வைப்பிலிட்ட நிதியை மீள கேட்ட ஜப்பான்; உதவியை உதாசீனம் செய்ததா யாழ். மாநகர சபை?

யாழ். மாநகர சபை சில வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி கழிவுகளை அகற்றி வருகிறது.

கொழும்பில் இடம்பெறுவதைப் போன்று யாழ்ப்பாணத்திலும் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு நான்கு பெரிய வாகனங்களை இலவசமாக வழங்க 2019 ஆம் ஆண்டு ஜப்பான் முன்வந்தது.

வாகனங்கள் இலவசமாக கிடைக்கவிருந்த நிலையில், அதனை இலங்கைக்கு கொண்டுவரும் போது அதற்கான வரியை யார் செலுத்துவது என்ற பிரச்சினை எழுந்தது.

அதற்கான வரியையும் தாமே செலுத்துவதாக ஜப்பான அரசாங்கம் அறிவித்து, அந்த தொகையையும் யாழ். மாநகர சபை கணக்கிற்கு அனுப்பியது.

இது தொடர்பான ஒப்பந்தம் யாழ்ப்பாண மாநகர சபைக்கும் ஜப்பானுக்கும் இடையில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது யாழ். மாநகர சபை முதல்வராக இம்மானுவேல் ஆர்னால்ட் இருந்துள்ளார்.

ஜப்பானில் இருந்து குறித்த நான்கு வாகனங்களையும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான இறக்குமதி வரி மற்றும் போக்குவரத்து செலவாக ஜப்பானிய அரசாங்கம் அன்றைய காலப்பகுதியில் 83,432 அமெரிக்க டொலர்களை யாழ். மாநகர சபையின் வங்கிக் கணக்கில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி வைப்பிலிட்டதாக அதன் சுகாதாரக் குழு தலைவர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்தார்.

வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (Department Of External Resources)அனுமதி இல்லாமல் நிதிகளை வௌி இடங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது என்பதால், அதன் அனுமதியை பெறுமாறு மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியதாக வரதராஜன் பார்த்திபன் கூறினார்.

இவ்விடயம் தொடர்பில் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு யாழ். மாநகர சபையினால் கடிதம் எழுதப்பட்ட போதும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என வரதராஜன் பார்த்திபன் மேலும் தெரிவித்தார்.

இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் தற்போதைய மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதும் கழிவகற்றல் வாகனங்களுக்காக வழங்கப்பட்ட நிதி தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இதன்போது, மூன்று மாத திட்டத்தின் அடிப்படையில் தான் அந்நிதி வழங்கப்பட்டதாகவும் தற்போது 3 வருடங்கள் கடந்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்ட ஜப்பான் உயர் அதிகாரிகள், அந்நிதியை மீள செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

ஜப்பானிய அரசாங்கம் எழுத்து மூல கோரிக்கை அடிப்படையில் அந்த நிதியினை விடுவிப்பதற்கான அனுமதியினை யாழ். மாநகர சபைக்கு வழங்கியுள்ளது.

வரியை செலுத்த ஜப்பான் அன்று வழங்கிய 83 ,432 அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி 30.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.

இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆர்னால்டிடம் வினவிய போது, தானே இந்த திட்டத்தை முன்நின்று ஆரம்பித்ததாகவும் தனக்குப் பின்னர் மாநகர சபை இந்த திட்டத்தை உதாசீனம் செய்ததாகவும் குறிப்பிட்டார்.

மத்திய அரசாங்கமே இதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வௌிநாட்டு வளத்துறை திணைக்களத்திடம் வினவிய போது, தமக்கு இவ்வேளையில் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க முடியாது எனவும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்தால் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

எது எவ்வாறாக இருந்தாலும், யாழ். மாநகர சபைக்கு இலவசமாக கிடைக்கவிருந்த மில்லியன் கணக்கான பெறுமதியுடைய இந்தத் திட்டம் இரத்து செய்யப்பட்டு, பணத்தை மீள செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

