யாழ்ப்பாணம் – கொழும்பு குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதியில் மேலும் சில பெட்டிகள் இணைப்பு!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் ஈடுபடும் தொடருந்தில் புதிய வகுப்புகள் இணைக்கப்பட்ட சேவை கொழும்பிலிருந்து புறப்பட்டு இன்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

இந்த சேவை தினமும் இடம்பெறும் என யாழ்ப்பாணம் ரயில் நிலைய பிரதான அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார்.

கல்கிசையிலிருந்து தினமும் அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் தொடருந்து சேவை புறக்கோட்டையில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.

காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் தொடருந்து யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு கொழும்பு புறப்படும்.

இந்த சேவையில் இதுவரை குளிரூட்டப்பட்ட வகுப்புகளே காணப்பட்டன. எனினும் இன்று முதல் இந்த சேவையில் இரண்டாம் வகுப்பில் 2 பெட்டிகளும், மூன்றாம் வகுப்பில் ஒரு பெட்டியுமாக 3 மேலதிக பெட்டிகள் இணைக்கப்பட்டு 7 பெட்டிகளில் பயணிகள் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்புக்கு ஆயிரத்து 700 ரூபாயும் இரண்டாம் வகுப்புக்கு 1,000 ரூபாயும் மூன்றாம் வகுப்புக்கு 700 ரூபாயும் கட்டணமாக அறவிப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழு கோரிக்கை?

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு அளுத்கம பேருவளையில் இடம்பெற்ற வன்முறைகளிற்கு காரணமாகயிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத மற்றும் இன ரீதியிலான குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு காரணமான நடவடிக்கைகளில் ஈடுபட உதவிய நபர்கள் மற்றும் அமைப்புகளை அடையாளம் காண்பதற்கு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணையின் அடிப்படையிலேயே ஞானசார தேரருக்கு எதிராக ஆணைக்குழு குற்றவியல் நடவடிக்கைகளிற்கு பரிந்துரைத்துள்ளது.

எனினும் இது குறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையின் துரும்புச் சீட்டு ‘ஆப்பாக’ மாறுகிறதா? சி.அ.யோதிலிங்கம்

“தமிழ் மக்களின் இருப்பே கிழக்கு முனையத்தில் தான் தங்கியுள்ள நிலையில் அதுபற்றி கவலைகொள்ளாது தமிழ்த் தரப்புக்கள் இருக்கின்றமை துரதிஷ்டவசமானது”

கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய நெருக்கடி இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. கோட்டாபய அரசிற்கும் பெருந்தேசியவாதத்திற்கும் இடையிலான போர் தற்போது பெருந்தேசியவாதத்திற்கும் இந்திய தேசிய அக்கறைக்குமிடையிலான போராக பரிணாமமடைந்துள்ளது.

இரண்டு தரப்புமே சிறிய விட்டுக்கொடுப்புக்கும் தயாராகவில்லை. இந்தியா ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முறையாக அமுல்படுத்தும்படி கோரியுள்ளது.

முன்னர் ஜனாதிபதி கோட்டாபய இந்தியாவிற்கு கிழக்கு முனையம் வழங்கப்படும் எனக் கூறியிருந்தபோதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அது துறைமுக அதிகாரசபையின் முழுப்பொறுப்பில் இருக்கும் எந்த வெளிநாட்டிற்கும் வழங்கப்படமாட்டாது எனக் கூறியிருக்கின்றார்.

நல்லாட்சி அரசாங்கம் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபோதும் பங்கு விகிதாசாரம் பற்றி எதுவும் கூறவில்லை. பங்கு விகிதாசாரம் துறைமுக அதிகார சபைக்கு 51 சதவீதம் என்றும், இந்தியாவுக்கு 49 சதவீதம் என்றும் தெளிவாக வரையறுத்தது கோட்டாபய அரசாங்கம்தான்.

உண்மையில் கோட்டாபய அரசாங்கம் கிழக்கு முனையத்தை துரும்புச் சீட்டாக முன்வைத்து ஜெனிவாவில் பாதுகாப்பு அரணைத்தேட முற்பட்டது. அதற்கு அரசே வளர்த்தெடுத்த பெருந்தேசிய வாதம் தற்போது ஆப்பு வைக்கிறது. “வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான்” என்ற நிலைமையே கோட்டாபய அரசுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

