அரசியல் மறுசீரமைப்பானது முழுமையாக தமிழ் மக்களை இலக்காகக் கொண்டிருக்கவேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா)

அரசியல் மறுசீரமைப்பானது முழுமையாக தமிழ் மக்களை இலக்காகக் கொண்டிருக்கவேண்டும். ஜனாதிபதி ஆட்சிமுறை மாற்றம், பாராளுமன்ற ஆட்சிமுறை குறித்ததாக இருந்தாலும் தமிழர்களுடைய பிரச்சினைக்கான தீர்வை நோக்கியதாக அரசியல் மறுசீரமைப்பானது அமையவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) மாறாக பெரும்பான்மை சமூகத்தையும், பௌத்த தேசியவாதத்தையும், மேலாண்மையையும் இலக்காகக் கொண்டதாக இருக்குமானால் நீங்கள் எதிர்பார்க்கின்ற தேசிய இணக்கப்பாடு சாத்தியமற்றதாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஜனாதிபதி ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரைமீதான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா),

ஜனாதிபதியினுடைய கொள்கைப் பிரகடன உரையில், வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவேன் என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டது போன்றே தோன்றுகிறது. நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்ற இலங்கையின் புரையோடிப்போன வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை சிங்களத் தலைவர்கள் பார்க்கின்ற பார்வை விநோதமானதே.

இப்போது சர்வ கட்சி அரசாங்கத்திடம் தமிழர்களின் கோரிக்கைகளில் முக்கியமானதாக இருப்பது நில அதிகரிப்பை நிறுத்த வேண்டும், அபகரித்த நிலத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதை நிறுத்த வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். தமிழரின் பாரம்பரிய தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கில் உள்ள இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என்பவைகளாகவே இருக்கின்றன. அவற்றினை விடவும் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் சரியான விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்படுதல் வேண்டும் போன்றவைகளே.

இந்த நாட்டுக்கு சர்வகட்சி ஆட்சியே தேவை. இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டே நடந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்துக்கு இதுவரை தீர்வில்லை. கடந்த கால வரலாறுகளை நாங்கள் திரும்பிப்பார்ப்போமானால், இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டே தமிழ் மக்கள் இரணடாம் தரப் பிரஜைகளாக பார்க்கப்பட்டார்கள். அவர்களுக்கான அநீதியும் நடைபெற்றுக் கொண்டு வந்தது. சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே 49இல் டி.எஸ்.சேனாநாயக்கா அவர்கள் கிழக்கு மாகாணத்தில் குடியேற்றத்தை கல்லோயாத் திட்டத்தின் ஊடாக முயற்சித்திருந்தார். நடைமுறைப்படுத்தினார். 1921ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை 0.5வீதம் ஆனால் இன்று 24 வீதமாக உயர்ந்ததற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக இருந்தது மட்டுமல்ல 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. அன்றிலிருந்து அகிம்சை ரீதியாகவும், ஆயத ரீதியாகவும் போராடி இன்று ஒரு ஜனநாயகப் போராட்டத்தில் இருக்கின்றார்கள். ஆனால், பண்டா- செல்வா ஒப்பந்தம் நடைபெறும் போது ஜே.ஆர். ஜெயவர்த்தனா கண்டி யாத்திரை புத்த பிக்குகளுடன் சென்றிருந்தார். , டட்லி – செல்வா ஒப்பந்தம் நடைபெறும் போது சிறிமாவோ பண்டாரநாயக்கா எதிர்த்திருந்தார். 2000ஆம் ஆண்டுகளில் சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் நீலன் திருச்செல்வம், ஜீ.எல். பீரிஸ் போன்றவர்களின் முயற்சியில் ஒரு தீர்வுப் பொதி உருவாக்கப்பட்டது. அந்தத் தீர்வுப் பொதி இன்றுவரை நல்ல தீர்வுத்திட்டமாகப் இருந்தது என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அன்றைய அந்தத் தீர்வுப் பொதியை இன்றைய ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் எரித்திரிருந்தார். நாங்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் நடத்திய தமிழ் போராட்ட இயக்கங்களில் கூடுதலானவை அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டோம் 89இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பங்குபற்றியிருந்தோம். அன்றைய காலத்தில் எம்.ஈ.பி. யை பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ பிரதமர் அவர்கள் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை இங்கு வைத்திருந்தார்.

