வலி கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றன.

சனிக்கிழமை காலை(26-7-25) பிரதேச சபை முன்றலில் கறுப்பு யூலை இன அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை கொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளையும் நினைந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுஈகைச் சுடரினை தவிசாளர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அஞ்சலிச் சுடர் விளக்குகளை ஏற்றி வைத்த்து அஞ்சலித்தனர்.

இவ் அஞ்சலி நிகழ்வில் கருத்துரைத்த தவிசாளர் தியாகராஜா நிரோஷ;, மாறி மாறி ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றன எனினும் இலங்கை அரச கொள்கை தமிழ் மக்களுக்கான நீதியை வழங்க முடியாத ஒன்றாகக் காணப்படுவதனாலும் அரச இயந்திரமும் மக்கள் சமூகமும் இனவாதமயப்படுத்தப்பட்டுள்ளமையின் விளைவினாலும் தமிழ் மக்களுக்கான நீதி பொறுப்புக்கூறல் கிட்டவில்லை. நாம் வரலாற்று ரீதியாக ஏமாற்றப்பட்ட நிலையில் சர்வதேச நீதி ஒன்றே எமக்குத் தீர்வாகும் என்பதை முன்வைக்கின்றோம்.

கறுப்பு யூலை கலவரத்தின் போது அரச அனுசரணையில், ஊக்குவிப்பில், பங்கேற்பில், முன்னெடுப்பிலேயே சகல படுகொலைகளும் தமிழ் மக்கள் மீதான பாரதூரமான மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றன. வாக்காளர் இடாப்பில் தமிழர்களைத் தேடி அழிக்கும் முயற்சியை கச்சிதமாக மேற்கொண்டனர். மூவாயிரம் தமிழர்கள் வரையில் குத்தியும் உயிருடன் எரியூட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமான பொருளாதார அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. அரசின் சிறைச்சாலைக்கதவுகள் திறந்து விடப்பட்டு அண்ணன் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உள்ளிட்ட 54 அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். எவற்றுக்குமே நீதி கிட்டவில்லை என தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் இரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் உறுப்பினர்களும் தமது கண்டனங்களையும் கருத்தக்களையும் முன்வைத்தனர்.

Posted in Uncategorized

கறுப்பு யூலைக்கு பொறுப்புக்கூறலை மடைமாற்றும் ஜே.வி.பி.யின் செயற்பாடே சகோதரத்துவ தினம் – தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன என்ற உண்மையையும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என்ற கடப்பாட்டினையும் மூடி மறைக்கும் செயலாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பியின் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கம் சகோதரத்துவ நாளாக கறுப்பு யூலை நிகழ்வுகளை மடைமாற்றம் செய்ய எத்தனிக்கின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழ் மக்கள் அடையாளப்படுத்தப்பட்டு தேடியளிக்கப்பட்ட கறுப்பு யூலை நினைவுகளின் 42 ஆவது ஆண்டினை உணர்வுபூர்வமாக எமது இனம் அனுஸ்டிக்கின்றது. கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 54 அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களை வாக்காளர் பட்டியலுடன் தேடிச் சென்று மூவாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களை உயிருடன் தீயில் இட்டும் இதர கொடூரங்களுக்கள்ளாகவும் கொன்றழித்தனர். ஒன்றரை இலட்சம் பேர் வீடற்றவர் ஆயினர். 8 ஆயிரம் வீடுகளும் 5 ஆயிரம் வணிக நிறுவனங்களும் கொள்ளையிடப்பட்டன. அழிக்கப்பட்டன.

இக்காலகட்டத்தில் 300 மில்லியன் டெலர்கள் அழிக்கப்பட்டன. இதனை பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையம் தமிழருக்கு எதிரான திட்டமிட்ட இனப் படுகொலை என விபரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ் இனப்படுகொலையை அரச இயந்திரமே தகவமைத்து வழிப்படுத்தியது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ளன.

