திருமலை 61 எண்ணெய்த் தாங்கிகளை அபிவிருத்திசெய்ய அனுமதி

திருகோணமலை சீனன்குடா துறைமுகத்தின் மேற்புற தாங்கி திடலானது 99 தாங்கிகளைக் கொண்டமைந்துள்ளதுடன், 2022.01.03ஆம் திகதி

இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு, அவற்றில் 61 தாங்கிகளை திருகோணமலை பெற்றோலிய முனைய தனியார் கம்பனிக்கு 50 வருடகாலத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த 61 எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியவளக் கற்கை உள்ளிட்ட அடிப்படை படிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சாத்தியவளக் கற்கை மூலம் இக்கருத்திட்டம் 16 ஆண்டுகளில் 07 கட்டங்களாக அபிவிருத்தி செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், அதன் முதலாவது கட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாகப் பயனுறு வாய்ந்த 09 தாங்கிகளை மறுசீரமைப்புச் செய்வதற்கும், கிட்டத்தட்ட 1.75 கிலோமீற்றர் தூர வீதியைப் புனரமைப்பதற்கும், ஏற்புடைய ஏனைய வசதிகளை நிர்மாணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிர்மாணித்தல், நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல் (BOT) எனும் வணிக மாதிரியைப் பின்பற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, முதலாவது கட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்கு உத்தேச அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக, குறித்த பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடிப்பதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள், CTC மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக விசாரணை நடத்த பிரதமர் ட்ரூடோ கடிதம்

கனடாவில் CTCயின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்கள் கனேடிய பிரதமரிடம் வலியுறுத்துகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2,507 நாளாகும். வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் உள்ள இந்த பந்தலில் எமது பயணம் தொடர்கிறது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது குழந்தைகளை இழந்த பெண்களின் குழுவான காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளின் தாய்மார்கள், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அங்கீகரித்ததற்கும், பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அவர் வழங்கிய ஆதரவிற்கும் நன்றி தெரிவித்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

எவ்வாறாயினும், கனடாவில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதியாகக் கூறிக்கொள்ளும் கனேடிய தமிழ் காங்கிரஸ் (CTC) மற்றும் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள இலங்கை போர்க் குற்றவாளியுடன் அதன் தொடர்பு குறித்தும் அவர்கள் தீவிர கவலைகளை எழுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தின்படி, ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை போர் குற்றவாளியுடன் CTC ஒரு சந்திப்பை நடத்தியது.

இது கனடாவின் வெளியுறவுக் கொள்கையை மீறுவதாகவும் ஒரு போர்க் குற்றவாளியின் அங்கீகாரமாகவும் பார்க்கப்படலாம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
CTCஎன்பது தமிழ் அமைப்பு அல்ல, பணம் மற்றும் புகழால் இயக்கப்படும் சிங்கள அமைப்பு என்றும், அது தமிழர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் பிற நாடுகளை தவறாக வழிநடத்துகிறது என்றும் அந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளோம்.

இலங்கை போர்க்குற்றவாளி இலங்கை கருவூலத்தில் இருந்து திருடப்பட்ட நிதியை ரொறன்ரோவில் திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்கள் போன்ற வணிகங்களை நிறுவ பயன்படுத்துவதாகவும், சில CTC உறுப்பினர்கள் இந்த மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கடிதம் மேலும் கூறுகிறது. டொராண்டோவில் உள்ள அய்யப்பன் கோயிலுக்கும் CTC உறுப்பினர்கள் மூலம் போர்க்குற்றவாளிகளின் முதலீடுகளுக்கும் தொடர்பு இருப்பதையும் அந்தக் கடிதம் வெளிப்படுத்துகிறது. இந்த பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தவும், கனடாவில் பணமோசடி நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யவும், கனடாவின் வருவாய் தினைக்களத்தை அந்த கடிதத்தில் வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் உள்ள அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) உறுப்பினர் ஒருவர் கனடாவிற்கு விஜயம் செய்த போது CTC மற்றும் அதன் ஆதரவாளர்கள் 1,000,000 டொலர் பணம் செலுத்தியதாகவும் கடிதம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த எம்.பி இந்தப் பணத்தை இலங்கையில் விமர்சிப்பவர்களை,சக கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்களுக்கு லஞ்சம் கொடுத்து வாயடைக்கப் பயன்படுத்துவதாகவும், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வமற்ற தலைவராகச் செயற்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குற்றம் சுமத்துகிறோம்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள், CTC மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களின் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பேற்குமாறும் பிரதமர் ட்ரூடோவைக் கேட்டுக்கொள்கிறார்கள். மேலும், தமிழர் நலனுக்காகவும், உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அவர் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்

