நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனருத்தாரணம் செய்ய தீர்மானம்

நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனருத்தாரணம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மரபுரிமை மையம் மற்றும் தெல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பகல் 12மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் பரமு புஸ்பரட்ணம், யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

பயங்கரவாத தடுப்பு (திருத்தம்) சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் 6 மனுக்கள்

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்திற்கு எதிராக ஆறு மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது என சபாநாயகர் அறிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த வாரம் அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்)” எனும் சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பித்திருந்தார்.

குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் என தெரிவித்து அதற்கு எதிராக சிவில் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதன் பிரகாரம் நேற்று பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியபோது நீதிமன்றம் அதுதொடர்பில் விடுத்துள்ள அறிவிப்பை சபைக்கு சபாநாயகர் அறிவித்தார்.

குறித்த அறிவிப்பில் அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு மனுக்களின் பிரதிகள் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அந்த பிரதிகள் எனக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றன என குறிப்பிட்டார்.

சிங்கள தேசியவாதம் தொடர்பான ஆருடம்? ஈழநாடு Editorial

சிங்கள பத்திரிகை உலகிலும், புத்திஜீவிகள் உலகிலும் விக்டர் ஐவன்
முக்கியானவர். ஜே.வி.பியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான

அவர், சிங்கள இனவாத புத்திஜீவிகளுக்கு எதிரானவர். ஆட்சியாளர்

களை விமர்சிக்க தயங்காதவர். இவர், அண்மையில் ஆங்கில ஊடமொன்றிற்கு
வழங்கிய நேர்காணலில் – சிங்கள தேசியவாதம் அதன் இறுதி கட்டத்தை
அடைந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். தற்போதைய ஆட்சியாளர்கள்
நெருக்கடிகளை சந்தித்து வரும் பின்னணியை கருத்தில் கொண்டுதான்,
அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். விக்டர் ஐவனின் கணிப்பு சரியானதா –
சிங்கள தேசியவாதம் அதன் இறுதி கட்டத்தை அடைந்திருப்பது உண்மை
தானா?

சிங்கள தேசியவாத அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால் – தமிழர்
விரோதமே, அதன் அடிப்படையாக இருந்திருக்கின்றது. கட்சிக் கொடிகளின்

நிறத்தை தாண்டி, தமிழர் விரோதம் அனைத்து சிங்கள கட்சிகளுக்குள்ளும்,
புரையோடிப் போயிருக்கின்றது. இந்த பின்னணியை அடிப்படையாகக்
கொண்டு, சிந்தித்தால், இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, சிங்கள
தேசியவாதமென்பது, அடிப்படையில் தமிழர் விரோத தேசியவாதமாகவே

எழுச்சியுற்றிருந்தது. தேசியவாதங்கள் தொடர்பான பொதுவான கணிப்புக்குள்
சிங்கள தேசியவாதம் அடங்காது. அடிப்படையில் – சிங்கள தேசியவாத
மென்பது, தமிழர் விரோத – சிங்கள பௌத்த பெருந் தேசியவாதமாகும்.
‘அப்பே-றட்ட’ என்பதுதான் சிங்கள பெருந்தேசியவாதத்தின் அச்சாணிக்
கருத்தாகும். அதாவது, இந்த நாடு சிங்கள மக்களுக்குரியது- ஏனைய
இனங்கள் இங்கு வாழலாம் ஆனால் தனித்துவமான உரிமைகளை
அனுபவிக்க முடியாது. இதுதான், சிங்கள பெருந்தேசியவாத அசியலின்
இலக்காகும். இந்த அடிப்படையில்தான், இலங்கையின் கடந்த 74 வருடகால
அரசியல் வரலாறானது, இந்த அடிப்படையில்தான் நகர்ந்திருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழலில், சிங்கள தேசியவாதம் அதன் இறுதிக் கட்டத்தை
நோக்கி பயணிப்பதாக கூற முடியுமா?

தமிழ் தேசியவாத அரசியல் எழுச்சியென்பது சிங்கள ஆட்சியாளர்களின்
தவறுகளிலிருந்தே உருவானது. இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கிய
எஸ்.ஜே.வி.செல்வநாயகமும், ஏனைய தலைவர்களும், ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள மக்களோடு இணைந்து வாழ்வதற்கான கோரிக்கைகளைத்
தான் முன்வைத்திருந்தனர். பண்டா-செல்வா, டட்லி-செல்வா – ஒப்பந்தங்கள்,

ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதற்கான கோரிக்கைகள்தான். உண்மையில்
அவைகள் சமஷ்டிக் கோரிக்கைகளும் அல்ல. ஆனால் அந்தக்
கோரிக்கைகளைக்கூட சிங்கள ஆட்சியாளர்கள் நிறைவேற்ற முயற்சிக்கவில்லை.
மேற்படி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட பின்னணியில்தான், தமிழ்த்
தலைமைகள் தனிநாட்டு கோரிக்கையை நோக்கிச் சென்றன. ஆனால்
அப்போதுகூட, தனிநாட்டு கோரிக்கையை அடைவதற்கான எந்தவொரு
வழிமுறையும் தமிழ்த் தலைமைகளிடம் இருந்திருக்கவில்லை. ஆனால்
தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைகளை புரிந்து கொண்டு ஆரோக்கியமான
அரசியல் இணக்கப்பாடு நோக்கி, சிங்கள ஆளும் வர்க்கம் வரவில்லை. தமிழர்
விரோதத்தை முன்னிறுத்தி தங்களின் அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வது
பற்றியே அவர்கள் சிந்தித்தனர். படித்தவரான பண்டாரநாயக்க தனிச்சிங்கள
சட்டத்தை முன்வைத்தது இந்த பின்னணியில்தான்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர், இலங்கைக்கான சமஸ்டி தொடர்பில் பேசிய பண்டாரநாயக்க,இறுதியில் ஒரு சிறு நிலத் துண்டைக் கூட தமிழர்களுக்கு வழங்கக்கூடா
தென்னும் சிங்கள பெருந்தேசியவாத மனோநிலைக்கு அத்திபாரமிட்டார்.
சிங்கள ஆளும் வர்க்கத்தை பொறுத்தவரையில் தமிழர் விரோதம் இல்லாத
அரசியலை அவர்களால் இதுவரையில் நிரூபிக்க முடியவில்லை. இந்த
நிலையில், புதிதாக அரசியலுக்கு வருபவர்கள்கூட, விரும்பியோ – விரும்
பாமலோ தமிழர் விரோதத்தை கையிலெடுக்கின்றனர். யுத்த வெற்றியை
தேர்தல் மேடைகளில் உச்சரிக்கின்றனர். இந்த நிலையில், தற்போதைய
ஆட்சியாளர்கள் நெருக்கடியிலிருந்தாலும் கூட, சிங்கள பெருந்தேசியவாதம்
வீழ்ச்சியடைந்து விடுமென்று கருத முடியாது. இந்த ஆட்சியாளர்கள்
வீழ்சியடைந்தாலும் கூட, சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம் புதிய வடி
வங்களில் தன்னை நிறுவிக் கொள்ளும். ஏனெனில் சிங்கள பெருந் தேசிய
வாதம் என்பது, அடிப்படையில், சிங்கள பௌத்தத்தோடு பின்னிப் பிணைந்தது.
சிங்கள பெருந்தேசியவாதம் நெருக்கடிகளை சந்திக்கும் போதெல்லாம், சிங்கள
பௌத்தம் அதனை தாங்கிப்பிடிக்கும். அதற்கான புதிய உக்திகளை
கைக்கொள்ளும்.

