கொழும்பு – காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக காலியில் கடந்த 2 நாட்களாக தொடர் ஆரப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பொலிஸாரால் அகற்றப்பட்ட ஆர்ப்பாட்டக் காரர்களின் கூடாரங்கள் மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
காலியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பகுதிக்கு கோட்டாகோகம காலி கிளை என ஆர்ப்பாட்டக்காரர்களால் பெயரிடப்பட்டுள்ளது.
அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை பொலிஸார் இன்று காலை அகற்றிச் சென்றனர்.
இவ்விடயம் தொடர்பாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவான சட்டத்தரணிகள் அப்பிராந்தியத்தின் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இந்நிலையில், பொலிஸாரால் அகற்றிச் செல்லப்பட்ட, கூடாரங்கள் மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்களத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
தமிழ் தரப்பிடம் ஒரு வருடம் நாட்டின் ஆட்சியை தாருங்கள். இந்த நாட்டை நிமிர்த்திக் காட்டுகின்றோம் என தமிழ் ஈழ விடுதலை இயகத்தின் (ரெலோ) தலைவரும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இன்று (16) வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியாகும் தகுதி கோட்டாபாயவிற்கு இல்லை என்று எமதுமக்கள் வாக்குகள் மூலம் அன்றே ஆருடம் சொல்லியிருந்தார்கள். கோட்டாவும், மகிந்தவும் ஆயுதப் போராட்டத்தினைமௌனிக்க செய்ததாக வெற்றிவிழா கொண்டாடினார்கள். ஆனால் சர்வதேசத்தின் உதவியுடன் தான் எமது போராட்டத்தினை மௌனிக்க செய்தார்களே தவிர இவர்களது திறமையால் மௌனிக்கவில்லை என்பதை இன்று விளங்கிக்கொள்ள முடியும்.
இன்று சிங்கள மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் எமது போராட்டம் நியாயமானது என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் போராட்டக்காரர்களால் வெளிப்படையாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதனை நாம்பயன்படுத்திக்கொள்ளவேண்டும. ஈழத்தை கொடுத்திருந்தால் அது பணத்தை தந்திருக்கும் என்று முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் சொல்கிறார்.
அன்று இரத்தினபுரியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டபோது விடுதலைப்புலிகள் சிங்களமக்களிற்கு உதவிகளை வழங்கியிருந்தனர். அந்த வரலாறை நாம் மறக்க முடியாது. எனவே அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற சிந்தனை ஓட்டத்தினை நாங்கள் இன்று செய்தாக வேண்டும்.
இந்தசந்தர்ப்பத்தில் சிங்கள மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். தமிழ்தரப்பிற்கு ஆட்சியினை ஒருவருடம் வழங்குங்கள் ஒருவருடத்தில் இந்த நாட்டினை நிமிர்த்திக்காட்டுகின்றோம். தமிழ்சிங்கள மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்கும் படியாக எமது செயற்பாடு இருக்கும். அதை நாங்கள் எமது போராட்ட காலங்களில் நிரூபித்து காட்டியிருக்கின்றோம்.
ஜே.ஆர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி முறை எங்களுடைய தமிழ் பேசும் மக்களுக்கு மட்டும் தான் நெருக்குதலாக இருந்தது. அன்றில் இருந்து இன்று வரை தமிழ் பேசும் மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிறையில் வாடுகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் இன்றும் போராடுகிறார்கள். நிலங்கள் பறி போகிறது. ஒருவர் தனது அதிகாரங்கனை கூடுதலாக வைத்திருப்பதால் எங்களது செயற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சிலர் ஜனாதிபதி முறை இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்போது தான் தமிழர்களின் ஆளுமையை காட்ட முடியும். அப்போது தான் வாக்கு பெறுவதற்காக தமிழ் மக்கள் பற்றி சிந்திப்பார்கள் என்கிறார்கள். கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேன அவர்களை தமிழ் மக்களது வாக்கு தான் ஜனாதிபதியாக்கியது. அவர் என்ன செய்தார். பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை கொடுத்தார். ஆனால் அவர் தன்னுடைய அதிகாரத்தை தமிழ் மக்களுக்காக பயன்படுத்த தவறி விட்டார். கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதி ஆனந்த சுதாகரை விடுதலை செய்வதாக சொன்ன போதும் இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை. அவர் சில மாற்றங்களை கொண்டு வந்த போதும் செயல் வடிவில் எதுவும் செய்யவில்லை. தமிழர்கள் வாக்கு போட்டு ஜனாதிபதியாக வந்து அந்த கதிரையில் அமர்ந்தால் தமிழர்களை மதிக்காத நிலைமை தான் காணப்படுகின்றது. சந்திரிக்கா அம்மையார் இன்று தமிழ் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். அவர் அன்று ஜனாதிபதியாக இருந்த போது என்ன செய்தார். ஜனாதிபதி முறை என்பது தமிழ் தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான முறையாகவே இருக்கிறது.