தற்போது கிழக்கு முனையத்திற்கு மாற்றாக மேற்கு முனையத்தில் 85 சதவீதத்தினை இந்தியாவுக்கு தரலாம் எனக் கூறியபோதும் பெருந்தேசிய வாதம் அதையும் ஏற்கவில்லை. இந்தியாவும் அதற்கு பச்சை கொடிகாட்டவில்லை. தம்முடன் இலங்கை அரசு எதனையுமே பேசவில்லை என்றுதான் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த விவகாரத்தில் கோட்டாபய அரசு, இந்தியா, அமெரிக்கா தலமையிலான மேற்குலகம், சீனா, பெருந்தேசிய வாதம் என்பன தத்தம் நலன்களிலிருந்தே நகர முற்படுகின்றன. அனைத்து தரப்பினரின் நலன்களுக்கான பொதுப்புள்ளி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஒவ்வொரு தரப்பும் தத்தமது நலன்களில் விடாப்பிடியாக இருப்பதால் பொதுப்புள்ளியை கண்டுபிடிப்பதும் இலகுவாக இருக்கப்போவதில்லை என்பது திண்ணம். ஏனெனில் இந்த நலன்கள் என்பவை அந்தந்த தரப்புக்களின் இருதரப்புகளுடன் தொடர்பு பட்டதாக இருக்கின்றன. இதனால் அனைத்து தரப்பிற்குமே “கரணம் தப்பினால் மரணம்” என்ற நிலைதான் உள்ளது.

கோட்டாபய அரசாங்கம் கிழக்கு முனைய விடயத்தில் தனது வழமையான வெளிவிவகாரக் கொள்கையையே பின்பற்றப் பார்க்கிறது. அதாவது, நிலைமைகளை அப்போதைக்கு சரிசெய்யும் நிலையற்ற கொள்கையையே பின்பற்றப் பார்க்கின்றது.

ராஜபக்ஷக்களுக்கு இந்தியாவுடன் காணப்படும் உறவுகளைப் பொறுத்தவரையில் இந்தியாவின் அழுத்தம் உச்சமாக இருக்கும்போது, பணிந்துபோவது; பின்னர் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடுவது; சந்தர்ப்பம் கிடைத்தால் எதையாவது சாட்டாக வைத்து அதனை இரத்துச் செய்வது; இதுவே பொதுப்படையான மரபாக உள்ளது.

இதற்கான அனுபவத்தை தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களிலிருந்தே இந்திய அரசு கற்றுக் கொண்டிருக்கலாம்.

தமிழ் மக்களின் விவகாரத்தைப் பொறுத்தவரை அழுத்தங்கள் உச்சமாக வரும்போது தமிழர் நலன்களை எழுத்தில் வழங்குவது, பின்னர் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடுவது, எழுத்தில் வழங்கியவற்றை மீறுவது, சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரத்துச் செய்வது அல்லது கிழித்தெறிவது என்கின்ற அணுகுமுறையையே காலம் காலமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் பின்பற்றி வருகின்றனர்.

சோல்பரி யாப்பின் 29ஆவது பிரிவு தொடக்கம் தமிழ் மொழி அரசகரும மொழியாக பயன்படுத்தல் வடக்கு – கிழக்கு பிரிப்பு வரை அவ்விதமாகவே இலங்கையின் ஆட்சியாளர்கள் நடந்துகொண்டிருக்கின்றாகள்.

சோல்பரி யாப்பின் 29ஆவது பிரிவு ஒரு இனத்திற்கோ, மதத்திற்கோ, சமூகத்திற்கோ வழங்காத சலுகைகளை இன்னோர் இனத்திற்கோ சமூகத்திற்கோ வழங்கக்கூடாது எனக் கூறியிருந்தது.

இதன் சாராம்சம் ஒரு இனத்தையோ, மதத்தையோ, சமூகத்தையோ பாதிக்கக்கூடிய சட்ட நிர்வாக, நீதி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்பது தான். ஆனால், சோல்பரி யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்த வருடமே (1948இல்) அது மீறப்பட்டது.

மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறிக்கும் பிரஜாவுரிமைச்சட்டம் அவ்வாண்டு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்திய, பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச்சட்டம் (1949) தேர்தல்கள் திருத்தச் சட்டம் (1949), தனிச்சிங்களச் சட்டம் (1956), சிறிமா-சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் (1967) என்பன நிறைவேற்றப்பட்டு சோல்பரி யாப்பின் 29ஆவது பிரிவே கேலிக்குள்ளாக்கப்பட்டது.

இறுதியில் 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு 29ஆவது பிரிவையே இல்லாமல் செய்தது. அதேபோன்றுதான் தமிழ் மொழி அரச கரும மொழி என்ற விடயத்திலும் சரி வடக்கு – கிழக்கு இணைப்பும் பின்னர் அதனை நீதிமன்றத்தின் ஊடாக பிரிப்பது வரையில் நடைபெற்ற விடயங்கள் எம் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.

