ஸ்திரமான இலங்கையை கட்டியெழுப்ப நிலையான சமாதானம் உறுதி செய்யப்படல் வேண்டும் – பிரித்தானிய இந்து – பசுபிக் பிராந்திய விவகார அமைச்சர் மேரி ட்ரெவெல்யான்

நிலையானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான சமாதானத்தை உறுதிசெய்வதன் மூலமே ஸ்திரமான இலங்கையைக் கட்டியெழுப்பமுடியும் என்று சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான், மோதலுக்கு பின்னரான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சமூகங்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு பிரித்தானியா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் 23 ஆவது அமைச்சர் மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வருகைதந்த பிரித்தானியாவின் இந்து – பசுபிக் பிராந்திய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான், இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு, எதிர்கால ஒத்துழைப்புசார் திட்டங்கள், இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ‘பைனான்ஸியல் டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கியிருக்கும் நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்நேர்காணலில் அவர் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

கேள்வி – இலங்கைக்கான உங்களது விஜயத்தின் மூலம் எதனை அடைவதற்கு எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் – பிரித்தானியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் ஆரம்பமாகி 75 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் இவ்வேளையில் இந்து – பசுபிக் பிராந்திய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் முதன்முறையாக இலங்கைக்கு வருகைதருவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இதன்போது காலநிலை மாற்றம் தொடக்கம் கடற்பிராந்தியப் பாதுகாப்பு வரை பிராந்திய ரீதியில் முக்கியத்துவம் பெறும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாடினோம்.

குறிப்பாக கடற்பாதுகாப்பை முன்னிறுத்திய கூட்டு நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு உள்ளடங்கலாக இந்து சமுத்திரப்பிராந்தியம் தொடர்பில் பிரித்தானியா கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பின் மாநாட்டில் நான் கலந்துகொண்டேன். இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்புக்கு இலங்கை தலைமைதாங்கும் இவ்வேளையில், நாம் ஒன்றிணைந்து இருதரப்பினருக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய புதிய வாய்ப்புக்களை அடையாளங்காணவும், இருதரப்பு வர்த்தகத்தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும் என நம்புகின்றேன். இதில் இலங்கையின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய பிரித்தானியாவின் உதவிகளும் அடங்கும்.

கேள்வி – இலங்கையுடனான ஒத்துழைப்பில் பிரித்தானியாவின் முன்னுரிமைக்குரிய விடயங்கள் என்ன?

பதில் – இருநாடுகளினதும் கூட்டிணைந்த ஒத்துழைப்பில் காலநிலைசார் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்திய செயற்பாடுகள் என்பன மிகப்பிரதானமானவையாகும். அதேவேளை மோதலின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு ஆகிய விவகாரங்களிலும் நாம் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றோம்.

அதன்படி இருநாடுகளுக்கும் இடையிலான நிலைபேறான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் இந்து சமுத்திர கரையோர நாடுகள் அமைப்பு போன்ற பிராந்தியக் கட்டமைப்புக்களின் ஊடாக இலங்கையுடனும் ஏனைய முக்கிய நாடுகளுடனும் எமது தொடர்புகளை விரிவுபடுத்திவருகின்றோம்.

கேள்வி – இலங்கையில் நிலையான சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தானியாவினால் எவ்வழிகளில் உதவமுடியும்?

பதில் – கடந்தகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதுடன் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற, துடிப்பான பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கே நாம் உதவ விரும்புகின்றோம்.

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் ஊடாக 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான மனிதாபிமான உதவிகள் பிரித்தானியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டன. அவ்வுதவிகள் மூலம் பொருளாதார நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட சுமார் 70,000 மக்கள் பயனடைந்தனர். அதேபோன்று மோதலுக்கு பின்னரான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சமூகங்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான உதவிகளை நாம் தொடர்ந்து வழங்குவோம்.

நிலையானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான சமாதானத்தை உறுதிசெய்வதன் மூலமே ஸ்திரமான இலங்கையைக் கட்டியெழுப்பமுடியும். அதன்மூலம் இலங்கையால் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்க்கவும், பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ளவும் முடியும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசியலாளரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கருத்து கூறியுள்ளார். காமராஜரின் ஸ்தாபனக் காங்கிரஸ், திமுக, மதிமுக ஆகிய கட்சிகளிலும் முக்கிய பங்கு வகித்த இவர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1983-ம் ஆண்டு ஜூலை கலவரத்தை நினைவுகூரும் ‘கறுப்பு ஜூலை’ தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:

  • இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் உருவான ஈழத் தமிழர் பிரச்சினை இன்னும் முடியாமல் நீள்கிறதே?

ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ல் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு சிம்லாவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அப்போது, ‘‘இந்தியாவின் ஒரு தீவாகத்தான் இலங்கை இருந்தது’’ என்று கூறி அதையும் சேர்த்துக் கொள்ள மவுன்ட்பேட்டன் யோசனை தெரிவித்தார். அதற்கு நேருவும், வல்லபபாய் படேலும் சம்மதிக்கவில்லை என்ற கூற்றும் உண்டு. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பணியாற்றியதாலும், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் வாழ்ந்த பூர்வீகத் தமிழர்களாலும் மவுன்ட் பேட்டனுக்கு இந்த யோசனை உதித்துள்ளது.

இந்த இரு தரப்பினரும் அப்போது சிங்களவர் எண்ணிக்கைக்கு இணையாக இருந்துள்ளனர். இதை குறைக்க தேயிலை தொழிலாளர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு தமிழகம் அனுப்பப்பட்டனர். அதன்பின்னர் தமிழர்களுக்காக இலங்கை அரசு 1964-ம் ஆண்டுவரை 9 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அவற்றில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. காவல் துறை, அரசு நிர்வாகம் என அனைத்திலும் சிங்களர்கள் ஆதிக்கம். இவற்றை எதிர்த்து நடத்தப்பட்ட அரசியல் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. இதுபோன்ற பல இன்னல்களால், மே 14, 1976-ல் கொண்டுவரப்பட்ட வட்டுக்கோட்டை மாநாட்டின் தீர்மானத்துக்கு பிறகு தமிழர்களின் போராட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. 1970,1974-ம் ஆண்டுகளை விடப் பெரிதாக, 1983-ல் ‘கருப்பு ஜூலை’ எனும் பெரும் கலவரம் ஏற்பட்டது.

தலைநகர் கொழும்பில் கடந்த ஜூலை 24, 1983-ல் தொடங்கி 6 நாட்கள் நடைபெற்ற கலவரம் தனித்தமிழ் ஈழப்போராட்டமாக மாறியதில், அப்போதுசுமார் 5,000 பேர் உயிரிழந்து ஒன்றரை லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்தனர். பிரபாகரனை போன்ற இலங்கை தமிழர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன்பிறகு தான் இலங்கை தமிழர்கள் அகதிகளாக நாட்டை விட்டு கிளம்பத் தொடங்கினர். இதை முன்னின்று நடத்தியவர் அன்று அமைச்சராக இருந்தவரும், ஜெயவர்தனேவின் மருமகனுமான தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கே.

இப்பிரச்சினையில், முன்னாள் பிரதமர்களை விட தற்போதைய பிரதமர் மோடியின் அணுகுமுறை எப்படி உள்ளது?

பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தில், சீனாவின் ஆதிக்கமும், கோயில்களில் புத்த விஹாரங்கள் அமைத்து மாற்றப்படுவதும் என இரண்டு பிரச்சினைகளும் கவனத்தில் உள்ளன.யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்காக ஒரு கலாச்சார மையம் கட்ட வைத்துள்ளார் பிரதமர் மோடி. இவர், இந்து மகா சமுத்திரத்தில் இந்தியாவுக்கு சவாலாகி வரும் புவி அரசியலையும் திறமையுடன் சமாளித்து வருகிறார்.

இந்தச் சூழலில், ஈழத் தமிழர்கள் பிரச்சினையை கையில் எடுக்கும்படி பிரதமர் மோடியை என் போன்றவர்கள் வலியுறுத்துகின்றனர். ஏனெனில், புவிஅரசியலில் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு கேடயமாக இருப்பார்கள் என்பதை பிரதமர் மோடி உணர்கிறார். எனவேதான், பல்வேறு உத்திகளை பிரதமர் மோடி வகுத்துள்ளார். அவற்றை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூலமாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் கிடைக்கிறது. ஐஎப்எஸ் அதிகாரியாக இருந்த காலம் முதல் இலங்கை தமிழர்கள் பிரச்சினையை ஜெய்சங்கர் நன்கு அறிந்தவர். அதனால் இந்த பணிகளுக்கு ஜெய்சங்கர் முக்கிய பங்காற்றுவார்.

  • இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு முடிவுகட்ட உங்களுடைய யோசனை என்ன?

ஆங்கிலேயர் காலம் முதலாகவே இலங்கையில் தமிழர்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாகவே நடத்தப்பட்டனர். இதை சுதந்திரப் போராட்டக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்த மகாத்மா காந்தியும், நேருவும் கூட உணர்ந்தனர். எனவே, இலங்கை தமிழர்கள் போராட்டம் முதல் நடைபெற்ற தமிழின அழிப்பு, தமிழ்த் தலைவர்கள் படுகொலைகள் உள்ளிட்ட கொடுமைகள் மீதுசர்வதேச அளவில் ஒரு சுதந்திரமான விசாரணை தேவை. முள்ளிவாய்க்கால் சம்பவமும் ஐக்கிய நாடுகள் சபையில் நிலுவையில் உள்ளது. இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும்.

இலங்கை மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அறியபொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதிகாரங்கள் இன்றி பொம்மைகளாக இருக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு முழு அதிகாரங்கள் வழங்க வேண்டும். இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் காணாமல் போன ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதே முள்ளிவாய்கால் போருக்கு பின் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழர்களது காணி நிலங்களில் 14 வருடங்களாக ராணுவம் அமர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அவசியம் இல்லாத இந்தராணுவத்தை அங்கிருந்து விலக்க வேண்டும்.

தமிழர்களுக்காக இந்திய அரசுஅளித்த நிதி முழுமையாக செலவிடப்படவில்லை. தமிழர்களே இல்லாத ராஜபக்சவின் தொகுதியான காழியில் மிகப்பெரிய ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில், பிரதமர் மன்மோகன் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா அந்த ரயில் நிலையத் திறப்புவிழாவுக்கு சென்றிருந்தார். இதுபோன்ற தவறுகளை இந்திய அரசு கணக்கு எடுத்து தம் நிதியை பயனுள்ள வகையில் செலவிட வலியுறுத்த வேண்டும்.

  • பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக ஒரு கருத்து எழுந்துள்ளதில் உண்மை என்ன?

பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவர்களில் முதலாமவர் நெடுமாறன், அடுத்து நான், பிறகு புலவர் புலமைப் பித்தன். கடந்த 1982-ல் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின்புதான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வெளியில் பரவலாக அறியப்பட்டார்.

ஆனால், அதற்கும் பல வருடங்களுக்கு முன்பே அவரை எங்களுக்கு தெரியும். சென்னையில் பிரபாகரன் மயிலாப்பூர் வீட்டில் என்னுடன்சுமார் ஒரு வருடம் தங்கி இருந்தார். நெடுமாறன் கூறியதன்படி நானும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறேன். இதை ஒரு காலத்தில் மதிமுக தலைவர் வைகோவும் வழிமொழிந்திருந்தார். அவர் எங்கோ உயிருடன் இருக்கிறார். இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கினால் ஒருநாள் வருவார்.

பிரபாகரன் உயிரிழந்ததாக இலங்கை அரசு கூறும் தகவல்களில் முரண்பாடுகள் உள்ளன. அவரது உடலின் டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டதாக வெளியான தகவலும் பொய். ஏனெனில், பிரபாகரன் உறவினர்களில் யாரிடம் இருந்து ரத்தம்எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை.

அப்போது, இந்த சோதனைக்கான வசதி இலங்கையில் இல்லை. அதற்காக இலங்கை அரசு இந்தியாவிலும் அதை செய்யவில்லை. டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வெளியாக குறைந்தது ஒரு வாரமாகும். ஆனால், இவர்கள் 24 நேரத்தில் செய்து கண்டுபிடித்ததாகக் கூறுவதை நம்ப முடிய வில்லை.

  • மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கையில் சிக்கும் மீனவர்களுக்கும் தீர்வு காண முடியாமல் உள்ளதே?

இருதரப்பு மீனவர்கள் இடையே தேவையில்லாத மோதலை இலங்கை அரசு உருவாக்கி வருகிறது. கச்ச தீவை மீட்டால் தமிழக மீனவர்கள் பிரச்சினை தீர ஒரு வழி பிறக்கும். இது மீட்கப்பட்ட பின் அங்கு காவலுக்கு இருக்கும் இந்திய பாதுகாப்பு படை தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பளிக்கும். கச்சத் தீவு அளிக்கப்பட்ட போது முறையாக வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை.

இதுதொடர்பான மசோதாக்களும் நமது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படவில்லை

கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கை – சுரேந்திரன்

தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் சர்வதேச நீதிப்பொறிமுறை மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் ஒற்றுமை மிக அவசியமாகிறது. அது தான் நம்முடைய அரசியல் பலமாகவும் இருக்க முடியும். பிராந்திய வல்லரசாக இருக்கட்டும். சர்வதேச நாடுகளாக இருக்கட்டும் அனைவரும் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்று பட்டே இருக்க வேண்டும் என்றே கோருகின்றார்கள். அது நியாயமான கோரிக்கையும் கூட என தெரிவித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளரானா குருசாமி சுரேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த வழியில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பலமான தேசிய இயக்கமாக பலப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஞாயிறு தினக்குரலுக்கு  (19.02.2023)வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி-1.
உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்த நிலையில் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளான ரோலோ மற்றும் புளோட் திடீரென மற்றும் கட்சிகளையும் கூட்டமைத்து தேர்தலில் எவ்வாறு விரைவாக போட்டியிட முடிந்ததன் பின்னணியென்ன?

பதில்
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியப் பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளும் ஒருமித்து செயலாற்றி வந்தோம். அப்படியான அனைவரையும் உள்வாங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பலமான கட்டமைப்பாக வரையறுத்து பொது சின்னத்தின் கீழ் பதிய வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக அமைந்திருந்தது. இது எங்களுடைய கோரிக்கை மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் ஒரு கட்சி உள்ளூராட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக முடிவெடுத்தபொழுது, எம்மோடு ஒருமித்து செயலாற்றும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக பயணிக்க முடிந்தது. தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருடமாக ஒருமித்து செயலாற்றியதன் பின்னணியே தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்திக் கொண்டு செல்வதற்கு காரணமாக அமைந்தது.

கேள்வி-2
தமிழ் கட்சிகளின் ஐக்கியமின்மை தமிழர்களுக்கு பாதகமென விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது குறித்து உங்கள் கருத்தென?

பதில்
நமது அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் இந்த ஒற்றுமையின்மை என்பது பெரிய தாக்கத்தை செலுத்துகிறது. தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் சர்வதேச நீதிப் பொறிமுறை மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் ஒற்றுமை மிக அவசியமாகிறது. அதுதான் நம்முடைய அரசியல் பலமாகவும் இருக்க முடியும். பிராந்திய வல்லரசாக இருக்கட்டும், சர்வதேச நாடுகளாக இருக்கட்டும், ஐக்கிய நாடுகள் சபையாக இருக்கட்டும், நமது மக்களாக இருக்கட்டும் அனைவரும் தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே கோருகிறார்கள். அது நியாயமான கோரிக்கையும் கூட. குறிப்பாக தென்னிலங்கை தரப்புக்கள் தமிழ் தரப்புகளை ஒன்றாக இணைந்து வருமாறு நையாண்டித்தனமான கோரிக்கையை கடந்த காலங்களில் முன் வைத்தனர். இது நீடிக்குமானால் தமிழ் மக்களின் அரசியல் இலக்குகளை அடைவது சிரமமானதாகிவிடும்.

கேள்வி- 3
உங்களது கூட்டமைப்பு மக்கள் மத்தியில் எவ்வாறான நிலைப்பாட்டுடன் செல்லப் போகின்றது?

பதில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த வழியில் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பலமான தேசிய இயக்கமாக பலப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கூறி வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களையும் மக்கள் நடத்தி வந்துள்ளனர். அதற்கு செவி சாய்த்து நாங்கள் தொடர்ந்து கூட்டமைப்பை பலமான கட்டமைப்பாக முன்னெடுத்துச் செல்கிறோம். தேர்தல் நோக்கங்களை தாண்டி இது தமிழ் மக்களினுடைய பொது தேசிய இயக்கமாக பரிமாணம் அடைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இந்த நோக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்வோம். அதை மக்கள் நிச்சயம் அங்கீகரிப்பார்கள்.

