தமிழக அரசின் நிவாரண பொதிகள் யாழில் விநியோக நடவடிக்கை ஆரம்பம்

தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் இன்றைய (30) தினம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்த நிவாரணப் பொதிகள் சம்பிரதாயபூர்வமாக பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் சம்பிரதாயபூர்வமாக நிவாரணப் பொதியை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், இந்திய துணை தூதரக அதிகாரிகள், பிரதேச செயலர்கள் கிராம சேவகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

எடின்பரோ மரதன் ஓட்டத்தை வெற்றிகரமாக ஓடிமுடித்தேன் -வைத்தியர் சத்தியமூர்த்தி

எடின்பரோ மரதன் ஓட்டத்தை வெற்றிகரமாக ஓடிமுடித்தேன்.ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் கல்விக்கான நிதி பங்களிப்பு செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள் என வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஓட்ட நிகழ்வு சமகாலத்தில் நடைபெற்றமை இரட்டிப்பு மகிழ்ச்சி.இலண்டன் கிளிநொச்சி மக்கள் அமைப்பு மிக சிறப்பாக ஒருங்கினைப்பை செய்தார்கள். என்னுடன் பல மைல்கள் பயணித்து நிகழ்வில் என்னை ஊக்கவித்தமை மிக்க மகிழ்ச்சி.

கிளிநொச்சியை சேர்ந்த உதயன் பல மரதன் ஓட்டங்களை முடித்தவர். இன்று அவருடன் சேர்ந்து எடின்பரோ மரதன் ஓடியமை மகிழ்ச்சியான விடயம்.உடல், உள, மற்றும் ஆத்மா ஒருங்கிணைந்த பயிற்சியில் மரதன் ஓட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

சுகதேகியாக ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பது தற்காலத்தில் கைக்கொள்ள வேண்டிய ஒரு விடயம்.குறிப்பாக பொருளாதார புயலில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இலவச மருத்துவ சேவை நலிவுற்றிருக்கும் இக் காலத்தில் ஒவ்வொருவரும் தங்களை பாதுகாக்க வேண்டியமை காலத்தின் தேவை என மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கச்சதீவு விவகாரம் – தமிழரசுக் கட்சியும் அதீத கவனம் செலுத்துவதாக மாவை தெரிவிப்பு

கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்னரே கச்சதீவு விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சதீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவெனக் கோரிக்கை விடுத்திருந்தார். எனவே, இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில்,“இது இரண்டு நாடுகளின் உடன்படிக்கை. இந்தநிலையில், கச்சதீவு எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்குச் சாதகமாக இருக்குமானால் எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்காக இந்திய அரசுடன் பேச வேண்டும்.

அதற்கு முன்னதாக கச்சதீவை இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கருத்து தொடர்பில் முதலில் எமது கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அறியவேண்டும்.

அவர்களின் கருத்துக்களை வைத்தே எங்கள் முடிவுகள் அமையும். அதற்கு முன்னதாக எழுந்தமானமாகக் கருத்துக்களைக் கூறமுடியாது.

அத்தோடு இலங்கை – இந்திய கடற்தொழிலாளர்களின் இழுவைப் படகு பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளது.

எனவே, அது தொடர்பில் இந்திய அரசுடன் பேசும்போது கச்சதீவு விடயம் பற்றியும் பேசவேண்டும். இதுவொரு இராஜதந்திர ரீதியான நடவடிக்கை” – என்றார்.

இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களில் இளைஞர்களை இணைக்க ரணில் யோசனை

பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழுக்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, அதில் இளைஞர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

நேற்று  விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் தன்னுரையில்,

இன்று எமது நாட்டின் பிரதான பிரச்னைகள், பொருளாதாரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. அதேபோன்று, அரசியல் துறையில் இரண்டு பிரதான பிரச்னைகள் காணப்படுகின்றன. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்துவது முதலாவது பிரச்னை.

அதற்கு தீர்வாக, கட்சித் தலைவர்கள் என்ற விதத்தில் நாம், 21வது திருத்தத்தைத் தயாரித்து வருகின்றோம். இரண்டாவது பிரச்னை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது. அதற்கான கால எல்லை மற்றும் நடைமுறைகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். இதற்கு மேலதிகமாக பாராளுமன்றம் தொடர்பில் பிரச்னை ஒன்று உள்ளது.

20வது திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றம் வலுவிழக்கச் செய்யப்பட்டு, அதிகளவிலான அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரம் தன்வசப்படுத்திக் கொண்டமையின் ஊடாக பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.

மேலும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில்  பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த நிறுவனங்கள் வலுவிழந்துள்ளன. அவற்றை வலுவடைய செய்ய வேண்டுமாயின், அது குறித்து அறிக்கையிட புறம்பாக குழுவொன்று தேவைப்படுகின்றது. அதனால், வங்கி மற்றும் நிதி சேவைகள் தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எமது நிலையியற் கட்டளை 111ன் கீழ், எமக்கு கண்காணிப்பு குழுக்களை நியமிக்க முடியும். கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்படவில்லை.

