கொழும்பு மாநகர முதல்வர் ரோசி யாழ் விஜயம்

கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்கா இன்றைய தினம் யாழ்ப்பாணம் மநகர சபைக்கு விஜயம் மேற்கொண்டார்.

சிநேக பூர்வ விஜயத்தில் கொழும்பு மாநகர முதல்வரை யாழ்ப்பாணம் மாநகர சபையின் ரெலோ பிரதி முதல்வர் து.ஈசன் வரவேற்றார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதான நூலகம் 1959ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காலம் முதல் இன்றைய வரையான வரலாற்றையும் தெரிவித்து நூலகத்தின் தற்போதைய பணிகளை நேரில் காண்பித்தனர்.

இதன்போது யாழ்ப்பாணம் பிரதி முதல்வருடன் மாநகர ஆணையாளர் ரி.ஜெயசீலனும் உடன் இருந்து கொழும்பில் இருந்து வந்தவர்களிற்கு வழிகாட்டினார்.

இப்படியும் நடக்கிறது! -ஈழநாடு

‘ஈழநாடு’ குழுமத்தின் தலைவர் குகநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரைப் பார்த்து அடிக்கடி சொல்லுவார், இவர்கள் பிள்ளையைப் பெறவும் விரும்புகின்றார்கள். அதேவேளை, கன்னித் தன்மையுடன் இருக்கவேண்டும் என்றும் நினைக்கின்றார்கள் என்று.

அவர்கள் கொள்கையில் உறுதியாக இருப்பதால், அதற்காக கன்னியாகவே இருக்கவேண்டும் என்பது கொள்கை என்றால் அவர்களால் எந்தக் காலத்திலுமே பிள்ளை பெற்றுக்கொள்ளமுடியாது. அவர்கள் பிள்ளையைப் பெறவேண்டும் என்றால் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்யத்தான்வேண்டும் என்பது அவரது கருத்தாக இருக்கவேண்டும்.

சில வருடங்களுக்கு முன்னர் சங்கிலியன் பூங்காவில் நடந்த முன்னணியின் கூட்டம் ஒன்றில் பேசிய ஒருவர், அவர்களின் தலைவரை பிரபாகரனுடன் ஒப்பிட்டு பேசியது பலருக்கும் சிரிப்பிற்கிடமாக இருந்தபோதிலும், முன்னணியின் தலைவர் தனது கொள்கையில் உறுதியாக இருப்பதை வைத்துத்தான் அவர் அப்படிச் சொல்கிறார் என்று நினைத்தவர்களும் உண்டு.

ஒருநாடு இரு தேசம் என்ற தமது கொள்கையில் அவர்கள் உறுதியாக இருப்பது பாராட்டுக்குரியதுதான், அதற்காக அதேகொள்கையைத்தான் விடுதலைப் புலிகளும் கொண்டிருந்தார்கள் என்று முன்னணியின் செயலாளர் செல்லையா கஜேந்திரன் இப்போது தெரிவித்திருப்பதைப் பார்க்கின்றபோது, அவர்களும் இப்போது மற்றைய அரசியல்வாதிகளுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகள் ஆயுதத்தில் மாத்திரமே நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அவர்கள் அரசியல் தீர்வு ஒன்றிற்கு எந்தக் கட்டத்திலும் வரப்போவதில்லை என்று, அரசாங்கம் சர்வதேசத்தை புலிகளுக்கு எதிராக அணிதிரட்ட எடுத்த சதியை முறியடிக்க, புலிகள் தமிழீழத்திற்கு நிகரான தீர்வை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகக் கூறியே பேச்சுவர்த்தைக்கு முன்வந்திருந்தார்கள் என்பது தெரிந்ததுதான். ஆனால், அதற்காக அவர்கள் தனிநாட்டுக்காக போராடவில்லை, தமிழர் தேசத்தை அங்கீகரிக்கவே போராடினார்கள் என்று அவர் கூறியிருப்பது புலிகள் மீதான சேறடிப்பு என்பதை புரிந்துகொள்ள அதிகம் ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை.

