கூட்டமைப்பின் தலைமைத்துவ பலவீனம்? ஈழநாடு Editorial

ஓர் இனத்தை வழிநடத்தும் தலைமை பலவீனமாக இருந்தால், அந்த இனத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் வெற்றிபெறப் போவதில்லை. யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னி ரெண்டு வருட கால அரசியல் நகர்வுகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயங்கள் இடம்பெறாமைக்கு, கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலுள்ள குறைபாடுகளே காரணமாகும். ஆனால், இப்போதும் அது அப்படியே தொடர்வதுதான் கவலைக்குரியது.

கூட்டமைப்பின் சார்பில் அமெரிக்காவுக்கு நிபுணர் குழுவொன்று சென்று வந்தது. ஆனால், அது பற்றி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி களின் தலைவர்களுக்குத் தெரியாது. இப்போது கூட்டமைப்பு – உலகத் தமிழர் பேரவையின் கூட்டு அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஆனால், இது தொடர்பில் ஈழநாடு வினவியபோது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு இது தொடர்பில் எதுவும் தெரிந்திருக்கவில்லை. கூட்டமைப்பின் சார்பில் அமெரிக்கா சென்றிருந்த நிபுணர் குழுவுடன் புலம்பெயர் அமைப்புக்கள் சார்பில் உலகத் தமிழர் பேரவையும் இணைந்திருந்தது. இது தொடர்பிலும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அறிந்திருக்கவில்லை.
இவ்வாறான பல விடயங்கள் எந்த அடிப்படையில் நடைபெறுகின்றன?
ஒருமுறை நடந்தால் அது தவறுதலானது. பலமுறை நடந்தால் அது திட்ட மிட்ட ஒன்றாகும். இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் இடம்பெறு கின்றபோது – ஏன் சம்பந்தன் அமைதியாகவே இருக்கின்றார்? சம்பந்த னால் எதனையும் கட்டுப்படுத்த முடியவில்லையா – அல்லது, சம்பந்தன் அவரின் தலைமைத்துவ தகுதியை முற்றிலுமாக இழந்துவிட்டாரா – அல்லது, கூட்டமைப்புக்கு தலைமை தாங்குவதற்கு சம்பந்தனால் முடியவில்லையா?

ஒருமுறை இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு – ஏனையவர்களுக்கு அறிவிப்பது எனது வேலையல்ல, என்றவாறு கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் பதிலளித்திருந்தார். தனக்கு தரப் படும் வேலையை தான் செய்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின் சம்பந்தனுக்கு தெரிந்தே அனைத்தும் இடம்பெறுவதா கவே, ஒருவர் இதனை புரிந்துகொள்ள வேண்டியிருக்கின்றது.

சம்பந்தனுக்குத் தெரிந்துதான் அனைத்தும் நடக்கிறதென்றால் – எதற்காக சம்பந்தன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை உதாசீனம் செய்கின்றார்? பங்காளிக் கட்சிகளுடன் இணைந்திருக்க அவர் விரும்ப வில்லையாயின், அவர்களை தனி வழியில் செல்லுமாறு சம்பந்தன் கோர வேண்டும். அவ்வாறில்லாது, கூட்டமைப்பாக இருப்பதானால் – அதற் குரிய அரசியல் ஒழுக்கத்துடன் சம்பந்தன் நடந்துகொள்ள வேண்டும்.

 

கூட்டமைப்புக்குள் இடம்பெறும் இதுபோன்ற விடயங்கள், தமிழ் மக்களின் உரிமைநோக்கிய அரசியலை பரிகசிப்புக்கு உரியதாக்கின்றது. இராஜதந்திர தரப்புக்கள் எவரை நம்பி பேசுவதென்னும் நிலைமையை தோற்றுவிக்கின்றது. இது தமிழ் மக்களின் உரிமை நோக்கிய நகர்வு களை மோசமாகப் பாதிக்கக்கூடியது. சம்பந்தன் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அவரின் உடல் நிலை அதற்கு இடம் கொடுக்காவிட்டால் – பொறுப்புக்களை ஏனைய கட்சியினரிடம் பகிர்ந்த ளிக்க முன்வர வேண்டும். இளம் தலைவர்களுக்கு இடமளிக்க வேண் டும்.

கூட்டமைப்பின் தலைமைத்துவம் என்பது – மூன்று கட்சிகள் மன முவந்து வழங்கியிருப்பது. அதனை சம்பந்தன் மதித்து நடக்க வேண்டும்.