பெருந்தேசியவாதமானது மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்பவற்றிலேயே கட்டியெழுப்பப்பட்டது. தற்போது தமிழின எதிர்ப்பு சிங்களவரல்லாத ஏனைய இனங்களுக்கு எதிரான எதிர்ப்பு என்று மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.

சிங்கள சமூக உருவாக்கம் பெருந்தேசியவாத கருத்துநிலைகளின் மேல் கட்டியெழுப்பப்பட்டதால் இலங்கை அரச உருவாக்கத்திலும் பெருந்தேசியவாதமே அடிப்படையாக உள்ளது.

அரசின் நோக்கங்களை நிறைவேற்றும் கருவியாகவே அரசாங்கம் இருப்பதனால் எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் பெருந்தேசியவாதமே அதன் அடித்தள ஆதாரமாக இருக்கும்.

இந்த விடயத்தில் பிரதான அரசியல் தரப்புக்களாக காண்பிக்கும் நீல அணிக்கும், பச்சை அணிக்கும் அளவு வேறுபாடுகள் மட்டும் இருக்கலாம். பச்சை அணி லிபரல் தளத்தினதும், பெருந்தேசியவாதத் தளத்தினதும் கூட்டாக இருப்பதால் ‘பச்சைப்’ பெருந்தேசியவாதத்தினை அதனால் பின்பற்ற முடியாது. அது வடிகட்டிய பெருந்தேசியவாதத்தையே பின்பற்றும். சுருக்கமாககூறினால் அதனை லிபரல் முலாம் பூசப்பட்ட பெருந்தேசியவாதம் எனலாம்.

ஆனால், நீல அணியின் நிலைமை அவ்வாறானது அல்ல. அதுபெருந்தேசியவாதத்தளத்தை மட்டுமே கொண்டிருப்பதால் அது ‘பச்சையாகவே’ பெருந்தேசிய வாதத்தைக் கக்கும். இரட்டை வேடம் என்பது அங்கு இல்லை. இந்த நீல அணி தற்போது ‘கடுஞ் சிவப்பு’ அணியாக உருவெடுத்திருகின்றமை மட்டுமே மாற்றம். மற்றையபடி நிலைப்பாடும் செயற்பாடும் ஒன்றாகத்தான் உள்ளது.

இவ்வாறான நிலையில், அரசாங்க நிறுவனங்கள் அரசின் அங்கங்களாகும். இதனால் அவை அனைத்தும் பெருந்தேசிய வாதத்தின் நலன்களையே பிரதிபலிக்கும். நீதித்துறைகூட அதற்கு விதிவிலக்காக இருக்காது. பெருந்தேசியவாத நலன்களுக்காக நீதிமன்றத் தீர்ப்புக்கள் மீறப்பட்டால் நீதித்துறை மௌனமாகவே இருக்கும்.

தொல்பொருள் திணைக்களம், பாதுகாப்புத் திணைக்களம், வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் அனைத்துமே பெருந்தேசிவாத நிறுவனங்கள் தான். அவற்றிடம் இருந்து ஒதுக்கப்பட்ட தரப்புக்கள் ஒருபோதும் நீதியை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, அரச அதிகாரக் கட்டமைப்புக்கு வெளியே விவகாரங்களை கொண்டு செல்வதன் மூலம்தான் ஒடுக்கப்படும் தரப்புக்கள் நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியாவுடனான உறவுகளைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் தொடர்பாக பின்பற்றிய மேற்கூறிய அணுகு முறைகளையே இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் நலன்களுக்காக முழு இலங்கைத்தீவுமே தேவை. அதனால் இலங்கைக்கு ஓர் எல்லை வரை விட்டுக் கொடுப்புக்களை செய்வதற்கு அது தயாராகவே இருக்கும். இந்தியாவின் இந்த விட்டுக்கொடுக்கும் பலவீனத்தை இலங்கை நன்றாகவே அறிந்து வைத்துள்ளது. இந்தப் பலவீனத்தை நன்கு தெரிந்த படியால் இந்தியாவின் பொறுமை எல்லைவரை இலங்கை செல்கிறது. இந்தியாவிற்கு எதிராகச் செயற்படுகிறது.

எல்லை தாண்டும் நிலை ஏற்பட்டவுடன் இலங்கை சாஸ்டாங்கமாக இந்தியாவின் காலில் விழுந்துவிடும். அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா தனது நலன்களுக்கான உத்தரவாதங்களை எழுத்தில் வழங்கும். எனினும், பின்னாளில் நிலைமகள் சுமூகமடைந்தவுடன் இலங்கை அதனை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடும். இலங்கை, இந்திய ஒப்பந்தம் தொடக்கம் சம்பூர் அனல் மின் நிலையம், பலாலி விமான நிலையம் வரை இந்த நிலைமையே நீடிக்கின்றது.