நாங்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கமாக அவருடைய வீட்டுக்குச் சென்று அரசியல் தீர்வுத் திட்டம் சம்பந்தமாக நீண்ட பேச்சுக்களை நடத்தியிருந்தோம்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் நீங்கள் பிரதமராக இருந்து தொடங்கிவைத்த முயற்சி பயனற்றுப் போனது. உங்களுடைய ஜனாதிபதி பதவிக்காலத்தில் இப்போது நீங்கள் கூறியிருக்கின்ற புதிய அரசியலமைப்பு மாற்றம், தமிழர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் என்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்ததல்ல என்பதனைப் புரிந்து கொள்ளவேண்டும். புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதென்பது தமிழர்களின் பிரச்சினைக்குரிய நியாயமான தீர்வு முன்வைக்கப்பட்டபின்னரே சாத்தியமாகும் என்பது சிங்களத் தலைவர்கள் அனைவருக்கும் புரியவேண்டும். இல்லாது போனால் உங்களுடைய புலம்பெயர் தமிழர்களை உதவிக்களைக்கும் முயற்சி பயனற்றதாகவே ஆகும்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்வதற்கான பல்வேறு வழிகளை ஜனாதிபதியவர்கள் அவருடைய உரையில் முன்வைத்திருக்கிறார். அவை அனைத்துமே நடைமுறைக்கு வருமானால் பாராட்டப்படத்தக்கதாக இருக்கும். திட்டங்கள் அனைத்து நடைமுறைப்படுத்தப்படும் போது மக்கள் நிம்மதியடையவேண்டும். மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவேண்டும் என்பதே எம்முடைய எதிர்பார்ப்பாகும். போராட்டக்காரர்களால் உருவாகியிருக்கின்ற இந்த மாற்றத்தை பாராட்டாமலிருக்க முடியவில்லை. ஆனால் போராட்டக்காரர்களைக் கைது செய்வதும் தடுத்து வைப்பதும், கடத்துவதும் கண்டனத்துக்குரியதாகும். இந்தக் கைதுகள் நெருக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும். போராட்டங்கள் நடத்துவது ஜனநாயக உரிமை எனக் கூறிக்கொண்டு அடக்குமுறையை மேற்கொள்வது கண்டனத்துக்குரியதாகும்.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் விவசாயம், மீன்பிடி, கால்நடைவளர்ப்பு என உற்பத்தித் துறைகள் காணப்படுகின்றன. வடக்கைப் பொறுத்தவரையில் கிழங்கு உற்பத்தி, வெங்காய உற்பத்தி சிறப்பாக நடைபெறுகிறது. அங்கு அறுவடை நடைபெறுகின்றவேளை வெளிநாடுகளிலிருந்து அதே உற்பத்திகளை இறக்குமதி செய்வதும், எமது விவசாயிகளுக்கான உரம் வழங்கல் பொலநறுவை, அனுராதபுர பிரதேசங்களின் நேர அட்டவணைக்கு ஏற்ப நடைபெறுவதும், அவர்களுடைய அறுவடைக் காலத்துக்கு ஏற்ப நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லைக் கொள்வனவு செய்தலும் விலை நிர்ணயம் நடைபெறுவதும் பாரபட்சமான விடயமாகும். இதில் மாற்றம் செய்யப்பட்டாகவேண்டும்.

இன்று யூரியா பசளை 65ஆயிரம் மெற்றிக்தொன் வர இருந்தும் 40ஆயிரம் மெற்றிக்தொன் இலங்கைக்கு வந்திருக்கின்றது. அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 216 மெற்றிக் தொன் மாத்திரNமு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான காரணம் கூறப்படுவது, மட்டக்களப்பு அம்பாரையில் அறுவடை முடிந்துவிட்டமு. அனுராதபுரம், பொலநறுவையில் விதைப்பு நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்த 25 மெற்றிக்தொன் வரும் போதும் மட்டக்களப்பில் பெரும்போக விவசாயம் தொடங்கப்பட்டுவிடும். பெரும்போக விவசாயம் செய்வதற்காவது யூரியாவைக் கொடுக்கவேண்டும்.