கேள்வி-4
அண்மையில் யாழ் வந்த இந்திய இணையமைச்சரிடம் உங்கள் கூட்டிலுள்ள கட்சி தலைவர்கள் இந்திய பிரதமரை சந்திக்க வாய்ப்பு கேட்டமைக்கு காரணம் என்ன?

பதில்
கடந்த காலங்களில் இந்திய அரசினால் உத்தியோபூர்வமாக முன்வைக்கப்பட்ட அழைப்புக்கள் தமிழ்த் தரப்பால் சரியான முறையில் கையாளப் பட்டு இருக்கவில்லை. இந்திய அரசு தமிழ் மக்களுடன் கொண்டிருக்கும் அரசியல் உறவில் சில எதிர்மறையான அதிர்வலைகளை இது ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தமிழ் மக்கள் இனப் பிரச்சினையில் இந்திய பங்களிப்பு மிக அவசியமானது. நமது மக்களின் அரசியல் தீர்வுக்கான ஒரு பொறிமுறையை நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். அதில் இந்தியாவினுடைய தலைமையை வலியுறுத்தியுள்ளோம். இது எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான் இந்த கோரிக்கையை நாங்கள் முன் வைத்தோம்.

கேள்வி-5
அரசாங்கம் வலி.வடக்கில் காணி விடுவித்துள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்
கடந்த ஜனாதிபதி தேர்தலிலே அனைத்து ஜனாதிபதி வேட்பாளரிடமும் நாம் பல கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியான பின்னர் அவரை நேரடியாக சந்தித்தும் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அரசியல் தீர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி சகல கட்சிகளையும் அழைத்த பொழுதும் நாம் அதில் சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். அதற்கு பிரதானமானது காணி விடுவிப்பு கோரிக்கை. அதை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி முன் வந்துள்ளார். ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகள் மிகக்குறைவானவை. இன்னும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் விடுவிக்கப்பட இருக்கின்றன. இது மாத்திரம் போதாது. மற்ற காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

கேள்வி-6
தற்போது வெளிநாட்டு தூதுவர்களை உங்கள் அணியினர் சந்தித்து எவ்வாறான விடங்களை பேசுகின்றீர்கள்?

பதில்
நமது தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள சர்வதேச நீதிப் பொறிமுறை, அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பவற்றிற்கான சர்வதேசத்தின் உறுதியான ஆதரவை பெற்றுக் கொள்ளவே அவர்களோடு நாங்கள் பேசுகிறோம். மாறிவரும் அரசியல் பொருளாதார சூழ்நிலைகளில் தொடர்ந்தும் சர்வதேச ஆதரவு தமிழ் மக்கள் பக்கம் அல்லது நமது மக்களின் நியாயமான கோரிக்கைகளின் பக்கம் இருக்க வேண்டும் என்பதே எங்கள் பேச்சுப் பொருளாக அமைகிறது.

தமிழரசுக் கட்சியினர் மன்னிப்புக் கொடுத்ததாக சொல்லுவது நகைப்புக்குரியது – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

அண்மையிலே இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) எம்.பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் மீதான விமர்சனங்கள் தொடர்பிலும் தமிழ் மக்களின் நிகழ்கால பிரச்சினைகள் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.

ரெலோ, புளோட் மீது தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்களின் ”இவர்களுக்கு நாங்கள் தான் மன்னிப்பு வழங்கினோம்” என்ற விமர்சனங்கள் தொடர்பில்

எங்களுக்கு அரசியலில் 40 வருட அனுபவம் உள்ளது. எங்களை விட அனுபவம் வாய்ந்த செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் போன்ற தலைவர்கள் இருக்கின்றார்கள். இளைய உறுப்பினர்கள் அவர்களது அறிவுக்கேற்றவாறு அப்படி வளர்க்கப்பட்டுள்ளார்கள். யார் யாருக்கு மன்னிப்பு கொடுப்பது. தமிழரசுக் கட்சி எங்களுக்கு மன்னிப்பு கொடுத்தார்களா? தமிழரசுக் கட்சிக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? படித்தவர் என்று கூறிக்கொள்கின்ற முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சயந்தன் போன்ற இளையவர்களுக்கு வரலாற்றைப் பற்றி என்ன தெரியும்? புலிகளும் ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கங்களும் தங்களுக்குள்ளே மோதிக் கொண்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் போது புலிகளின் தலைவரும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர்களும் ஒன்றாக கூடி தமிழ் மக்களின் நலனுக்காக ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தார்கள். மன்னிப்பு கொடுத்ததாகப் பேசுகின்ற தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இழந்த தலைவர்களை விட தமிழரசுக் கட்சி இழந்த தலைவர்களின் எண்ணிக்கை அதிகம். அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சரோஜினி யோகேஸ்வரன், சிவபாலன், தங்கதுரை, சம்பந்தமூர்த்தி, சிவ சிதம்பரம், நீலன் திருச்செல்வம் இப்படி பல தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் துரோகிப் பட்டத்துடன் புலிகளால் சுடப்பட்டார்கள். இந்த வரலாறுகள் தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்களுக்குத் தெரியாது. அவர்களிடமும் ஆயுதம் இருந்திருந்தால் சுட வந்தவர்களைத் திருப்பிச் சுட்டிருப்பார்கள். எங்களிடம் ஆயுதம் இருந்தமையால் எங்களைச் சுட வந்த போது எங்களின் பாதுகாப்புக்காக நாங்கள் திருப்பிச் சுட்டோம். இது வரலாறு. உண்மையிலேயே தமிழரசுக் கட்சிக்குத் தான் மன்னிப்புக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. விடுதலைப் போராட்ட இயக்கங்கள் நாங்கள் ஒற்றுமையாகப் பேசி அரசியல் செய்கின்றோம். போராட்டக் காற்றுக் கூடப்படாத தமிழரசுக் கட்சியினர் மன்னிப்புக் கொடுப்பதாக சொல்லுவது நகைப்புக்குரியது.

உண்மையிலேயே இலங்கை இராணுவத்துடன் முதலில் இணைந்து பணியாற்றியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே. பிரேமதாசவின் காலத்தில் 88 -91 வரை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றியவர்கள் புலிகள். அப்போதே அமிர்தலிங்கம் கொழும்பில் வைத்து சுடப்பட்டார். தம்பிமுத்து அவரது மனைவி கொழும்பிலே கனடிய உயர்ஸ்தானிகராலயம் முன் வைத்து புலிகளால் சுடப்பட்டார்கள். இந்த வரலாறுகள் தமிழரசுக் கட்சியின் இளைய உறுப்பினர்களுக்குத் தெரியாது. இந்த வரலாறு தெரிந்த மூத்த உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியினுள் இருந்தாலும் ஜனநாயக வழிக்கு வந்த ஆயுத போராட்ட இயக்கங்களை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் நோக்கில் பேசாமல் இருக்கின்றார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில்

உண்மையிலே ஓ.எம்.பி தலைவரின் கருத்து முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல். சரணடையும் போது அவர்களுடைய பிள்ளைகளை இராணுவத்தினர் பஸ் வண்டியிலே ஏற்றிச் செல்வதை நேரில் பார்த்தவர்கள் இருக்கின்றார்கள். இன்று ஒருவரும் சரணடையவில்லை என கூறுவது அப்பட்டமான பொய் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. சிங்களத் தலைவர்கள் மத்தியில் மாற்றம் தென்படுகின்ற இந்தக் காலகட்டத்திலே கோத்தபாயவினால் நியமிக்கப்பட்ட இப்படியான அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும். உண்மையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.

