மைக்கான அலுவலகம் மற்றும் சர்வதேச குற்றங்களை விசாரணை செய்வதற்கான நீதிமன்றம் என்பன ஸ்தாபிக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தாலும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனினும் பொறுப்புக்கூறவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் குற்றங்கள் எதனையும் இலங்கை மேற்கொள்ளவில்லை என்று கூறி, ஏற்கனவே உடன்பட்ட கடப்பாடுகளைத் தற்போதைய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அதுமாத்திரமன்றி மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஏற்கனவே இடம்பெற்றுவரும் விசாரணைகள் பூர்த்தியடைவதற்கு முன்னரே, கடந்தகால விசாரணை அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்கென ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்நிலையில் குறிப்பாக பயங்கரவாதத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைக் கொள்கைகளை நிறுத்துமாறு ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளமையை நாம் மீள நினைவுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதியும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவருமான ஜுவான் மனுவேல் சான்ரோஸ், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பிரதி பொதுச்செயலாளர் ஜான் எலியசன், அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மேரி ரொபின்சன், முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல்-ஹுசைன் உள்ளிட்ட 18 பேர் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜெனிவாவில் ஆதரவைக் கேட்டு இலங்கை, மோடிக்கு கடிதம் – இதுவரை பதில் இல்லை

மனித உரிமைகள் பேரவையின் 46 வது மாநாட்டில், இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரி, வெளிவிவகார அமைச்சு மூலமாக இந்தியப் பிரதமர் மோடிக்கு, கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை, வழங்குமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இதுவரை இந்திய அரசாங்கத்திடம் இருந்தோ, அல்லது பிரதமர் மோடி அல்லது இந்திய வெளிவவிகார அமைச்சிடமிருந்தோ எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இலங்கை வருகை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமரை வரவேற்பதற்காக விசேட இராணுவ மரியதை அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான ஒத்திகை நிகழ்வு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்போது இடம்பெறுகின்றது.

சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று அங்கு சென்று ஒத்திகை நிகழ்வு வேலைத்திட்டத்தை பார்வையிட்டார்.

பாகிஸ்தான் பிரதமரின் விஜய செயற்பாடுகளுக்காக இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று கலந்துரையாடினார்.

பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உருவாகலாம்

பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உருவாகலாம். விடுதலைப் புலிகளின் அரசியல் அஸ்திரமாக இன்னமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் ஆதிக்கம் செய்யும் என அமைச்சர் அமித் சஹா கூறியதாக வெளிவரும் செய்திகளில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் என எதுவும் இல்லை. நிகழ்வொன்றில் அவர் உணவு உட்கொண்ட வேளையில் அருகில் இருந்தவர்களுக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக நாம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் எனது தனிப்பட்ட நிலைப்பாட்டை என்னால் கூற முடியும். பாரதிய ஜனதா கட்சியினால் நேரடியாக இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. அதற்கான அரசியல் அமைப்பு ரீதியிலான அனுமதியும் இல்லை

தேர்தல்கள் திணைக்களமும் அதற்கு அனுமதிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே இது ஒரு கதையாக வேண்டுமானால் கூறலாம்.

ஆனால் அவர்களினால் மறைமுக அரசியலில் ஈடுபட முடியும். அதற்கு அனுமதி இலங்கையில் உள்ளது.

எவ்வாறெனின், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியினூடாக இலங்கையில் அவர்களின் கொள்கையை பரப்பி அவர்களின் இலங்கை பிரதிநிதிகளாக இங்கு ஒரு கட்சி இயங்க முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றொரு கட்சியை அவர்களின் பிரதிநிதிகளாக வைத்துக்கொள்ள முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்கள் இன்றுவரை இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளாக இலங்கையில் செயற்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான முழு நிதியும் மேற்கு நாடுகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் மூலமாகவும், புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள் மூலமாகவும் கிடைத்து வருகின்றது என்றார்.

சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும்- ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சரத் வீரசேகரவின் கருத்து வடக்கு கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்குடையது என்பதால் தமிழீழம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டத்தில் மக்கள் எழுச்சியாகக் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள், பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொலிஸார் தேடித்தேடி விசாரிக்கிறார்கள்.

நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும், நீதிமன்றத்தை தமிழர்கள் அவமதித்துள்ளார்கள் எனவும் காட்டுவதற்காகவே இந்த முயற்சி நடைபெறுகின்றது.

