கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் இனப்பாகுபாடு இடம்பெறுவது உகந்ததல்ல – பா.உ ஜனா

2002ம் ஆண்டு உருவாக்கப்படட சாய்ந்தமருது பிரதேச செயலகம் 2006ம் ஆண்டு முழுமையான பிரதேச செயலகமாக இயங்கிக் முடியுமாயின் 33 வருடங்களாக இயங்கும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் மாத்திரம் ஏன் தரமுயர்த்தப்பட முடியாது. இனப்பாகுபாட்டுடன் செயற்பாடுகள் நடைபெறுவது இந்த நாட்டிற்கு உகந்ததல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜ)னா தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய விவாதத்திலே எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலே 20 நிமிடங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒதுக்கப்பட்டிருந்தும். எமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பேசிய பிற்பாடு என்னுடைய பேச்சுக்காக நான் காத்திருக்கும் போது எனது பெயர் அறிவிக்கப்படதமையால் நான் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியிடம் வாக்குவாதப் பட வேண்டியதாக இருந்தது. ஏதிர்க்கட்சிகளின் கொறடா அவர்கள் எங்களது அனுமதி இல்லாமல் என்னுடைய பெயரை எவ்வாறு நீக்கலாம் எங்களது நேரத்தை அவர்கள் எவ்வாறு எடுக்கலாம். இது ஒரு பாராளுமன்ற ஜனநாய முறைக்கு எதிரானது என்பதை எதிர்க்கட்சிகளின் கொறடாவான லக்ஸஸ்மன் கிரியல்ல அவர்களுக்கு எனது கண்டனமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மின்சாரக் கட்டண அதிகிப்பு சம்மந்தாமான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மிகவும் துடிப்பானவர் மிகவும் நன்றாக இந்த அமைச்சைச் செயற்படுத்துவதாக அறியக் கிடைத்தது. அந்த வகையில் கியூ.ஆர் முறையைக் கொண்டுவந்து எரிபொருள் மாபியாக்களை ஒடுக்கியிருக்கின்றார். வரிசை நிலைமை சற்றுக் குறைந்திருந்தாலும் இம்முறையிலே சில குறைகள் காணப்படுகின்றன. இந்த முறைமை மூலம் தொழில் ரீதியாக வாடகை வாகனம் ஓட்டுபவர்களுக்கான எரிபொருள் குறைவாகக் கிடைப்பதன் காரணமாக கூடிய பணத்தைக் கொடுத்து மக்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. இது தொடர்பில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு என்பது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம் காரணமாக ஏற்பட்டிருக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டாலும் 75 வீதமிருந்து 275 வீதம் வரை கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மக்கள் தற்போது பொருளதார நெருக்கடியில் மிகவும் கஸ்டமான நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தனிமனித வருமானம் எந்தவகையிலும் அதிகரிக்கப்படவில்லை. அரச உத்தியோகத்தர்கள் கூட தங்கள் கடமைகளை மேற்கொள்வதற்கான எரிபொருளுக்கே அவர்களது வேதனம் போதாமல் இருக்கின்றது. இதனைக் கருத்திற்கொண்டு இந்த அரசு தனிமனித வருமானத்தையும் கூட்டுவதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும்.

அத்துடன் உணவில்லாமலும் இருந்து விடலாம் ஆனால் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது. குடிநீருக்கான கட்டணமும் 75 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவைகளெல்லாம் மரத்திலிருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போன்று நொந்து போயிருக்கும் எமது மக்களின் தோள்களிலே மேலும் மேலும் சுமைகளை ஏற்றுவதாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாது மண்ணெண்ணையின் விலை 253 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. மண்ணெண்ணையை நம்பி விவசாயம் மீன்பிடி தொழில் செய்வோர் மிகவும் வாழ்வாதாரம் இழந்த நிலையில் கஸ்டப்படுகிறார்கள். எனவே இந்த நாட்டிலே விவசாயம் மீன்பிடியைத் தொழிலாகச் செய்பவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு மண்ணெண்ணையின் விலையைக் குறைக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு மானியம் வழங்குவதற்கு முன்வர வேண்டும். ஏனெனில் பெற்றோல் டீசலை விட மண்ணெண்ணைய் என்பது இந்த நாட்டின் அடிமட்ட மக்களுக்கு தேவையான விடயமாக இருக்கின்றது.

