இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ஐ.நா பேரவையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தை வலுப்படுத்துமாறும் மனித உரிமைகள் தொடர்பான கண்காணிப்பு, அறிக்கையிடுதல் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கான நிபுணர் பொறிமுறையை தயாரிக்குமாறும் சர்வதேச மன்னிப்புச் சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஜனாதிபதி கருத்து!

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முழுமையான ஆதரவை வழங்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள சமந்தா பவர், இன்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை, ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அவசரநிலையால் இலங்கை மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா எவ்வாறு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்பது குறித்தும் சமந்தா பவர் இதன்போது கலந்துரையாடினார்.

அத்துடன், இலங்கையின், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்கா வழங்கும் நீடித்த ஆதரவு குறித்தும் சமந்தா பவர் இதன்போது கலந்துரையாடினார்.

ஜனநாயகத்தை பலப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பிலும் எடுத்துரைத்தார்.

அத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் தேவைப்படின் சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“விவசாயிகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதற்கு அமெரிக்க அரசாங்கத்திற்கு முதலில் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். நாட்டில் உள்ள 14,000 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இதன் நன்மை சென்றடையும்““ என்று குறிப்பிட்டார்.

22ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை பாராளுமன்றம் நிறைவேற்றும் வரை காத்திருக்கிறோம். நிர்வாகத்திற்காக முதலாவது அமைச்சரவைக் கையேடு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கமைவாக அமைச்சரவையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் கண்காணிப்புக் குழுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்காவின் ஆதரவை எதிர்நோக்குகிறோம். பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, ஐந்து இளைஞர் பிரதிநிதிகள் இவற்றுக்கு நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தலைவர் மூலம் கேள்விகளைக் கேட்க உரிமை உண்டு. உலகில் முதன் முறையாக இவ்வாறானதொரு நடைமுறை முன்னெடுக்கப்பட இருக்கிறது. இளைஞர் பாராளுமன்றத்தை சட்டபூர்வமாக்க இருக்கிறோம். பொருளாதாரக் குழுக்களை அதிகரிக்க இருக்கிறோம்.

அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் தொடர்பான குழு, வங்கி மற்றும் நிதி பற்றிய குழு என பல குழுக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிரான சட்டங்களுக்கு, நாங்கள் அங்கீகாரம் அளித்துள்ளோம், மேலும் பெண்கள் சமத்துவம் தொடர்பான சட்மூலமொன்றை தயாரிக்குமாறு பெண்கள் அமைப்புகளிடம் கேட்டுள்ளேன். ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் தனிநபர் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை எதிர்க்காது. இதற்கு தனிப்பட்ட உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். விவாகரத்து சட்டங்களை இலகுபடுத்தி பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய வாய்ப்பளிக்கப்படும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவோர் தொடர்பில் தமிழ் தரப்புடன் பேசினோம். தடுப்புக் காவலில் இருந்த காலம், அவர்கள் அனைவரும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது என்பவற்றை கருத்திற்கு கொண்டு, அவர்களை விடுவிக்க முடியுமா என்பதை அறிய பொறிமுறையொன்றைத் தயாரிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தலதா மாளிகை மீதான குண்டுத்தாக்குதல் மற்றும் சில எம்.பிகளின் கொலைகள் என்பவற்றுடன் தொடர்புபட்டவர்கள் தவிர ஏனையவர்கள் தொடர்பில் இதன் கீழ் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடுப்புக்காவலில் உள்ள முஸ்லிம்களில் விடுதலை செய்யக் கூடியவர்களை அடையாளம் காணுமாறு புலனாய்வு பிரிவுகளுக்கு அறிவித்துள்ளேன். குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து, இந்த முழு விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு இங்கு வருமாறு ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னால் மறைகரம் இருந்ததா? அப்படியானால், அந்த மறை கரம் யாருடையது? சிலர் அமெரிக்கா என்கிறார்கள். சிலர் இந்தியா என்கிறார்கள். இன்னும் சிலர் சீனா என்கிறார்கள். மற்றவர்கள் பாகிஸ்தான் என்கிறார்கள். அதனால் மறைகரம் எதுவென்று யாருக்கும் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு மேலும் விடுவிக்கக் கூடிய காணிகள் குறித்து ஆராயப்படுகிறது. காணாமல் போனோர் விவகாரம் குறித்து தீர்வு காண துரிதப்படுத்தப்படும். புனரமைப்புத் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டு துரிதப்படுத்தப்படும். அத்தோடு வடக்கு அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம், வடக்கு பாரிய பொருளாதார மையமாக மாற்றப்படும். அபிவிருத்திகள் ஊடாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை விட எமக்கு அப்பகுதிகளில் அதிகம் பங்காற்ற முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் கொண்டு வர இருக்கிறோம். தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உடன்பாடு எட்டப்பட வேண்டும். இது தொடர்பில் கட்சிகள் ஆராய்ந்து வருகின்றன. அவர்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படாவிட்டால் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, உகந்த தேர்தல் முறை தொடர்பாக மக்களிடம் விருப்பத்தை கோருவேன். அரசியல் கட்சிகளால் இந்தப் பிரச்சினைகளை என்றைக்கும் தள்ளிப் போட முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கிராம மட்டத்தில் மக்கள் சபை அமைப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டத்திலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி மக்கள் சபைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் எதிர்பார்க்கிறோம் 2048 நமது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதனையொட்டி 2023இல் இருந்து 25 வருட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். அதற்கு அமெரிக்காவின் உதவி அவசியாமானது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் ஜனாதிபதி பைடன் செலுத்து வரும் அக்கறைக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். எமது அழைப்பை ஏற்று வருகை தந்தததற்கு சமந்தாவுக்கும் நன்றிதெரிவித்த ஜனாதிபதி அடுத்த வருடமும் இலங்கை வருமாறு அழைப்பை விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாகி சமந்தா பவர், இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

