ஆளும் தரப்புக்குள் சலசலப்பு – ‘பிரதமருக்கு எதிராக அரங்கேறும் பிரசாரங்கள்’ – வீரகேசரி

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்துக்கு எதிராக கிளர்ந்தெழும்பிய ஆளும்தரப்புக்குள்ளே இருந்தான எதிர்ப்பலையானது கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்திலும் எதிரொலித்தது.

இது அரசாங்கத்தில் உள்ள தலைமைகளின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது என்று ‘அரசியல் சாணக்கியமறிந்தவர்கள்’ கருதிக்கொண்டனர். அத்துடன் ஆளும் தரப்புக்குள் இரண்டு, மூன்று அணிகள் இயங்குகின்றன என்பதும் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்தது.

இருப்பினும், இந்த நிலைமையானது கடந்தவாரம் வேறொரு பரினாமத்தினை எடுத்திருந்தது. அதாவது தென்னிலங்கை அரசியலில் ஐந்து தசாப்தத்திற்கும் மேலான அனுபவத்துடன் ‘பழம் தின்று கொட்டைபோட்டவரான’ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அடிமடியில் கைவைக்கும் நிலைமையொன்று ஏற்பட்டதால் தென்னிலங்கை அரசியலே கதிகலங்கிப்போயிருக்கின்றது.

அதுதான் பிரதமர் மஹிந்தவிடமிருக்கும் பொதுஜனபெரமுனவின் தலைமைப்பதவியை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கவேண்டும் என்று, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்ததாக வெளியான கருத்துதான் இதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றது. கூடவே பிரதமர் பதவி விலகப்போவதாக அமைச்சர் நாமலை மையப்படுத்தி வெளியான தகவலும் இணைந்திருக்கின்றது.

மஹிந்தவை மையப்படுத்திய பிரசாரம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகப்போவதாக சமூக ஊடகங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக செய்திகள் வெளியிடப்பட்டு வந்தன. உறுதிப்படுத்தப்படாத வகையில் மிகவும் சூட்சமமாக இந்த தகவல் பரப்பப்பட்டு இருந்தது. இதற்கு ஒரு குரல் பதிவும் பயன்படுத்தப்பட்டது.

அதாவது 2018ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதமர் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ அந்த பதவியை இராஜினாமா செய்யப்போகிறார் என்று அப்போது நாமல் ராஜபக்ஷ தொலைபேசியில் ஒருவருக்கு தெரிவித்த குரல் பதிவை வைத்துக்கொண்டே இந்த வதந்தி பரப்பப்பட்டது.

ஏற்கனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடுமையான சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியிடப்பட்டு ஒரு சர்ச்சை ஏற்பட்டிருந்தது. அதனால் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகரை சந்தித்த படமும் வெளியிடப்பட்டிருந்தது. அதேபோன்று அவர் உடற்பயிற்சி செய்த படங்களும் வெளிவந்தன.

அந்த வகையிலேயே தற்போது இந்த கருத்து சமூக ஊடங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. எனினும் இதனை பிரதமரின் அலுவலக அதிகாரி யோசித்த ராஜபக்ஷ மறுத்துள்ளார். இவ்வாறான வதந்திகள் காரணமாக பிரதமர் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான கருத்துக்கள் காரணமாக அவர் அடிக்கடி வெளியே வந்து நான் நலமாக இருக்கின்றேன் என்பதை வெளிக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய வதந்திகளை கடந்த தேர்தலின்போது, அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் கொழும்பில் இருந்து கொண்டு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பரப்பி வருவதாக ஆளும் கட்சியின் முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார்.

விமல் எதிர்கொண்ட நெருக்கடி

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் தற்போது சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கடுமையான முரண்பாடுகளும் எதிர்ப்புகளும் காணப்படுகின்றன.

அமைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சர் பதவியை மீளப்பெறவேண்டும் என்ற கருத்துக்களும் கட்சிக்குள் முன்வைக்கப்படுகின்றன. அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால தலைமைத்துவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை விமல் வீரவன்ச வெளிப்படுத்திய தினத்தில் இருந்து இந்த முரண்பாட்டு நிலைமைகள் தோற்றம் பெற்றுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றிருக்கின்றது. அதன்போதும் விமல் வீரவன்ச விடயம் பேசப்பட்டதுடன் அவரின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அப்போது விமல் வீரவன்சவுக்கு ஆதரவாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பேச முயற்சிக்கையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் வாசுதேவவுக்கும் இடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் மீள் வருகைக்கு பாரியதொரு பின்னணியை உருவாக்கியதாக வாசுதேவ நாணயக்கார கூற முற்பட்டபோதும் அதற்கு எதிரான கருத்துக்கள் கடுமையாக முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், விமல் வீரவன்ச தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள ஒரு முக்கிய அரசியல் தலைவரின் தூண்டுதலின் பேரிலேயே இவ்வாறான எதிர்ப்புகள் முரண்பாடுகள் கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது அதில் இரட்டை குடியுரிமை தடை விவகாரம் நீக்கப்பட்டது. அதனை கடுமையாக எதிர்த்த விமல் வீரவன்ச இறுதியில் ஜனாதிபதியின் உறுதியையடுத்து அதற்கு ஆதரவு வழங்கினார்.

ஆனால் ஆதரவு வழங்குவதற்கு முன்னதாக அந்த ஏற்பாட்டை பயன்படுத்தி எந்த ஒருவரும் பாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்க மாட்டார்கள் என்று, தான் நம்புவதாக தெரிவித்திருந்தார். அது பசில் ராஜபக்ஷவை நோக்கியே கூறப்பட்டதாக அப்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

கடந்த வியாழக்கிழமை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் 10 அரசியல் கட்சிகள் விமல் வீரவன்சவின் இல்லத்தில் சந்தித்து உரையாடியுள்ளன. ஆளும் கட்சிக்குள் விமலுக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் அடுத்தக்கட்டமாக பங்காளிக் கட்சிகள் என்ன செய்வது என்றும் ஆராய்ந்துள்ளனர்.

