”நட்பு நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கைக்கு தேவை”

இலங்கையில் புதிய பிரதமரும் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முன்னோக்கிச் செல்லும் பாதையில் தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜப்பானின் டோக்கியோவில் இன்று (26) நடைபெற்ற, ஆசியாவின் எதிர்காலம் (Nikkei) தொடர்பான 27ஆவது சர்வதேச மாநாட்டில் காணொளித் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.
ஜப்பானின் நிக்கேய் (Nikkei) செய்தித்தாள் 1995 முதல் ஆண்டுதோறும் மாநாட்டை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டின் கருப்பொருள் ‘பிளவுபட்ட உலகில் ஆசியாவின் பங்கு மீள்அர்த்தப்படுத்தல்’ என்பதாகும்.
இலங்கை ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடாகும். தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகளை அதே ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 நோய்த் தொற்றினால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தமை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து பணம் அனுப்புவதில் ஏற்பட்ட வீழ்ச்சி, கடுமையான நிதி நெருக்கடி மற்றும் இலங்கையின் அதிக கடன் சுமையுடன் இணைந்த ஏனைய நிகழ்வுகளினால் பணவீக்கம் ஏற்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பொருத்தமான வேலைத்திட்டத்திற்கான அணுகுமுறைக்கு இணங்க, எமது கடன் வழங்குனர்களுடன் கலந்தாலோசித்து, வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்கும் அபிப்பிராயத்துடன், இலங்கை ஏப்ரல் மாதத்தில் “கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்திவைத்தல்” தொடர்பான அறிவித்தலொன்றை விடுத்தது.
எவ்வாறாயினும், அத்தகைய தீர்வுகள் மூலம் செயற்படும்போது அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் விநியோகம் மற்றும் எரிபொருள் இறக்குமதி போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கைக்கு உடனடியாகத் தேவைப்படுவதாக ஜனாதிபதி  தெரிவித்தார்.
ஜப்பான் இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளியாகும். ஜப்பானில் இருந்து நிதியுதவி வழங்குவது தொடர்பாக நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் விரைவில் முடிவடையும் என நம்பப்படுகிறது. பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவளிக்கும் என்று ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு சாத்தியமான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து நட்பு நாடுகளிடமும் கேட்டுக்கொண்டார்.
இலங்கை எதிர்கொள்ளும் கடுமையான சிரமங்கள், கொவிட்-19 தொற்றுநோயின் நீண்டகால விளைவுகளின் முன்னறிவிப்பாகும். ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள மோதலால் இது தீவிரமடைந்துள்ளது. பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு இந்த இக்கட்டான காலங்களில் இவ்வாறான பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு உதவுவது அவசியமானது என ஜனாதிபதி அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான பரந்த சிக்கலை உலகம் சந்திக்கும். எதிர்கால உணவுப் பற்றாக்குறை மற்றும் அடுத்த சில மாதங்களில் உணவுப் பொருட்களின் விலைகளில் உயர்வு பல நாடுகளில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தும்.
எனவே, இந்த முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் உள்நாட்டு விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் வரவிருக்கும் நெருக்கடியை எதிர்கொள்வதில் நமது நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவது அவசியம். இந்த பிரச்சினைகளை வெற்றிகொள்வதை உறுதி செய்வதற்கு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி  இங்கு வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டில் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கல்விமான்கள் கலந்துகொண்டு பிராந்திய பிரச்சினைகள் மற்றும் உலகில் ஆசியாவின் பங்கு பற்றிய இலவச ஆலோசனைகளை மாநாட்டில் முன்வைத்தார்கள்.