ஆனால், தற்போது இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் இது மிக மிக சிறிய மற்றும் சாதாரண உதவியாகும் என்று சமபந்தா பவர் மேலும் சுட்டிக்காட்டினார். எனினும், இந்த உதவிகள் சர்வதேச நிதி நிறுவனங்களின் தனியார் துறைக்கும், இலங்கையில் புதிதாக முதலீடுகளை செய்ய எதிர்பார்த்துள்ள முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், புதிய அணுகுமுறைக்குத் தேவையான ஒரு உத்வேகமாக அமெரிக்கா இதன்மூலம் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்தார். எமது கூட்டிணைக்கும் சக்தியை இதன்மூலம் திறமாக பயன்படுத்த முடியும் என்றும் சமந்தா பவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அவசர, இடைநிலைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இலங்கை ஸ்திரநிலைக்குத் திரும்புவதற்கும் ஆதரவளிக்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுதந்திர மற்றும் திறந்த இந்து- பசிபிக் பிராந்தியத்திற்கான இணைந்த, வளமான, நெகிழ்ச்சியான, பாதுகாப்பான உறுதியான ஆதவை அமெரிக்கா வழங்கும் என்றும் பவர் இதன்போது வலியுத்தினார்.

ஜனாதிபதி – சமந்தா பவர் இடையே சந்திப்பு

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின்(USAID) நிர்வாகி சமந்தா பவர் இன்று(11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(11) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சமந்தா பவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்று(10) முற்பகல் நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.

நல்லூர் மந்திரிமனையினை புனரமைக்கும் செயற்றிட்டம் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகிறது!

தமிழர் மரவுரிமைச் சின்னங்களை அதன் தனித்துவம் மாறாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மரவுரிமை மையமானது வரலாற்றுத் தொன்மை மிக்க நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனையினைப் புனரமைக்கும் செயற்றிட்டத்தினை ஆரம்பிக்கின்றது.

