நல்லூர் மந்திரி மனை யன்னல்கள் திருட்டு!

வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் என்பன களவாடப்பட்டுள்ளன.

மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவை பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கட்டிடத்தின் வரலாற்று பின்னணி

மந்திரி மனை என்பது இலங்கையின் வட பகுதியில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் தலை நகராக இருந்த நல்லூரில் அரச காலத்தோடு சம்மந்தபடும் ஒரு கட்டிடமாகும்.

போர்த்துக்கேயரால் யாழ்ப்பாண அரசு கைப்பற்றப்படுவதற்க முன்னுள்ள காலப்பகுதி வரை அமைச்சரின் இருப்பிடமாக இருந்துள்ளது.

இது 13 நூற்றாண்டுக்கு முற்பட்டது. இக் கட்டிடம் செங்கட்டி சுண்ணாம்பு சாந்து மரங்கள் ஓடுகள்கொண்டு கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிவரும் தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் : ஐயம் கொள்ளத் தேவையில்லை என்கிறார் நிமல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடும். அதில் எவ்வித ஐயமும் கொள்ளத் தேவையில்லை.

எம்மால் வலியுறுத்தப்பட்டு வந்த சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதன் மூலம் அரசாங்கத்தில் சுதந்திர கட்சிக்கு தற்போது எந்தளவிற்கு முக்கியத்துவமளிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு நேற்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டும் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளராக நியமனம் பெறுவது இலகுவானதொரு விடயமல்ல.

எவ்வாறிருப்பினும் கடந்த தேர்தல்களில் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் இடம்பெற்ற தவறால் கொழும்பில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. அதற்காக கொழும்பு மக்களிடம் நான் மன்னிப்பு கோருகின்றேன்.

இவ்வாறு கட்சியை மறுசீரமைப்பதற்கு எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் தேர்தல் முடிவுகள் மக்கள் கைகளிலேயே உள்ளது.

அண்மையில் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் , நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அரசாங்கத்தில் தற்போது சுதந்திர கட்சிக்கு எந்தளவு முக்கியத்துவமளிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.

எனினும் இதனை எண்ணிக்கொண்டு நாம் ஒருபோதும ஏமாந்து விட மாட்டோம். அடுத்தடுத்த தேர்தல்கள் அனைத்திலும் தனித்தே போட்டியிடுவோம்.

பிரதேசசபை தேர்தலானாலும் , மாகாணசபை தேர்தலானாலும் , பாராளுமன்ற தேர்தலானாலும் சு.க தனித்தே போட்டியிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தேர்தலின் பின்னர் எமது கொள்ளைகளுடன் இணக்கப்பாட்டினை எட்டும் எந்தவொரு தரப்பினருடனும் கூட்டணியமைப்பதற்கு தயாராகவே உள்ளோம்.

அதற்காக புதிய சக்தியுன் சுதந்திர கட்சியை வலுப்படுத்துவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பினைக் கோருகின்றோம் என்றார்.

லொஹானின் அமைச்சுப் பதவி ஏற்பு நீதியை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது; சபா குகதாஸ்!

லொஹானின் அமைச்சுப் பதவி ஏற்பு நீதியை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இராஐாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அவர்களுக்கு ஏற்கனவே இருந்த இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் கைத்தொழில் விடையதானங்களுக்கு மேலதிகமாக (10/03/2022) களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகு மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஐாங்க அமைச்சு ஐனாதிபதியால் இன்று வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் லொஹான் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஐாங்க அமைச்சராக இருந்த போது மது போதையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதி ஒருவரை அழைத்து தனது கைத் துப்பாக்கியை கைதியின் தலையில் வைத்து தனது சப்பாத்தை நாக்கால் நக்குமாறு பணித்ததுடன் இழிவான வார்த்தகளால் பேசிய ரத்வத்த தொடர்பான நீதித்துறை விசாரணை நடவடிக்கை முடிவில்லாமல் தொடரும் போது மீண்டும் அமைச்சு பதவி வழங்கப்பட்டமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றது.

மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவின் நீதி அமைச்சரும் வெளிவிவகார அமைச்சரும் உள்ளக பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதாக கூறிய வாக்குறுதி ஏமாற்று என்பதை லொஹானின் பதவி ஏற்பு வெளிப்படுத்தியுள்ளது.