தனது கருத்து, சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர், அதுகுறித்து விளக்கமளித்த கஜேந்திரன், பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்:

“…விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்காக போராடிவந்த நிலையில், அரசுடன் நேரடியாக இடம்பெற்ற பேச்சுக்களிலும் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இடம்பெற்ற பேச்சுக்களின்போதும் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கக்கூடிய தீர்வை அரசுத் தரப்பு முன்வைத்தால் பரிசீலிக்கத் தயாராக இருந்தார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்த முற்பட்ட வேளையில், நான் கூறிய கருத்துக்களானவை, விடுதலைப் புலிகள் தனிநாட்டுக்காக போராடவில்லை என தவறாக அர்த்தப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. தெளிவற்ற வகையில் அந்தக் கருத்து வெளிவந்தமைக்காக நான் மனம் வருந்துகின்றேன்.”

மேற்கண்டவாறுதான் தனது மன்னிப்பு அறிக்கையில் கஜேந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

‘டான் ரிவி’யில் சுரேஸ் பிரேமச்சந்திரனுடனான நிகழ்ச்சியில் சுரேஸ், “2009 வரை தனி நாட்டுக்கான யுத்தம் ஒன்று நடக்கிறது. தனி நாட்டுக்கான யுத்தம் நடக்கும்போது எல்லோருக்கும் ஓர் எதிர் பார்ப்பு இருந்தது.” என்று கூறிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட கஜேந்திரன் எம். பி., “தனிநாட்டுக்கான யுத்தம் அல்ல, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான யுத்தம்” என்றார். அத்துடன், “இவர்கள் (சுரேஸ்), அரசாங்கம் புலிகளை அழித்தது சரியென்று சொல்லப் பார்க்கிறார்” என்றும் கூறினார். இதன்மூலம் அவர் சொல்ல வருவது, புலிகள் தனிநாடு கேட்டுத்தான் போராடினார்கள் என்றால் அது புலிகளை அரசு அழித்தது சரி என்றாகிவிடும். அப்படியல்ல, அவர்கள் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கவே போராடினார்கள் என்கிறார் கஜேந்திரன்.

அவரது கருத்துக்கும், மறுப்பு அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. புலிகள், பேச்சுவார்த்தை மேசையில் தனிநாட்டுக்கு நிகரான தீர்வை முன்வைத்தால் பரிசீலிக்க தயாராக இருக்கிறோம் என்று சொன்னார்களே தவிர, தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கக்கூடிய தீர்வை பரிசீலிக்கத் தாயராக இருந்தார்கள் என்பது சரியானதல்ல.

ஒருவர் தனது மனதில் என்ன நினைக்கின்றார் என்பதை அறியவேண்டும் என்றால், அவரை நன்றாக மதுஅருந்த வைத்துவிட்டு அவரைக் கிளறினால் அடிமனதில் இருப்பதை அறிந்துகொள்ளலாம் என்பார்கள். மதுபோதை ஊட்டுவதும், ஒருவரை கோபப்படுத்துவதும் ஒன்றானதுதான். ஒருவரை கோபப்படுத்துவதாலும் அவரின் அடிமனதை அறியலாம் என்பார்கள்.

கோபப்படுத்தி, சுரேஸ் அவரின் ஆழ்மனதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

– ஊர்க்குருவி

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி ; நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர அனுமதி

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரவுள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 1ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் அவசர கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகர் சபை, திணைக்களத் தலைவர்கள் என பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல், “கடந்த வருடத்தை விட இவ்வருடம் நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர அனுமதி வழங்கி உள்ளோம்.

வருகை தருகின்ற பக்தர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தடுப்பூசியை பெற்றுக்கொண்டமைக்கான ஆதாரமாக தடுப்பூசியை அட்டையை அல்லது தடுப்பூசி அட்டையினை கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து கொண்டு வர வேண்டும்.

கடமையில் ஈடுபடுத்தப்படும் பொது சுகாதார பரிசோதகர்கள் நுழைவாயிலில் பரிசீலனை செய்வார்கள். இதன்போது காண்பிக்க வேண்டும். திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகை தருகின்ற சகல பக்தர்களும் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும்.

அதற்கான சகல ஒழுங்குகளும் சுகாதார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு வழங்குவதற்கான வியாபார நிலையங்கள் அமைக்கப்படும். ஆனால் உணவை பெற்றுக் கொண்டு சென்று உண்ண வேண்டும்.