 

சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக நடந்துகொள்ள வேண்டும். அவர்
கூட்டமைப்பின் தலைவராக நடந்து கொள்ளாமையின் காரணமாகவே, கூட்டமைப்பில் எவரும் எதையும் செய்யலாம் என்னும் நிலைமை
காணப்படுகின்றது. கூட்டமைப்பின் அனைத்து தவறுகளுக்கும் –
அனைத்து பின்னடைவுகளுக்கும் – அனைத்து குழப்பங்களுக்கும் –
அனைத்து உள்முரண்பாடுகளுக்கும், ஒருவர்மீது குற்றம்சாட்ட முடியு
மென்றால், அது நிச்சயம் சம்பந்தனாக மட்டுமே இருக்கமுடியும்.

Posted in Uncategorized

இப்படியும் நடக்கிறது…! ஊர்க்குருவி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே பலரும் கூட்டமைப்புக்குள் இருந்தபோது கோரிக்கை விடுத்து வந்தனர்.

முக்கியமாக, ஈ. பி. ஆர். எல். எவ். கட்சி கூட்டமைப்புக் குள் இருந்தபோது, இதற்காக தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தது.

அந்தக் ‘குடைச்சல்’ காரணமாகவே அது கூட்டமைப்பி லிருந்து வெளியேற (அல்லது வெளியேற்றப்பட) நேர்ந்தது என்பதும் நமக்கெல்லாம் தெரிந்ததுதான்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அவ்வப்போது இதுதொடர்பாக குரல்கொடுத்தாலும், தமிழ் அரசுக் கட்சி யின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை எதிர்த்து ‘கெத்துக்காட்டும்’ மனபலம் அவர்களிடம் இல்லாத காரணத் தால் அது நடந்தேறவில்லை.

ஆனாலும் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் எல்லாம் சேர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் கொடுத்திருக் கின்றன. தாங்கள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்குவதாக அவை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்திருப்பதாகவும், அதனால் கூட்டமைப்பை தனியாகப் பதிவு செய்யவேண்டியதில்லை என்றும் ஒருதடவை அதன் பேச்சாளர் விளக்கமளித்திருந்தார்.

கூட்டமைப்பில்தான் இந்த நிலை என்றால், ஒரேயோரு கட்சியை மாத்திரம் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்ன ணியும் அவ்வாறு எந்த பதிவையும் செய்யாமல் இயங்கி வருகின்றது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தனது குடும்பக் கட்சி யான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெயரில் தேர்தலை சந்தித்துக் கொண்டிருக்கின்றபோதிலும், தமது அரசியல் இயக்கத்தை தமிழ்த் தேசிய மக்கள் முனன்ணி என்ற பெயரிலேயே நடத்தி வருகின்றார்.

யாழ். முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வெளியேற்றியதாக அவர் கள் அறிவித்தபோது அவர், அப்படியொரு கட்சியில் தான் உறுப்பினராகவே இல்லாதபோது எப்படி தன்னை வெளி யேற்ற முடியும் என்று அவர்களை சட்ட சிக்கலுக்கு உள்ளாக் கியிருந்த அதேவேளை, அந்தப் பெயரில் கட்சியை பதிவுசெய் வதற்கு அவர் முயன்று கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.

கூட்டமைப்பில் பல கட்சிகள் இருப்பதால் அவ்வாறு கட்சி கள் தமக்கிடையே ஒரு கூட்டணியை உருவாக்கி ஒரு பெயரில் இயங்குவது சரி. ஒரு கட்சி மட்டும் இன்னுமொரு பெயரில் இயங்கவேண்டிய தேவை எதற்காக வந்தது என்பதை அவர் களிடம்தான் கேட்டு அறியவேண்டும்.

தமிழ் மக்கள் கூட்டணி என்ற தனது கட்சியை பதிவு செய்வதற்கு முன்னதாக விக்னேஸ்வரன் கடந்த தேர்தலில் ஈ. பி. ஆர். எல். எவ்.உடன் கூட்டணி அமைத்தபோது, அந்தக் கூட்டணியில் பதிவுசெய்யப்படாத அனந்தியின் ஈழத் தமிழர் சுயாட்சி கழகமும் சிறிகாந்தா- சிவாஜியின் தமிழ்த் தேசியக் கட்சியும் இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்தித்தன. அதற்காக அவர்கள் கூட்டணி யிலிருந்த பதிவுசெய்யப்பட்ட ஒரேயோரு கட்சியான ஈ. பி. ஆர். எல். எவ். கட்சியின் பெயரை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்று பெயரை மாற்றிவிட்டே தேர்தலைச் சந்தித் தார்கள். இப்போது ஈ. பி. ஆர். எல். எவ். என்றொரு கட்சியே இல்லை.