நீங்கள் குறிப்பிடுகின்ற அரசியல் மறுசீரமைப்பானது முழுமையாக தமிழ் மக்களை இலக்காகக் கொண்டிருக்கவேண்டும். ஜனாதிபதி ஆட்சிமுறை மாற்றம், பாராளுமன்ற ஆட்சிமுறை குறித்ததாக இருந்தாலும் தமிழர்களுடைய பிரச்சினைக்கான தீர்வை நோக்கியதாக அரசியல் மறுசீரமைப்பானது அமையவேண்டும். மாறாக பெரும்பான்மை சமூகத்தையும், பௌத்த தேசியவாதத்தையும், மேலாண்மையையும் இலக்காகக் கொண்டதாக இருக்குமானால் நீங்கள் எதிர்பார்க்கின்ற தேசிய இணக்கப்பாடு சாத்தியமற்றதாகவே இருக்கும்.

இன்று இலங்கையின் நிலையை நாங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். பெற்றோலுக்கு எரிவாயுவுக்கு மக்கள் வரிசையில் நிற்கின்றார்கள் ஆனால் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக் கொடுக்கும் நோக்கில் தமிழ் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையும் நடக்கின்றது. கடந்த 03.08.2022 இரவு 8.40 மணியளவில் கைதடி பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முன்னாள் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் தனபாலசிங்கம் சுதர்சனது கழுத்தில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கின்றார். இந்த நிலைமை மாறவேண்டும்.

இதற்கும் மேலாக, பொருளாதாரம் அதலபாதாளத்துக்குள் சென்றிருந்தது. முன்னைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களது மடத்தனமான, மூடத்தனமான நடவடிக்கையின் காரணமாக பொருளாதாரம் அதலபாதாளத்துக்குள் சென்றிருந்தாலும், அவர் நாட்டைவிட்டு சென்றிருந்தாலும் இருப்பதற்கு ஒரு நாடு இல்லாமல் இருக்கின்றார். அந்த வேளையில் இந்தியா தான் பொருளாதார உதவியை வழங்கியிருந்தது. ஏற்கனவே கடன் வசதிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது கிரடிற் லைன் மூலமாக கிட்டத்தட்ட நான்கு மில்லியயனுக்கும் அதிகமான உதவிகளைச் செய்திருந்தார்கள். எரிபொருள் உதவி, உதவி மருந்துப் பொருள்களை வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்று என்ன நடக்கின்றது. பூகோள அரசியலில் இலங்கைளை பகடைக்காயாக சீனா பயன்படுத்துகின்றது. வர இருக்கும் கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று இந்தியா கூறியிருக்கின்றது. அயல் நாடான இந்தியா அனைத்து நேரங்களிலும் எமக்கு ஆதரவாக இருக்கின்ற போது நாங்கள் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, இந்தியாவை எவ்வேளைகளிலும் பகைத்துக் கொள்ளக்கூடாது.

தமிழ் தேசிய கட்சிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்!

தமிழ் தேசிய கட்சிகளினால் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

09/08/2022 திகதியிட்ட இவ்வறிக்கையில், மார்ச் 2021 நிறைவேற்றப் பட்ட 46/1 பிரேரணையில் உள்ள சரத்துக்களுக்கு மேலதிகமாக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவை நீதிப் பொறிமுறை முன் நிறுத்துதல் உட்பட முக்கிய விடயங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 2020 இல் இருந்து தமிழர் தரப்பு ஒருமித்து அனுப்பும் அறிக்கைகளின் தொடர்ச்சி என்பது குறிப்படத் தக்கது.

இந்த அறிக்கையின் பிரதான கோரிக்கைகள் பின்வருமாறு.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் அமர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், 2021மார்ச் மாதம் ஐநா தீர்மானம் 46/1 நிறைவேற்றப்பட்டதில் இருந்து இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்த மதிப்பீட்டையும் மற்றும் தமிழர்களுக்கான மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் எங்கள் பரிந்துரைகளையும் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளாகிய நாம் கூட்டாக உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

தமிழர்களின் துன்பத்தைத் தணிக்கவும், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியக் குற்றங்களுக்கு நீதி வழங்கவும் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்பு மிகு தங்களிடம் நாங்கள் மரியாதையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம்:

1) ஐ.நா.மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலத்தால் (OHUNHRC) மார்ச் 2021 அறிக்கையின் பரிந்துரையின்படி, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதன் முக்கியத்துவத்தையும் , வட கொரியாவை போல ஐ.நா. பாதுகாப்புச் சபையை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐ.சி.சி.) பரிந்துரைக்க மீண்டும் வலியுறுத்துதல்

