2023 மார்ச் 25 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர், தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டார்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மேலுமொரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பதவிக்காலமும் எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இதனடிப்படையில், தற்போதுள்ள நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப, தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்தி உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும்.

இந்த தேர்தலினூடாக 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் ஆணைக்கு இடமளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தி போராட்டம்

பாராளுமன்றத்தைக் கலைத்து, மக்கள் ஆணைக்கு இடம் வழங்குங்கள்’ எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

மக்கள் ஆணைக்கு இடம் வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் விஜேராம சந்தியிலிருந்து ஹைலெவல் வீதியூடாக நுகேகொடை வரை பயணித்து, ஆனந்த சமரக்கோன் திறந்த விளையாட்டரங்கில் ஒன்றுகூடினர்.

இதன்போது உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர், அனுரகுமார திசாநாயக்க, போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் அரசாங்கத்திற்கு தனது கண்டனங்களை வௌியிட்டார்.

ஜ.நா பிரதிநிதிகள் யாழ். மேயரை சந்தித்தனர்

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO)ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் David Mclachlan-Karr-க்கும் யாழ்ப்பாண மாநகர சபை மேயருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை நடைபெற்றது.

யாழ். மாநகர சபையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் விசுவலிங்கம் மணிவண்ணன், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் David Mclachlan-Karr-க்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கினார்.

Posted in Uncategorized

இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடனாளிகள்

இலங்கையில் தனிநபர் கடன் தொகை தற்போது 1 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, ஏப்ரல் 2022க்குள், மத்திய அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 4 மாதங்களுக்குள் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2022 ஏப்ரல் மாதத்திற்குள் மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 23,310.1 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12,442.3 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களாகவும் 10.867.8 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்களாகவும் இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் 17,589.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்த மத்திய அரசாங்கத்தின் மொத்தக் கடன் 04 மாத காலப்பகுதிக்குள் 5,720.7 பில்லியன் ரூபா அல்லது 32.52% அதிகரித்துள்ளது என்பது விசேட அம்சமாகும்.

அதேவேளை, இலங்கையில் தனிநபர் கடனின் அளவும் விரைவான அதிகரிப்பை சந்தித்துள்ளது.

இந்நாட்டின் சனத்தொகை 22 மில்லியன், அதன்படி இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடனாளிகளாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடல்

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தின் போதான வலிகள், தாக்கங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் (Rishi Sunak) கலந்துரையாடல்.

பிரித்தானிய தமிழ் கன்சர்வேட்டிவ் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்திப்பில், அதன் இணைத்தலைவரும் கவுன்சிலருமாகிய ஜெய், செயலாளர் கயன்,அருச்சுனா சிவானந்தன்,ஜனனி ஜெகநாயகம்,ரெலோ பிரித்தானிய கிளையின் அமைப்பாளார் சாம் சம்பந்தன், தென்மராட்சி TDA தலைவர் டாக்டர் புவி ,ரகு தவறாஜ், கவுன்சிலர் பரம் நந்தா, கரன் போல் மற்றும் பல பிரித்தானிய புலம்பெயர் தமிழ் மக்களின் முக்கிய செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திலும் இறுதி யுத்தத்தின் போதும் தமிழர்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கும், அவை குறித்த பொறுப்புக்கூறல் தொடர்பிலும் ரிஷி சுனக் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை வேட்பாளர் ரிஷி சுனக், தமிழ் தரப்பினரை சந்தித்துள்ளதுடன், பிரித்தானியாவில் தமிழர்களின் பங்களிப்பிற்காகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இருந்து விலகியமை காரணமாக, இலங்கை மீது கடுமையான நிலைப்பாட்டை பிரயோகிப்பதில் சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு தனது ஆதரவை வழங்கியுள்ள ரிஷி சுனக், எதிர்கால தீர்ப்பாயத்தில் பயன்படுத்தக்கூடிய போர்க்குற்ற சான்றுகளை சேகரிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, ரஷ்யர்கள் மீது இங்கிலாந்து விதித்துள்ள தடைகளைப் போன்று, இலங்கை அதிகாரிகள் மீது தடை விதிப்பதற்கான சாத்தியம் தொடர்பிலும், பிரித்தானியவாழ் தமிழர் பிரதிநிதிகளுடன் ரிஷி சுனக் கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் ரிஷி சுனக் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி, எல்லையில்லா பணவீக்கம் , அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

நோர்வே வெளிவிவகார பிரதானியுடன் ஆறு தமிழ் கட்சி தலைவர்கள் இணைைவழி சந்திப்பு

17 ஆவணி 2022 மதியம் 15:30 அளவில் நோர்வே வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான விசேட அதிகாரி ஆன் கிளாட் அவர்களுடனான முக்கிய சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆறு தமிழ் கட்சி தலைவர்களுடன் நடைபெற்றது. இதில் மாவை சேனாதிராஜா, நீதியரசர் விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், ஸ்ரீதரன் கோவிந்தன் கருணாகரம், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீகாந்தா அவர்கள் கலந்துகொண்டு இருந்த பொழுதிலும் உடல்நிலை காரணமாக கூட்டத்தில் தொடர்ந்தும் பங்குபெற்ற முடியவில்லை.