அதன்படி, பத்துக்கட்சிகளும் அடுத்துவரும் நாட்களில் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மஹிந்த உள்ளிட்டவர்களையும் ராஜபக்ஷ சகோதரர்களையும் சந்திக்கவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாராளுமன்ற உணவகத்தில் பிரதமர் மஹிந்தவைச் சந்தித்த அமைச்சர் விமல், ‘சேர் நான் உங்களுக்கு எதிராக செயற்படுவதாக கூறி பிரசாரம் செய்கின்றார்கள்’ என்றிருக்கின்றார்.

அதற்கு பிரதமரும் தனது வழமையான பாணியிலேயே ‘அவற்றை பொருட்படுத்தாதீர்கள் விமல்’ என்று பதிலுரைத்துவிட்டு நகர்ந்துவிட்டார்.

அந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் பிரதமரைச் சந்தித்த அமைச்சர் ஜோன்சன், ‘சேர் உங்களை பதவி நீக்க யாரும் முனையவில்லை, ஆனால் கட்சியின் தலைமைத்துவத்தினை ஜனாதிபதிக்கு வழங்க முயற்சிக்கின்றார்கள்’ என்று கவுண்டரின் வாழைப்பழ கதைபோன்று கூறியிருக்கின்றார்.

அதனையும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு சென்றுவிட்டாராம் பிரதமர்.

இந்த சம்பவங்களின்போது பிரதமர் அருகில் இருந்த பெயர் குறிப்பிட விரும்பாத பிரமுகர்.

இதனிடையே, ஆளும் தரப்பின் தற்போதைய பிளவுக்கு ‘வல்லரசு கனவில்’ உள்ள இரு நாடுகளின் ‘உளவுப்பிரிவு’ காரணமாக இருப்பதாக ஆளும் தரப்பிற்குள்ளேயே தெரிவிக்கப்படுகின்றது. அதுபற்றிய ஆராய்வுகளும் தலைமைகளால் முடுக்கி விடப்பட்டுள்ளதாக உள்ளகத்தகவல்கள் கூறுகின்றன.

பிரதமரின் அறிவிப்பும் சர்ச்சையும்

கொரோனா காரணமாக உயிரிழக்கின்றவர்களின் உடல்களை புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை அறிவித்தார். அவரது அறிவிப்பு பலத்த வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக பாராளுமன்றத்திலேயே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் அந்த அறிவிப்பை வரவேற்றனர்.

அதேபோன்று சர்வதேச ரீதியிலும் பிரதமரின் அறிவிப்புக்கு ஒரு வரவேற்பு கிடைத்தது. இலங்கை வரவிருக்கின்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பை வரவேற்றார். அதேபோன்று இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவரும் பிரதமரின் அறிவிப்பை வரவேற்றிருந்தார்.

எனினும் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், நிபுணர் குழுவே அது தொடர்பாக இறுதியாக தீர்மானிக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை சர்ச்சை நிலை ஏற்பட்டது.

எப்படியிருப்பினும் இது அரசாங்கத்தின் ஒரு பாரியதொரு நகர்வாக காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இம்மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான விவாதம் 24ஆம் திகதி ஜெனிவாவில் இடம்பெறும்.

அது மட்டுமன்றி மார்ச் மாத நடுப்பகுதியில் இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணையை ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டு வர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு பேரவையில் நடைபெறும்போது, அதில் உறுப்பினர்களாக உள்ள முஸ்லிம் நாடுகள் இந்த சடலம் புதைப்பு விவகாரத்தினால் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் என்ற ஒரு கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. அந்த நகர்வை முறியடிக்கும் ஒரு நோக்கமாகவே இந்த சடலங்களை புதைக்க அனுமதி வழங்கும் தீர்மானம் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகிறது.

பாக்கிஸ்தானிடம் ரவூப், ரிஷாத் கேட்டுக்கொண்டது

கடந்த 9ஆம் திகதி வியாழக்கிழமை பாக்கிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டியை மு.கா.வின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனியாகவும், அ.இ.ம.கா.இன் தலைவர் ரிஷாத் பதியுதீன் பரிவாரங்களுடனும் சென்று சந்தித்திருந்தார்.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டக் தற்போது இஸ்லாமபாத்தில் உள்ளார். இவர் பெரும்பாலும் பிரதமர் இம்ரான்கானுடன் அல்லது அவர் வருவதற்கு முன்னதாகவே இங்கு வருகை தரவிருக்கின்றார். இந்நிலையில் பிரதி உயர்ஸ்தானிகரைச் தனித்தனியாகச் சந்தித்த ரவூவ் மற்றும் ரிஷாத் ஆகியோர் ஜனஸா எரிப்பு பற்றியே அதிகநேரம் கருத்துக்களை பகிர்ந்ததாக தகவல்.

அரசாங்கம் ஜெனிவா விடயத்தில் பாக்கிஸ்தானின் உதவியைக் கேட்டால், அதற்கு பதிலாக ஜனாஸா விடயத்தினை பயன்படுத்துமாறு வலியுத்தியிருக்கின்றார்களாம். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘இடம்மாறி’ நிற்கையில் அவர்களை வெட்டிவிடாது பிரச்சினையை தாங்களே தீர்த்து, அவர்களையும் இணைத்துப் பயணிக்க இப்படியொரு முயற்சியை இருவரும் எடுத்திருப்பதாகத் தகவல்.

