இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆட்டம் ஆரம்பம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) கடந்த வியாழன் அன்று இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, போர் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையின் இராணுவ உறுப்பினர்களுக்கு, பேரவையின் உறுப்பு நாடுகளால் உடனடி பயணத் தடைகள் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் கட்டமாக கனடா, குறைந்தது மூன்று அதிகாரிகளை பெயரிடும் என்று ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளும் பின்பற்றி இலங்கையின் இராணுவ உறுப்பினர்களுக்கு தடைகளை விதிக்கவுள்ளன.

ஜெனிவாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் பேரவை, கடந்த வியாழன் அன்று “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

இலங்கை மீதான கவனம்
இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 20 நாடுகள் வாக்களிக்கவில்லை, ஏழு நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களித்தன.

முந்தைய தீர்மானங்களைப் போலல்லாமல், கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கடுமைத்தன்மையை கொண்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக மனித உரிமை மீறல்கள் குறித்து கணிசமான கவனம் செலுத்தப்பட்டது.

இது ஊழலைக் கையாள்வதோடு, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்த போராட்டக்காரர்களை, அரசாங்கம் கையாண்ட விதம் குறித்தும் அரசாங்கத்தை, இந்த தீர்மானம் விமர்சித்துள்ளது.

தீர்மானத்தின்படி, மனித உரிமைகள் ஆணையரின் கீழ் செயல்படும் புதிய செயலகம், மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படும் பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் புதிய தீர்மானத்தில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் விசாரணை செய்யும் அதிகாரத்தை கொண்டுள்ளது.

ஐநாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றினால் மட்டும்போதாது – ஜனா

“ஐநாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றினால் மட்டும்போதாது இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நிரந்தரமான தீர்வு சர்வதேசத்திடம் இருந்து கிடைக்க வேண்டும்” என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

 

ஐநாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாகவே மேற்குலக நாடுகளினால் தீர்மானம் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் இரண்டாவது விவசாய மாகாணமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் விவசாயம் காணப்படுகின்றது.

இந்தநிலையில் உழவர்களை நினைவு கூரும் வகையில் மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எருவில் பிரதேசத்தில் உழவர் சிலை  நேற்று ஞாயிற்றுக்கிழமை  திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.

காவல்துறையினருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) எச்சரிக்கை

தமது அதிகாரங்களை மீறும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்ட விரோதமான உத்தரவின் பேரில் செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்றாவது ஒரு நாள் தமது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு விலை கொடுக்க வேண்டி வரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என BASL இன் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, தங்கள் முதலாளிகளை திருப்திப்படுத்துவதற்காக மக்களின் உரிமைகளை மீறும் காவல்துறை அதிகாரிகளை நான் பார்த்திருக்கிறேன், அவர்களின் தவறான செயல்களுக்கு விலை கொடுக்க வேண்டியிருந்தது. சிலர் இழப்பீடு மற்றும் பதவி உயர்வுகளை இழந்தனர். சிலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பின்னர் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது,

இந்த சம்பவங்கள் நடந்தபோது, ​​அவர்களின் எஜமானர்கள் அவர்களைப் பாதுகாக்க எங்கும் இல்லை என்று சுட்டிக்காட்டிய அவர் ‘நீதியின் சக்கரங்கள் மெதுவாக அரைக்கலாம், ஆனால் அவை நிச்சயமாக அரைக்கும்” என்று கூறினார்.

கொழும்பில் காலி முகத்திடலில் நேற்று இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தை அடுத்து, கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினரின் நடவடிக்கைகளால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,000 ஆக குறைக்க முடிவு

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8,000லிருந்து 4,000 ஆக குறைக்கவும், அடுத்த தேர்தலுக்கு முன்னர் மக்கள் சபை திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் ஊழலுக்கு முக்கிய காரணம் விருப்பு வாக்கு முறை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, விருப்புரிமையற்ற பட்டியல் முறை அல்லது கலப்பு தேர்தல் முறைமையை உடனடியாகக் நிறைவேற்றி தேர்தல் சட்டத்தின் மூலம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பிரதேச சபைகளின் நிறைவேற்று அதிகாரம் ஒரு தலைவருக்கு பதிலாக தலைவர் அடிப்படையில் குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்த திருத்தங்களை உள்ளடக்கி சட்ட வரைவு தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

22ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க தயார்! மைத்திரி தெரிவிப்பு

22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக நாட்டின் இறையாண்மை பலப்படுமாக இருந்தால், அதற்கு ஆதரவளிக்க தயார் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை. எனினும், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இச்சட்டமூலத்தின் மூலம் எதிர்காலத்தில் அதிகளவான திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம்.