ஆகவே நாங்கள் எல்லோரும் சேர்ந்து இந்த ஜனாதிபதி முறையை மாற்ற வேண்டும் என சிங்கள சகோதரர்களிடமும், ஆட்சியை மாற்ற நினைபவர்களிடமும் நிபந்தனை வைக்க வேண்டும். அத்துடன் சாதாரணமாக சிறைகைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, நிலங்கள் அபகரிப்பு என்பவற்றுக்கான உத்தரவாதத்தை பெறுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இதனை பயன்படுத்த வேண்டும். எழுத்து மூலத்தில் அவர்கள் செய்வதாக பெற வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஆராய இருக்கின்றோம். ஏற்கனவே நல்லாட்சியில் எங்களுக்கு கெட்ட பெயர் இருகிறது. இந்த விடயத்தில் சரியான முறையை கையாள வேண்டும். பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் பேசும் கட்சிகள் எல்லோரும் ஒன்றாக இணைந்து நிபந்தனையை விதித்து, எங்களது தேசத்தில் குறிப்பிட்ட அங்கீகாரத்தை பெறுவதன் மூலமே ஆதரவு வழங்க வேண்டும். பாராளுமன்றத்தில் இருக்கும் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும். உடனடியாக சென்று கையொப்பம் இடும் நிலை இருக்க கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று தலைவர்களும், விக்கினேஸ்வரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிகாந்தா ஆகியோர் இணைந்து ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்துள்ளோம். இந்த விடயம் மட்டுமல்லாது நான் கூறிய விடயங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். ஆட்சியாளர்களை ஏற்றுக் கொள்ள வைக்க கூடிய ஒரு சந்தர்ப்பம் இதுவாகும். வெறும் ஜனாதிபதி வீட்டே போ என்பதும், ராஜபக்ஸ குடும்பம் வீட்ட போ என்பதும் எங்களது கோரிக்கை அல்ல. ஏற்கனவே நாங்கள் இவர்களை நிராகரித்தவர்கள். எங்களது கோரிக்கைகளை யார் நிறைவேற்றுவதாக உத்தரவாதம் தருகிறார்களோ, அவர்களுடன் இணைந்து பேரம் பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களில் ஈடுப்படவில்லை.சிங்கள பௌத்த மக்களாணை மீது கைவைக்க வேண்டாம் என பௌத்த தேர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை முற்றிலும் வெறுக்கத்தக்கது எனத் தெரிவித்த ஓமல்பே சோபித தேரர் , அரச தலைவர்கள் பௌத்த அறக்கொள்கையை முறையாக பின்பற்றுவார்களாயின் நாட்டு மக்களின் கருத்துக்கும், மக்களாணைக்கும் மதிப்பளித்து முழுமையாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றினைந்து கடந்த 8 நாட்களாக காலி முகத்திடலில் முன்னெடுத்து வரும் போராட்டத்தை முடக்க அரசாங்கம் பல்வேறு மாற்று வழிமுறைகளை முன்னெடுத்து வருகிறது.
மக்களின் ஜனநாயக போராட்டத்தை சர்வாதிகார முறையில் முடக்க முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும். நாட்டு மக்கள் மதத்தையோ, இனத்தையோ முன்னிலைப்படுத்தி போராட்டத்தின் ஈடுப்படவில்லை.