Posted in Uncategorized

முல்லைத்தீவு சபை அமர்வுக்கு மாட்டு வண்டியில் சென்ற ரெலோ தவிசாளர் விஜிந்தன்

நாட்டில் அதிகரித்துள்ள பொருட்கள் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று(10) மாட்டு வண்டிலில் பிரதேச சபைக்கு சென்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டின் இந்த நிலைமைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைபற்று பிரதேசசபை தவிசாளருமான விஜிந்தன், உப தவிசாளர் உறுப்பினர்கள் பிரதேசசபையை நோக்கி இன்று சென்றுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் 46வது சபை அமர்விற்கே இவ்வாறு மாட்டு வண்டியில் உறுப்பினர்கள் வந்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டத்தின் 5 ஆம் ஆண்டு நிறைவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் !

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் (08) மகளிர் தினத்தை துக்க தினமாக கடைபிடித்து முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு நிறைவடைந்தது .

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்ட தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் தருணத்தில் வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளுக்கான நீதியை சர்வதேச சமூகம் விரைந்து வழங்க இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரியும் இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அதனை துக்க தினமாக பிரகடனம் செய்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டது.

இப்போராட்டத்தில் ,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமுகமட்டபிரதிநிதிகள், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டோர் கவனயீர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்தினர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் “உலகெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளில் தெருவில் கிடந்து அழ வைத்திருக்கிறது இந்த அரசு, எமது பிள்ளைகள் நீங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது ஒப்படைத்தோம், கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும், ஐ.நாவின் மனித உரிமை கூட்டத்தொடரில் இணை அனுசரணை வழங்கும் நாடுகள் இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்த ஆதரவு நல்க வேண்டும்,

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு மரணச்சான்றிதழ் தான் பதில் என்றால் கொலையாளி யார் ? உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்? ,கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே ! பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றியே இறந்துகொண்டிருக்கின்றோம்.,போன்ற வாசகங்களை தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழியிலான நீண்ட பதாதைகளை கையில் ஏந்தி கண்ணீருடன் கவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை இராணுவம் ,இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் சிவில் உடை தரித்த பொலிஸார் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டனர் .

Posted in Uncategorized

சிரேஷ்ட பிரஜைகள் நாட்டுக்கு வளம் என்பதை நிருபித்தவர் அமரர் கனகராசா –சபையில் தவிசாளர் நிரோஷ் இரங்கல்

வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் முதியோர்களின் நலவாழ்வு தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்ட முதியோர் சங்கத் தலைவரும் சிரோஷ்ட பிரஜையுமான சுப்பிரமணியம் கனகராசா அவர்களின் இழப்பிற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உத்தியோகபூர்வமாக அஞ்சலிக்கின்றது என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இறுதியா இடம்பெற்ற சபையின் விசேட அமர்வில் அன்னாருக்கு அஞ்சலியைத் தெரிவிக்கும் முகமாக கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், அமரர் சுப்பிரமணியம் கனகராஜா அவர்கள் எம்மை விட்டுப் பிரிவடைந்துள்ளார். அவர் எமது பிரதேசத்தில் முதியோரின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு சிரோஷ்ட பிரஜைகளின் நலவாழ்விற்கான பல விடயங்களைச் சாதித்து இருக்கின்றார்.

வலிகாமம் கிழக்கில் சிரோஷ்ட பிரஜைகள் ரம்யமாகவும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வாழவேண்டும் என தன் உடல் நலனையும் பாராது சிந்தித்துச் செயற்பட்ட ஓர் கல்வியாளர் ஆவராவார். சிறுப்பிட்டியில் முதியோர் சங்கத்தின் தலைவராக நல்ல பல காரியங்களை நிறைவேற்றியுள்ளார். அவர் சிரேஷ்ட பிரஜைகளின் நலவாழ்வு தொடர்பில் சகல அரச திணைக்களங்களுடனும் கடிதத்தொடர்பு வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகளைப் பேணியவர். சிறந்த ஆங்கிலப் புலமையும் கல்விப் புலமையும் மிக்க அதிபருமாவார்.

அவர் ஏற்கனவே சி.வை. தாமேதரம்பிள்ளை நற்பணி மன்றம் உள்ளிட்ட பல தாபனங்களினால் கௌரவிக்கப்பட்டவராவார். தான் ஒரு மூத்த பிரஜையாக இருந்து இள நிலையாளர்களை வழிநடத்தும் தன்னலமற்ற ஆளுமை அவரிடம் காணப்பட்டது.