பதுங்கிய கலையரசனும், சீறிய சிறிதரனும்

பொத்துவில் முதல் பொலகண்டி வரையிலான பேரணியின்போது நடைபெற்ற பிச்சல் பிடுங்கல்கள் ஏராளம். யார் பெரியவர் என்பதே அனைத்துக்கும் அடிப்படை. இவற்றைக் கடந்து பேரணி வெற்றிபெற்றது. ஆனால் இறுதி நாளில் கிளிநொச்சியில் பேரணி ஆரம்பித்தபோது ஒரே கட்சியைச்சேர்ந்த இருவர் முட்டுப்பட்டிருக்கின்றார்கள்.

கிளிநொச்சியை தன் கோட்டையாக கருதும் சிறிதரன் முன்னிலையில் சுமந்திரன் பொத்துவிலில் தடைகளை உடைத்து பேரணி ஆரம்பத்ததை மையப்படுத்தி ‘நாம் தான் எல்லாம்’ என்று உரைத்திருக்கின்றார்.

இதனால் கொதிப்படைந்த சிறிதரன் ‘நீங்கள் எங்களுக்கு சொல்லாமல் செய்தால் நாங்கள் என்ன செய்வது’ என்று கூறியிருக்கின்றார். இந்த கூற்றுக்கள் தர்க்கமாகின. சுமந்திரன் ஒருவித புன்னகையுடன் “உங்களுக்கு அரசியல் பீடக் கூட்டத்தில் கூறினேன், யாழ்.ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்வைத்து” கூறினேன் என்று பேரணி அறிவிப்பு பற்றி சிறிதரனுக்கு பதிலுரைத்திருக்கின்றார்.

எனினும் சீற்றமடைந்த சிறிதரன், “நீங்கள் எதனையும் கூறவில்லை. உங்கள் தனி முடிவில் செயற்பட்டு விட்டு இப்போது பெருமை பேசாதீர்கள் என்று கூற,

இதற்கு சுமந்திரன் என்னை யாரும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைக்கவில்லை. நான் எம்.பியாக இல்லை. பொதுமகனாகவே கலந்துகொண்டிருக்கின்றேன். இந்த மண்ணில் நான் விடுத்த அழைப்பால் என்னை நேசிப்பவர்கள் வந்திருக்கின்றார்கள்” என்று கூறவும்; அருக்கில் நின்றவர்கள் விடத்தினை முடித்து வைத்திருக்கின்றார்கள். இந்த இடத்தில் இருந்த ஆர்னோல்ட் கடைசிவரையில் ‘கப்சிப்’ ஆக இருந்திருக்கின்றார்.

இதனைத்தொடர்ந்து பேரணி இறுதி நிலையை எட்டியபோது கடற்கரையை அண்மித்து அமர்ந்திருந்த சுமந்திரனிடம் சென்று கலையரசன் ‘அண்ணே இங்கு ஏதோ அரசியல் நடக்கிறது. பேரணி இரண்டாகிறது. உங்களுக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கின்றார்கள்’ என்று கூறியிருக்கின்றார். உடனே சுமந்திரன் வழங்கிய கடுமையான ‘டோசால்’ சற்று ஆடிப்போய்விட்டார் கலையரசன்.

அந்த இடத்தினை விட்டு உடன் அகன்று செய்வதறியாது திகைப்புற்று இருந்திருக்கின்றார். பாவம் அவர், பொலிகண்டியில் இடம்வலம் தெரியாமையால் கிழக்கு நண்பர்கள் வரும் வரையில் காத்திருந்து பின்னர் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு அம்பாறை திரும்பியிருக்கின்றார். அதன்போது தனது மனக்கிடக்கையையும் இறக்கி வைத்திருக்கின்றார்.

சுமந்திரன் ‘சுமைதாங்கி’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்து கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி கருத்துக்களை வெளியிட்டதால் எழுந்த சர்ச்சைகளே கடந்த தேர்தல் பின்னடைவுகளுக்கு ஒரு காரணம் என்பது கூட்டமைப்பின் பங்காளிகளின் குற்றச்சாட்டு. அதனால் பேச்சாளர் பதவியை அவரிடத்தில் இருந்து ‘பிடுங்கி’ விட வேண்டும் என்பது அவர்களின் ‘கிடுக்குப்பிடியான’ கோரிக்கை.

கூடவே, பாராளுமன்றில் பேசுவதற்கு பங்காளிகளுக்கு நேரம் ஒதுக்குகிறார் இல்லை என்ற குற்றச்சாட்டுக்களுடன் கொரடா பதவியில் இருக்கும் சிறிதரனையும் நீக்க வேண்டும் என்பதும் பங்காளிகளின் திட்டம். இதற்கான முயற்சிகளையும் அவர்கள் எடுத்திருந்தனர்.

ஒரு கட்டத்தில் பெருந்தலைவர் சம்பந்தனைக்கூட பங்காளிக்கட்சிகள் சம்மதிக்க வைத்து பத்திரிகைக்கு செய்திகளையும் வழங்கியிருந்தன. ஆனால், பதவி நிலைகளில் எவ்விதமான மாற்றமும் இடம்பெறவில்லை. குறிப்பாக பங்காளிக்கட்சிகள் இலக்கு வைத்த சுமந்திரன், பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு பதிலாக நேரெதிரான நிலைமைகளே ஏற்பட்டிருக்கின்றன.

அதாவது, சிறிதரன் கொரடா பதவியை துறந்துவிட்டார். தற்போது அப்பதவி வெற்றிடமாகவுள்ளது. இதனைவிட கொரோனா காலம் என்பதால் மூத்த தலைவர் சம்பந்தன் பாராளுமன்றுக்கு வருவதும் குறைவு. இதனால் சுமந்திரன் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் என்ற பதவியை அவ்வவ்போது வகிப்பதோடு தற்காலிக கொராடாவாகவும், பேச்சாளராகவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.

ஏற்கனவே தமிழரசுக்கட்சியில் வெளிவிவகாரங்களுக்கான பொறுப்பு, பிரதி பொதுச்செயலாளர் என்ற பதவிகளும் இவரிடத்தில் உண்டு. ஆக இப்போதைக்கு சுமந்திரன் தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டமைப்பின் 5 பதவிகளைச் சுமக்கும் சுமைதாங்கி தான்.

பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் நிலைமைகள் சுமூகமாக இல்லை. அங்கும் சம்பிக்க அணி, சரத் அணி என்று இரண்டு உருவாகும் நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. சஜித்துடன் ஆரம்பத்திலிருந்து தோளோடு தோள் நிற்கும் இம்தியாஸை தவிசாளராக ஆக்க வேண்டும் என்பதே அடிப்படை நிலைப்பாடாக இருந்தபோதும் ஈற்றில் சரத்பொன்சேகா அதனை தட்டிப்பறித்துக்கொண்டிருக்கின்றார்.

இம்தியாஸ் சிறுபான்மை தேசிய இனமாக இருப்பதுவும் ஒரு காரணம் என்கிறது தகவலறிந்த வட்டாரங்கள்.

ஆனாலும், மென்மையான சுபாவம் கொண்ட இம்தியாஸ் இந்த விடயத்தில் சரத்தை ஒரு ‘பிடி’ பிடித்துவிட்டார். ஆனால் எதுவும் மாறவில்லை. பின்னர் சரத் முக்கிய பதவிக்கு வந்தமையால் சம்பிக்கவின் இடம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. சம்பிக்கவுக்கு நிலைமை புரிந்துவிட்டது.

ஹெல உறுமயவிலிருந்து விலகியவர் 43ஆம் படை அணியை ஆரம்பித்திருக்கிறார். மறுபக்கத்தில் சஜித் சம்பிக்கவை சமாதானம் செய்வதற்கு குழுவொன்றை நியமித்திருக்கின்றார். குழு, பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. விரைவில் முடிவு வரும். அதுவே பூகம்பமா இல்லை அமைதியா என்பதை தீர்மானிக்கப்போகின்றது.

 

Posted in Uncategorized

P2P போராட்டம் எதுவரைக் கொண்டு செல்லும்? -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டம், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்கவியலாது.

இந்தப் போராட்டத்தின் முடிவைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் இடையேயான பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், கருத்து மோதல்கள் ஒருபுறமும், இதற்கு யார் உரிமை கொண்டாடுவது என்பது, இன்னொரு புறமுமாக ஈழத்தமிழர் அரசியல் நகர்கிறது.
இந்தப் போராட்டத்தில் உணர்வெழுச்சியோடு பங்குபற்றிய எல்லோருடைய கேள்வியும், அடுத்து என்ன என்பதே? இக்கேள்வி மிகவும் முக்கியமானது. இக்கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு, இந்தப் போராட்டத்தின் போதும் அதன் பின்னரும், நடைபெற்ற நிகழ்வுகளை ஆழமாக நோக்க வேண்டியுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு இருந்தது. அது நேரடியான பங்கேற்பு முதல், மனதளவிலான ஆதரவு வரைப் பலதரப்பட்டதாக இருந்தது. இது மக்கள் மத்தியில், ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

இப்போது எம்முன், பல கேள்விகள் உள்ளன. இதை எவ்வாறு தக்கவைப்பது?இதற்கான வேலைத்திட்டம் என்ன? இதை யார் முன்னெடுக்கப் போகிறார்கள்? இலங்கையில் ஜனநாயகத்தையும் சமூகநீதியையும் தக்கவைப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இதை முன்னகர்த்துவதா, இல்லையா?

இக்கேள்விகளுக்கான பதிலை, ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை, பேரணியின் பிரகடனத்தில் இருந்து தேடித் தொடங்கலாம். அவ்வறிக்கை, அடிப்படையில் மூன்று விடயங்களைச் சொல்கிறது.

முதலாவது, தமிழருக்கான நீதியைச் சர்வதேச சமூகத்திடம் கோருவது.
இரண்டாவது, தமிழரின் உடனடியான பிரச்சினைகளைத் தீர்க்க, அரசிடம் கோருவது.

மூன்றாவது, மலையகத் தமிழரதும் முஸ்லிம்களதும் பிரச்சினைகளுக்கான தீர்வை, அரசிடம் கோருதல்.

இந்தப் பிரகடனத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அடுத்து, என்ன செய்வது போன்ற எதுவும் இல்லை. இது புதிதல்ல; தனிநாடுதான் தீர்வு என்று, ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ நிறைவேற்றிய பின்னர், அதை வெல்வதற்கான வழி என்ன என்ற கேள்விக்கு, “அது இரகசியம்” என உரைத்த கதையை நாமறிவோம்.

எனவே, திட்டமில்லாத, நீண்ட முன்னோக்கு இல்லாத குறுகியகால அரசியல் நலன்களுக்காகவும் திசைதிருப்பல்களுக்காகவும் உருவாக்கப்படும் உணர்ச்சிப் பேச்சுகளும் வீராவேசமும் எமக்கு அழிவையே தந்திருக்கின்றன.

இந்த P2P போராட்டம், நீண்ட திட்டமிடலோ, மக்களுடனான கலந்துரையாடலோ இன்றித் தொடங்கப்பட்டது. இன்று, அதை மக்கள் போராட்டம் என்று சொல்லும் சிவில் சமூகப் பிரதிநிதிகள், மக்களுடன் பேசாமலேயே இதைத் தொடங்கினார்கள்.இதற்கான மக்கள் திரளைச் சேர்க்கும் திட்டம், அவர்களிடம் இருந்திருக்கவில்லை.

தமிழ் மக்களின் உரிமைக் குரலுக்கான போராட்டத்துக்கு, மக்கள் தன்னெழுச்சியாக ஆதரவு தந்தார்களேயன்றி, போராட்ட ஒழுங்கமைப்பாளர்களால், மக்களின் பங்கேற்புக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை. இது கவலைக்குரியது. ‘முடிவுகளை நாங்கள் எடுக்கிறோம்; நீங்கள், எங்கள் பின்னே வாருங்கள்’ என்பதுதான், தமிழ்த் தேசிய அரசியல் செல்நெறியாக இருந்தது. இது இராமநாதனில் இருந்து, இன்றுவரையும் தொடர்வது அவலம்.