இலங்கைக்கு அமெரிக்கா உதவும்-பிரதமர் ரணிலிடம் சமந்தா பவர் தெரிவிப்பு

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பின் நிர்வாகி (US Agency for International Development, USAID) சமந்தா பவர் (Samantha Power) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

தொலைபேசிமூலம் இடம்பெற்ற இந்த உரையாடலின்போது, இந்தமாதம் இடம்பெற்ற அரசியல் அமைதியின்மையின்போது கொல்லப்பட்ட காயமடைந்த இலங்கையர்கள் குறித்து சமந்தா பவர் அனுதாபத்தை வெளியிட்டார் என அந் முகவரமைப்பின் பேச்சாளர் ரெபேக்கா சலிவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிற்கான ஆதரவை வெளியிட்ட அவர், இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தமது முகவரமைப்பு உதவும் என தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களை விரைவாக முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் பொருளாதார அதிர்ச்சிகளை அனுபவிக்கும் அவர்களின் அவசரதேவைகளை நிவர்த்திசெய்வதற்கு இலங்கையில் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பு தனது திட்டங்களை முன்னிறுத்துகின்றது என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் தூண்டுதலற்ற உக்ரைன் மீதான யுத்தம் காரணமாக அதிகரிக்கும் எண்ணெய் உணவுப்பொருட்களின் விலைகளும் இந்த நிலையை தீவிரப்படுத்தியுள்ளன என்றும் சர்வதேச நாணயநிதியம் போன்ற இலங்கைக்கு உதவும் சமூகத்துடன் அமெரிக்கா நெருக்கமாக இணைந்து பணியாற்றும் எனவும் சமந்தா பவர் பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழ் தரப்பின் பேரம் அதிகமாகவுள்ள நேரம்; பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா? | அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

தமிழ் தரப்பின் பேரம்: பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா?

நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் முதல் முறையாக கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றிருக்கின்றது. இவை தொடர்பாக அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துக்களின் முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகர்களுக்கு தருகின்றோம்.

கேள்வி:
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நேற்று அமைதியான முறையில் இடம்பெற்றது. வழமையான கெடுபிடிகள் இல்லாமல் இம்முறை நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு காரணம் என்ன?

பதில்:
பொதுவாக ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் ஜனநாயக வெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். ஏனெனில் அவர் மேற்கு நாடுகளின் ஜனநாயக – லிபரல் பண்புகளினூடாக வந்தவர். தவிர அவர் மேற்கு நாடுகளுக்கு பதில் கூறவேண்டியவராகவும் காணப்படுகின்றார். அந்த அகையில் அவர் எப்போதும் தனது ஆட்சிக்காலத்தில் நினைவுகூருதலுக்கான வெளியை அனேகமாக அனுமதித்தே வந்திருக்கின்றார். தவிர – கோட்டா கோ கமவில் போராடிக்கொண்டிருக்கும் இளைய தலைமுறையை போராடலாம் என அனுமதித்ததன் மூலம் – இந்த நினைவுகூரலையும் அனுமதிக்க வேண்டிய ஒரு தேவை இருந்தது. ஆனால், இவ்வாறான நினைவுகூரல்களை ரணில் விக்கிரமசிங்க தடுப்பதில்லை.

கேள்வி:
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச இருக்கின்ற போதிலும் கூட அவருக்கு மேலாக அதிகாரத்தைச் செலுத்தும் நிலையில் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார் என இதனைக் கருதமுடியுமா?

பதில்:
அப்டிக் கருதமுடியாது. ஏனெனில் பிரதி சபாநாயகர் தெரிவில் ரணிலுக்கு இருக்கும் வரையறைகளை மொட்டுக்கட்சி உணர்த்தியிருக்கின்றது. இது கோட்டாபயவும் சேர்ந்து எடுத்த முடிவு. ரணிலைத் தெரிவு செய்தது கோட்டாபயதான். ரணிலைத் தெரிவு செய்ததன் மூலம் கோட்டாபய தன்னைத் தற்காத்துக் கொண்டு விட்டார். குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டு விட்டார். குடும்பத்தினர் அச்சமின்றி நாடாளுமன்றத்துக்கு வரக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றார்.