இந்தியா, இலங்கையை கடுமையாக எச்சரிக்கும் வகையில் செயற்பட்டு 1987ஆம் ஆண்டு 25 தொன் உணவுப் பொதியினை யாழ்ப்பாணத்தில் போட்டது. உடனே அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தியின் காலில் விழுந்தார். அதன் விளைவாகத்தான் இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது.

அந்த சர்வதேச ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் இலங்கை பெரிதாக அக்கறை காட்டவில்லை. இந்தியாவின் கண்ணுக்கு முன்னாலேயே தேசிய கொள்கை வகுப்பு என்ற பெயரிலும், பாராளுமன்ற சட்டவாக்க உரிமை என்ற பெயரிலும், மாகாணசபையின் அதிகாரங்களை பறித்த போதும், வடக்கு-கிழக்கு இணைப்பை இரத்துச் செய்தபோதும் இந்தியா வேடிக்கையே பார்த்தது. முறையான அழுத்தங்கள் எவற்றையும் கொடுக்கவில்லை.

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு சமிக்ஞை கொடுத்த இலங்கை அதனை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டது. இறுதியில் தமிழ்த்தரப்பு எதிர்க்கின்றது எனக்கூறி அதனை இரத்துச் செய்தது.

பலாலி விமான நிலையத்தை இந்தியா புனரமைப்புச் செய்ததே தனது தேசிய பாதுகாப்பிற்காகத்தான். தற்போது கொரோனாவை பயன்படுத்தி பாலாலி விமான நிலையத் தளபாடங்கள் மத்தள விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோன்று சீனாவின் உள்நுழைவு இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு முரணானது. இவை ஒப்பந்த பின் இணைப்பில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளன. ஆனாலும் அந்த விடயத்தில்கூட ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட இந்தியா கேள்விகளைக் தொடுப்பதற்கு தயாரில்லாமல் இருக்கின்றது.

பெருந்தேசியவாதம் இந்திய எதிர்ப்பில் கட்டப்பட்டுள்ளதே தவிர, சீன எதிர்ப்பில் கட்டப்படவில்லை. மாறாக அது சீனச் சார்புநிலையில் கட்டப்பட்டது எனக் கூறலாம்.

இந்தியா-சீனப் போரின்போதுகூட அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்க இந்திய சார்புநிலை எடுக்கவில்லை. நடுநிலையே வகித்தார். இரண்டு நாடுகளுக்கிடையே இணக்கத்தைக் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநாட்டையும் நடத்தினர்.

ஆனால், இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்திய சார்பு நிலையை எடுத்தது. இந்தியாவைப் பாதுகாக்க போராளிகளை அனுப்பப் போவதாகவும் கூறியிருந்தது. கிழக்கு முனையம் தொடர்பாக பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் பெருந்தேசியவாதம் சீனாவின் துறைமுக நகர் தொடர்பாக எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை.

கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் இந்தியாவிற்கும் அதிகளவான கரிசனை உள்ளது. அதேபோன்று இலங்கைக்கும் அந்த முனையத்தில் அதிகளவு கரிசனையும் தேவையும் உள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் பறிபோன நிலையிலும், கொழும்பு துறைமுக நகரும், தெற்கு முனையமும் சீனாவின் வசமாகியுள்ளநிலையிலும், கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்திலாவது தனது இருப்பைப் பேண வேண்டிய கட்டாய நிலை இந்தியாவிற்கு உண்டு.

ஏனென்றால் கொழும்புத்துறைமுகத்தில் இடம்பிடிப்பது என்பது இந்தியாவின் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயமாக உள்ளது. ஆகவே, இதில் எந்தவித விட்டுக் கொடுப்பையும் செய்ய இந்தியாவால் முடியாது. ஆரம்பத்தில் இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்த ஜப்பானும் இந்த விடயத்தில் அக்கறை கொண்டிருந்தது.

ஆனாலும், இலகுரயில் திட்டத்தினை முன்னெடுக்கும் விடயத்தில் ஆட்சியாளர்கள் குறித்து ஜப்பான் பெற்றுள்ள அனுபவம் தற்போது வெறுமனே ‘கவலை’ என்ற வார்த்தைக்குள் அதனைக் கட்டிப் போட்டுவிட்டது.

தற்போதைய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் ஜெனிவாவில் தம்மை பிணையெடுக்க வேண்டிய கட்டாய நிலைமை உள்ளது. அதற்கான மூக்கணாம் கயிறு இந்தியாவிடம் தான் உள்ளது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டாலும் இலங்கையைக் காப்பாற்ற முடியாது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சீனாவும், ரஷ்யாவும் ஐ.நா.கட்டமைப்பில் தமக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இலங்கையைக் காப்பாற்றினாலும் சர்வதேச நாடுகளில் உள்ள, உள்ளக நீதிமன்றங்களில் விசாரணை, பயணத்தடை, சொத்து முடக்கம் போன்றவற்றை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் சிபார்சு செய்துள்ளார்.