2) போர் தொடங்கிய காலத்தி்ல் இருந்து அரசாங்கம் தமிழர் பகுதிகளில் பாரிய அளவிலான இராணுவ பிரசன்னத்தை அதிவேகமாக அதிகரித்தது. 1983 க்கு முந்தைய அளவுக்கு தமிழர் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னத்தை குறைத்தல் வேண்டும். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்னமும் அரசாங்கம் தமிழர் பிரதேசங்களில் அதே இராணுவ மட்டத்தையே பேணுகின்றது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட திங்க்-டேங்க் ஓக்லாண்ட் நிறுவனத்தின் அறிக்கைப்படி, இராணுவ மற்றும் சிவிலியன் விகிதம் ஒன்றுக்கு ஆறு (ஒவ்வொரு ஆறு குடிமக்களுக்கும் ஒரு இராணுவம் உள்ளது), இது உலகில் மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரம் (இரண்டு சிவிலியன்களுக்கு ஒரு இராணுவம்) என்பது குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் உள்ள ஜோசப் முகாம் போன்று தமிழர் பகுதிகளில் உள்ள பல இராணுவப் பிரிவுகள் தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியக் குற்றங்களை இழைத்துள்ளன, இதில் தமிழ் மக்கள் படுகொலைகள், பெண்கள் மற்றும் சிறுமிகள் கற்பழிப்பு, கடத்தல்கள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, என ஐ.நாவாலும் பல சர்வதேச நிறுவனங்களாலும் நம்பத்தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

3) சிங்கள – பௌத்த பிரதேசங்களை தமிழ் மாவட்டங்களில் இணைப்பதற்கு பிரதேச எல்லைகளை மீள் நிர்ணயம் செய்தல் மற்றும் தமிழ் பிரதேசங்களை சிங்கள பௌத்த பிரதேசங்களுடன் இணைத்தல் உட்பட தமிழ் பிரதேசங்களில் அரசாங்க அனுசரணையுடன் சிங்கள பௌத்த குடியேற்றங்கள் என்பனவற்றை நிறுத்துதல்.

4) 1958,1977, 1983 மற்றும் 2009 இல் தமிழ் மக்களுக்கு எதிராக, அவர்கள் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளும் அட்டூழியக் குற்றங்களைத் தடுப்பதற்கான நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு, சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாகப் பரிசீலிக்குமாறு மாண்புமிகு தங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

5) ஐ.நா.மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலத்தால் முன்னர் பரிந்துரைக்கப் பட்டபடி, கடுமையான சர்வதேச குற்றங்களுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதிக்கும் உலகளாவிய நியாயாதிக்கம் என்ற கோட்பாட்டின் கீழ், இலங்கை அரச மற்றும் இராணுவ அதிகாரிகளை அவர்களது பிரதேசத்தில் கைது செய்து, அவர்கள் நாட்டின் பிரதேசத்தில் இக்குற்றங்கள் இழைக்கப் படவில்லை என்றாலும், விசாரணைக்கு உட்படுத்துமாறு உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ இலங்கையிலிருந்து தப்பிச் சென்று தற்போது சிங்கப்பூரில் இருப்பதால் வேறு நாடுகளுக்கும் செல்லலாம் என்பதால் இந்த நடவடிக்கை இப்போது மிகவும் பொருத்தமானது. அவரது பதவி விலகல் நீதிக்கான புதிய சாத்தியங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் இனி ஜனாதிபதியாக இல்லாததால், அவர் அரச தலைவருக்கான பாதுகாப்பை இழக்கிறார். போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் எழுபதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான தமிழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட போது, ​​ஐ.நா.வின் உள்நாட்டு ஆய்வு அறிக்கையின்படி, போரை மேற்பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளராக திரு. கோத்தபாய ராஜபக்ஷ இருந்தார். மோதல் வலயத்திலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால், கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். மேலும், சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) பிப்ரவரி 2017 இல், தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” அடைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ “கற்பழிப்பு முகாம்கள்” பற்றிய விவரங்களை ஐநாவிடம் ஒப்படைத்தது. ஏப்ரல் 2013 இல் இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலக அறிக்கையின்படி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் போர் விதவைகள் உள்ளனர். குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு 2020 ஆம் ஆண்டில் உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கையில் இருந்து வருவதாகக் கூறியுள்ளது.

