திருமணங்களுக்கு “பாதுகாப்பு தடைநீக்கல் அறிக்கை” கட்டாயம்

வெளிநாட்டவர்களை பதிவு திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்கள், பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து “பாதுகாப்பு தடைநீக்கல் அறிக்கை” பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களை திருமணம் செய்துகொள்ளப்போகும் இலங்கையர்களின் திருமணம் மேலதிக மாவட்டப் பதிவாளர் ஊடாக மாத்திரமே பதிவு செய்துகொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நபர்களைப் பதிவு திருமணம் செய்துகொள்வதால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுப்பதற்காகவும், மேலும் சமூக சிக்கல்களை குறைப்பதற்காகவுமே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  பதிவாளர் நாயகம் வௌியிட்டுள்ள சுற்றுநிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையர்களை திருமணம் செய்துகொள்ள விரும்பும் வெளிநாட்டவர்கள் அந்தந்த நாடுகளின் பாதுகாப்புப் பிரிவிடமிருந்து குற்றவாளி  அல்ல என்பதற்கான சான்றிதழின் மூலப் பிரதியை, அவரின் சுகாதார நிலைமைகள் தொடர்பான அறிக்கை என்பனவும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழர்களின் கலை வரலாற்றில் புலிகளின் காலம் பொற்காலம்

தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற கலாலயத்தின் வெளியீடான ‘விழுதொலிகள்’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், போர் முடிந்ததன் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தங்களின் படைப்புக்களுக்கு உரித்தான அந்தஸ்து கிடைப்பதில்லை என்பதான ஒரு குற்றச்சாட்டு கலைஞர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்றார்.

உண்மை தான், எம்மவர்கள் இந்த மண்ணில் இருந்தபோது கலைகளையும் கலைஞர்களையும் வளர்க்க விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு, அதனூடாக பாரம்பரிய கலைகளையும் பண்பாட்டையும் வளர்த்திருந்தார்கள் எனவும், அவர் கூறினார்.

‘தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலமே பொற்காலம் ஆகும்.

‘கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கும் மகத்தானது. தங்களின் கலைப்படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச்சிகொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை.

‘கலைஞர்களும் இந்த மண்ணில் மீளும் சிறப்பாக உரிய அந்தஸ்தத்தோடு வாழும் காலம் உருவாக்ப்படும்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சிறிலங்காவிற்கு மாற்றம் அவசியம் – குடிமக்களிடம் விநயமான கோரிக்கை

சிறிலங்காவிற்கு மாற்றம் ஒன்று அவசியம் எனவும், தற்போதைய பாதையில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஆன்மீக கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது, அரசியல்வாதிகளுக்கு மாத்திரமன்றி அனைத்து குடிமக்களினதும் கடமை எனவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு – இராகமையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் ஆராதனையின் போது உரையாற்றிய கர்தினால் மல்கம் ரஞ்சித், நாட்டு மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பல்வேறு காரணங்களுக்காக அனைத்து மதத் தலைவர்களும் மற்றவர்களைக் குறைத்து மதிப்பிடுவதன் மூலம் அவர்கள் உயர்வடைய முனைவதாகவும் கர்தினால் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

கடவுள் நம்மிடையே மனித வடிவத்தை எடுத்தபோது, மக்கள் கடவுளை விட்டு அடிமைத்தனத்தை நோக்கி நகர்ந்ததாக குறிப்பிட்ட அவர் இதனை அபிவிருத்தி எனக் குறிப்பிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாவமும் சுயநலமும் ஒரு நபரை சிக்க வைத்து அமைதியின்மைக்கு உள்ளாக்கும் என இயேசுநாதர் போதித்ததாகவும், பேராசை ஒரு நபரை அமைதியற்றதாக மாற்றும் என கௌதம புத்தர் போதித்ததாகவும், தியாகம் இன்றி மகிழ்ச்சியை பெற முடியாது எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்காவை இராணுவத்திடம் ஒப்படைக்க திட்டம் – ஜனநாயகம் பேசினால் சிறை!!

அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் நாட்டை மீட்டெடுக்க முடியும் என்கிறார் பொதுபல சேனா அமைப்பின் செயலாளரும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ அரச தலைவரது செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் .

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்த அவர், இது “தனது தனிப்பட்ட நிலைப்பாடு” எனவும் கூறியுள்ளார். இதன்போது மேலும் பதிலளித்த அவர்,

“இப்போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சினை சாதாரண ஒன்றல்ல. கூட்டுப்பொறுப்புணர்வு மூலமாகவே நாட்டை மீட்டெடுக்க முடியும்.

எனவே எதிர்காலத்தில் நாம் சகலரும் பல தியாகங்களை செய்யவேண்டி வரும். கடன்களை நம்பி இனியும் பயணிக்க முடியாது.

