அரசியல் மாற்றத்தில் எமக்கு நம்பிக்கையில்லை -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பக்கோரி இடம்பெறும் போராட்டங்கள் காரணமாக காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நன்மை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சிங்கள மக்களால் சமாளிக்க முடியாதுள்ளது . 69 லட்சம் மக்களால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியையும் அவர்களது குடும்பத்தினரையும் இன்று வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகிறார்கள்.

ஆனால் இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட உயிராபத்தை தடுப்பதற்காக அப்போதிருந்த அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக இராஜினாமா செய்திருந்தால் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

ஆனால் அவர்கள் இராஜினாமா செய்யவில்லை. அனைவரும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒழித்து வாழ்ந்தார்கள். இதனால் மக்களை அழிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

இதேவேளை அரசியல் மாற்றத்தில் எமக்கு நம்பிக்கையில்லை. ராஜபக்ச அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். சர்வதேச மத்தியஸ்தத்துடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார் .

Posted in Uncategorized

புதிய அமைச்சரவையில் பதவிகளை ஏற்கப்போவதில்லை

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக புதிய அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என தாம் தீர்மானித்துள்ளதாக முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர இன்று தெரிவித்துள்ளார்.

தனது தீர்மானம் தொடர்பில் சுருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு, புத்தசாசனம் மற்றும் மக்களுக்கான ஐக்கியத்துக்காக எப்போதும் நிற்பதாகவும், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது கடமையை தொடர்ந்தும் செய்வதாகவும் வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

உடனடியாக இளைஞர்கள் அடங்கிய அமைச்சரவை ஒன்று நியமிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வரையில் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் ஏற்பதில்லை என கட்சி தீர்மானித்துள்ளதாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை இன்று (17) அல்லது நாளை (18) பதவியேற்கும் என ஊடகங்களி் செய்திகள் பரவி வருகின்றன.

புதிய அமைச்சரவையில் 15 அமைச்சர்களே நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களான காமினி லொகுகே, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் புதிய அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இராஜாங்க அமைச்சர்களின் தற்போதைய பதவிகள் அப்படியே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத் தளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (police.lk) மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தினார்.

எனினும் குறித்த இணையத் தளமானது உடனடியாக சில மணி நேரங்களுக்குள் வழமையான செயற்பாட்டுக்காக, மீட்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவை வீரகேசரிதொடர்புகொண்டு வினவிய போது, பொலிஸ் இணையத் தளத்தில் தடங்கல்கள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்டார்.

அது தொடர்பில் விளக்கமளிக்கும் அறிக்கை ஒன்றினை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இச்செய்தி எழுதப்படும் வரை பொலிஸ் தலைமையகம் இது தொடர்பில் எந்த அறிக்கைகளையும் வெளியிடவில்லை.

தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும்: S.வெங்கடேசன்

தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ வேண்டுமென தமிழக மக்களவை உறுப்பினர் S.வெங்கடேசன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, உச்சத்தை தொட்டுள்ள பணவீக்கம் காரணமாக தமிழ் மக்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வருகை தந்துள்ளதாக தமிழக மக்களவை உறுப்பினர் S. வெங்கடேசன் கூறியுள்ளார்.

நாளாந்தம் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதாக செய்திகள் வௌிவருவதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் சொல்லொண்ணா துயரில் ஆழ்ந்துள்ளனர். இந்த சூழலில் மனிதாபிமான அடிப்படையில் ஒன்றிய அரசு இரண்டு விடயங்களை செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர், அத்தியாவசிய பொருட்களை அங்குள்ள தமிழ் மக்களுக்கு இந்திய தூதரகம் மூலம் வழங்க ஒன்றிய அரசின் அனுமதியை நாடி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், ஒன்றிய அரசு தாமதமின்றி அதற்கு அனுமதி வழங்க வேண்டுமென மக்களவை உறுப்பினர் கோரியுள்ளார்.