இலங்கையினதும் ஏனைய மூன்றாம் உலக நாடுகளினதும் வரலாற்றைக் கூர்மையாக அவதானித்தால், ‘சிவில் சமூகம்’ எனும் அடையாளத்தில், மக்கள் சார்பாகப் பேசும் புதிய பிரமுகர்கள் காலத்துக்குக் காலம் உருவாகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மாற்றாக, மக்கள் எவ்வகையிலும் தெரிவுசெய்யாத அலுவலர்களும் முகவர்களும் தங்களைச் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளாக நிலைநாட்ட முயலுகின்றனர்.

இவர்கள் இரண்டு பணிகளைச் செவ்வனே செய்கிறார்கள். அதில் பிரதானமானது, அயலார் நிகழ்ச்சி நிரலை உள்ளூர் மயமாக்குவதன் மூலம், நல்ல சேவகர்களாக இருப்பது.

இரண்டாவது, போராட்டங்களை அரசியல்நீக்கம் செய்வது. இதன்மூலம், வெகுஜன ஜனநாயக நோக்கில், மக்களின் அடிப்படையிலான வெகுஜன நலன் பேணும் அமைப்புகள் உருவாகாமல், இவை பார்த்துக் கொள்கின்றன. இவை, நாம் சிந்திக்க வேண்டிய விடயங்கள்.

P2P பிரகடனம் தொடக்கத்திலேயே, தமிழரின் சுயநிர்ணயம் பற்றிப் பேசுகிறது. இலங்கையின் ஏனைய சிறுபான்மை இனங்களான, முஸ்லிம்களினதும் மலையகத் தமிழரினதும் சுயநிர்ணய உரிமையை, நாம் ஏற்றுக் கொள்கிறோமா?

இப்பிரகடனம், தமிழர் தேசம், சிங்கள தேசம் என்று இரண்டு சொல்லாடல்களுக்குள் இயங்குகிறது. இந்தச் சொல்லாடலே, அடிப்படையில் ஏனைய சிறுபான்மையினரின் உரிமைகளைக் கேள்விக்கு உள்ளாக்கிறது.

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையை முழுமையாக நோக்கின், அதை வெறுமே சிங்கள, தமிழ்த் தேசிய இனங்களின் பிரச்சினையாக நோக்குவது, பிரச்சினையின் ஒரு பகுதியையே தீர்க்கும். எனவே, தொடர்ச்சியான பெரிய நிலப்பரப்பொன்றுக்கு உரிமைகோரக் கூடிய சிங்கள, தமிழ்த் தேசிய இனங்கள் மட்டுமன்றி, தமக்கெனத் தொடர்ச்சியான பெருநிலப்பரப்பற்ற போதும், பொதுவான மொழி, பண்பாட்டு, அரசியல் வரலாற்றுப் பொதுமைகளையுடைய முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தையும் சுயாட்சியையும் ஏற்றல் என்ற அடிப்படையில் மட்டுமே, தேசிய இனப் பிரச்சினைக்கு, நிலைக்கக் கூடிய, நல்ல தீர்வொன்றைக் காண இயலும்.

தேசிய இனப் பிரச்சனையின் தீர்வு, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், மேலும், சுயநிர்ணய உரிமை எனும் நியதி, அதன் முழு மெய்ப்பொருளில், பிற தேசிய சிறு பான்மையினரது அபிலாஷைகளைக் கையாள்வதற்கும் பயன்பட வேண்டும். இதை, இந்தப் பிரகடனம் செய்யத் தவறியுள்ளது.

எமது பிரச்சினைகளை மற்றவர்கள் விளங்க வேண்டும்; ஆதரவு தரவேண்டும் என்று நினைப்போர், மற்றவர்களின் பிரச்சினைகளையும் விளங்க வேண்டும்; ஆதரவு தரவேண்டும். ஈழத்தமிழர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் இடையிலான உறவு, ‘ஈவோருக்கும் இரப்போருக்கும்’ இடையிலான உறவாக இருக்க முடியாது. ஒரு தேசியவாத அகங்காரத்துக்கு, எதிரான இன்னொரு தேசியவாத அகங்காரம் ஆபத்தானது.

இப்போராட்டம் தொடங்கிய வேளையில், ஒருபகுதி மக்கள் இப்போராட்டத்தின் கோசமாக, இலங்கையின் வடபுலத்து மீனவர்களின் நலன்கள் பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தக் கோரினர். இந்திய மீனவர்களின் எல்லைதாண்டிய மீன்பிடி, வடபுலத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டினர். ஆனால், அக்கோரிக்கை மறுக்கப்பட்டது. அக்கோரிக்கை மிகவும் நியாயமானது. இது, யாருடைய நலன்களை முன்னிறுத்தி, நிகழ்வுகள் அரங்கேறுகின்றன என்ற வினாவை எழுப்புகிறது.

கடந்த மூன்று தசாப்தங்களாக, ஏகாதிபத்திய மீளெழுச்சியைக் கொண்டதொரு சர்வதேசப் பின்னணியில், தவறாகக் கையாளப்பட்ட இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை, போராக வக்கிர வளர்ச்சி பெற்றது. மோதலின் இரு தரப்பிலும் இருந்தோரில் பெரும்பாலானோர் அறியாமலே அந்நியக் குறுக்கீடுகள் தொடர்ந்தன.
கொலனிய யுகத்திலும் பின்னரும், மோதல்களின் போது, அயல்தரப்புகள் ஓர் இனக் குழுவுக்கோ, இன்னொன்றுக்கோ சார்பாக நின்றதாகத் தோன்றினாலும், அவர்களது குறுக்கீடு இலங்கையினதோ, எந்தத் தேசிய இனத்தினதோ நலனுக்கானதல்ல. இந்திய மேலாதிக்கச் சக்திகளது நடத்தையும் அத்தகையதே.