காணி சுவீகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பேசிக் கொண்டே உள்ளார்கள். ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் வாயே திறப்பதில்லை. காணி சுவீகரிப்பு வடக்கைப் போல் கிழக்கில் பெருமளவில் நடைபெறவில்லை. கிழக்கு மாகாணத்துக்கென விசேடமாக கோத்தபாயவினால் முழுதாக பெளத்தர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொல்பொருள் செயலணி பல இடங்களைத் தொல் பொருள் இடங்களாக அடையாளப்படுத்தி உள்ளார்கள். குறிப்பாக திருக்கோணேச்சரம் கோவிலை அண்டிய பகுதிகள், அம்பாறையிலே இறக்காமம் போன்ற பல இடங்களை அடையாளப்படுத்தி அதைச் சுற்றி வேலியமைப்பது, கல் நடுவது போன்ற விடயங்கள் நடைபெறுகின்றன. கிழக்கு மாகாண ஆளுநரின் ஒத்தாசையுடன் எல்லைப்புறங்களிலே மேட்டு நிலப் பயிர்ச்செய்கை என்ற பெயரில் காணிகள் களீபரம் செய்யப்படுகிறது. நாங்கள் தொடர்ச்சியாக இது தொடர்பில் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றோம். வியாழேந்திரன், பிள்ளையான் தமது பிரதேசங்களைக் காப்பாற்றுவார்கள் என்றே மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அவர்கள் தமிழ் மக்களுக்கெதிரான செயற்பாடுகளுக்கு வாய்மூடி மெளனிகளாக இருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசிய அரசியல்

தனிமனித ஆதிக்கத்தையே நாம் எதிர்க்கின்றோம். சம்பந்தன் ஐயாவுக்கு உடல் நலமின்மையால் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தைக் கூட்ட முடியாமலிருக்கின்றது. அதனால் சுமந்திரன் சம்பந்தனின் பெயரை நன்றாகவே பயன்படுத்துகின்றார். இது தொடர்பில் தமிழரசுக் கட்சிக்குள்ளும் அதிருப்தி நிலவுகின்றது. ஏனைய கட்சிகள் கூட அவரது நடவடிக்கைகளைக் கண்டித்துக் கொண்டுள்ளார்கள். சில நேரங்களில் சுமந்திரன் நடந்து கொள்கின்ற முறை அவர் மீது விமர்சனங்களை முன்வைக்கும் அளவில் இருக்கின்றது. அங்கத்துவக் கட்சிகளுடனோ, தன்னுடைய கட்சியினருடனோ கலந்துரையாடி முடிவுகள் எடுப்பதை தவிர்த்துக் கொள்கின்றார். அவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள். அண்மையிலே கூட பாராளுமன்றத்தில் நாங்கள் இருக்கும் போது எங்களுடன் கலந்துரையாடாமல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கையொப்பமிட்டு வந்திருக்கின்றார். அவர்கள் தங்களுடைய நலனுக்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைந்து நடத்துமாறு கோருகின்றார்கள். எங்களுடன் கலந்து பேசிருந்தால் மாகாணசபைத் தேர்தலையும் விரைந்து நடாத்துமாறு வலியுறுத்தும் சந்தர்பமாக அது அமைந்திருக்கும். இப்படியான விமர்சனங்களே அவர் மீது வைக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

“ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை புரிந்துகொள்ள இந்தியா தயாராக இல்லை“

ஜெனீவாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நெருக்கடி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே கருத்து தெரிவிக்கையில் ‘இலங்கை தமிழர்கள் இனப்பிரச்சினையில் அரசியல் தீர்வு ஏற்பட அந்நாட்டு அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை’ என சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், இந்திய தரப்பின் இக்கருத்து குறித்து சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் குழந்தைசாமி இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி….

கேள்வி

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வை காண்பது தொடர்பில் இலங்கை அக்கறை செலுத்தவில்லை என ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இந்தியா தெரிவித்ததன் பின்னனி என்ன?

பதில்

இந்தியா ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது என்பது தவறான புரிதலாகும். இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண அவைகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து, மாகாண தேர்தலை நடத்தி, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்று காங்கிரஸ் அரசும் பாரதிய சனதா கட்சி அரசும் தொடர்ந்து கூறிவருகின்றன.

தனது நிலைப்பாட்டை இலங்கை அரசு விரைவாக செயல்படுத்தவேண்டும் என்பதில் இந்திய ஒன்றிய அரசு தெளிவாக உள்ளது. தனி ஈழம் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. சிங்கள பேரினவாதத்தை வளர்த்து, இனப்படுகொலை செய்த இனத்தோடு இணைந்து வாழ வாய்ப்புகள் குறைவு. ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை சரியாக புரிந்துகொள்ள இந்திய ஒன்றிய அரசு தயாராக இல்லை. தனது நிலைப்பாட்டை செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டி, தனது அதிகாரத்தை இலங்கையில் நிலைநிறுத்த விரும்புகிறது. இந்திய ஒன்றியம் பௌத்த சிங்கள பேரினவாத அரசுக்கு தொடர்ந்து ஆதரவும் பாதுகாப்பும் கொடுத்து வருகின்றது.

உள்நாட்டு மக்களின் உரிமைகளையும் தேவைகளையும், மக்களாட்சியின்மீது நம்பிக்கை வைக்காத பாரதிய சனதா கட்சி இன்னொரு நாட்டிலுள்ள மக்களின் உரிமைகளை மதிக்காது. இந்திய ஒன்றிய அரசு இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்கும் வேலையை தீவிரமாக செய்து வருகிறது.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்ற நோக்கில் ஈழத்தமிழர் பிரச்சினையை அணுகுகிறது. நிரந்தர அரசியல் தீர்வுகாண இந்திய ஒன்றிய அரசிடம் எவ்வித திட்டமும் செயல்பாடும் இல்லை. இந்திய ஒன்றிய அரசு ஈழத்தமிழர் இனச்சிக்கலை இரட்டை வேதத்தில் பார்க்கிறது. இதனால் இந்திய ஒன்றிய அரசால் எவ்வித தீர்வும் கிடைக்காது.

இந்திய ஒன்றியத்தின் நிலைப்பாடு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தமிழர் பிரச்சினை குறித்து இந்திய ஒன்றியம் பேசுகின்ற போதிலும் இந்திய ஒன்றியத்திற்கு பொருளாதார ரீதியில் அதன் வழியாக எவ்வித நன்மையும் இல்லை. அது ஒரு நிலைப்பாடு. வழக்கம்போல் அது இந்திய ஒன்றியத்தின் அறிவிப்புதான் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஆர். சிவராசா கூறுகின்றார்.

நீதி, அமைதி, சமத்துவம் மாண்பு ஆகியவை தமிழர்களுக்கு கொடுக்க வேண்டுமென்று இந்திய ஒன்றிய அதிகாரி கூறுகிறார். ஆனால் எப்படி தருவது? இனப்படுகொலை செய்த பேரினவாத அரசு தமிழர்களுக்கு நீதி வழங்காது. இலங்கை குறித்த இந்திய ஒன்றிய நிலைப்பாடு இலங்கை அரசை காப்பாற்ற மீண்டும் முயற்சி செய்கிறது. இந்திய ஒன்றியத்தில் இந்து பேரினவாத அரசு இலங்கையில் உள்ள பௌத்த பேரினவாத அரசை, மானிட உரிமைகளை பாதுகாக்க எவ்வாறு அழைக்க முடியும்?

இலங்கையில் மாற்றம் வரக் கூடாதென இந்திய ஒன்றிய அரசு. இந்திய ஒன்றிய அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பை ஆராய்ந்து தண்டனை வழங்காமல் தமிழர்களை ஆற்றல்படுத்த முடியாது. 13 வது திருத்தச் சட்டம் பெரும் பலனை ஈழத்தமிழர்களுக்கு கொடுக்க முடியாது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அதில் தமிழ்நாட்டு தமிழர்களின் ஓட்டுகளைப் பெற நடத்தும் ஒரு தேர்தல் நாடக யுத்தியாகும். சீனாவிற்கு எதிராக இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்ற சிந்தனையில் இந்திய ஒன்றியம் செயல்படுகிறது. இலங்கைத் தீவு ஈழம், சிங்களம் என் இருநாடுகளாக பிரியக் கூடாதென இந்தியா தெளிவாக இருக்கிறது. அதனால் இந்த 51 வது ஐநா கூட்டத்தொடரில் இந்தியாவின் நிலைப்பாடு ஈழத்தமிழர்களுக்கு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

கேள்வி

உண்மையில் இந்தியா தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதா இல்லை தமிழர்களை மீண்டும் பயன்படுத்த முற்படுகின்றதா?