இந்த நிலையில் நாட்டு மக்களினதும், உலகத்தினதும் குவிமையமாக ரணில் இருக்கின்றார். கோட்டா கோ கமவில் கோட்டாபய வீட்டுக்குச் செல்லவேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றார்கள். ஆனால் அவர் இன்னும் போகவில்லை. இது அவருக்கு ஒரு வெற்றி. எதிர்காலத்தில் அவர் சிலசமயம் போகவேண்டிவரலாம். தான் போகாமல் ரணிலை அவர் தெரிவு செய்திருக்கின்றார். இதில் இருவரும் சேர்ந்துதான் இயங்க முடியும். ஏனெனில் எந்தெந்த விடயங்களில் உலக சமூகத்தின் கவனத்தைக் கவரலாம். எந்தெந்த விசயங்களில் மேற்கு நாடுகளுக்கு – இந்தியாவுக்கு சார்பாக நடந்துகொள்ளலாம். எந்தெந்த விடயங்களில் உள்நாட்டில் இருக்கக்கூடிய சமூகங்களின் அதிருப்தியை சம்பாதிக்காமல் செயற்படலாம் போன்ற விடயங்களில் கடந்த இரண்டு வருடத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் கோட்டாபய செயற்படலாம்.

கேள்வி:
கொழும்பிலும், கோட்டா கோ கம அரங்கிலும் முதல் முறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது. மூவின மக்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள். சிங்கள மக்களும் தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள இது எந்த வகையிலாவது உதவுமா?

பதில்:
அது ஏதோ ஒருவகையில் உதவும்தான். குறிப்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை அங்கே தயாரித்து பகிர்ந்தமை ஒரு நல்ல விசயம். இறுதிக்கட்டப்போரில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை அவர்கள் உணர்கின்றார்கள். பகிர்ந்துகொள்ள முற்படுகின்றார்கள் என்பதனை அது ஒரு குறியீடாகக் காட்டுகின்றது. அந்தவகையில் இந்த கஞ்சி அங்கு சமைத்து பரிமாறப்பட்டமையை நாம் வரவேற்க வேண்டும். அது நல்ல மாற்றம். இது முதலாவது.

இரண்டாவது, நினைவுகூர்தல். நினைவுகூர்தல் குறித்து அவர்கள் முகநூலில் போட்ட பதிவுகள் மற்றும் அது குறித்து வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் – மே 18 இல் கொல்லப்பட்ட எல்லோருக்குமான நினைவுகூர்தல் என்ற தொனி வருகின்றது. அவர்கள் அங்கு பேசும்போது தமிழ் மக்கள் என்று கூறுகின்றார்கள். ஆனால், இனப்படுகொலையை நினைவுகூர்தல் என்று சொல்லப்படவில்லை. அவர்கள் அங்கு காட்சிப்படுத்திய பனரில் மே 18 இல் கொல்லபட்டவர்கள் என்ற வாசகம்தான் உள்ளது. மே 18 இல் கொல்லப்பட்டவர்கள் என்று பார்த்தால் தமிழ் மக்கள், போராளிகள் மற்றது சிங்கள சிப்பாய்கள். எல்லோரையும் பொதுவாக நினைவுகூரும் ஒரு வாசகமாக அது காணப்படுகின்றது.

இதில் தமிழ் மக்களுக்கு ஒரு சிக்கல் இருக்கின்றது. தமிழ் மக்கள் இதனை ஒரு இனப்படுகொலை நாளாக நினைவு கூருகின்றார்கள். இனப்படுகொலை நாளென்பது இனப்படுகொலை புரிந்தவர்களுக்கு எதிராக நீதியைக்கோரும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்படமுடியாத ஒரு பகுதி. இதனை சிங்கள மக்கள் இனப்படுகொலையாகப் பார்க்கின்றார்களா? போர்க்குற்றமாகப் பார்க்கின்றார்களா? அல்லது யுத்த வெற்றியாகப் பார்க்கின்றார்களா என்பது முக்கியமான கேள்வி. சிங்கள மக்களும், சிங்கள அரசாங்கமும் கடந்த 12 வருடங்களாக இதனை ஒரு யுத்த வெற்றியாத்தான் கொண்டாடி வந்துள்ளார்கள். அப்படியான நிலையில் இது ஒரு நினைவுகூரலாக அனுஸ்டிக்கப்பட்டமை ஒரு பெரிய மாற்றம்.

வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்திய சிங்கள மக்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவது முக்கிய மாற்றம்தான். ஆனால், இனப்படுகொலை புரிந்தவர்களும், இனப்படுகொலைக்கு உள்ளானவர்களும் ஒன்றாக இருந்து நினைவுகூர முடியுமா என்ற கேள்வி உள்ளது. இனப்படுகொலைக்கு உள்ளானவர்களுக்கு நீதி கிடைக்கும் ஒரு நிலையில்தான் அது சாத்தியம். இல்லையெனில் – அது வெறும் சடங்காக மட்டும்தான் இருக்கும். ஆனால், இதனை ஒரு ஆரம்பமாகக் கருதலாம்.

கேள்வி:
இந்த நிலைமைகளை கையாள்வது தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் உபாயங்கள் எவ்வாறுள்ளது?

பதில்:
தென்னிலங்கையில் உருவாகியுள்ள குழப்பங்களைக் கையாள்வது தொடர்பில் தமிழ்க் கட்சிகளிடையே தெளிவானதொரு மூலோபாயம் இல்லை. குறிப்பாக 45 நாட்களாக இந்தப் போராட்டம் தொடர்கின்ற போதிலும், பொருத்தமான அணகுமுறை ஒன்று தமிழ்க் கட்சிகளிடம் இல்லை. முதலாவது இதனை ஒரு முக்கியமான விடயமாக அவர்கள் கருதவில்லை. கருதினாலும், அதனை அணுகவேண்டும் என்பதையிட்டோ எவ்வாறு அணுகலாம் என்பதையிட்டோ அவர்களிடம் கருத்துக்கள் எதுவும் இல்லை.

எம்மை நாம் ஒரு தேசமாகக் கருதி அதற்கான ஒரு வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் பார்ப்போமாக இருந்தால், நான்கு பரப்புக்களை நாம் அடையாளம் காணலாம். முதலாவது – நாடாளுமன்றம். இரண்டாவது – கோட்டா கோ கம போன்றவற்றில் போராடும் ஒரு புதிய தலைமுறை. மூன்றாவது தரப்பு – மகாசங்கம். அது ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது. நான்காவது தரப்பு – இந்த அரசாங்கத்தை பிணை எடுக்க முற்படும் வெளித்தரப்புக்கள். இந்த நான்கு தரப்புக்களையும் தமிழ்த் தரப்புக்கள் தனித்தனியாக அணுகவேண்டும்.

@24Tamil News

இலங்கையை பாதுகாக்க முற்படும் வெளித்தரப்புக்களான சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்றவற்றுடன் தமிழ்த் தரப்புக்கள் பேச வேண்டும். உதவியையும் தமிழ் மக்களுக்கான நீதியையும் பிரிக்க முடியாதவாறு பிணையுங்கள் எனக் கேட்கவேண்டும். அரசாங்கத்துக்கு உதவி செய்வதாயின் சில நிபந்தனைகளை முன்வைக்குமாறு வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் தீர்வுக்கான அடித்தளத்தை நாம் பலப்படுத்தலாம். இந்த நாடுகளின் மத்தியஸ்த்தத்துடன் ஒரு பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் தணிந்த பின்னர் அரசியல் தீர்வுக்குச் செல்லும்போது அரசாங்கம் பின்வாங்காமல் இருப்பதை இந்த நாடுகள் உத்தரவாதப்படுத்த வேண்டும். வரலாற்றைப் பார்த்தால் சிங்களத் தரப்பு பலவீனமாக இருக்கும் போது பேச்சுவார்த்தைக்கு வரும். பின்னர் பின்வாங்கிவிடும்.

இதனைவிட கோட்டா கோ கமவில் போராடுபவர்களுடன் நாம் உரையாட வேண்டும். ஏனென்றால் அவர்கள் ஒரு புதிய தலைமுறை. இந்த தலைமுறையினரிடம் ஒரு மாற்றம் வந்திருக்கின்றது. இந்த மாற்றத்தை நாம் முழு சிங்கள தலைமுறை யினருக்குமான மாற்றமாகக் கொண்டுவர வேண்டும். சிங்கள மக்களுடைய கூட்டு உளவியல் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக வேண்டும். அவ்வாறு வந்தால்தான் சமஸ்டி போன்ற ஒரு தீர்வுக்கு அவர்கள் வருவார்கள். இல்லையென்றால் சமஸ்டி என்றால் அதனை ஒரு தனிநாடாகப் பார்க்கும் நிலையில்தான் அவர்கள் இருப்பார்கள். இதற்காக போராடிக்கொண்டிருக்கும் அந்த இளைஞர்களுடன் நாம் உரையாட வேண்டும்.

பாராளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும். அதனைவிட இங்கு தெரிவித்த மூன்று தரப்புக்களுடனும் அவர்கள் உரையாட வேண்டும். தமிழ் மக்களுடைய பேரம் அதிகமாகவுள்ள நேரம் இது. அதனால், தமிழ்க் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

IMF கடன் மறுசீரமைப்பின் கீழ் சுமார் 6 இலட்சம் அரச ஊழியர்கள் வேலை இழக்கலாம்

IMF கடன் மறுசீரமைப்பின் கீழ் சுமார் 6 இலட்சம் அரச ஊழியர்கள் வேலை இழக்கலாம். முடிவில் நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று இல்லாமல் போகும்..!

பெரும்பாலும் எல்லா பெட்ரோலிய பொருட்களின் விலைகளும் சுமார் 30% வீதத்தால் இரவில் அதிகரிக்கப்பட்டிருக்குறது.

வாழ்ந்தால் வாழுங்கள் இல்லையேல் செத்து மடியுங்கள் என்பது போலதான் இருக்குறது இந்த அதிகரிப்பு. இந்த விலை அதிகரிப்பின் தொடர்ச்சியாக மற்ற எல்லா பொருட்களும் சேவைகளும் மேலும் விலை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மின்சார கட்டணம் 100 வீதம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இந்த விலையேற்றங்கள் மொத்த சனத்தொகையின் சுமார் 70-80 வீதமான மக்களை நேரடியாக பாதிக்கும் அவர்களால் வயிற்றுப்பசி, தொழிலுக்கு சென்றுவரும் செலவு என்பவற்றை தவிர வேறு எதனையும் சிந்திக்க முடியாத நிலைக்கு தள்ளிவிடும்.

உண்மை என்னவெனில், இந்த விலையேற்றங்கள் எதனையும் கட்டுப்படுத்தும் நிலையில் அரசாங்கம் இல்லை. IMF உடனான பேச்சுவார்த்தைகள், அதிகாரிகள் மட்டத்தை தாண்டவில்லை. இந்த பேச்சுவார்த்தைகள் ஒரு நம்பிக்கை தரும் அளவுக்கு வர 6-8 மாதங்கள் எடுக்கலாம். இந்த கால பகுதியில் அரசாங்கம் எந்தவித விலை கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்க முடியாது, அது பொதுவாக IMF உடன் ஒரு பேச்சுவார்த்தையை தொடங்க முன் இருக்கும் ஆரம்ப நிபந்தனையாகும், அதனைத்தான் அரசாங்கம் இப்போது செயல்படுத்துகிறது.

IMF அனுசரணையில் கடன் மீளமைப்பு பேச்சுக்களை தொடங்க சட்ட உதவிக்காக Clifford Chance என்ற நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் தெரிவுசெய்துள்ளது. நிதித்துறை ஆலோசனை உதவிகளை வழங்க பிரெஞ்சு நிறுவனமான Lazard நியமிக்கப்பட்டுள்ளது.

பேச்சுக்களை தொடங்க முன் நிபந்தனையாக எரிபொருட்களுக்கான எல்லா சலுகலைகளையும் நீக்குமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்படும் என்று இது தொடர்பாக ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்க்கு மேலதிகமாக அரச ஊழியர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்கும் நிலை ஏற்படலாம்.

அரச செலவீனத்தை கடுமையாக குறைக்காமல் எந்தவொரு நீடித்து நிலைக்கும் கடன் மீளமைப்பும் இலங்கையில் சாத்தியமில்லை என்று முன்னதாக IMF தெரிவித்து இருந்தது. எரிபொருள் சேமிப்பை காரணம் காட்டி அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் வேலைக்கு அழைத்தல் என்பது ஒரு பாரிய வேலைநீக்க திட்டத்தின் முதல் கட்டம் என்பது தெளிவாக தெரிகிறது.

