யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட்டார் தமிழக பாஜக கட்சி தலைவர்

யாழில் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்டார் பாஜக அண்ணாமலை

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை இன்று காலை 10 30 மணியளவில் இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்டார்.

இதன்போது கலாச்சார மத்திய நிலையத்தின் அமைக்கப்பட்டிருக்கின்றன விசேட வசதிகள் தொடர்பாகவும் அதன் திறன்கள் தொடர்பாகவும் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் விளக்கம் அளித்தார்.

இதன்போது தமிழக பாஜக மாநில தலைவர் கு.அண்ணாமலை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வெற்றிக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டன – கொழும்பு பேராயர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான தகவல்களை அறிந்திருந்தும் தேர்தல் வெற்றிக்காக அவை மறைக்கப்பட்டதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் நேற்று(01) இடம்பெற்ற விசேட ஆராதனையொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிபோதே கர்தினால் ஆண்டகை இதனைக் கூறினார்.

இந்த விசேட ஆராதனையில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆயர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய மே தினக் கூட்டம் – மக்கள் அலையால் நிரம்பியது சுதந்திர சதுக்கம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் ஏற்பாடு செய்திருந்த மே தினக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு – கெம்பல் பார்க் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி ஆரம்பமானது.

பின்னர் அங்கிரருந்து பொரளை சென்று , பொரளையிலிருந்து கொழும்பு – தேசிய வைத்தியசாலை சந்தியூடாக தாமரை தடாக பிரதேசத்தைக் கடந்து சுதந்திர சதுக்கம் வரை பேரணி சென்றது. ‘சுதந்திரத்திற்கான போராட்டம்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகளான மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவுப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்ரஸ் என்பனவும் , அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்களும் இதில் கலந்து கொண்டன.

ஆயிரக்கணக்கான மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டமையால் சுதந்திர சதுக்கத்திற்குச் செல்லும் வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பின.

இதனால் இன்று மாலை 4 மணியின் பின்னர் அவ்வழியூடான சகல போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்தது. பாரிய மக்கள் கூட்டம் காணப்பட்டமையால் அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

’74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ – 3 மாவட்டங்களில் ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ’74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் 3 பிரதான மாவட்டங்களில் மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

அதற்கமைய முதலாவது கூட்டம் மாத்தறை மாவட்டத்தில் இடம்பெற்றது. ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது. இதே வேளை அநுராதபுரம் மாவட்டத்தில் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையில் இடம்பெற்றது.

ஜே.வி.பி.யின் பிரதான கூட்டம் கொழும்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. கொழும்பு – மாளிகாவத்தை பகுதியிலிருந்து பேரணியாக புறக்கோட்டை புகையிரத நிலையம் வரை சென்று அங்கு கூட்டம் இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனா ஒத்துழைக்காவிடின் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு கேள்விக்குறியாகலாம் – இலங்கைக்கு எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடியும் மேலோங்கியுள்ளது. இதனால் உண்மையான பொருளாதார பிரச்சினைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன.

இந்திய நிதியுதவிகள் மே மாதத்துடன் முடிவடைகின்றமையால் நாட்டின் உண்மையான பிரச்சினைகள் இனிமேல் தான் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறிப்பாக எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் இலங்கை எதிர்கொண்டுள்ள கடும் நெருக்கடிகளே எதிர்வரக் கூடிய பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமாகும்.

எனவே, இலங்கையின் இறுதி எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் சீன கடன்களை மீள செலுத்துவதற்கான திட்டம் குறித்து பீஜிங்குடன் கொழும்பு அவசரமாக கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும் என நட்பு நாடுகள் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளன.

குறிப்பாக எரிபொருள் கொள்வனவிற்காக இந்திய நிதி உதவிகளாக 1.5 பில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தியாவிடமிருந்து கோரப்பட்ட எரிபொருளுக்கான சலுகைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

எஞ்சியிருப்பது உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான கோரிக்கையாகும். சுமார் 200 மில்லியன் டொலர் பெறுமதியான உரத்தை இந்தியா இன்னும் ஓரிரு வாரங்களில் அனுப்பி வைக்கவுள்ளது.