உணவகங்களில் இருந்து சாப்பிட முடியாது. பாலாவி தீர்த்தத்தில் இறங்கி குளிப்பதற்கு சுகாதார துறையினரால் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் பக்தர்கள் பாலாவி தீத்தத்தை பெற்றுக் கொள்வதற்கு அங்கு கடமையில் இருக்கும் தொண்டர்கள் நீரை அள்ளி பக்தர்களுக்கு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு வர முடியாத பக்தர்களுக்காக தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் அரச வாகனங்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய அவசிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பாகிஸ்தான் புதிய உயர்ஸ்தானிகர், ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் சந்திப்பு

இலங்கைக்கான பாக்கிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி, ஹிலால்-ஐ-இம்தியாஸ் அவர்கள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இருவருக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் இரு நாடுகளுக்கும் இடையில் பல வருடங்களாக நிலவும் நட்புறவுகள் மற்றும் தற்போதைய பரிமாற்ற நிகழ்ச்சிகள் குறிப்பாக இரு நாடுகளின் பயிற்சி பரிமாற்ற தொகுதிகளில் ஆயுதப்படைகளின் பங்கேற்புடனான நிகழ்ச்சிகளினையும்நினைவுகூர்ந்தார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா புதிய உயர்ஸ்தானிகரின் நியமனத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் அவருக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.

பின்னர் இருவருக்குமிடையில்நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேனல் முஹம்மது சப்தாரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

மலையக மக்களின் அரசியல் ஆவணம் 21 ஆம் திகதி இறுதி வடிவம் பெறும்: மனோ கணேசன் அறிக்கை

இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவணம் எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பில் இறுதி வடிவம் பெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

கண்டி சமூக அபிவிருத்தி மன்றம், சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலச்சந்திரனின் ஏற்பாட்டில் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவணம் தயாரிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகக் கட்சிகளின் தலைவர்கள், பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாட்டு அரசுகள், சர்வதேச நிறுவனங்களுக்கும் இந்த ஆவணத்தை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் அமைப்பை தயாரிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டு வரும் நிலையில், மலையக மக்கள் தொடர்பாக விரிவுபடுத்தப்பட்ட நிலைப்பாட்டு கோரிக்கைகளை அரசுக்கு அறிவித்து, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உத்தேசித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இலங்கை அரசுடன், இந்திய அரசுக்கும் காணப்படுகின்ற கடப்பாடுகள் நல்லெண்ண அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மகாராணியாரின் அரசாங்கத்திற்கும் மலைய மக்கள் தொடர்பில் காணப்படும் பெரும் கடட்பாட்டை எடுத்துக்கூறி, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது அறிக்கையினூடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள டிவானியா முகுந்தன், மொஹமட் இம்ரான் மற்றும் செல்வநாயகம் சசிகரன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாதத்தடைச்சட்டத்துடன் தொடர்புடைய வகையில் அரசாங்கத்தினால் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டிய 7 பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கின்றது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் அச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாத்தடைச்சட்டத்துடன் தொடர்புடையதாக அரசாங்கத்தினால் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டிய 7 பரிந்துரைகளை உள்ளடக்கி புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2021 மார்ச் மாதம் 29 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இன்னமும் வழக்குப்பதிவு செய்யப்படாமல் 10 மாதங்களுக்கும் அதிகமான காலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த 34 வயதான டிவானியா முகுந்தன், கடந்த 2019 மேமாதம் 9 ஆம் திகதி விசாரணைகளுக்கெனக் கைதுசெய்யப்பட்டு எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி இரண்டரை வருடங்களுக்கும் அதிகமான காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த 23 வயதான மொஹமட் இமாம் மொஹமட் இம்ரான், கடந்த 2020 மேமாதம் 5 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இன்னமும் வழக்குப்பதிவு செய்யப்படாமல் ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த 28 வயதான செல்வநாயகம் சசிகரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள முறை, அவர்களது குடும்பத்தினர் முகங்கொடுத்திருக்கக்கூடிய சிக்கல்கள், பிணைக்கோரிக்கையை முன்வைப்பதற்கான வாய்ப்பு, பொருளாதார ரீதியில் அவர்கள் எதிர்கொண்டிருக்கும் தாக்கங்கள் என்பன தொடர்பிலும் மன்னிப்புச்சபையின் அவ்வறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் முக்கிய விடயங்கள் வருமாறு,

இலங்கையைப் பொறுத்தமட்டில் பயங்கரவாதத்தடைச்சட்டமானது நபர்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கும் வகையில் கடந்த 1979 ஆம் ஆண்டில் ஓர் தற்காலிகச் சட்டமாகவே நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் 1982 ஆம் ஆண்டில் அது நிரந்த சட்டமாக்கப்பட்டது.

எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி நபரொருவரை நீண்டகாலத்திற்குத் தடுத்துவைப்பதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய இச்சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுமையை இலங்கையர்கள், குறிப்பாக சிறுபான்மையினத்தவர்கள் தற்போதும் தாங்கிக்கொண்டிருக்கின்றனர்.

பயங்கரவாதத்தடைச்சட்டமானது சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படும் என்று இல்ஙகை அரசாங்கம் பல்வேறு தடவைகள் வாக்குறுதி வழங்கியிருந்தாலும், தற்போதுவரை அச்சட்டத்தில் உரியவாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் நபர்களைத் தன்னிச்சையாகக் கைதுசெய்து தடுத்துவைப்பதற்கான ஓர் ஆயுதமாக தொடர்ந்தும் அச்சட்டம் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்த முன்மொழிவுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது. இருப்பினும் இந்தத் திருத்த முன்மொழிவுகள் அச்சட்டத்தில் காணப்படும் முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குத் தவறிவிட்டன என்று நாம் கருதுகின்றோம்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு உள்ளக மற்றும் சர்வதேசத்தரப்புக்களினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில், அதனை முடிவுறுத்துவதற்கான முயற்சியாக பெருமளவிற்கு எவ்வித பயனையும் அளிக்காத திருத்தங்களை இலங்கை அரசாங்கம் முன்மொழிந்திருக்கின்றது.

ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைப்பதற்கு இந்தத் திருத்தங்கள் போதுமானவையல்ல.

ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள டிவானியா முகுந்தன், மொஹமட் இம்ரான் மற்றும் செல்வநாயகம் சசிகரன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் அவர்கள் குற்றம் புரிந்தமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் காணப்படும்பட்சத்தில், அவர்களுக்கு எதிராக உரியவாறு வழக்குத்தாக்கல்செய்து, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்.

அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதுடன் அச்சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக இடைநிறுத்தவேண்டும். பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரினதும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்.

மேலும் அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் முழுமையான மீளாய்வொன்றினை மேற்கொள்வதுடன் அவர்கள் பிணைக்கோரிக்கையை முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதுடன் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படாத குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலைசெய்யவேண்டும்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் சட்ட உதவியை நாடுவதற்கும் அவர்களது குடும்பத்தினரை சந்திப்பதற்குமான வாய்ப்பை வழங்குவதுடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் காரணமாக மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நிறைவாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கென முன்மொழியப்படும் எந்தவொரு திருத்தமும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் பிரகாரம் அச்சட்டம் கொண்டிருக்கக்கூடிய கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை அதன் அறிக்கையின் ஊடாக அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Posted in Uncategorized

உள்ளூராட்சிமன்ற தேர்தலை இந்த வருட இறுதியில் எமக்கு நடத்த முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

உள்ளூராட்சிமன்ற தேர்தலை, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவருடகாலத்துக்கு ஒத்திவைத்திருக்கின்ற போதும் தேவை என்றால் அதனை இந்த வருட இறுதியில் எமக்கு நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புன்சி ஹேவா தெரிவித்தார்.

தேர்தல் சர்ச்சைகளை தீர்ப்பதற்கான சட்டம் தொடர்பான பயிற்சி கருத்தரங்கு மாத்தளை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்றது. இதில் கலந்துகொண்டு குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்ககையில்,

உள்ளூராட்சிமன்ற தேர்தலை உரிய காலத்துக்கு நடத்த முடியாது என தெரிவித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தேர்தலை ஒருவருட காலத்துக்கு ஒத்திவைத்துள்ளார். அரசியலமைப்பில் அமைச்சருக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

என்றாலும் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் இந்த வருடம் செப்டெம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் ஆணைக்குழுக்கு கிடைக்கின்றது. அதன் பிரகாரம் இந்த வருடம் பெரும்பாலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த முடியுமாகும்.