Posted in Uncategorized

ஜெனிவா செல்லும் இலங்கை குழுவுக்கு அமைச்சர் பீரிஸ் தலைமை தாங்குகிறார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்ளும் இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமை தாங்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை 28 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை நடைப்பெறவுள்ளது.

மார்ச் மாதம் 3 ஆம் திகதி இலங்கை தொடர்பிலான கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

49 ஆவது கூட்டத்தொடர்பில் கலந்துக்கொள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்,நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உட்பட விசேட பிரதிநிதிகள் குழுவினர் ஜெனிவா செல்லவுள்ளனர்.

இந்த பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் தலைமை தாங்குவார்.

இவ்விஜயத்தின் போது வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் 49ஆவது அமர்வின் உயர்மட்ட பிரிவில் உரையாற்றுவார்.

அதனை தொடர்ந்து இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான உரையாடலிலும் அவர் பங்குப்பற்றுவார்.

அத்துடன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் இவ்விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் உட்பட முக்கிய தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நேரடி களவிஜயத்தை மேற்கொள்ளுமாறு வெளிவிவகாரத்துறை அமைச்சர் சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தவுள்ளார்.

Share

கச்சத்தீவு ஒப்பந்தத்தினால் இரு நாட்டு மீனவர்களின் நட்புறவில் பாதிப்பு – ஜீவன் தொண்டமான்

கச்சத்தீவு உடன்படிக்கையின் பின்னரே இலங்கை – இந்திய மீனவர்களின் நட்பில் பாதிப்பு ஏற்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தெரிவித்துள்ளதாக ‘தி ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதமரின் இணைப்புச் செயலாளரான செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் நேற்று (21) சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கை தமிழர்களின் நலன் விடயங்கள், மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கச்சத்தீவு உடன்படிக்கை முறையானதாக அமையாததன் காரணமாகவே இரு நாட்டு மீனவர்களின் நட்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வரை சந்தித்த பின்னர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் தெரிவித்ததாக தி ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முதல்வருடன் கலந்துரையாடியதாகவும் இது குறித்து பரிசீலிப்பதாக தமிழக முதல்வர் கூறியதாகவும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தின் ஊடாக இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக இதன்போது குறித்த குழுவினரால் தெரிவிக்கப்பட்டதாக தி ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இந்தியத் தூதுவருடன் பேசுதல்? -ஈழநாடு

இந்திய தூதுவர் கோபால் பாக்லேயை சம்பந்தன் சந்தித்து பேசி யிருக்கின்றார். வழமைபோலவே அங்கு சம்பந்தன் ஆணித்தரமாக பேசினார் என்றவாறான செய்திகள், கசியவிடப்பட்டிருக்கின்றன. உண் மையில் சம்பந்தன் இந்திய தூதரகத்திற்கு செல்வதில் விசித்திரங்கள் எதுவுமில்லை. இது சாதாரணமான ஒன்று. இவ்வாறான சந்திப்புக்கள் சம்பந்தனின் வேண்டுகோளுக்கு அமைவாகவே இடம்பெறுவதுண்டு. இந்திய தூதரகம் எப்போதாவதுதான் சம்பந்தனையும் கூட்டமைப்பையும் அழைப்பதுண்டு. ஆனால், சந்திப்புக்கள் முடிந்ததும் வழமைபோல் இந்தியா தங்களை அழைத்து பேசியது போன்றே கதைகள் சொல் லப்படுவதுண்டு.

இந்த மாதம் இறுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் கொழும்பு வரவுள்ளார் என்ற செய்திகள் வெளியாகியிருக் கின்றன. இதேபோன்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரவுள்ளதான செய்திகளும் வெளிவந்திருக்கின்றன. இந்த நிலை யில்தான் சம்பந்தன், தனது முன்னைய தவறுகளை சரிசெய்யும் நோக்கில் இந்திய தூதுவரை சந்திருக்கின்றார். ஏனெனில், இந்திய பிரத மரை சந்திப்பதற்கான வாய்ப்பு கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட போதும், அதனை சம்பந்தன் தட்டிக் கழித்திருந்தார். இதனை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கடுமையாக ஆட்சேபித்திருந்தன. தூதரகத்திடமும் முறையிட்டிருந்தன. இதன் பின்னர் தனது தவறை சமாளிக்கும் வகையில், பஸில் ராஜபக்ஷ புதுடில்லியில் நிற்கும்போது இந்த அழைப்பு வந்த காரணத்தால்தான், நான் இதனை பிற்போட்டேன் – ஏனெனில், இந்தியாவுக்கு சங்கடங்களை ஏற்படுத்த நான் விரும்பவில்லை – என்ற வாறு தூதுவருக்கு கதை சொல்ல முற்பட்டிருக்கின்றார். ஆனால், இதன் போது – இந்தியாவுக்கு யாரை எவ்வாறு கையாள வேண்டுமென்று தெரியுமென்று கூறி, சம்பந்தனின் வாயை தூதுவர் அடைத்திருந்தார். இதன்போது ஏனைய கட்சிகளின் தலைவர்களும் இருந்தனர்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. இதனை அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சுட்டிக் காட்டி வந்திருக்கின்றனர். அந்த நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொள்ளப்போவதில்லை. இந்த விடயங்கள் சம்பந்தனுக்கு தெரியாத விடயங்களுமல்ல. ஆனாலும் உண்மை நிலையை மக்களுக்கு சொல்லி, விடயங்களை முன்னெடுக்கும் அரசியல் தற்துணிவுடன் சம்பந்தன் இல்லை.

