ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 ஜூலை 28 ஆம் திகதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகும்.
பாராளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடப்புப் பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டமையைக் காணமுடியும். இவ்வாறு பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரொன்றை முடிவுக்குக் கொண்டுவரும் சட்டரீதியான ஏற்பாடுகள் தொடர்பில் வரலாற்றுரீதியான மற்றும் பிரயோகரீதியான பின்னணி பற்றிக் கண்டறிவது முக்கியமானதாகும்.
கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் அதிகாரம் யாருக்குக் காணப்படுகின்றது?
அரசியலமைப்பின் 70(1) உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றத்தை கூடுமாறு அழைக்கும், கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் மற்றும் கலைக்கும் பூரண அதிகாரம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது.
புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் தினம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது?
அரசியலமைப்பின் 70(3) உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் பிரகடனத்திலேயே (வர்த்தமானி அறிவித்தல்) புதிய கூட்டத்தொடருக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்தத் திகதி கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் பிரகடனத் திகதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேற்படாத ஒரு தினமாக இருக்க வேண்டும்.
எனினும், பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவந்து மீண்டும் ஆரம்பிக்கும் திகதியை பிரகடனப்படுத்தியிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் குறித்த திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூடுமாறு அழைப்பதற்கு அரசிலமைப்பின் 70(3)(i) உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, மீண்டும் பிரகடனம் (வர்த்தமானி அறிவித்தல்) ஒன்றின் மூலம் அவ்வாறு பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு எதிர்பார்க்கும் தினத்தைப் பிரகடனப்படுத்தப்படுவதுடன், குறித்த பிரகடனத்தின் திகதியிலிருந்து மூன்று நாட்களுக்குப் பிந்திய ஒரு தினத்தில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாபதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவருவதனால் பாராளுமன்றத்தின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்படுகின்றனவா?
பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரும் போது, அதன் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்படுவதாக பலர் கருதுகின்றனர். எனினும் அது அவ்வாறு இடம்பெறுவதில்லை.
கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது, சபாநாயகர் தொடர்ந்தும் தனது பணிகளை மேற்கொள்வார். அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவர்களது உறுப்பினர் பதவிகள் அவ்வாறே காணப்படுகின்றது. எனினும், கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது அதுவரை பாராளுமன்றத்தில் காணப்பட்ட அனைத்து அலுவல்களும் இடைநிறுத்தப்படுவதுடன் குற்றப்பிரேரணை (Impeachment) தவிர்ந்த அதுவரை சபையில் இடம்பெற்றுவந்த அனைத்து செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
எனினும், குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பாக சட்ட மூலமொன்று, பிரேரணையொன்றோ அல்லது கேள்வியொன்றோ ஒரே கூட்டத்தொடரில் இரண்டாவது முறையாக முன்வைக்க முடியாது. ஆனால், கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் எதிர்வரும் கூட்டத்தொடருக்கு கொண்டுசெல்ல வாய்ப்பு உள்ளது.
“பாராளுமன்றத்தின் முன்னர் உரிய முறையில் கொணரப்பட்டுள்ளவையும் பாராளுமன்றத்தின் அமர்வு நிறுத்தப்பட்ட நேரத்தில் முடிவுசெய்யப்படாதிருந்தவையுமான எல்லாக் கருமங்களும், அடுத்த அமர்வின்போது, விட்ட நிலையிலிருந்து தொடர்ந்து கையாளப்படலாம்.” என அரசியலமைப்பின் 70(4) ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் இந்த ஏற்பாடுகளின் கீழ் பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவருவதன் மூலம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அலுவல்கள் இரத்துச் செய்யப்படுவதில்லை. இதன்போது, பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே எதிர்வரும் அலுவல்களை அவ்வாறே முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அரசாங்கத்தின் அலுவல்களை சபை முதல்வர் தீர்மானிப்பதுடன், தனியார் உறுப்பினர் சட்டமூலம் அல்லது பிரேரணை என்பவற்றை மீண்டும் புதிதாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது ஒழுங்குப் பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சபை அலுவல்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமானால் அவற்றை மீண்டும் பட்டியலிடுவது அவசியமாகும்.
பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது அனைத்துக் குழுக்களும் இரத்தாகின்றனவா?
பாராளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது பாராளுமன்ற குழுக்களுக்கு என்ன நடக்கின்றது என்பது அனைவருக்கும் எழும் கேள்வியாகும். இதில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 109, 111(2), 124(5), 125(1) என்பவற்றுக்கு அமைய முறையே பாராளுமன்ற விசேட குழுக்கள், துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், உயர் பதவிகள் பற்றிய குழு மற்றும் இணைப்புக் குழு தவிர்ந்த ஏனைய அனைத்துக் குழுக்களும் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கும் போது மீண்டும் நியமிக்கப்படுகின்றன. இங்கு நிலையியற் கட்டளை 125(1) க்கு அமைய இணைப்புக் குழுவுக்கு உறுப்பினர்கள் பதவியடிப்படையில் (சபாநாயகர், பிரதி சபாநாயகர் போன்ற பதவிகளின் அடிப்படையில்) நியமிக்கப்படுவதனால் அதில் மாற்றம் ஏற்படுவதில்லை.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 114 க்கு அமைய ஒவ்வோர் புதிய கூட்டத்தொடரின் போதும் தெரிவுக்குழு புதிதாக நியமிக்கப்படுகின்றது. இதில் சிறப்பு நோக்கங்களுக்கான கீழே குறிப்பிட்டுள்ள அனைத்துக் குழுக்களும் பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது இரத்தாகின்றன.
- அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
- சட்டவாக்க நிலையியற் குழு
- பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
- நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
- சபைக் குழு
- ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
- அரசாங்க கணக்குகள் பற்றிய குழு
- அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு
- அரசாங்க நிதி பற்றிய குழு
- பொது மனுக்கள் பற்றிய குழு
- பின்வரிசை குழு
பாராளுமன்றத்தில் புதிய கூட்டத்தொடரொன்று எவ்வாறு ஆரம்பிக்கப்படுகின்றது?
பாராளுமன்றத்தில் புதிய கூட்டத்தொடரொன்று எவ்வாறு ஆரம்பிக்கப்படுகின்றது?
பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் போது வைபவரீதியாக திறந்துவைத்தல் அத்தியாவசியமானதொன்றல்ல. எனினும் புதிய கூட்டத்தொடர் வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமானால், அது கட்டாயம் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறும்.
பாராளுமன்றத்தின் ஒவ்வோர் கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும் அரசாங்கத்தின் கொள்கைப்பிரகடனம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது. அதற்கமைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்கவினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் எதிர்வரும் ஆகஸ்ட் 03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
அரசியலமைப்பின் 33(அ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், அரசியலமைப்பின் 33(ஆ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தின் சடங்குமுறையான அமர்வுகளில் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகின்றது.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் என்றால் என்ன?
பாராளுமன்றத்தின் ஒவ்வோர் கூட்டத்தொடரினதும் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் காணப்படுகின்றது. இதன்போது ஜனாதிபதியினால் அவரது அரசங்கத்தின் எதிர்கால நோக்கு தொடர்பிலான விளக்கமான பகுப்பாய்வு கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக பாராளுமன்றத்துக்கும் மக்களுக்கும் முன்வைக்கப்படும்.
கடந்த காலத்தில் இது மகா தேசாதிபதியால் வழங்கப்படும் அக்கிராசன உரை என்று அறியப்பட்டது.
1978 முதல் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் கொள்கைப் பிரகடனம் இதுவரை விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டோ, வாக்கெடுப்புக்கு விடப்பட்டோ இல்லை.
இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒவ்வோர் பாராளுமன்றத்திலும் ஆரம்பிக்கப்பட்ட புதிய கூட்டத்தொடர்களின் எண்ணிக்கை
1947 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை சுமார் 50 தடவைகள் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பதிவுகள் குறிப்பிடுகின்றன. 1978 ஆம் ஆண்டு முதல் இதுவரை 25க்கும் மேற்பட்ட பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் இடம்பெற்றுள்ளன. அவை வருமாறு;
- 09.07 ஆம் திகதி ஆரம்பமான முதலாவது பாராளுமன்றம் 1988.12.20 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் ஏழு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
- 03.09 ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது பாராளுமன்றம் 1994.06.24 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் ஐந்து கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
- 08.25 ஆம் திகதி ஆரம்பமான மூன்றாவது பாராளுமன்றம் 2000.08.18 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் மூன்று கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
- 10.18 ஆம் திகதி ஆரம்பமான நான்காவது பாராளுமன்றம் 2001.10.10 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் மூன்று கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
- 12.19 ஆம் திகதி ஆரம்பமான ஐந்தாவது பாராளுமன்றம் 2004.02.09 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் இரண்டு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
- 04.22 ஆம் திகதி ஆரம்பமான ஆறாவது பாராளுமன்றம் 2010.02.09 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் நான்கு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
(அவசரகால ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்காக கலைக்கப்பட்ட பாராளுமன்றம் 2010.03.09 மற்றும் 2010.04.06 ஆம் திகதிகளில் மீளக் கூட்டப்பட்டது)
- 04.22 ஆம் திகதி ஆரம்பமான ஏழாவது பாராளுமன்றம் 2015.06.26 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் ஒரு கூட்டத்தொடரை மாத்திரம் கொண்டிருந்தது.
- 09.01 ஆம் திகதி ஆரம்பமான எட்டாவது பாராளுமன்றம் 2020.03.02 ஆம் திகதி அது கலைக்கப்படும் வரையில் நான்கு கூட்டத்தொடர்களைக் கொண்டிருந்தது.
- 08.20 ஆம் திகதி ஆரம்பமான ஒன்பதாவது பாராளுமன்றம் இற்றை வரை இரண்டு கூட்டத்தொடர்களை கொண்டுள்ளது.