உலகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடும் ‘உலகத் தமிழ் பாராளுமன்றம்’

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் உலகத் தமிழ் வர்த்தக சங்கம் கடந்த 7 ஆண்டுகளாக உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு நடத்தி வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள், தமிழ் சங்கங்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள், தாய் தமிழகத்திற்கு வந்து தம் உறவுகளை சந்தித்து சமுதாயம் மேம்படுவதற்கான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டு மார்ச் 11 ஆம் திகதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் ஒரு நிகழ்வாக உலகத் தமிழ் பாராளுமன்றமும் கூட உள்ளது.

கலை, கலாச்சாரம், கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றமடைய நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் அயல்நாடுகளில் நமக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவும் இவ்வமைப்பின் மூலம் பலர் பயன் பெறுகின்றனர்.

இதுவரை இணையத்தில் நடைபெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜ்யசபா உறுப்பினர்கள், செனட்டர்கள், தேசிய உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்கள், பெரும்பான்மையான உறுப்பினர்கள் நேரடியாகவும்,இணையத்திலும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்நிகழ்வில் 12 நாடுகளில் 152 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாங்கள் வசிக்கும் நாட்டில் அரசாங்கத்தின் மூலம் தமிழர்களை கல்வி பொருளாதாரத்தில் எப்படி மேம்படுத்தலாம் எனவும், 12 நாட்டு அரசாங்கத்தின் உதவிகளை பெறவும் ராஜாங்க உறவை மேம்படுத்த இந்த உலகத் தமிழ் பாராளுமன்றம் பேருதவியாக இருக்கும் என உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவரும் உலகத் தமிழ் பாராளுமன்ற அமைப்பாளர் செல்வகுமார் தெரிவித்தார்.

திட்டமில்லாத அரசாங்கமும் திட்டமிடல் இல்லாத ஜனாதிபதியும் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி தெரிவிப்பு

திட்டமில்லாத அரசாங்கமும் திட்டமிடல் இல்லாத ஜனாதிபதியுமே காணப்படுகின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியா பாரதிபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

விவசாயிகளின் வயிற்றில் கை வைத்ததால் இன்று அரசாங்கம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

இன்றையை விலைவாசி உயர்வால் சாதாரணமான மக்களுக்கு வருமானம் குறைவாக உள்ள நிலையில் பொருட்களின் விலை அதிகமாக காணப்படுகின்றது. விலை நிர்ணயம் இல்லாமல் போய் விட்டது. தற்போது அறுவடை இடம்பெறும் நிலையில் விவசாயிகளுக்கு போதிய விளைச்சல் இல்லாமல் காணப்படுகின்றது.

ஒரு திட்டமில்லாதஅரசாங்கமும் திட்டமிடல் இல்லாத ஜனாதிபதியுமாக காணப்படுகின்றனர். 10 ஏக்கர் விவசாயம்செய்தவர்களை 2 ஏக்கரை இயற்கை முறையில் செய்யுங்கள் என கூறியிருக்கலாம். இல்லையேல் இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு நெல்லினை 100 ரூபாவுக்கு பெறலாம் என தெரிவித்திருந்தால் ஏதாவது முயற்சி செய்து விவசாயிகள் செய்திருப்பார்கள். பழக்கம் இல்லாத விவசாயி இதனை செய்ய முடியாதுள்ளது.

வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முயற்சி செய்து கடந்த அரசாங்கத்தால் யாழ் பல்கலைக்கழகத்துடுன் இருந்து வளாகம் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இதனை ஜனாதிபதி திறந்து வைக்கின்றார். நம் அபிவிருத்தி எதிரானவர்கள் அல்ல. ஆனால் தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் வரவேற்பு நுழைவாயில் காணப்பட்டது.
ஆனால் தற்போது தமிழ்மொழி அகற்றப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குள் நுழையும்போது சிங்கள மொழியே தெரியவேண்டுமாம். அரசியல் அமைப்பில் தமிழ் சிங்கள மொழிகள் சம அந்தஸ்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனால் அவ்வாறுள்ள மொழிக்கு பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.

எமது தமிழ் மொழி இல்லாத இடத்திற்கு சென்று கலந்துகொள்வதனை நாம் விரும்பவில்லை. ஆனால் பல்கலைக்கழகமொன்று வரவேண்டும் என்று முயற்சி எடுத்தோம் அது அமைந்துள்ளது. அது சந்தோசம்.

ஆனால் மொழிக்காகவும் நிலத்திற்காகவுமே நாம் பல போராட்டங்களை செய்தோம். ஆனால் இன்று புறக்கணிக்கப்படுகின்றோம் என தெரிவித்தார்.