அதேவேளை – மிகவும் உடல் ரீதியில் தளர்ந்திருக்கும் சம்பந்தனை முன்னிலைப்படுத்தக்கூடிய நிலையிலும் இந்தியா இருப்பதாகத் தெரிய வில்லை. பல இலட்சக் கணக்கான மக்களை திரட்டக்கூடிய ஒரு மக்கள் சக்திமிக்க தலைவராக இருந்தால், சம்பந்தன் ஆணித்தரமாகப் பேச

முடியும். அதேவேளை, இந்தியாவை தவிர்த்து, பிறிதோர் இந்திய எதிர்ப்பு
சக்தியுடன் கைகோக்கக் கூடிய மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக
இருந்தாலும்கூட, இந்தியா சற்று யோசிக்க இடமுண்டு. ஆனால், சம்பந் தனோ தூதரகங்களை நம்பியிருக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டும்தான். எனவே சம்பந்தனால் ஒருபோதும் இராஜதந்திர தரப் புக்களிடம் குரலை உயர்த்த முடியாது. இந்திய இராஜதந்திரிகளுக்கும், கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பொன்றில், சம்பந்தன் மேசையில் தட்டிப் பேசிய போது, அங்கிருந்த முக்கியமான ஒருவர், இப்படி கூறி யிருக்கின்றார். “மிஸ்டர் சம்பந்தன் இது உங்களுடைய கட்சிக் கூட்ட மல்ல”,- சம்பந்தன் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக மேசையில் தட்டிப் பேசி எதுவும் நடக்கவில்லை. இனியும் எதுவும் சம்பந்தனால் முடியாது.

இந்த நிலையில்தான், அரசியலமைப்பில் இருக்கின்ற 13ஆவது திருத் தச்சட்டத்தை கூட பாதுகாக்க முடியுமா என்னும் கேள்வி எழுந்தி ருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில்தான் ஆறு கட்சிகள் இணைந்து இந்திய பிரதமரின் தலையீட்டை கோரியிருந்தன. ஒருவேளை இந்தியா, (தமிழர்களை நடுவீதியில் இந்தியா விட்டுவிடாது என்னும் நம்பிக்கைக்கு அப்பால்) 13 விடயத்தில் அமைதியாக இருந்துவிட்டால் ஆட்சியாளர்கள் தாங்கள் நினைப்பதை சாதாரணமாக செய்து முடித்துவிடமுடியும். ஒரு பௌத்த சாசன அரசியல் யாப்பை கொண்டு வந்தால் சம்பந்தனால் என்ன செய்ய முடியும் – அப்போதும் தூதரங்களின் கதவுகளை தட்டுவதை தவிர?

Posted in Uncategorized

21 இந்திய மீனவர்கள் விடுதலை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 03 வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் குறிப்பிட்டார்.

மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட 02 படகுகளையும் அரசுடமையாக்கி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட கையடக்கத்தொலைபேசி உள்ளிட்ட பிரத்தியேக உடமைகளை மீள வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி, குடியகழ்வு குடிவரவு திணைக்களத்தினூடாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பருத்தித்துறை நீதவான் இன்று (21) உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் 04 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறு, யாழ். சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த போது, கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி 21 இந்திய மீனவர்களும் வடக்கு மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டனர்.

இதன்போது கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு, மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Posted in Uncategorized

அமைச்சரவை அமைச்சர்களுக்கு திடீர் அழைப்பு

விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று நாளைய தினம் (22) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி குறித்து கலந்துரையாட இந்த விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

13ஆவது திருத்தமும் தமிழ் அரசியல் சமூகமும் – ஒரு யதார்த்த அணுகுமுறை – கலாநிதி நிர்மலா சந்திரகாசன்

இன்றைய தமிழ் அரசியல் பரப்பில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ள விவகாரம் இலங்கை அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தம் பயனுள்ளதா, பயனற்றதா என்பதும், அதன் விளைவாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை அரசு முறைமை உண்மையிலேயே தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் தன்மையை கொண்டதா, இல்லையேல் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அடையக்கூடிய கணிசமான அதிகார பகிர்வை தடுத்து நிறுத்தும் ஒரு பயனற்ற நிறுவனமாக இருக்கின்றதா? என்பதுமாகும்.

இந்த விவாதம் முன்னரங்கிற்கு கொண்டுவரப்பட்டதின் முக்கிய காரணம், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல தமிழ் அரசியல் கட்சிகள் அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கைக்கான இந்திய தூதுவருக்கூடாக அனுப்பிய கடிதமொன்றில், 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்துவதற்கு இலங்கை அரசை இந்திய அரசு உரிய முறையில் ஊக்குவிக்க வேண்டும் என்று கோரியிருந்ததுடன், இந்த 13ஆவது திருத்தமானது 1987இல் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டது என்பதையும் அதில் சுட்டிக்காட்டி இருந்தனர்.

இந்த விவகாரம், 13ஆவது திருத்தத்தை எதிர்ப்பவர்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு ஆர்பாட்டங்களை தூண்டிவிடவும் காரணமாய் அமைந்துவிட்டது. கோட்டாபய அரசு புதிய அரசியல் யாப்பொன்றை தயாரிப்பதற்காக நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்து, அக்குழு மிக விரைவில் புதிய நகல் அரசியல் யாப்பொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக செய்திகள் வெளிவரும் இவ்வேளையில், இந்த வாதப்பிரதி வாதங்கள் மேலும் அதி முக்கியத்துவம் பெறுகின்றன என்று கூறலாம்.

13ஆவது பற்றிய வாதப்பிரதிவாதங்களின் சரியான நியாயங்களை தீர்மானிப்பதற்கு 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டிருக்கும் சாராம்சங்களையும், 1988இலிருந்து வடக்கு கிழக்கு தவிர்ந்த இலங்கை முழுவதும் 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டு, தொடர்ச்சியாக நடைமுறையில் இருந்த மாகாண அரசுகளின் செயற்பாடுகள்பற்றியும் பார்ப்பது முக்கியமாகும்.

இந்த மாகாண அரசு முறைமை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சமஷ்டி அடிப்படையிலான அதிகார பரவலாகத்தின் விளைவாகவே ஏற்பட்டது என்பதுடன், ஆரம்பத்தில் இது வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்திற்கு மாத்திரமே அமைக்கப்படும் என்று கருதப்பட்ட போதிலும், இந்த முறைமை சிங்கள மக்களை பெரும்பான்மையாகக்கொண்ட இலங்கையின் ஏனைய பாகங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. அப்போது, இந்த மாகாணங்களில் மாகாண அரசுக்கான கோரிக்கை எழவில்லை என்பதும் குறிப்பிடப்படவேண்டியது.