நன்றி செயலாளர்
கோ.ராஜ்குமார்
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்.

Posted in Uncategorized

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் – அண்ணாமலை

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய அரசை வலியுறுத்திருக்கிறார்.

இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையில் குடியேறி இரு நூற்றாண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில் புதுதில்லியில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இதற்குரிய பிரத்யேக அஞ்சல் தலையை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே. பி. நட்டா வெளியிட, இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜகவின் சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர். மேலும் இந்நிகழ்விற்கு பார்வையாளராகவும், சிறப்பு அதிதிகளாகவும் இலங்கையிலிருந்து ஏராளமான முக்கிய பிரமுகர்கள் புது தில்லிக்கு வருகை தந்திருந்தனர்.‌

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது,

”இலங்கையிலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் தமிழகத்திற்கு வருகை தந்த ஐந்து முதல் ஆறு லட்சம் வரையிலான தமிழர்களுக்கு முறையான தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்பது உள்ளிட்ட நிறைய வாக்குறுதிகள் தரப்பட்டன. அவை உடனடியாகவும், சிறப்பாகவும் நிறைவேற்றப்பட வேண்டும்.

வெவ்வேறு காலகட்டங்களில் இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில், இந்திய வம்சாவளி தமிழர்கள் பலர் இந்தியாவிற்கு வருகை தந்தனர். அவர்களில் பலரும் இங்கு குடியுரிமை இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் சிலர் சட்டவிரோதமாகவும் இங்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் பலர் இங்கு குழந்தை பெற்றிருக்கிறார்கள். வேறு சிலருக்கோ. இலங்கையிலும் அவர்கள் மீது வழக்குகள் இல்லை. இங்கும் அவர்கள் மீது வழக்குகள் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமல் இருக்கிறது. ஆகையால் அப்படிப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழக முகாம்களில் பிறந்தவர்களுக்கும், தீவிர குற்ற பின்னணி இல்லாதவர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். இதற்கு விரைவில் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

உதயமானது ரணிலுக்கு ஆதரவான புதிய கூட்டணி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, அரசியல் கலவரங்களின் பின்னர் அரசாங்கத்திலிருந்து விலகிய தரப்பினர் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை ஆரம்பித்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவில் முக்கிய உறுப்பினர்களாகக் காணப்பட்ட நிமல் லன்சா மற்றும் அனுர பிரியதர்ஷன யாபா உள்ளிட்டோர் தலைமையில் இக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய கூட்டணியின் ஸ்தாபகரான கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயவர்தன ஆகியோர் தலைமையில் நேற்று இக்கூட்டணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இராஜகிரிய, லேக் ட்ரைவ் வீதியில் அமைந்துள்ள புதிய அரசியல் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதோடு, முற்பகல் சுப நேரத்தில் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய தேர்தல் பிரசார நடவடிக்கைளை இப்புதிய அரசியல் கூட்டணி நேற்றிலிருந்தே ஆரம்பித்துள்ளது.

இந்த நிகழ்வில் புதிய அரசியல் கூட்டணியின் செயல்பாட்டு தலைவர் அநுர பிரியதர்ஷன யாபா உள்ளிட்ட ஆதரவு வழங்கும் அனைத்து தரப்புகளும் பங்கேற்றிருந்தன. இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் லன்சா இக்கூட்டணியில் 71 பாராளுமன்ற உறுப்பினர் இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்தோடு இக்கூட்டணி பொதுஜன பெரமுனவுடன் இணையாது என்றும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

சீரற்ற காலநிலை : மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மாவட்டத்தில் தாழ் நிலப்பகுதிகள் மழை வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு 56 குடும்பங்கள் இடைத்தாங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் வெளியிட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதனால் மாவட்டத்திலுள்ள கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிரானுக்கும் புலிபாஞ்சகல் பகுதியின் வீதியின் மேலாக வெள்ள நீர்பாய்ந்து செல்கின்றது.