அதேபோல, தமிழ் காங்கிரஸ_ம் தனது பெயரை தமிழ்
தேசிய மக்கள் முன்னணி என்று மாற்றியிருக்கலாம். ஆனால்,
அதற்கு கஜேந்திரகுமார் குடும்பம் சம்மதிக்குமா என்பது
கேள்விக்குரியது. அதனால்தானோ என்னவோ தமிழ் காங்கி
ரஸ் என்ற கட்சியே முன்னணியாக வேடம் போட்டுக்
கொண்டு இயங்கிவருகின்றது.

இவை எல்லாம் எதற்காக இப்போது என்று நீங்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கலாம். பதின்மூன்றை ஏற்றுக்கொண்டதன் மூலம் தமிழர் பிரச்னையை ஒற்றையாட்சிக்குள் முடக்கி விட்டார்கள் என்று பொங்கி எழுந்த முன்னணி, அதற்கு எதிராகப் போராடுவதற்கு பல நாட்களுக்கு முன்னரே திட்டமிட்டு மக்களுக்கு அறிவித்து போராட்டம் நடாத்தியிருந்ததும் நினைவிருக்கலாம்.

ஆனால், அதே முன்னணி தனது வருடாந்த மாநாட்டை முல்லைத்தீவில் கடந்த ஞாயிறன்று நடத்தியிருந்ததை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு கட்சியின் வருடாந்த மாநாடு என்றால் அது எத்தகைய தடல்புடலாக நடத்தப்படவேண்டியது என்பது அவர்கள் அறியாததல்ல.

ஆனால், அந்த மாநாடு பற்றிய அறிவிப்பு அது நடப்பதற்கு முதல்நாள் நள்ளிரவே ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

முன்னதாகவே இப்படியொரு மாநாடு நடப்பது குறித்து அறிவித்தால், இல்லாத கட்சி ஒன்றுக்கு ஏன் இந்த மாநாடு என்று கேட்டு யாராவது நீதிமன்றத்தை நாடி விடுவார்களோ என்ற அச்சம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர்களை நன்கு அறிந்த சட்டத்தரணியான அரசியல்வாதி ஒருவர்.

ஜெனீவாவுக்கு செல்ல முன் 83 தூதுவர்களுடன் சந்திப்பு

83 தூதுவர்களுடன் சந்திப்பு: வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், 2022 பெப்ரவரி 18ம் திகதி இந்திய தலைநகர் டெல்லியியை தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரப் பிரதிநிதிகளுக்கு மத்தியில் உரையாற்றினார்.
பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் குறித்த தகவல்களைப் பகிர்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

தற்போதைய அபிவிருத்திகளைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளக்கங்களின் தொடர்ச்சியாக, டெல்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அங்கீகாரம் பெற்ற தூதரகத் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் வாய்ப்பை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் பாராட்டினார். மாநாட்டில் 83 தூதுவர்கள் கலந்து கொண்டனர்.

மனித உரிமைகள் பேரவையின் 2021 செப்டெம்பர் அமர்வில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மற்றும் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியமையை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலைபேறான அபிவிருத்திச் சபை ஆகிய உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் காரணமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளான பொறுப்புக்கூறல், மறுசீரமைக்கப்பட்ட நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

43 வருடங்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டம் பல மாதங்களாக நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக விளக்கமளித்த அமைச்சர், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப் படியாகும் என சுட்டிக் காட்டினார்.

கடந்த 24 மாதங்களில் இலங்கையில் 1 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது!

கடந்த 24 மாதங்களில் அரசாங்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சடித்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன சபையில் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

இவ்வாறு பணம் அச்சிடப்பட்டதன் விளைவாக நாட்டின் பணவீக்கமானது 16 வீதமாக அதிகரித்துள்ளதுடன் 25 வீத உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நாட்டின் வங்கிக் கட்டமைப்பும் வெகு விரைவில் வீழ்ச்சி காணும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன சபையில் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் தாமதித்ததால் டீசல் கப்பலுக்கு 38,000 டொலர்கள் தாமதக் கட்டணம்

டீசல் பற்றாக்குறை காரணமாக பொது போக்குவரத்து சேவையும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகிறது.