6) கருத்துச் சுதந்திரம் பல ஆண்டுகளாகத் தமிழர் பகுதிகளில் கடுமையாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது, தமிழர் பகுதிகளில் மிகப் பாரிய இராணுவப் பிரசன்னம் மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் இதற்கு வசதியாக உள்ளன. சுயாதீீன அரசியல் கருத்துக்களை வெளிப் படுத்துவதை கட்டுப்படுத்தும் மற்றும் குற்றமாக்கும் அரசியல் சட்டத்தின் ஆறாவது திருத்தம் கட்டுப்படுத்தல் சட்டங்களில் முக்கியமானது.

முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றமையினால், இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு இலங்கையை நிர்ப்பந்திக்கும் நடவடிக்கைகளில் மாண்புமிகு தங்களுக்கு சிரமங்கள் இருக்க முடியாது.

உங்களின் கனிவான கவனத்திற்கும், பரிசீலனைக்கும் மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காகவும், இலங்கையின் தமிழ் மக்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் இந்த உண்மைகளை நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.

ஒப்பம்

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் – பா. உ. தலைவர் – தமிழ் மக்கள் கூட்டணி (த. ம. தே.கூ)

அ.அடைக்கலநாதன்- பா.உ தலைவர்- தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (த.தே.கூ)

தர்மலிங்கம் சித்தர்த்தன் – பா.உ தலைவர்- ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (த.தே.கூ)

க.பிரேமச்சந்திரன் தலைவர்- ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணி ( த.ம.தே.கூ)

ந. சிறீகாந்தா தலைவர்- தமிழ் தேசியக் கட்சி (த.ம.தே.கூ)

நிபந்தனைகளுடன் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து செயற்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பு தயார் – ரெலோ வினோ நோகராதலிங்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி அரசாங்கத்தில் நிபந்தனைகளுடன் இணைந்து செயற்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பு தயார் கண்மூடித்தனமாக ஆதரவு வழங்க தயாரில்லை என ரெலோ தலைமை குழு உறுப்பினரும் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோக ராத லிங்கம் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயேஅவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு இன்று அரசியல் ரீதியாக ,பொருளாதார ரீதியாக மிகவும் நெருக்கடியான கட்டத்திலே இருக்கின்ற இந்த நேரத்திலே சர்வகட்சி அரசினுடைய தேவையை புரிந்து கொள்கின்றோம்.

உணர்ந்து கொள்கின்றோம். அனைத்து கட்சிகளும் இணைந்து அப்படி ஒரு அரசு உருவாகுமானால் நிபந்தனைகளோடு நாட்டு மக்களின் நன்மை கருதி தற்போதுள்ள சூழ்நிலை கருதி அந்த அரசில் இனணந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

யுத்தம் முடிந்த பின்னர் ஐ. நா. ஆணையாளரிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு 13 பிளஸ் பிளஸ் தீர்வு வழங்கப்படுமென உறுதியளித்திருந்தார்.

ஆனால் எந்த தீர்வு முயற்சியை யும் அவர்கள் முன்னெடுக்கவில்லை. அதேபோல்தான் நல்லாட்சி அரசிலும் நான்கரை வருடங்கள் பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெறுவதற்காக எமது கட்சித்தலைவர் சம்பந்தன் ஐயாவை ஒவ்வொரு முறையும் ஏமாற்றி அவரை நமப வைத்து எமது 16 எம்.பிக்களின் ஆதரவை பெற்றுக்கொண்டனர் தற்போதைய ஜனாதிபதியை ரணிலும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரியும் ஏமாற்றிய வரலாறும் உண்டு.

எனவே கண்ணை மூடிக்கொண்டு இந்த சர்வகட்சி அரசுக்கு ஆதரவு தருவதற்கு நாம் தயாரில்லை. அரசினதும் எதிர்கட்சிகளினதும் தமிழ் மக்களிடமிருந்து எம்மை பிரிக்கும் சகுனி விளையாட்டுக்களினால்தான் 16 எம்.பிக்களைக்கொண்டிருந்த எமது கட்சி இன்று 10 எம்.க்களுடன் நிற்கின்றது.

மீண்டும் எம்மை எமது மக்களிடமிருந்து பிரிப்பதற்கு முயற்சிப்பீர்களேயானால் , எமது ஆசனங்களை வெட்டி குறைப்பதற்கு நீங்கள் முயற்சிப்பீர்களேயானால் நாங்கள் மீண்டும் ஒரு தடவை ஏமாறத்தயாராக இல்லை.