பதில்

இந்திய ஒன்றிய அரசு ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. பேரினவாத அரசு இன்னொரு பேரினவாத அரசை ஏற்றுக்கொள்ளும். ஒருபோதும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை ஏற்காதுஇ அந்த உரிமைகளை மதிக்க மறுக்கும். இந்திய ஒன்றிய அரசு ஈழத்தமிழர்களிமீது எவ்வித அக்கறையும் இல்லை. தமிழ்நாட்டு முகாமில் வாழும் 58. 422 ஈழத்தமிர்களை வைத்து இலங்கை அரசை மிரட்டுகிறது. வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள் சமய வேறுபாடின்றி வாழ்ந்து வரும் தமிழர்களை பயன்படுத்தி இந்துத்துவா கொள்கையை பரப்பி இந்துகளையும் கிறித்தவர்களையும் பிரிக்கிறது. வடக்கு கிழக்கு பகுதிகளை இந்துநாடாக மாற்ற இந்திய ஒன்றிய பேரினவாத அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டு தமிழர்களும் ஈழத்தமிழர்களுக்கும் உள்ள உறவை அறுத்து, வெறுப்பை வளர்த்து அன்னியப்படுத்த இந்திய ஒன்றிய அரசு செயல்படுகிறது.

ஈழத்தமிழர்களை தனது தன்னல நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த இந்திய ஒன்றிய அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கீழ்கண்ட கோரிக்கைகளை இந்திய ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும். 1. ஈழத்தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலையை நன்கு ஆராய்ந்து நீதி வழங்க வேண்டும்.

2. வடக்கு கிழக்கு பகுதிகளில் பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும்.

3. சிங்களவர்களோடு இணைந்து வாழ்வதா? தனிநாடாக பிரித்து வாழ்வதா? என்று பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும்.

4. ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கவேண்டும்.

5. சிங்கள பேரினவாத அரசை பன்னாட்டு குற்றவியல் நடுவர் மன்றத்தில் நிறுத்த வேண்டும்.

இந்தச் செயல்பாடுகளை இந்திய ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழ் மக்களை தனது தன்னலத்திற்காக பயன்படுத்தி, தமிழர்களை அடிமைபடுத்துகிறது. இந்திய ஒன்றிய அரசை நம்பி நமது உரிமைகளை இழந்துவிடவேண்டாம்.தொடர்ந்து போராடி தனது உரிமைகளை பெற தமிழர்களாகிய நாம் ஒன்றிணைவோம்.

போர் முடிந்து 13 ஆண்டுகள் முடிந்தும் இன்னும் நீதி ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் இந்திய ஒன்றிய அரசுதான். ஈழத்தமிழர்களை மனிதர்களாக மதிக்கவில்லை. வடஇந்திய ஒன்றிய அரசுகள் தமிழர்களை புரிந்தகொள்ள மறுக்கின்றன. சமயம்தான் முன்னிலைப் படுத்துகிறது. ஆனால் மனித உரிமைகளை பின்னுக்கு தள்ளுகிறது. அடிப்படையில் ஈழத் தமிழர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு, அரசுகளுக்கு, நாடுகளுக்கு தன்னலத்திற்காக பயன்படுகின்றனர். இந்திய ஒன்றிய அரசை சரியாக நாம் புரிந்துகொள்ளவேண்டும். எவரும் நம்மை பயன்படுத்த விடாமல் உலக உரிமை சக்திகளோடு இணைந்து தொடர்ந்து போராடி தங்களது உரிமைகளை வென்றெடுப்போம்.

விக்கி ரணிலுன் பக்கம் சாய்தது ஏன் அவரே தெரிவிக்கும் பதில்.

ஒருவரை நம்புவது குற்றமா என கேள்வி எழுப்புகின்றார் பாராளுமன்ற உறுப்பினர்
க.வி.விக்னேஸ்வரன்.

அண்மையில் கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்வில் ரணில் விக்கிரமசிங்காவை ஆதரிக்க முடிவெடுத்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதன் பதில்களும்,

  1. கேள்வி: ஜனாதிபதித் தேர்வில் நடுநிலை வகிப்பதாக அறிவித்த நீங்கள் எதன் அடிப்படையில் அந்த முடிவை மாற்றிக்கொண்டீர்கள்?.

பதில்: ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலை வகிக்க வேண்டியிருப்பதாக கூறப்பட்ட போது யார் யார் எவ்வெதனைக் கூறப் போகின்றார்கள் என்று அறியாதிருந்தோம். அப்போது இரணிலா சஜீத்தா என்ற கேள்வியே முன்னிலைப்படுத்தப்பட்டு இருந்தது. இருவரில் யார் எமது கோரிக்கைகளுக்கு எமது எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்பப் பதில் தருகின்றார்களோ அவர்களை ஆதரிப்பது பற்றி சிந்திக்கலாம் என்றும் கூறியிருந்தோம். இரணில் பிரதம மந்திரியாகப் பதவி வகிக்க முன்வந்தபோதே தனியார்  தொலைக்காட்சியின்  கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் முகமாக எமது எதிர்பார்ப்புக்கள் பற்றிக் கூறியிருந்தேன். மூன்று நிபந்தனைகளை விதித்து அவற்றிற்கு தீர்வு கொண்டு வந்தால் அவருடன் சேர்ந்து பயணிக்க முடியும் என்றும் கூறியிருந்தேன். ஜனாதிபதித் தேர்வில் இரணிலும் சஜீத்தும் என்னை நாடி எனது ஆதரவை வேண்டி நின்றார்கள். நான் ஜூலை 19ந் திகதி பாராளுமன்றம் வரும் போது எமது கோரிக்கைகளை முன் வைப்பேன் என்று இருவரிடமும் கூறியிருந்தேன். அன்று சஜீத் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். டலசோ, அனுர குமாரவோ என்னுடன் தேர்தல் சம்பந்தமாகப் பேசவுமில்லை, ஆதரவு கேட்கவுமில்லை. சஜீத் கூட டலசுக்காக ஆதரவு கேட்கவில்லை.

19ந் திகதி இரணிலே என் பாராளுமன்ற இருக்கை தேடி வந்து நாங்கள் சந்திக்க வேண்டும் என்றார். அவரின் காரியாலய அறைக்கு நானே வருவதாகக் கூறி அங்கு சென்று சந்தித்தேன். ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் தயாரித்த எமது கோரிக்கைக் கடிதத்தை அவரிடம் கையளித்தேன். பலதையும் பற்றிப் பேசினோம். கோவா, பாண்டிச்சேரி பற்றி இந்திய அரசியல் யாப்பில் கூறப்பட்டவற்றை ஆராய்ந்து வருவதாகக் கூறினார். அதாவது இந்திய அரசியல் யாப்பின் அடிப்படையில் இங்கு மாற்றங்களை அறிமுகப்படுத்த முடியுமா என்பதை ஆராய்வதாகக் கூறினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணி அபகரிப்புக்களை நிறுத்துதல், இராணுவத்தினரின் தொகையை அரைவாசியாகக் குறைத்து காலக்கிரமத்தில் முழுமையாக நீக்கல் போன்ற பலதையும் படிப்படியாகத் தான் செய்வதாகக் கூறினார். மொத்தத்தில் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அவர் எதிர்ப்பேதும் தெரிவிக்கவில்லை. எனது பல கேள்விகளுக்குப் பொருத்தமான பதில்கள் தந்தார். தான் தனது பதவிக் காலத்தில் செய்யப் போகின்றவற்றை விவரித்தார். அவரின் கூற்றுக்களை நான் ஏற்றுக் கொண்டேன். அவருக்கு ஆதரவு அளிப்பது எமது மக்களுக்கு நன்மையையே தரும் என்ற எனது முடிவின் அடிப்படையிலேயே இரணிலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முன்வந்தேன். வெளிப்படையாக எனது ஆதரவையும் தெரிவித்தேன்.

  1. கேள்வி: ரணில் விக்கிரமசிங்காவும் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கப்படுவதோடு அவரை ஆதரித்த தங்களிற்கு எதிராகவும் போராடும் நிலைமை ஏற்படும் என சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது தொடர்பில் என்ன கருதுகின்றீர்கள்?

பதில்: இந்தத் தருணத்தில் இரணிலைப் பதவியில் இருந்து நீக்குவது நாட்டுக்கு நன்மை தராது. அதை நாம் மறத்தலாகாது. மேற்கையும் கிழக்கையும் சமாளித்துச் செல்லும் வல்லமை உடையவர் அவர். முதலில் கோட்டா கோ ஹோம், அடுத்து இரணில் கோ ஹோம்; நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அதற்கு அடுத்தது “விக்கி கோ ஹோம்” என்று பல்லவி மாறப் போவதாகத் தெரிகின்றது. இவை எல்லாம் விகடமாகத் தெரியவில்லையா? சமூக ஊடகங்கள் நினைப்பது போல் ஒருவர் நடந்து கொள்ளாவிடில் ஒன்றில் அவரைப் பைத்தியக்காரர் என்பார்கள் அல்லது பயங்கரவாதி என்பார்கள் அல்லது தீவிரவாதி என்பார்கள் அல்லது “வீட்டுக்குப் போ” என்பார்கள். நான் ஏற்கனவே என் வீட்டில்த் தான் இருக்கின்றேன். என்னை எங்கு துரத்தப் பார்க்கின்றார்கள்? பாராளுமன்றத்தில் இரணிலை ஆதரித்த 132 பேரையும் வீட்டுக்கு அனுப்பப் போகின்றார்களா? சமூக ஊடகங்களுக்கு எம்மை வீட்டுக்கு அனுப்பும் இந்த உரித்தை யார் கொடுத்தார்கள்? வீட்டுக்குப் போவதை நிறுத்தி இனி நாம் எல்லாம் வேலைக்குப் போகக் கற்றுக் கொள்வோம்.