இவ்வாறாக நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றமைக்கு பொறுப்புக் கூறல் எதையும் முன்வைக்காமல் அத் தேவையினை போர்த்திமூடிவிடும் உத்தியுடன் இன்றைய அரசாங்கம் நிதானமாகச் செயற்படுகின்றது. இப்படுகொலைகளுக்கு ஜே.வி.பியும் பொறுப்புடையது. ஆதலால் அரசாங்கத்தின் மாணவர் அமைப்பான ஜே.வி.பி தலைமைச் செயலகத்திற்குள்ளேயே இயங்கும் உத்தியோகபூர்வ இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் அமைப்பு ஊடாக அரச அனுசரணையுடன் இன்றைய நாளை சகோதரத்துவ நாள் பிரகடனப்படுத்தப்படுகின்றது. இதற்காக யாழில் அரச வளங்கள் ஈடுபடுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையினையும் அதற்கான பொறுப்புக்கூறலையும் திட்டமிட்டு மறைக்கின்ற இல்லாமலாக்குகின்ற முயற்சியாகும். இதனை நாம் கண்டிக்கின்றோம். ராஜபக்சாக்களை ஒத்ததாக இன்றைய அரசாங்கம் மென்வலு அணுகுமுறையில் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்ற வழிப்புணர்வை ஏற்படுத்துகின்றோம்.

தமிழருக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை அதற்கு தாமதமற்ற சர்வதேச நீதி வேண்டும் – வலி கிழக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்

இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை எனவும் அவ் இனப்படுகொலைக்கு இலங்கை அரசு காரணம் என்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் முற்றிலும் எமது மக்களும் நாமும் நம்பிக்கை இழந்துள்ளோம். இவ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ் அம்ர்வில் ரெலோ வின் தலைமை குழு உறுப்பினர், தவிசாளர் தியாகராஜா நிரோஸினால் இத் தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது, அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் உறுப்பினர்களின் வரவேற்பினைப் பெற்று தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தினை முன்வைத்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உரையாற்றுகையில்,

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் வரலாற்று ரீதியில் நாம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். எம் மீதான இனப்படுகொலை அரச கொள்கையாக இடம்பெற்றுள்ளது. எமது பூர்வீக தாயகமான வடக்குக் கிழக்கில் நிலங்கள் திட்டமிடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பௌத்த சிங்கள பேரினவாத விஸ்தரிப்பு முயற்சியாக எமது மொழி உரிமை மறுக்கப்பட்டது. தமிழ் மக்கள் என்ற காரணத்திற்காக சொந்த மண்ணிலேயே அரச ஒத்துழைப்போடும் அனுசரனையோடும் ஏவுதலோடும் வன்செயல்கள் வாயிலாகவும் இராணுவ நடவடிக்கைகள் வாயிலாகவும் சுதந்திரத்திற்குப் பின் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டனர். தமிழர்களைக் கொன்றால் குற்றமில்லை என்ற ஆட்சியாளர்களின் உத்தியோகப்பற்றற்ற ஆதரவு அரசினால் அளிக்கப்பட்டது. தமிழ் மக்கள் மீது முடுக்கிவிடப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு தண்டனைகளில் இருந்து விலத்தளிக்கப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை.

தமிழ் பெண்கள் அரச படைகளால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்டனர். இதற்கு செம்மணி தக்க சான்று. இன்றும் மீட்கப்படும் புதைகுழிகள் மீது சர்வதேச விசாரணை அமையுமாயின் பல உண்மைகளை அவை வெளிப்படுத்தும். தமிழ் இனமாகப் பிறந்தார்கள் என்ற அடிப்படையில் எமது கல்வி உரிமை வரலாற்றில் மறுக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற சர்வதேசத்தினால் காட்டுமுராண்டிச் சட்டம் என இனங்காணப்பட்ட சட்டங்கள் வாயிலாக ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பல தசாப்தங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றும் அரசியல் கைதிகளாக மீதமுள்ளவர்கள் விடுதலைக்காக ஏங்குகின்றனர். அரச படைகளால் வலோத்காரமாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்களது விடுதலையை கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் தெருக்களில் வருடக்கணக்கில் போராடிக்கொண்டு இருக்கின்றனர். சிறுவர்கள் பாடசாலை வளாகங்களுக்குள் வைத்தே அரச படைகளால் குண்டுகள் வீசப்பட்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவமயமாக்கத்தினுடாக பௌத்த சிங்கள பேரினவாதம் காலத்திற்குக் காலம் தமிழ் மக்களின் பூர்வீக தாயகத்தில் விஸ்தரிக்கப்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் எவ்வித சட்ட ரீதியான அணுகுமுறைகளும் இன்றி இராணுவ அதிகாரம் கொண்டு கையகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றும் பல நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகம் திட்டமிட்ட அரச தாபனங்கள் ஊடாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் போர்க்காலத்திலும் போருக்குப் பின்னும் பல மனிதப் புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு ஏராளமான எழும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு உள்நாட்டில் நீதி கிடைக்கவில்லை. இறுதி யுத்தத்திலும் ஏனைய யுத்தத்திலும் போர்த் தர்மங்களையும் உலக நியதிகளையும் மனித உரிமைகளையும் மீறி அரசு செயற்பட்டுள்ளது. வகைதொகையின்றி இலட்சக்கணக்கில் மக்களை படுகொலை செய்துள்ளது.