தேசிய இன ஒடுக்கலின் தீவிரமாதலை அடுத்து, இந்தியாவும் மேற்குலகும் பல்வேறு தருணங்களில் தமிழ்த் தேசியவாத நோக்கங்களை ஆதரிப்பது போன்று, தோற்றம் காட்டியுள்ளன. ஆயினும் தமது மேலாதிக்க நலன்களுக்கு உதவியான முறையில், துரிதமாகக் தரப்பையும் அனுதாபங்களையும் மாற்றியுள்ளன.

விடுதலைப் புலிகளை, இராணுவ ரீதியாக முறியடிப்பதில், இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் நிற்பதென இந்தியாவும் மேற்குலகும் முடிவெடுத்ததை உணர்ந்த பின்னரும், தமிழரையும் விடுதலைப் புலிகளின் தலைமையையும் காப்பாற்ற, மேற்குலகோ இந்தியாவோ குறுக்கிடும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு, வலுவான நம்பிக்கை, போரின் இறுதி மாதங்களில், பல தமிழ்த் தேசியவாதிகளிடம் இருந்தது. வருந்தத்தக்கவாறு, கடந்த சில ஆண்டுகளின் கசப்பான அனுபவங்களின் பின்னரும், அதே போக்கு நிலைக்கிறது.

இலங்கை பயங்கரமானதொரு பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்குகிறது. இன்று, அந்நியக் கடனிலேயே இலங்கை காலம் கடத்துகிறது. கடனுக்கான விதிப்புகளும் நிபந்தனைகளும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் கேடானவை. இது தொடர்பிலேயே, அந்நியத் தலையீட்டுக்காரர், தமக்கு வாய்ப்பாகவும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் தீங்காகவும், தேசிய இனப் பிரச்சினையை மீண்டும் பயன்படுத்தாதவாறு, தேசிய இனப் பிரச்சினை, புதிய பார்வையில் நோக்கப்பட வேண்டும்.

P2P போராட்டத்துக்கான ஏகோபித்த ஆதரவு மூலம், மக்கள் ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறார்கள். அதேவேளை, தத்தம் நிகழ்ச்சி நிரல்களை மீண்டுமொரு மக்களின் பெயரால், செய்து முடிப்பதற்கு நாம் அனுமதிக்கப் போகிறோமா? அல்லது, இன்று இலங்கையில் ஒடுக்கப்படுகின்ற அனைத்து சிறுபான்மையினங்களையும் பொது வேலைத்திட்டத்தில் ஒன்றுதிரட்டி, ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடப் போகிறோமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மக்களேயன்றி, அரசியல் தலைமைகளோ சிவில் சமூகமோ அல்ல.

பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு விஜயம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வாழைச்சேனை வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பில் ஆராயும் முகமாக விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலைப் பிரமத வைத்தியர் திருமதி எரங்க ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பிலும் பார்வையிட்டார்.

வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறை குறித்து பிரதம வைத்தியரினால் குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டதுடன், அவை நிவர்த்தி செய்யப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட நோயாளிகளைப் போதனா வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தொழில்நுட்ப இயந்திர வசதிகள், பிணவறை, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு போன்றன தொடர்பிலும் விசேடமாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரதம வைத்தியரினால் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடி அவர்கள் மட்டத்தில் தீர்க்கப்படக் கூடிய விடயங்களுக்கு உடன் தீர்வு காண்பதற்கும், ஏனைய விடயங்கள் தொடர்பில் மத்திய அரசின் அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு இயன்ற செயற்பாடுகளை மேற்காள்வதற்கும் ஆவன செய்வதாக இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பின்னர் வாழைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அவர்களைச் சந்தித்து பிரதேசத்தின் சுகாதார நிலைமைகள் மற்றும் டெங்கு நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 400 ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியது.

இந்நிலையில், இறுதியாக 6 கொரோனா மரணங்கள் பதிவாகிய நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திவுலன்கடவல பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண்ணொருவர், ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். பல்லேதலவின்ன பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆண்ணொருவர், ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். நுகேகொட பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண்ணொருவர், ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

அத்துடன் வத்தளை பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்ணொருவர் அங்கொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார். ஹுன்னஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இரவு 10 மணி வரை 774 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 76428 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 69 411 பேர் குணமடைந்துள்ளதோடு 6157 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

664 பேர் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்திற்கமைய இது வரையில் ஒரு இலட்சத்து 89 349 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

ஜனவரி 29 முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை 146, 327 பேருக்கும் , பெப்ரவரி 5 தொடக்கம் 11 வரை 9983 பேருக்கும் , 12 ஆம் திகதி 1110 பேருக்கும் , 13 ஆம் திகதி 7457 பேருக்கும் , 14 ஆம் திகதி 2695 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் 3 தீவுகள், சீன திட்டங்களில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது

கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையம் திட்டத்தையும், யாழ்ப்பாணத்தின் மூன்று தீகளில் அமைக்கப்படவுள்ள மின் திட்டங்களையும் இந்தியா கைப்பற்றியுள்ளது. கிழக்கு முனையத்தை இந்தியா இழந்த போதும், குறிப்பிடத்தக்க இரண்டு திட்டங்களில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தினால் அதிருப்தியும், அதிக எச்சரிக்கையுணர்வையுமடைந்த இந்தியா, அதிக அழுத்தங்களை பிரயோகித்து இரண்டு திட்டங்களையும் கைப்பற்றியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் சப்த தீவுகளில் நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மேற்கொள்ள, சீனாவின் எம்.எஸ் / சினோசர்-எடெக்வினுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்திருந்தது. யாழ்ப்பாணத்திற்கு வெளியே மூன்று தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட இருந்தன. சூரிய, காற்று மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க கலவையை இந்த ஆலைகள் பயன்படுத்த வேண்டும். இந்த திட்டத்திற்காக 12 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க இருந்தது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் தீவுகளின் இருப்பிடங்களில் ஒன்று ராமேஸ்வரத்திலிருந்து 48 கி.மீ தூரத்தில் இருப்பதால் இந்த திட்டத்தை ஒரு சீன நிறுவனத்திற்கு வழங்குவதை இந்தியா கடுமையாக எதிர்த்தது. அங்கிருந்து சீனர்கள் இந்தியாவை உளவு பார்ப்பார்கள் என்று இந்தியா அஞ்சியது.