Posted in Uncategorized

செப். 15 முதல் மீண்டும் தாமரை தடாகம்

இலங்கை மக்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான தாமரை கோபுரத்தின் செயல்பாடுகளை செப்டம்பர் 15 முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 113 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், பல புதிய அனுபவங்களை வழங்க கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தாமரைக் கோபுரத் திட்டத்திற்கு சீன நிறுவனம் 88.65 அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்கியுள்ள நிலையில், மீதித் தொகையை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக சீனாவிடம் பெறப்பட்ட கடன் தவணை 2024 ஆம் ஆண்டிற்குள் செலுத்தி முடிக்கப்பட உள்ளது. அத்துடன் ஏற்கனவே கடனாகப் பெறப்பட்ட சுமார் 66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீளச் செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இவ்வருடம் மார்ச் மாதம் திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. மேலும் அதன் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் கணக்காய்வு செய்யப்படுகிறது.

தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி சீன நிறுவனம் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைத்தது.

உலகிலுள்ள செல்வந்த நாடுகளில் இருப்பதைப் போன்ற பொழுதுபோக்கு மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகளை வழங்க திட்டமிட்டிருப்பதாக கொழும்பு லோட்டஸ் டவர் தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு சாகச விளையாட்டுகளான ஸ்கை டைவிங் (Sky diving ) மற்றும் பங்கி ஜம்பிங் (Bungee jumping) ஆகியவையும் இதில் அடங்கும்.

இதுவரை 80 சதவீதமான உள்நாட்டு முதலீட்டாளர்களும் 20 சதவீதமான வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தாமரை கோபுரத்தில் முதலீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

டயலொக் டெலிகொம் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் என்பன தலா 200 மில்லியன் ரூபா முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன.

தாமரைக்கோபுரத்தின் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நுழைவுச் சீட்டைக் கொள்வனவு செய்து, அனைவரும் இதனைப் பார்வையிடவும் புதிய அனுபவங்களை பெறவும் முடியும். நுழைவுச் சீட்டொன்றின் விலை 500 ரூபா என்பதோடு விசேட நுழைவுச் சீட்டின் விலை 2,000 ரூபாவாகும். பார்வையிட வரும் வெளிநாட்டவர் ஒருவருக்கான நுழைவுச் சீட்டு 20 அமெரிக்க டொலர்களாகும். அடுத்த சில மாதங்களில் நுழைவுச் சீட்டுக்கு பதிலாக QR தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

10.5 ஏக்கர் நிலப்பரப்பில் தாமரை கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதுவரை 58 முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில் 22 பேர் ஒப்பந்தம் மேற்கொள்ள இணங்கியுள்ளனர். 15 பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காக எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் தாமரைக்கோபுர செயற்பாடுகளை மேலும் வெற்றிகரமாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்திற்கு வரும் பொதுமக்களுக்காக தரை தளம், பிரபலமான உணவகங்கள், பப் (Pub) மற்றும் நினைவுப்பரிசு அங்காடிகள் (souvenir shop) என்பவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு, பல முன்னணி வணிக வங்கிக் கிளைகளும் தரை தளத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் தளம், அலுவலக வசதிகளுக்காக பயன்படுத்தப்படுவதுடன் டிஜிட்டல் சினிமா அனுபவத்தைப் பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூன்றாவது தளத்திலுள்ள மாநாட்டு மண்டபம், ஒரே நேரத்தில் சுமார் 400 பேருக்கான இருக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், திறந்த தளம் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய தொழில்நுட்பத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள இலங்கையில் உள்ள மிகவேகமாக இயங்கக்கூடிய மூன்று மின் தூக்கிகள் தாமரைக் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அனைத்து அனுபவங்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்த்தும் அனுபவித்தும் மகிழ முடியும் என்று கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனத் தூதுவரின் சர்ச்சைக் கருத்துக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம்

இலங்கைக்கான சீனத் தூதுவர் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்குப் பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். இந்நிலையில் இந்தச் செயற்பாடு மிகவும் வருந்தத்தக்க ஒன்று என்பதுடன் இதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்பில் வன்மையாகக் கண்டிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (30.8.2022) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் பல்வேறு அநீதிகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக் கூட்டத் தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இதுதொடர்பில் நாங்கள் பல்வேறு சிவில், பொது அமைப்புக்களுடன் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கிறோம் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை, இலங்கைக்கான சீனத் தூதுவரின் கருத்துக்களுக்கு கண்டனம் வெளியிடும் வகையிலான முழுமையான ஊடக அறிக்கையை குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜெயராம் றாபின் முழுமையாக வாசித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் அவசர கடனுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கான 200 மில்லியன் டொலர் அவசரகால உதவிக் கடனை வழங்க தீர்மானித்துள்ளது. உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களின் கீழ் இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உணவுப் பாதுகாப்பின்மை இலங்கை மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்நிலையில் வழங்கப்படவுள்ள கடனுதவி வருமையானோர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு நேரடி நிதியுதவியை விரிவுபடுத்தும்.