உள்நாட்டில் உண்மைகளை கண்டறிந்து நீதியை வழங்க போதிய பொறிமுறைகளும் ஏற்புடைமையும் இன்றைய அரசிடமும் கிடையாது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கங்களும் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அடக்குவதையும் நீதியை வழங்குவதாக சர்வதேசத்திடம் பொய்யான உத்தரவாதங்களை வழங்கி தமிழருக்கான நீதியை காலந்தாழ்த்தும் உத்திகளிலேயே அரசு கவனம் செலுத்துகின்றது. காலந்தாழ்த்துதல் ஊடாக எமது நீதிக்கேரிக்கைஇ மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைஇ இனப்பிரச்சினைத்தீர்வு ஆகியவற்றை நீர்த்துப்போகச் செய்யும். தந்திரோபாயத்தினை இலங்கை கொண்டுள்ளது.

எமது இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம், வரலாறு, அடையாளம் அனைத்தும் திட்டமிடப்பட்டு உள்நாட்டில் அழிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் எம் மீது இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி ஒன்றே தீர்வைப் பெற்றுத்தரும் என்பதை அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் ஆணைக்குரிய இவ் உயரிய மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூர் ஆட்சி மன்றில் தீர்மானமாக எடுக்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இலங்கையில் இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒழிக்க சமஸ்டி அரசியலமைப்பே அவசியம் ரெலோ யாழ் மாவட்ட தலைவர் சபா குகதாஸ்

இலங்கையில் இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒழிக்க சமஸ்டி அரசியலமைப்பே அவசியம் என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் கரையோர வர்த்தகர்களை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க கூறிய விடையம் இலங்கையில் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழித்தால் தான் நாடு முன்னோக்கி செல்லும் யதார்த்த பூர்வமாக இருந்தாலும் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழிப்பதற்கான வழியை அனுர சட்டரீதியாக குறிப்பிடவில்லை.

உண்மையாக பல்லின மக்கள் வாழும் நாடுகளில் சமஸ்டி அடிப்படையிலான அரசியல் அமைப்பே அந்த நாடுகளில் இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற அமைதியான நாடுகளாக முன்னோக்கி செல்ல மாத்திரமல்ல அபிவிருத்தி அடைந்த நாடுகளாகவும் மாற வழி திறந்தது.

இலங்கையில் பல்லினங்கள் வாழும் நாடு அவ்வாறு இருக்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மூலம் ஒரு இனத்திற்கு சார்பான அதிகாரங்கள் மேலோங்கி இருக்கும் போது ஏனைய தேசிய இனங்கள் நசுக்கப்படுவதற்கு அப்பால் அதிகார மேலாதிக்கம் கொண்ட இனத்தின் மூலமே இனவாதமும் மதவாதமும் கட்டவிழ்க்கப்படுகிறது.

ஆகவே ஆட்சியாளர்களும் ஆட்சிக்கு வரத் துடிப்பவர்களுமே இனவாதம் மற்றும் மதவாதங்களை தங்கள் மறைமுக நிகழ்ச்சி நிரலாக செயற்படுத்தியுள்ளனர் தற்போதும் செயற்படுத்துகின்றனர் எனவே இலங்கைத் தீவில் இனவாதம் மற்றும் மதவாதத்தை அடியோடு இல்லாது ஒழித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஒரே ஒரு வழிதான் உள்ளது நாட்டின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நீக்கி சமஸ்டி அடிப்படையிலான அரசியலமைப்பாக மாற்ற வேண்டும்.