இதனால் கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு வரையிலான பிரதேசத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும் இதனால் படகு சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்,

இதேநேரம் ஆற்று வெள்ளம் காரணமாக செங்கலடி பிரதேச செயலக்பிரிவிலுள்ள ஈரலக்குளம் மற்றும் மயிலவெட்டுவான் மற்றும் சித்தாண்டி தொடக்கம் பெருமாவெளி வரையான பிரதேசங்களுக்கான போக்குவரத்து பாதிப்பட்டுள்ளதால் இரு படகுசேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாகரை பிரதேச செயலப் பிரிவில் கல்லரிப்பு பிரதேசத்தில் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்ததையடுத்து அப்பகுதியில் உள்ள பொது கட்டித்தில் 17 குடும்பங்களும் கதிரவெளி ஜூனியர் பாடசாலையில் 30 குடும்பங்களும் கல்லரிப்பு முன்பள்ளியில் 9 குடும்பங்கள் உட்பட 56 குடும்பங்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கை ஒரு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு – பயமில்லாமல் பயணிப்போம்!

புத்தம் புது வருட வாழ்த்துகள். இது வழமைபோல வரும் புது வருடம் அல்ல. ஆகவே வாழ்த்துகளும், எதிர்பார்ப்புகளும் கூட வழமைபோல் இருந்திட முடியாது. ‘இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு’, என்ற இன்றைய அடையாளத்தில் இருந்து, ‘இலங்கை ஒரு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு’, ‘பெளத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க நாடு’ என்ற அடையாளங்களை நோக்கி பயணிப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

தனது புத்தாண்டு செய்தியில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இது ஒரு தேர்தல் வருடம். என்ன தேர்தல் என தெரியாது. ஜனாதிபதியே முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறார். ஆகவே எதையும் உறுதியாக நம்பாதீர்கள். எல்லாமே ஊகங்கள்தான். ஆனால், இன்றைய நெருக்கடியில் இருந்து மீள, ஒரு புது அரசாங்கத்தை கொண்டுவரக்கூடிய புது வருடம் இது. அது உண்மை.

‘அரகல’ என்ற கிளர்ச்சிக்கு பிறகு நாட்டில் ஊழலில் ஈடுபடும் திருடர்களை அரசியலில் இருந்து நிரந்தரமாக விரட்டும் கொள்கை மேலோங்கி இருக்கும் காலம் இதுவாகும். இரண்டு கரங்களையும் உயர்த்தி நான் இந்த கொள்கையை ஆதரிக்கிறேன். ஏனென்றால் எனக்கு திருட்டு பிடிக்காது. திருடவும் தெரியாது.

ஆனால், அது மட்டும் போதாது. இந்த நாட்டில் இனவாதத்தை முழுமையாக துடைத்து எறிய வேண்டும். ஊழலை ஒழிப்பதை விட இது கஷ்டமானது. அது எனக்கு தெரியும்.

ஆனால், நான் ஒரு விக்கிரமாதித்தன். மனம் தளரவே மாட்டேன். மீண்டும் மீண்டும், முயற்சிப்பேன். வாருங்கள், நாம் எல்லோரும் முயற்சிப்போம். ‘இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு’, என்ற அடையாளத்தில் இருந்து, ‘இலங்கை ஒரு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு’, ‘பெளத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க நாடு’ என்ற அடையாளங்களை நோக்கி பயணிப்போம். அனைவருக்கும் வாழ்த்துகள்.