அத்தோடு வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பாலூட்டும் தாய்மாருக்கான உணவுக்கான கொடுப்பனவு என்பவையும் இதனுள் உள்ளடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிக்காக இன்னும் எத்தனை நாட்களுக்குப் போராடுவது? – பி.மாணிக்கவாசகம்

இலங்கையில் வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் ஓர் எரியும் பிரச்சினையாக சுமார் 40 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு நோக்கத்துடன் 1983 ஆம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறைகளில் இருந்து நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது.dissapear tamil நீதிக்காக இன்னும் எத்தனை நாட்களுக்குப் போராடுவது? – பி.மாணிக்கவாசகம்குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காகத் தலையெடுத்த ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதற்காக ஆட்களைக் காணாமல் செய்வதை ஒரு தாக்குதல் உத்தியாக ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டத்தில் தீவிர பங்கேற்கின்ற கிராமிய மற்றும் பிரதேச மட்டத்திலான குடிநிலைசார் தலைவர்கள் முக்கியஸ்தர்களுடன் முக்கியமாக இளைஞர் யுவதிகளும் முதலில் இலக்கு வைக்கப்பட்டனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடத்தப்பட்டார்கள். பின்னர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இதனைவிட விபரம் அறிய முடியாத முறையில் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பொதுமன்னிப்பளிக்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் இராணுவத்திடம் சரணடையுமாறு அரசாங்கம் ஒலிபெருக்கிகள் மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று சரணடைந்த நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகளும் காணாமல் போயுள்ளார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிவிப்பதற்கு ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டும் கடத்திச் செல்லப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பற்றிய விபரங்கள் ஆதாரங்களாக இருந்த போதிலும், அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசுகள் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

‘வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்குகின்ற செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். ஆட்களை வலிந்து காணாமல் ஆக்குகின்ற குற்றச் செயல்கள் இனிமேல் தொடராமல் தடுக்க வேண்டும்’ என்று இலங்கையின் பொறுப்பு கூறுகின்ற கடப்பாடு தொடர்பில் ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30 –1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

‘மனித உரிமை மற்றும் மனிதாபிமான மீறல்களுக்கு எதிராக வெளிநாட்டு நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், சட்டத்தரணிகளைக் கொண்ட விசேட நீதிமன்றத்தை உள்நாட்டில் அமைக்க வேண்டும். அதனடிப்படையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உண்மைகளைக் கண்டறியவும் இக்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவும் சுதந்திரமாகச் செயற்படுகின்ற விசேட நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். இந்தக் குற்றங்களுக்கான நீதி விசாரணைகள் 1983ஆம் ஆண்டிலிருந்து 2014 வரையான காலகட்டத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, இந்த விசேட நீதிமன்றம் அமைத்தல் வேண்டும்’ என ஐநா மன்றத் தீர்மானம் வலியுறுத்தி இருக்கின்றது. இந்தத் தீர்மானத்தின் பரிந்துரைகளை ஏற்று, அவற்றை நிறைவேற்றுவதாக இலங்கை அரசாங்கம் அந்தத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி உறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த உறுதி இன்னுமே நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தையே காணாமல் ஆக்குவதற்கான முயற்சிகளிலேயே ஆட்சியாளர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள். ஐநா மனித உரிமைகள் பேரவையாகிய சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிக்கமைய நிலைமாறு கால நீதியை நிலைநிறுத்துவதற்கான பொறிமுறைகளில்; ஒன்றாக காணாமல் போனோருக்கான அலுவலகமும் காலம் கடந்த நிலையிலே உருவாக்கப்பட்டது. அந்தப் பொறிமுறை வடிவமைக்கப்பட்ட போதிலும், அந்த அலுவலகம் இடம் குறித்து உடனடியாக அமைக்கப்படவில்லை. அத்துடன் அந்த அலுவலகத்திற்கான ஆளணிகளை நியமிப்பதையும் ஆட்சியாளர்கள் இழுத்தடித்திருந்தார்கள்.