முதலாவது மாகாணசபை தேர்தல்கள் ஏப்ரல் 1988இல் வட மத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மாகாணங்களுக்கும் பின்னர் ஏனைய மாகாணங்களுக்கும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் செப்ரெம்பர் 1988இல் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒரே நிர்வாக அலகாக இணைக்கப்பட்டு, நவம்பர் 1988இல் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. பின்னர் 1990இல் வடக்கு கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டது. இதன் பின்னர், இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் மத்திய அரசினால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தத்தால், இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெறவில்லை. 2006ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பொன்றின் பிரகாரம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலும், யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கான தேர்தலும் நடைபெற்றது. எனவே, இந்த மாகாண சபை முறைமை நீண்ட காலமாக செயற்பட்டுவந்திருப்பதை அவதானிக்கலாம். ஆனால், இந்த நீண்ட கால கட்டத்தில், மாகாணசபை பட்டியல் 1இன் 9ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்ட, 13ஆவது திருத்தத்தின் குறித்த சில பிரிவுகள் செயல்படுத்தப்படாமல் இன்னமும் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த அநுபந்தங்கள் பின்வரும் விடயங்களைக் கையாள்வதற்கான ஏற்பாடுகளாகும்:

அநுபந்தம் 1: சட்டம் ஒழுங்கு தொடர்பானது. இது பிரதானமாக, தேசிய பொலிஸ் பிரிவுடன் இணைந்த ஒரு மாகாண பொலிஸ் பிரிவின் பொலிஸ் அதிகாரத்துடனும் அதன் நிறுவன கட்டமைப்புடனும் சம்பந்தப்பட்டது.

அநுபந்தம் 2: காணியும் குடியேற்ற அதிகாரமும் தொடர்பானது.

அனுபந்தம் 3: கல்வி அதிகாரம் தொடர்பானது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களோடு, மாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட ஏனைய எல்லா விடயங்களிலும் சட்டவாக்க அதிகாரத்தையும் நிறைவேற்று அதிகாரத்தையும் அது கொண்டிருக்கின்றது.

மாகாணங்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டியலில் பின்வரும் விடயங்கள் உள்ளன. அவை: மாகாண வீடமைப்பும் நிர்மாணமும், விவசாயமும் விவசாய சேவைகளும், கிராமிய அபிவிருத்தி, சுகாதாரம், காணி, நீர்ப்பாசனம், மாகாண எல்லைக்குள்ளான வீதிகள் பாலங்கள், மாகாணத்துக்குள்ளான போக்கு வரத்துக்கான கப்பல் சேவைகள், மாகாணத்துக்குள்ளான பொருளாதார திட்டமிடலும் அமுலாக்கலும். கல்விச்சேவையும் மேற்பார்வையும், உள்ளூர் ஆட்சி நிர்வாகம் என்பனவாகும்.

இந்த மாகாண சபைக்கான பட்டியலில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என மத்திய அரசினால் பிரகடனப்படுத்தப்படாத, பழமை வாய்ந்த வரலாற்று நினைவிடங்களும் உள்ளடங்கும். அண்மையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில், அமைக்கப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சி தொடர்பான நடவடிக்கைக் குழுவில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவில்லை என்பதை மனதிற்கொண்டு இதைக் குறிப்பிடுகிறேன்.

அத்துடன், பகிரப்பட்ட அதிகாரங்கள் தொடர்பிலான ஒரு பட்டியல் குறிப்பிடப்பட்ட விடயங்களில் மாகாண சபைகளும் மத்திய அரசும் அதிகாரங்களைப் பிரயோகிக்கலாம். இதில் மாகாண மட்டத்தில் நடைபெறும் திட்ட அமுலாக்கல் தொடர்பான மூலோபாயங்களை மேற்பார்வை செய்யவும் மதிப்பீடு செய்யவும் மாகாண சபைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கல்வியும் கல்விச்சேவையும், உயர் கல்வி, விவசாயமும் விவசாய சேவைகளும், சுகாதாரம், நீர்ப்பாசனம், சுற்றுலா போன்றவை இந்தப் படியலில் உள்ள சில முக்கிய விடயங்களாகும். மாகாண சபைக்கும் மத்திய அரசிற்கும் அதிகாரமுள்ள விடயங்களில் அதிகார வரம்புகள் பற்றிய சர்ச்சைகள் உருவாகுவது எதிர்பார்க்கப்பட வேண்டியதொன்றே. மாகாண சபை நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பாகவும் பகிரப்பட்ட பொது நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பாகவும் மாகாண சபைகள் சட்டங்களை ஆக்கவும் அவற்றின்மீது நிறைவேற்று அதிகாரங்களை அவை பிரயோகிக்கவும் முடியும்.

இந்த அதிகாரங்கள் பெரும்பாலும் இந்திய அரசியல் யாப்பின் 6ஆவது பிரிவின் பிரகாரம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படட அதிகாரங்களை ஒத்தவை. இந்திய மாநிலங்கள் மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதில் வினைத்திறனுடன் செயற்படுவதை அவதானிக்கலாம். குறிப்பாக, தமிழ் நாடு தற்போது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இந்த விடயங்களில் மிகவும் வினைத்திறனுடன் இயங்குவது அவதானிக்கப்படுகிறது.

இங்கு எமக்கு முன்னால் உள்ள முக்கியமான கேள்வி, இலங்கையில் ஏன் மாகாணசபை முறைமை மக்களுக்கு சேவையாற்றுவதில் வெற்றிகரமாக செயற்பட முடியாமலுள்ளது? ஏன் பணத்தை வீண் விரயமாக்கும் ‘வெள்ளை யானை’ என வர்ணிக்கப்படுகின்றது? இவ்வாறு இருப்பதை நிவர்த்தி செய்வதற்கும், காத்திரமானதாக மக்களுக்காக செயற்பட வைப்பதற்கும் இந்த கட்டுமானத்தில் உள்ள தடைகளை நீக்கி, அத்தியாவசியமான திருத்தங்களை மேற்கொள்வதே சரியான அணுகு முறையாகும். எதிர்பார்த்தபடி செயற்படவில்லை என்பதற்காக, மாகாண சபை முறைமையை முழுமையாக நிராகரிப்பது என்பது, ‘குளிப்பாட்டியபின், குளிப்பாட்டிய நீருடன் குழந்தையையும் சேர்த்து வீசிவிடுவது’ போன்றதற்கு ஒப்பானதாகும்.