யுத்தத்தில் காணாமல் போன தமது உறவுகளுக்காக 2000 நாட்களைக்கடந்து அவர்களின் உறவுகள் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் வடகிழக்கின் 8 மாவட்டங்களையும் சேர்ந்த மக்களும் இணைந்து இந்த 2000 ஆவது நாளை போராட்டத்தினூடாக முன்னெடுக்கின்றனர்.

நாம் இங்கு பதாகைளுடன் எழுந்தவுடன் ஒளிப்பதிவு நிறுத்தப்படுகின்றது. பதாகைகளை பிடித்தால் நீங்கள் உடனடியாக இது புலிகளுக்கான அஞ்சலி என பிரசாரம் செய்கின்றீர்கள் .

சிறுபான்மையினர் ஒதுக்கப்படுவது மட்டுமன்றி அவர்களின் பிரதிநிதிகள் கூட பாராளுமன்றத்தில் ஒதுக்கப்படுகின்றனர். அவர்கள் தமது பேச்சு சுதந்திரத்திலிருந்து ,கருத்து சுதந்திரத்திலிருந்து மறுக்கப்படுகின்றார்கள் .தடுக்கப்படுகின்றார்கள் . இதற்கும் எமக்கு நீதி வேண்டும்.

தமது காணாமல் போன் உறவுகளுக்காக 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி அந்த மக்கள் வீதிகளில் தொடங்கிய போராட்டம் இன்று 2000 நாட்களைக்கடந்து 121 பெற்றோரை இழந்து முன்னெடுக்கப்படுகின்றது.

அந்த போராட்டத்த்துக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பாகிய நாங்கள் இந்த சபையில் முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய 121 பெற்றோர் ,உறவுகள், போராட்டக்களத்தில் இருந்தவர்கள் நோய்வாய்ப்பட்டு ,வயது முதிர்ச்சியினால் மரணித்துள்ளனர்.

இந்த மரணங்களை சாதாரணமாக விட்டுவிட முடியது. இந்த மரனனக்ளும் இந்த அரசினுடைய படுகொலைப் பட்டியலில் வரவேண்டிய விடயம். அவர்கள் மரணிக்கவில்லை. கொல்லப்பட்டார்கள். அவர்களை வீதிகளில் இறங்கி போராட வைத்து இந்த அரசு கொன்றுள்ளது. இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

வீரமுனை படுகொலை நினைவேந்தல் தினம் இன்று அனுஸ்டிப்பு

அம்பாறை மாவட்டம் வீரமுனை பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான படுகொலை தினத்தின் 32 வது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்று வீரமுனையில் இடம்பெற்றது.

வீரமுனை பிரதேச இந்து ஆலயம் ஒன்றிற்குள் புகுந்து இராணுவத்தினர் நடத்திய இனவெறி தாக்குதலில் 55 பேர் அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர்.

உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையிலும் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் இன்று 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

அம்பாறை அகம் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசறில் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்துவதாக இதன்போது கி. ஜெயசறில் தெரிவித்துள்ளார்.

இருப்பிடமின்றி நாடு நாடாக அலைகின்றார் கோட்டாபய:சஜித் கிண்டல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்தனர் என்று வீராப்புப் பேசி வந்த கோட்டாபய ராஜபக்ச இறுதியில் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி இருப்பிடம் இல்லாமல் ஒவ்வொரு நாடு நாடாக அலைகின்றார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”இம்மாதம் நேற்று(11) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இலங்கை வருவார் என்றும், அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்குரிய சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்த ‘மொட்டு’ அணியினர் வாயடைத்து நிற்க, கோட்டாபய தாய்லாந்து நாட்டின் காலடியில் தற்போது விழுந்துள்ளார்.

அங்கும் அவர் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்க முடியாது. அவர் இனி எந்த நாட்டின் காலடியில் விழப்போகின்றார் என்பதை மொட்டுக் கட்சியினரிடம் கேட்க விரும்புகின்றேன்.