புதிய சிந்தனைகளை உருவாக்கி, மாற்றுச் சிந்தனையில் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும்.

நாட்டின் இந்த நிலைக்கு அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளுமே காரணம். நாட்டை கடனுக்குள்ளும், மக்களை பட்டினிக்குள்ளும் தள்ளியுள்ளனர். இதற்கு அரச தலைவர் காரணமல்ல.

இராணுவ ஆட்சி எனக் கூறிக்கொண்டு ஜனநாயக கதை பேசும் சகலரையும் பிடித்து சிறையில் போட வேண்டும். இல்லை என்றால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது” என்றார்.

கோட்டாபயவின் தீர்மானத்தை ஏற்க மறுத்த கனடா, இத்தாலி – தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவு

இலங்கையின் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக முதலில் நியமிக்கப்பட்டு, பின்னர் இத்தாலிக்கான தூதுவராக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட முன்னாள் விமானப்படை தளபதி சுமங்கள டயஸ் தற்போது மலேசியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் சுமங்கள டயஸின் நியமனத்தை நிராகரித்திருந்தன.

இதன் காரணமாக சுமங்கள டயஸை அரச தலைவர் மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிராக நியமித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி ஏ.வி.எம். கபில ஜயம்பதி மலேசியாவுக்கான உயர்ஸ்தானிகராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

13 அகற்றப்படுமாக இருந்தால் நாடு சர்வாதிகார ஆட்சிமுறைமைக்குள் செல்லும் – ஜனநாயகப் போராளிகள் கட்சி செயலாளர் – இ.கதிர்

13வது திருத்தச் சட்டம் அகற்றப்படுமாக இருந்தால் நிச்சயமாக இலங்கை சர்வாதிகார ஆட்சிமுறைமைக்குள் கொண்டு செல்லப்படும். 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டு மக்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தையாவது தக்க வைத்துக் கொள்ளுகின்ற நிலைமையை இங்கு உருவாக்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் நிலைப்பாடு சம்மந்தமாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் அரசியல் யாப்பின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக அரசியற் கட்சிகளின் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கருத்துகளை முன்வைத்து வருகின்றார்கள். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கிலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதே போன்று 13வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என் தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் மற்றும் மலையகம், முஸ்லீம் கட்சிகள் இணைந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கலந்துரையாடி இருக்கின்றார்கள்.

இந்த 13வது திருத்தச் சட்டம் இலங்கையில் நடைமுறைக்குகக் கொண்டு வரப்பட வேண்டும் என தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது. இது புதிய விடயம் அல்ல. இருப்பினும் தற்போதைய சூழலில் அது பார்க்கப்படுகின்ற விடயமாக இருக்கின்றது. அந்த விடயங்கள் தொடர்பாக கட்சிகள் கூடி ஆராய்ந்து வருகின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்;கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு, 13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்;கான தீர்வின் ஆரம்ப விடயம் என்பதைத் தொடர்ச்சியாக வலியறுத்தி வருகின்றது.

இதில் 13வது திருத்தச் சட்டம் என்பது என்ன? அதனை நடைமுறைப்படுத்துகின்ற போது அதிலுள்ள சாதக பாதக விடயங்கள் என்ன? என்பதோடு இந்த விடயத்தில் எல்லோருடைய கருத்துக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பது தொடர்பிலும் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.

உண்மையில் 13வது திருத்தச் சட்டம் என்பது இலங்கை இந்திய ஒப்பந்;தத்தின் ஒரு ஆணிவேராகவே பார்க்கப்படுகின்றது. இது இந்தியாவினால் இலங்கை மீது போட்டிருக்கும் ஒரு கடிவாளமாகவே இருக்கின்றது. 13வது திருத்தச் சட்டம் இலங்கையின் அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டு இன்றுவரை நடைமுறையில் இருந்தாலும் நிர்வாக அலகுகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

தமிழர்களைப் பொருத்தவரையில் ஆயத போhராட்ட காலத்திலும் சரி தற்போதும் சரி நாங்கள் எமது உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பில் ஆயுத ரீதியாகவும், தற்போது அரசியல் ரீதியாகவும் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். நோர்வே ஒஸ்லோவில் இடம்பெற்ற தீர்மானம். திம்புவில் இடம்பெற்ற தீர்மானம் இவை இரண்டும் எமது ஆயுத போராட்ட காலத்தில இடம்பெற்றது. இவை இரண்டுமே பரஸ்பரம் நம்பிக்கையிழந்து செயழிழந்து நிற்கின்றது

நாங்கள் ஒவ்வொரு முயற்சிகளும் எடுக்கின்ற போது அக்காலத்தில் இதனால் எத்தகு விளைவுகள் எற்படும் என்பதனை ஆராய்ந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கேற்றவாறு எமது திட்டங்களை வகுத்து நாம் செயற்பட்டே வந்தோம்.

