கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் இனப்பாகுபாடு இடம்பெறுவது உகந்ததல்ல – பா.உ ஜனா

2002ம் ஆண்டு உருவாக்கப்படட சாய்ந்தமருது பிரதேச செயலகம் 2006ம் ஆண்டு முழுமையான பிரதேச செயலகமாக இயங்கிக் முடியுமாயின் 33 வருடங்களாக இயங்கும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் மாத்திரம் ஏன் தரமுயர்த்தப்பட முடியாது. இனப்பாகுபாட்டுடன் செயற்பாடுகள் நடைபெறுவது இந்த நாட்டிற்கு உகந்ததல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜ)னா தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய விவாதத்திலே எதிர்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலே 20 நிமிடங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒதுக்கப்பட்டிருந்தும். எமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பேசிய பிற்பாடு என்னுடைய பேச்சுக்காக நான் காத்திருக்கும் போது எனது பெயர் அறிவிக்கப்படதமையால் நான் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியிடம் வாக்குவாதப் பட வேண்டியதாக இருந்தது. ஏதிர்க்கட்சிகளின் கொறடா அவர்கள் எங்களது அனுமதி இல்லாமல் என்னுடைய பெயரை எவ்வாறு நீக்கலாம் எங்களது நேரத்தை அவர்கள் எவ்வாறு எடுக்கலாம். இது ஒரு பாராளுமன்ற ஜனநாய முறைக்கு எதிரானது என்பதை எதிர்க்கட்சிகளின் கொறடாவான லக்ஸஸ்மன் கிரியல்ல அவர்களுக்கு எனது கண்டனமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மின்சாரக் கட்டண அதிகிப்பு சம்மந்தாமான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மிகவும் துடிப்பானவர் மிகவும் நன்றாக இந்த அமைச்சைச் செயற்படுத்துவதாக அறியக் கிடைத்தது. அந்த வகையில் கியூ.ஆர் முறையைக் கொண்டுவந்து எரிபொருள் மாபியாக்களை ஒடுக்கியிருக்கின்றார். வரிசை நிலைமை சற்றுக் குறைந்திருந்தாலும் இம்முறையிலே சில குறைகள் காணப்படுகின்றன. இந்த முறைமை மூலம் தொழில் ரீதியாக வாடகை வாகனம் ஓட்டுபவர்களுக்கான எரிபொருள் குறைவாகக் கிடைப்பதன் காரணமாக கூடிய பணத்தைக் கொடுத்து மக்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. இது தொடர்பில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு என்பது உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம் காரணமாக ஏற்பட்டிருக்கின்றது என்பதை ஏற்றுக் கொண்டாலும் 75 வீதமிருந்து 275 வீதம் வரை கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மக்கள் தற்போது பொருளதார நெருக்கடியில் மிகவும் கஸ்டமான நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தனிமனித வருமானம் எந்தவகையிலும் அதிகரிக்கப்படவில்லை. அரச உத்தியோகத்தர்கள் கூட தங்கள் கடமைகளை மேற்கொள்வதற்கான எரிபொருளுக்கே அவர்களது வேதனம் போதாமல் இருக்கின்றது. இதனைக் கருத்திற்கொண்டு இந்த அரசு தனிமனித வருமானத்தையும் கூட்டுவதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும்.

அத்துடன் உணவில்லாமலும் இருந்து விடலாம் ஆனால் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது. குடிநீருக்கான கட்டணமும் 75 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவைகளெல்லாம் மரத்திலிருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போன்று நொந்து போயிருக்கும் எமது மக்களின் தோள்களிலே மேலும் மேலும் சுமைகளை ஏற்றுவதாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாது மண்ணெண்ணையின் விலை 253 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. மண்ணெண்ணையை நம்பி விவசாயம் மீன்பிடி தொழில் செய்வோர் மிகவும் வாழ்வாதாரம் இழந்த நிலையில் கஸ்டப்படுகிறார்கள். எனவே இந்த நாட்டிலே விவசாயம் மீன்பிடியைத் தொழிலாகச் செய்பவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு மண்ணெண்ணையின் விலையைக் குறைக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு மானியம் வழங்குவதற்கு முன்வர வேண்டும். ஏனெனில் பெற்றோல் டீசலை விட மண்ணெண்ணைய் என்பது இந்த நாட்டின் அடிமட்ட மக்களுக்கு தேவையான விடயமாக இருக்கின்றது.

யுத்தம் முடிந்து தற்போது பொருளாதார ரீதியில் கஸ்டப்படும் எமது தமிழ் மக்கள் குறிப்பாக கிழக்குத் தமிழ் மக்கள் தமிழ் பேசும் இனமெனக் கூறப்படும் இன்னுமொரு இனத்தினால் அரசியல் ரீதியில் அடக்க நினைக்கும் நிலைமைகள் காணப்படுகின்றது. இன்று கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயம் ஒரு பேசு பொருளாகக் காணப்படுகின்றது.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவானது 1989ம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாகத் தாபிக்கப்பட்டு பின்னர் 1993ம் ஆண்டு அமைச்சரவை அனுமதியுடன் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்டது. இருந்தபோதிலும் பல்வேறு அரசியற் தலையீடுகள் காரணமாக அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படாமல் மறுக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த முப்பது வருடத்திற்கு மேலாகப் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு முப்பது வருடங்களுக்கு மேலாகச் செயற்பட்டு வருகின்ற கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து தற்போது அகற்றப்பட்டு அதன் 29 கிராம சேவகர் பிரிவுகளும் கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றது. 2002ம் ஆண்டு உருவாக்கப்படட சாய்ந்தமருது பிரதேச செயலகம் 2006ம் ஆண்டு வர்த்தமானிபடுத்தப்பட்டு இன்று ஒரு முழுமையான பிரதேச செயலகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. முப்பது வருட காலமாக கல்முனை பிரதேசத்தில் இருந்து கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பிரிக்கப்பட்டிருந்தும் இன்னும் அது முழு அதிகாரம் பெறாமல் இருக்கும் போது 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சாய்தமருது பிரதேச செயலகம் முழு அதிகாரத்துடன் இயங்குவது எவ்வாறு சாத்தியம். அது நூறு வீதம் முஸ்லீம் பிரதேச செயலகமாக இயங்குவதாலா அவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது?

அதேபோல் ஓட்டமாவடி பிரதேச செயலகம் வெறுமனே ஏழு கிராம சேவகர் பிரிவுகளை மாத்திரம் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பிரதேச செயலகமாகச் செயற்படுகின்றது. ஆனால் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் ஒரு கணக்காளர் இல்லாமல் அந்த பிரதேச செயலகத்தின் செயலாளர் தன்னுடைய வாகனத்திற்கு டயர் மாற்ற வேண்டுமென்றாலும் இன்னுமொரு பிரதேச செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது. இவ்வாறு இனப்பாகுபாட்டுடன் செயற்பாடுகள் நடைபெறுவது இந்த நாட்டிற்கு உகந்ததல்ல என்று தெரிவித்தார்.