இந்த நெருக்கடிகளிலிருந்து இலங்கையால் தப்ப முடியாது. ஆகவே, இந்த விடயத்தில் இந்தியாவின் காலில் விழுவதைத் தவிர வேறு தெரிவு இலங்கைக்கு இல்லை.

இதற்காக இந்திய – இலங்கை நலன்கள் சந்திக்கும் பொதுப்புள்ளியாக கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தற்போது காணப்படுகின்றது. அதற்காகவே இலங்கை மேற்கு முனையத்தினை சிபார்சு செய்துள்ளது. இந்த மேற்குமுனைய பொதுப்புள்ளியை இந்தியா ஏற்குமா? என்று தற்போதைக்கு கூற முடியாது. இதனை ஏற்பதில் இந்தியாவிற்கு இரண்டு பிரச்சினைகள் உண்டு.

முதலாவது இந்தியாவுக்கு இதுவொரு சுய மரியாதைப் பிரச்சினை. ஏனென்றால் பெருந்தேசிய வாதத்திற்கும், சீனாவின் வியூகங்களுக்கும் ஒரு பிராந்திய வல்லரசு பணிந்துப்போனது என்ற தோற்றத்தைக் கொடுக்கும் ஆபத்துள்ளது. இவ்விதமான நிலைமைகள் இந்திய விம்பத்திற்கு எதிரானது.

இரண்டாவது, மேற்கு முனையம் கிழக்கு முனையத்தைப் போல முக்கியமானதல்ல. இந்தியாவின் நூற்றுக்கணக்கான கொள்கலன்கள்; கிழக்குமுனையத்திற்கே வருகின்றன. ஆகவே அவ்விதமான ஒரு கட்டமைப்பை விட்டுக்கொடுப்பதை இந்தியா விரும்பாது.

அதேநேரம் இந்த முனையத்தினை பெற்றுக்கொள்வதன் மூலமே துறைமுக நகரத்தினையும், தெற்கு முனையத்தினையும் மிகவும் துல்லியமாக அவதானிக்க முடியும். ஏனென்றால் இந்த இரண்டு கட்டமைப்புக்களும் சீனா வசம் உள்ளன. ஆகவே, இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இருந்தால் கிழக்கு முனையமே சாலப் பொருத்தமானது.

ஆகவே, கற்பனைத் திட்டமாக உள்ள மேற்கு முனையத்தில் 85 பங்குகளுக்காக கிழக்கு முனையத்தினை இந்தியா இலகுவாக விட்டுக்கொடுத்துவிடும் என்று கருத முடியாது. நிச்சயமாக தொடர்ந்து அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டே இருக்கும்.

அவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் இந்தியாவை ஏதோ ஒரு வகையில் இலங்கை திருப்திப்படுத்திவிட்டால் ஜெனிவாவில் தமிழ் மக்களின் நிலை அந்தோகதிதான். அனைத்து முயற்சிகளையும் இந்தியா கவிழ்த்து இலங்கையை பிணையெடுத்துவிடும். ஆகவே, இந்தியாவை தமிழர்களின் பக்கம் வைத்திருப்பதற்கு தற்போதைக்கு தமிழத் தரப்பிற்கு உதவப்போவது பெருந்தேசியவாதமும், சீனாவும் தான்.

மேலும், இந்தியா கிழக்கு முனைய விடயத்தில் இரண்டு வடிவங்களில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்க முனைகின்றது. ஒன்று ஜெனிவா மூலமான அழுத்தம். அது ஏற்கனவே ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கை மூலம் இலங்கைக்கு வழங்கியாயிற்று.

இரண்டாவது தமிழ்த்தரப்பினூடாக அழுத்தம். இதற்காக தமிழ்த் தரப்பிலிருந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்த்தரப்பின் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான போராட்டத்திற்கு இந்திய ஆசீர்வாதம் வலுவாக உண்டு.

அதுமட்டுமன்றி முஸ்லிம்களும் தமிழர்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்குபற்றியமையும் மலையக மக்களையும் அதில் உள்ளீர்த்து அவர்கள் பிரச்சினைகளைப்பற்றி கோசங்கள் எழுப்பப் படுவதும் இந்தியாவைப் பொறுத்தவரையில் இரட்டை நன்மையே.