மாகாண சபைகள் பற்றி நிதானமாக மதிப்பீடு செய்து பார்த்தால், அவை முறையாகவும் முழுமையாகவும் இயங்கமால் இருப்பதற்கான பெரும்பாலான தடைகள், 13ஆவது திருத்தத்துடன் 1987ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் விளைவாகவே எழுவது தெரியவரும். இந்த சட்டத்தின்படி, மாகாண சபைகளுக்கான நிதி அதிகாரம், மாகாண பொது சேவைகளுக்கான அதிகாரம், மற்றும் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அதிகாரம் என்பன ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்தின்படி நிறைவேற்று அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருந்தாலும் ஆளுநர் மாகாண மந்திரிகள் சபையூடாக அல்லது மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு ஊடாகவே இந்த அதிகாரத்தைப் பிரயோகிக்கலாம். அதேவேளை, முதலமைச்சரும் மந்திரிகள் சபையும் ஆளுநர் எவ்வாறு செயற்படவேண்டும் என்கிற ஆலோசனையை வழங்குவதோடு, ஆளுநர் எல்லா சந்தர்ப்பங்களிலும் அந்த ஆலோசனைக்கு அமையவே செயற்படுதலும் வேண்டும். இந்த நடைமுறைக்கு விதிவிலக்காக உள்ள விடயமும் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அரசியல் யாப்பில் குறித்துரைக்கப்பட்ட விடயங்களில் மாத்திரம் ஆளுநர் தனது தீர்மானத்திற்கு இசைவாக செயற்படலாம்.

இந்திய அரசியல் யாப்பிலும் இதுபோன்றே நிறைவேற்று அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருப்பினும் அங்கு வெஸ்ற்மின்ஸ்ரர் ஆட்சி முறைமையில், முதலமைச்சரின் ஆலோசனையின் படியே ஆளுநர் செயற்படுகிறார். ஆளுநர் என்பவர் பெயரளவிலான தலைமையை வகிக்கும் ஒருவராகவே செயற்படுகிறார். மாறாக, இலங்கையில் தமிழரை பெரும்பான்மையாகக்கொண்ட மாகாணங்களில் ஆளுநர்கள் பல சந்தர்ப்பங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்கள்போல் அதிகாரங்களைப் பிரயோகிப்பதைக் காணலாம். மாகாண அரசு நடைமுறையில் நிதி அதிகாரத்தை பொறுத்தவரையில் ஆளுநரின் அதிகாரக் கட்டுப்பாடு மிகவும் துல்லியமாக தெரியும். மாகாண சபையை நடத்துவதற்கு நிதி அவசியம். நிதியை பெறுவதில் உள்ள தடையே மாகாண சபைகள் முழுமையாக செயற்பட முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. மாகாண சபை சட்டத்தினூடாகவே மாகாணத்தின் நிதிக் கட்டுப்பாட்டை ஆளுநர் பெறுகின்றார். மாகாணத்துக்கான நிதியமும் ஆளுநரின் கீழேயே உள்ளது. ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் வரி விதிப்பு, வரி விலக்கு போன்றவற்றுக்கான சட்ட மூலங்களை மாகாண சபை நிறைவேற்ற முடியாது. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட மத்திய அரசுக்கும் – மாகாணங்களுக்குமான உறவுகள் தொடர்பான பாராளுமன்ற உப குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டியதுபோன்று, அரசியல் யாப்பின் கட்டமைப்பானது, வரிவிதிப்புகளின் மூலம் நிதி திரட்டும் மாகாண அரசின் முயற்சிகளை கடுமையாக கட்டுப்படுத்துகின்றது. இதன் காரணமாகவே மாகாண சபைகள் தமது நிதித் தேவைகளுக்கு பெருமளவில் மத்திய அரசினது கொடுப்பனவுகளிலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக திருத்தி வரையப்படவேண்டிய மற்றொரு விடயம் நிர்வாக கட்டமைப்பு தொடர்பானதாகும். மாகாண சபைகளை திறனுடன் நிர்வகிப்பதற்கு நிதிகளின் மீதான கட்டுப்பாடுகள் மட்டும் போதாது. அதனுடன் நன்கு வரையறுக்கப்பட்ட திறன்களைக்கொண்ட நிர்வாக பிரிவுகளின் மீதான கட்டுப்பாடுகளும் அவசியமாகும். தற்பொழுது மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் என்போர் மத்திய அரசின் கீழேயே செயற்படுகின்றனர். இந்த உத்தியோகத்தர்கள் மாகாண சபைக்கு உட்பட்ட பிரதேசங்களிலேயே தமது நிர்வாக கடமைகளை புரிகின்றார்கள். ஆனால், இந்த உத்தியோகத்தர்கள்மீது மாகாண சபை நிர்வாகத்திற்கு எதுவித கட்டுப்பாடும் கிடையாது. உள்ளூராட்சி நிர்வாகங்கள் மாகாண சபைக்கென பகிர்ந்தளிக்கப்பட்ட நிரலின் மூலம், மாகாண சபை நிர்வாகத்தின் மேற்பார்வை, கட்டுப்பாட்டுக்குள் இருப்பினும் உள்ளூர் மட்டத்தில் அவை மத்திய அரசின் அங்கமாகவே செயற்படுகின்றன. மாகாண சபை நிர்வாகம் வினைத்திறனுடன் செயற்படுவதற்கு மாகாண அரசின் செயற்பாட்டு எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்படல் வேண்டும். நடைமுறையில் மாகாண அரசிற்கென பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் தொடர்ச்சியாக மத்திய அரசினால் அத்துமீறப்படுகின்றன. அதிகார பகிர்வு தொடர்பாக மத்திய அரசுக்கென ஒதுக்கப்படட நிரல் 2இல், ‘எல்லா விடயங்களிலுமான தேசிய கொள்கைகள்’ என்றே தலைப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான தலைப்பு, மாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட விடயங்கள் உட்பட, சகல விடயங்களையும் மத்திய அரசே எடுத்துக்கொள்ள வழிவகுத்துள்ளது.

தேசிய கொள்கைகள் என்றால் என்ன? தேசிய தரம் என்பதை எவ்வாறு தீர்மானிப்பது? என்பதுபோன்ற விடயங்கள், அனைத்து மாகாணங்களினதும் பங்கேற்புடனான ஒரு செயல்முறையிலும், மத்திய அரசும் மாகாணங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பாராளுமன்றத்தினூடாக அவற்றைச் சட்டங்களாக்குவதன் முலமுமே சீராக்கப்படலாம். இந்த விடயம், 2006இல் நிபுணர்கள் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக கவனிக்கப்பட வேண்டிய விடயம், பகிரப்பட்ட அதிகாரங்கள் தொடர்பிலான பொது நிரலை முற்றாக நீக்கி, அந்த பட்டியலில் உள்ள விடயங்களில் மத்திய அரசுக்கு உரிய விடயங்கள் எவை, மாகாண அரசுக்கு உரியவை எவை என்பதை திட்டவட்டமாக வரையறுத்துக்கொள்ளல் வேண்டும்.