இதனை பகிரங்க வெளியில் தொடர்ந்து அனுரகுமார திஸநாயக்காவால் கூற முடியுமா?

தமிழினத்தை மண்ணுக்குள் கொன்று முடக்கிய இராணுவத்தினர்: அஞ்சி ஒதுங்கும் அநுர

சர்வதேச மட்டத்திலும், இலங்கையில் தென்னிலங்கை மற்றும் மலையக தரப்புக்களிலும் செம்மணி விவகாரம் பாரிய பேசுபொருளாக மாறி இருப்பினும் இலங்கை அரசாங்கம் வாய் திறக்காமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியையும் அரசின் மீதான நம்பகத்தன்மையையும் கேள்வி குறியாக்கியுள்ளது.

நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்தவை இனப்படுகொலை இல்லை என காலம் காலமாக இலங்கை அரசு தெரிவித்து வந்த நிலையில், தற்போது எலும்புக்கூடுகள் கொத்து கொத்தாக கண்டுபிடிக்கப்பட்டு நடந்தது இனப்படுகொலைதான் எனவும் அதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் உருவாக்கியுள்ளது.

இருப்பினும், இதற்கு காரணமான சூத்திரதாரிகளை காப்பாற்றுவதில் அன்றைய அரசாங்கம் தொட்டு தற்போதைய அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசாங்கம் வரை மிகவும் கவனமாக உள்ளனர்.

நாட்டில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கும் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கும் நீதி வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்து இருந்த அநுர தற்போது அதற்கு காரணமான இராணுவத்தினரை காப்பாற்ற முற்படுவது என்பது அவர்கள் மீதான பயத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பிலும், செம்மணி விவகாரத்தில் அநுர அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வு, தமிழ் மக்களின் கோரிக்கை, இவ்வாறு மக்கள் கொல்லப்பட்டமைக்கு காரணமான இராணுவத்தினரின் அடுத்த கட்டம், சர்வதேச நகர்வு மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும்,வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளரும் வடக்கு மனித உரிமைகள் நிலையத்தின் முக்கியஸ்தருமாகிய தியாகராஜா நிரோஸ் தெரிவித்த மேலதிக கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,

Posted in Uncategorized

தென்னிலங்கையை சீனாவுக்கு கொடுங்கள் வடக்கு கிழக்கை இந்தியாவிடம் கொடுங்கள் -ரெலோ தலைவர் செல்வம்

தென்னிலங்கையை சீனாவுக்கு கொடுங்கள். வடக்கு மற்றும் கிழக்கை இந்தியாவிடம் கொடுங்கள். நாங்கள் அதனைப் பார்த்துக் கொள்வோம். பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு உதவி கரம் நீட்டியதை மறந்து விட்டு இந்தியாவுக்கு எதிராக பேச கூடாது என ரெலோ கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுலாத்துறையை விஸ்தரிக்க முடியும் வெளிநாட்டு பறவைகள் மன்னாரில் தான் தங்குகின்றன எனவே மன்னாரில் சுற்றுலா துறையை ஊக்குவிக்க முடியும் . அதனை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.

இந்தியாவின் புரிந்துணர்வு ஒப்பந்தம் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார். அவர் கடற்படையில் ரொட்டி சுட்டவர் போலுள்ளது. எங்களைப் பொறுத்த வரையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது இந்தியா இலங்கைக்கு உதவி கரம் நீட்டியது. இந்தியா கொடுத்த பணத்தில் சரத் வீரசேகர உடம்பை வளர்த்து விட்டு இப்போது இந்தியாவுக்கு எதிராகப் பேசுகின்றார்.

எங்களைப் பொறுத்த வரையில் நாம் சொல்கின்றோம் தென்னிலங்கையை நீங்கள் சீனாவுக்கு கொடுங்கள். வடக்கு மற்றும் கிழக்கை இந்தியாவிடம் விடுங்கள்.நாங்கள் அதனைப் பார்த்துக் கொள்வோம். இந்தியாவை பகைத்துக் கொண்டு இலங்கையால் ஒரு போதுமே செயற்பட முடியாது. இலங்கையின் நலன் விரும்பியாகவே இந்தியா உள்ளது என்றார்.