ஆனால், இலங்கை அரசாங்கத்தினால் எமது மக்களுக்கு செய்யப்பட்ட அநீதிக்கு எதிராகவும் தமிழ் மக்கள் வாழ்கின்ற இடங்களை புறக்கணிக்கின்ற அல்லது சிங்களக் குடியேற்றங்களை உட்சேர்க்கின்ற செயற்பாட்டையும் வன விலங்கு பறவைகள் சரணாலயம், மகாவலி வலயம், புதைபொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் தமிழரின் மரபுகளை அழித்தல் போன்றவற்றிற்கு எதிராகவுமே மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள்.

இதேநேரம், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையானது மிகவும் வலுவான அறிக்கையாக இருக்கிறது. இதனால், மக்கள் புரட்சிகளைத் தடைசெய்வதும் அவர்களை அச்சமூட்டுவதும் இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புறுரிமைகளை இல்லாது செய்கின்ற வன்முறையாகத்தான் பொலிஸாரின் நடவடிக்கை உள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும். ஏனென்றால், தீர்மானம் நிறைவேற்றினால் ஐ.நா. சபை இரண்டாக உடையும் என்று கூறியிருக்கிறார்.

சரத் வீரசேகரவின் கருத்து, வடக்கு கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்கமே. ஆகவே, தமிழீழம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

அதேநேரம், பொலிஸாரின் நடவடிக்கையானது நீதிமன்ற ஆணையை நாம் புறக்கனிக்கின்றோம் என்ற அச்சத்தைக் கொண்டுவந்து எமது மக்கள் போராட்டத்தை மழுங்கடிக்கின்ற மற்றும் ஐ.நா. சபையில் எமது கோரிக்கைகளை இல்லாது செய்கின்ற முயற்சியாகும். இதனால்தான் எமது இளைஞர்களிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களிலும்,பொதுமக்களிலும் கை வைக்கின்றார்கள்.

பொலிஸாரின் அடக்கு முறைகளை கிழக்கு மாகாணம் பொத்துவிலில் உடைத்தெறிந்து அதே எழுச்சியானது பொலிகண்டிவரை இருந்துள்ளது. அது எங்களுடைய வெற்றி.

மக்கள் ஜனநாயக முறையில் கொரோனா தொடர்பான சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துப் போரட்டத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, இந்தப் போராட்டம் என்பது ஜனநாயக ரீதியில் செய்யப்பட்ட ஒரு விடயம். இந்நிலையில், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் எமது மக்கள் அடிபணிய மாட்டார்கள்.

இலங்கை தேசம் இறுதி யுத்த வெற்றியை பயங்கரவாதத்தை அழித்து விட்டோம் என்று கொண்டாடியது. அத்துடன் பயங்கரவாதத்தை அழிப்பது எப்படி என்று பாடம் எடுக்கப்போவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், தமிழ் மக்களோ, அழிக்க அழிக்க மீண்டெழுவோம் என்ற செய்தியை சரியான நேரத்தில் எழுச்சி ஊர்வரத்தின் மூலம் இலங்கைக்கும் உலகத்திற்கும் சொல்லியுள்ளார்கள்.

ஆகவே, எமது மக்களை யாரும் அடக்க முடியாது. எங்களுடைய பிரச்சினைகளை இந்த ஜனநாயகப் போராட்டத்தின் ஊடாகத் தெரிவிப்போம். இந்நிலையில், உலக நாடுகளும் இந்தியாவும் தமிழர்களுடைய பக்கம் நிற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த எழுச்சிப் பேரணியின் நோக்கமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள எமது தமிழ் மக்களை உடனே திருப்பி அனுப்ப கூடாது -. சுவிஸ்தூதுவரிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள எமது தமிழ் மக்களை உடனே திருப்பி அனுப்ப கூடாது என இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவரிடம் தமிழ்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்

இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதின்ம் யாழ்ப்பாண தனியார் விடுதியில் இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலின்போது.

ஜெனிவாவில் கொண்டுவரப்பட இருக்கின்ற தமிழர்களுக்கு எதிரா மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பிலே உலக நாடுகளின் நிலைப்பாடுகள் முக்கியமாக 47 நாடுகளின் நிலைப்பாடுகள் தொடர்பிலே மிகமுக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் 30/1 34/1 40/1 தீர்மானங்களுக்கு மேலதிகமாக இப்பொழுது வரப்போகின்ற தீர்மானம் இலங்கைக்கு என்ன படிப்பினையினை கொடுக்கும் அல்ல எவ்வாறு இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன்.