  1. கேள்வி: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்தால் அமைச்சரவையில் பங்குகொள்வீர்களா?

பதில்: அதை முடிவு செய்வது எனது கட்சி. எம்மக்களுக்கு எது நன்மை பயக்குமோ அதன் அடிப்படையில் அவர்களின் தீர்மானம் இருக்கும் என்று  நம்புகின்றேன்.

  1. கேள்வி: மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் ரணிலை நம்ப முடியாது அவர் ஒரு பொய்யர் எனத் தெரிவித்த நீங்கள் தற்போது எதன் அடிப்படையில் நம்பினீர்கள்?

பதில்: அப்போது அவர் என்னை ஒரு பொய்யர் என்று கூறினார். உண்மையில் பொய் கூறியது அவரே. என்னையும், திரு சம்பந்தனையும், திரு சுமந்திரனையும் மலிக் சமரவிக்ரமவின் வீட்டில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ந் திகதி சந்தித்தும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சிங்கள மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அரசியல் இடர்நிலை அவருக்கு அன்று இருந்தது. உண்மையை வெளியிட அப்போது திரு சம்பந்தனும் திரு சுமந்திரனும் கூட முன்வரவிலை. என்னுடனும் உண்மை நிலையுடனும் நில்லாது பொய்மையுடனும் திரு. இரணிலுடனும் நின்று மௌனம் காத்தார்கள்.

ஆனால் அதன் பின்னர் பல வருடங்கள் சென்று விட்டன. இரணிலை ஒரு குள்ள நரி என்று இன்றும் பலர் கூறுகின்றார்கள்.
ஆனால் அதற்கு அப்பால் சென்று எமது மக்களின் கோரிக்கைகளை எழுத்தில் இட்டு அவரிடம் கையளித்து அவற்றின் அடிப்படையில் நாங்கள் கருத்துப் பரிமாறிக் கொண்டோம். 15 நிமிடங்களுக்கு மேலாக நாம் கருத்துப் பரிமாறிக் கொண்டோம். அவர் தன் பதவிக் காலத்தில் இந்த நாட்டின் பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்த்து பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற கனவில் இருந்ததை நான் புரிந்து கொண்டேன். எவ்வெவெற்றை செய்யவிருக்கின்றார் என்பதை அவர் மனம் விட்டுப் பேசினார். அவர் பொய் பேசியிருக்கக் கூடும் ஆனால் அவரின் சிந்தனைகளின் பரந்த வீச்சு, நினைத்ததைச் செய்து முடிப்பேன் என்ற திடசங்கற்பம் ஆகியன என்னைக் கவர்ந்தன. ஒருவரை நம்புவது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றா விட்டால் அதன் பெறுபேறு அவருக்குரியது எனக்குரியது அல்ல எனப் பதிலளித்தார்.

தமிழ் தரப்பின் பேரம் அதிகமாகவுள்ள நேரம்; பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா? | அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

தமிழ் தரப்பின் பேரம்: பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா?

நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் முதல் முறையாக கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றிருக்கின்றது. இவை தொடர்பாக அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துக்களின் முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகர்களுக்கு தருகின்றோம்.

கேள்வி:
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நேற்று அமைதியான முறையில் இடம்பெற்றது. வழமையான கெடுபிடிகள் இல்லாமல் இம்முறை நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு காரணம் என்ன?

பதில்:
பொதுவாக ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் ஜனநாயக வெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். ஏனெனில் அவர் மேற்கு நாடுகளின் ஜனநாயக – லிபரல் பண்புகளினூடாக வந்தவர். தவிர அவர் மேற்கு நாடுகளுக்கு பதில் கூறவேண்டியவராகவும் காணப்படுகின்றார். அந்த அகையில் அவர் எப்போதும் தனது ஆட்சிக்காலத்தில் நினைவுகூருதலுக்கான வெளியை அனேகமாக அனுமதித்தே வந்திருக்கின்றார். தவிர – கோட்டா கோ கமவில் போராடிக்கொண்டிருக்கும் இளைய தலைமுறையை போராடலாம் என அனுமதித்ததன் மூலம் – இந்த நினைவுகூரலையும் அனுமதிக்க வேண்டிய ஒரு தேவை இருந்தது. ஆனால், இவ்வாறான நினைவுகூரல்களை ரணில் விக்கிரமசிங்க தடுப்பதில்லை.

கேள்வி:
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச இருக்கின்ற போதிலும் கூட அவருக்கு மேலாக அதிகாரத்தைச் செலுத்தும் நிலையில் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார் என இதனைக் கருதமுடியுமா?

பதில்:
அப்டிக் கருதமுடியாது. ஏனெனில் பிரதி சபாநாயகர் தெரிவில் ரணிலுக்கு இருக்கும் வரையறைகளை மொட்டுக்கட்சி உணர்த்தியிருக்கின்றது. இது கோட்டாபயவும் சேர்ந்து எடுத்த முடிவு. ரணிலைத் தெரிவு செய்தது கோட்டாபயதான். ரணிலைத் தெரிவு செய்ததன் மூலம் கோட்டாபய தன்னைத் தற்காத்துக் கொண்டு விட்டார். குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டு விட்டார். குடும்பத்தினர் அச்சமின்றி நாடாளுமன்றத்துக்கு வரக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றார்.

இந்த நிலையில் நாட்டு மக்களினதும், உலகத்தினதும் குவிமையமாக ரணில் இருக்கின்றார். கோட்டா கோ கமவில் கோட்டாபய வீட்டுக்குச் செல்லவேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றார்கள். ஆனால் அவர் இன்னும் போகவில்லை. இது அவருக்கு ஒரு வெற்றி. எதிர்காலத்தில் அவர் சிலசமயம் போகவேண்டிவரலாம். தான் போகாமல் ரணிலை அவர் தெரிவு செய்திருக்கின்றார். இதில் இருவரும் சேர்ந்துதான் இயங்க முடியும். ஏனெனில் எந்தெந்த விடயங்களில் உலக சமூகத்தின் கவனத்தைக் கவரலாம். எந்தெந்த விசயங்களில் மேற்கு நாடுகளுக்கு – இந்தியாவுக்கு சார்பாக நடந்துகொள்ளலாம். எந்தெந்த விடயங்களில் உள்நாட்டில் இருக்கக்கூடிய சமூகங்களின் அதிருப்தியை சம்பாதிக்காமல் செயற்படலாம் போன்ற விடயங்களில் கடந்த இரண்டு வருடத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் கோட்டாபய செயற்படலாம்.

கேள்வி:
கொழும்பிலும், கோட்டா கோ கம அரங்கிலும் முதல் முறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது. மூவின மக்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள். சிங்கள மக்களும் தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள இது எந்த வகையிலாவது உதவுமா?

பதில்:
அது ஏதோ ஒருவகையில் உதவும்தான். குறிப்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை அங்கே தயாரித்து பகிர்ந்தமை ஒரு நல்ல விசயம். இறுதிக்கட்டப்போரில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை அவர்கள் உணர்கின்றார்கள். பகிர்ந்துகொள்ள முற்படுகின்றார்கள் என்பதனை அது ஒரு குறியீடாகக் காட்டுகின்றது. அந்தவகையில் இந்த கஞ்சி அங்கு சமைத்து பரிமாறப்பட்டமையை நாம் வரவேற்க வேண்டும். அது நல்ல மாற்றம். இது முதலாவது.