அத்துடன், இந்தியாவில் வந்து தஞ்சம் புகும் மக்களுக்கு தங்குமிடம், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை உடனடியாக உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழக மக்களவை உறுப்பினர் S. வெங்கடேசனின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளுக்கான நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக மேற்கொள்வார் என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

கொழும்பு நோக்கி JVPயின் பேரணி

மக்களை வதைக்கிற அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்கிற தொனிப்பொருளில் ஜே.வி.பியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொழும்பு நோக்கிய பேரணி ஆரம்பித்துள்ளது.

டில்வின் சில்வா உட்பட ஜே.வி.பியின் முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டுள்ளதோடு பேரணி காலி முகத் திடல் நோக்கி பயணிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகின்ற போதிலும் ஜனாதிபதி தனது பதவி விலகுவதற்கான ஆயத்தம் எதுவுமில்லையென தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

களத்தில் இணையும் கத்தோலிக்க திருச்சபை

இலங்கையில் ஜனாதிபதிக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்துக்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை முழு ஆதரவை அளிப்பதாக ஐலேண்ட் நாளிதழ் இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று கோரி இலங்கை காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடி போராட்டம் நடத்திவருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இந்த நிலையில், இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் செய்தித் தொடர்பாளரான சிரில் கமினி ஃபெர்ணண்டோ, தங்களது முழு ஆதரவை இந்த போராட்டத்துக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிஷப் ஹவுஸில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கத்தோலிக்க திருச்சபையும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று எதிரார்க்கிறது என்று தெரிவித்தார். மேலும், ஏற்கனவே திருச்சபையினர் பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதன் மூலம், முன்பிருந்தே இந்த போராட்டத்தில் திருச்சபை பங்கெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார் என்று ஐலேண்ட் செய்தி தெரிவிக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டதால் காலியில் பரபரப்பு

கொழும்பு – காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக காலியில் கடந்த 2 நாட்களாக தொடர் ஆரப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பொலிஸாரால் அகற்றப்பட்ட ஆர்ப்பாட்டக் காரர்களின் கூடாரங்கள் மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

காலியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பகுதிக்கு கோட்டாகோகம காலி கிளை என ஆர்ப்பாட்டக்காரர்களால் பெயரிடப்பட்டுள்ளது.

அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை பொலிஸார் இன்று காலை அகற்றிச் சென்றனர்.

இவ்விடயம் தொடர்பாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவான சட்டத்தரணிகள் அப்பிராந்தியத்தின் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இந்நிலையில், பொலிஸாரால் அகற்றிச் செல்லப்பட்ட, கூடாரங்கள் மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்களத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

ஒரு வருடம் ஆட்சியை எம்மிடம் தாருங்கள்; நிமிர்த்திக் காட்டுகிறோம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்க அறிவிப்பு!

தமிழ் தரப்பிடம் ஒரு வருடம் நாட்டின் ஆட்சியை தாருங்கள். இந்த நாட்டை நிமிர்த்திக் காட்டுகின்றோம் என தமிழ் ஈழ விடுதலை இயகத்தின் (ரெலோ) தலைவரும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று (16) வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியாகும் தகுதி கோட்டாபாயவிற்கு இல்லை என்று எமதுமக்கள் வாக்குகள் மூலம் அன்றே ஆருடம் சொல்லியிருந்தார்கள். கோட்டாவும், மகிந்தவும் ஆயுதப் போராட்டத்தினைமௌனிக்க செய்ததாக வெற்றிவிழா கொண்டாடினார்கள். ஆனால் சர்வதேசத்தின் உதவியுடன் தான் எமது போராட்டத்தினை மௌனிக்க செய்தார்களே தவிர இவர்களது திறமையால் மௌனிக்கவில்லை என்பதை இன்று விளங்கிக்கொள்ள முடியும்.

இன்று சிங்கள மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இதன் மூலம் எமது போராட்டம் நியாயமானது என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் போராட்டக்காரர்களால் வெளிப்படையாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதனை நாம்பயன்படுத்திக்கொள்ளவேண்டும. ஈழத்தை கொடுத்திருந்தால் அது பணத்தை தந்திருக்கும் என்று முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் சொல்கிறார்.