தமிழ் மக்கள் சார்ந்த பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலையை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. சமாதான நடவடிக்கைகளில் நோர்வே ஆர்வத்தோடு கடந்த காலங்களில் பங்கு பற்றி இருந்த பொழுதிலும் 2009 யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிகளில் அவர்களின் பங்களிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து தமிழ் மக்களிடமிருந்து எட்டி இருப்பது போன்ற ஒரு தோற்றம் அவதானிக்கப் படுவதாக தமிழ் தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

அதற்கு பதில் அளித்த ஆன் கிளாட் அவர்கள், சமாதான பேச்சுவார்த்தை முன்னெடுப்பதற்கு தாங்கள் சர்வதேச சமூகத்தால் முன்னிலைப்படுத்த பட்டதாகவும் அது தோல்வியடைந்த பின்னர் நீதிப் பொறிமுறையை வலியுறுத்துவதற்காக வேலைத்திட்டங்களில் சர்வதேச சமூகத்தோடு தாங்கள் தொடர்ந்து பயணிப்பதாகத் தெரிவித்தார்.

ஐநாவில் பல்வேறு விதமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விடயங்கள் இன்று வரை நடைமுறைப் படுத்தப் படாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது எந்த கருத்து தமிழ் கட்சித் தலைவர்களால் முன்வைக்கப்பட்டது. அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் நடைபெறுகின்றமை என்ற பல அவசரமாா பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது. நிரந்தர அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்பட்டாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இலங்கை அரசியலில் குறைவாகவே காணப்படுகிறது.

தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாடு மீீள வேண்டிய தேவை உள்ளது. அதற்கான ஆதரவை தமிழ்த் தரப்புகள் நிபந்தனையின் அடிப்படையில் வழங்குவதற்கு தயாராக உள்ள போதிலும் அரசு தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும், அதேநேரம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் வேளையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு பற்றிய கரிசனை கொள்வது நன்மை பயக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடருக்கு தாங்கள் தயாராகிக் கொண்டு இருப்பதனால், தமிழ் மக்களின் சார்பாக கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் தெரிவித்த பல்வேறு கருத்துக்களை நோர்வே அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு அவற்றை ஐநாவில் பிரதிபலிக்கும் வகையில் அங்கத்துவ நாடுகளுக்கு தாங்கள் முன்னெடுத்துச் செல்வதாகவும் ஆன் கிளாட் உறுதி அளித்தார்.

சுரேந்திரன்
தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்

Posted in Uncategorized

ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிட்டுள்ள சீன கப்பலால் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இந்தியா

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் சீன கப்பல் Yuan Wang 5 நங்கூரமிட்டுள்ள நிலையில், இந்தியாவின் இராமேஸ்வரம் கடலில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

மண்டபம் பகுதியில் இந்திய கடலோர காவல் படைகள் முகாம்கள் அமைத்து இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நிய ஊடுருவலை கண்காணிப்பதற்காகவே சர்வதேச கடல் எல்லையில் ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு உயர் அதிகாரி குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்திய கடற்படை கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அடுத்த வாரத்தில் நாடு திரும்பவுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு திரும்பவுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (17) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்த வேளையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

MiG விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக உதயங்க வீரதுங்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

Posted in Uncategorized

சீன கப்பல் விவகாரம் – இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளது என்ன?

லங்கைக்கு சீன கப்பல் சென்றுள்ளதால் உருவாகியுள்ள சூழ்நிலையை இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர்சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எங்கள் அயலில் என்ன நடந்தாலும் எங்கள் பாதுகாப்பு மீது தாக்கத்தை செலுத்தக்கூடிய என்ன சூழ்நிலை உருவானாலும் அது எங்களின் கரிசனைக்குரிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் நலன்கள் மீது தாக்கத்தை செலுத்தக்கூடிய எந்த விடயத்தையும் நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றோம் என எங்கள் பேச்சாளர் தெரிவித்திருந்தார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தாய்லாந்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் வௌிநாட்டுத் தூதுவர்களுக்கு வௌிவிவகார அமைச்சர் விளக்கம்

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் வௌிநாட்டுத் தூதுவர்களுக்கு வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி விளக்கமளித்துள்ளார்.

நாட்டின் தற்போதையை பொருளாதார, அபிவிருத்தி மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள வௌிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களை சந்தித்து வௌிவிவகார அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது வௌிவிவகார அமைச்சர் வௌிநாட்டுத் தூதுவர்களுக்கு எடுத்துக்கூறியுள்ளார்.

மனித உரிமைகள், நீதி மற்றும் சமத்துவம் தொடர்பிலான விடயங்களில் மேலும் முன்னேற்றமடையும் வகையில், ஒருமித்த கருத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் பேரவையுடனான ஆக்கபூர்வமான செயற்பாட்டை இலங்கை தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.