நாட்டின் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தி இனம், மதம் ஆகியவற்றை துறந்து ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள வேளையில் பௌத்த தேரர்கள் என குறிப்பிட்டுக்கொண்டு அரசியல்வாதிகளுக்கு சார்பாக செயற்படும் தரப்பினர்கள் கடந்த வாரம் கொழும்பில் ‘போலியான போராட்டங்களை நம்பி சிங்கள பௌத்த மக்களாணை மீது கைவைக்க வேண்டாம்’ என குறிப்பிட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை முற்றிலும் வெறுக்கத்தக்கதாக காணப்படுவதுடன், அவர்களின் செயற்பாடு பௌத்த அறகொள்கைக்கும் முரணானதாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீதும் நாட்டு மக்களுக்கு துளியளவும் நம்பிக்கையோ, விருப்பமோ கிடையாது. மக்களின் அதிருப்தியை பெற்றுக்கொண்டு சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது என பௌத்த அறக்கொள்கை வலியுறுத்தியுள்ளது.
பௌத்த அறகொள்கையினை அரச தலைவர்கள் பின்பற்றுவார்களாயின் அவர்கள் எப்போதோ பதவி விலகியிருக்க வேண்டும்.
நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கும், மக்களாணைக்கும் மதிப்பளித்து ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும்.
ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கை பாராளுமன்ற மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் வகையில் பொதுத்தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்றார்.
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது சட்ட ரீதியான உரிமைகளை பயன்படுத்துவதை தடுக்கும் முயற்சிகளை கைவிடுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெறும் காலி முகத்திடலுக்கு அருகில் பொலிஸ் ட்ரக் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றினூடாக குறிப்பிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக இது குறித்து தகவல்கள் வௌியானதுடன், தமது சங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய, அந்த ட்ரக் வண்டிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களால் முன்னெடுக்கப்படும் அமைதி போராட்டத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது, பாரதூரமான விடயம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக நாட்டின் ஜனநாயகத்திற்கும் பொருளாதாரம் மற்றும் சட்டவாட்சிக்கும் பாரிய தாக்கங்கள் ஏற்படும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை முழுவதுமே நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, நாட்டின் வட மாகாணத்தையும் மிக மோசமாகப் பாதித்திருக்கிறது. விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவரை மாகாணத்தைக் கடுமையாகப் பாதித்திருந்தாலும் வெளித் தோற்றத்திற்கு அமைதியாகக் காட்சியளிக்கிறது இந்தப் பிரதேசம். காரணம் என்ன?
இலங்கை முழுவதுமே உள்ள பொருளாதார நெருக்கடி வடமாகாணத்தையும் கடுமையாக உலுக்கி வருகிறது. எரிவாயுவை வாங்கவும் மண்ணெண்ணெய் வாங்கவும் மக்கள் நீண்ட வரிசைகளில் இங்கேயும் பல மணி நேரம் காத்திருக்கிறார்கள்.
பிற பகுதிகளைப் போல எரிவாயு, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இங்கேயும் இருக்கிறது. ஆனால், எரிவாயு கிடைக்காவிட்டால் மண்ணெண்ணை அடுப்பு, விறகு அடுப்பு போன்றவற்றைப் பயன்படுத்தும் வழக்கமும் இங்கே இருக்கிறது.
எரிவாயுவுக்கான வரிசையில் நிற்கும் பலரிடம், சிலிண்டர்கள் பதுக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகமும் இருக்கிறது.
எரிவாயுக்கான வரிசையில் நின்றபடி பிபிசியிடம் பேசிய யாழ்ப்பாணம் டவுனைச் சேர்ந்த ராஜேஷ், “கப்பலில் வந்திறங்கும் சிலிண்டர்களில் பாதியை கடைக்காரர்கள் பதுக்கிவிடுகிறார்கள். யுத்த காலத்தில் இதைவிட பெரிய கஷ்டத்தையெல்லாம் அனுபவித்துவிட்டோம். விறகு அடுப்புதானே அப்போது பயன்படுத்தினோம்? இப்போது இது பழகிவிட்டதால் சிரமமாக இருக்கிறது” என்கிறார்.
யாழ்ப்பாணம் மட்டுமல்ல, முல்லைத் தீவு, கிளிநொச்சி என வட மாகாணத்தின் அனைத்துப் பகுதி மக்களும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
கிளிநொச்சியில் ஒரு சிறிய கடை வைத்திருக்கும் பத்மராணியின் மகன் காணாமல் போனவர். இன்னொரு மகன் போரில் உயிரிழந்துவிட்டார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மகனைத் தேடியபடியே பேத்தியுடன் தனியாக வாழ்ந்துவரும் புஷ்பராணி, பொருட்கள் தட்டுப்பாட்டால் தான் நடத்திவந்த கடையை மூடிவிட்டார். இம்மாதிரி தனித்து வாழ்பவர்களுக்கு கடுமையான சவால்களை முன்வைக்கிறது இந்த நெருக்கடி.