கல்வி துறை , சுகாதார சிற்றூழியர்கள் மட்டும் இன்றி – குறிப்பாக மின்சார சபை, பெட்ரோலிய கூட்டுத்தாபனம் போன்ற அரச நிறுவனங்களில் பாரிய வேலை நீக்கங்கள் காத்திருக்கியன்றன.

2017 ஆம் ஆண்டு சுமார் 1.49 மில்லியனாக இருந்த அரச ஊழியர்கள் 2021 இல் 2 மில்லியனயாக அதிகதித்தது -இதில் பெரும் எண்ணிக்கை அரசியல் காரணங்களுக்காக வழங்கப்பட்ட நியமனங்கள்.

@24Tamil News

இலங்கையின் ஏற்படும் சமூக கொந்தளிப்பு IMF உடனான பேச்சுக்களை தாமதப்படுத்தலாம் – பாதுகாப்பு செலவீனங்களை குறைத்து-ராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்குமாறு கோரப்பட்டால் மொத்த பேச்சுவார்த்தையும் தரை மட்டம் ஆகும் ம்வாய்ப்பு கூட இருக்குறது. -ராணுவ செலவீனத்தில் கைவைக்க கோத்தபாய விரும்பப்போவதில்லை-அதேநேரம் யுத்தம் இல்லாத ஒரு வாங்கறோத்து நாடு 3-4 லட்சம் ராணுவத்துக்கு கொழுத்த சம்பளத்தை வழங்க IMF கடன் கொடுக்கப்போவதும் இல்லை.

ஆனால் ஒரு நாடு கடனில் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து -சுவரில் முதுகு வரை அழுத்தப்படும் ஒரு நிலைக்கு வந்ததும் ( “Governments are often willing to do the things that are required when their backs are completely against the wall.”) அரசாங்கங்கள் பொதுவாக கடினமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும்” என்று இப்படியான கடன் மீளமைப்புக்கள் தொடர்பில் ஆராயும் Gramercy’s என்ற அமைப்பின் ஆராய்ச்சியாளர் Petar Atanasov முன்னதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்து இருந்தார்.

இந்திய கடனுதவி முடிவுக்கு வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு அடுத்து வரும் மாதங்களை கொண்டு நடத்த கடைசியாக ஒரு வாசல் மட்டுமே மீதமுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி -உலகவங்கி ஆகிய அமைப்புக்கள் ஏற்கனவே இலங்கையில் அனுமதித்த அபிவிருத்தி திட்டங்களுக்காக வழங்கப்பட்ட சுமார் 1100 மில்லியன் டொலர் நிதி இலங்கையின் கைவசம் இருக்குறது.

இந்த நிதி சட்ட ரீதியில் குறிப்பிட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு அல்லாமல் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது, ஆனால் இந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு சில கொள்கை ரீதியிலான தளர்வுகளை மேற்கொள்ள இந்த இரண்டு வங்கிகளும் உடன்பாடு தெரிவிக்கலாம் என்று நம்பப்படுகிறது . ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது ஆனாலும் இந்த பணத்தை எரிபொருள் இறக்குமதிக்கு பயன்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ள நிலையில், மருந்து மற்றும் உணவுக்ககாக அது பயன்படலாம்.

மிகவும் சிக்கல் நிறைந்த ஒரு கடன் மீளமைப்பு பேச்சுக்களுக்கு பின்னர் IMF ன் நேரடி நிதி உதவி கிடைக்க நீண்ட காலம் எடுக்கலாம். சீனா ஏற்கனவே தனது கடனை IMF திட்டத்தின் கீழ் மீளமைப்பதை கடுமையாக எதிர்க்கும் நிலையில் இலங்கையின் கடன் மறு சீரமைப்பு என்பது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை. இலங்கையை விட சிக்கல் குறைந்த ஒரு கடன் மறுசீரமைப்பை அன்மையில் ஆபிரிக்க நாடான கம்பியா மேற்கொண்டது – கம்பியா ஒரு ஒப்பந்தம் வரை செல்ல 2 ஆண்டுகள் எடுத்தன.