Posted in Uncategorized

மாகாணசபை தேர்தல் குறித்து சிறந்த தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் – அரசாங்கம்

மாகாணசபை தேர்தல் தொடர்பில் சிறந்த தீர்மானம் வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களை கருத்திற் கொண்டு நாடுதழுவிய ரீதியில் இனி செயற்பாட்டு அரசியலில் ஈடுப்படுவோம் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிப் பெற்றதை தொடர்ந்து அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மாகாண சபை தேர்தல் முறைமையை மாற்றியமைத்து தேர்தல் முறைமையில் சிக்கல் நிலைமையை தோற்றுவித்து தேர்தலை பழைய தேர்தல் முறையிலும், புதிய தேர்தல் முறையிலும் நடத்த முடியாத சிக்கல் நிலைமையை உருவாக்கியது.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆகவே மாகாண சபை தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்த வேண்டும் என தற்போது அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் தலைமைகள் நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஆரோக்கியமான நடவடிக்கைளை முன்னெடுக்கவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் மாகாணசபை தேர்தலை நடத்த பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாகாணசபை தேர்தல் தொடர்பில் வெகுவிரைவில் சிறந்த தீர்மானம் அறிவிக்கப்படும்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களை கருத்திற் கொண்டு நாடுதழுவிய ரீதியில் இனி செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுப்படுவோம் என்றார்.

பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களை உசுப்பேத்தி காலைவாரிய முன்னணி! :ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் குற்றச்சாட்டு

கடற்தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பது போல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏற்படவிருந்த அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளனர் என என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் இன்று (11) அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் வடக்கு கடற்தொழிலாளர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் மோசமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களாக வீதியில் போராட இறங்கியபோது கடற்தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பது போல மக்கள் போராட்டங்களுள் உள் நுழைந்து உசுப்பேத்தும் வீர வசனங்களை விட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் சுயலாபங்களுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏற்படவிருந்த அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளனர்.

உண்மையாக இலங்கை அரசாங்கம் தமிழக கடற்தொழிலாளர்களையும் வடக்கு கடற்தொழிலாளர்களையும் முரண்பட வைக்கும் பொறியாக மீனவர் பிரச்சினையை கண்டு கொள்ளாமல் அலட்சியப் படுத்தி வருகின்றது.

இதற்கு ஆதரவாகவே முன்னணியின் ஒத்திவைப்பு பிரேரணை நாடகமும் அரங்கேறியுள்ளது.

வடமாகாண மீனவர்களின் பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் கதைப்போம் என்று வடமராட்சி மீனவர் போராட்டத்தில் மக்களுக்கு வாக்குறுதியளித்த முன்னணி, பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை சிந்திக்காது அரசாங்கத்தின் நலன்கள் பாதிக்காத வகையில் மீனவரின் வாழ்வாதாரப் பிரச்சினையை பலியிட்டுள்ளனர்.

முன்னணியின் வெற்றுக் கோசங்களும் உசுப்பேத்தும் ஊடக அறிக்கைகளும் தொடர்ந்து பொய்யுரைக்கும் செயற்பாடுகளும் இனத்தின் விடுதலைக்கு அர்த்தமற்றவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் நிகழ்வை புறக்கணிக்கின்றோம்!ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

வவுனியா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்காது சிங்களமொழி பறிக்கப்பட்ட கல்வெட்டை முன்னுரிமைப்படுத்தியமையை கண்டிப்பதாகவும், இவ்வாறான தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா பல்கலைக்கழகத்தினை சம்பிரதாயபூர்வமாக அறிவிக்கும் நிகழ்விற்கு ஜனாதிபதி நாளை கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று மொழிகளிலும் தனித்தனியான கல்வெட்டுக்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இதனை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் குறித்த இடத்தில் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு முன்னுரிமைப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகத்தின் முகப்பு வாயிற்பகுதியை நோக்கியவாறு காணப்பட்டுள்ளது.

எனினும் அங்கு வந்த அதிகாரிகள் தமிழ் மொழியை பின்புறமாக அமைக்குமாறும் சிங்கள மொழியை முன்னுரிமைப்படுத்துமாறு கூறி குறித்த கல்வெட்டை உடனடியாக இடமாற்றியுள்ளனர்.

ஜனாதிபதி சிங்கள மொழிக்கும், பெளத்தத்திற்கும் முன்னுரிமை என தேர்தலில் வெற்றி பெற்ற காலத்தில் இருந்தே தெரிவித்து வரும் நிலையில், அதன் ஒரு வடிவமாகவே இந்த செயற்பாட்டையும் நோக்க வேண்டியுள்ளது.

வடக்கு கிழக்கில் தமிழ் மொழி முன்னுரிமை என அரசியலமைப்பு ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் வடக்கிற்கு வந்த நீதி அமைச்சரும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை என தெரிவித்திருந்த நிலையிலும், இவ்வாறான ஒரு சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் அரங்கேறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளாது புறக்கணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான யோசனையை முன்வைக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானம்!

மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்தி, பழைய விகிதாசார முறையில் மாகாணசபை தேர்தலை நடத்தும்படியான யோசனையை அரசுக்கு முன் வைக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று (வியாழக்கிழமை) கூடிய தேர்தல் முறை சீர்திருத்த குழுவில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்தோடு, உள்ளூராட்சி தேர்தல் முறையிலும் சில சீர்திருத்தங்களை செயற்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்படி எதிர்வரும் 22ம் திகதி அடுத்த கூட்டம் நடைபெறும்போது, இவை குறித்து ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கப்படும் எனவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இறக்குமதித் தடையை நீக்குக : ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளினால் பல ஐரோப்பிய தயாரிப்புகள் இலங்கை சந்தைக்கு வருவதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும், இலங்கை அரசாங்கத் தரப்பிற்கும் இடையில் நடந்த கலந்துரையாடலின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையில் நிலவும் டொலர் கையிருப்பு நெருக்கடியால் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கொவிட் நெருக்கடியினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு, இலங்கை அரசாங்கத்தின் தவறான பொருளாதாரகக் கொள்கை என்பவற்றினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

எவ்வாறாயினும், இலங்கையில் இறக்குமதிப் பொருட்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியன அதிருப்தி தெரிவித்திருந்தன.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை சபையில் முன்வைத்தார் வெளிவிவகாரத்துறை அமைச்சர்

1979 ஆம் ஆண்டின் 48ஆம் இழக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டமூலம் நேற்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதன் இரண்டாம் வாசிப்பு நாளைய தினம் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹகீம், ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு சில முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது.

மீனவர் பிரச்சினை தொடர்பான பிரேரணையை திரும்பப்பெற்றனர் முன்னணியினர் : செல்வராசா கஜேந்திரன்

“இந்தியத் தூதரக அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அவர்களது முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுப்பதைத் தவிர்த்துக்கொண்டுள்ளோம்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்,

“வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகிய நான் முன்மொழிந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழிமொழிந்து விவாதத்தை ஆரம்பிக்கும் வகையில் எமது தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் குறித்த பிரேரணை இன்று பிற்பகல் 4.50 மணியளவில் விவாதத்துக்குக் கொண்டு வரப்படும் வகையில் நாடாளுமன்றில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக எமது மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தடுக்காது, அவர்களது வலைகள் அழிக்கப்படுவதையும், படகுகள் சேதமாக்கப்படுவதையும், மீனவர்கள் தாக்கப்படுவதையும், கொல்லப்படுவதையும் இலங்கைக் கடற்படையும் இலங்கை அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றமை தொடர்பில் குறித்த விவாதத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

இந்நிலையில், இன்று நண்பகல் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து அதிகாரி ஒருவர் தொடர்புகொண்டு, எம்மால் முன்னெடுக்கப்படவிருந்த விவாதம் தொடர்பில் கலந்துரையாடினார்.

அதன்போது நாம், எமது வட பகுதி மீனவர்களது கடற்தொழிலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை கடற்படை நடவடிக்கை எடுக்காதது, எமது வடபகுதி மீனவர்களுக்கும் எல்லை தாண்டிவரும் மீனவர்களுக்கும் இடையில் மோதலைத் தீவிரப்படுத்தி பகைமையை வளர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் நாம் குறித்த விவாதத்தை ஏற்பாடு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்தோம்.

அதன்போது, தூதரக அதிகாரி, இந்தப் பிரச்சினை தொடர்பில் தமது தரப்பிலிருந்தும் தாம் அக்கறை செலுத்துவதாகவும், மேற்படி மீனவர் பிரச்சினையானது யாழ்ப்பாணத்திலும், தமிழகத்திலும் ஒரு நெருக்கடி மிகுந்த சிக்கல் நிலைக்கு வந்துள்ளதாகவும், அந்த நெருக்கடி நிலையைத் தாம் புரிந்து கொண்டுள்ளதாகவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இப்பிரச்சினையைக் கட்டுப்படுத்துவதற்குத் தாம் முடிவெடுத்துள்ளதாகவும், தாம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் முகமாகக் குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

குறித்த தூதரக அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அவர்களது முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் குறித்த பிரேரணையை இன்று விவாதத்துக்கு எடுப்பதைத் தவிர்த்துக்கொண்டுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரப் பகிர்வு குறித்து கவனத்திற்கொள்ளப்படும்: G.L.பீரிஸ் இந்தியாவில் தெரிவிப்பு

அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்தியா ஆர்வம் காட்டியுள்ளதாகவும் புதிய அரசியலமைப்பில் அது கவனத்திற்கொள்ளப்படும் எனவும் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் இந்தியாவில் தெரிவித்துள்ளார்.

13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சில தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் The Hindu பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாகவும் நிபுணர் குழுவொன்று அதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வு விடயம் சந்தேகத்திற்கிடமின்றி கவனத்திற்கொள்ளப்படும் என அமைச்சர் தனது இந்திய விஜயத்தின் போது The Hindu பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

எனினும், எதனை செய்தாலும் நாட்டில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும் என்பதுடன், பாரியளவிலான எதிர்ப்பை எதிர்கொண்டால் களத்தில் செயற்படுவது கடினமாக இருக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பேசுவதற்கு தாம் முயற்சிகளை மேற்கொண்டு வருதாகவும் இலங்கையின் அரசியல் கட்சிகள், முதன்மையாக இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தை தொடர்பில் அறிவிக்கப்பட்டு 8 மாதங்களாகியும் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெறாமை தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கும் அமைச்சர் பதிலளித்துள்ளார்.

COVID-19 உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் இதன்போது தலையீடு செய்ததாக தெரிவித்த அமைச்சர், விரைவில் அந்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என பதிலளித்துள்ளார்.

Posted in Uncategorized