பிரதேச சபையின் ஒவ்வொரு அபிவிருத்தி விடயத்திலும் அவர் அக்கறை கொண்டிருந்தார். தவிசாளரான எனக்கும் ஏனைய பல உறுப்பினருக்கும் அடிக்கடி வழிகாட்டல்களை தொலைபேசி ஊடாக வழங்கும் ஓர் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய வலிகாமம் கிழக்கின் பொக்கிசத்தினையே நாம் இழந்திருக்கின்றோம்.
சின்னச்சின்ன மாற்றங்கள் பல முன்னேற்றங்களை எம்மிடத்தில் கொண்டு வரும் என அரச உத்தியோகத்தர்கள் முதல் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் வரையில் அவர் தெரிவித்து குறை நிறைகளைச் சுட்டிக்காட்டும் அவர் போன்ற பெரியவர்களை இழப்பது வேதனைக்குரியது.

முதியவர்கள் வாழும் போதே கௌரவமளிக்கப்பட வேண்டும் என பலதடவைகள் வலிகாமம் கிழக்கில் முதியோர் தினத்தினை வருடாவருடம் சிறப்புற நடத்தியவர். சிரேஷ்ட பிரஜைகளின் உரிமைக்காகவும் செயற்பட்டவர். சிரேஷ்ட பிரஜைகள் ஓய்வூதியர்கள் நாட்டுக்குச் சுமையாகக்கூடாது வளமாக அமையவேண்டும் என உழைத்த நல்ல மனிதரை இழந்துள்ளோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கான ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்தவேண்டாம் – சீனா வலியுறுத்தல்

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கான ஓர் ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று சீனா பேரவையில் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இலங்கை மீதான விவாதத்தில் பல்வேறு நாடுகள் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த நிலையில், இலங்கை தொடர்பான விவாதத்தின் இரண்டாம்நாள் அமர்வு நேற்று திங்கட்கிழமை ஜெனிவா நேரப்படி காலை 9 மணிக்கு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சீனாவின் பிரதிநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

இலங்கை குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

அதேவேளை எமது நட்புறவு நாடு என்ற ரீதியில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்தல், மேம்படுத்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். அதேபோன்று நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளும் பாராட்டத்தக்கவையாகும்.

எனினும் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானமானது, பக்கச்சார்பற்ற தன்மை, அரசியல் ரீதியான பாகுபாடற்ற தன்மை, தேர்வுசெய்து இயங்காத தன்மை உள்ளிட்ட பேரவையின் ஸ்தாபகக்கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானதாகக் காணப்படுகின்றது.

இலங்கையின் அரசியல் உறுதிப்பாடு, இறையாண்மை ஆகியவற்றுக்கு பேரவை மதிப்பளிக்கவேண்டியது அவசியமாகும். அதேபோன்று அந்நாட்டின் தேசிய ரீதியான வரையறைகளுக்கு அமைவாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான பொறிமுறையை முன்னெடுப்பதற்கு இடமளிக்கவேண்டும்.

இலங்கைக்குள் தலையீடுகளை மேற்கொள்வதற்கான ஓர் ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.

Posted in Uncategorized

மார்ச் இறுதியில் பசில் ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ள தீர்மானம்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மார்ச் மாத இறுதிப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு தயாராகியுள்ளார்.

இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கருடனான தொலைபேசி கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு இந்தியா ஆதரவை வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

Posted in Uncategorized

ஒரே நாடு ஒரே போக்கு ஒரே இருள் | பி.மாணிக்கவாசகம்

சிங்கள பௌத்த தேசியவாதத்தில் ஊறியுள்ள பேரின அரசியல்வாதிகள் இலங்கையின் பூர்வீகக் குடிகளாகிய தமிழ் மக்களின் அரசியல் அதிகார உரிமைகளைத் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றனர். இதன் விளைவாகவே தமிழ் மக்கள் தங்களுடைய தாயகப் பிரதேசத்தில் தனிநாடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்தத் தனிநாட்டுக் கோரிக்கை தனித் தமிழ் ஈழத்துக்கான ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது.
ஆனால் சாத்வீக வழியில் ஆரம்பிக்கப்பட்டு ஒத்துழையாமையாக வளர்ச்சியடைந்து பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வை எட்ட முயற்சித்த போதிலும் தமிழ் அரசியல் தலைவர்களினால் தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகார உரிமைகளை வென்றெடுக்க முடியமாற்போனது.