இவ்வாறான ஒரு சுருக்கமான கட்டுரையில் இந்த விடயங்கள் தொடர்பாக ஆழமாக அலசுவது சாத்தியமில்லை எனினும், மாகாண சபைகள் அர்த்தமுள்ள அதிகார பகிர்வுடன் செயற்படுவதற்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்களை அடையாளப்படுத்தியுள்ளேன். திருத்தப்படவேண்டிய விடயங்களில் சில பின்வருமாறு:

ஆளுநரின் வகிபாகம் இதுவரை மாகாண சபைகளின் செயற்பாடுகளுக்கு தடையாகவே இருந்திருக்கின்றது. எனவே, ஆளுநர் மாகாண சபைகளை செயற்படுத்துவதை தெரிவு செய்யப்படட அங்கத்தவர்களிடமே விட்டுவிட்டு, தொடர்ந்து ஒரு தலைமைத்துவ அடையாளமாக மாத்திரம் செயற்படவேண்டும், இதுவும் 2016ஆம் ஆண்டு கூட்டப்பட்ட பாராளுமன்ற உப குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஆளுநரின் அதிகாரங்களைச் சுருக்கும் வகையில் மாகாண சபை சட்டம் திருத்தப்படல் வேண்டும். மாகாண சபைகளின் வரி சேகரிக்கும் அதிகாரம் மேலும் வலுவாக்கப்படல் வேண்டும். மாகாண சபைகள் வெளி நாட்டு உதவிகளை நேரடியாக பெறுவதற்கான ஏற்பாடுகள் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் வெளிநாட்டு உதவிகளுடன் நடைபெறும் வேலைத்திட்டங்களை நிர்வகிக்கும் அதிகாரம் இருத்தல் வேண்டும்.

இன்னுமொரு முக்கிய விடயம், மாகாண சபைகள் மக்களுக்கான சேவைகளை ஆற்றக்கூடிய வகையில் நிர்வாகம் மீள கட்டமைக்கப்படல் வேண்டும். இவ்வாறான நிர்வாக மீள் கட்டுமானம் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் போன்ற உத்தியோகத்தர்களை மாகாண நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதுடன் அவர்கள் மத்திய அரசின் வேலைகளையும் கவனிக்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். மாகாணங்களுக்கென பகிரப்பட்ட நிரலில் உள்ளூராட்சி நிர்வாகமும் அடங்குகின்றது. ஆனால் இந்த ஏற்பாடு, நகர அபிவிருத்தி திணைக்களம், மகாவலி அதிகாரசபை போன்ற மத்திய அரசின் நிறுவனங்களால் பலவீனப்படுத்தப்படுகின்றது. எனவே, இவ்வாறான மத்திய அரசின் நிறுவனங்கள் மாகாணங்களில் செயற்படும்போது மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் ஆகியவற்றின் சம்மத்துடனும் இணைந்து செயற்படக்கூடிய வகையிலும் ஏற்பாடுகள் கட்டாயமாக்கப்படல் வேண்டும்.
சட்டம், ஒழுங்கு தொடர்பான விடயங்கள், 9ஆவது பிரிவில் உள்ள அநுபந்தம் 1 நிரல் 1இல் குறிப்பிட்டதுபோல, மாகாண சபைகள் கோரும் பட்சத்தில் மத்திய அரசிலிருந்து மாகாண சபைக்கு மாற்றப்படலாம். இதேபோன்ற ஓர் ஏற்பாடு ஐக்கிய இராச்சியத்தில், பொலிஸ் அதிகாரம் மத்தியில் இருந்தாலும் 2010ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்து சபை அதிகாரத்தை கோரியதன் அடிப்படையில், பொலிஸ் அதிகாரம் ஹில்ஸ்பரோ ஒப்பந்தத்தின் பிரகாரம் மத்தியிலிருந்து அயர்லாந்து சபைக்கு மாற்றப்பட்டது.

இவ்வாறான முறையில் பொலிஸ் அதிகாரம் மாற்றப்படும் வரையில் தற்காலிக ஏற்பாடாக வடக்கு கிழக்கில் பணிக்கு அமர்த்தப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் குறித்த சத விகிதம் க. பொ. த சாதாரண தரம் தமிழில் சித்தியடைந்தவர்களை நியமிப்பதுபோன்ற ஏற்பாடுகள், இந்த மாகாணங்களில் பொலிசார் தமது கடமையை வினைத்திறனுடன் புரிவதற்கு உதவும். இதேபோன்ற ஏற்பாடுகள் மத்திய மாகாணத்திலும் செய்யப்படுவதன் மூலம் மலையக தமிழரும் பயனடைவர்.

இதேபோன்று, நில அதிகாரம் தொடர்பான அநுபந்தம் 2 முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும். இது, மாகாணங்களின் நிலம் தொடர்பான பாதுகாப்புக்கு அவசியமானதாகும். ஜனாதிபதியின் கட்டளையின் பெயரில் அரச காணிகள் பாவனைக்கு சுவீகரிக்கப்படுவதும் பகிர்ந்தளிக்கப்படுவதும் மாகாண சபைகளுடன் கலந்தாலோசித்தும், அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயுமே செய்யப்படல் வேண்டும். அநுபந்தம் 2இன் பிரகாரம் மூவின அங்கத்தவர்களையும் கொண்ட தேசிய காணி ஆணைக்குழு உடனடியாக அமைக்கப்படல் வேண்டும்.

தமிழ் கட்சிகள் இந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என்பதே எனது பரிந்துரையாகும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மற்றைய பங்காளரென்ற வகையில், 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும் என்றும், அதன் மூலமே தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கம் சாத்தியமாகுமென்றும், ஒப்பந்தத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் சரித்திர பூர்வமான தாயகம் என்றும் இந்திய அரசு சட்டபூர்வமாக வற்புறுத்தமுடியும்..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கு அமைய இலங்கை அரசு காலதாமதமின்றி மாகாண சபை தேர்தல்களை நடாத்தி, சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள மாகாண சபை நிறுவனங்களை செயற்பட வைத்தல் வேண்டும். மாகாண சபைகள் இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் பயனுள்ளதாக இருப்பதுடன், ஓர் ஒழுங்கு படுத்தப்படட மக்கள் சேவையை அனைத்து மக்களுக்கும் வழங்கும் நிறுவனமாகவும் இருக்கும்.