அன்று இரத்தினபுரியில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டபோது விடுதலைப்புலிகள் சிங்களமக்களிற்கு உதவிகளை வழங்கியிருந்தனர். அந்த வரலாறை நாம் மறக்க முடியாது. எனவே அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற சிந்தனை ஓட்டத்தினை நாங்கள் இன்று செய்தாக வேண்டும்.

இந்தசந்தர்ப்பத்தில் சிங்கள மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன். தமிழ்தரப்பிற்கு ஆட்சியினை ஒருவருடம் வழங்குங்கள் ஒருவருடத்தில் இந்த நாட்டினை நிமிர்த்திக்காட்டுகின்றோம். தமிழ்சிங்கள மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்கும் படியாக எமது செயற்பாடு இருக்கும். அதை நாங்கள் எமது போராட்ட காலங்களில் நிரூபித்து காட்டியிருக்கின்றோம்.

ஜே.ஆர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி முறை எங்களுடைய தமிழ் பேசும் மக்களுக்கு மட்டும் தான் நெருக்குதலாக இருந்தது. அன்றில் இருந்து இன்று வரை தமிழ் பேசும் மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிறையில் வாடுகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் இன்றும் போராடுகிறார்கள். நிலங்கள் பறி போகிறது. ஒருவர் தனது அதிகாரங்கனை கூடுதலாக வைத்திருப்பதால் எங்களது செயற்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சிலர் ஜனாதிபதி முறை இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்போது தான் தமிழர்களின் ஆளுமையை காட்ட முடியும். அப்போது தான் வாக்கு பெறுவதற்காக தமிழ் மக்கள் பற்றி சிந்திப்பார்கள் என்கிறார்கள். கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேன அவர்களை தமிழ் மக்களது வாக்கு தான் ஜனாதிபதியாக்கியது. அவர் என்ன செய்தார். பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை கொடுத்தார். ஆனால் அவர் தன்னுடைய அதிகாரத்தை தமிழ் மக்களுக்காக பயன்படுத்த தவறி விட்டார். கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதி ஆனந்த சுதாகரை விடுதலை செய்வதாக சொன்ன போதும் இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை. அவர் சில மாற்றங்களை கொண்டு வந்த போதும் செயல் வடிவில் எதுவும் செய்யவில்லை. தமிழர்கள் வாக்கு போட்டு ஜனாதிபதியாக வந்து அந்த கதிரையில் அமர்ந்தால் தமிழர்களை மதிக்காத நிலைமை தான் காணப்படுகின்றது. சந்திரிக்கா அம்மையார் இன்று தமிழ் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். அவர் அன்று ஜனாதிபதியாக இருந்த போது என்ன செய்தார். ஜனாதிபதி முறை என்பது தமிழ் தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான முறையாகவே இருக்கிறது.