இச் செயற்றிட்டம் தொடர்பில் கலாநிதி. நிலான் குரேக்கும் யாழ்ப்பாண மரவுரிமை மையத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. மந்திரிமனையினை புனர்நிர்மானம் செய்து பாதுகாப்பது தொடர்பிலான முழு செயற்றிட்ட வரைபடத்தையும் தயாரித்துக் கொண்டு பின்னர் நவ்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனையினைப் அதன் பழமை மாறாமல் அதன் தனித்துவத்தை பேணிக் கொண்டடு பகுதி பகுதியாக புனர்நிர்மானம் செய்வதே சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் முதலில் மந்திரிமனைக்கு மேல் ஆறு அடி உயரத்தில் தற்காலிக கொட்டகை ஒன்றினை அமைத்து மந்திரி மனையினைப் பாதுகாத்துக் கொண்டு மந்திரிமனையின் உள்ளகப் பணிகளை பகுதி பகுதியாக ஆரம்பிப்பது என்றும் அதில் முதலாவதாக மந்திரிமனையின் கூரை வேலைகள் மற்றும் மந்திரிமனையின் முகப்பு ஆகியவற்றினை அதற்கே உரிய தனித்துவம் மாறாமல் செயற்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

உரிய பராமரிப்பின்றி காணப்படும் தமிழரின் முக்கிய மரவுரிமைச் சின்னமாகிய நல்லூர் இராஜதானி காலத்தை நினைவுபடுத்தும் மந்திரிமனை இம்முறை மழைகாலத்தில் இடிந்து விழக்கூடிய அபாயநிலை தொடர்பிலும் அதனைப் பாதுகாப்பதற்கு புலம் பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும் என்பது தொடர்பிலும் யாழ்ப்பாண மரவுரிமைச் மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் மற்றும் யாழ்ப்பாண மாவுரிமைச் மையத்தின் உறுப்பினரும் மாநகர முதல்வருமான வி.மணிவண்ணன் ஆகியோர் ஊடக சந்திப்பு ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியதை அடுத்து கிடைக்கப்பெற்ற நிதிகளில் இருந்து இச் செயற்றிட்டம் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளது. இச் செயற்றிட்டத்திற்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு யாழ்ப்பாண மரவுரிமை மையம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தமிழர் தயாகப் பகுதிகளில் காணப்படும் மரவுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கு புலம் பெயர் தமிழர்கள் தொடர்ந்தும் முன்வரவேண்டும் என்பதுடன் யாரிடமாவது மந்திரிமனை தொடர்பான பழைய புகைப்படங்கள் ஆவணங்கள் மற்றும் வீடியோ இருப்பின் jaffnaheritagecentre@gmail. com எனும் இணைய முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோருகின்றோம்.

மந்திரிமனையினை பாதுகாப்பது தொடர்பிலான ஆரப்ப மதிப்பீடு மற்றும் வரைபடம் தயாரித்தல் போன்ற ஆரம்ப கட்டப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில்; புனர்நிர்மானப் பணிகள் ஆரம்பிக்கப்படவும் உள்ளது.

வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தைக் குறைக்குமாறு ஐ.நா ஆணையாளர் வலியுறுத்தல்

வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவில் காணப்படும் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமெனவும் இராணுவம் கைப்பற்றியுள்ள தனியார் காணிகளை விரைவில் விடுவிக்க வேண்டுமெனவும் அங்கு நிலவும் காணிப் பிணக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டின் (Michelle Bachelet) வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில், பொறுப்புக்கூறல் மற்றும் ஆழமான மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை பாதுகாக்கவும் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவும் புதிய அரசாங்கம் தேசிய கருத்தாடலுக்கு செல்ல வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் ரீதியாக மிகவும் நெருக்கடியை இலங்கை சந்தித்துள்ள நிலையில், புதிய பிரவேசத்திற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிறுவனங்களையும் பாதுகாப்பு பிரிவையும் மறுசீரமைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தராதரம் இன்றி நாட்டின் அனைவரையும் பொருளாதார நெருக்கடி பாதித்துள்ளதாகவும் அதில் இருந்து மீள்வதற்கு ஊழலை ஒழிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கடுமையான பாதுகாப்பு சட்டங்களில் தங்கியுள்ளமை மற்றும் அறவழி போராட்டக்காரர்களை அடக்கும் செயற்பாடுகளை முடிவிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களை கைது செய்யவும் பொதுமக்களின் போராட்டங்களை அடக்கவும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கி, பொறுப்புக்கூறலை நிறைவேற்றும் வகையில் சட்டங்களை வகுக்குமாறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டங்களை வகுக்கும் செயற்பாடு உரிய காலவரையறைக்குள் நிறைவு செய்யப்பட வேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆராயும் அலுவலகம் பலப்படுத்தப்பட வேண்டுமெனவும் சுயாதீனமாகவும் செயற்றிறனாகவும் செயற்பட அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன், வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணை, இம்முறை அமர்வுடன் நிறைவிற்கு வருகின்றது.