அதே போன்று தமிழ் நாட்டு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் பால்மாவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் தமிழ் நாடு அரசுடனோ மத்திய அரசுடனோ பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை. அவ்வாறு இலங்கை தனது நெருக்கடிகளை உணர்ந்து தமிழ்நாட்டிடம் கோரிக்கை விடும் பட்சத்தில் அந்த பொருட்களை அனுப்புவதற்கு மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

மேலும் இரத்த வங்கிகளுக்கு தேவைப்படுகின்ற இரத்த பாதுகாப்பு பைகளையும் இலங்கைக்கு வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. அதேபோன்று உலக வங்கியினால் கொவிட் நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியை தற்போதைய மருந்து நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் எஞ்சிய அந்த நிதியை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர இந்தியாவிடமிருந்தோ ஏனைய நாடுகளிடமிருந்தோ அத்தியாவசிய பொருட்களுக்கான கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் கலந்துரையாடியதாக தெரியவில்லை.

ஏனெனில் இலங்கையின் இறுதி நம்பிக்கையாகியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு கடனை மீள செலுத்தும் இயலுமை தொடர்பான அறிக்கையை இன்னும் தயார்படுத்தவில்லை.

குறிப்பாக சீனாவுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடவில்லை. அண்மையில் ஊடக சந்திப்பை நடத்திய கொழும்பிலுள்ள சீன தூதுவர் , ‘சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்லுவதாயின் உத்தேச 2.5 பில்லியன் டொலர் கடன் உள்ளிட்ட விடயங்கள் பாதிக்கப்படலாம்.’ என குறிப்பிட்டுள்ளார்.

எனவே சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்வதை சீனா விரும்பவில்லை என்பதே உண்மை. ஆனால் சீனாவின் ஒத்துழைப்பு இன்றி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதும் சாத்தியமற்றதாகும்.

ஏனெனில் இலங்கை பெற்றுள்ள சர்வதேச கடன்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஆக்க பூர்வமான சமிஞ்ஞைகளை வெளிப்படுத்த வேண்டும். அதாவது இலங்கையின் கடன் செலுத்தும் இயலுமை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் சீனாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காமை நெருக்கடியான நிலைமையை தோற்றுவிக்கும்.

எனவே கூடிய விரைவில் பீஜிங்குடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வருவது கொழும்பை பொறுத்த வரையில் சவாலான விடயமாகும். மறுபுறம் இனி ஏற்படக் கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இலங்கையிடமிருக்கும் திட்டங்கள் குறித்து சந்தேகங்களே உள்ளன.

ரஷ்யா மற்றும் சவுதி ஊடான எரிபொருள் கொள்வனவு குறித்து முன்னெடுப்புக்கள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் காரணமாக இவ்வாறு எரிபொருளை பெற்றுக் கொள்வதும் சவால் மிக்கதாகும்.

அதே போன்று சவுதியிலிருந்து கொழும்பிற்கு வரக்கூடிய எரிபொருள் மற்றும் ஏனைய சரக்கு கப்பல்களின் வருகையையும் மட்டுப்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் கொழும்பு துறைமுகத்தில் காணப்படக் கூடிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அடிப்படை சேவைகள் தொடர்பிலான பிரச்சினைகளாகும்.

எனவே மே மாதம் என்பது இலங்கையின் மிக நெருக்கடியான நிலைமையின் ஆரம்பமாக கருதப்படுகிறது. எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் மாத்திரமே ஏற்படக் கூடிய ஏனைய பொருளாதார சவால்களை ஓரளவு முகாமைத்துவம் செய்யலாம்.

அத்தியாவசிய பொருட்களை நெருங்கிய நட்பு நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்ள முடிந்தாலும் , எரிபொருளை அவ்வாறு பெற்றுக் கொள்ள முடியாது என்பதே உண்மையாகும்.

Posted in Uncategorized

இலங்கை-அலரிமாளிகையின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் காவல்துறையினரால் அகற்றம்

இன்று அலரிமாளிகையின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக் காரர்களின் கூடாரத்தை காவல்துறையினர் அகற்றியதை தொடர்ந்து மீண்டும் அந்த பகுதியில் கூடாரங்களை அமைப்பதற்காக பெருமளவானவர்கள் அலரி மாளிகை நோக்கி பேரணியாக செல்கின்றனர்.

இதையடுத்து வீதியோரத்தில் மேடை அமைக்க போராட்டக்காரர்கள் நடவடிக்கை எடுத்தனர்
இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ கம’ போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமது.

காலி முகத்திடலில் இருந்து மக்கள் குழுவொன்று அப்பகுதிக்கு வந்ததையடுத்து, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேவேளை, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் மக்கள் நடத்திய போராட்டம் இன்றுடன் 23 நாட்களை கடந்துள்ளது.

காலி முகத்திடலில் இன்று காலையிலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

Posted in Uncategorized

பேரணிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கவும் – அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்து

பேரணிகளில் கலந்துகொள்வதை தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் தங்கியுள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவுறுத்தலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், “இன்று உழைப்பாளர் தினம் என்பதால் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பேரணிகள் அமைதியாக நடத்தப்படுகின்ற போதிலும், பாதுகாப்பு காரணிகளை முன்னிறுத்தி அவ்வாறான பேரணிகளில் கலந்துகொள்வதை தவிர்க்கவும்” என தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

ஹனுமானைப் போல இலங்கையை சுமக்க மோடியும் தயார்

” இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று ஹனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார் என இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவரான அண்ணாமலை தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வு இன்று (1) கொட்டகலை சி.எல்.எவ்.வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையை அருகிலுள்ள நாடு, எமது சொந்தங்கள் வாழும் நாடு என இரு கோணத்தில் இந்தியா பார்க்கின்றது. அதனால்தான் நெருக்கடியான கட்டங்களில் உதவிகள் வழங்கப்படுகின்றன. உயிர் காப்பு மருந்து தேவை என்று சொன்னபோது, 107 வகையான 760 கிலோ மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம். எதிர்காலத்திலும் உதவுவோம்.

மலையக மக்களுக்கான உதவிகளும் தொடரும். நாம் வளரும் அதேவேளை, எமது தொப்புள்கொடி உறவுகளையும் வளர வைப்போம். மலையகம் கல்வியால் உயர வேண்டும். அதற்கான உதவிகளும் தொடரும்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நீண்டகாலத்துக்கானது அல்ல. விரைவில் நிலைமை மாற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று ஹனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார்.” என்றார்.

Posted in Uncategorized

ராஜபக்ஷாக்களுடனான 15 வருட உறவை இன்றுடன் முறித்துக் கொள்கின்றோம் ; மே தினக் கூட்டத்தில் இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஜீவன்

ஓரணியில் திரள்வோம், ஒற்றுமையாக இருப்போம், உரிமைகளை வெல்வோம். மீண்டெழுவோம் என அறைகூவல் விடுத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நாய்கள் குரைக்கும்போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது எனவும் சூளுரைத்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இன்று (01.05.2022) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், மேலும் தெரிவிக்கையில்,

“ நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் மக்கள் பக்கம் நின்றே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவெடுத்தது. ஆனால் எமது சமூகத்தை காட்டிக்கொடுக்கும் விதத்தில் ஒரு சிலர் செயற்படுவதால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபா என்பது எமது இலக்கல்ல என்பதை தேர்தல் காலத்திலேயே அறிவித்துவிட்டோம். கல்வியும், காணி உரிமையும்தான் பிரதான இலக்கு. அதனை அடைவதற்கே தீவிர முயற்சியில் இறங்கியுள்ளோம். எண்ணம்போல்தான் செயல் என்பார்கள், மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது கனவும்கூட.

நான் பதவிக்காக அரசியல் செய்பவன் அல்ல. மக்களுக்கானதே எனது அரசியல் பயணம். அதனால்தான் ராஜபக்ச அரசுடனான உறவை முறித்துக்கொண்டு, இன்று மக்கள் பக்கம் நிற்கின்றோம். அப்படி இருந்தும் வரலாறு தெரியாத சிலர், காங்கிரஸை விமர்சித்து வருகின்றனர்.

மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தில் இ.தொ.கா. பட்டி அணிவிக்கப்பட்டிருந்தது குறித்தும் விமர்சிக்கின்றனர். இ.தொ.கா என்பது மக்கள் இயக்கம். மக்களை பாதுகாத்த அரசியல் இயக்கம். மக்களுக்கு உரிமைகளை வென்றுக்கொடுத்த அரசியல் கட்சி. எனவே, அதை அணிவதில் சிக்கல் கிடையாது. இதற்கு ஏன் பதிலளிக்கவில்லை என சிலர் கேட்கின்றனர்.நாய்கள் குரைக்கும்போது, சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது.

எமது மக்களுக்கு நில உரிமை வேண்டும். 150 வருடங்களாக நிலமற்றவர்களாக வாழ்கின்றோம். இதனை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியாவின் உதவியும் அவசியம். அதற்கான உறவு பாலமாக அண்ணாமலை இருப்பார் என நம்புகின்றேன்.” – என்றார்.

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கை தீர்வு இல்லையெனில் பௌத்த சங்க சாசனத்தை அமுல் செய்வோம்

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் தமது சிறப்புரிமைகளை மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்க வேண்டுமென மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

இந்த அறிவிப்பில் நான்கு முக்கிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவை முழு அரசியல் பொறிமுறையினாலும் கவனிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

தீர்வு இல்லையெனில் பௌத்த சங்க சாசனத்தை அமுல் செய்வோம் எனவும் நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.