தேர்தல் மக்களின் ஐனநாய கஉரிமையாகும் அதனால் தேர்தல் ஆணைக்குழு என்றவகையில் நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருக்கின்றோம்.

சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான தேவையான சூழல் நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றிக்கொண்டு தேர்தல் நடவடிக்கைகளுக்கு செல்ல முடியும் என்றார்

Posted in Uncategorized

‘கஜேந்திரகுமார் தனிநாட்டுக்கு போராட தயாரெனில் நானும் தயார்’: என்.சிறிகாந்தா!

தனிநாட்டுக்கு போராடுவதற்கு தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தயாரென்றால், நானும் தயாராக இருக்கிறேன். ஆனால் எமது மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியுள்ளது. நீண்ட யுத்தத்தின் விளைவுகளை சுமந்து கொண்டிருக்கும் எமது மக்கள் இப்பொழுதுதான் மெல்லமெல்ல எழுந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு எது சாத்தியம் என்பதை புரிந்துதான், நாங்கள் 6 கட்சிகள் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கோரியுள்ளோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சிறிகாந்தா.

இன்று (16) யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் 6 தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1988 நவம்பரில் பிரேமதாசா ஜனாதிபதியானதும் விடுதலைப் புலிகளுடன் பேச்சை ஆரம்பித்தார். இந்த பேச்சில் என்ன பேசப்பட்டது என எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லலாம். இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. பேச்சின் மையப்பொருள், அப்போது வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையை எப்படி திருப்பி அனுப்புவது என்பதுதான்.

விடுதலைப் புலிகளிற்கு, தமிழீழத்திற்கான போராட்டத்தை தொடர்வதற்கு அந்த தேவையிருந்தது.

பிரேமதாசவை பொறுத்தவரை, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை சிங்கள தீவிரவாதியாக எதிர்த்தவர்.கையெழுத்திட இந்திய பிரதமர் வந்த போது, அந்த நிகழ்வை புறக்கணித்தார்.

இரு தரப்பிற்கும் பொதுவான நலனிருந்தது. அமைதிப்படை வெளியேறிய பின்னர் அந்த பிணைப்பு அல்லது கருத்தொற்றுமை அடிபட்டு போய்விட்டது. இதுதான் பிரேமதாச காலத்தில் நடந்தது.

அதன்பின்னர் விஜயதுங்க வந்தார். அவரைப்பற்றி பேசுவதை விட, பேசாமல் விடலாம்.

அதன் பின்னர் சந்திரிகா அம்மா வந்தார். அவர் 1994 கார்த்திகையில் மகத்தான வெற்றியை பெற்று வந்த பின்னர், பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. ஒரு வருடம் புலிகளுடன் தேன்நிலவு நீடித்தது. 1995 இல் திருகோணமலையில் புலிகள் தாக்குதல் நடத்தியதுடன், அறுந்து போனது.

சந்திரிகா – புலிகள் பேச்சு, பூர்வாங்க நிலையில், ஆரம்ப கட்டத்திலேயே இருந்தது என்றுதான் கொள்ள முடியும் .

பிறகு யுத்தம் நடந்த போது, 2000 இல் தனது தீர்வுத்திட்டத்தை முன்வைத்தார். வடக்கு கிழக்கிற்கு சில அதிகாரங்களை கொடுத்து, இலங்கையை பல்வேறு மாநிலங்களின் ஒன்றியமாக மாற்றும் திட்டத்தை கொண்டிருந்தார். அதில் முன்னேற்றகரமானது. ஆனால் மற்ற விடயங்களில், பௌத்தத்திற்கு முன்னுரிமை, மத்திய அரசு சில விடயங்களை தக்க வைத்திருந்தது. குறிப்பாக காடுகள் மத்திய அரசின் கீழிருக்குமென்றும், வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பேரில் 3 மாநிலங்களாக பிரிக்கும் திட்டத்தை முன்வைத்தார்.

அப்போது தமிழ் கட்சிகள் எதுவும் அதனை ஆதரிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.கவினர் அந்த பிரேரணையை நாடாளுமன்றத்திற்குள்ளேயே தீ வைத்தனர். நாடாளுமன்றத்திற்குள் ஆவணம் தீ வைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது.