22ஆவது திருத்தச் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் ஜனநாயகம், மக்கள் இறையாண்மை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

19ஆவது திருத்தச் சட்டம் எனது ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. எனினும், 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு நான் ஆதரவாக வாக்களிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ​​பொலிஸாருக்கு எச்சரிக்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டத் தகவல்களை இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் பொலிஸார் வழங்க வேண்டுமென தகவலறியும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இத்தகவல்களை உரிய காலத்துக்குள் ​பொலிஸார் வழங்கவில்லை என்றால், இலங்கை பொலிஸ் திணைக்களம், அத்திணைக்களத்தின் தகவல் அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடரப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

தகவலறியும் ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணி சுரேன் டி பெரேரா செய்திருந்த மேன்முறையீட்டை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே ஆணைக்குழு மேற்கண்டவாறு ​உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

2019 – 2021ஆம் ஆண்டுவரையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து  வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, அவர்களின் வயது, பால்நிலை உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும் என சட்டத்தரணி சுரேன் டி பெரேரா பொலிஸ் திணைக்களத்திடம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.

எனினும், சுரேன் டி பெரேரா கோரும் தகவல்களால் தேசியப் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் எனக்கூறி  பொலிஸ்மா அதிபர் அத்தகவல்களை வழங்க மறுத்துவிட்டார். ​அது தொடர்பில் தகவலறியும் ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சுரேன் டி பெரேரா ​கோரியுள்ள தகவல்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதில்லை என தெரிவித்துள்ள ஆணைக்குழு, 28ஆம் திகதிக்கு முன்னர் கோரிய தகவல்களை வழங்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடர்வோம் எனவும் பொலிஸ் திணைக்களத்துக்கு எச்சரித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கு எதிரான ஐநாவின் தீர்மானம்: ஒரு பழைய துணியில் புதிய ஒட்டு-பேராசிரியர் குழந்தைசாமி

6.10. 2022 வியாழன் அன்று செனீவாவில் உள்ள ஐநாவில் நடைபெற்ற 51 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு 20 நாடுகள் ஆதரவாகவும் 7 நாடுகள் எதிராகவும்(சீனா, பாகிஸ்தான் உள்பட வாக்களித்தனர்.

20 நாடுகள் (இந்தியா, யப்பான், நேபாளம், கத்தார் உள்பட) வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்தில் எண் 05, 06, 14, 15 போன்ற சில தீர்மானங்கள் மனித உரிமை மீறல்களைப்பற்றி பேசுகின்றன. இதில் இடம்பெற்றுள்ள தீர்மானங்கள் பொதுவாக எல்லாமே மனித உரிமை மீறல்களைப்பற்றி பேசுகின்றன. இதில் உள்ள பிழைகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பொதுவாக்குதல் (Generalization)

தீர்மானங்கள் பொதுவாக்கப்பட்டு வெளிவந்துள்ளன. இந்திய தூதர் திருமிகு இந்திரா மணி பாண்டே அவர்கள் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்காக போராடுவதும் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு போராடுவது ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும் என்று கூறுகிறார். இப்படி பொதுவாக்குதல் ஒரு மனிதனின் பெருந்தன்மையைக் காட்டுகிறதென நாம் கருதலாம்.

அவ்வாறு செய்வது சில இடங்களில் சரியானதாகும். ஆனால் எல்லா இடங்களில் பெரிய ஆபத்தாகும். இதைத்தான் திருதந்தை பிரான்சிசு தனது சுற்றுமடலில் “Fratelli Tutti” நயனற்ற பொதுவாக்குதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய கொடூரத்தை விளைவிக்கிறது என்று விளக்குகிறார். நயனுள்ள பொதவாக்குதல் நன்மை பயக்கும். நயனற்ற பொதுவாக்குதல் மிகப்பெரிய துரோகமாகும். பொதுவாக்கும் தன்மை மேட்டுக்குடி மக்களின், அதிகாரத்தில் உள்ளவர்களின் பண்பாட்டு அரசியல் செயல்பாடாகும். இது தமிழர்களுக்கு பெரிய கொடூரத்தை செய்துள்ளது.

மூடிமறைத்தல்

இந்தப் பொதுவாக்குதல் தங்களது தவறுகளை மூடிமறைப்பதற்காக பயன்படுகிறது. சிங்கள பௌத்த பேரினவாத அரசு செய்த இனப்படுகொலையை மூடிமறைக்க இந்தப் பொதுவாக்குதல் பயன்படுகிறது. இந்த தீர்மான அறிக்கையில் தமிழர்களுக்கு கொடுமை இழைக்கப்பட்டது என்று ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை. யாருக்கு, யார் என்ன செய்தார்? என்று விளக்காமல் தீர்மானம் எடுப்பது மூடிமறைப்பதற்கு பயன்படுகிறது.