காணாமல் போனோருக்கான அலுவலக உருவாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும். அவர்களின் பங்களிப்பும் முக்கியமாக இருக்க வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனாhல் அந்த நிபந்தனையை அரசாங்கம் முறையாகக் கவனத்தில் எடுத்துச் செயற்டவில்லை.

அது மட்டுமல்லாமல் அந்த அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள், அதன் மூலம் திரட்டப்படுகின்ற விபரங்கள் வெளியிடப்படமாட்டாது. விசாரணைகளில் கண்டறியப்படுகின்ற விடயங்கள் நீதிமன்றங்களின் சட்ட நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்படவும் மாட்டாது. அத்துடன் அந்த விடயங்களை முன்னிறுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவும் மாட்டாது என்றவாறான விடயங்களை உள்ளடக்கி காணாமல் போனோருக்கான அலுவலகம் உருவாக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது, அவர்களை யார் கொண்டு சென்றார்கள், எங்கு, ஏன் அவர்களை மறைத்து வைத்திருந்தார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது போன்ற விபரங்கள் கண்டறியப்பட்டு, குற்றவாளிகளை சட்டடத்தின் முன் நிறுத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்;டவர்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு வழங்கி, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் இனிமேலும் இடம்பெறாத வகையில் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது கருத்து. உறுதியான நிலைப்பாடு. ஆனால் இதற்கு நேர்மாறாகவே காணாமல் போனோருக்கான அலுவலகத்தை அரசு உருவாக்கியது.

மக்களுடைய எதிர்பார்ப்பும், ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மான வரையறைகளும் காணாமல் போனோருக்கான அலுவலக உருவாக்கத்தில் அரசாங்கத்தினால் உரிய முறையில் கவனத்திற் கொள்ளப்படவில்லை. இது பாதிக்கப்பட்ட மக்களைப் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. அத்துடன் காணாமல் போனோரைக் கண்டு பிடிப்பதற்கும், அந்த விடயத்தில் நீதியை நிலைநிறுத்துவதற்கும் காணாமல் போனோருக்கான அலுவலகம்; ஒருபோதும் உதவமாட்டாது என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த அலுவலக உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக உருவாக்கத்திலும், அதனைச் செயற்படுத்துவதிலும் பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால் கொழும்பிலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலும் அந்த அலுவலகங்கள் திறக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இரகசியமாகவும், நேரம் கெட்ட வேளையாகிய அதிகாலையிலும் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தன. அலுவலகங்கள் திறக்கப்பட்ட போதிலும் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றை நாடிச் செல்லவில்லை. இதனால் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக உருவாக்கம் அமைந்துவிட்டது,

ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவதென்பது மிக மோசமானதொரு குற்றச் செயலாகும். இது கொலைக்குற்றத்தைவிட மோசமானது. கொலை செய்யப்படும்போது இறந்தவருடைய சடலம் கிடைக்கின்றது. ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற காரணம் முழுமையாகத் தெரியவராத போதிலும் அவர் இறந்துவிட்டார் என்பது உறுதியாகின்றது. குற்றச் செயல் நடைபெற்றிருக்கினற்து என்பதும் வெளிப்படையாகின்றது.

ஆனால் காணாமல் ஆக்கப்படுவதில் காணாமல் போயிருப்பவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பது தெரியாமல் போகின்றது. யார் அவரைக் காணாமல் ஆக்கியது என்பதும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. மேலும் காணாமல் போனவருடைய குடும்பத்தினர் பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கும் மன ஏக்கங்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஆளாகின்றார்கள். இது ஒருவகையில் அவர்களை உளவியல் ரீதியாக சித்திரவதை செய்வதற்கு ஒப்பானதாகும்.