மேலும் சீனா கிழக்கு முனைய விவகாரத்தில் தெளிவாகவே நகர்கின்கிறது. துறைமுகம் எல்லைக்குள் இந்தியா கால் பதிக்கக்கூடாது என்பதில் அது மிகக் கவனமாக உள்ளது. சீனாவின் ஒரேபட்டி ஒரேபாதை திட்டத்திற்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போலவே கொழும்புத்துறைமுகமும் மிகவும் முக்கியமானது.

அதனால் துறைமுக நகர அபிவிருத்தி திட்டம், தெற்கு முனையம் ஆகியவற்றை ஏற்கனவே பெற்றுள்ள நிலையில் தற்போது திரைமறைவில் செயற்பட்டு கிழக்கு முனையத்தினை இந்தியாவிடம் செல்லாது பார்த்துக்கொண்டு தனது காலை வலுவாக ஊன்றியுள்ளது.

அதேநேரம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குப் பின்னாலேயே நிற்கின்றது. தெற்காசிய விவகாரத்தில் தனித்துச் செயற்பட மேற்குலகம் விரும்பவில்லை.

இந்தியாவிற்கு பின்னாலேயே ஓடுவதற்கே விரும்புகின்றது. இந்தியா இல்லாவிட்டால் மேற்குலக நலன்களை தெற்காசியாவில் பேணுவதே கடினமாக இருக்கும் நிலைமைதான் உள்ளது.

எவ்வாறாயினும், கிழக்கு முனைய விவகாரத்தில் துரதிஸ்டம் பிடித்த தரப்பாக இருப்பது தமிழ்த் தரப்புத்தான். தமிழ்த்தரப்பின் இருப்பே கிழக்கு முனையத்தில்தான் தங்கியிருக்கிறது என்கின்றபோதும் தமிழ் மக்கள் மத்தியில் இந்த விவகாரம் பெரியளவிற்கு பேசுபொருளாக வரவில்லை.

இந்தவிடயத்தில் மூலோபாய தந்திரோபாய நகர்வுகள் தமிழ்த்தரப்பிற்கும் தேவை. தமிழ்க் கட்சிகள் தங்களுக்குள் குடுமிச் சண்டைபிடிப்பதை நிறுத்தி இந்த விவகாரத்திலும் கவனத்தைக் குவிப்பது அவசியம். இந்த விவகாரத்தில் தற்போது எழும் மிகப்பெரிய கேள்வி இலங்கையின் துரும்புச் சீட்டு வெற்றிபெறுமா? தோல்வியடையுமா? என்பதாகும்.

விமல் வீரவன்சவின் வீட்டில் 12 கட்சியினர் கலந்துரையாடல்

அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் 12 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற விமல் வீரவன்சவின் வீட்டிற்கு செல்லும் போது, நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கே இன்று கட்சித் தலைவர்கள் கூடியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கைக்குள் நீதி கிடைக்கா விட்டால் சர்வதேச நீதிமன்றத்திற்கும் செல்ல தயார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் நகலை தாம் கோரியுள்ளதாகவும், ஆனால் அது இன்னும் கிடைக்கவில்லை என்றும், உயிர்த்த ஞாயறு தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டம் இலங்கையில் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச தீர்ப்பாயத்திற்கு செல்ல அவர் தயாராக இருப்பதாகவும் பேராயர் மல்கம் கர்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (11) பேராயர் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றினார்.

அவர் மேலும் கூறினார்.

“நாம் சில விஷயங்களில் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். எனவே இதற்காக நாங்கள் காத்திருக்க முடியாது. விரைவில் ஒரு நகலை எங்களுக்கு அனுப்புங்கள். பின்னர் அந்த பிரச்சினைக்கு நாம் தீர்வுகளைக் காணலாம். நான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தேன். தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் மட்டுமல்லாமல், இந்த தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியவும் அந்த நேரத்தில் நானும் ஆணைக்குழுவிடம் கோரிக்கை வைத்தேன். எனவே அந்த கோரிக்கைக்கு ஆணைக்குழு சாதகமாக பதிலளிக்கும் என்று நம்புகிறேன். ”

கேள்வி: ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இலங்கையில் சட்டப்பூர்வமாக நீதி செய்யப்படாவிட்டால், நீங்கள் ஒரு சர்வதேச நீதிமன்றத்திற்குச் சென்று நீதி தேட விரும்புகிறீர்களா?