இந்த திட்டத்திற்காக டெண்டர் வழங்கிய இந்திய நிறுவனத்தை விட சீன நிறுவனம் சிறந்த தகுதி வாய்ந்தது என்றும், ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஒப்பந்தத்தை அனுமதித்து என்றும் இலங்கை அரசு குறிப்பிட்டது. எனினும், இந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இருக்கவில்லை.

இந்தியாவின் ஆட்சேபனை இலங்கையின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதிப்பதாக ஆளுந்தரப்பின் ஒரு தரப்பினர் அழுத்தங்கொடுத்தனர். எனினும், பாகிஸ்தான் பிரதமரின் வருகை, சீனாவின் அதிகரித்த பிரசன்ன விவகாரங்கள் என அதிகரித்து வரும் இந்திய அதிருப்தியையடுத்து, இந்தியாவின் கோரிக்கைக்கு இலங்கை பணிந்துள்ளது.

இதேவேளை, கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதில்லையென அரசு எடுத்த முடிவையடுத்து, மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேற்கு முனையத்தின் அபிவிருத்தியில் தொடர்புபடும் இந்திய நிறுவனத்திற்கு 85% பங்குகளை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு முனையத்தில் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு 49% பங்குகளையே வழக்க முன்னர் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை தமிழர்களின் நலன்களை உறுதிசெய்ய இந்தியா நடவடிக்கை – தமிழகத்தில் மோடி

இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களை உறுதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மோடி மேலும் உரையாற்றுகையில்,

தமிழர்கள் உரிமை தொடர்பில் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.

அவர்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவத்துடன் வாழ்வதை உறுதி செய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

இலங்கையின் தமிழ் சகோதரர்கள், சகோதரிகளின் நலன்கள் அபிலாசைகளை இந்திய அரசாங்கம் என்றும் கருத்தில் எடுத்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஒரேயொரு இந்திய பிரதமர் என்ற பெருமை எனக்குள்ளது.

இலங்கையில் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நாங்கள் இலங்கை தமிழர்களின் நலன்களை உறுதி செய்துவருகின்றோம்.

கடந்த காலங்களை விட எங்கள் அரசாஙகம் அதிகவளங்களை வழங்கியுள்ளது.

இலங்கையின் வடகிழக்கில் இடம்பெயர்ந்தவர்களிற்கு 50,000 வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளோம்.

இலங்கையின் மலையகத்தில் 40,000 வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளோம்.

இலங்கைத் தமிழர்களின் சம உரிமை மற்றும் மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறதென தெரிவித்தார்.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- கடல்வழியாக இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ள புலத்சினி? விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிஐடியினருக்கு உத்தரவு

உயிர்த்த ஞாயிறுதாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சார என அழைக்கப்படும் புலத்சினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளார் என வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஆணைக்குழு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளது.

கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவரின் மனைவி சாரா என அழைக்கப்படும் புலத்சினி இராஜேந்திரன் இந்தியாவிற்கு தப்பியோடியிருந்த நிலையில் மீண்டும் கடல்மார்க்கமாக இலங்கை திரும்பியுள்ளார் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளது.

கடல்வழியாக இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ள புலத்சினி மன்னாரில் மூன்று இடங்களில் தங்கியிருந்த பின்னர் புத்தளத்திற்கு சென்று பின்னர் மட்டக்களப்பிற்கு சென்றுள்ளார் என புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே ஆணைக்குழு இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னமும் கைதுசெய்யப்படாமல் தப்பியுள்ளவர்கள்,பிணையில் விடுதலையானவர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டு போதிய ஆதாரமின்மையால் விடுதலை செய்யப்பட்டவர்களை புலத்சினி சந்தித்துள்ளார் என ஆணைக்குழுவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த அரசாங்கம் வேண்டுமென்றே இந்தியாவைச் சீண்டுகின்றது ரெலோ ஜனா

வேண்டுமென்றே இந்த அரசாங்கம் இந்தியாவைச் சீண்டுகின்றது. தூரத்துத் தண்ணீர் ஆபத்திற்கு உதவாது என்று சொல்லுவார்கள். இன்னொரு நாட்டுக்கு நட்பாய் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்காசியாவின் வல்லரசு நாட்டினை ஏன் எதிர்க்க வேண்டும். இந்த நாட்டின் நண்பன் யார், எதிரி யார் என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இந்தியா தொடர்பில் இலங்கையின் சமகால நிலைப்பாடுகள் சம்மந்தமாகக் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே தற்போது என்ன நடக்கின்றது. நான்கு தொழிற்சங்கங்கள் கிழக்கு முனையம் தொடர்பாக போராட்டம் நடத்துகின்றன என்பதற்காக இலங்கை, இந்தியா, ஜப்பான் போன்ற மூன்று நாடுகள் சேர்ந்து மேற்கொண்ட ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படுகின்றது. இந்தியா இந்த நாட்டிற்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கின்றது. ஜே.வி.பி காலகட்டத்திலே 1971ம் அண்டு நடந்த கிளர்ச்சியின் போது இந்தியா தான் இந்த நாட்டைக் காப்பாற்றியது. 2009ல் கூட இங்கு ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் இந்தியா இந்த அரசிற்கு உதவியது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை புகையிரதத் தண்டவாளங்களை அமைத்துத் தந்தது.

