வசந்த முதலிகே உளிட்ட மூவரையும் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் தடுத்துவைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகிய மூவரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவலில்வைத்து விசாரிப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கையெழுத்திட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட மூவரையும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்குத் தடுத்துவைத்து விசாரிப்பதற்கு விசாரணையாளர்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் விண்ணப்பம் செய்திருந்த நிலையிலேயே, பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது ஐந்து லாம்பு சந்தியில்வைத்துக் கைதுசெய்யப்பட்டதுடன் அவரோடு ஒன்றாகப் பயணித்த ஹஷாந்த ஜீவந்த குணத்திலக ஆகியோர் கடந்த 18 ஆம் திகதி முதல் பயங்கரவாதத்தடை சட்டத்தின் விதிவிதானங்கள் பிரகாரம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் அனுமதியின் கீழான 72 மணிநேரத் தடுப்புக்காவலின் கீழ், பேலியகொட பொலிஸ் நிலையக் கட்டடத்தில் தடுத்துவைக்கப்பட்டு களனி வலய குற்றவிசாரணை பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வந்தனர்.

கல்வெவ சிறிதம்ம தேரர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த மூவர் குறித்த விசாரணைகளையும் உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்குமாறு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன நேற்று (21) ஆலோசனை வழங்கியிருந்தார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 18 ஆம் திகதி மாலை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் 19 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். முறையற்ற விதத்தில் ஒன்றுகூடிய குற்றச்சாட்டில் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதில் வசந்த முதலிகே, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷாந்த ஜீவந்த குணதிலக ஆகியோரும் உள்ளடங்கும் நிலையில் அந்த மூன்று பேருக்கு எதிராக மட்டும் பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்ப்ட்டமை குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைக்கும் முடிவு: 50க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் எதிர்ப்பு !

நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைக்கும் முடிவுக்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்க 22 ஆவது திருத்ததில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்தை திருத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுன மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கலாக 50க்கும் மேற்பட்டவர்களின் கையொப்பத்துடன் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

22ஆவது திருத்தத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களாக கலைக்கும் பிரேரணையை நான்கரை வருடங்களாக மாற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை – நீதி அமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில அரசியல் கைதிகளுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்

அதன்பின்னர் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நீதி அமைச்சர் குறித்த பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனும் தம்முடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாடு குறித்து அமெரிக்கா அதிருப்தி

சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு இணங்காத பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே, செயற்பாட்டாளர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அனுமதி வழங்கியுள்ள நிலையிலேயே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை ஊக்குவிக்கிறோம் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய சீனக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து வெளியேறியது

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய யுவான் வொங் 5 என்ற சீனக்கப்பல் இன்று மாலை நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது.

குறித்தக் கப்பல் கடந்த 16 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்து சமுத்திரத்தின் வடமேல் கடற்பகுதியில் செய்மதி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் குறித்தக் கப்பல் நாட்டிற்கு வந்திருந்தது.

யுவான் வொங் 5 என்ற குறித்த கப்பல் கடந்த 11ஆம் திகதி நாட்டிற்கு வரவிருந்தது.

இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியா தமது கடும் கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தது.

இந்தநிலையில், அந்த பயணத்தை பிற்போடுமாறு அரசாங்கம் சீனாவை கோரியிருந்தது.

பின்னர், கடந்த 16ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு குறித்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் வரை அங்கு நங்கூரமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிவித்தல்

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி இலங்கையில் அண்மைக் காலமாக இடம்பெறும் கைதுகள் தொடர்பில் வௌியாகும் தகவல்கள் கவலையளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு

இலங்கையின் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 ஜூலை மாதம் பதிவாகியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 66.7% ஆக பதிவாகியுள்ளது.

மிக மோசமான சமூக பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது – ஐ.நா தெரிவிப்பு !

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார கட்டமைப்பினை வீழ்ச்சியின் இறுதிக் கட்டத்திற்கு இட்டுச்சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக-பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலமை கர்ப்பிணிப் பெண்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் உபகரணங்கள், மருந்து பற்றாக்குறை என்பன காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியினால் கர்ப்பிணிப் பெண்கள் போஷாக்கற்ற உணவு மற்றும் உணவுத் தட்டுப்பாட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இந்துக்களின் நிலை அபாய நிலையில் காணப்படுகிறது – யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம் பிள்ளை

இலங்கையில் இந்துக்களின் நிலை அபாய நிலையில் காணப்படுவதாக யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம் பிள்ளை தெரிவித்தார்.

கலாநிதி ஆறு. திருமுருகனால் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீச்சரம் ஆலய வரலாறு தொடர்பான விடயங்களைத் தொகுத்து வெளியிடப்படும் திருக்கேதீச்சரம் ஆவணப்பெட்டகம் என்னும் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (20) யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அகில இலங்கை இந்துமாமன்றத்தின் பிராந்திய அலுவலகத்தில் கோப்பாய் சுப்ரமுனிய கோட்டம் முதல்வர் ரிஷி.தொண்டுநாதன் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் வாழ்துரை வழங்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில் ,

இலங்கையில் இந்துக்களின் நிலை அபாய நிலையில் காணப்படுகிறது 1953ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டில் இந்துக்கள் 22 வீதமாக காணப்பட்டது தற்போது 11 வீதமாக உள்ளது அடுத்துவரும் குடிசன மதிப்பீட்டில் எத்தனை வீதமாக குறைந்துள்ளதோ தெரியாது.

அண்மையில் திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு யாழ்ப்பாணத்தில் கல்வி பழைய மாணவர்கள் சென்று பார்வையிட்டு வந்தபின்னர் எமது ஆலயம் இருந்துபோல் இப்பவும் உள்ளது ஆனால் ஆலய சூழல் பொறுத்தவரை மற்றய ஆலயங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதுவே உண்மையாகவும் உள்ளது இங்கு மட்டுமல்ல ஏனைய இடங்களில் இத்தகைய ஆக்கிரமிப்புக்குள்தான் இந்து ஆலயங்கள் உள்ளன இத்தகைய விடயங்களை நாங்கள் பார்த்துகொண்டிருக்க முடியாது. நாங்கள் விழிப்படைய வேண்டும்.

இன்றைய நூலினை தொகுத்து வழங்பிய கலாநிதி ஆறு திருமுகனின் சேவையைபோல் யாரும் செய்ய முடியாது அவர் சமய பணி சமூக பணி கல்வி பணி என பல பணிகளை செய்து வருகிறார் அவர்பணி தொடரவேண்டும் என்றார்.

இந் நிகழ்வில் நல்லை ஆதின குருமுதல்வர் ஆசி உரை ஆற்றினார் இந் நிகழ்விற்கு பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர்கள் அதிபர் ஆசரியர்கள் கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Posted in Uncategorized

போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டாம்: சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல்

போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என Amnesty International எனப்படும் சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வசந்த முதலிகே உள்ளிட்ட 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க உள்ளிட்ட மூவர், 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவின் பிரகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்களைத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, போராட்டக்காரர்கள் மீது தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் போன்ற நியாயமற்ற கடுமையான குற்றங்களை சுமத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.