தனிநாட்டுக் கோரிக்கையை நிராகரித்த அரசு இலங்கையை ஒரே நாடாகப் பிரகடனப்படுத்தியது. அதுவும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் அடிப்படையிலான ஒரே நாடாகும் என்று நிலைப்பாட்டை வலியுறுத்தியது.

பிரிவினைவாத எதிர்ப்பும் ஒரே நாட்டு நிலைப்பாடும்

இந்தப் பின்னணியிலேயே ஈழக் கோரிக்கைக்கான ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து 30 வருட கால யுத்தத்தை 2009 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்தது. ஈழக் கோரிக்கைக்காகப் போராடிய விடுதலைப்புலிகளின் பிரிவினை வாதத்தைத் அரசியலமைப்பின் ஆறாம் திருத்தச் சட்டத்தின் மூலம் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகள் தடை செய்தனர்.

எந்தவொரு அரச நிர்வாகக் கட்டமைப்பிலும் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்பவர்கள் பிரிவினைவாதத்தை முன்வைக்க முடியாது என சட்ட ரீதியாக நிலைநாட்டியது. அத்துடன் எந்த நிலையிலாயினும் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து பதவியைப் பொறுப் பேற்பதற்கான சத்தியப் பிரமாணம் செய்பவர்கள் ஆறாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் பிரிவினைவாதத்தைக் கோர மாட்டோம் என சத்தியம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே இலங்கை என்பது ஒரே நாடு என்ற நிலைப்பாடு நிலைநிறுத்தப்பட்டது. இந்த ஒரே நாடு என்ற நிலைப்பாட்டைத் தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரே சட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி கோத்தாபாய அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

இந்த முயற்சிக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார். ஞானசார தேரர் ஒரு பௌத்த துறவியாக இருந்த போதிலும் முஸ்லிம்களுக்கு எதிரான தீவிர இனவாதியாகச் செயற்பட்டவர். செயற்படுபவர். சிங்கள பௌத்த தேசியவாதிகளில் முக்கியமானவராகத் திகழ்பவர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தினால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட இவரை நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பளித்து விடுதலை செய்தார். அதன் பின்னரும் ஞானசார தேரர் தனது இனவாதப் போக்கினைக் கைவிடவில்லை. முன்னரைப் போன்ற தீவிரவாதியாகவே செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் தமிழ் மக்களின் பாரம்பரிய சட்டங்களையும், முஸ்லிம்களின் சட்டங்களையும் இல்லாதொழித்து பௌத்த சிங்கள மக்களை முதன்மைப்படுத்தும் தன்மையிலான சட்டமாகவே ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கோசத்தின் ஊடாகப் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சிறுபான்மை தேசிய இன மக்கள் கருதுகின்றனர்.

அதனை உறுதி செய்யும் வகையிலேயே பல்வேறு அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் ஞானசார தேரருடைய கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் ஒரே நாடு ஒரே சட்டம் என்பது சிறுபான்மை இன மக்களை சட்டரீதியாக அதிகார வலு நிலையில் அடக்கி ஒடுக்குவதற்கான எத்தனிப்பு இடம்பெறுவதாக சிறுபான்மை இன மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இராணுவ மயமாகியுள்ள சிவில் நிர்வாகம்

இருள்யுத்தத்தை வெற்றிகொண்டு சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் வெற்றி வீரர்களாக எழுச்சி பெற்ற ராஜபக்ச சகோதரர்களின் – 2019 ஆம் ஆண்டிற்குப் பின்னரான இரண்டாம் கட்ட ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லாத நடவடிக்கைகளே அதிகமாக முன்னெடுக்கப் பட்டு வருவதாக ஜனநாயகச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். இந்தக் கருத்தைப் பொது அமைப்புக்களும் ஜனநாயகக் கட்டமைப்பில் நம்பிக்கை கொண்டுள்ள அமைப்புக்களும் பிரதிபலித்திருக்கின்றன.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலின் போது தேசிய பாதுகாப்பிற்கு அந்த ஆட்சியாளர்களினால் ஊறு விளைவிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, இனவாதப் பிரசாரத்தை வலிமையாக முன்னெடுத்து ராஜபக்சக்கள் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் ஊடாகத் தமது ஆட்சி அதிகாரத்தை மீண்டும் நிலை நாட்டினார்கள். இதன் மூலம் பௌத்த சிங்கள மக்களினால் அமோக ஆதரவில் கோத்தாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

இராணுவப் பின்னணியைக் கொண்டவராகவும், அரசியல் வழியிலான அனுபவ மற்றராகவும் கருதப்படுகின்ற ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இராணுவ முனைப்புப் பெற்ற ஓர் அரசாட்சியையே முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ற வகையிலேயே அவருடைய நடவடிக்கைகள் அமைந்தன.