அதே போல் ஜப்பான் என்பதும் இன்னுமொரு ஜனநாயக நாடு. இந்தப் பாராளுமன்றக் கட்டிடம் கூட ஜப்பானால் இந்த நாட்டிற்கு அன்பளிப்புச் செய்யப்பட்து. அவ்வாறான நாடுகளை ஏன் வெறுக்கின்றீர்கள். எதிர்வரும் 22ம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இந் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதாகவும், 23ம் திகதி அவர் இந்தாப் பாராளுமன்றத்திலே உரையாற்ற இருப்பதாகவும் செய்திகள் மூலம் நாங்கள் அறிகின்றோம். இதன்மூலம் என்ன நடக்கப் போகின்றது.

பாகிஸ்தான் பிரதமர் இங்கு வந்து உரையாற்றும் போது இந்தியாவிற்கு எதிராகத் தான் உரையாற்றப் போகின்றார். வேண்டுமென்றே இந்த அரசாங்கம் இந்தியாவைச் சீண்டுகின்றது. தூரத்துத் தண்ணீர் ஆபத்திற்கு உதவாது என்று சொல்லுவார்கள். இன்னொரு நாட்டுக்கு நட்பாய் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்காசியாவின் வல்லரசு நாட்டினை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதே என்னுடைய கேள்வி. இந்த நாட்டின் நண்பன் யார், எதிரி யார் என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்

ஜெனீவா விடயம் – வடக்கில் நுழையும் சீனக் கம்பனிகள் விடயம்: தமிழ் கட்சிகள் எடுத்துள்ள முடிவு!!

தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து மூன்று முக்கிய விடயங்கள் குறித்து தீர்மானங்களை எடுத்துள்ளன. இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இந்நிலையில், இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தக்கூடிய அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டிய தேவைகளை கவனத்திற்கொண்டு தமிழர்களின் இருப்பு, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயற்படுவதற்காக நாம் ஒன்றிணைந்துள்ளோம்.

இந்நிலையில், குறித்த பத்துக் கட்சிகள் சார்பாக நடவடிக்கைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு, தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு எதிராகச் செயற்பாட்டு ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளது.

இந்தக் குழுவை இணைத்துச் செயற்படுத்துவதற்கான இணைப்பாளர்களாக சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் செயற்படவுள்ளார்கள்.

அத்துடன், ஜெனீவா விடயம் தொடர்பாகவும் ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளோம். ஏற்கனவே, தமிழ் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அறிக்கையொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடனும், இணை அனுசரணை நாடுகளான பிரித்தானியா, கனடா, ஜேர்மனி போன்ற நாடுகளுடனும் ஏனைய உறுப்பு நாடுகளுடனும் கலந்துரையாடி, தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம்.

சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா, இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை உள்ளடக்கியதாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ளோர், கூட்டாக பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடன் குறுகிய நாட்களுக்குள் உரையாடவுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்துக்குள் வரக்கூடிய நெடுந்தீவு, அனலை தீவு, நயினாதீவு, போன்ற தீவுகளில் ஒரு மாற்று எரிசக்தியை உருவாக்குவதற்காக இலங்கை அரசாங்கம் சீனக் கம்பனியுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளதுடன் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டு வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவ்வாறான ஒரு விடயம் நடக்குமாக இருந்தால், வடக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்துவதுடன், இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய வடக்குப் பகுதியில் சீனக் கம்பனியைக் கொண்டுவருவது பலத்த பாதிப்புக்களை உருவாக்கும்.

எனவே, அவ்வாறான சீனக் கம்பனிகளை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கை அரசாங்கத்துக்கு பத்து தமிழ் கட்சிகளும் இணைந்து வலியுறுத்துகின்றன” என தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஜெனிவா நெருக்கடியை சமாளிக்க மத்திய கிழக்கு நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில் இலங்கைக்கு எதிராக பிரயோக்கிக்கப்படும் அழுத்தங்களில் இருந்து தப்பிக்கும் விதமாக மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், வெளிவிவகார அமைச்சு தற்போதே அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.

நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் கடந்த கால பொறுப்புக்கூறல்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ள நிலையில், இம்முறை இலங்கைக்கு நெருக்கடியான நிலைமை ஒன்று உருவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுகையில்,

ஜெனிவாவில் கொண்டுவரப்போகும் புதிய பிரேரணையை தோற்கடிக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. இப்போது வரையில் சீனாவின் முழுமையான ஆதரவுடன் ரஷ்யா, கியூபா நாடுகளின் ஒத்துழைப்புகளை இலங்கை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இதற்கு முன்னர் 30/1 பிரேரணையை கொண்டுவந்த வேளையில் அதற்கு எதிராக வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை புதிய நகர்வுகளை கையளவே ஆராய்ந்து வருவதுடன், அதிகளவில் இலங்கையின் சார்பில் பிரேரணை ஒன்றினை முன்வைக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் புதிய பிரேரணை அடிப்படையற்ற ஒன்றாக முன்வைக்கப்படவுள்ளது.

எனவே இது குறித்து வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைப்பார் எனவும் அமைச்சர் வீரசேகர கூறினார்.

இந்நிலையில் ஜெனிவா பிரேரணையில் இலங்கையின் பக்கம் ஆதரவை தக்கவைத்துக்கொள்வது குறித்து வெளிவிவகார அமைச்சு மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். தற்போது பல நாடுகளுடன் பேசியுள்ளதாகவும், 23 ஆம் திகதிக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளின் பேச்சுவார்த்தை நகர்வுகள் முடிவுக்கு வரும் எனவும் அவர் கூறினார்.