ஜனாதிபதி வரவுசெலவுத்திட்ட உரையின்போது, மக்களின் தேவைகளிலும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தும்படி தமிழ் கட்சிகளுக்கு ஆலோசனை தெரிவித்திருந்ததை கவனித்திருந்தேன். இது, உண்மையான ஜனநாயகமும், மக்களின் பங்குபற்றுதலும் ஆலோசனைகளுமுடனான பொருளாதார அபிவிருத்தி தொடர்பான மூலோபாயங்களை வகுப்பதன் மூலமுமே சாத்தியமாகும். இது, மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் போன்றவற்றினூடாக அடிமட்ட மக்களின் பங்களிப்புடன் செய்யப்படுவதே அர்த்தமுள்ளதாகும். அவர்களுக்கே அவர்களது தேவைகள் நன்கு புரியும். கொழும்பிலிருந்து திட்டமிடும் நிர்வாகிகளுக்கு அடிமட்ட மக்களின் சூழ்நிலைகளோ, தேவைகளோ புரியாது.

எனது பார்வையில், தமிழ் பேசும் மக்களுக்கு பயனுள்ளதும் சேவை செய்யக்கூடியதுமான அதிகார பரவலாக்க அலகு மாகாண அலகே. இது, அவர்களது பாரம்பரிய பிரதேசத்தில் ஓரளவுக்கு சுயாதீனமாக செயற்பட உதவும். ஐக்கிய இராச்சியத்தில் ஒற்றை ஆட்சியின் கீழ் உள்ளது போன்ற தனித்துவமான இன அடையாளங்களைக்கொண்ட ஸ்கொட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து ஆகியன 13ஆவது திருத்தத்திற்கு ஒத்ததான சட்டவாக்க சபைகளையே கொண்டிருக்கிறன. ஸ்கொட்லாந்தில் ‘பாராளுமன்றம்’ என்றே அழைக்கிறார்கள் .

நான் இந்த கட்டுரையில் பரிந்துரைத்துள்ள ஆளுநரின் அதிகாரங்கள், மாகாண சபைகளுக்கான நிதி வளங்களை ஏற்படுத்துதல், நிர்வாக கட்டமைப்புகளை சீர்படுத்துதல் போன்ற குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அனைத்தும் பின்வரும் அறிக்கைகளில் பரிந்துரைக்கப்பட்டவையே. அவையாவன: 2006ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டுக்கு ஆலோசனைகளை வழங்கிய நிபுணர் குழு அறிக்கை, 2010இல் தயாரிக்கப்பட்ட நகல் அரசியலமைப்பு. 2016ஆம் ஆண்டின் மத்திய – மாகாண உறவுகள் பற்றிய உப குழு அறிக்கை என்பவையாகும்.

இந்த சூழ்நிலையில் தற்போது பேசப்படும் புதிய அரசியல் யாப்பானது, ஏற்கனவே ஆராயப்பட்டுள்ள பரிந்துரைகளை உள்வாங்கிக்கொள்ளலாம். இது தொடர்பாக புதிதாக ஆலோசிக்கப்படவோ, கண்டுபிடிக்கப்படவோ தேவைகள் எதுவும் இல்லை.

என்னைப் பொறுத்தவரையில், மாகாண சபை முறைமை, அதிலுள்ள குறைபாடுகளை நீக்குவதற்கு தேவையான திருத்தங்களை செய்யுமிடத்து, வினைத்திறனுள்ளதாகவும் வெற்றிகரமாக செயற்படக்கூடியதாகவும் இருக்கும். இவ்வாறான மாற்றங்கள் செய்யப்படுவதற்கு பாரிய அரசியல் சட்ட மாற்றங்கள் அவசியமில்லை. இம் மாற்றங்கள் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடனேயே நிறைவேற்றப்படலாம். அத்துடன், நிர்வாக மாற்றங்களை 13ஆவது திருத்தத்தை பாவித்தே, ஜனாதிபதியின் வர்த்தமானி அறிக்கைகள் மூலம் அமுல் படுத்தலாம்.

(கட்டுரையாளர் – 2006 நிபுணர்கள் குழு உறுப்பினரும், இக் குழுவின் பெரும்பான்மை அறிக்கையில் ஒப்பமிட்டவருமாவார் – அத்துடன், அண்மையில் கூட்டமைப்பின் சார்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள சந்திப்புக்களில் ஈடுபட்ட மூவர் அடங்கிய நிபுனர் குழுவிலும் ஒருவராவார்)

இனஅழிப்பு விவகாரம்- ஐ.நாவுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடிதம்

கடந்த வருட அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையின் இனவழிப்பு தொடர்பில் பாரப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதற்கு ஏதுவாக உரிய படிமுறைகளையும் தாங்களும், தாங்கள் சார்த்த ஐ.நா சபையும் விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வமைப்பு ஐநா மனித உரிமை பேரவை ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில்,வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் எமது உறவுகளை தேடும் தொடர் போராட்டத்தை கடந்த 20.02.2017 அன்று கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பித்தோம்.இன்று எமது போராட்டமானது ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்து ஆறாவது ஆண்டில் தொடர்கிறது. இறுதி யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து எமது உறவுகள் கையளிக்கப்பட்டும், சரணடைந்தும், விசாரணைக்கென கூட்டிச்செல்லப்பட்டும் 20000 க்கும் மேற்ப்பட்டோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். இது தவிர, இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வெள்ளை வானில் கடத்தப்பட்டும், துணை இராணுவக்குழுக்களால் கடத்தப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். இவர்கள் அனைவரையும் தேடும் எமது போராட்டமானது நூற்றுக்கு மேற்ப்பட்ட பெற்றோர், தம் உறவுகளை பிரிந்த துயரால் நோய்வாய்ப்பட்டு இறந்த பின்பும் தொடர்கிறது. இது எமக்கான நீதி கிடைக்கும்வரை அல்லது எம்மில் ஒருவராவது உயிர் வாழும் வரை தொடரும். இந்த இறப்புக்களின் காரணமாக அவர்களின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சாட்சிகள், ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. இத்துன்பியல் தொடர்ந்தால் இறுதியில் சாட்சிகள் இன்மையால் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை மூடுவது சிங்கள அரசுக்கு சுலபமாகிவிடும்.