Posted in Uncategorized

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மூலம் தமிழர்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியும்- அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

பொது வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதன் மூலம் தமிழர்கள் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் புதிய ஆண்டில் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இதில் தமிழர் தரப்பு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பற்றிப்பேசி அதில் இணக்கம் காண்பவரை ஆதரிப்பது, தமிழ்த் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது, தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஸ்கரிப்பது என்று மூன்று விதமான அபிப்பிராயங்கள் உள்ளன. இதில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதன் மூலம் தமிழர்கள் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு அதன் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (31.12.2023) கோண்டாவிலில் நடைபெற்றது. இவ்வுரையரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நிலாந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தரப்பு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுடன் பேசினாலும் எவரும் வெளிப்படையாகத் தமது வாக்குறுதிகளைத் தரப்போவதில்லை. தமிழர் தரப்புக்கு ஆதரவாகக் காட்டிச் சிங்கள மக்களின் வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள். வெளிப்படையாகத் தராத எந்தவொரு உத்தரவாதமும் தேர்தலின் பின்னர் கண்டுகொள்ளப்படாது

என்பதே கடந்த கால வரலாறு.

சரத் பொன்சேகாவைத் தமிழர்கள் ஆதரித்ததன் மூலம் மஹிந்த ராஜபக்சவையே இறுதியில் வெல்ல வைக்க முடிந்தது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

ஒப்பீட்டளவில் தமிழ்த் தரப்பின் முன்னால் உள்ள தெரிவு பொது வேட்பாளர்தான். இதில் ஒருபோதும் தமிழ் வேட்பாளர் வெற்றிபெறப் போவதில்லை. ஆனால், தாம் விரும்பம் அரசியல் தீர்வை வெளிப்படையாக முன்வைத்துத் திரளான தமிழ் வாக்குகளைப் பெறுவதன் மூலம் தமது அபிலாசையை வெளிப்படுத்த முடியும். இது சமஸ்டியாகவும் இருக்கலாம் தனி நாடாகவும் இருக்கலாம்.

ஒருவகையில் இதனைத் தமிழ் மக்களிடையே நடாத்தப்படும் பொது வாக்கெடுப்பாகக்கூடக் கருதலாம். ஆனால், இதன் வெற்றி என்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் வாக்குகளைக் திரட்டக்கூடிய ஒரு பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதிலேயே தங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கூட்டணியின் பொது வேட்பாளராக சஜித்தை களமிறக்குவோம் – டிலான் பெரேரா

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஒன்றிணைந்த எதிரணி கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம்.கூட்டணியின் பொதுவேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்குவோம். சஜித்- டலஸ் அணிக்குள் முரண்பாடில்லை என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும்,சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகபெருமவுக்கும் இடையிலான அரசியல் தொடர்பு 2022.07.20 ஆம் திகதி ஆரம்பமானது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகபெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார்.அதனை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல் பீரிஸ் வழிமொழிந்தார்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்துக்கு அமைய அன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் அவர் தான் பிரதராக நியமிக்கப்பட்டிருந்திருப்பார்.

இடைக்கால ஜனாதிபதி தேர்தலில் டலஸ் அழகபெரும வெற்றிப் பெற்றிருந்தால் சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்றிருப்பார்.பெரும்பான்மை பலம் பொதுஜன பெரமுன பக்கம் உள்ளதால் அவர்கள் வெற்றிப்பெற்றார்கள்.

பாராளுமன்றத்திலும்,வெளியிலும் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் தரப்பினருடன் இணக்கமாக செயற்படுகிறோம்.

இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக குறிப்பிடப்படுகிறது.உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய தேர்தல்களையும் பிற்போடுவது ஆச்சரியத்துக்குரியதல்ல, ஆகவே அரசாங்கத்துக்கு எதிரான பலமான சக்தியை நாங்கள் உருவாக்குவோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஒன்றிணைந்த எதிரணி கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம்.கூட்டணியின் பொதுவேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவோம்.

சஜித் -டலஸ் அணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என்றார்.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவர் அம்பலாங்கொட தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து கட்சி உறுப்புரிமையையும் நியமனக் கடிதத்தையும் ஷான் விஜயலால் டி சில்வா பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான இவர் கடந்த பொதுத் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஷான் விஜயலால் டி சில்வா மூன்று முறை தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கான பதிவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.

இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் பதிவு நடவடிக்கைகளை பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் அது தொடர்பான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized