அரசு இவ்வாறு செயற்பட்டால் எமது நாடு சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளைப் போன்று சென்றுவிடும்

அரசு இவ்வாறு செயற்பட்டால் எமது நாடு சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளைப் போன்று சென்றுவிடும்.

நாட்டிலே தற்போது பஞ்சம் ஏற்பட்டுள்ளது சமயல் எரிவாயு இல்லை, எரிபொருட்கள் இல்லை, உணவுத்தட்டுப்பாடு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து மக்கள் சொல்லெணாத் துயரங்ககளை எதிர்கொண்டு வருகின்றார்கள். நான் எனது இன்றய கன்னி அமர்வுக்குக்கு வருதற்குக்கூட பெற்றோல் இல்லாமல் நான் துவிச்சக்கர வண்டியில்தான் வந்தேன்.
என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு புதிதாகப் பதவியேற்ற இ.வேணுராஜ் வியாழக்கிழமை(24) தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குருமண்வெளி வட்டாரத்தில் உறுப்பினராக இருந்த இளங்கோ மரணமடைந்ததையடுத்து அவரது வெற்றிடத்திற்கு ரெலோ கட்சியைச் சேர்ந்த இ.வேணுராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றயதினம் தனது கன்னி அமர்வுக்காக பிரதேச சபைக்கு வருவதற்கு துசிச்சக்கர வண்டியிலேயே வருகை தந்திருந்தார். இதுதொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கiயில்…

பிரதேச சபை உறுப்பினர்களாகிய எமக்கே இந்த நிலமை என்றால் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைத்துவரும் மக்களின் நிலமை என்னவாகும் என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை. விவசாயிகள், மீனவர்கள், உள்ளிட்ட பலரும் எரிபொருட்கள் இல்லாமல் மிகவும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். தற்போது எரிபொருட்கள் பெறுவதற்கு காத்திருந்த மக்கள் மரணித்துள்ளார்கள், பஞ்சத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியாவிற்குக்கூட எமது மக்கள் தப்பிச் செல்கின்றார்கள்.

இலங்கையில் அரசு இவ்வாறு செயற்பட்டால் எமது நாடு சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளைப் போன்றுதான் நாட்டின் நிமையும் சென்றுவிடும். எனவே அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும். நிவாரணங்களை வழங்க முடியாத அரசு வீட்டுக்குச் செல்ல வேண்டும். அரச கட்சியிலிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட அக்கட்சியிலிருந்து விலகிச் செல்லும் நிலமையும் ஏற்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.

Posted in Uncategorized

“யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம்” 28ஆம் திகதி திறப்பு விழா!

இந்திய அரச நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள “யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம்” எதிர்வரும் 28ஆம் திகதி திறக்கப்படும் என்று யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இன்றைய சபை அமர்வில் அறிவித்தார்.

திறப்பு நிகழ்வு ஆடம்பரமில்லாது நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாள் யாழ்.மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோருடன் இந்தியத் துணைத் தூதுவரும் பண்பாட்டு மைய வளாகத்தில் திறப்பு நிகழ்வு தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

இதனிடையே,

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்த பண்பாட்டு மையத் திறப்பு நிகழ்வில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் தொலை தூர தொழில்நுட்பம் ஊடாக திரை நீக்கம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோட்டாவின் செயற்பாடுகளினால் இ.தொ.கா கடும் அதிருப்தி – ஜீவன் தொண்டமானுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட முக்கிய அமைச்சர்?

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவரினை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் இரசாயன உர இறக்குமதியை தடைசெய்வதற்கு கட்சியினால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், ஜனாதிபதியின் தீர்மானம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்தமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று உரத்தடையானது தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கமே எனவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் குறித்து அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக “ஜனாதிபதி எங்கள் பேச்சைக் கேட்பதில்லை. நாங்கள் எங்கள் கவலைகளை பிரதமரிடம் தெரிவித்துள்ளோம்,” என கட்சியின் முக்கிஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, சர்வக் கட்சி மாநாட்டை புறக்கணித்தமை தொடர்பாக அரசாங்கத்தின் இரண்டு முக்கியஸ்தர்கள், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற உணவகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் குறித்த விடயத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்து கொண்டு, சர்வக் கட்சி மாநாட்டை புறக்கணித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அப்படி செய்ய வேண்டுமாயின் அமைச்சர் பதவியில் இருந்து விலகி விட்டுஅதனை செய்ய வேண்டும் என குறித்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் கூறியுள்ளார்.

இதன் போது பதிலளித்துள்ள ஜீவன் தொண்டமான், அமைச்சராக பதவி வகித்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை எடுப்பது தான் எனவும், அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதை கட்சி முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் இன்றைய பொருளாதார நிலையில் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு

தற்போதைய மலினமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம் என்று கேட்டால் கொரோனாவையும் உக்ரைன் போரையும் காரணம் காட்டுவார்கள். உலகம் எங்கும் கொரோனா தாக்கம் ஏற்பட்டிருக்கும் போது ஏனைய நாடுகளில் ஏற்படாத பொருளாதார வீழ்ச்சி இலங்கையில் எவ்வாறு ஏற்பட்டது? கேட்கிறவன் கேனையன் என்றால் எலி ஏரோபிளேன் ஓட்டுமாம்.

வீடாக இருந்தால் என்ன நாடாக இருந்தால் என்ன கடனில் மூழ்கிருப்போர் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டுமானால் திறமையான இல்லத்தரசிகள் பயன்படுத்தும் அடிப்படை பொருளாதார உபாயத்தை பயன்படுத்த வேண்டும். அதாவது வருமானத்தை மேலும் மேலும் அதிகரிக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் செலவுகளை கட்டுப்படுத்துவதே வீட்டையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்குரிய ஒரே உபாயம் ஆகும்.

Janes இணையத்தள அறிக்கையின்படி இலங்கையின் பாதுகாப்பு செலவீன ஒதுக்கீடுகள் 2022 இல் 2021 இல் இருந்ததைவிட 14% இனால் 373 பில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது. நாட்டை பாதுகாப்பதே ஆயுதப்படையினரின் ஒரே கடமையாக இருக்க வேண்டும்.

ஆனால் இதை விடுத்து போர் நடக்காத சூழ்நிலையில் சந்திக்கு சந்தி ஆயுதப்படையினரின் சோதனைச்சாவடிகள் போதாதென்று இப்போது பெற்றோல் நிலையங்களில் ஆயுதப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு ஆயுதப்படையினர் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்க செலவில் சதுரங்கம் உட்பட விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கிறார்கள்.

இதுவா நாட்டில் செலவீனங்களை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் உபாயம் ? பொருளாதார பிரச்சினைகளில் நாடு மூழ்கி இருக்கும் போது தென் பகுதி தலைவர்கள் வடக்குக்கு வந்து எதாவது நிவாரணம் வழங்குகிறார்களா? வழமை போல தமது பேரினவாத வாக்கு வங்கியை தக்க வைப்பதற்கு வடக்கிலும் கிழக்கிலும் பல இடங்களிலும் பௌத்த விகாரைகளை நிறுவுகிறார்கள். தமிழர் அல்லாத குடியேற்றப்பட்டவர்களுக்கு காணி உறுதி வழங்குகிறார்கள்.

வட்டிக்கு வெளிநாட்டுக் கடன் எடுத்து ரோலிங் மூலமாக நாட்டை நிமிர்த்தலாமா ? முதலில் சீனாவிடம் கடன், பிறகு வங்காள தேசத்திடம் கடன் இப்போது இந்தியாவிடம் கடன். சீனாவும் இந்தியாவும் கடன் கொடுக்கும் போர்வையில் சத்தம் இல்லாமல் இரத்தம் சிந்தாமல் நாட்டின் பல இடங்களையும் வளங்களையும் சூறையாடிக் கொண்டு போகிறார்கள். இதை தட்டிக் கேட்கமுடியாத ஒரு கையாலாகாத எதிர்க்கட்சி தலைவர்.

நாள்தோறும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது . இந்த மாதம் 18ம் திகதியில் மாத்திரம் 55.95 பில்லியன் ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டதாகவும் இந்த மாதத்தில் மாத்திரம் 18ம் திகதி வரையில் 172.34 பில்லியன்கள் அச்சடிப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன (2).

இந்த சூழ்நிலையில் பல இடங்களில் மக்கள் பட்டினியால் வாடிக் கொண்டு வரிசைகளில் நின்று கொண்டிருக்கும் நிலையில் சிலர் வீழ்ந்து இறப்பதனால் மக்களின் வெறுப்பை மிகவும் கடுமையாக சந்தித்துள்ள நிலையில் கூட்டப்பட்ட சர்வகட்சி கூட்டத்துக்கு தமிழ் தலைவர்களும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழ் கட்சிகளின் நிலையோ அந்தோ பரிதாபம்! அரசுத் தலைவரை சந்திக்க தனியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று அழுது கொண்டு இந்தக் கூட்டத்துக்கு செல்லுகிறார்கள்.

இதன்மூலம் இவர்கள் சாதிக்கப் போவது என்ன ? இவர்கள் சொல்லி பணம் அடிப்பதை நிறுத்தப் போகிறார்களா? அல்லது கடன் ரோலிங் ஐ விட்டுவிட்டு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பாதுகாப்பு உட்பட அனைத்து துறைகளிலும் வீண் செலவீனங்களை குறைக்கப் போகிறார்களா? குறைந்த பட்சம் இத்தகைய கூட்டங்களுக்கு முன்நிபந்தனைகள் எதுவுமின்றி செல்வதை தவிர்ப்பதன் மூலம் தமிழர்களின் தன்மானத்தையாவது காப்பாற்றுவார்களா ?

Dr முரளி வல்லிபுரநாதன்

Posted in Uncategorized

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் சத்தியாகிரக போராட்டம்

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி, மக்களின் துயரங்களை அரசாங்கத்திற்கு கூற போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹைட்பார்க்கில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டம் நடத்துவது சத்தியாகிரகப் போராட்டத்தின் எதிர்பார்ப்பு அல்ல. மக்கள் படும் துயரங்கள் குறித்து அரசாங்கத்திற்கு செய்தியை வழங்குவதே இதன் நோக்கம். நாடு என்ற வகையில் நாம் அனைவரும் தற்போது ஒன்றிணைய வேண்டும்.

தற்போது அவசியமானது அரசியல் அதிகார போராட்டம் அல்ல.மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அத்துடன் நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு தீர்வை தேட வேண்டும்.

அப்பாவி மக்கள் இரவு பகல் பாராது வரிசைகளில் துன்பப்பட்டு வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர வேண்டுமாயின் நாடு என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

இன, சமய பேதங்களை ஒதுக்கி வைத்து விட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழரசுக்கட்சி , புளொட் ஜனாதிபதியை சந்தித்து பேசியது

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான குறித்த சந்திப்பு பகல் 1.30 மணி வரை நீடித்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் மாத்திரமே ஜனாதிபதியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பில் கலந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, PLOTE அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான M.A. சுமந்திரன், S. சிறிதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், த.கலையரசன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

பங்காளிக் கட்சியான TELO எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் ஜனாதிபதியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பு மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை பிரயோகிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் 07 தமிழ் தேசிய கட்சிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏழு கட்சிகள் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஜனாதிபதியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

மகிந்தவின் பதாகைக்கான பெறுமதியைக் கூட தமிழர் உயிர்களுக்கு அரசு வழங்கவில்லை – ரெலோ யாழ் மாவட்ட தலைவர் நிரோஷ்

வரவேற்புப் பதாகைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட தமிழர் உயிர்களுக்கு நாட்டில் கொடுக்கப்படவில்லை என்பதையே இன்றைய வாக்குமூலம் வெளிப்படுத்துவதாக ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமானதவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் யாழ். வருகையின் போது, ஆட்களைத் திரட்டி வந்து பிரதமரை வரவேற்பதற்கான பதாகைகளை எரித்தார்கள் என கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் பிரகாரம் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் செல்வரட்ணம் மயுரன் ஆகியோரிடம் இன்று வியாழக்கிழமை (24) பொலிஸ் வாக்கு மூலம் பெறப்பட்டது.

வாக்கு மூலத்தின் பின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் பிரகாரம் நாம் மட்டுவில் பகுதியில் ஆட்களைக் கூட்டிவந்து பிரதமரின் வரவேற்பு பதாகைகளை எரியூட்டியதாக எம் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் எம்மிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது. நாம் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி வேண்டி ஜனநாயக வழியில் குறித்த பகுதியில் போராடினோம் என்றும் யாரால் எரிக்கப்பட்டது என்பது தெரியாது எனவும் போராட்டம் ஜனநாயக வழியிலேயே இடம்பெற்றது என்பதையும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படமுடியாதது என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.

ராஜபக்சக்களின் ஆட்சியிலேயே ஆயிரக்கணக்காணவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இதற்கு நீதி கேட்டுப் போராடிய தாய்மார் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை யாவரும் அறிந்ததாகும். தாய்மார்; தாக்கப்பட்டது பற்றி நாட்டில் விசாரணை இல்லை. ஆனால,; வீதிகளில் தூக்கப்பட்ட பதாகைகளை யார் எரித்தார்கள் என நாட்டில் பாரிய விசாரணைகள் நடைபெறுகின்றன. இது தான் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்த நிலை. தாய்மார் தாக்கப்படும் போது நிகழ்வில் பேசிய பிரதமர் வடக்கிலுள்ளவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தனக்குள்ளது என பொய்யுரைத்தார்.

தமிழர் உயிர்களைக் காட்டிலும் கட்டவுட்களுக்கு இலங்கையில் பாதுகாப்புள்ளது என்பதை தாய்மார் தாக்கப்பட்டதை கணக்கில் ஏனும் எடுக்காது பிரதமரின் பதாகை எரிக்கப்பட்டமை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கும் அரச அதிகாரத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் மாவட்டப் பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் மீது பொலிசார் தாக்குதல் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் பொலிசாரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை விரைவில் ஆரம்பிக்கப்பட்டவுள்ள நிலையில், தற்போது அதற்கான முன்னாயத்தங்கள் இம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மகிந்த றாஜபக்ஷ கடந்த சனி ,ஞாயிறு ஆகிய இரு தினங்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருத்தார். அவருடைய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்கள் இடம்பெற்றன.

இந்நிலையில், தென்மராட்சி மட்டுவில் பகுதியில் பிரதமர் பொருளாதார மத்திய நிலையத்தை திறக்கும் இடத்தில் ஆர்பாட்டம் மேற்கொள்வதற்காக பஸ் வண்டியில் சென்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை பஸ்ஸிலிருந்து இறங்கவிடாது தடுத்த பொலிசார் அதையும் மீறி இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏழும்பியுள்ள நிலையில் குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்கள்.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவின் தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளமையை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய பணிப்பாளர் உறுதிபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

மாகாண சபை தேர்தலை நடத்த அமெரிக்கா வலியுறுத்து!

மாகாண சபை தேர்தலை நடத்துமாறு வெளிவிவகார அமைச்ருடனான சந்திப்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்ரோறியா நூலண்ட் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வந்துள்ள திருமதி நூலண்ட் நேற்று வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸை சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கையை வரவேற்பதாகவும் கூறினார்.

மிகவும் கடினமான மற்றும் முக்கிய தருணத்தில் தாம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் இந்த தருணத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி பெற இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவு துணிச்சலான நடவடிக்கை எனவும் கூறினார்.

தமிழ் நாடு வரும் ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி தரும்-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அமெரிக்கு டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ரூ.284 ஆக வீழ்ச்சியடைந்து இருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அத்தோடு அரசுக்கு எதிரான போராட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்திற்கு மீண்டும் ஈழத்தமிழர்கள் அகதிகளாக செல்லத் தொடங்கியுள்ளனர். மிகவும் ஆபத்தான கடல் வழிப்பயணம் மூலம் அவர்கள் தமிழ்நாட்டிற்கு செல்லத்தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு சென்றவர்கள் மண்டப முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி தரும்

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களுக்கு போதுமான வசதிகளை ஏற்படுத்தி தர தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வெளியிட்டுள்ள முழு அறிக்கையைக் காண, கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்…

அதே நேரம் இலங்கையில் இருந்து தமிழ்நாடு வரும் ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் பல கட்சிகளும் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தது.

இந்நிலையில், ஈழத்தமிழர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் பேசி வருவதாக சட்ட சபையில் குறிப்பிட்ட தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழ் நாடு வரும் ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலம் ஏற்படுத்தி தரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.