இரண்டாவது, நினைவுகூர்தல். நினைவுகூர்தல் குறித்து அவர்கள் முகநூலில் போட்ட பதிவுகள் மற்றும் அது குறித்து வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் – மே 18 இல் கொல்லப்பட்ட எல்லோருக்குமான நினைவுகூர்தல் என்ற தொனி வருகின்றது. அவர்கள் அங்கு பேசும்போது தமிழ் மக்கள் என்று கூறுகின்றார்கள். ஆனால், இனப்படுகொலையை நினைவுகூர்தல் என்று சொல்லப்படவில்லை. அவர்கள் அங்கு காட்சிப்படுத்திய பனரில் மே 18 இல் கொல்லபட்டவர்கள் என்ற வாசகம்தான் உள்ளது. மே 18 இல் கொல்லப்பட்டவர்கள் என்று பார்த்தால் தமிழ் மக்கள், போராளிகள் மற்றது சிங்கள சிப்பாய்கள். எல்லோரையும் பொதுவாக நினைவுகூரும் ஒரு வாசகமாக அது காணப்படுகின்றது.

இதில் தமிழ் மக்களுக்கு ஒரு சிக்கல் இருக்கின்றது. தமிழ் மக்கள் இதனை ஒரு இனப்படுகொலை நாளாக நினைவு கூருகின்றார்கள். இனப்படுகொலை நாளென்பது இனப்படுகொலை புரிந்தவர்களுக்கு எதிராக நீதியைக்கோரும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்படமுடியாத ஒரு பகுதி. இதனை சிங்கள மக்கள் இனப்படுகொலையாகப் பார்க்கின்றார்களா? போர்க்குற்றமாகப் பார்க்கின்றார்களா? அல்லது யுத்த வெற்றியாகப் பார்க்கின்றார்களா என்பது முக்கியமான கேள்வி. சிங்கள மக்களும், சிங்கள அரசாங்கமும் கடந்த 12 வருடங்களாக இதனை ஒரு யுத்த வெற்றியாத்தான் கொண்டாடி வந்துள்ளார்கள். அப்படியான நிலையில் இது ஒரு நினைவுகூரலாக அனுஸ்டிக்கப்பட்டமை ஒரு பெரிய மாற்றம்.

வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்திய சிங்கள மக்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவது முக்கிய மாற்றம்தான். ஆனால், இனப்படுகொலை புரிந்தவர்களும், இனப்படுகொலைக்கு உள்ளானவர்களும் ஒன்றாக இருந்து நினைவுகூர முடியுமா என்ற கேள்வி உள்ளது. இனப்படுகொலைக்கு உள்ளானவர்களுக்கு நீதி கிடைக்கும் ஒரு நிலையில்தான் அது சாத்தியம். இல்லையெனில் – அது வெறும் சடங்காக மட்டும்தான் இருக்கும். ஆனால், இதனை ஒரு ஆரம்பமாகக் கருதலாம்.

கேள்வி:
இந்த நிலைமைகளை கையாள்வது தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் உபாயங்கள் எவ்வாறுள்ளது?

பதில்:
தென்னிலங்கையில் உருவாகியுள்ள குழப்பங்களைக் கையாள்வது தொடர்பில் தமிழ்க் கட்சிகளிடையே தெளிவானதொரு மூலோபாயம் இல்லை. குறிப்பாக 45 நாட்களாக இந்தப் போராட்டம் தொடர்கின்ற போதிலும், பொருத்தமான அணகுமுறை ஒன்று தமிழ்க் கட்சிகளிடம் இல்லை. முதலாவது இதனை ஒரு முக்கியமான விடயமாக அவர்கள் கருதவில்லை. கருதினாலும், அதனை அணுகவேண்டும் என்பதையிட்டோ எவ்வாறு அணுகலாம் என்பதையிட்டோ அவர்களிடம் கருத்துக்கள் எதுவும் இல்லை.

எம்மை நாம் ஒரு தேசமாகக் கருதி அதற்கான ஒரு வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் பார்ப்போமாக இருந்தால், நான்கு பரப்புக்களை நாம் அடையாளம் காணலாம். முதலாவது – நாடாளுமன்றம். இரண்டாவது – கோட்டா கோ கம போன்றவற்றில் போராடும் ஒரு புதிய தலைமுறை. மூன்றாவது தரப்பு – மகாசங்கம். அது ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது. நான்காவது தரப்பு – இந்த அரசாங்கத்தை பிணை எடுக்க முற்படும் வெளித்தரப்புக்கள். இந்த நான்கு தரப்புக்களையும் தமிழ்த் தரப்புக்கள் தனித்தனியாக அணுகவேண்டும்.

@24Tamil News

இலங்கையை பாதுகாக்க முற்படும் வெளித்தரப்புக்களான சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்றவற்றுடன் தமிழ்த் தரப்புக்கள் பேச வேண்டும். உதவியையும் தமிழ் மக்களுக்கான நீதியையும் பிரிக்க முடியாதவாறு பிணையுங்கள் எனக் கேட்கவேண்டும். அரசாங்கத்துக்கு உதவி செய்வதாயின் சில நிபந்தனைகளை முன்வைக்குமாறு வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் தீர்வுக்கான அடித்தளத்தை நாம் பலப்படுத்தலாம். இந்த நாடுகளின் மத்தியஸ்த்தத்துடன் ஒரு பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் தணிந்த பின்னர் அரசியல் தீர்வுக்குச் செல்லும்போது அரசாங்கம் பின்வாங்காமல் இருப்பதை இந்த நாடுகள் உத்தரவாதப்படுத்த வேண்டும். வரலாற்றைப் பார்த்தால் சிங்களத் தரப்பு பலவீனமாக இருக்கும் போது பேச்சுவார்த்தைக்கு வரும். பின்னர் பின்வாங்கிவிடும்.

இதனைவிட கோட்டா கோ கமவில் போராடுபவர்களுடன் நாம் உரையாட வேண்டும். ஏனென்றால் அவர்கள் ஒரு புதிய தலைமுறை. இந்த தலைமுறையினரிடம் ஒரு மாற்றம் வந்திருக்கின்றது. இந்த மாற்றத்தை நாம் முழு சிங்கள தலைமுறை யினருக்குமான மாற்றமாகக் கொண்டுவர வேண்டும். சிங்கள மக்களுடைய கூட்டு உளவியல் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக வேண்டும். அவ்வாறு வந்தால்தான் சமஸ்டி போன்ற ஒரு தீர்வுக்கு அவர்கள் வருவார்கள். இல்லையென்றால் சமஸ்டி என்றால் அதனை ஒரு தனிநாடாகப் பார்க்கும் நிலையில்தான் அவர்கள் இருப்பார்கள். இதற்காக போராடிக்கொண்டிருக்கும் அந்த இளைஞர்களுடன் நாம் உரையாட வேண்டும்.

பாராளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும். அதனைவிட இங்கு தெரிவித்த மூன்று தரப்புக்களுடனும் அவர்கள் உரையாட வேண்டும். தமிழ் மக்களுடைய பேரம் அதிகமாகவுள்ள நேரம் இது. அதனால், தமிழ்க் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது! – விஜேதாச ராஜபக்ச  

சீன உரக்கப்பல் விவகாரத்தில் இராஜதந்திர உறவை பாதுகாப்பதற்காக நஷ்டஈடு வழங்கப்படவில்லை சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது என ஆளுந்தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசியல் ஆணவத்தில் எடுக்கும் தீர்மானங்களே நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணமாகும். அமெரிக்க பிரஜையான அவரை இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் சட்ட ரீதியாக நிதி அமைச்சராக ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அவரை பதவி விலக்குவதற்காக ஜனவரியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் வழங்கிய முழுமையான செவ்வி,

நிதி அமைச்சர்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசியல் ஆணவத்தில் எடுக்கும் தீர்மானங்களே நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணமாகும். இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் பெயரைப் பயன்படுத்தி எரிபொருள் விலையை அதிகரித்து வெளிநாட்டுக்குச் சென்றார். தற்போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை மக்களின் சாபத்திற்கு உள்ளாக்கிவிட்டு அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இவ்வாறான ஒருவரால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று எவராவது எண்ணுவார்களாயின் அவர்கள் அங்கொடையிலுள்ள மன சிகிச்சை நிலையத்தில் இருக்க வேண்டியவர்களாவர்.

ஒரே நாடு – ஒரே சட்டம் செயலணி

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ருவன்வெலிசாயவில் பதவிப் பிரமாணம் செய்ததோடு மாத்திரமின்றி தான் சிங்கள பௌத்த வாக்குகளாலேயே அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டேன் கூறினார். இது ஏனைய மதங்களைப் பின்பற்றும் மக்கள் பௌத்தர்கள் மீது விரோதம் கொள்ள பிரதான காரணியாக அமைந்தது.