ஆகவே நாங்கள் எல்லோரும் சேர்ந்து இந்த ஜனாதிபதி முறையை மாற்ற வேண்டும் என சிங்கள சகோதரர்களிடமும், ஆட்சியை மாற்ற நினைபவர்களிடமும் நிபந்தனை வைக்க வேண்டும். அத்துடன் சாதாரணமாக சிறைகைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, நிலங்கள் அபகரிப்பு என்பவற்றுக்கான உத்தரவாதத்தை பெறுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் இதனை பயன்படுத்த வேண்டும். எழுத்து மூலத்தில் அவர்கள் செய்வதாக பெற வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஆராய இருக்கின்றோம். ஏற்கனவே நல்லாட்சியில் எங்களுக்கு கெட்ட பெயர் இருகிறது. இந்த விடயத்தில் சரியான முறையை கையாள வேண்டும். பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ் பேசும் கட்சிகள் எல்லோரும் ஒன்றாக இணைந்து நிபந்தனையை விதித்து, எங்களது தேசத்தில் குறிப்பிட்ட அங்கீகாரத்தை பெறுவதன் மூலமே ஆதரவு வழங்க வேண்டும். பாராளுமன்றத்தில் இருக்கும் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும். உடனடியாக சென்று கையொப்பம் இடும் நிலை இருக்க கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூன்று தலைவர்களும், விக்கினேஸ்வரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிகாந்தா ஆகியோர் இணைந்து ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்துள்ளோம். இந்த விடயம் மட்டுமல்லாது நான் கூறிய விடயங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். ஆட்சியாளர்களை ஏற்றுக் கொள்ள வைக்க கூடிய ஒரு சந்தர்ப்பம் இதுவாகும். வெறும் ஜனாதிபதி வீட்டே போ என்பதும், ராஜபக்ஸ குடும்பம் வீட்ட போ என்பதும் எங்களது கோரிக்கை அல்ல. ஏற்கனவே நாங்கள் இவர்களை நிராகரித்தவர்கள். எங்களது கோரிக்கைகளை யார் நிறைவேற்றுவதாக உத்தரவாதம் தருகிறார்களோ, அவர்களுடன் இணைந்து பேரம் பேச வேண்டும் எனத் தெரிவித்தார்.

அரச தலைவர்கள் மக்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து உடன் பதவி விலக வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்

நாட்டு மக்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களில் ஈடுப்படவில்லை.சிங்கள பௌத்த மக்களாணை மீது கைவைக்க வேண்டாம் என பௌத்த தேர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை முற்றிலும் வெறுக்கத்தக்கது எனத் தெரிவித்த ஓமல்பே சோபித தேரர் , அரச தலைவர்கள் பௌத்த அறக்கொள்கையை முறையாக பின்பற்றுவார்களாயின் நாட்டு மக்களின் கருத்துக்கும், மக்களாணைக்கும் மதிப்பளித்து முழுமையாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றினைந்து கடந்த 8 நாட்களாக காலி முகத்திடலில் முன்னெடுத்து வரும் போராட்டத்தை முடக்க அரசாங்கம் பல்வேறு மாற்று வழிமுறைகளை முன்னெடுத்து வருகிறது.

மக்களின் ஜனநாயக போராட்டத்தை சர்வாதிகார முறையில் முடக்க முயற்சித்தால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும். நாட்டு மக்கள் மதத்தையோ, இனத்தையோ முன்னிலைப்படுத்தி போராட்டத்தின் ஈடுப்படவில்லை.

நாட்டின் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தி இனம், மதம் ஆகியவற்றை துறந்து ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள வேளையில் பௌத்த தேரர்கள் என குறிப்பிட்டுக்கொண்டு அரசியல்வாதிகளுக்கு சார்பாக செயற்படும் தரப்பினர்கள் கடந்த வாரம் கொழும்பில் ‘போலியான போராட்டங்களை நம்பி சிங்கள பௌத்த மக்களாணை மீது கைவைக்க வேண்டாம்’ என குறிப்பிட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை முற்றிலும் வெறுக்கத்தக்கதாக காணப்படுவதுடன், அவர்களின் செயற்பாடு பௌத்த அறகொள்கைக்கும் முரணானதாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீதும் நாட்டு மக்களுக்கு துளியளவும் நம்பிக்கையோ, விருப்பமோ கிடையாது. மக்களின் அதிருப்தியை பெற்றுக்கொண்டு சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது என பௌத்த அறக்கொள்கை வலியுறுத்தியுள்ளது.

பௌத்த அறகொள்கையினை அரச தலைவர்கள் பின்பற்றுவார்களாயின் அவர்கள் எப்போதோ பதவி விலகியிருக்க வேண்டும்.

நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கும், மக்களாணைக்கும் மதிப்பளித்து ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும்.

ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கை பாராளுமன்ற மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் வகையில் பொதுத்தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்றார்.

கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படுகிறது

கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக அடுத்தவாரம் மூடப்படவுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (18) முதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.