“1990ல் என்னுடைய மகன் காணாமல் போனான். இன்னொரு மகன் போரில் ஈடுபட்டு 2000ல் சடலமாக வீடு வந்து சேர்ந்தான். இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன். இப்போது கடையையும் மூடியாகிவிட்டது. காசுக்கே வழியில்லை. பெட்ரோல் இல்லை. மண்ணெண்ணை இல்லை. மின்சாரமும் இருப்பதில்லை. சுத்தமாக வாழவே முடியாத நிலை” என்கிறார் பத்மராணி.
இறுதிப் போர் நடந்த முல்லைத் தீவுப் பகுதியில் தற்போது பெரும்பாலும் விவசாயமே நடக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் இந்தப் பொருளாதார நெருக்கடி உருவாக்கிய இயற்கை உரப் பிரச்சனை, மின்சார தட்டுப்பாடு, எரிபொருள் பிரச்சனை என பல பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து வருகிறார்கள். இயற்கை உரப் பிரச்சனையால் வருமானம் குறைந்தது ஒருபக்கம் இருக்க, இப்போது மண்ணெண்ணை, மின்சாரம் போன்றவை இல்லாததால், பெரும் சிக்கலில் இருக்கிறார்கள்.
“ஒருவருக்கு மற்றொருவர் உதவ முடியாத காலம் என்று ஒன்று உண்டல்லவா? இறுதிக் கட்டப் போரின்போது அப்படித்தான் இருந்தது. இப்போதும் அப்படியான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அதாவது, எங்கேயாவது கேஸ் சிலிண்டர் கிடைக்குமென்று தெரியவந்தால் அதை எடுக்கப்போகும் ஒருவர் அதை மற்றவருக்குச் சொல்ல மாட்டார். ஏனென்றால் தனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று நினைப்பார். அதேபோல மண்ணெண்ணைய்க்காக வரிசையில் நிற்கும் ஒருவரும் மற்றொருவருக்குச் சொல்ல மாட்டார். தான் மட்டும் வாங்கிவிட வேண்டுமென்று நினைப்பார். இப்படியாகத்தான் நிலைமை இருக்கிறது” என்கிறார் யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளரான நிலாந்தன்.
நெருக்கடி இருந்தாலும் அமைதியாக…
இந்தப் பொருளாதார நெருக்கடியை முன்வைத்து நாட்டின் தென்பகுதியிலும் கண்டி போன்ற நகரங்களிலும் நடக்கும் போராட்டங்களைப் போல இந்தப் பகுதிகளில் போராட்டங்கள் ஏதுமில்லை. சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஒருங்கிணைத்த சிறிய போராட்டங்களைத் தவிர, பொதுவாக அமைதியாகவே காட்சியளிக்கிறது வடமாகாணம்.
இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணம் போன்ற நகரங்களில் பலரது வீடுகளில் ஒருவராவது வெளிநாட்டில் வசிக்கின்றனர். அவர்கள் அனுப்பும் பணம் ஒரு சிறிய அளிவில் நெருக்கடியை எதிர்கொள்ள உதவுகிறது.
இது தவிர, வட மாகாணத்தின் முக்கிய தொழில்களில் ஒன்று விவசாயம். இதனால், அரிசி, காய்கறி போன்றவற்றைப் பெறுவதில் பிரச்சனையில்லை. மேலும், தொடர்ந்து உள்நாட்டுப் போரால் ஏற்பட்ட பொருளாதார முற்றுகைகளை எதிர்கொண்டதால், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொள்ளத் தயாராக்கும் மனப்போக்கு இங்கு பலரிடம் இருக்கிறது.
“நாங்கள் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலை வாங்கி, அதில் சில சொட்டுகளை மட்டும் எஞ்சினுக்குள் ஊதி இரு சக்கர வாகனங்களை இயக்கிய காலமெல்லாம் இருக்கிறது. அந்த நெருக்கடியையெல்லாம் எதிர்கொண்டுவிட்டதால் இது பெரிதாகத் தெரியவில்லை” என்கிறார் ஒருவர்.