டீசல் இன்மையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இடைநடுவே நின்ற சம்பவமொன்று களுத்துறையில் இன்று பதிவானது.

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த, மாத்தறை டிப்போவிற்கு சொந்தமான பஸ் ஒன்று டீசல் தீர்ந்தமையால் களுத்துறை நகர் மத்தியில் நின்றது.

இதனிடையே, தனியார் பஸ் சேவைக்கு இரண்டு நாட்களுக்கு போதுமான அளவு டீசலே கையிருப்பிலுள்ளதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

டீசல் பற்றாக்குறையால் கொள்கலன் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக நுவரெலியாவில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் அமைதியின்மை ஏற்பட்டது.

முல்லைத்தீவின் பல பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று எரிபொருள் காணப்படவில்லையென நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டார்.

நேற்று (22) நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தின்போது திறைசேரி செயலாளர் இலங்கை வங்கிக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய, டீசல் கப்பல் ஒன்றுக்கான கட்டணம் செலுத்தப்பட்டதாகவும் அந்த கப்பலிலுள்ள டீசலை இறக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

மற்றுமொரு பெட்ரோல் கப்பல் கடலில் உள்ளதாகக் கூறிய அவர், அதற்குத் தேவையான டொலரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், 37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலுக்காக இரண்டு நாட்கள் தாமதத்தின் பின்னர் 35 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு நேற்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை, டீசலை ஏற்றிய கப்பலுக்கு இரண்டு நாட்கள் தாமதக் கட்டணமாக 38,000 டொலர் கட்டணம் செலுத்த நேர்ந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

இராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமையாக்க கோரும் மனு மீது மார்ச் 9 ஆம் திகதி விசாரணை

இராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

ராம் சேது எனப்படுகின்ற ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமை சின்னமாக பிரகடனம் செய்யுமாறு கோரி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதியரசர்களான A.S.போபன்னா , ஹிமா கோஹ்லி ஆகியோர் அங்கம் வகித்த நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மனு மீதான விசாரணை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால், அதனை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சுப்ரமணியம் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கமைய, இராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமை சின்னமாக பிரகடனப்படுத்துமாறு ​கோரும், சுப்ரமணியம் சுவாமியின் மனுவை மார்ச் மாதம் 09 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளள மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று தீர்மானித்துள்ளது.

தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் மன்னார் தீவிற்கு இடையே உள்ள ஆழமற்ற திட்டு போன்ற பகுதியே இராமர் பாலம் என அழைக்கப்படுகிறது.

இராமர் பாலத்தின் 8 மணல் திட்டுக்கள் இலங்கைக்கு உரித்தானவை. அவை இலங்கை கடற்பரப்பில் அமைந்துள்ளன.

தலைமன்னாரிலுள்ள இராமர் பாலத்திற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் கடந்த வருடம் மார்ச் மாதமும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் கடந்த வருடம் பெப்ரவரி மாதமும் சென்று வழிபாடுகளை நடத்தியிருந்தனர்.

இதேவேளை, இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங் வட மாகாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்யும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி கண்காணித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர், இந்த விஜயம் முடிவாக மாத்திரமன்றி ஆரம்பமாகவும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்று கடந்த வருடம் நவராத்திரி விழாவிற்காக இலங்கைக்கு விமானத்தில் வந்துகொண்டிருந்தபோது, சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் ராமர் பாலத்தின் புகைப்படத்துடன் கூடிய பதிவொன்றை இட்டிருந்தார்.

ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக பிரகடனப்படுத்துவதில் இந்திய பிரதமருக்கு உள்ள தடைகள் என்னவென அவர் அந்த பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் குறைந்தது அவரிடம் இது குறித்து வினவியேனும் தகவல் வரவில்லை.

அன்று அவர்கள் கடைப்பிடித்த மௌனத்தின் விளைவாக இன்று எமது நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் வகையில் எமது நாட்டுக்குரிய மணல் திட்டுக்களும் இந்தியாவின் தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

Posted in Uncategorized

நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனருத்தாரணம் செய்ய தீர்மானம்

நல்லூர் இராசதானியின் தோரணவாசலை புனருத்தாரணம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மரபுரிமை மையம் மற்றும் தெல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பகல் 12மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் பரமு புஸ்பரட்ணம், யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

பயங்கரவாத தடுப்பு (திருத்தம்) சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் 6 மனுக்கள்

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்திற்கு எதிராக ஆறு மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது என சபாநாயகர் அறிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த வாரம் அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்)” எனும் சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பித்திருந்தார்.

குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் என தெரிவித்து அதற்கு எதிராக சிவில் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதன் பிரகாரம் நேற்று பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியபோது நீதிமன்றம் அதுதொடர்பில் விடுத்துள்ள அறிவிப்பை சபைக்கு சபாநாயகர் அறிவித்தார்.

குறித்த அறிவிப்பில் அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு மனுக்களின் பிரதிகள் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அந்த பிரதிகள் எனக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றன என குறிப்பிட்டார்.

சிங்கள தேசியவாதம் தொடர்பான ஆருடம்? ஈழநாடு Editorial

சிங்கள பத்திரிகை உலகிலும், புத்திஜீவிகள் உலகிலும் விக்டர் ஐவன்
முக்கியானவர். ஜே.வி.பியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான

அவர், சிங்கள இனவாத புத்திஜீவிகளுக்கு எதிரானவர். ஆட்சியாளர்

களை விமர்சிக்க தயங்காதவர். இவர், அண்மையில் ஆங்கில ஊடமொன்றிற்கு
வழங்கிய நேர்காணலில் – சிங்கள தேசியவாதம் அதன் இறுதி கட்டத்தை
அடைந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். தற்போதைய ஆட்சியாளர்கள்
நெருக்கடிகளை சந்தித்து வரும் பின்னணியை கருத்தில் கொண்டுதான்,
அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். விக்டர் ஐவனின் கணிப்பு சரியானதா –
சிங்கள தேசியவாதம் அதன் இறுதி கட்டத்தை அடைந்திருப்பது உண்மை
தானா?

சிங்கள தேசியவாத அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால் – தமிழர்
விரோதமே, அதன் அடிப்படையாக இருந்திருக்கின்றது. கட்சிக் கொடிகளின்

நிறத்தை தாண்டி, தமிழர் விரோதம் அனைத்து சிங்கள கட்சிகளுக்குள்ளும்,
புரையோடிப் போயிருக்கின்றது. இந்த பின்னணியை அடிப்படையாகக்
கொண்டு, சிந்தித்தால், இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, சிங்கள
தேசியவாதமென்பது, அடிப்படையில் தமிழர் விரோத தேசியவாதமாகவே

எழுச்சியுற்றிருந்தது. தேசியவாதங்கள் தொடர்பான பொதுவான கணிப்புக்குள்
சிங்கள தேசியவாதம் அடங்காது. அடிப்படையில் – சிங்கள தேசியவாத
மென்பது, தமிழர் விரோத – சிங்கள பௌத்த பெருந் தேசியவாதமாகும்.
‘அப்பே-றட்ட’ என்பதுதான் சிங்கள பெருந்தேசியவாதத்தின் அச்சாணிக்
கருத்தாகும். அதாவது, இந்த நாடு சிங்கள மக்களுக்குரியது- ஏனைய
இனங்கள் இங்கு வாழலாம் ஆனால் தனித்துவமான உரிமைகளை
அனுபவிக்க முடியாது. இதுதான், சிங்கள பெருந்தேசியவாத அசியலின்
இலக்காகும். இந்த அடிப்படையில்தான், இலங்கையின் கடந்த 74 வருடகால
அரசியல் வரலாறானது, இந்த அடிப்படையில்தான் நகர்ந்திருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழலில், சிங்கள தேசியவாதம் அதன் இறுதிக் கட்டத்தை
நோக்கி பயணிப்பதாக கூற முடியுமா?