அரசியல் சாணக்கியமிக்க வகையிலான கொள்கைகளை அவருடைய செயற்பாடுகளில் காண முடியவில்லை என அரசியல் நிபுணர்களும் ஜனநாயகச் செயற்பாட்டாளர்களும் எடுத்துக் காட்டியிருந்தனர். அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே பணி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்களின் தலைமைப் பதவிகளில் நியமித்தார்.

இருள்கோவிட் 19 நோய் அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்கான செயலணியின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வெளி விவகார அமைச்சு, சுகாதார அமைச்சு உள்ளிட்ட முக்கிய தலைமைப் பதவிகளுக்குப் பணி ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரி களையே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச நியமித்தார். சிவில் நிர்வாகக் கட்டமைப்பை இராணுவ மயப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகவே இது அமைந்தது.

முரண்பாடான நிலைமைகள்

இராணுவ அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் சீரான சிவில் நிர்வாகத்தைக் கொண்டு நடத்த முடியும். ஊழல்கள் மோசடிகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றெல்லாம் அவருடைய நடவடிக்கை சிலாகித்துப் பேசப்பட்டது. ஆனால் நிலைமைகள் தலைகீழாகவே மாறியிருக்கின்றன. இராணுவ அதிகாரிகளின் கீழான அமைச்சுக்களின் நடவடிக்கைகளில் என்ன நடக்கின்றது, உண்மையான நிலை என்ன என்பது மூடு மந்திரமாகவே உள்ளது.

அமைச்சக்களின் செயலாளர்களும், ராஜாங்க அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் அரச உயரதிகாரிகள் யாவரும் தங்களுக்கு ஏற்றவாறான கருத்துக்களையே வெளியிடுகின்றனர். ஜனாதிபதியின் கருத்துக்களும் இவற்றுக்கு மத்தியில் அவ்வப் போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்தக் கருத்துக்களும் அமைச்சக்கள் திணைக்களங்களின் நிலைப் பாடுகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவே காணப்படுகின்றன. நெருக்கடிகள் மிகுந்த பிரச்சினைகளில் ஜனாதிபதியின் கூற்று ஒன்றாக இருக்க நடைமுறை நடவடிக்கைகள் நேர்மாறானதாகவே அமைந்திருக்கின்றன.

குறிப்பாக டொலர் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள மருந்து, எரிபொருள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டு;ப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு கருத்தையும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வேறு ஒரு கருத்தையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் பற்றாக்குறையினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களைத் தீர்க்கும் வகையில் ஜனாதிபதி விடுக்கின்ற உத்தரவுகளும் வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பிரச்சினை மாத்திரம் தீராமல் தொடர்ந்து கொண்;டிருப்பதைக் காண முடிகின்றது.

உதாரணமாக எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் வெட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள். ஆனால் இந்த மின்வெட்டு தவிர்க்க முடியாத நடவடிக்கை என்று மின்சாரசபை அதிகாரிகள் கருத்து வெளியிடுகின்ற அதேவேளை, அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என அதற்குப் பொறுப்பான பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு கூறியது. அதேவேளை எந்தக் காரணத்தைக் கொண்டும் மின்சாரம் தடைப்படுத்தப்பட மாட்டாது என மின்விநியோகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கூறிய கருத்தும் வெளியாகி இருந்தது. அதேவேளை தடையின்றி மின்விநியோகம் செயற்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட தகவலும் வெளியாகியிருந்தது.

ஆனால் எல்லாவற்றையும் மீறி மின்வெட்டு நiமுறைப்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் என்ன நடக்கின்றது. உண்மையில் நிர்வாகச் செயற்பாடுகள் யாருடைய கையில் இருக்கின்றது. அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது குறித்து குழப்பமடையவே நேரிட்டிருந்தது.

என்ன நடக்கின்றது?