பிரித்தானியா தலைமையிலான ஒருங்கிணைந்த நாடுகள் இந்த பிரேரணையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவந்ததுடன் அந்த தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Posted in Uncategorized

மாணவி குமாரசாமி கிருசாந்திக்கு நடந்தது என்ன?

யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் செம்மணி பகுதியில் இன்று (07) அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும் நினைவு கூறப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

1996 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 7ஆம் திகதி 18 வயதுடைய யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த போது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறித்து பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

செம்மணி இராணுவ முகாமில் கிருஷாந்தியை தடுத்து வைத்திருந்ததை பிரதேச மக்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா மாணவியின் சகோதரனும், யாழ். பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்துள்ளனர்.

இதன்போது மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்ததாகவும் கூறப்படுகின்றது.

அன்றைய தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை அரசில் எவ்வித நம்பிக்கையும் இல்லை!

தற்போதைய ஜனாதிபதி நல்லாட்சி அரசில் இருந்தார். அப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நல்லதொரு முடிவை தருவதாக கூறி இருந்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது அவர் ஜனாதிபதியாக கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்.

இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தாய்மார்களும், உறவுகளும் சர்வதேச விசாரணை மட்டுமே எமக்கு வேண்டும் என்ற கோரிக்கையில் உள்ளனர் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று புதன்கிழமை (07) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பாக சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும் என கோரி நாங்கள் கடந்த 13 வருடங்களுக்கு மேலாக சர்வதேசத்திடம் கோரி வருகிறோம். இலங்கை அரசில் எவ்வித நம்பிக்கையும் எமக்கு இல்லாத நிலையில் காணாமல், ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச விசாரணையே தேவை என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்தோம்.

ஆனால் 13 வருடங்களாகியும் எமது கோரிக்கை நிறைவேறவில்லை. எமது கோரிக்கை நிறைவேறும் நிலையில் இலங்கையில் இருந்து ஜெனிவா செல்கின்ற அமைச்சர்களும், அரசு சார்பாக செல்கின்றவர்களும் சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்நாட்டு விசாரணை வேண்டும் என்று கூறுகின்றனர்.

எதிர்வரும் 51 வது ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

குறித்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ள உள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்நாட்டு விசாரணை போதும் என வலியுறுத்த உள்ளார். எனினும் உள்நாட்டு விசாரணையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

எத்தனையோ ஆணைக்குழுக்கள் இங்கே வந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. அவர்களின் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. இவ்வாறான நிலையில் நாங்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிற்கின்றோம்.

ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நாங்கள் சுமார் 2 ஆயிரம் நாட்களுக்கு மேல் வீதியில் நின்று போராடி வருகிறோம். நீதிக்காகவே நாங்கள் போராடி வருகிறோம்.

நிதிக்காக போராடவில்லை. எமது உறவுகள் குறித்து உண்மையும், நீதியும் எமக்கு தேவை. தற்போதைய வெளிவிவகார அமைச்சராக உள்ள அலி சப்ரி, நீதி அமைச்சராக இருந்த காலத்தில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று நிதிக்காக எங்களுடன் கலந்துரையாடினார்.

