வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையை மூடிமறைக்க அரசு கடும் பிரயத்தனம்- சபா.குகதாஸ்

இலங்கை அரச படைகளினால் தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இருபத்து ஐயாயிரம் குடும்பங்களுக்கு அதிகமானோர் ஆண்டுக் கணக்காக தேடி அலைந்த வண்ணம் உள்ளனர். இவர்களது விபரங்கள் பல சர்வதேச ஆவணங்களிலும் ஆதாரப்படுத்தப்பட்டுள்ளன.

யுத்தகாலத்தில் இலங்கை இராணுவத்தால் வீடுகளில் புகுந்து கடத்தப்பட்டவர்கள் இறுதிப் போரில் இராணுவ சோதனைச் சாவடியில் சரணடைந்தவர்கள் மற்றும் உறவினர்களால் இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டவர்கள் என சாட்சியங்களுடன் உள்ள விடையத்தை இலங்கை அரசாங்கம் மூடிமறைக்க தற்போது கடும் பிரையத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ் விடையம் சர்வதேச ரீதியாக மனிதவுரிமை செயற்பாட்டில் தொடர்ந்தும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களையும் அபகீர்த்தியையும் நெருக்குவாரங்களையும் கொடுத்த வண்ணம உள்ளது இதில் இருந்து விடுபட சிங்கள ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் இதனை கைவிடுமாறும், காணாமல் போனவர்கள் வரவில்லை என்றால் அர்த்தம் என்ன, காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை , என பொறுப்பற்ற வகையில் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியைக் கொடுக்காமல் மூடி மறைத்து மறப்போம் மன்னிப்போம் என்ற வகையில் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது இனப்படுகொலை அரசாங்கம்.

ஆகவே தமிழர் தரப்பு ஒற்றுமையாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை தொடர்ந்து முன்னெடுப்பதே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்புக் கூறலையும் பெற்றுக் கொடுக்கும். பாதிக்கப்பட்ட மக்களும் தங்களுக்குள் பிரிவினைகளை களைந்து வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாது உறுதியாக பயணிப்பதே நீதிக்கான கதவுகளை திறக்கும் எனவும் மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல்: சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவும் நீதியை நிலைநாட்டவும் சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர மாற்று வழியில்லையென இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கமும் சட்ட மா அதிபர் திணைக்களமும் தவறியுள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உண்மையை மறைத்து, அரசியல் இலாபத்திற்காக இந்த தாக்குதலை பயன்படுத்தி, விடயங்களை சிக்கலாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை கண்கூடு எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவும், நீதியை நிலைநாட்டவும் சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர மாற்று வழியை தாம் காணவில்லையெனவும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

பொறுப்புக்கூறலை நிறைவேற்ற இலங்கை தவறியுள்ளது: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் விசனம்

இலங்கையின் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் உள்ள அசமந்தப்போக்கு தமது விசனத்திற்கு காரணமாக அமைந்துள்ளதென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் (Michelle Bachelet) குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடருக்காக இலங்கை தொடர்பில் அவர் முன்வைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவமயமாக்கல் , இன, மத, தேசியவாதம் என்பன ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் கூறியுள்ளார்.

சிறுபான்மை மக்களை சிரமப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையான நல்லிணக்கம் , பொறுப்புக்கூறல் பொறிமுறையை செயற்படுத்துவதற்காக பூரண நோக்கத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டியது அவசரத் தேவையாக உள்ளதெனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கால மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழ்வதை தடுப்பதற்காகவும் தண்டனை பெறாதிருப்பதை தடுப்பதற்காகவும் நிறுவன, பாதுகாப்பு துறைகளில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத தடை திருத்தச் சட்டமூலம் தொடர்பிலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் கவனம் செலுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை தாம் ஏற்றுக்கொண்டாலும், இலங்கையின் உத்தேச திருத்தங்கள் சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கு அமைய போதுமானதாக இல்லை எனவும் மிச்செல் பச்சலெட் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, பல வருடங்களுக்கு முன்னதாக முன்வைத்த பரிந்துரைகள், அவதானிப்புகளை முழுமையாக மீண்டும் பரிசீலனை செய்யுமாறு அவர் இலங்கை பாராளுமன்றம் மற்றும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 40/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து விலகி இரண்டு வருடங்கள் கடந்தாலும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையுடன் கூடிய திட்டமிடல் வரைபை இலங்கை அரசாங்கம் இன்னமும் முன்வைக்கவில்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தல்களை பகிரங்கப்படுத்துமாறும் ஆணையாளரின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இப்படியும் நடக்கிறது…! ஊர்க்குருவி

அண்மையில் ஒரு செய்தியைப் பார்த்ததுதான் இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத் துப் போராட்டத்தை நடத்திய வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், இதன்போது ஒரு நியாய மான கேள்வியைக் கேட்டிருந்தார்.