2001 ஒக்ரோபர் மாதத்தில் ரணில் ஆட்சிக்கு வந்த பின் பேச்சுக்கள் மீள ஆரம்பித்தன. பேச்சு நகர்ந்து கொண்டிருந்த போது, சந்திரிக்கா முட்டுக்கட்டையிட்டார்.

புலிகள் முன்வைத்த உள்ளக தன்னாட்சி அதிகாரசபை யோசனை கிட்டத்தட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், சந்திரிகா அதை தகர்ப்பதில் வெற்றிகண்டார். உயர்நீதிமன்றமொன்று துணை போனது.

ஒரு பாடம் தமிழ் மக்களிற்கு மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு கட்சி முன்வைத்தால் மறு கட்சி அதை எதிர்க்கும். சந்திரிகா முன்வைத்தால் ரணில் எதிர்த்தார். ரணில் முன்வைத்தால் சந்திரிகா எதிர்த்தார்.

பின் மஹிந்தவின் காலம். அதைப்பற்றி என்ன இருக்கிறது பேச?. யுத்தம் நடந்த போது 13 பிளஸ் என்றார். யுத்தத்தின் பின்னரும் அதையே சொன்னார். என்ன நடந்தது.

சிங்கள தலைவர்கள் தமிழர்களை ஏமாற்றியே வந்திருக்கிறார்கள். எமக்கு 13வது திருத்தத்தை நாடுவதை தவிர இப்பொழுது வேறு தெரிவுகள் இல்லை.

இன்னொரு தெரிவு உள்ளது. தனிநாட்டுக்கு போராடுவது. அதற்கு தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தயாரென்றால், நானும் தயாராக இருக்கிறேன். ஆனால் எமது மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியுள்ளது. 30 வருட காலத்தைவிட நீண்ட யுத்தத்தின் விளைவுகளை சுமந்து கொண்டிருக்கும் எமது மக்கள் இப்பொழுதுதான் மெல்லமெல்ல எழுந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு எதுசாத்தியம் என்பதை புரிந்துதான், நாங்கள் 6 கட்சிகள் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கோரியுள்ளோம்.

13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுமா? இதற்கும் அதே கதிதானா என நீங்கள் கேட்கலாம். அது இந்தியாவின் பிரச்சனை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது தமிழர்கள் அல்ல. இந்தியாவும், இலங்கையுமே கையெழுத்திட்டன. இந்தியாவே அதை பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இன்னொரு வாய்ப்பு உள்ளது. 1986ஆம் ஆண்டு வெளியான ரெலோவின் வெளியீடான ரெலோ ரைம்ஸ் என்ற ஆங்கில இதழில், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களையும், அபிலாசைகளையும் தொட்டு ஒரு கடிதத்தை எழுதியிருந்தேன். இந்தியாவின் பாதுகாப்பு நலன்களும், தமிழீழ மக்களின் தேசிய அபிலாசைகளும் பிரித்தெடுக்க முடியாதவை என குறிப்பிட்டிருந்தேன். அந்த கூற்றிற்கு வலுச்சேர்க்கும் சூழலே சீனாவின் தயவில் ஏற்பட்டுள்ளது.

சீனத்தூதர் இங்கு வந்து, இந்தியா எவ்வளவு தூரமென கேட்டது, தூங்கும் புலியை தட்டியெழுப்பும் சம்பவம்.

இப்பொழுது, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களும், தமிழீழ மக்களின் தேசிய அபிலாசைகளும் முன்னெப்பொழுதுமில்லாதளவில் நெருங்கி வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்தப் போகிறோம்?

தம்பி கஜேந்திரகுமார் சொல்வதை போல சமஷ்டியொன்றும் கிடைக்காது. நாங்களும்தான் சமஷ்டியை பற்றி பேசுகிறொம். சிங்கள தலைவர்கள் ஒருபோதும் சமஷ்டிக்கு சம்மதிக்க மாட்டார்கள்.

அப்படியாயின் ஏன் சமஷ்டியை கோருகிறோம் என கேட்கலாம். இன்றைக்குள்ள அரசியல் சூழலில் படிப்படியாகத்தான் முன்னேறி செல்லலாம். 13வது திருத்தம் ஒரு ஆரம்பப்புள்ளி.