இவற்றைவிட தொல்பொருள் திணைக்களங்களின் ஊடான நிலப்பறிப்புக்கள் வனவள திணைக்களத்தின் ஊடான நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும்,

அரசாங்கத்தினுடைய மத்திய அமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களை வைத்து மக்களின் நிலங்களை மட்டும் அல்லாது அவர்களின் இருப்புக்களையும் இலங்கை அரசாங்கம் கேள்விக்குறியாக்குவது தொடர்பாகவும் இதுவரை தமது சொந்த இடங்களுக்கு செல்லாத மக்களது விடயங்கள் தொடர்பாகவும்,

அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக சிறையில் இருக்கின்ற நிலமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மேலும் சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள எமது தமிழ் மக்களை உடனே திருப்பி அனுப்ப கூடாது என்பதற்கான எழுத்து மூல கடிதத்தினை நாங்க சுவீஸ் தூதுவரிடம் கையளித்து இருந்தோம் அதனை அவர் ஏற்றுக்கொண்டதுன்.

எமது மக்களை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் கையாலவில்லை என்றும் தப்போதும் அவ்வாறான எண்ணம் நமக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனிடம் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் இருந்து வருகை தந்த பொலிஸார் பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இருந்து வருகை தந்த பொலிஸார் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்ள வருகை தருமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உற்பட பலரிடம் பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவில் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக வினோ நோகராதலிங்கத்திடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு

நீதிமன்ற கட்டளையை மீறி பொத்துவில் பொலிகண்டி பேரணியில் மாங்குளத்தில் கலந்து கொண்டமைக்காக மாங்குளம் பொலிசாரால் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் .

நேரமின்மையென பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்களால் கூறப்பட்டதற்கிணங்க வவுனியா ரெலோ மாவட்ட கட்சி அலுவலககத்துக்கு வந்த பொலிசார் விசாரணையை மேற்கொண்டனர்.

இதன்போது தமிழ் மக்களின் உரிமை கோரிய நியாயமான ஜனநநாயக போராட்டத்தில் மக்களோடு இணைந்து கலந்து கொண்டதாக தமது உணர்வுடன் கூடிய விளக்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் : வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில், பிரதிவாதிகளான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று தீர்மானித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த கடத்தல், காணாமல் ஆக்கல் குறித்த வழக்கு விசாரணைகள் பிரதம நீதியரசரால் நியமிக்கப்ப்ட்ட மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னத்தின் தலைமையின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ராஜகருணா, நவரத்ன மாரசிங்க ஆகியோர் உள்ளடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கடத்தல், காணாமல் ஆக்கிய விவகாரத்தில், கடற்படை சிறப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமான்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை புலனாய்வுப் பிரிவின் நலின் பிரசன்ன விக்ரமசூரிய,கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ் மற்றும் நேவி சம்பத் எனும் லெப்.கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி,சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனராத்ன, அண்னச்சி எனப்படும் உபுல் சமிந்த, ஹெட்டி ஹெந்தி, என்டன் பெர்ணான்டோ, சம்பத் ஜனக குமார, முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் தெ ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று இந்த வழக்கு சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ரில் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்ரில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கில் வசந்த கருணாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டமைக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. .

அம்மனு எதிர்வரும் 4 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளது. அந்த ரிட் மனுவின் தீர்ப்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கானது ஜூலை 2 ஆம் திகதிவரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனயவாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரு­ணா­கொட உள்ளிட்ட 17 பேர் இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களாக சி.ஐ.டி. மன்றுக்கு அறிவித்துள்ளது.

அதில் முன்னாள் கடர்படை தளபதி வசந்த கருணாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் 667 குற்றச் சாட்டுக்களின் கீழ் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

அந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவே மூவர் கொன்ட ட்ரயல் அட் பார் சிறப்பு நீதிமன்றம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் ஏற்கனவே 17 ஆவது சந்தேக நபரான உபுல் மூன்றாவது சந்தேக நபர் லக்ஷ்மன் உதயகுமார, 5 ஆவது சந்தேக நபர் தம்மிக தர்மதாஸ ஆகியோருக்கு நிபந்தனை மன்னிப்பளிக்க சட்ட மா அதிபர் தீர்மானித்து அவர்கள் மூவரும் அரச சாட்சியாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டேன்: ராகுல் காந்தி தெரிவிப்பு

தனது தந்தையான முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடையவர்களை மன்னித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுவையில் கல்லூரி மாணவிகளிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, தனது தந்தையை இழந்தமை வலியைத் தந்ததாகவும் அதற்காக தாம் கோபப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கொலைக்கு பொறுப்பானவர்கள் மீது வெறுப்போ கோபமோ ஏற்படவில்லை என கூறிய ராகுல் காந்தி, அவர்களை மன்னித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.