நாட்டைவிட்டு ஓடிய கோட்டாபய, இனி நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் மீண்டும் இலங்கை வந்தால் மென்மேலும் அவமானங்களைச் சந்திக்க வேண்டி வரும். மக்களை வாட்டி வதைத்த கோட்டாபய, இன்று உலக அரங்கில் அவமானப்பட்டு நிற்கின்றார்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச சிங்கப்பூரில் இருந்து வெளியேறி தாய்லாந்தை சென்றடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

சிங்கப்பூரில் சுமார் ஒரு மாத காலம் வரை தங்கியிருந்த அவர் நேற்று(11) மாலை சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து நேரப்படி நேற்று மாலை எட்டு மணியளவில் அவர் அங்கு சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் அவர் தங்கியிருப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ராஜதந்திர கடவுச்சீட்டு அடிப்படையில் 90 நாட்கள் அந்நாட்டில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கோட்டா கோ கமயிலிருந்த எஞ்சிய கூடாரங்களும் அகற்றம்!

கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் மற்றும் நிர்மாணங்கள் என்பன இன்றைய தினம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் இணைந்தே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

கொழும்பு, காலிமுகத்திடல் கோட்டா கோ கமயில் இருந்து வெளியேறுவதாக கடந்த 3 மாதங்களாக போராடி வந்த போராட்டக்காரர்கள் கடந்த 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் கொட்டகைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானங்களும் படிப்படியாக அகற்றப்பட்டு வந்தன.

எஞ்சிய சில நிர்மாணங்களில் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையிலேயே, இன்று அவை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

அதேநேரம், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளரான தானிஸ் அலி உள்ளிட்ட நான்கு பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி வரை குறித்த நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

உறவுகளின் தொடர்போராட்டத்திற்கு இன்றுடன் 2000 நாட்கள்- கிளிநொச்சியில் மாபெரும் போராட்டமும் முன்னெடுப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினாலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்கவேண்டும் என்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கவனயீர்ப்புப்போராட்டமானது பேரணியாகச்சென்று டிப்போ சந்தியில் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பேரணியின் நிறைவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் கிளைக்காரியாலயத்தில் ஊடாக ஐ.நா வதிவிடப்பிரதிநிதிக்கான மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பாகிஸ்தானின் தைமூர் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்காக சீனாவில் இருந்து தனது முதல் பயணத்தை ஆரம்பித்த தைமூர் போர்க்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பல் எதிர்வரும் 15 ஆம் திகதி பாகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளது.

தைமூர் யுத்தக் கப்பல் இலங்கைக்கு வருகை தருகின்றமை தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானித்திருந்தது.

தமது நாட்டின் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு பங்களாதேஷ் மறுப்பு தெரிவித்ததன் காரணமாகவே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை நோக்கி திருப்பப்பட்டது.

Posted in Uncategorized

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த வௌிநாட்டு யுவதி மனு தாக்கல்

இலங்கையில் இருந்து வெளியேற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை செல்லுப்படியற்றது என உத்தரவிடுமாறு கோரி பிரித்தானிய பிரஜையான ஸ்கொட்லாந்து யுவதி கெலின் பிரேஷர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

காலிமுகத்திடலில் நடைபெற்ற கோட்டா கோ கம போராட்டத்தில் தான் செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பு வழங்கியதாக மனுதாரர் மனுவில் கூறியுள்ளார்.

இதன் பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தனக்கு வழங்கப்பட்டிருந்த விசா அனுமதியை தன்னிச்சையாக இரத்துச் செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வித நியாயமான அடிப்படைகளும் இன்றி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள இந்த தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து, அதனை செல்லுப்படியற்றது என அறிவித்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றில் கோரியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாப்பரசர் 400 லட்சம் வழங்கினார்!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு, பாப்பரசர் 400 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் தேசிய மக்கள் தொடர்பாளர் பிரிவின் பணிப்பாளர் அருட் தந்தை ஜுட் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவி, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையிடம் கையளித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கடந்த பெப்ரவரி மாதம் வத்திகானுக்கு சென்ற மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையிடம், ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை தான் பாதுகாப்பதாக பாப்பரசர் உறுதியளித்துள்ளார்.

இந்த திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாப்பரசரினால், ஒரு லட்சம் யூரோக்கள் (400 லட்சம் ரூபா) வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளைய தினம் கட்டுவாபிட்டிய தேவாலயத்திலும், நாளை மறுதினம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலும் நட்டஈடு வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கும், தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுவருவோருக்கும், உபாதைக்குள்ளாகியுள்ளோருக்கும் இந்த தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.