சுகிர்தன் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் மட்டுமல்ல, கூட்டமைப்பின் இளம் தலைவர்களில் முக்கிய மானவர். கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் தளபதிக ளில் ஒருவர்போல இயங்கிவருபவர்.

பயங்கரவாத தடைச் சட்டம், அரசியல் காரணங்களுக் காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது என்பது அவரின் குற்றச்சாட்டாக இருந்தது.

இல்லையெனில், கடந்த உள்@ராட்சி தேர்தல் பிரசாரத் தின்போது விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிபரப்பி பிரசாரம் செய்த அங்கஜன் இராமநாதன்மீது ஏன் இந்தச் சட்டம் பாயவில்லை. புலிகளின் தலைவர்களின் படங்கள் வைத்திருந்த அப்பாவிகள் கைது செய்யப்படுகின்றபோது, பகிரங்கமாக பாடல்களை ஒலிபரப்பிய அங்கஜன்மீது ஏன் அந்தச் சட்டம் பாயவில்லை என்பது அவரின் கேள்வி. – நியாயமானதுதான்.

அங்கஜன் அப்போது அரச தரப்பு எம். பி. அதனால்தான் அவர்மீது அந்தச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட வில்லை என்பது அவரின் குற்றச்சாட்டு.

இப்போது அதே குற்றச்சாட்டு கூட்டமைப்பின்மீதும் சுமத்தப்பட்டிருக்கின்றது.
கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், அண்மையில் உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து தமிழக முதலமைச் சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வரவிருக்கிறார். அந்த விஜயத்தின்போது தமிழர் விடயத்தில் ஓர் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மோடிக்கு சிம்மசொப்பனமாக திகழும் தலைவர் ஒருவரை வாழ்த்தி, போற்றி, புகழ்வது அவருக்கு மகிழ்ச்சியை உண்டாக் குமா என்று ஊர்க்குருவி இதுதொடர்பாக கேள்வியும் எழுப் பியிருந்தது.

இந்தக் கேள்வியில் தொக்கிநின்ற சந்தேகத்தை இப்போது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவும் கிளப் பியிருக்கின்றது. இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுடன் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்றிருந்தது கூட்டமைப்புக் குழு. அமெரிக்கா தங்களை அழைத்தபோது அவர்களையும் அழைத்திருந்தது என்று அப்போது விளக்க மளிக்கப்பட்டது. ஆனால், அவர்களை அழைத்தவர்கள் யார் என்பது தமிழ் மக்களுக்கு தெரியாததல்ல.

அது சரி, இப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்து டன் சேர்ந்து கூட்டமைப்பின் பேச்சாளர் தமிழக முதல்வ ருக்கு கடிதம் எழுதுகிறார். ஆனால், அதனை பயங்கரவாத தடைச் சட்டம் கண்டுகொள்ளவில்லை என்றால், அந்த கடித விவகாரத்திற்கு அரசின் ஆசியும் இருக்கிறதா என்றே ரெலோ இப்போது கேள்வி எழுப்பியிருக்கின்றது.

ஈழத்தமிழர் இனப்பிரச்னைக்கு தீர்வுகாணும் விடயத்தில் இந்தியப் பிரதமரின் உதவியைக் கோரி ரெலோ ஆறு கட்சிகளுடன் இணைந்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந் தது. அந்த ஆறு கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தமிழகம் செல்வதற்கு ரெலோ ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. தமிழக முதல்வரை மாத்திரமன்றி, அனைத்து தமிழக தலைவர்களையும் (பாரதிய ஜனதா கட்சி உட்பட) சந்திப்பதற்கு ரெலோ திட்டமிட்டிருந்ததுடன் அதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தபோது, தமிழக முதல்வருக்கு மாத்திரம், அதுவும் அவரை உலகத் தமிழினத்தின் காவலனாக வர்ணித்து ஒரு கடிதத்தை கூட்ட மைப்பின் பேரில் அதன் பேச்சாளர் தடைசெய்யப்பட்ட உலகத் தமிழர் பேரவையுடன் சேர்ந்து திடீரென்று அனுப்பி யிருந்தார். இதற்காக உலகத் தமிழர் பேரவையை தடைசெய் ததை இந்த ஊர்க்குருவி ஏற்றுக்கொள்கின்றது என்பதல்ல.