Posted in Uncategorized

காணி அபகரிப்புகள் இந்த அரசு மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் ரெலோ தலைவர் செல்வம்

“வடக்கு மற்றும் கிழக்கில் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டாலும் முப்படையினர் பல்வேறு வழிகளில் காணி அபகரிப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். அரசு ஓர் கொள்கையில் இருக்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் முப்படையினரும், பொலிஸாரும் பிறிதொரு கொள்கையில் செயற்படுகின்றார்கள். மாறுபட்ட கொள்கைகளால் அரசின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்” என்று ரெலோ கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, “எமது மக்களிடம் இருப்பதை தக்கவைத்துக் கொள்வதற்காக நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகள் பல்வேறு வழிகளில் நில அபகரிப்பில் ஈடுபடுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுக் காணிகளில் உள்ள மரக் கிளையை தமிழர் ஒருவர் வெட்டினால் அவர் கைது செய்யப்பட்டு, அவர் சிறைக்குச் செல்ல நேரிடும். ஆனால், வடக்கில் மகாவலி வலயத்துக்குட்பட்ட 600 ஏக்கர் காணியைப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமான முறையில் வெற்றிடமாக்கியுள்ளார்.

வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள காணி ஒன்றைப் பொலிஸார் துப்பரவு செய்துள்ளனர். காணி அபகரிப்பு நிறுத்தப்படும், காணி விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். ஆனால் பொலிஸார், முப்படையினர் காணி அபகரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றார்கள்” என்றார்.

இதன்போது எழுந்து கருத்துரைத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, “ஓமந்தை பொலிஸ் நிலையம் தொடர்பில் இன்று காலையில் அறிந்தேன். இந்த விடயம் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தேன். அந்தக் காணி துப்பரவு செய்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., “மிக்க நன்றி. அரசு ஒரு கொள்கையில் செயற்பட்டாலும், வடக்கு மற்றும் கிழக்கில் முப்படையினரும், பொலிஸாரும் பிறிதொரு கொள்கையில் செயற்படுகின்றார்கள். இவ்வாறான மாறுபட்ட கொள்கையினால் அரசின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும் என்பதைக் குறிப்பிட்டுக் கொள்கின்றேன்.

மகாவலி வலயத்துக்குட்பட்ட காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்” என்றார்.

இதன்போது எழுந்து கருத்துரைத்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “600 ஏக்கர் அல்ல 46 ஏக்கர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர்தான் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியை அழித்துள்ளார். மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அந்த நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, இந்தச் சம்பவத்துக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், “மன்னார் மாவட்டத்தில் பல்வேறு வழிகளில் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அண்மையில் மன்னாரில் பொதுக் காணிகள் துளையிட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும்” என்றார்.

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்தனர் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (1) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஞானப்பிரகாசம் பிரேம் குமார், வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், மன்னார் நகர சபை உறுப்பினர் செபமாலை ஆரோக்கியநாதன் பிகிறாடோ, மன்னார் பிரதேச சபை உறுப்பினர் றொயிட்டன் சாந்தினி குரூஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல், காங்கேசன்துறையில் கப்பல் கட்டுவதற்கு சிறிய நிலையம் ஒன்றை அமைத்தல், மன்னாரில் நவீன முறையில் விளையாட்டு மைதானம் அமைத்தல், மாந்தை மேற்கில் உள்ளக விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்தல், மன்னார் பிரதேச சபை பிரிவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தேவையான உதவிகள் போன்றவற்றை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போது தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோளை இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி ஏற்றுக்கொண்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப்படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம்

செம்மணி மனிதப் புதைகுழியை கொச்சைப் படுத்தியவர்களுக்கு முகத்தில் அறைந்த ஆதாரம் வெளிவருவதாக ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இழிவு படுத்தி ஊடகங்களில் கதறிய சிங்கள இனவாதிகளுக்கும் கடந்த காலத்தில் பேரினவாத அரசுகளை மீட்டு கொடுத்த தமிழ்க் குழுக்களும் மனிதப் புதைகுழியில் உள்ள எலும்புக் கூடுகள் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸார் உடையது எனவும், அத்துடன் சகோதர இயக்கங்களின் உறுப்பினர்களை படுகொலை செய்து புதைத்தவர்களினதும் என ஆதாரம் அற்ற குற்றச் சாட்டுக்களை முன் வைத்தனர்.

