சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டிய தேவையில்லை – அஜித் நிவாட் கப்ரால்

சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

பொருளாதார தேவைகளை அடையாளம் கண்டு, அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினையும் அவர் நிராகரித்துள்ளார்.

Posted in Uncategorized

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்.13 வரை நீடிப்பு

இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி செப்டம்பர் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 20 ஆம் திகதி நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இதற்கு முன்னர் செப்டம்பர் 6 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில், தற்போதைய கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு ஊரடங்கை மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 6ம் திகதி தளர்த்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய, அதனை நீடிக்க தீர்மானித்ததாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேலும் ஒரு வார காலத்திற்கு பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என வைத்தியர்கள், கொவிட் – 19 தடுப்புக்கான கூட்டத்தில் இன்றைய தினம்(03) தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க பிரித்தானியா தீர்மானம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீடிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சை மேற்கோளிட்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் 2000 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பின்னர் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் செயலாளரினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட உலகெங்கிலும் உள்ள 30 க்கும் மேற்பட்ட நாடுகளைப் போலவே, தமிழீழ விடுதலைப் புலிகளும் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக உள்ளது.

உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பை பாதிக்கும் பிற குற்றச் செயல்கள் காரணமாக இந்த நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை ஆரம்பத்தில் தடை செய்திருந்தனர்.

இந்நிலையில் உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் அனைத்து முயற்சிகளிலும் பிரிட்டனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நியூசிலாந்தில் கத்திக்குத்து; இலங்கையர் சுட்டுக்கொலை

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குறித்த நபர், அங்குள்ள பிரபல சுப்பர் மார்கெட் ஒன்றுக்குள் நுழைந்து கத்திக் குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், இதில் ஆறு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், அவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என, அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

குறித்த இலங்கையர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு காலவரையறையின்றி ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று காலை நகர சபைக்குரிய மண்டபத்தில், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக்டிரஞ்சன் தலைமையில் சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு ஆரம்பமானது.

அமர்வில் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மூவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இருவர் என ஐந்து உறுப்பினர்கள் மாத்திரமே பங்கேற்றனர். இதனால் அமர்வு சுமார் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோதும் கோரம் போதாமையினால்  திகதி குறிப்பிடப்படாமல் தலைவரை தெரிவு செய்வதற்கான அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக செயல்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த  கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே புதிய தலைவருக்கான தெரிவு இடம்பெறவிருந்தது.

வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழுவில் 4 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்பன தலா 2 உறுப்பினர்களையும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 4 உறுப்பினர்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பன தலா 2 உறுப்பினர்களையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளன.

Posted in Uncategorized

ரிஷாட்டின் சிறையில் இருந்து கைப்பேசி கண்டுபிடிப்பு

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு, விளக்கமறியல் உத்தரவின் கீழ், மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனிடம் இருந்து சிறைச்சாலை அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசி ஒன்றினை மீட்டுள்ளனர்.

மெகசின் சிறைச்சாலையின் தலைமை சிறைக் காவலரும் மற்றொரு காவலரும், நேற்று  (1) இரவு வேளையில், ரிஷாத் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அறையின் பக்கம் மேற்பார்வைக்காக சென்ற போது, அவர் தொலைபேசியில் கதைப்பதை கண்டுள்ளதாகவும், பின்னர் அவர் அந்த தொலைபேசியை சிறை அறைக்கு வெளியே வீசிய நிலையில் அதனை கைப்பற்றியதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் , சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க கூறினார்.

‘ வழமையான சிறை அறை மேற்பார்வையில் பிரதான பாதுகாவலரும் மற்றொருவரும் நேற்று இரவு ஈடுபட்டிருந்துள்ளனர்.

இதன்போது ரிஷாத் பதியுதீன் தொலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருப்பதை அவர்கள் அவதானித்துள்ளனர்.