அவர் நீதிக்காக ஒருபோதும் எங்களுடன் கலந்துரையாட வில்லை. இலங்கையில் உள்நாட்டு விசாரணை போதும் என்று கூற அவருக்கு எவ்வித அருகதையும் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நாங்கள் தான் நிற்கின்றோம். எங்களுக்கு சர்வதேச விசாரணை மடடுமே வேண்டும் என்று.

தற்போதைய ஜனாதிபதி நல்லாட்சி அரசில் இருந்தார். அப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நல்லதொரு முடிவை தருவதாக கூறி இருந்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது அவர் ஜனாதிபதியாக கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்.

இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தாய்மார்களும், உறவுகளும் சர்வதேச விசாரணை மட்டுமே எமக்கு வேண்டும் என்ற கோரிக்கையில் உள்ளனர்.

இலங்கையின் கடன்கள் ஸ்திரமான நிலையில் இல்லை – சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர்

இலங்கையின் கடன் நிலைவரம் ஸ்திரமான தன்மையில் இல்லை என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் நிதியியல் இடைவெளி இல்லாமல் போயிருப்பதாகவும் சுமார் 25 சதவீதமான சந்தைகளின் கடன் நிலைவரம் ஸ்திரமான நிலையில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இலங்கை குறித்து சிந்தித்துப் பார்ப்பதுடன் பெரும்பாலான நாடுகள் அதனையொத்த நிலையிலேயே இருக்கின்றது. கானா போன்று மிகவும் வலுவான அடிப்படைகளைக் கொண்டிருக்கின்ற நாடுகள்கூட ஏனைய வெளியகத்தாக்கங்களால் சந்தைகளை நாடுவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது.

அதேவேளை வறிய நாடுகளில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவை கடன்களை மீளச்செலுத்தமுடியாத அச்சுறுத்தல் நிலைக்கு முகங்கொடுத்திருக்கின்றன’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் கடந்த வாரம் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதை அடுத்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்த கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இருதரப்பினருக்கும் இடையில் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும் இது இலங்கை முன்நோக்கிப் பயணிப்பதற்கான மிகமுக்கிய நகர்வாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியிலேயே தற்போது அவர் மேற்குறிப்பிட்டவாறானதொரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா தெரிவிப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டின் திறைசேரி செயலாளர் Janet Yellen தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Paris Club அங்கத்தவர்கள் அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு அமைய, நிதிச்சான்று வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த நடவடிக்கைகளுடன் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் அமெரிக்காவின் ஏனைய நிறுவனங்களும் இணைந்து செயற்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சர்வதேச நீதிமன்றின் முன் இலங்கையை பாரப்படுத்த வேண்டும்! சுரேந்திரன் ரெலோ

தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல் மற்றும் அட்டூழிய குற்றங்களுக்கான நீதியைக் கோரி இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்துமாறு மனித உரிமைப் பேரவையின் பிரதான அங்கத்துவ நாடுகளுக்கும் மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கும் ஐநா பாதுகாப்புச் சபையை தூண்டுமாறு கையெழுத்திட்ட கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளோம் என ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது இன்று நேற்றல்ல, எமது தொடர்ச்சியான நிலைப்பாடு. சர்வதேச நீதிப் பொறிமுறை, சர்வதேச விசாரணை என்பவற்றிற்கு குறைவான எந்த விடயங்களும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தராது என்பதில் நாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதோடு மாத்திரமல்ல அதற்காக அர்ப்பணிப்போடு உழைத்து வருகிறோம் என்பதை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிவர் எனவும் அவர் கூறினார்.

உறுதியுடனான தொடர் பயணம்

அதேபோன்று ஐநா விடயங்களில் மாத்திரமல்லாமல் அன்றாட விடயங்களிலும் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் அவசர அவசியமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நாங்கள் அக்கறையோடும் செயலாற்றுவோம்.

பத்திரிகை அறிக்கைகளைத் தாண்டி மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற செயல் வடிவம் கொடுப்பதே அர்த்தமுள்ளதாக அமையும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள்.

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக பல வழிகளிலும் போராடி வரும் வரலாற்றைக் கொண்ட எமது கட்சி தொடர்ந்தும் உறுதியுடன் பயணிக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.