அதனால், 10 கண்காணிப்பு குழுக்களை நியமிக்குமாறு நான் யோசனையொன்றை முன்வைக்கின்றேன். இந்த கண்காணிப்பு குழுக்களுக்கு அரசாங்கத்தில் இருக்கின்ற விடயதானங்களை பகிர்ந்தளிக்க முடியும். அந்த கண்காணிப்பு குழுக்களின் ஊடாக அறிக்கைகளை பெற்றுக்கொள்ள முடியும். கொள்கைகள் தொடர்பிலும் நாடாளுமன்றத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும். இது தொடர்பில் நாடாளுமன்றம் செயற்பட வேண்டும்.

இந்த நிதி செயற்குழுக்களிலும், கண்காணிப்பு குழுக்களிலும் தலைவராக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவார்கள். அமைச்சர்கள் இல்லை. அமைச்சர்களுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்கான இயலுமை எமக்கு கிடைக்கும். இந்த இடத்தில் விசேட விடயமொன்று குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கின்றார்கள்.

பிரச்னைகளை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த 15 தெரிவுக்குழுக்களுக்கும் தலா 4 இளைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதில் ஒருவர் இளையோர் பாராளுமன்றத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். மற்ற மூவரும் போராட்டக் குழுக்கள் மற்றும் பிற ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்தவர்கள். இந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையை இளைஞர் அமைப்புகளே தீர்மானிக்க முடியும்.

அத்துடன், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று நம்புகிறோம். இப்பணியின் மூலம் இளைஞர்கள் தாங்களாகவே பிரச்னைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்க முடியும். அவர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட முடியும்” என ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஜப்பான் இணைந்து இலங்கைக்கு உதவ தீர்மானம்

பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது

டோக்கியோவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே இலங்கைக்கான உதவிகளை வழங்குவது குறித்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது இந்திய – பசுபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானின் அனுசரணையுடன் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இரண்டு முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கை அரசினால் இடைநிறுத்தப்பட்ட பின்னரும் ஜப்பான் இலங்கைக்கு உதவ முன்வந்திருக்கிறது.

மேலும் இந்தியா ஏற்கெவே இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது. மேலும், 1.5 பில்லியன் டொலர் உதவியை இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவும் ஜப்பானும் தற்போது இணைந்து இலங்கைக்கு உதவி வழங்க தீர்மானம் எடுத்துள்ளது.

Posted in Uncategorized

கச்சத்தீவு விவகாரம் – தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது இலங்கை மீனவர்கள் அதிருப்தி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை இன்று இலங்கை மக்கள் மத்தியில் பாரிய மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தற்போது இலங்கை மீனவ சமூகத்திற்கு மத்தியில் பாரிய மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நிவாரண உதவிகளை செய்வதை போல காண்பித்து, தமது உரிமையை பறித்தெடுக்க தமிழக முதல்வர் முயற்சிப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை – இந்திய மக்களின் தொப்புள் கொடி உறவை அறுக்கும் செயற்பாடாகவே தாம் இதனை பார்ப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அண்ணலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

நன்றி- பிபிசி

Posted in Uncategorized

“சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டமே அவசர தேவை”-பிரதமர் ரணில்

பொருளாதார மீட்சிக்காக சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டமே அவசர தேவை என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் அடுத்தகட்ட தீர்மானம் குறித்து எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது விசேட உரையாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து பல்வேறு தரப்பினருடன் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமக்கு உதவி புரிய நாடுகள் உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றவுடன் பெரும் நிதியுதவினை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் சர்வதேச நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன். ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருவார காலங்கள் உள்ளன.

சர்வதேச நாயண நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்து எமது கொள்கை திட்டங்களை பரிசீலனை செய்து அடுத்தக்கட்ட நகர்வினை முன்னெடுப்பார்கள். எரிபொருள் எரிவாயு, உரபிரச்னைக்கு தீர்வு காண உரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

‘கோ ஹோம் கோட்டா’ போராட்டத்திற்கு 50 நாள்: இன்று கொழும்பில் பேரணி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகின்றன.

இதனையொட்டி இன்றைய தினம் கொழும்பில் பேரணியை நடத்துவதற்கு அரச எதிர்ப்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கோட்டை பொலிஸார், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.

இன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளவர்கள், கொள்ளுபிட்டி சந்தி முதல் கோட்டை நீதிவான் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித சேதத்தையும் விளைவிக்க கூடாது என கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் திட்டமிட்டவாறு இன்று பிற்பகல் பேரணியை நடத்துவோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்படாது – ஞானசார தேரர் !

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான பரிந்துரைகளை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஜனாதிபதி செயலணியானது 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இந்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.

இதன்படி, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் எதிர்வரும் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவ பொருட்களின் சவால்கள்-இலங்கைக்கு WHO முழு ஒத்துழைப்பு

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் முழுமையான ஆதரவு வழங்கப்படுமென கலாநிதி. அலகா சிங், (Dr.Alaka Singh) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் உறுதியளித்துள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி கலாநிதி. அலகா சிங்கை நேற்று முன்தினம் (25)  சந்தித்து, இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள், குறிப்பாக மருந்துப் பொருட்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது, நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பல சவால்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுட்டிக் காட்டியதுடன், இந்த கடினமான தருணத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதியின் அலுவலகம் முன்னெடுத்துள்ள செயலூக்கமான நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்தார்.

இதன் போதே இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் முழுமையான ஆதரவு வழங்கப்படுமென கலாநிதி. அலகா சிங் தெரிவித்துள்ளார்.