உண்மையில் ஒஸ்லோ உடன்படிக்;கையின் அடிப்படையில் ஒரு தீர்வினைப் பெறுவதற்கான முயற்சி நடைபெற்றது அது இடைநடுவில் கைவிடப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டுகளாக உலக வல்லமை மிக்க நாடுகளின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அந்தப் பேச்சுவார்தைக் காலங்களில் எல்லாம் தமிழர்களுக்கு சுயநிர்ணய அடிப்படையில் உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதை அங்கீகரித்துக் காட்டக்கூடியவாறான செயற்பாடுகள் பெரிய அளவில் இடம்பெறவில்லை.

உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு இவ்வாறாக அழுத்தம் கொடுக்கவில்லை. இலங்கையின் ஏமாற்று வித்iதைகளை உலகம் நம்பி அந்த வழியில் பயணித்தமையால் அந்தப் பேச்சவார்த்தை அவ்வாறே கைநழுவிச் சென்றது.

அதேபோன்று, டோக்கியோ மாநாட்டிலே நாங்கள் பங்குபற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும் பங்குபற்றாமல் விட்டால் என்ன வளைவுகள் எற்படும் என்பதையும் நாங்கள் முற்கூட்டியே எமது தலைவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த நிலையிலே டோக்கியோ மாநாட்டிலே விடுதலைப் புலிகளின் சார்பில் யாரும் பங்கேற்காமல் போனதும் ஆயுத போராட்டத்தின் பின்னடைவிற்கு ஒரு காரணமாக அமைந்தது.

அதேபோன்று இன்றைய சூழலில் தமிழ் மக்களின் நலன் சார்ந்;த விடயங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மிகத் தெளிவாக விளங்கிச் செயற்பட வேண்டும். ஒவ்வொரு கால கட்டத்திலும் நாங்கள் நம்பிக்கையோடும், உலகத்தின் அனுசரணையுடனும் பேச்சகளிலே ஈடுபட்டோம். தற்போது இந்த 13வது திருத்தச் சட்டத்தை இந்;தியாவின் அனுசரரணையுடன் முழுமையாகச் செயற்படுத்தவதற்கு தமிழக் கட்சிகள் முன்வந்து செயற்படுகின்றார்கள்.

தற்போது நாட்டில் ஆட்சியில் இருக்கின்ற இந்த அசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிப்பது அல்லது அதனைச் செயலிழக்க வைப்பது போன்ற நடவடிகக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருகின்றது. அதற்காகத் தான் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு புதிய அரசியலமைப்பின் ஊடாக 13வது திருத்தச் சட்டம் இல்லாதொழிக்கப்படுமாக இருந்தால் நிச்சயமாக இலங்கை அரசாங்கம் எமது சுயநிர்ணயக் கொள்கை, தமிழர்களின் தேசியம் அனைத்தையும் மிக வேகமாக அழித்து இங்கே தமிழ் மக்களுக்கான தேசிய இனப்பிரச்சினை இல்லை என்பதை உலகத்திற்குக் காட்டி தமிழர் தாயத்தினை ஆக்கிரமித்து தனிச் சிங்கள பௌத்த நாடாக மாற்றவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த விடயங்களில் நாங்கள் மிக நிதானமாகச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். 13வது திருத்தச் சட்டம் முற்றுமுழுதாக பிடுங்கி எறியப்படுமாக இருந்தால் இலங்கை சீனாவின் பக்கம் முழுமையாகச் சாய்ந்து விடும். இந்;தியாவின் உதவியைக் கோரி நிற்கும் தமிழர் தரப்பு நிச்சயமாகத் தோல்வி அடைவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கின்றது. 13வது திருத்தச் சட்டத்தைத் தாண்டி எம்மால் போக முடியாத நிலை இருந்தாலும். அதன் கீழ் போகாமல் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி தேவையும் எமக்கு இருக்கின்றது.

இந்தத்திருத்தச் சட்டம் முழுமையாக அமைய வேண்டுமாக இருந்தால் அதற்குப் பிரதான பங்காளியாக இருக்க வேண்டியது இந்தியா. இந்தியாவின் நலன் சார்ந்த விடயங்களில் ஈழத்தமிழர்கள் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் நிச்சயமாக இந்தியா ஈழத்தமிழர்களின் நலனிலே மிகவும் அவதானமாகவும், நம்பிக்கையைப் பேணும் வகையிலும் செயற்பட வேண்டும். அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாக இருந்தால் நிச்சயமாக 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக இருக்கின்ற எமது அதிகாரங்களையென்றாலும் தமிழர் தரப்பு கைப்பற்றக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. அந்த வகையில் தற்போதைய நிலையில் 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையே இங்கு இருக்கின்றது.