இதனாற்தான் வலிந்து காணாமல் ஆக்கப்படுவதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், ஐநா மன்றமும் அதனை ஒரு குற்றச் செயலாக வரையறை செய்திருக்கின்றது. அத்துடன் அதுவொரு மிக மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடு என்றும் பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்றது. உண்மையில் இது ஓர் இன அழிப்பு நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. உலகில் வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள இலங்கை அது குறித்து இன்னுமே அலட்டிக் கொள்ளாத கல்லுளி மங்கன் போக்கிலேயே சென்று கொண்ருக்கின்றது.

இந்த நிலையில்தான் பல்வேறு அச்சுறுத்தல்கள் நெருக்குதல்களுக்கு மத்தியில் காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான போராட்டம் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் 2000 நாட்களைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நீதியைத் தேடும் அந்தப் போராட்டம் இன்னும் எத்தனை ஆயிரம் நாட்களைக் கடக்க வேண்டி இருக்குமோ தெரியவில்லை.

Posted in Uncategorized

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமான சேவை நிறுவனத்தை தனியார்மயப்படுத்த நடவடிக்கை; 49 % பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளருக்கு!

இலங்கையின் தேசிய விமான சேவைகள் நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தை தனியார்மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் அரசாங்கத்திடமே இருக்கும். ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தொடர்ந்தும் நட்டம் ஈட்டும் நிறுவனமாக இருந்து வருகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்தக் கடன் 1.126 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், இது ஏறக்குறைய 401 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அண்மையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனம் உள்ளிட்ட சில அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் ஐநா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் – மனு கையளிப்பு

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படும் விதத்தை ஐநா கண்காணிக்கவேண்டும் என அரகலய பிரஜைகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான இரண்டு கடிதங்களை அரகலய பிரஜைகள் அமைப்பு கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தில் கையளித்துள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்;டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் என கோரிஅரகலய பிரஜைகள் அமைப்பினர் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் ஐநா தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் கடிதத்தை அவர்கள் சமர்ப்பித்தனர்.

கடந்த மாதம் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகச்செய்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்தமைக்காக அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது.

SLPP தலைவர்கள் அனைவரும் கொழும்பிற்கு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து மாவட்டத் தலைவர்களையும் இன்று (29) கொழும்புக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிரகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்கு கட்சியின் அனைத்து மாவட்ட தலைவர்களையும் வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

பேக்கரிகள் யாழில் மூடப்படும் அபாய நிலை ; வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர்

யாழில் எதிர்வரும் நாட்களில் பேக்கரிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர்களின் நிலைமை தொடர்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

இன்று மாவின் விலை அதிகரித்துவிட்டது அதற்கான காரணம் மாவுக்கான நிர்ணயிக்கப்பட்ட விலை இல்லை விலைநிர்ணயம் இல்லாத காரணத்தினால் இஷ்டப்படி மாவின் விலை ஏற்றப்படுகின்றது

பாணிண் விலையும்அதிகரித்து கொண்டிருக்கின்றது இன்று வரை இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வெதுப்பகங்கள் கொழும்பில் மூடப்பட்டுள்ளன ஏனென்றால் கொழும்பில் மா இல்லை விலையேற்றம் ஆனால் யாழ்ப்பாணத்தில் மா இல்லை தற்பொழுது நாங்கள் மாவினை எவ்வாறு பெறுவது தொடர்பில் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றோம்

மா விலை பற்றி நுகர்வோர் பாவனையாளர் அதிகார சபையினர் அமைச்சுகளில் இருந்து கதைக்கவில்லை ஆனால் முட்டைவிலை பற்றி மாத்திரம் கதைத்து கொண்டிருக்கின்றார்கள்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஒரு கிலோமா 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது இனி எதிர்வரும் நாட்களில் பாணின் விலை மாவின் விலை கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்படும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினராலும் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த முடியாதநிலை யேற்படும்

எதிர்வரும் நாட்களில் பாணின் விலை அதிகரிக்கும் சில வெதுப்பகு உரிமையாளர்கள் பாணின் விலை அதிகரிக்காவிட்டாலும் நிறையினை குறைப்பார்கள்

இதன் காரணமாக முரண்பாடான நிலை ஏற்படும் எனவே பாணிண் உற்பத்தியை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக அரிசிமாவினை பானுவுடன் கலந்து செய்வதற்கான உக்தியை கையாண்டு கொண்டிருக்கின்றோம். அது வெற்றி அளிக்கும் பட்சத்தில் 50 க்கு 20என்றஅடிப்படையில் அரிசிமாவினை கலந்து பாண் உற்பத்திசெய்வதன் மூலம் தங்கு தடை இன்றி பொதுமக்களுக்கு பாண் வழங்க முடியும்

தற்பொழுது முட்டை விலை பற்றி அனைவரும் கதைக்கின்றார்கள். ஆனால் பாண் மற்றும் மாவிலை பற்றி யாரும் கவலைப்பதில்லை.