யுத்தம் முடிந்து தற்போது பொருளாதார ரீதியில் கஸ்டப்படும் எமது தமிழ் மக்கள் குறிப்பாக கிழக்குத் தமிழ் மக்கள் தமிழ் பேசும் இனமெனக் கூறப்படும் இன்னுமொரு இனத்தினால் அரசியல் ரீதியில் அடக்க நினைக்கும் நிலைமைகள் காணப்படுகின்றது. இன்று கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயம் ஒரு பேசு பொருளாகக் காணப்படுகின்றது.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவானது 1989ம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாகத் தாபிக்கப்பட்டு பின்னர் 1993ம் ஆண்டு அமைச்சரவை அனுமதியுடன் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்டது. இருந்தபோதிலும் பல்வேறு அரசியற் தலையீடுகள் காரணமாக அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படாமல் மறுக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த முப்பது வருடத்திற்கு மேலாகப் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு முப்பது வருடங்களுக்கு மேலாகச் செயற்பட்டு வருகின்ற கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து தற்போது அகற்றப்பட்டு அதன் 29 கிராம சேவகர் பிரிவுகளும் கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. 2002ம் ஆண்டு உருவாக்கப்படட சாய்ந்தமருது பிரதேச செயலகம் 2006ம் ஆண்டு வர்த்தமானிபடுத்தப்பட்டு இன்று ஒரு முழுமையான பிரதேச செயலகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. முப்பது வருட காலமாக கல்முனை பிரதேசத்தில் இருந்து கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பிரிக்கப்பட்டிருந்தும் இன்னும் அது முழு அதிகாரம் பெறாமல் இருக்கும் போது 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சாய்தமருது பிரதேச செயலகம் முழு அதிகாரத்துடன் இயங்குவது எவ்வாறு சாத்தியம். அது நூறு வீதம் முஸ்லீம் பிரதேச செயலகமாக இயங்குவதாலா அவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது?

அதேபோல் ஓட்டமாவடி பிரதேச செயலகம் வெறுமனே ஏழு கிராம சேவகர் பிரிவுகளை மாத்திரம் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பிரதேச செயலகமாகச் செயற்படுகின்றது. ஆனால் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் ஒரு கணக்காளர் இல்லாமல் அந்த பிரதேச செயலகத்தின் செயலாளர் தன்னுடைய வாகனத்திற்கு டயர் மாற்ற வேண்டுமென்றாலும் இன்னுமொரு பிரதேச செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது. இவ்வாறு இனப்பாகுபாட்டுடன் செயற்பாடுகள் நடைபெறுவது இந்த நாட்டிற்கு உகந்ததல்ல என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

கல்முனை தமிழ்ப்பிரிவுப் பிரச்சினைக்கு வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு. (பிரதமர் பா.உ.களான ஜனா, கலையரசனிடம் உறுதி)

கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரதேச செயலகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார்.

கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை தானும் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனும் சந்தித்து கலந்தரையாடிய வேளையிலேயே இதனை பிரதமர் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இச் சந்திப்பில், கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலகம் தொடர்பான குழப்பநிலை மற்றும் அண்மைய பொது நிருவாக அமைச்சின் இணையத்தளத்திலிருந்து கல்முனை தமிழ்ப்பிரிவு அகற்றப்பட்டமை, நீண்டகாலமாக இருந்து வருகின்ற கணக்காளர் நியமிக்கப்படாத பிரச்சினை, காணிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இக் கலந்துயாடலின் அடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் கல்முனை வடக்கு (தமிழ்ப் பிரிவு) பிரதேச செயலகக் குழப்பங்களுக்குச் சரியானதொரு தீர்க்கமான தீர்வை வழங்குவதாக பிரதமர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

 

இனப்பிரச்சினையைத் தீர்த்துவிட்டு புலம்பெயர்ந்த தமிழர்களை அழையுங்கள். – பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா)

புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டை விட்டு சென்றமைக்கு முக்கிய காரணம் இந்த நாட்டின் இனப்பிரச்சினை, இந்த இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக தமிழ் மக்கள் அகிம்சை, ஆயுத ரீதியில் 70 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்த இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக் கொடுத்துவிட்டு புலம்பெயர்ந்த தமிழர்களை நீங்கள் அழையுங்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

போரதீவு உதயதாரகை பொரு விளையாட்டரங்கைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்,

இலங்கையின் அரசியல் வராலாறு தற்போது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பே முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்;கா அவர்களினால் கல்லோயத் திட்டத்தின் மூலமாக குறிப்பாகக் கிழக்கு மாகாணத்திலே தமிழ் மக்களின் இனப்பரம்பலைக் குறைப்பதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருந்தார். 1921ம் ஆண்டு சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு கிழக்கு மாகாணத்திலே வெறும் நூற்றுக்கணக்கான சிங்களவர்களெ 0.3 வீதமானவர்களே வாழ்ந்தார்கள். இன்று அது 24 வீதமாக மாற்றப்பட்டிருக்கின்றதென்றால் இந்த நாட்டை மாறி மாறி ஆண்ட அரசுகள் திட்டமிட்ட குடியேற்றங்களை ஏற்படுத்தி இந்த மாகாணத்தின் இனப்பரம்பலை மாற்றியுள்ளார்கள்.

தற்போயை நிலையில் இலங்கையின் அனைத்து மக்களுமே பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருக்கின்றார்கள். நாங்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குள் சிக்குண்டு கடந்த 43  வருடங்களுக்கு மேலாகத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ் மக்களை அடக்குவதற்காகவே ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கடந்த காலங்களிலே அந்தச் சட்டத்தினுடாக தமிழர்கள் சிறைபிடிக்கப்படும் போதும், கேள்வியற்று அவர்கள் சிறைகளிலே அடைக்கப்படும் போதும் எவருமே கவலைப்படவில்லை. எந்த இனமும் கவலைப்படவில்லை. அவர்களுக்கென்று வரும்போது தான் அவர்கள் இந்தச் சட்டம் பற்றிக் கவலையுறுகின்றார்கள்.

ஈஸ்டர் குண்டுவெடிப்புடன் முஸ்லீம் மக்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அறிந்து கொண்டார்கள். கோட்டா கோ கோம் போராட்டத்தின் பின்பு தற்போது சிங்களவர்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குள் சிக்கியிருக்கின்றார்கள். இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்றால் என்ன என்பது தொடர்பில் தற்போது தான் இந்த நாடு வழித்திருக்கின்றது. 20, 30 வருடங்களுக்கு மேலாகவும் தற்போதும் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், வெறுமனே இரண்டு கிழமைகள் சிங்களவர்கள் அந்தத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளாக்கப்படும் போது கொதித்தெழுகின்றார்கள். எமது தமிழ் அரசியல்வாதிகளும் கூட அந்தச் சிங்கள இளைஞர்களுக்காகப் போராடுகின்றார்கள்.

தற்போது இந்த நாட்டின் பொருளாதார நிலைமையில் மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. மக்கள் மிகவும் கஸ்டமான பொருளாதாரச் சூழலிலே வாழ்ந்து கொண்;டிருக்கின்றார்கள். இந்த நாட்டின் அரசாங்கம் இப்படியானதொரு ஆட்சியைச் செய்ய வேண்டுமா? இது போதாதென்று கடந்த பாராளுமன்ற அமர்வின் போது அரசாங்கத்தினால் மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு ஒரு சட்டம கொண்டு வரப்படுகின்றது. ஒழுங்காக மின்சாரமே வழங்கப்படாத இந்த நாட்டில் 75 வீதம் தொடக்கம் 275 வீதம் வரை மின்சாரக் கட்டணத்தை அதிகரித்துள்ளார்கள். நேற்றை தினம் தொடக்கம் 75 வீதத்தால் நீர்கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படியொரு அரசு அந்த நாட்டுக்குத் தேவையா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் ஜனாதிபதியாக வந்த காலத்தில் இருந்தே எடுத்த முட்டாள்தனமான முடிவுகள் இன்று இந்த நாட்டு மக்கள் அனைவரையுமே படுபாதாளத்திற்குள் தள்ளியிருக்கின்றது. கோட்டபாய இன்று நாட்டை விட்டு ஓடி, இருப்பதற்கும் இடமில்லாமல் அலைகின்றார். அவருக்குப் பதிலாக தற்போது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாகியிருக்கின்றார். நாட்டின் விலை வாசி அதிகரிப்புக்கு ஏற்றவாறு மக்களின் வருமானத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாது விட்டால் இந்த மக்கள் எங்கு செல்வார்கள்.