செம்மணிப் மனிதப் புதைகுழி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஊடகத்தின் முன்னால் பொய்யுரைக்கும் போது செம்மணி புதைகுழியில் தாயும் கைக்குழந்தையும் கட்டியணைத்தபடியான எலும்புக் கூடு மற்றும் பத்து வயதிற்கு குறைந்த குழந்தைகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மிகப் பெரும் உண்மையை திசை திருப்ப முனைந்த இனவாதிகளுக்கும் கோடரிக் காம்புகளுக்கும் முகத்தில் அறைந்தது போல் ஆதாரம் பதில் வழங்கியுள்ளது.

செம்மணிப் பகுதியில் புதைகுழி ஏற்படுத்தப்பட்ட சம காலத்தில் அப்பகுதி இராணுவமுகாமில் இருந்த சிப்பாய்கள் சாட்சியாக இருக்கும் போது கடந்த கால அரசுகளின் கைக்கூலிகளும் தென்னிலங்கை இனவாதிகளும் யாரைக் காப்பாற்ற செம்மணிப் மனிதப் புதைகுழி விவகாரத்தை திசை திருப்ப முனைகின்றனர் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Posted in Uncategorized

தண்ணிரூற்று பொதுச் சந்தை இருப்பினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் – கமல விஜிந்தன்

கரைதுறைபற்று பிரதேச சபை உங்களிடம் அவசர வேண்டுதல் தண்ணிரூற்று பொதுச் சந்தை தொடர்பான மிக அவசியமான விடயங்களை பல நாட்கள் அவதானிப்பின் பின் உடனடி தீர்வுக்காக இதனை முன்வைக்கின்றேன் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் கரைதுறைபற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கமல விஜிந்தன்

01-தண்ணிரூற்று பொதுச்சந்தையின் நுழைவாயில் பகுதி எந்தவிதமான அச்சறக்கையும் இல்லாமல் திறந்த வெளியாக காணப்படுகின்றது இதனால் இரவு நேரங்களில் கால்நடைகள் குறிப்பாக மாடுகள் தங்கு பட்டியாக மாறுகின்றது இதனால் வியாபாரிகள் பெரும் அசௌரியங்களை எதிர்கொள்கின்றார்கள் இதனை நேரடியாகவும் அவதானித்தேன் அவர்கள் என்னை அழைத்தும் பேசியிருந்தார்கள் எனவே அவர்களுடைய கோரிக்கையையும் உங்களுடைய கடமைகளையும் கருத்தில் கொண்டு உடனடியாக அதனை அச்சறக்கை செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் .

02- சந்தையினுள் நுழைவதற்கான பாதை மிகவும் சரியான முறையில் அல்லது இலகுவான முறையில் நுழையக் கூடியதாக இல்லை இதனை உடனடியாக RDA உடன் தொடர்பு கொண்டு அந்த உள் நுழையும் பாதையினை சீர் செய்து கொடுப்பதன் ஊடாக வியாபார நடவடிக்கைக்கும் பயனாளிகளுடைய போக்குவரத்துக்கும் இலகுவாக அமையும் இதனை RDA உடன் தொடர்புகொள்ளும் பட்சத்தில் ஒரு சில நாட்களுக்குள்ளேயே செய்து முடிக்க முடியும் இதனையும் தாங்கள் உடனடியாக கவனத்தில் கொள்ளவும்

03- விரைவில் மின்னொழுக்கு ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது அதனையும் சீர் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும்

04- மிகவும் கவலைக்குரிய விடயம் தண்ணிரூற்று பொதுச்சந்தையானது மிக விரைவில் மூடு விழாவை காண்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது அது தற்போது மேலும் வலுப்பெற்று இருக்கிறது இந்த விடயத்தை நீங்கள் யாவரும் அறிந்தது இதற்கான தீர்வுக்கு பல வழிகள் உண்டு அதனுடாக தீர்வை நோக்கி நகர்ந்து நீண்ட வரலாறுகளைக் கொண்ட மிக முக்கியமான வருமானம் மூலமாக இருந்த தண்ணிரூற்று பொதுச்சந்தையினை அதன் இருப்பினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும்.

பொது நலன்களுடன்
கமல விஜிந்தன்