“தயார். எங்கள் தலைவர்கள் அதை நடக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். எனவே இந்த வழக்கு மற்றும் அறிக்கைகளிலிருந்து அவர்கள் நல்ல பதிலை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். அறிக்கைக்குப் பிறகு அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை நாம் காண வேண்டும். இல்லையென்றால், எங்களிடம் சர்வதேச அமைப்புகள் உள்ளன, வெளிநாடுகளில் அந்த அமைப்புகளின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

Posted in Uncategorized

‘பிரதமரின் அறிவிப்பில் 20க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள் துள்ளுகின்றனர்’

ஜனாஸா நல்லடத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதை அடுத்து, 20க்கு ஆதரவளித்த எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள், இப்போது துள்ளிக்குதிக்கத் தொடங்கியுள்ளனர் என, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், பிரதமரின் ஒரேயொரு சொல்லைப் பிடித்துக்கொண்டு, அதற்குக் கை, கால், முகம் வைத்து, உருவம் அமைத்து, அறிக்கை விட்டு, தம்பட்டம் அடிக்கின்றார்கள் என்றும் 20க்குக் கை உயர்த்திய இந்தச் சமூகத் துரோகிகள், இவ்வளவு காலமும் “மழை காலத்தில் புற்றுக்குள் ஒளித்த பாம்பு” போல் இருந்துவிட்டு, இன்று தொடக்கம் படமெடுத்து ஆடத் தொடங்குகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தள்ளார்.

தேர்தல் மேடைகளில் ராஜபக்ஷர்களை மிக மோசமாக விமர்சித்து மோசமாக விமர்சித்து, மக்கள் மத்தியில் வாக்குகளைச் சூறையாடி வெற்றி பெற்றார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், தமது சொந்த நலன்களுக்காகவும் பட்ட கடன்களை அடைப்பதற்காகவுமே இவர்கள் பெரமுன அரசாங்கத்துக்கு ஆதரவளித்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, சமூகத்துக்கு இவர்கள் எதையாவது செய்ய வேண்டுமென்று உளமார விரும்பினால், அறிக்கைகள் விடுவதை அவசரமாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்து பிரதமர் மஹாசங்கத்தினருடன் கலந்துரையாடல்

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்திப்பொன்று மஹாசங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே நேற்று (2021.01.10 ) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை மற்றும் அது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மதிப்புமிக்க மஹாசங்கத்தினரின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.

கொவிட்-19 தொற்று நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய உலக நாடுகளுக்கிடையே இலங்கை முன்னணியில் காணப்படுகின்ற நிலையில், எமது நாட்டை இழிவுபடுத்தும் நோக்கில் மிகவும் தவறான கருத்துக்களை உள்ளடக்கி மிக மோசடியான முறையில் இந்த மனித உரிமைகள் திணைக்கள அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாட்டின் வெற்றிக்கும், இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான 16 விடயங்களை உள்ளடக்கி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், இதுபோன்ற தீர்மானமிக்கதொரு தருணத்தில் மரியாதைக்குரிய மஹாசங்கத்தினரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்தை பெறுவதற்கு தீர்மானித்தமை குறித்து நான் முதலில் பிரதமர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற சூழ்நிலையில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிரான தீர்மானமொன்றை சமர்ப்பிப்பது பொருத்தமற்றது என்றும், அதற்கு பதிலாக எமது தரப்பு நீதியை எடுத்துரைக்கும் பிரதிவாத அறிக்கையொன்றை மாத்திரம் முன்வைக்க வேண்டும் என வணக்கத்திற்குரிய தேரர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நோக்கம் நாட்டை பிரிப்பதே என சுட்டிக்காட்டிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர், மனிதாபிமான முறையின் கீழ் பயங்கரவாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது போர்க்குற்றம் என்று கூறுவது பாரிய குற்றமாகும் எனத் தெரிவித்தார்.

இத்தீர்மானத்திற்கு அமைவான நல்லிணக்கம் மிகவும் ஆபத்தானது என்றும், அத்தகைய உடன்பாடு இல்லாமல் பாராளுமன்றத்தில் தேசபற்று சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நேரம் ஒதுக்குவது பொருத்தமானது என்றும் அவர்கள் கூறினர்.

இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள பௌத்த நாடுகளுக்கு நமது தேரர்களின் ஊடாக சில தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், அதனூடாக நேர்மறையான பதிலை நாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர், மனிதாபிமான செயற்பாட்டின் மூலம் பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் பின்பற்றிய வெளியுறவுக் கொள்கைகளை கவனத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மங்கள சமரவீர அவர்கள் ஒப்புக் கொண்ட 30 (1) தீர்மானம் நாட்டில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தத் தீர்மானத்தின் விளைவாக பொருளாதாரத் தடைகள், பயணத் தடை மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமை போன்ற பல விடயங்கள் தொடர்பில் சிக்கல் நிலை உருவாக்கக்கூடும் என்று தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள், அத்தீர்மானத்திற்கு எதிராக எமக்கு சார்பாக விளங்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும் எனவும் தெரிவித்தார்.