எங்களது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தம்பிகள் முன்னொரு சந்தர்ப்பத்தில் சொன்னதை போல, ஒரு ஆரம்பப்புள்ளி. சமஷ்டியை நாம் விட்டுவிடப்போவதில்லை. இந்தியாவின் நலன்கள், இந்து சமுத்திர பாதுகாப்பு போட்டிகள் எமது மக்களின் விடுதலைப் பயணத்தை வழிநடத்தும்.

நம்பிக்கை மட்டும் போதாது. அதற்கு என்ன பொறிமுறை, ஸ்தாபன கட்டமைப்பு, தலைமைத்துவம், மக்களை வழிநடத்தும் ஆற்றல் எல்லாம் எங்களிடம் உள்ளதா என்பது அடுத்த கேள்வி.

வவுனியாவிலிருந்து வட்டுக்கோட்டை வரை வாகனங்களை விட்டு ஆட்களை ஏற்றியிறக்கியிருந்தால் எள்விழுந்தால் எண்ணெயாகும் அளவிற்கு மக்கள்கூட்டமிருந்திருக்கும். நாம் அதில் ஆர்வப்படவில்லை. ஆனால் மக்கள் அரசியல்மயப்பட வேண்டும். விடுதலை விரும்பும் மக்களிற்கு இந்த அரசியல் ஆர்வம் போதாது.

நாம் அனைவரும் பிரிந்து நின்று பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டிருக்காமல், ஒன்றுபட்டு ஓரணியாக வேண்டும். உடையது விளம்பேல் என்பார்கள். நாம் விளம்ப தேவையில்லை. காலம் பல தெரிவுகளை எமக்கு முன் கொண்டு வரும். நாம் பொறுமையாக இருந்தால் பொருத்தமானதை அடையாளம் காணலாம்.

நேற்று ரஷ்ய பாராளுமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. உக்ரைனில் ரஷ்ய மக்கள் அதிகம் வாழும் 2 பிரதேசங்களை தனிநாடாக்குமாறு அரசை கோரியுள்ளது என்றார்.

Posted in Uncategorized

11 அரசாங்க பங்காளி கட்சிகள் நாளை மீண்டும் கூடவுள்ளதாக தெரியவருகிறது

11 அரசாங்க பங்காளிகள் காட்சிகள் நாளை மீண்டும் கூடவுள்ளதாக தெரியவருகிறது.

நாட்டை கட்டியெழுப்புவதற்கான விசேட யோசனையொன்றை அரசாங்கத்திடம் கையளிக்க 11 கட்சிகள் தீர்மானித்துள்ளதுடன், இந்த பிரேரணை தயாரிப்பது குறித்து நாளை கலந்துரையாடப்பட்டு, இந்த பிரேரணை எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி அரசாங்கத் தலைவர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டொலர் நெருக்கடி, எரிசக்தி நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட நாடு எதிர்நோக்கும் பல பாரதூரமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இத்தீர்மானத்தின் மூலம் அரசாங்கத்திடம் முன்வைக்க 11 கட்சிகளைக் கொண்ட குழு தயாராகி வருகிறது.

நோர்வே நாட்டின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மன்னாருக்கு விஜயம்!

நோர்வே நாட்டின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி டிரைன் ஜோரான்லி எஸ்கெடல் (Trine Joranli Eskedal) இன்று (வியாழக்கிழமை) மன்னாருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்த நோர்வே நாட்டின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி (தூதுவர்) இன்று (வியாழக்கிழமை) காலை 8.45 மணி அளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது தூதுவர் வரவேற்கப்பட்டு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் மற்றும் சந்திப்பு இடம் பெற்றது.

மன்னாருக்கு வருகை தந்த நோர்வே தூதுவர் மன்னாரில் இடம் பெறும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தார்.

தொடர்ந்து மன்னாரில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார். மன்னார் மாவட்டத்தில் பெண்கள் அபிவிருத்தி தொடர்பாக தான் கவனம் செலுத்துவதாகவும் மாவட்ட பெண்களின் நிலை குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் மன்னார் பகுதிகளில் இந்திய மீனவர்களின் பிரச்சனை , பறவைகள் சரணாலயம் , காற்றாலை மின்சாரம் , கழிவு மீன் திரவ உரம் தயாரிப்பு, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.