இலங்கையில் நிறுவ முயற்சிக்கப்படும் தற்காலிக பொறிமுறைகளை ஏற்க முடியாது: மைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நிறுவ முயற்சிக்கப்படும் தற்காலிகமான பொறிமுறைகளை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தப் பொறிமுறையானது ஐநா.சாசனத்தின் ஆவணங்களுக்கு ஏற்ப அமையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன் வீடியோ ஊடாக நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றிலேயே ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் நகரில் இருந்து வெளிவிவகார அமைச்சர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தார்.
பொதுநலவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை முன்னெச்சரிக்கையாகவும், அமைப்பின் மதிப்புக்கள், கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களுக்கு இணங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் பீரிஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளுடன் வணிகம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளிலான ஒத்துழைப்பை இலங்கை மேலும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உள்ளூர் நிறுவனங்கள் தமது ஆணைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான அமைப்புக்கள் தேவைப்படுகின்றன. இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் வர்த்தகம், விளையாட்டு, இளைஞர்கள் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான இலங்கையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பொதுநலவாய அமைப்பு பாராட்டுவதாக பொதுச்செயலாளர் ஸ்கொட்லேன்ட் இதன்போது தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

6 மாதங்களுக்கான பொருளாதார அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது – அஜித் நிவாட் கப்ரால் 

இலங்கையில் எதிர்வரும் 6 மாதங்களுக்கென பொருளாதார அபிவிருத்தித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் நிவாட் கப்ரால் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர், ”எதிர்வரும் 6 மாதங்களை இலக்காகக் கொண்டு பொருளாதாரத்திற்கான திட்டப் பாதையொன்றை ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிட தயாராகியுள்ளோம். அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியதாக அது இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த அஜித் நிவாட் கப்ரால், கடந்த 15 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்றார்.
அவர் மத்திய வங்கிய ஆளுநராக பதவியேற்ற பின்னர் 2021 வருட இறுதியில் இலங்கையின் பொருளாதாரத்தில் 5 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று ஊடங்களுக்கு கூறியிருந்தார்.
இதேவேளை, இவரின் கையொப்பத்துடன் கடந்த 17 ஆம் திகதி புதிதாக 45.95 பில்லியன் ரூபா நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பு உறுப்பினர்களிடத்தில் சம்பந்தன் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் இலக்கு நோக்கி கூட்டமைப்பாக பயணிக்கும் அனைவரும் பொதுவெளியில் கருத்துக்களை பகிர்ந்து சாதாரண மக்களை குழப்பாதீர்கள் என்று அனைத்து உறுப்பினர்களிடத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனநாயக கட்டமைப்பில் அனைவருக்கும் கருத்துவெளியிடும் உரித்துண்டு. அதனை கட்டுப்படுத்தவும் முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா நெருக்கடியால் ஒன்றுகூடிக் கலந்துரையாட முடியாத நிலைமைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக்கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, மற்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன் எம்.பி, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ஆகியோர் ஊடகவியலாளர்கள் சந்திப்புக்களில் பரஸ்பர கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதேபோன்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலும் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
பகிரங்கமான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்ட சம்பந்தன் வீரகேசரியிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒரே கொள்கையில் ஒரே இலக்கு நோக்கி பயணிக்கின்ற அமைப்பாகும். தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற விடயத்தில் எமக்குள் எவ்விதமான மாறுபட்ட நிலைப்பாடுகளும் கிடையாது. இதற்காகவே அனைவரும் செயற்பட்டு வந்துகொண்டிருக்கின்றோம்.
அவ்விதமானதொரு சூழலில் அண்மைய நாட்களில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பொதுவெளியில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். கூட்டமைப்பு ஒரு ஜனநாயக கட்டமைப்பு என்ற அடிப்படையில் அனைவருக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு தாரளமான உரித்துள்ளது. அவ்விதமாக வெளிப்படும் கருத்துக்கள் கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்காத வகையில் அமைய வேண்டும்.
அதுமட்டுமன்றி சாதாரண மக்களையும் குழப்புவதாக அமைந்து விடக்கூடாது. ஆகவே இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் தமது பொறுப்புணர்ந்து கருமங்களை ஆற்ற வேண்டும். தற்போதைய சூழலில் கொரோனா நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக கூட்டமைப்பாக ஒன்று கூடி கலந்துரையாட முடியாத நிலையில் இருக்கின்றோம்.
விசேடமாக மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரம் நான் சந்திப்புக்களை தவிர்த்துள்ளேன். ஆகவே தான் பொதுவெளியில் பேசப்படுகின்ற விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் உள்ளிட்ட ஏனைய கருமங்களை முன்னெடுக்க முடியாத நிலைமைகள் காணப்பட்டு வருகின்றன.
எனினும், இந்த விடயங்களுக்கு எல்லாம் அப்பால், கூட்டமைப்பாக நாம் எமது மக்களின் நீதிக்கோரிக்கை, பொறுப்புக்கூறல், நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும் என்றார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் விடயங்கள்

உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்துடன், அடுத்த ஆண்டுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடரும். அத்துடன் முன்மொழியப்பட்ட 2022 வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களில் தனியார் துறை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இலங்கை நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“உற்பத்தி பொருளாதாரம்” என்பது எதிர்வரும் நவம்பர் மாத வரவு செலவுத் திட்டத்தின் கருப்பொருளாக இருப்பதால், விவசாயம், சாலை மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் அமைச்சகங்களுக்கு அதிக ஒதுக்கீடுகள் செய்யப்படவுள்ளன.

2022ஆம் ஆண்டு முழுவதும் வாகன இறக்குமதி உள்ளிட்ட இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்படும்.எனினும் மின்சார கார்களின் இறக்குமதி ஊக்குவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்துறையில் கூடுதல் செலவுகள் குறைக்கப்படும். மூன்று ஆண்டு பின்னடைவுக்குப் பின்னர் சுற்றுலாத்துறையை புத்துயிர் பெற வைக்கும் வகையில், வருடாந்த வருவாயை ஐந்து பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தும் நோக்கத்துடன் ஹோட்டல் துறைக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மீன் இறக்குமதி திட்டங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதேவேளை ஆசிரியர்களின் சம்பள ஒழுங்கின்மை பிரச்சனைக்கு தீர்வு கண்டால், சம்பளத்தை படிப்படியாக உயர்த்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

மேலும் ஒரு தொகுதி ஸ்புட்னிக் தடுப்பூசி நாட்டை வந்தடைந்தது

2 வது தடுப்பு மருந்துக்குத் தேவையான 1 இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (19) காலை இலங்கையை வந்தடைந்ததாக  இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதலாவது டோசை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் வழங்குவதற்கு இது போதுமானது எனவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் மொத்த சனத்தொகையான 2 கோடியே 19 இலட்சத்து 19 ஆயிரத்து 413 பேரில், 50 வீதமானோருக்கு இதுவரையில் கொவிட் வைரஸுக்கு எதிரான இரண்டு தடுப்பூசி டோஸ்களும் ஏற்றப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை மீதான பயணத் தடையை நீக்கியது ஜப்பான்

கொவிட் அபாயம் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்க ஜப்பானிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நாளை (20) முதல் இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

டெல்டா கொவிட் திரிபு அவதானத்தை கருத்திற் கொண்டு கடந்த ஜூன் மாதம் ஜப்பானிய அரசால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் கொவிட் பரிசோதனைக்கு மேலதிகமாக மூன்று நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொவிட் தொற்று நோய்க்கான சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க பிரிட்டன் கடந்த தினம் தீர்மானித்திருந்தது.

எதிர்வரும் 22 ம் திகதி முதல் இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பால்மா விலையையும் அதிகரிக்க பச்சைக் கொடி காட்டியது நிதியமைச்சு?