அந்தக் கடிதம் கூட்டமைப்பின் சார்பில் அனுப்பப்பட் டதல்ல என்று அதன் பங்காளிக் கட்சிகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையிலேயே ரெலோவின் மத்திய குழு உறுப்பின ரும் பிரிட்டனின் பொறுப்பாளருமான சாம். சம்பந்தன், இக்கடிதத்திற்கு அரசின் மறைமுக நிகழ்ச்சிநிரல் இருக்கிறதா என்ற இந்த முக்கிய சந்தேகம் ஒன்றைக் கிளப்பியிருக்கிறார்.

சுகிர்தன் பொல்லைக் கொடுத்து அடிவாங்கியிருக்கிறாரா என்ற கேள்வி இப்போது எமக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

செப்டெம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த தீர்மானம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உரிய நேரத்தில் உரிய தீர்மானம் எட்டப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளரான நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களைக் கலைக்கும் அதிகாரம் மற்றும் நிறுவனங்களின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு மட்டுப்படுத்துவது அல்லது அதிகரிப்பது ஆகிய அதிகாரங்கள் அமைச்சருக்கே வழங்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல் அதிபரிடமே வழங்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயம் பிற்போடப்பட்டது

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இன்றைய இந்திய விஜயம் பிற்போடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்தியாவுடன் ஒரு பில்லியன் டொலர் கடனுக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்தது.

அத்தியசியப் பொருட்கள் மற்றும் மருந்து இறக்குமதிக்காக இந்த கடன் பெறப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஐ.நா பேரவையில் மார்ச் 3 ஆம் திகதி இலங்கை தொடர்பான அமர்வு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு இம்மாதம் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வின் போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் உரையாடல் அமர்வு நடைபெறவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

டோர்ச்லைட்களுடன் பாராளுமன்றம் சென்ற ஐக்கிய மக்கள் சக்தியினர்

மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (24) பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Torch Light-களை ஔிரச்செய்து பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சபைக்கு Torch Light ஒன்றை எடுத்துவந்தமை தொடர்பில் ஆளும் கட்சியினர் எழுப்பிய கேள்வி காரணமாக சபையில் வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது.

இதனால் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.

Posted in Uncategorized

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் ஐந்து வருடத்தை எட்டியது

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்றையதினம் (24) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலுக்கு முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் படங்களை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் மற்றும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு காணாமல் போனவர்களின் உறவுகளினால் அனுப்பிய கடிதம் தொடர்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில்,

“ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவைத் தவிர்த்தல்” என்ற நமது தொடரின் 5வது ஆண்டு நினைவு தினம் இன்று இந்த உலகத்தில், 5 ஆண்டுகளாக, 1833 நாட்களாக இந்தப் போராட்டத்தை தெரு வீதியில் கொட்டகை அமைத்து நாம் மட்டும்தான் தொடர்கிறோம்.

ஐசிசி மற்றும் பொதுவாக்கெடுப்பு ஆகிய இரண்டு விஷயங்களில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை உலகுக்கு காட்ட, எங்களைப் போல் இரவு பகலாக தெரு வீதியில் கொட்டகை அமைத்து போராடுவதற்கு, கிளிநொச்சி மற்றும் பிற இடங்களில் உள்ள மற்ற தாய்மார்களையும் ஊக்கிவிக்கிறோம் .

இந்த முக்கியமான நாளில், எங்களுக்கு உதவிய தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எமது தமிழ் மக்களின் உதவியின்றி நாம் இந்தப் போராட்டத்தை தொடர்ந்திருக்க முடியாது“ என்றும் தெரிவித்தனர்.