தமிழ் தேசியவாத அரசியல் எழுச்சியென்பது சிங்கள ஆட்சியாளர்களின்
தவறுகளிலிருந்தே உருவானது. இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கிய
எஸ்.ஜே.வி.செல்வநாயகமும், ஏனைய தலைவர்களும், ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள மக்களோடு இணைந்து வாழ்வதற்கான கோரிக்கைகளைத்
தான் முன்வைத்திருந்தனர். பண்டா-செல்வா, டட்லி-செல்வா – ஒப்பந்தங்கள்,

ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதற்கான கோரிக்கைகள்தான். உண்மையில்
அவைகள் சமஷ்டிக் கோரிக்கைகளும் அல்ல. ஆனால் அந்தக்
கோரிக்கைகளைக்கூட சிங்கள ஆட்சியாளர்கள் நிறைவேற்ற முயற்சிக்கவில்லை.
மேற்படி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட பின்னணியில்தான், தமிழ்த்
தலைமைகள் தனிநாட்டு கோரிக்கையை நோக்கிச் சென்றன. ஆனால்
அப்போதுகூட, தனிநாட்டு கோரிக்கையை அடைவதற்கான எந்தவொரு
வழிமுறையும் தமிழ்த் தலைமைகளிடம் இருந்திருக்கவில்லை. ஆனால்
தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைகளை புரிந்து கொண்டு ஆரோக்கியமான
அரசியல் இணக்கப்பாடு நோக்கி, சிங்கள ஆளும் வர்க்கம் வரவில்லை. தமிழர்
விரோதத்தை முன்னிறுத்தி தங்களின் அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வது
பற்றியே அவர்கள் சிந்தித்தனர். படித்தவரான பண்டாரநாயக்க தனிச்சிங்கள
சட்டத்தை முன்வைத்தது இந்த பின்னணியில்தான்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர், இலங்கைக்கான சமஸ்டி தொடர்பில் பேசிய பண்டாரநாயக்க,இறுதியில் ஒரு சிறு நிலத் துண்டைக் கூட தமிழர்களுக்கு வழங்கக்கூடா
தென்னும் சிங்கள பெருந்தேசியவாத மனோநிலைக்கு அத்திபாரமிட்டார்.
சிங்கள ஆளும் வர்க்கத்தை பொறுத்தவரையில் தமிழர் விரோதம் இல்லாத
அரசியலை அவர்களால் இதுவரையில் நிரூபிக்க முடியவில்லை. இந்த
நிலையில், புதிதாக அரசியலுக்கு வருபவர்கள்கூட, விரும்பியோ – விரும்
பாமலோ தமிழர் விரோதத்தை கையிலெடுக்கின்றனர். யுத்த வெற்றியை
தேர்தல் மேடைகளில் உச்சரிக்கின்றனர். இந்த நிலையில், தற்போதைய
ஆட்சியாளர்கள் நெருக்கடியிலிருந்தாலும் கூட, சிங்கள பெருந்தேசியவாதம்
வீழ்ச்சியடைந்து விடுமென்று கருத முடியாது. இந்த ஆட்சியாளர்கள்
வீழ்சியடைந்தாலும் கூட, சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம் புதிய வடி
வங்களில் தன்னை நிறுவிக் கொள்ளும். ஏனெனில் சிங்கள பெருந் தேசிய
வாதம் என்பது, அடிப்படையில், சிங்கள பௌத்தத்தோடு பின்னிப் பிணைந்தது.
சிங்கள பெருந்தேசியவாதம் நெருக்கடிகளை சந்திக்கும் போதெல்லாம், சிங்கள
பௌத்தம் அதனை தாங்கிப்பிடிக்கும். அதற்கான புதிய உக்திகளை
கைக்கொள்ளும்.

Posted in Uncategorized

ஜெனிவா செல்லும் இலங்கை குழுவுக்கு அமைச்சர் பீரிஸ் தலைமை தாங்குகிறார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்ளும் இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமை தாங்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை 28 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை நடைப்பெறவுள்ளது.

மார்ச் மாதம் 3 ஆம் திகதி இலங்கை தொடர்பிலான கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

49 ஆவது கூட்டத்தொடர்பில் கலந்துக்கொள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்,நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உட்பட விசேட பிரதிநிதிகள் குழுவினர் ஜெனிவா செல்லவுள்ளனர்.

இந்த பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகாரத்துறை அமைச்சர் தலைமை தாங்குவார்.

இவ்விஜயத்தின் போது வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் 49ஆவது அமர்வின் உயர்மட்ட பிரிவில் உரையாற்றுவார்.

அதனை தொடர்ந்து இடம்பெறவுள்ள இலங்கை தொடர்பான உரையாடலிலும் அவர் பங்குப்பற்றுவார்.

அத்துடன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் இவ்விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் உட்பட முக்கிய தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நேரடி களவிஜயத்தை மேற்கொள்ளுமாறு வெளிவிவகாரத்துறை அமைச்சர் சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தவுள்ளார்.

Share