பேக்கரி உற்பத்திகளின் சகல மூலப் பொருட்களும் விலேயேறியுள்ளன அதன் காரணமாகத்தான் பாண் மற்றும் பேக்கறி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளன.

எந்த கடையிலும் கோதுமை மா இல்லை பிறீமா நிறுவனம் நமக்கு வழங்கிய மாவின் அளவினை தற்பொழுது குறைத்துள்ளது.

பொதுமக்களின் முக்கியமான உணவு பாண் தான் அதற்கு முதலில் விலை நிர்ணயப் செய்யுங்கள் அதைவிடுத்து விட்டு முட்டையை பற்றி கதைத்துக் கொண்டிருப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை.

யாழ்ப்பாணத்தில் இன்னும் 15 நாட்களில் சகல வெதுப்பகங்களினையும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ஆனால் தற்பொழுது இந்தியாவில் வழங்கப்பட்ட மா மூலம் யாழ்ப்பாணத்தில் பேக்கரி உற்பத்தி தக்க வைக்கப்பட்டது ஆனால் இந்த நிலை தொடருமாக இருந்தால் வரும் நாட்களில் பேக்கரியினை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

Posted in Uncategorized

இந்திய ரூபாய் வர்த்தக பரிவர்த்தனை நாணயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – சுரேந்திரன் ரெலொ

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான பரிவர்த்தனை நாணயமாக இந்திய ரூபாய் மத்திய வங்கியினால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைய மத்திய வங்கியின் நாணய சபை இதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இனிமேல் இலங்கையில் உள்ள ஏற்றுமதியாளர்கள் இறக்குமதியாளர்கள் உத்தியோகபூர்வமாக வங்கிகளில் இந்திய ரூபாயை பயன்படுத்தி தங்களுடைய அந்நியச்செலாவணி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

டொலர், பவுண்ஸ் மற்றும் பரிவர்த்தனைக்கான வெளிநாட்டு நாணயங்களுக்கான கேள்விகள் அதிகமாக இருப்பதாலும், வங்கிகளில் இந் நாணயங்களின் இருப்புக்கள் இல்லாமையினால் ஏற்றுமதி இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் உடனான வர்த்தகங்களும் இதனால் பாதிப்படைந்து இருக்கிறது. இதை சீர் செய்யு முகமாக மத்திய வங்கி இந்த நடவடிக்கையை முன்னெடுத்து இருக்கிறத.

ஆகவே தமிழர் தரப்பு தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் வர்த்தக நடவடிக்கைகளில் சுலபமாக ஈடுபடுவதற்கு இது வழி அமைக்கின்றது. நமக்குத் தேவையான மருத்துவ பொருட்களிலிருந்து அத்தியாவசியத் தேவைகள், உணவு, உடை என சகல விடயங்களையும் தருவித்துக் கொள்வதற்கும் ஏற்றுமதி செய்து கொள்வதற்கும் வர்த்தக ரீதியான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இது ஒரு வரப்பிரசாதமாக தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பூகோள ரீதியாக எமக்கு அண்மையில் உள்ள பாரிய சந்தையாக இந்தியா அமைந்துள்ளது. சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்கள் இந்த சந்தை வசதியைப் பயன்படுத்துகிறார்கள்.
நாம் இதை முழுதாகத் பயன்படுத்த முயல வேண்டும்.
வர்த்தக முதலீடுகள் மற்றும் நடவடிக்கைகளை விஸ்தரித்து எமது பொருளாதார நிலையை வளப்படுத்தும் சந்தர்ப்பமாக இதை வர்த்தக, முதலீட்டு, உற்பத்தி, ஏற்றுமதி , இறக்குமதிக்கான பாதையாக எமது சமூகம் கையாள வேண்டும்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் ரெலோ
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்