தொல்பொருள் என்ற ரீதியில் தமிழ் பிரதேசங்கள் அபகரிப்பு: கோவிந்தன் கருணாகரம்

கிழக்கில் இன்னும் அதிகமாகச் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

தொல்பொருள் திணைக்களம் என்ற ரீதியில் கன்னியாவில் இருந்து பொத்துவில் வரையுள்ள தமிழ் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கிலே இடம்பெற்று வரும் காணி அபகரிப்புக்கு எதிராக வடக்கு, கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை இன்றையதினம் முன்னெடுத்திருக்கின்றோம்.

வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தொல்பொருள் திணைக்களம் போன்ற திணைக்களங்களினால் வடக்கு, கிழக்கிலே தனியார் காணிகளும், எதிர்காலத்தில் அம்மக்களின் அபிவிருத்திக்காக இருக்கக்கூடிய அரச காணிகளும் மத்திய அரசினால் கபளீகரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அது மட்டுமல்லாது வடக்கு, கிழக்கிலுள்ள மாவட்டங்களின் எல்லைப் புறங்களிலும் வெளி மாவட்ட சிங்கள மக்களைக் கொண்டு குடியேற்றும் திட்டமும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணம் தமிழர் தாயகமாகக் கருதப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒரு காலத்தில் இணைந்திருந்த வடக்கு, கிழக்கை தற்காலிகமாகப் பிரித்தது மாத்திரமல்லாமல் அதனை நிரந்தரமாகப் பிரிப்பதற்காக மகாவலி தண்ணீர் செல்லாத இடத்தில் மகாவலி எல் வலயமென்று ஒன்றை உருவாக்கி சிங்களக் குடியேற்றங்களை அமைக்கின்றார்கள்.

அத்துடன் மணலாறு என்ற பிரதேசத்தை வெலிஓயாவாக மாற்றி அதனை இன்னுமொரு சிங்கள மாவட்டத்துடன் இணைத்து வடக்கு, கிழக்கைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வடக்கை விடக் கிழக்கில் இன்னும் அதிகமாகச் சிங்கள மக்களைக் கூடுதலாகக் குடியேற்றுவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

தொல்பொருள் திணைக்களம் என்ற ரீதியில் கன்னியாவில் இருந்து பொத்துவில் வரையுள்ள தமிழ் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் கூடுதலாகத் தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையோரங்களிலே சேனைப்பயிர்ச் செய்கை, மரமுந்திரிப் பயிர்ச்செய்கை என்ற போர்வையிலே இலங்கை அரசாங்கம் கிழக்கு ஆளுநர் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரின் அனுசரணையுடன் சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அந்த எல்லைப் பிரதேசங்கள் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

அங்கு ஜீவனோபாயத் தொழிலை மேற்கொள்ளும் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரைக் காணிகள் கூட அபகரிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையின் பால் உற்பத்தியில் கணிசமான பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த மாடுகளைப் பண்ணையாளர்கள் எதிர்காலத்தில் விற்கும் ஒரு நிலைமையைத் தான் இந்த அரசாங்கம் உருவாக்குகின்றது.

அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் அந்தப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் முற்றாக அழிந்துவிடும். இதன் மூலம் அவர்களை மேலும் வறுமைக் கோட்டின் கீழ் இட்டுச் செல்லவே இந்த அரசாங்கம் முனைகின்றது.

எனவே இந்த அரசாங்கம் வடக்கு, கிழக்கில் நடத்தும் காணி அபகரிப்புகளை உடன் நிறுத்த வேண்டும். தமிழர்களது குடிப்பரம்பலைக் குறைப்பதனை நிறுத்த வேண்டும். நீண்ட காலமாக எமது உரிமைகளைப் பெறுவதற்கு அகிம்சை ரீதியாக ஆயுத ரீதியாக நாங்கள் போராடிக்கொண்டு வருகின்றோம்.

அந்த வகையிலே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிரந்தரமாகத் தீர்த்து வைப்பதற்கு இந்த அரசாங்கம் மட்டுமல்லாது சர்வதேசமும் இன்றைய ஆர்ப்பாட்டத்தைக் கருத்திற்கொண்டு தமிழர் பிரதேசத்திற்கு, வடக்கு,கிழக்கிற்கு, தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எங்களது அவா” என்றும் குறிப்பிட்டுள்ளார்.