அண்மையில் மின்விநியோகம் தடையின்றி செயற்படுத்தப்படும் என்றும், அதற்குத் தேவையான எரிபொருளைத் தட்டுப்பாடின்றி வழங்குமா

று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் எரிபொருள் போதிய அளவில் கிடைக்காத காரணத்தினால் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருப்பதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கமைய நாட்டில் இரண்டு மணித்தியாலங்களாக இருந்த மின்வெட்டு நாலரை மணித்தியாலங்களாகி இப்பொது ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப் படுத்தப்படுகின்றது. இது நாளொன்றுக்குப் பத்து மணித்தியாலங்களாக அதிகரிக்கின்ற நிலைமை குறித்த எதிர்வு கூறல்களும் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் நாடு நாளொன்றின் கிட்டத்தட்ட மூன்றிலொரு பங்கு நேரம் இருளில் மூழ்கிக் கிடக்க நேர்ந்திருக்கின்றது. ஆனால் உண்மையில் என்ன நடக்கின்றது, ஏன் இந்த நிலைமை, இதற்குத் தீர்வு கிடைக்குமா, கிடைக்காதா என்பது குறித்த உண்மையான நிலைமைகள் குறித்த வெளிப்படைத்தன்மைழயைக் காண முடியவில்லை.

எரிபொருள் தட்டுப்பாடும் மிக மோசமான நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. எரிபொருள் நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகம் நடைபெறுகின்றது. எரிபொருளுக்கு ஏன் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டது, அது எப்போது தீர்க்கப்படும் என்பது குறித்த உண்மையான – வெளிப்படையான தகவல்கள் எதுவும் பொதுமக்களுக்குக் கிடையாது.

இதனால் மின்வெட்டு காரணமாக நாடு இருள்ல் மூழ்கியிருப்பதைப் போலவே முக்கியமான நெருக்கடியான விடயங்கள் பற்றிய உண்மையான நிலைமைகள் என்ன குறித்த வெளிப்படையான நிலைமைகளைக் காண முடியவில்லை.

இதனால் ஒரே நாட்டுக் கோஷத்தை முன்வைத்துள்ள இந்த ஆட்சியில் ஜனாதிபதியினதும், அவருடைய வழியிலான ஒற்றைப் போக்குடைய அரச நிர்வாகச் செயற்பாடும், மின்சாரம் இல்லாத இருள் சூழ்ந்த நிலைமையும், நாட்டில் என்ன நடக்கின்றது, நாடு எங்கு சென்று கொண்டிருக்கின்றது என்பது தெரியாத இருளான நிலைமையுமே காணப்படுகின்றது.

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 7200 பன்னாட்டு அமைப்புகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம்

தமிழ் இன அழிப்புக்கான நீதி மற்றும் சுய நிர்ணய உரிமையை ஐ.நா அங்கீகரிக்குமாறு கோரி 7200க்கும் மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்கள் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடந்த வாரம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழ் இனத்தின் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு எதிரான பன்னாட்டு விசாரணை மற்றும் சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஐ.நாவில் அங்கத்துவம் பெற்ற 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 7200க்கும் மேற்பட்ட பன்னாட்டு அமைப்புக்களே எவ்வாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளன. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,

ஈழத் தமிழர்கள் கடந்த 20 வருடங்களாக தங்களது சுய நிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றனர்.

தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவது தமிழர்களைத் தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருப்பதற்கான நடவடிக்கையாகும்.

2009ம் ஆண்டு அறிக்கையில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் 2012ம் ஆண்டு மன்னார் பேராயர் ராயப்பு ஜோசப்புவினால் ஒரு இலட்சத்திற்கும் அதிகம் என உறுதி செய்யப்பட்டது.

பாடசாலைகளில் மருத்துவமனைகளில் மற்றும் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சிறீலங்கா போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்தது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் உலகத்தில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா செயற்குழு தெரிவித்துள்ளது.

போர்முடிந்து 13 வருடங்கள் கடந்த நிலையில் ஐ.நா மனித ஆணையகத்தின் உள்ளக பொறிமுறை மூலமான பொறுப்பு கூறலில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. சிறையில் பல வருடங்களாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் என்ற போர்வையில் தமிழ் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களை சிறைகளில் அடைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும். மேலும் இராணுவ மயமாக்கல், நில அபகரிப்பு, ஊடகவியலாளர் மீது தாக்குதல், மனித உரிமை செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துகின்றமை என தாக்குதல்கள் தொடந்த வண்ணமே உள்ளன.

ஐ.நாவின் அங்கத்துவ நாடுகள் தமது விசேட பிரதிநிதியை அனுப்பி இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணை செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கடிதம் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.