இலங்கை அரசானது உள்நாட்டில் தீர்வை வழங்குவதாக சர்வதேசத்திடம் கூறிவருகிறது. இலங்கை அரசிடம் இருந்து நீதி ஒருபோதும் எமக்கு கிடைக்காது. தமது கையால் தமது உறவுகளை கையளித்த உறவுகள் சிலர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, வருடக்கணக்கில் விசாரணைக்கெடுக்காமல் இழுத்தடித்து, இறுதியில் சரணடைந்தவர்கள் ஏற்றிச் செல்லப்பட்ட பஸ் இலக்கத்தை முறைப்பாட்டாளர் தெரிவிக்காததால் சில வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. யுத்த சூழலிருந்து உயிர்ப் பயத்துடன் ஓடிவரும் ஒருவர் தனது பிள்ளை, கணவன் ஆகியோரைப் பிரியும் நேரத்தில் அழுது புலம்புவார்களா? அல்லது பேப்பர் பேனா தேடித் திரிவார்களா? அதற்குரிய மனநிலையிலா அவர்கள் இருந்திருப்பார்கள்? இலங்கையில் நீதித்துறை எவ்வளவு பாரபட்சமாக சிந்திக்கிறது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இலங்கையில் தமிழர்களுக்கு சரியான நீதி கிடைப்பதில்லை எனினும் நீதியாக செயற்படடும் ஓரிருவரால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் கூட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதியின் அதிகாரத்தால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மிருசுவிலில் சிறுவர் உள்ளிட்ட 8 பேரை கொலை செய்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்னாயக்க என்பவருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் இராணுவத்தில் பதவி உயர்வுடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். எட்டு தமிழர்களை கொலை செய்ததற்கு வெகுமதியாகவே இவரது பதவி உயர்வு கருதப்பட்டு ஏனையோரும் இது போன்ற படுகொலைகளைச் செய்யும் வண்ணம் ஊக்குவிக்கப்படுவார்கள். அதே போலவே திருகோணமலை கடற்படைமுகாமில் 11 பேர் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிலும், திருகோணமலை 5 மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும், முறையே சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை மீளப்பெறப்பட்டும், சாட்சியங்கள் போதவில்லை என்றும் வழக்குகள் மீளப்பெறப்பட்டுள்ளன. அன்று படையினரை வழிநடத்திய இன்றைய ஜனாதிபதிக்கு எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாது என்று கைவிரிக்க முடியாது. இன்று கூட எமது உறவுகள் கையளிக்கப்பட்ட வட்டுவாகல், முள்ளிவாய்க்கால், மாத்தளன், ஓமந்தை ஆகிய இராணுவ காவலரண்களின் பொறுப்பாக இருந்த படை அதிகாரிகளை உள சுத்தியுடன் விசாரிப்பதன் மூலம் எமது உறவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம். அப்படை அதிகாரிகள் தற்போது வெளிநாட்டின் தூதுவராகவோ அல்லது பதவி உயர்வு பெற்று தளபதியாகவோ தான் அவர் இருப்பார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் அதைச் செய்யாது. காரணம் அவர்களுக்கு உண்மை வெளிவரக்கூடாது. ஏனென்றால் சிறிலங்காவில் இறுதியுத்தத்தின்பின் பதவியேறற் அத்தனை ஜனாதிபதிக்கும், அமைச்சர்களுக்கும் ஒரு வாக்குறுதியை சிங்கள மக்களுக்கு கூறுகிறார்கள் அது ‘யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த படையினரை காட்டிக்கொடுக்க மாட்டேன். அவர்களை பாதுகாப்பேன்’ என்பதே அதை மிக துணிச்சலாக செய்தும்வருகிறார்கள். உதாரணம் மிருசுவில் படுகொலையாளி காப்பாற்றப்பட்டமை, வசந்த கரன்ன கொட பாதுகாக்கப்பட்டமை, இது போல பல உண்டு ஆனால் தமிழ் அரசியல்கைதிகள் நீண்ட காலங்களாக விசாரணையின்றி சிறையிலே வாடுகிறார்கள். அவர்கள் செய்த குற்றமாக விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக உணவு வழங்கியதும் மற்றும் போராளிகளுடன் தொடர்பில் இருந்தமை போன்றவற்றை காரணம்காட்டி பலவருடங்களாக தடுத்து வைத்துள்ளார்கள்.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் பாரபட்சம் காணப்படுகிறது. தமிழ் மக்களின் மத சுதந்திரம், தனி மனித சுதந்திரம் கேள்வியாக்கப்பட்டுள்ளது. இரவோடு இரவாக எமது மத அடையாளாங்கள் அழிக்கப்பட்டு விகாரகைள் உருவாகின்றன. எமது பூர்வீக நிலங்களை கையகப்படுத்துவதற்காகவே புது சட்டங்கள், திட்டங்கள் அமுலுக்கு வருகின்றன. மக்களுக்கு அனுபவங்கள் மூலமாக ஏற்படும் உயிர்ப்பயம் இவை எவற்றையும் பொருட்படுத்தாது மௌனிக்கச்செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது மன நிலையை பாதிக்கும் வகையில் எம்மீது இலங்கை அரசின் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு தொடர்கிறது. பின்தொடர்தல் , தொலைபேசி அழைப்பு, வீடியோ எடுத்தல் என்பன எமது உறவுகளை அச்சமூட்டும் வகையில் உள்ளன. போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள். இப் போராட்டத்தில் முன்னிலை வகிப்பவரின் குடும்ப உறுப்பினர்கள் தேவையற்ற விசாரணைகளுக்கு உள்ளாகும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகிறது.

எமது நீதிக்கான இந்த போராட்டத்தை தொடராமல் செய்வதற்கான குழப்பங்கள் உருவாக்கப்பட்டும் எம்மில் பலரை வயதாகிய தாய்மார், தனியாக குடும்பங்களை தலைமை ஏற்று நடத்தும் பெண்கள் என்று கூட பாராமல், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைத்து விசாரணை என்ற பெயரில் மன உழைச்சலை தருவதும் நீதிக்கான எமது பயணத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது.

மதிப்பிற்குரிய மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களே,

எமது உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்காகவே நாம் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் போராடிக்கொண்டிருக்கின்றோம். எம்மில் 75 வீதமானவர்கள் வயது முதிந்தவர்களே. அவர்கள் இந்த வயோதிப காலத்திலும் நீதியை தேடி வீதியிலே போராடுகிறாரகள். நாம் மன அழுத்தத்தினாலும் நோய்வாய்ப்பட்டதாலும் 112 பெற்றோர்களை இழந்து விட்டோம் மிஞ்சியிருப்பவர்கள் இறக்கும்முன்பு நீதி கிடைக்க வேண்டும்.

தங்களின் கடந்த வருட அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையின் இனவழிப்பு தொடர்பில் பாரப்படுத்துவதற்கு பரிந்துரை செய்திருந்தீர்கள் அதை விரைவில் செய்வதற்கு ஏதுவாக உரியபடிமுறைகளையும் தாங்களும், தாங்கள் சார்த்த ஐ.நா சபையும் விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.