தமிழ் மக்களுக்கு நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்கும் தீர்மானமாக உள்ளது. உக்ரேன், மியான்மர் போன்ற நாடுகளில் நடந்த போரை ஓர் இனவழிப்பு போர் என்று கருதுகிற ஐநா தமிழர்களுக்கு நடந்த இனவழிப்பை மூடிமறைக்க முயற்சிப்பது அதன் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இவ்வாறு மூடிமறைக்கும் செயல் வரலாற்று அரசியல் குற்றமாகும்.

இனப்படுகொலை செய்த இனவாத அரசைக் காப்பாற்ற இந்த மூடிமறைத்தல் உதவுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவன் தமிழ் மக்களையும் சீரழித்தவனாக இருக்கிறான் என்பதை மூடிமறைப்பதால் அமைதியை உருவாக்க முடியாது. மூடிமறைத்தல் ஆதாயம் தேடும் கூட்டத்தின் யுத்தியாக பயன்படுகிறது. இதனால் குற்றங்கள் அதிகரிக்கும் குறைவதற்கு வாய்ப்பே இல்லை. மூடிமறைத்தல் குற்றவாளியின் மூர்க்கத்தனமான செயலாகும்.

திசை திருப்புதல்

இந்திய தூதர் பாண்டே ’13 வது திருத்தச்சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துகிறார். அதற்கான செயல்கள் முன்னெடுப்புகள் போதுமானதாக இல்லை’ என்று சொல்வது பிரச்சினையை திசை திருப்புவதாகும். 13வது திருத்தச் சட்டம் நயன்மையைப் பெற்றுத்தரும் சட்டமல்ல. நடந்த இனப்படுகொலைக்கு நயன்மை வேண்டும். அதிலிருந்து திசைமாற்றுவது இன்னொரு இனப்படுகொலையாகும். இலங்கையில் நடந்த பொருளாதார சிக்கலை அதிகம் பேசுவது திசைதிருப்பும் செயலாகும்.

தமிழ் அரசியல்வாதிகள் அமைதிகாப்பது, சிங்கள அரசுக்கு கைக்கூலிகளாக பணிசெய்வது பிரச்சினையை திசைதிருப்ப வழிவகுக்கும். நடந்ததை மறந்துவிட்டு நடக்கிறது, நடக்கபோகிறது பற்றி சிந்திப்போம் என்று சில படித்த முட்டாள்கள் பேசுவது அவர்களது திசை திருப்பும் செயலாகும். மனித உரிமை மீறல்களை மட்டும் பேசுவது நன்மை பாதையிலிருந்து விலகிசெல்வதற்கு உதவுகிறது.

சுருக்குதல்

எல்லா நாடுகளில் நடப்பதுபோல இலங்கையிலும் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்று கூறுவது தமிழர்களுக்கு நடந்த கொடூரத்தை சுருக்கிவிடுவதாகும். பிரச்சினையை சுருக்குவது நயனற்ற செயலாகும். இதனால் பிரச்சினையின் வீரியத்தையும் கடினத்தன்மையையும் அழிப்பதாகும். இந்த தீர்மானம் தமிழர்களுக்கு நடந்த கொடுமையை ஒரு சாதாரண நிகழ்வாக கருதுவதற்கு வழிவகுக்கிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், 1. 46. 000 மக்களை கொலைசெய்தது போன்ற பேரினவாத செயல்களை சுருக்கி விளக்குவது ஓர் இனப்படுகொலைக்கு சமமாகும். இனப்படுகொலைக்கு வேண்டிய ஆதாரங்களும், தரவுகளும் காரணங்களும் இருந்தும் இனப்படுகொலை என ஏற்றுக்கொள்ள இந்த தீர்மானம் மறுக்கிறது. தனிப்பட்ட ஆதாயம் தேடும் உலக நாடுகள் இந்த சுருக்கலுக்கு அடிப்படை காரணமாக உள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது.

பிளவுபடுத்துதல்

இந்த தீர்மானத்தில் இந்திய ஒன்றிய அரசின் தமிழ்நாட்டு அரசின் ஒற்றுமையின்மை, ஈழத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஒற்றுமையின்மை, திருமிகு கசேந்திர பொன்னம்மபலம், திருமிகு சிறீதரன் சிவஞானம் போன்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர தவறான வழியில் செல்லுதல், உலக தமிழர் அமைப்பு, பாதிக்கப்பட்ட சில நபர்கள் தவிர பிற அமைப்புகளின் ஈடுபாடு ஐநாவில் மிகக்குறைவு ஆகியவை வெளிப்படுகின்றன. தீர்மானங்கள் காலம் கடத்துவதால் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகின்றன. ஒற்றுமை நயன்மையை நிலைநாட்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இறுதியாக, நாம் கையறு நிலையில் இருந்தாலும் இந்த தீர்மானத்தை வைத்து தமிழர்களுக்கு நடந்த கொடூரத்தை உலகிற்கு எடுத்துச்சொல்லி நயன்மையை நிலைநாட்ட சிந்திக்கவேண்டும். செயல்பட வெண்டும். ஒன்றுமே இல்லை என்று நாம் விரக்தியாகாமல் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி செய்யவேண்டிய பணிகளை திட்டமிட்டு எதிர்நோக்குடன் நம்பிக்கையுடன் செய்யவேண்டும்.