இந்த பேச்சுவார்த்தைகள் முடியும் போது உணவுக்கு வழியில்லாத கடுமையான ஏழைகள் என்று ஒரு பகுதியும், அரசியலோடும் பெரும் முதலாளித்துவ வர்த்தகத்தோடும் தொடர்பு பட்ட ஒரு பணக்கார சமூகமுமாக, இலங்கை தெளிவான இரண்டு கோடுகளால் பிரிக்கப்பட்டிருக்கும் -நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று இருக்காது- பொதுவாகவே இப்படியான எல்லையற்ற ஊழல் -கடன் மற்றும் மூலதன சுரண்டல்களின் முடிவு அப்படிதான் அமையும் என்பதை வரலாறு திரும்ப திரும்ப சொல்கிறது.

நன்றி-உண்மை உரைகல்

Posted in Uncategorized

இலங்கை ரூபாயில் கடனுதவி வழங்க இணக்கம் தெரிவித்த இந்தியா

இலங்கைக்கு மருந்து கொள்வனவிற்காக வழங்கப்பட்ட கடனுதவியை இலங்கை ரூபாயில் செலுத்த இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை அடுத்து, இந்த கடனுதவியை இலங்கை ரூபாவில் செலுத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கான குறுங்கால மற்றும் மத்திய கால தீர்வுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (மே 25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்கு காணப்படும் டொலர் தட்டுப்பாடு காரணமாக, அந்த தொகையை இலங்கை ரூபாவில் செலுத்த இந்தியாவுடனான கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்ப்பு

கடந்த நாட்களில், நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், இதுவரை எவரும் தீர்க்கமான ஒரு முடிவை அறிவிக்காமையால் பதவி விவகாரம் நீண்ட இழுபறியில் இருந்து வந்தது.

இந்நிலையில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.இன்று புதன்கிழமை காலை கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவருகின்றது.இதேவேளை எரிபொருள் பறக்குறையே இதற்கு காரணம் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை

Posted in Uncategorized

அரச நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊழியர்களை பணிக்கு அழைக்க சுற்றுநிருபம்!

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் அரச நிறுவனங்களில் செலவுகளைக் குறைப்பதற்காக மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை மாத்திரம் பணிகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 4 முக்கிய விடயங்களின் கீழ் ஊழியர்களை அழைப்பதை குறைக்குமாறு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

”இலங்கைக்கு உதவ முடியாது”: கைவிரிக்கும் உலக வங்கி!

முறையான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க எவ்வித திட்டமும் இல்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான உலக வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான தெளிவான கொள்கை கட்டமைப்பை இலங்கை வகுக்க வேண்டும் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சில நிதித் திட்டங்களை மதிப்பாய்வு செய்துள்ளதாகவும், இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கும், ஏழைகள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு புதிய கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உலக வங்கி தயாராவதாக, அண்மைக் காலமாக பல ஊடக அறிக்கைகள் தவறான செய்திகளை வௌியிட்டிருந்ததாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி : செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்நாட்டு உறவுகள் இலங்கை மக்களுக்கு மிக உற்சாகமான முறையில் தங்களுடைய உறவுகள் பட்டினி கிடக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைத்திருந்தார்கள். இந்த செயல்பாட்டுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் தமிழ்நாட்டின் சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (23) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி : செல்வம் அடைக்கலநாதன்

“கனேடிய நாட்டின் நாடாளுமன்றத்தில் எங்களுடைய மே 18 நாளை இனப்படுகொலை நாளாக அந்த வாரத்தை அனுஷ்டிப்பதற்கு கனேடிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக பாடுபட்ட ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு நன்றி. அவர் இந்த விடயத்தில் பாரிய முனைப்பு காட்டியது இட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி : செல்வம் அடைக்கலநாதன்

இந்த செயல்பாடானது எங்களுடைய நாட்டிலும் பிரதேச சபை நகர சபை போன்ற இடங்களில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை பிரதான கோரிக்கையாக நான் முன்வைக்கிறேன்.