இந்த நிலையில், பிரதான சிறைக்காவலர் தான் தொலைபேசியில் கதைப்பதை அவதானித்ததை அறிந்த ரிஷாத் பதியுதீன், சிறைச்சாலைகள் ஜன்னல் வழியே தொலைபேசியை வீசி எரிந்துள்ளார். இதனையடுத்து, அந்த தொலைபேசியை உடனடியாகவே சிறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

எனவே சிறைச்சாலைகள் கட்டளை சட்டத்தின் பிரகாரம் ரிஷாத் பதியுதீனை கையடக்கத் தொலைபேசி வைத்திருந்தமை தொடர்பில் சிறைச்சாலைகள்  தீர்பாயம் முன் நிறுத்தவுள்ளோம். ‘ என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன எக்கநாயக்க கூறினார்.

ஏற்கனவே சிறைச்சாலைகள் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சிறைச்சாலைகள் தீர்பாய விசாரணையையும், பொலிஸ் விசாரணைகளையும் எதிர்க்கொண்டுள்ள பின்னணியிலேயே தற்போது  தொலைபேசி வைத்திருந்த விடயமும் வெளிப்பட்டுள்ளது.

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் நடைபெறாது

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் வருடாந்த மகோற்சவம் இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகோற்சவம் ஜூன் 10 ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக இம்மாதம 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இவ்வருட மகோற்சவத்தை நடத்தாமலிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நாகபூசணி அம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபையின் தலைவர் க.பரமலிங்கம் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் கலந்துரையாடல் – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

தனது நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெறும் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அது தொடர்பில் அமைச்சருக்கு எழுதிய கடிதத்திலேயே பேராயர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலுக்கான அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனின், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வெளிப்படையான முறையில் இடம்பெறுகின்றன என்று தனக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றும் பேராயர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நம்பகமான விசாரணைகளின் முக்கியத்துவம் மற்றும் அந்த நம்பிக்கையை கட்டியெழுப்ப, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்று கர்தினால் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கைதடி அரச முதியோர் இல்லத்தில் இதுவரை 115 பேருக்கு கொரோனா!

கைதடி அரச முதியோர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை(02.08.2021) மீண்டும் துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 68 முதியோர்களுக்கும், நான்கு ஊழியர்களுக்கும் என 72 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை(31) குறித்த முதியோர் இல்லத்தில் நடாத்தப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் 43 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேற்படி முதியோர் இல்லத்தில் இதுவரை 115 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வலுப்பெறும்! – ஞானசார தேரர்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள தலிபான் அமைப்பினால் இலங்கையில் 70 சத வீதம் ஆதிக்கம் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படையாத அமைப்புக்கள் வலுப்பெறும். தப்லீக் ஜமாத் அமைப்பை அரசாங்கம் தடை செய்வதுடன், இஸ்லாமிய அடிப்படையாத கொள்கையுடைய அமைப்புக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் முற்றாக இல்லாமல் போயுள்ளது என்று ஒருபோதும் கருதக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று (01) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அமைப்பு மீண்டும் ஆட்சியதிகாரத்தை போராட்டத்தின் ஊடாக கைப்பற்றியுள்ளது. தலிபான்கள் இறுக்கமான மத கொள்கையையும் மதத்தின் பெயரில் அடிப்படைவாத செயற்பாடுகளிலும் ஈடுபடுவர்கள்.

இறுக்கமான மத கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அந்நாட்டு மக்கள் அபாயகரமான நிலையில் நாட்டை விட்டு வெளியேறுவதனை அவதானிக்க முடிகிறது. தலிபான் அமைப்புக்களின் மீள் எழுச்சி இலங்கையில் தற்போது 70 சத வீதமளவில் ஆதிக்கம் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு சாதகமாக அமையும்.

தலிபான் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கபட்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையிலும் உள்ளன. குறிப்பாக தப்லீக் ஜமாத் அமைப்பை குறிப்பிட வேண்டும். இந்த அமைப்பை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும்.அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையுடைய அமைப்புக்கள் குறித்தும் அதிக கவனம்செலுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் வாழும் சுதேச பாரம்பரிய முஸ்லிம்கள் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைக்கும், மதத்தின் பெயரை குறிப்பிட்டுக் கொண்டு தவறான புரிதல்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். இருப்பினும் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் தலைமைகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் குறித்து முதலில் முஸ்லிம் மக்கள் ஒரு தீர்வை எடுக்க வேண்டும் என்றார்.