13ஐ நாங்கள் நிராகரிக்க முயற்சி செய்வோமாக இருந்தால் இந்தியாவினால் இலங்கை மீது போடப்பட்டிருக்கின்ற கடிவாளம் அறுத்தெறியப்படும். அதன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் நில ஆக்கரமிப்புகள், பௌத்த மயமாக்கல் திட்டங்கள் போன்ற அனைத்து விடயங்களும் மிக இலகுவாக இலங்கை அரசாங்கத்தினால மேற்கொள்ளப்படும்.

13ஐத் தாண்டி எமது மக்;களுக்கான உரிமைகளை வழங்குவதாக இலங்கையில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறிய கருத்து இந்த விடயங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனெனில் வடக்கு கிழக்கு பகுதியில் சிங்களக் குடியேற்றம் முழுமையாக நிறைவேற்றப்படுமாக இருந்தால் வடக்கு கிழக்கில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறையும், சிங்களப் பிரதிநிதிகள் அதிகமாகத் தெரிவு செய்யப்படக் கூடிய வாய்ப்பு உருவாகும். அந்த நிலைமை தோற்றுவிக்கப்பட்டதன் பின்னர் எவ்வகையான அதிகாரங்கள் வடக்கு கிழக்கிற்கு பகிரப்பட்டாலும் அது எமக்குத் தேவையற்றதாகவே அமையும்.

இன்று வடக்க கிழக்கில் சீனாவின் பிரவேசம், ஆதிக்கம், அபிவிருத்தி என்ற போர்வையில் சீனாவினால் ஆக்கிரமிக்கப்படும் நிலங்கள் போன்றன தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும். இலங்கையில் தன்நிறைவுப் பொருளாதாரம் அமைவதற்கு சீனா ஒருபோதும் அனுமதிக்காது. விலை கொடுத்து இலங்கை நாட்டை வாங்கிக் கொள்வதற்காகவே சீனா முயற்சி செய்கின்றது. அந்த முயற்சியில் சீனா ஈடுபடுகையில் சீனாவைப் பயன்படுத்தி தமிழர்களுக்கெதிராக தங்களுடைய திட்டங்களை நிறைவேற்ற சிங்கள தேசம் அறிவிலித்தனமாக செயற்படுகின்றது.

உண்மையில் தமிழ் மக்களுக்கான தீர்வாக வடக்கு கிழக்கு இணைந்த தம்மைத் தாமே ஆளக்கூடிய ஒரு அலiகை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் எக்காலத்திலும் முயற்சி செய்ததும் இல்லை, முயற்சி செய்யப் போவதும் இல்லை. தமிழர்களுக்கு இவ்வாறானதொரு தீர்வுத் திட்டத்தைத்தான் வழங்கப் போகின்றோம் என்று சொல்லி தமிழர் தரப்பினை பேச்சுக்கு அழைத்ததும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கைக்கு அமைய இலங்கை அரசாங்கத்தோடு வலுக்கட்டாயமாகவே பேச்சுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

நீண்ட காலம் கிடப்பிலே கிடந்த இந்த 13வது திருத்தச் சட்டத்தை நாங்கள் இன்று கதைத்துக் கொண்டிருக்கின்றோம். 13வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு தமிழர்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து ஒரு நேரிய பாதையிலே பயணித்தால் மாத்திரமே  அதனை நடைமுறைப்படுத்தலாம் என்ற விடயம் உணரப்பபட்டு இன்று சில முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெடுப்புகளும் மக்களை ஒரு குழப்பகரமான நிலைமைக்கு இட்டுச் செல்லுகின்றதே தவிர ஒருமித்து ஒரு கொள்கையின் அடிப்படையில் எமது மக்களைப் பயணிக்ககக் கூடியவாறான முன்னெடுப்புகளாக அமையவில்லை. நாங்கள் பல கூட்டங்களைக் கூடி கதைப்பதற்கு முன்னர் நாங்கள் எங்களை மாற்றிக் கொண்டு சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய நிலைப்பாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.

தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தமிழ்த் தேசித்திற்கு வெளியில் நின்று செயற்படுகின்ற கட்சிகளும், 13வது திருத்தச் சட்டம் தேவையற்ற விடயம் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒருசாராரும் இருக்கின்றார்கள். 13வது திருத்தச் சட்டம் ஈழத் தமிழர் நலன்சார்ந்த விடயங்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்ட விடயம் அல்ல என்பதைத் தெளிவாக நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

13வது திருத்தச் சட்டம் அகற்றப்படுமாக இருந்தால் நிச்சயமாக இலங்கைக சர்வாதிகார ஆட்சிமுறைமைக்குள் கொண்டு செல்லப்படும். பெரும்பானன்மை சமூகம் என்று சொல்லப்படுகின்ற சிங்கள தரப்புகளால் ஒருமித்த ஒரு ஆட்சியைக் கொண்டு வரலாம்.