ஆனால், அதிருப்திக் குரல்கள் வெளிப்படையாக ஒலிக்காததற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. நாட்டின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில், ராணுவத்தினரின் எண்ணிக்கை வடக்கில் அதிகம். முல்லைத் தீவு மாவட்டத்திற்குள் செல்லும்போது, ஒவ்வொரு சில கி.மீ. தூரத்திலும் ராணுவத்தினரின் சோதனைச் சாவடி தென்படுகிறது. பல இடங்களில் கிராமத்தினர் இந்த விவகாரம் குறித்து பேசவே தயங்குகிறார்கள்.
“இங்கிருக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும், தொடர்பில்லாத கிராமங்களில் வசிக்கும் மக்களும் இந்த நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், நடந்து முடிந்த யுத்தத்தின் காரணமாகவும் யுத்தத்திற்குப் பிறகு இருந்த ராணுவ மயமாக்கம் காரணமாகவும் இந்த மக்கள் போராட்டங்களில் இறங்குவது மிகவும் குறைவாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மத்தியில் ஒரு பீதி இருக்கின்றது. அச்சம் இருக்கிறது” என்கிறார் யாழ்பாண பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர்.
இது தவிர, தென் பகுதி மக்களுடன் இணைந்து போராடும்போது தங்களுடைய தனித்துவமான கோரிக்கைகளும் அரசியலும் பலவீனமடையும் என்ற எண்ணமும் இங்குள்ள அரசியல் இயக்கங்களிடம் இருப்பதால் அவர்கள் போராட்டங்களில் ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார் அவர்.
இதுதவிர, தமிழ் அரசியல் தலைமைகளும் இந்த விவகாரத்தில் தெளிவான முடிவுகளைக் கொண்டிக்கவில்லையென்ற விமர்சனங்களும் இருக்கின்றன. “ஆகவே, தங்கள் வழிகாட்டுதல்களுக்காக அரசியல் தலைமைகளை எதிர்பார்ப்பதையே தமிழ் மக்கள் விட்டுவிட்டார்கள்” என்கிறார் அகிலன்.
தொடர்ந்து நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துவரும் வடபகுதி தமிழ் மக்கள் இந்த பொருளாதார நெருக்கடியையும் மிகுந்த சிரமத்தோடு எதிர்கொள்கிறார்கள். ஆனால், எத்தனை நெருக்கடிகளை அடுத்தடுத்து எதிர்கொள்வது என்ற கேள்வியும் அவர்களிடம் இருக்கிறது.
ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை பதவி விலகக் கோரி நாட்டு மக்கள் எட்டாவது நாளாகவும் காலி முகத்திடலில் நடாத்தி வரும் போராட்டத்தில் வேடர் சமூகமும் இணைந்துள்ளது.
நேற்று (15) இரவு போராட்டம் நடைபெற்று வரும் காலி முகத்திடலுக்கு ஆதிவாசிகள் குழுவொன்றும் வந்துள்ளது.
இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டம் போன்று காலியிலும் மக்கள் ஒன்று கூடி போராட ஆரம்பித்துள்ளதுடன் அங்கும் மக்கள் குவிந்து வருகின்றனர்.
எனினும், அமைச்சரவையை மாற்றியமைத்து தமது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள கோட்டாபய ராஜபக்ச கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது.
இதில் தற்போது சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொள்கின்றனர்.
நேற்றிரவு நடந்த போராட்டத்தில் மற்றுமொரு கலைஞர் குழுவினரும் கலந்து கொண்டனர்.
நேற்று இரவும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்தொகையான மக்கள் கூடியிருந்ததாக அத தெரண செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவை, கடந்த வருடம் உகண்டாவில் என்டபே சர்வதேச விமான நிலையத்துக்கு எடுத்து சென்ற 102 டொன் நிறையுடைய காகிதங்கள் , வணிக நோக்கத்தில், சர்வதேச பொருள் பரிமாற்ற நிர்ணயங்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட வணிக நடவடிக்கை என ஸ்ரீ லங்கன் விமன சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
உகண்டாவுக்கு, நாட்டிலிருந்த டொலர்கள் கடத்தப்பட்டுள்ளதாக சமூக வளைத் தளங்களில் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே, நேற்று ( 14) சிறப்பு ஊடக அறிக்கை ஊடாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.