அதேபோல் கனேடிய நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் முதலில் நன்றியை தெரிவிக்கிறேன்.
அத்துடன் நேற்றைய தினம் தமிழ்நாட்டு உறவுகள் இலங்கை மக்களுக்கு மிக உற்சாகமான முறையில் தங்களுடைய உறவுகள் பட்டினி கிடக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு அரிசி, பால் மா, மருந்து பொருட்கள் அனுப்பி வைத்திருந்தார்கள்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி : செல்வம் அடைக்கலநாதன்

இந்த செயல்பாட்டுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் தமிழ்நாட்டின் சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தமிழ்நாட்டில் ஒரு சிறுமி தனக்கு சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை இலங்கை மக்களுக்காக வழங்கியிருந்தார். அதேபோல் தேநீர் கடை நடத்தும் ஒரு நபர் தான் வழங்கும் தேநீ ரை கொடுத்து தேனீரை பெற்றுக் கொள்பவர் தங்களால் முடிந்த அளவு இலங்கை மக்களுக்கு வழங்கும் பணத்தினை இலங்கை மக்களுக்கு அனுப்ப உள்ளார்.
அதேபோல் அன்றாடம் யாசகம் பெறும் ஒரு முதியவர் கூட தன்னுடைய பணத்தை எங்களுடைய மக்களுக்கு வழங்குவதற்கு முன் வந்திருந்தார். இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆன தொப்புள் கொடி உறவு என்பது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி : செல்வம் அடைக்கலநாதன்

அதைத்தான் தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே தமிழ்நாட்டு மக்களும் இலங்கை தமிழ் மக்களும் ஏற்படும் சிறுசிறு முரண்பாடுகளை பெரிதாக்காமல் எங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஒரு வேண்டுகோளாக இருக்கின்றது.

அதேபோல் அகதி முகாம்களில் இருக்கும் எங்களுடைய மக்களை இன்றும் தமிழ்நாட்டு மக்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அந்த செயற்பாடுகளையும் எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது. அந்த வகையில் தமிழ் நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் அனைத்து தமிழக மக்களுக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பாகவும் எனது கட்சி சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி : செல்வம் அடைக்கலநாதன்

மேலும் எங்களுடைய வன்னி மாவட்டத்தில் குறிப்பாக கடல் தொழிலாளர்கள் விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருள் பிரச்சனை பாரிய பிரச்சினையாக இருக்கிறது. மண்ணெண்ணெய் இல்லாத சூழலில் அவர்களுடைய தொழில் பாதிக்கப்படுகிறது. அவற்றை சீர் செய்யுமாறு ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறோம். முதன்மை அடிப்படையில் எங்களுடைய விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் மண்ணெண்ணெய் டீசல் வழங்க வேண்டும் என்று பேசியிருந்தோம்.

இப்போது இருக்கும் அமைச்சர் அவர்கள் விரைவாக சீர் செய்வதாக கூறிய போதும் அவை சரியான முறையில் சீர் செய்யப்பட வில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.
இன்றைக்கும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்துக் கொண்டு இருப்பதை காண முடிகிறது. அந்த வகையில் எங்களுடைய மீனவர்கள் விவசாயிகளின் உழைப்பு வருமானம் பாதிக்கப்படும் ஒரு செயல்பாடாக இவை இருக்கின்றது .

தமிழ்நாட்டு முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி : செல்வம் அடைக்கலநாதன்

ஆகவே அரசாங்கம் பெட்ரோல் டீசலுக்கு காட்டுகின்ற முனைப்பை போலவே மண்ணெண்ணைக்கும் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றோம்.

அரசாங்கம் சொல்கிறது கேஸ், பெட்ரோல், டீசல் ,இனிமேல் தாராளமாக கிடைக்கும் என்று.

ஆனால் இப் பொழுதும் மக்கள் இரவிரவாக வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி இந்த மக்களுடைய பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை கேட்டு நிற்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.