பிரிக்கப்பட்ட மாகாணங்களில் காணி பொலிஸ் அதிகாரங்களை நிலை நிறுத்தியவாறு ஒரு அரசியலமைப்பில் சட்டமொன்று கொண்டு வரப்பட்டுள்ளது என்று சொன்னால் தற்போதைய நிலைமையில் அதனை நாங்கள் ஏற்று முன்கொண்டு செல்ல வேண்டி நிலைமை தான் இருக்கின்றது. அது தமிழ் மக்கள் சார்ந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் ஒவ்வொரு அரசியற் தலைவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தற்பொது எங்களுக்கு இருக்கின்ற பலம் என்று சொல்லப்படுகின்ற அந்த விடயத்தை நாங்கள் எவ்வாறு கையாளமுடியும் என்று பார்;க்க வேண்டும். அதனைக் கொண்டு வந்து விட்டால் போதுமென்று இருக்காமல் அதனை எவ்வாறு எமக்குச் சாதமாக பலம்மிக்க நிருவாக அலகாக மாற்ற முடியும் என்பது பற்றிக் கலந்தாலோசித்து இந்திய அரசாங்கத்தோடு பேச்சவார்த்தைகளில் ஈடுபட்டு 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டு மக்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தையாவது தக்க வைத்துக் கொள்ளுகின்ற நிலைமையை இங்கு உருவாக்க வேண்டும்.

எந்தப் பலமும் இல்லாமல் நாங்கள் ஒரு விடயத்திற்குள் பயணிக்க நினைப்பது நிச்சயமாக எதிர்காலத்தில் மீண்டும் ஒரு அழிவினையே எற்படுத்தும். வரலாற்று ரீதியில் நாங்கள் தமிழ் மக்களின் விடுதலை தொடர்பான விடயங்களில் அவதானித்துக் கொண்டே வருகின்றோம். எமது கருத்துகளும் செயற்பாடுகளும் ஒருமித்த பாதையில் ஒரே கொள்கையில் உண்மையாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கின் மேல் திடீரென சீனாவிற்குக் கரிசனை வரக் காரணம் என்ன? – ரெலோவின் பிரதித்தலைவர் பிரசன்னா

இலங்கை அரசாங்கத்தின் உற்ற தோழனாய் இருக்கும் சீனா தமிழர்களின் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எவ்வாறான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்? வடக்கு கிழக்கின் மேல் திடீரென சீனாவிற்குக் கரிசனை வரக் காரணம் என்ன? என தமிழ் ஈழ  விடுதலை (ரெலோ) இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

வடக்கு கிழக்கில் சினாவின் பிரவேசம் தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை கொண்ட ஒரு நாடாக இருப்பது இந்தியா. பிராந்திய வல்லரசாகத் திகழும் இந்தியாவின் அனுசரணையுடன் தான் தமிழர்களுக்கான ஒரு தீர்வு கிடைக்கப்பெற முடியும் என்பதும் அரசியலாளர்களின் ஏகோபித்த கருத்துமாகும். அவ்வாறிருக்கையில் நம்மவர்கள் சிலர் சீனாவினை நாட வேண்டும் என்று கதைப்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாகும்.

அகிம்சை ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் உரிமைக்கான போராட்டம், ஆயுத ரீதியில் அதியுச்சம் பெற்று தற்போது ஒரு ஜனநாயக ரீPதியிலான முன்னெடுப்புகiளை மேற்கொண்டு செல்கின்றது. இத்தகு நேரத்தில் ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் ஒரு நாட்டினையே நாம் அனுசரணையாகக் கொள்ள வேண்டும். சர்வதேச விழுமியங்களை மதித்து செயற்படும் நாடுகளுடனான எமது உறவே எமது மக்களுக்கான நேர்மையான தீர்வுக்கு வழிவகுக்கும். அதை விடுத்து சீனாவிடம் செல்வதென்பது முட்டாள் தனமான செயற்பாடாகவே இருக்கும்.

நாட்டிற்கு கடன் என்ற பெயரில் நிதியினைக் கொடுத்து நாட்டின் வளங்களைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் சினாவின் ஆதிக்கம் தற்போது வடக்கு கிழக்குப் பிராந்தியங்களிலும் வேறூன்ற ஆரம்பித்துள்ளது. இது தமிழர்களின் உரிமை தொடர்பான செயற்பாடுகளுக்குப் பாதகமாகவே அமையும். இதனை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் தீர்வு என்ற ஒன்று பெற வேண்டுமானால் அது இந்தியாவினூடாகவேதான் அமையும். சீனாவுடன் பேச வேண்டும் என்று இந்தியாவின் எதிர்ப்பினைப் பெறுவதென்பது எமது மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். வடக்கு கிழக்கின் மேல் திடீரென சீனாவிற்குக் கரிசனை வரக் காரணம் என்ன?