வணிக நடவடிக்கையான குறித்த செயற்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புடன் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு அமைய, அந்த அச்சுப் பிரதிகள் அல்லது அச்சு ஆவணங்கள் என்ன என்பதை வெளிப்படுத்தாமல், ரகசியம் பேணுவதாகவும் குறித்த நிறுவனம் அவ்வறிகையில் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் தொடர்ச்சியாக இலங்கையிலிருந்து டொலர்களே இவ்வாறு கடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றினை இட்டுள்ள ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம், கடந்த 2021 பெர்வரி மாதம் உகண்டாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 102 டொன் காகிதங்கள் அல்லது அச்சு பிரதிகள், உகண்டா நாட்டின் நாணயத் தாள்கள் என தெரிவித்துள்ளது.
குளோபர் செகியூரிடி பிரின்டர்ஸ் ஊடாக அச்சிடப்பட்ட உகண்டா நாணயத் தாள்களே இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டதாக அந்த ட்விட்டர் பதிவில் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந் நிலையில் கடந்த 2021 பெப்ரவரி மாதத்தின் பின்னர் உகண்டாவின் நாணயத்தின் பெறுமதி நான்கு மடங்காக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டும் பொருளியல் சார் நிபுணர்கள், அது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
2021 பெப்ரவரி முதல் ஒரு வருட காலப்பகுதிக்குள் இவ்வாறு உகண்டாவின் நாணயம் சடுதியாக பெறுமதி மிக்கதாக மாறியுள்ளமைக்கும் இந்த பண நோட்டு எடுத்துச் சென்ற விடயத்துக்கும் தொடர்புகள் இருக்கலாம் என சந்தேகங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், கறுப்புப் பண சுத்திகரிப்பு உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க உகண்டா போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்காமையை காரணம் காட்டி, அந் நாட்டின் நிதித் துறை அல்லது நிதி தொழில்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடுவதற்கான கொள்கைகளை உருவாக்க ஜீ 7 நாடுகளின் முன்முயற்சியின் பேரில் உலகளாவிய அரசுகளுக்கிடையேயான அமைப்பான Financial Action Task Force (FATF) உருவாக்கப்பட்டதுடன், அதனூடாக உகண்டா கறுப்பு பட்டியலில் சேர்க்கபப்டும் அபாயத்தை எதிர்க்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வடக்கு, கிழக்கு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
தமிழினம் இலங்கை அரசாலும் அதன் நேச நாசகார சக்திகளாலும் திட்டமிட்டு 2009 இல் கொன்றொழிக்கப்பட்ட நாளை, மருந்தையும் உணவையும் தடைசெய்து தமிழரைத் தலைவணங்க வைக்க முயன்று தோற்று யுத்த சூனிய வலயங்கள் என்று உத்தியோக பூர்வமாக வலையங்களை அறிவித்து நரித்தனமாக மக்களை அவ்வலயங்களுள் ஒன்றுகூட்டி உலகினால் மனித குலத்திற்கு ஒவ்வாததென தவிர்த்தொதுக்கப்பட்ட போர் முறைகளையும் கொடிய இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தி உலகு மௌனமாய்ப் பார்த்திருக்க எம்மினத்தை கருவறுத்த நாளை, பேதங்கள் அனைத்தையும் தவிர்த்து தமிழர் என்கின்ற நிமிர்வுடன் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் முற்றத்தில் நினைவேந்த அனைவரையும் அமைப்பு பணிவன்புடன் வேண்டி நிற்கின்றது
இவ்வருடத்திற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மிகப்பெரும் மக்கள் எழிச்சியுடன் நினைவேந்துவது தொடர்பக திட்டமிடல் கூட்டங்கள் எதிர்வரும் நாட்களில் அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் மேற்கொள்ளப்படும்.
இந்நினைவேந்தல் முற்றுமுழுதாக மக்கள் பங்களிப்புடன் நடைபெறும். இதற்கான நிதி சேகரிப்புக்கள் புலம்பெயர் தேசங்களிலோ புலத்திலோ நடைபெறாது.
இது தொடர்பில் விழிப்புணர்வை பேணும் வண்ணம் அனைவரிடமும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் உள்ளது.