வழக்கு விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவது சாதாரண நடைமுறை என்ற போதிலும் இத்தீர்மானத்திற்கமைய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஒரு தீர்மானங்களை மேற்கொள்வது நியாயமில்லை எனவும், ஆனால் இந்த தீர்மானத்துடன் நீதி, சட்டம் மற்றும் நேர்மை ஆகின நெருங்கக்கூடவில்லை என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

குருந்தூர் மலை அகழ்வாராய்ச்சியில் திடீர் திருப்பம்: தாரா லிங்கம் கண்டுபிடிப்பு!

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலையில் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் இன்று புதன்கிழமை(10) சிங்கள நாளிதழான தினமின செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம்-18 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவால் குருந்தூர் மலையில் குருந்தாவசோக புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாகத் தெரிவித்து தொல்லியல் ஆய்வுப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, இவ்வாறு மீட்கப்பட்ட தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர்கால எட்டுப்படை தாரா லிங்கம் எனப் பலராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒத்த பல தாராலிங்கங்கள் (எட்டுப் பட்டை லிங்கம்) தமிழகத்தில் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சீன வங்கியிடமிருந்து 180 மில்லியன் கடன்

சீனாவின் ஆசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீட்டு வங்கியிடமிருந்து 180 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஊடாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறையினருக்கு ஒத்துழைக்கும் வகையிலான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க இக்கடனுதவி பயன்படவுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியின் நோக்கம் மளுங்கடிக்கப்பட்டுள்ளது – கஜேந்திரகுமார்

இலட்சக்கணக்கான தமிழ் மக்களை ஒன்றிணைத்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்ட எழுச்சி பேரணியின் உண்மை நோக்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மறைத்து 10 அம்ச கோரிக்கைகளை மாத்திரம் பாராளுமன்றிரல் ஏதோ அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கையாக முன்வைத்துள்ளார்.

இச்செயற்பாடு பேரணியில் ஈடுபட்ட மக்களுக்கு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி வெறும் 10 அம்ச கோரிக்கைகளை மாத்திரம் உள்ளடக்கியுள்ளதா என்பது குறித்து வடக்கிழக்கு தமிழ் சமூக சம்மேளனம் விசாரணை நடத்தி தகுந்த பதிலை கூற வேண்டும்.

நேரத்திற்கேற்றாற் போல் செயற்படும் கூட்டமைப்பினருடன் இணைந்து தமிழர் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் பிரச்சினைக்கான தீர்வு, தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் எழுச்சி பேரணி முன்னெடுக்கப்பட்டது

பேரணியை தடுக்க அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டு போராட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. போராட்டத்தில் தமிழ்- முஸ்லிம் என இலட்சக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டார்கள்.

எழுச்சி பேரணியின் அடிப்படை கொள்கையினை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மூடி மறைத்து வெறும் 10 அம்ச கோரிக்கைகளை ஏதோ அரசாங்கத்திடம் முன்வைக்கும் வகையில் முன்வைத்துள்ளார்.

பேரணியின் முக்கியமான கொள்கை குறித்து அவர் குறிப்பிடவில்லை. இலங்கை அரசாங்கத்திடம் தீர்வை பெறுவதற்கான குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்படவில்லை. சர்வதேச நாடுகளின் பார்வை ஈர்க்கப்பட வேண்டும் என்பதேபிரதான நோக்கமாக காணப்பட்டது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் மாத்திரமே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்ற விடயம் முன்வைக்கப்படவில்லை.

அரசாங்கத்தை பகைத்துக் கொள்ள கூடாது என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பேரணியில் கலந்துக் கொண்டவர்களுக்கு துரோமிழைத்துள்ளார்.

பொத்துவில்- பொலிகண்டி எழுச்சி பேரணி வெறும் 10 அம்ச கோரிக்கைகளை மாத்திரம் உள்ளடக்கியதா , பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இப்பேரணி குறித்து பாராளுமன்றில் ஆற்றிய உரை ஆகியவை தொடர்பில் வடக்கிழக்கு தமிழ் சிவில் சமூக சம்மேளனம் விசாரணை நடத்தி தகுந்த பதிலை வழங்க வேண்டும்.

தேவைக்கேற்ப செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்து தமிழர் விவகாரத்தில் தீர்வை பெறும் போராட்டத்தில் இனி ஒன்றினைய முடியாது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம் பெற்றமனித உரிமை மீறல் குற்றங்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஒருபோதும் தீர்வை பெற்றுக் கொள்ள முடியாது.

சர்வதேச நீதிமன்றின் ஊடாகவே தீர்வை பெற முடியும்.அந்த இலக்கை நோக்கி நகர்வதே எமது முயற்சியாகும்.இனப்பிரச்சினைக்கு தீர்வை காண இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுடன் இணக்கமாக செயற்பட தயார் என்றார்.

Posted in Uncategorized