ராஜபக்ச சகோதரர்கள் இந்த நாட்டில் தமிழ் மக்களைக் கொன்றொழித்தார்கள். 2009 மே மாதம் ஒரு லெட்சத்து நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றொழித்தார்கள். அந்தப் பாவமே அந்தக் குடும்பத்தை வதைக்கின்றது. அந்த நிலையில் தற்போது புலம்பெயர்ந்து வாழும் நமது புலம்பெயர் தமிழ் உறவுகளை முதலீடுகளைக் கொண்டு வருமாறும், அவர்கள் உழைத்த டொலர்களைக் கொண்டு வருமாறும் அழைக்கின்றார்கள்.

இவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எதற்காகப் புலம் பெயர்ந்து சென்றார்கள். இந்த நாட்டிலே உங்களது அடக்குமுறை தாங்க முடியாமல், உங்களது கொலைப்பட்டியலில் இருந்து தப்பிச் சென்ற எம் உறவுகளை நீங்கள் அழைக்கின்றீர்கள். அவர்கள் இந்த நாட்டை விட்டு சென்றமைக்கு முக்கிய காரணம் இந்த நாட்டின் இனப்பிரச்சினை, இந்த இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக தமிழ் மக்கள் அகிம்சை, ஆயுத ரீதியில் 70 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். அந்த இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வைக் கொடுத்துவிட்டு புலம்பெயர்ந்த தமிழர்களை நீங்கள் அழையுங்கள்.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து விட்டோம் புலம்பெயர் உறவுகளின் எதிர்காலச் சந்ததியினர் இந்த நாட்டிலே சுதந்திரமாக வாழலாம் நீங்கள் இங்கு வந்து முதலிடுங்கள் என்று அவர்களிடம் அழைப்பு விடலம். ஆனால், நீங்கள் அதனைச் சிந்திப்பதாக இல்லை. உங்களுக்குப் பொருளாதாரத்திற்கு மாத்திரமே அவர்கள் தேவைப்படுகின்றார்கள்.

இந்த நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைமைக்குச் சென்றமைக்கு இந்த நாட்டின் இடம்பெற்ற யுத்தமே காரணம். இதன் காரணமாக ஆயதங்கள் உட்பட பலவும் வாங்குவதற்காகப் பல பில்லியன் கணக்கான டொலர்களைச் செலவழித்தீர்கள். எதிர்காலத்திலே இந்த நாடு சுபீட்சமாக இருக்க வேண்டுமாக இருந்தால் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திவிட்டு புலம்பெயர் தமிழர்களை அழையுங்கள். அவர்கள் நிச்சயமாக இங்கு வந்து முதலிடுவார்கள். இந்த நாட்டின் கடனை அடைப்பதற்கும் அவர்கள் தயாராகவே இருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.

நாட்டில் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமற்றது – மைத்திரி

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது நல்ல விடயமல்ல என அந்த கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொள்கை ரீதியாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உடன்படுவதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

போராட்டச் செயற்பாட்டாளர்களை அடக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி நிறுத்த வேண்டும் – சரத் பொன்சேகா

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டச் செயற்பாட்டாளர்களை அடக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இல்லையேல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்த அவமானத்தைப் போல் தற்போதைய ஜனாதிபதியும் சந்திக்க வேண்டி வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

69 இலட்சம் மக்கள் தனக்கு வாக்களித்தார்கள் என மார்தட்டி வீர வசனம் பேசிய கோட்டாபய ராஜபக்ஷ இறுதியில் இலங்கையைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்று எந்த நாடும் அடைக்கலம் கொடுக்காத நிலையில் அவர் மீண்டும் இலங்கைக்கு வர எத்தனிக்கின்றார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை கட்டுமானத்தை நிறுத்தி , கோணேஸ்வரர் ஆலய கட்டுமானத்திற்கான தடையை நீக்க கோரிக்கை!

திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்மாண பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்ற விடயம் தொடர்பில் உடனடியாக தொல்பொருள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதன் பணிப்பாளர் மனவிதானய தெரிவித்ததாக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்

பேராசிரியர் புஷ்பரட்ணம் ஏற்பாட்டில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மனவிதானவிக்கும் நல்லை ஆதீன முதல்வர் மற்றும் தெல்லிப்பளை துர்கா தேவி தேவஸ்தான தலைவர் ஆகியோருக்கும் இடையில் இன்று ம் விசேட சந்திப்பு இடம்பெற்றது

குறித்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த கலாநிதி ஆறு திருமுருகன் முக்கியமாக, கீரிமலையில் ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் மூன்று கோவில்கள் நீண்டகாலமாக பூஜை வழிபாடுகள் இடம்பெறாது உள்ளன எனவே அந்த மூன்று கோயில்களிலும் உடனடியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்துரையாடி அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கின்றோம்

அதேபோல் கீரிமலையில் சமாதிகள் சிலவும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன அவற்றையும் பெற்றுத் தருவதற்கு உதவ வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்ததோடு திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலய கட்டுமான பணிகளுக்கு தொல்பொருத்திணை கழுத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தெரிவித்த போது தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் இந்த விடயத்தினை உடனடியாக அமைச்சு மட்டத்திற்கு தெரியப்படுத்தி தீர்வினை தான் பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் முல்லை தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை நீண்ட காலமாக சைவ மக்களால் வணங்கப்பட்டு வந்த அந்த மலையில் வேறு சில கட்டுமான பணிகள் இடம்பெறுகின்றன

எனவே அந்த விடயங்களை நிறுத்து உரிய தீர்வினை பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம் எனினும் திருகோணமலை விடயம் தொடர்பில் உடனடியாக தான் அமைச்சு மட்டத்திற்கு தெரியப்படுத்தி தீர்வினை பெற்று தரமுயற்சிப்பதாக தெரிவித்தார் என்றார்,

Posted in Uncategorized

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் தொடர்பில் விசாரணை

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் பல இடங்களில் புகைப்படம் எடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை நீதவானிடம் பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போது கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதவான் திலின கமகே முன்னிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்தமை மற்றும் ஜனாதிபதியை கொடியை பயன்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஞ்சனை பாராளுமன்றம் அழைத்துச் செல்ல தயாராகும் சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் ஏற்படும் முதலாவது வெற்றிடத்தில் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க கலந்து கொண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், ரஞ்சனுக்கு ஓரளவு சுதந்திரம் கிடைத்துள்ளது. அவருக்கு ஜனநாயக உரிமைகள் இருந்திருக்க வேண்டும்.

அந்தச் சுதந்திரத்தை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சகல அரசியல் உரிமைகளுடன் வழங்குமாறு ஜனாதிபதிக்கு நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.

கோட்டாபயவுக்கு முன்னாள் ஜனாதிபதியின் சலுகைகளை வழங்க முடியாது?

இலங்கையின் அரசியலமைப்புக்கமைய முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட முடியாது என்று  முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல என்பதனால் அவருக்கு அந்தச் சலுகைகளை வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் பதவி விலகியவர் என்பதனால், ஜனாதிபதி ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட எந்தவொரு சிறப்புரிமையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இல்லை எனவும் சரத் என். சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

மத்திய வங்கியின் ஆளுநரால் நடத்தப்படும் விசேட நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் முன்னோக்கி செல்லும் வழி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் நடத்தப்படும் விசேட நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கு அமைய இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எதிர்கால பொருளாதாரத் திட்டங்கள் குறித்து பயனுள்ள சொற்பொழிவுக்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.