இருட்டிலும் கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்iயில் தேடுவோம் கண்டடைவோம். இந்த தீர்மானத்தில் இருக்கும் வழிகளை(எண் 05, 06, 14, 15) பயன்படுத்தி கரம்கோர்த்து பணிசெய்ய முன்வருவோம். பாடம் கற்றுக்கொள்வோம். செயல்படுவோம் நன்மையை தமிழர்களுக்கு உறுதியாக கிடைக்கும் வரையில்.

இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு கனடா தடைவிதிக்கலாம் என தகவல்

கனடா இலங்கையை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இலங்கை இராணுவ அதிகாரிகள் உடனடியாக இந்த தடைகளை எதிர்கொள்ளவுள்ளனர்.

கனடாவே இது தொடர்பான முதல்நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது,கனடா மூன்று இராணுவஅதிகாரிகளிற்கு எதிராக தடைவிதிக்கலாம் இதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட பல நாடுகள் தடை நடவடிக்கைளை முன்னெடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளாவிய ரீதியில் ‘பட்டினி வலயங்கள்’ பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம்

இலங்கையில் சுமார் 6.2 மில்லியனுக்கும் அதிகமானோர் மிதமான உணவுப்பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதுடன் 66,000 பேர் தீவிர உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத்திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய ரீதியில் ‘பட்டினி வலயங்கள்’ என உலக உணவுத்திட்டத்தினால் பெயரிடப்பட்டுள்ள 48 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியிருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையொன்றின் ஊடாக இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதுடன் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மை நிலை உயர்வடைந்துவருவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

‘உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு முன்னதாகவே தொடர்ச்சியான காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்தங்கள், பிராந்திய ரீதியான முரண்பாடுகள், கொரோனா வைரஸ் பரவல் என்பன உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தாக்கங்களைத் தோற்றுவித்துதுடன் உணவுப்பொருட்களின் விலையேற்றத்திற்கும் காரணமாக அமைந்தன.

இந்நிலைவரம் உக்ரைன் – ரஷ்ய போரை அடுத்து மேலும் தீவிரமடைந்தது. இது குறிப்பாக உணவு மற்றும் உரம் ஆகியவற்றின் விலைகள் பன்மடங்காக அதிகரிப்பதற்கு வழிவகுத்ததுடன் இறக்குமதிகளில் தங்கியிருக்கும் நாடுகள்மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்விளைவாகத் தோற்றம்பெற்ற உணவுப்பாதுகாப்பின்மையினால் உலகளாவிய ரீதியில் சுமார் 345 மில்லியன் மக்கள் மிகுந்த அச்சுறுத்தல் நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும், தினமும் சுமார் 828 மில்லியன் மக்கள் பசியுடன் உறங்கச்செல்வதாகவும் உலக உணவுத்திட்டம் கவலை வெளியிட்டுள்ளது.

உணவுப்பாதுகாப்பின்மை என்பது உலகளாவிய ரீதியில் ஓர் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், அதன்விளைவாக 48 நாடுகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

இந்திய காவல்துறையினரின் மனித உரிமை மீறல் – மன்னிப்புச்சபை கண்டனம்

முஸ்லீம் மக்களுக்கு எதிராக இந்திய காவல்துறையினரும் அரசியல்வாதிகளும் மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக மன்னிப்புச்சபை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் கோவில் திருவிழா மீது கல்லெறிந்தனர் என காரணம் கூறி முஸ்லீம் இளைஞர்களை பொதுமக்களின் உடையில் வந்த இந்திய காவல்துறையினர் மரத்தில் கட்டிவைத்து தடிகளால் தாக்கியுள்ளனர்.

அதனை பெருமளவான மக்கள் பார்வையிட்டதுடன், தமது மகிழ்ச்சியை அவர்கள் தெரிவித்ததும் மிகவும் வருந்ததக்க விடயம் என மன்னிப்புச்சபை தொவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான காணொகளிகள் சமூகவலையத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் குஜராத் மாநிலமே வன்முறை மிக்க மாநிலமாகும்.

2002 ஆம் ஆண்டு அங்கு முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையில் 2000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். குஜராத்தில் கடந்த 25 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியில் உள்ளது. இந்த கட்சி அங்குள்ள மக்களிடம் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை வளர்த்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த வன்முறையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.