நாட்டில் தற்போது பால்மாவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அதிகரித்த விலை மற்றும் இறக்குமதி செலவு அதிகரிப்பு இலங்கை ரூபாவின் வீழ்ச்சி என பல்வேறு காரணங்களால் பால்மா நிறுவனங்கள் விலை அதிகரிப்பை கோரியிருந்தன.

எனினும் அரசாங்கம் விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்காத நிலையில் நாட்டில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் உள்நாட்டு சந்தையில் பால்மா 400 கிராம் ஒன்றின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பால்மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சருக்கும் இடையே நடந்த சந்திப்பில் இந்த இணக்கம் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே 400 கிராம் பால்மா பக்கற் ஒன்றின் விலை 380 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் விடுதலை! அரச தலைவரின் செயலால் மகிழ்ச்சியில் ஐ.நா ஆணையாளர்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஆராய்ந்து பார்க்க ஆலோசனை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகுமென்றும் இந்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லட் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்தமை வரவேற்கத்தக்க விடயமாகும் என்பதுடன் இலங்கை ஜனாதிபதி பொது மக்களுக்கு உரித்தான அவகாசங்ளை விரிவாக்குவதற்கு பரந்தப்பட்ட கலந்துரையாடல்களை ஏற்படுத்தியமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியும் அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பொறுப்புடனும் ஒத்துழைப்புடனும் கடமையாற்றுவதையும் தான் வரவேற்பதாக தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்,

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேசிய விசாரணை குழுவொன்றை அமைத்துள்ளமைக்கும் அந்த அறிக்கையை தமக்கு சமர்ப்பித்தமைக்கும் வரவேற்பை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீட்டை வழங்கும் தேசிய கொள்கையை நிறைவேற்றியுள்ளமை மற்றும் புனர்வாழ்வு செயற்பாடுகளை தொடர்ச்சியாக கொண்டுசெல்கின்றமையும் வரவேற்கத்தக்கதென்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷெல் பெச்லட் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் சிசிடிவி கெமராக்களே இல்லை – சிங்கள ஊடகம்

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் இதுவரை சிசிடிவி கெமராக்கள் இதுவரை பொருத்தப்படவில்லை என சிங்கள ஊடகம் ஒன்று நடத்திய தேடுதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை மருத்துவமனை, மகளிர் சிறை, கொழும்பு விளக்கமறியல் சிறை மற்றும் மெகசின் சிறை , கொழும்பு சிறை வளாகத்திலேயே சிசிடிவி அமைந்துள்ளன.

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கெமராக்கள் இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிறைகளில் சிசிடிவி கெமராக்களை நிறுவுவதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

பணியை முடிக்க இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்று சிறைத்துறை கூறியது.

மேலும், அனுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கெமராக்கள் பொருத்த இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த மது போதையில் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்து கைதிகளை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

எனினும், இந்த குற்றச்சாட்டை  லோஹான் ரத்வத்த நிராகரிப்பதாக கூறியிருந்தார். மேலும், சிறைக்குள் அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து சிறைத் துறை ஏற்கனவே சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பில், முதலில் அனுராதபுரம் சிறைச்சாலையின் அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக சிறைத்துறை ஆணையர் கூறினார்.

கைதிகளை படுகொலை செய்யும் சூழ்ச்சியுடனேயே லொஹான் வந்திருப்பார் – மனோ கணேசன்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை படுகொலை செய்வதற்கான சூழ்ச்சியுடனேயே லொஹான் ரத்வத்த சிறைக்கு வந்திருப்பார் என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ்க் கைதிகளை சந்திக்க அவர் இன்றைய தினம் சென்றபோது சிறைக்குள் பிரவேசிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

இருந்த போதிலும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டதன் பின்னர் சபாநாயகரது பணிப்புரைக்கமைய, அவர்கள் உட்பிரவேசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கைதிகளுடன் சந்திப்பை நடத்திய பின்னர் அங்கிருந்து திரும்பிய மனோ கணேசன் ஊடகங்களிடம் குறித்த சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசனுடன்காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர் சிறைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, மதுபோதையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதுடன், மண்டியிட வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.