எமது ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் முறைமையானது தமிழர்களின் அபிலாசைகளுக்கான ஆரம்பப் புள்ளியாக இருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வாக இல்லாவிட்டாலும். இதிலிருந்து அடுத்த அடுத்த கட்டங்களை நோக்கி நாங்கள் முன்நகர வேண்டும். அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மாத்திரமே வழிவகுக்கும்.

இலங்கை அரசாங்கத்தின் உற்ற தோழனாய் இருக்கும் சீனா தமிழர்களின் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எவ்வாறான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்? எந்த நம்பிக்கையில் சீனாவுடன் தொடர்பினை எற்படுத்த முடியும்? போன்ற நிலைமைகளையெல்லாம் ஆராயாமல் கருத்திடக் கூடாது.

தாகத்தில் இருப்பவனுக்கு தூரத்தில் இருக்கும் கங்கையை விட பக்கத்தில் இருக்கும் குட்டையே மேலானது என்பார்கள். எனவே உரிமையை இழந்து தவிக்கும் மக்களின் உரிமையைப் பெற பக்கத்து தேசத்தை விடுத்து எங்கோ இருக்கும் சீனாவோடு கதைப்பதென்பது வேலிக்குள் இருப்பதை எடுத்து விட்ட கதையாகப் போய்விடும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

மட்டக்களப்பு கடலில் ஒரு வாரத்திற்கும் மேலாக தரித்து நிற்கும் கப்பல்

மட்டக்களப்பு கடற்பகுதியில் நீண்ட நாட்களாக நிற்கும் கப்பல் தொடர்பில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு ஒரு வாரத்திற்கும் மேலாக தரித்து நிற்கும் கப்பல் கடலில் இருந்து மணல் அள்ளப்பட்டு வரும் நிலையில், மற்றொரு கப்பலில் இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். அரசு அதிகாரிகளை சீருடை அணிந்தவர்கள் ஆயுதங்களுடன் திருப்பி அனுப்பினர். யார் பதில்களை வழங்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தனது டுவிற்றர் பதிவில் கேள்வியெழுப்பியிருந்தார்.

எனினும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து பங்களதேஷிற்கு பயணித்த கப்பலில் ஏற்பட்ட எரிபொருள் குறைவு காரணமாகவே, குறித்த கப்பல் மட்டக்களப்பை அண்மித்த கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த கப்பலுக்கு தேவையான எரிபொருள், திருகோணமலையிலுள்ள எரிபொருள் விநியோகிக்கும் கப்பலொன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, குறித்த கப்பல் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பிள்ளையார் ஆலயத்தில் குடியேறிய புத்தர்!! தமிழர் பகுதியில் திடீர் பதற்றம்

திருகோணமலை – மூதூர் 64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயத்தில் உள்ள பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலையொன்று இனந்தெரியாதவர்களினால் வைக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால், இன்று குறித்த பகுதியில் சற்று பதற்றநிலை தோன்றியுள்ளது.

இந்து ஆலயத்தில் இனந்தெரியாத விசமிகளால் நேற்று முன்தினம் இரவு புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று மூதூர் பிரதேச இந்துக் குருமார்களால் அவ்விடத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் வைக்கப்பட்ட அச் சிலையானது மூதூர் காவல்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டது.

எனினும் 64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மூதூர் பிரதேச இந்துக் குருமார்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டபோது மூதூர் கொட்டியாராம விகாராதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்தபோது சற்று பதற்ற நிலையும் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.

64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயமானது பல வருடகாலமாக அருகிலுள்ள கிராம மக்களானாலும், திருகோணமலை – மட்டக்களப்பு வீதியூடாக பிரயாணம் செய்கின்ற பொதுமக்களாலும் வழிபாடு செய்யப்படுகின்ற ஆலயமென்பதும் குறிப்பிடத்தக்கது.

அவ்விடத்தில் தொடர்ந்தும் இந்துக் குருமார்களும் ,பொதுமக்களும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியபோதும் குறித்த புத்தர் சிலையானது யாரால் வைக்கப்பட்டதென்று தெரியாது. இது தொடர்பாக விசாணைகளை மேற்கொள்ளவுள்ளோம் என மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பின் ஊடக முன்னோடி ஜோசப் பரராசசிங்கம் – ஒரு வரலாற்று பதிவு!!

‘ஜோசப் அண்ணன்’ என நாம் அன்போடு அழைக்கும் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் 16 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழ் பற்றாளர், ஊடகவியலாளர், மனிதஉரிமை செயற்பாட்டாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல தளங்களில் கால் பதித்த ஜோசப் அவர்கள் பயணித்த காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த காலம் அவர் ஊடகவியலாளராக செயற்பட்ட காலம் தான்.

1980களிலிருந்து 1990வரையான காலத்தில் அவரோடு ஒரு ஊடகவியலாளராக மிக நெருக்கமாக பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

ஜோசப் அவர்கள் 1960களிலிருந்து செய்தியாளராக பணியாற்ற தொடங்கினார்.

குணசேனா பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட தினபதி சிந்தாமணி சண் போன்ற பத்திரிகைகளுக்கு மட்டக்களப்பு செய்தியாளராக அவர் பணியாற்றி வந்தார்.

தினபதி பத்திரிகையில் பணியாற்றிய செய்தியாளர்களுக்கு அப்பத்திரிகை நிறுவனத்தாலும் ஆசிரிய பீடத்தாலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த கட்டுப்பாடுகளை கடந்து சுதந்திரமாக செயற்படும் தனித்துவத்தை ஜோசப் அவர்கள் கொண்டிருந்தார்கள்.

1980களில் நான் மட்டக்களப்பில் ஊடகவியலாளராக பணியாற்ற ஆரம்பித்த காலம். அக்காலத்தில் பி.ஜோசப், எஸ் நாகராசா, வீ.சு.கதிர்காமத்தம்பி, ஆர். உதயகுமார், ஆர்.நித்தியானந்தன், செழியன் பேரின்பநாயகம் மற்றும் நான் உட்பட விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச்சொற்பமான செய்தியாளர்களே மட்டக்களப்பு நகரில் இருந்தனர்.

தனித்துவமாக ஒவ்வொருவரும் செயற்பட்டாலும் ஒற்றுமையாக செயற்பட்டோம்.

1980களின் பின் படையினரின் நெருக்குவாரங்கள் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த வேளையில் செய்தியாளர்களுக்கு என ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணக்கரு உதயமானது.

அக்காலத்தில் கொழும்பில் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் என்ற ஒரு சங்கம் தான் இருந்தது. அவர்கள் பிராந்திய செய்தியாளர்களின் நலன்களில் அக்கறை பட்டது கிடையாது. பிராந்திய செய்தியாளர்களை தமது சங்கத்தில் இணைத்து கொண்டதும் கிடையாது.

இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள செய்தியாளர்களை இணைத்து கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 1982ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முதலாவது தலைவராக ஜோசப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக செல்லையா நாகராசா தெரிவு செய்யப்பட்டார். மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் இருந்த செய்தியாளர்கள் இதில் இணைக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் செய்தியாளர்களுக்கு என உருவாக்கப்பட்ட முதலாவது சங்கம் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தான். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 2004ஆம் ஆண்டு வரை சமூக அரசியல் ஊடகத்துறை என பல மட்டங்களில் சிறப்பாக செயற்பட்டதை கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அறிவார்கள். ஊடகத்துறையில் மட்டுமன்றி சமூக அரசியல் துறைகளிலும் சிறப்பாக செயற்படுவதற்கு அத்திவாரம் இட்டு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் செயற்பட்டவர் ஜோசப் அவர்களாகும்.

1980களின் பின் படையினரின் நெருக்குவாரங்களும் கைதுகளும் மனித உரிமை மீறல்களும் அதிகரித்து வந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை பேசுவதற்கு கைது செய்யப்பட்டவர்களை மீட்பதற்கு என நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாரும் இல்லாத அனாதரவான நிலையிலேயே மட்டக்களப்பு மக்கள் காணப்பட்டனர்.

1983ஆம் ஆண்டின் பின்னர் 6வது திருத்த சட்டத்தை ஏற்று சத்தியபிரமாணம் செய்யாததால் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்திருந்தனர். அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான தேவநாயகம், இராசதுரை போன்றவர்களே பதவியில் இருந்தனர். ஆனால் அரச தரப்பு அமைச்சர்களாக இருந்த காரணத்தினாலோ என்னவோ கைது செய்யப்படும் இளைஞர்கள் பற்றியோ அல்லது மனித உரிமை மீறல்கள் பற்றியோ அவர்கள் வாய் திறப்பதில்லை.

அவ்வேளையில் ஊடகவியலாளராக இருந்த ஜோசப் அவர்கள் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பற்றிய விபரங்களை சேகரிப்பதிலும் மனித உரிமை மீறல் சம்பவங்களை திரட்டி சர்வதேச மன்னிப்பு சபை போன்ற சர்வதேச அமைப்புகளினது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

ஊடகவியலாளர் என்ற ரீதியில் பொலிஸ் உயர் மட்டங்களுடன் இருந்த நட்பை பயன்படுத்தி சில இளைஞர்களை அவர் விடுவித்திருந்தார்.

1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பை பெரும் அழிவுக்கு உட்படுத்திய சூறாவளி வீசியது. அந்த சூறாவளியின் பின்னர் பெருந்தொகையான நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு நிவாரணப்பணிகள் நடைபெற்றன. அந்த புனரமைப்பு நிவாரணப்பணிகளில் ஊழல் மோசடிகளும் பெருமளவு இடம்பெற்றது.

ஆளும் அரசியல்வாதிகளின் பக்க பலத்துடன் உயர் அதிகாரிகள் சிலர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தனர். சில கிராமங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டதாக கணக்கு காட்டி பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டன. நிவாரணத்திற்கென வந்த பால்மா மற்றும் உலர் உணவு பொருட்களை மொத்த விற்பனை வர்த்தகர்களுக்கு விற்று நிவாரணப்பொருட்களை ஏப்பம் விட்டனர்.

இந்த ஊழல் மோசடிகளை ஆதாரங்களுடன் துல்லியமான தரவுகளுடன் ‘சூறாவளி பூராயம்’ என்ற தலைப்பில் ஜோசப் அவர்கள் தொடர்கட்டுரை ஒன்றை சிந்தாமணியில் எழுதினார்.

புலனாய்வு செய்தி திரட்டல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அக்கட்டுரை ஒரு சிறந்த உதாரணமாகும்.

இன்றைய இளம் ஊடகவியலாளர்கள் புலனாய்வு செய்தி திரட்டல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அக்கட்டுரை தொடரை தேடி வாசிக்க வேண்டும்.

‘சூறாவளி பூராயம்’ என்ற கட்டுரை வெளிவந்த போதுதான் இவ்வளவு பெரிய ஊழல் மோசடி நடந்திருக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.

ஆனாலும் என்ன ஊழல் மோசடி செய்தவர்கள் ஆளும் கட்சி அமைச்சர்களின் செல்வாக்கினால் தப்பித்து கொண்டனர்.

அதேபோல மட்டக்களப்பு சிறை உடைப்பின் போதும் அவரின் செய்தி தேடலையும் தமிழ் மக்களின் நலன் என்ற நிலையில் நின்று சில செய்திகளை வெளியிடாமல் இரகசியம் காத்ததையும் கண்டு வியந்திருக்கிறேன்.

அவ்வேளையில் இளம் ஊடகவியலாளராக இருந்த எனக்கும் நித்தியானந்தனுக்கும் ஆசான் என்ற நிலையில் இருந்து அவர் வழிகாட்டியிருந்தார்.

1990ல் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகும் வரையான காலப்பகுதியில் ஊடகவியலாளராக மனித உரிமை செயற்பட்டாளராக பணியாற்றிய காலமே ஜோசப் அவர்களின் பொற்காலம் என நான் கருதுகிறேன்.

இதற்கு அவரின் மொழிப்புலமையும் துணிச்சலும் தமிழ் பற்றுமே காரணம் என்பேன்.

2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து செல்வதாக அறிவித்த காலப்பகுதியில் தான் பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை அழைத்த கருணா பிரிந்து செயற்பட இருக்கும் தன்னுடன் தான் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் விடுதலைப்புலிகளின் தலைமையுடன் தொடர்பை வைக்க கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

ஏனைய வேட்பாளர்கள் அச்சத்தின் காரணமாக தவிர்க்க முடியாத சூழலில் அதற்கு சம்மதித்தனர்.

ஜோசப் பரராசசிங்கம் மட்டும் கருணாவின் கோரிக்கையை அல்லது உத்தரவை ஏற்க மறுத்து விட்டார்.

‘வடகிழக்கு தமிழர் தாயக கோட்பாட்டை கைவிட முடியாது. அதற்காக போராடும் தலைமையையே நான் ஏற்றுக்கொள்கிறேன் ‘என கூறியதுடன் கருணாவின் உத்தரவை ஏற்க மறுத்து விட்டார்.

இறக்கும் வரை கொள்கையிலும் தமிழ் பற்றிலும் உறுதியாக இருந்த ஒரு உயர்ந்த மனிதராக ஜோசப் அவர்களை பார்க்கிறேன்.

என் 40 வருட ஊடக பயணத்தில் எனக்கு வழிகாட்டிகளாக இருந்தவர்களில் மிக பிரதானமானவராக ஜோசப் அவர்களையே பார்க்கிறேன்.

உங்களைப்போன்ற ஆளுமையும் துணிச்சலும் எந்த சலுகைகளுக்கும் விலைபோகாத ஊடகவியலாளர் சமூகம் ஒன்று மட்டக்களப்பில் உருவாகும் என்ற நம்பிக்கையோடு உங்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.

( இரா.துரைரத்தினம், ஊடகவியலாளர் )