இவ்வாறான நிலையிலேயே தற்போது ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ அரச தலைவர் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்தை மீறி ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக மதங்களுக்கிடையில் பழிவாங்கும் எண்ணங்களையே அரச தலைவர் ஊக்கப்படுத்தியுள்ளார். அது மாத்திரமின்றி மதகுமார்களுக்கிடையில் இவ்வாறான காரணிகளால் பிளவு ஏற்பட்டுள்ளது. பௌத்த சங்கங்கள் பிளவடையும் வகையில் செயற்பட்ட ஒரேயொரு அரச தலைவர் இவர் மாத்திரமேயாவார். இராணுவ மனநிலையைக் கொண்ட இவ்வாறான ஒருவரால் மக்களின் கஷ்டத்தை உணர முடியாது.

வரவு – செலவு திட்டம் சட்டரீதியானதல்ல

இம்முறை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு – செலவு திட்டம் சட்ட விரோதமானதாகும். காரணம் வெளிநாட்டு பிரஜையான பசில் ராஜபக்சவை அரசியலமைப்பின் பிரகாரம் சட்ட ரீதியாக நிதி அமைச்சராக ஏற்றுக் கொள்ள முடியாது.

காரணம் அவர் 1952 அமெரிக்க சட்டத்தின் படி அந்நாட்டு குடியுரிமையைப் பெற்ற போது அமெரிக்காவுடனான அனைத்து தொடர்புகளையும் பேணுவதாகவும் அமெரிக்காவின் அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும், அமெரிக்காவுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் போது ஆயுதம் ஏந்தி அந்நாட்டை பாதுகாப்பதாகவும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்று சத்திப்பிரமாணம் செய்து கொள்ளும் இலங்கை பிரஜைகளின் குடியுரிமை இயல்பாகவே இரத்தாகும் என்று 1948 இல் சுதந்திரத்தின் பின்னர் டீ.எஸ்.சேனாநாயக்க முன்வைத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபதம்

இலங்கையின் குடியுரிமையைப் பெறாத ஒருவரால் எவ்வாறு நிதி அமைச்சு பதவியை வகிக்க முடியும்? அவரால் எவ்வாறு இரு நாடுகளினதும் அரசியலமைப்புகளை பாதுகாக்க முடியும்? எனவே தான் தற்போதைய நிதி அமைச்சரை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகின்றேன்.

நிதி அமைச்சரை பதவி நீக்குவதற்காக என்னால் தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 12 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்யவுள்ளேன். அதன் மூலம் நிதி அமைச்சரவை பதவி விலகச் செய்வேன்.

20 ஆவது திருத்தத்திற்கு நம்பியே வாக்களித்தோம்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த இரட்டை குடியுரிமை விகாரம் தொடர்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 20 பேர் அரச தலைவரிடம் சில யோசனைகளை முன்வைத்திருந்தோம். அதன் போது 2021 நவம்பர் 18 ஆம் திகதிக்கு முன்னர் இந்த சர்ச்சைக்கு தீர்வு வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.

எனினும் அவரால் வழங்கப்பட்ட வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. அரச தலைவரின் வாக்குறுதிகளை நம்பியே 20 இற்கு நாம் வாக்களித்தோம்.

புதிய அரசியலமைப்பு சாத்தியமா?

இந்த அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் புதிய அரசியலமைப்பை எதிர்பார்க்கக் கூடாது. இவர்கள் அதற்காக செயற்பட மாட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர்களின் ஆதரவின் ஊடாகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் 19 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்ட போது ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 40 ஆசனங்களே காணப்பட்டன. எனினும் இதனை 216 வாக்குகளுடன் நிறைவேற்ற முடிந்தது. இதற்காக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பணமோ பதவியோ வழங்கப்படவில்லை. காரணம் 19 ஆவது திருத்தம் மக்களுக்கானதாகக் காணப்பட்டது.

எரிவாயு அடுப்புக்களின் வெடிப்பும் எதிராக வழக்குகளும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது தமது பொறுப்பிலிருந்து விலகியவர்கள் சிறை செல்ல நேரிட்டது. அதே போன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை அண்மித்த வெடிப்பு சம்பவங்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களும் சிறைசெல்ல வேண்டியேற்படும். அவ்வாறானவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் வழக்கு தொடர்வதற்கு நான் தயாராகிக் கொண்டிருக்கின்றேன்.

சீன உரக்கப்பல் விவகாரத்தில் இராஜதந்திர உறவை பாதுகாப்பதற்காக நஷ்டஈடு வழங்கப்படவில்லை. மாறாக அடிமைத்தனத்தின் காரணமாகவே அந்த நட்ட ஈட்டு தொகையை செலுத்த இணக்கம் தெரிவித்துள்ளனர். சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், சமையல் எரிவாயு விவகாரத்தைப் போலவே பேர்ள் கப்பல் விபத்துக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களும் ஒரு நாள் தண்டனையை அனுபவிப்பர்.

அரச தலைவர் விமர்சிக்கும் உரிமை உள்ளதா?

அரசாங்கத்தையும் அரச தலைவரினை விமர்சிப்பதால் எனக்கு எதிராக எவருக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம் நான் கட்சி அரசியலமைப்பை மீறி செயற்படவில்லை. அரச தலைவர் எமது கட்சியின் அங்கத்தவர் கிடையாது. எனவே அவரை விமர்சிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. ஆளுந்தரப்பிலுள்ள 75 சதவீதமானோர் எனது நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.

வரவு – செலவு திட்டம் என்பது பொதுசன பெரமுனவுடையதல்ல. அது நாடாளுமன்றத்திற்குரியது. நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்கமைய அதற்கு வாக்களிக்காமல் இருக்கக் கூடிய உரிமை எனக்கிருக்கிறது. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்பை மீறி செயற்படவில்லை.

2022 இல் அதிகார மாற்ற புரட்சி நிச்சயம் ஏற்படும்

நாட்டில் தற்போது மிகவும் மோசமான சூழலே நிலவுகிறது. மக்கள் மத்தியில் கொரூரமும் , வன்முறையும் தலைதூக்கியுள்ளது. எனவே அவர்களை அடக்கி அரசாங்கத்தினால் முன்னோக்கிச் செல்ல முடியாது.

எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத்திற்குள் பாரிய ஆட்சி கவிழ்ப்பொன்று ஏற்படும். அவ்வாறில்லை எனில் அரசாங்கத்தில் அதிகார மாற்ற புரட்சி நிச்சயம் ஏற்படும் என்றும் அவர் தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் தமது அரசியல் வெளியை விரிவுபடுத்த போராடவேண்டும் சொல்ஹெய்ம் கூறுகிறார்.

‘தமிழர்களின் போராட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும்’.
– இலங்கை செய்திருந்தது போர்க் குற்றமாகத் தகுதி பெறக்கூடும் – 

இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போர் 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்அழிக்கப் பட்டதன் மூலம் முடிவுக்கு வந்தது. தசாப்தத்திற்கு மேலாகியும், ராஜபக்ச குடும்பம் தலைமையிலான இலங்கை அரசாங்கம், போரின் இறுதி நாட்களில் பாரிய உயிரிழப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் போராடிக் கொண்டிருக்கிறது.

பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவரது இறுதி நாட்கள் பற்றி அதிகம் தெரியவில்லை. அவர் சரணடைய முன்வந்ததாக உறுதிப்படுத்தப்படாத கூற்றுக்கள் உள்ளன.
2000 களின் முற்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை எட்டப்படு வதற்கு பேச்சுவார்த்தை நடத்த மு யற்சித்த முன்னாள் நோர்வே இராஜதந்திரியும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்மிடம் த வீக்[ THE WEEK ]சஞ்சிகை நேர்காணல்மேற்கொண்டது.

சொல்ஹெய்ம் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார், மேலும் போர் நிறுத்தம் முறிவடைந்து இறுதிப் போர் நடத்தப்படுவதற்கு முன்னர் பலமுறை அவரைச் சந்தித்த ஒரே ஒரு வெளிநாட்டவர் அவராகும் .

சொல் ல்ஹெய்ம் இப்போது வாஷிங்டனில் உள்ள உலக வள நிறுவனத்தில்[டபிள் யூ ஆர் ஐ ] ஒரேமணடலம் ஒரேபாதை முன்முன்மு யற்சி சர்வதேச பசுமைமேம்பாட்டு கூட்டணி (ப்ரிக் ) ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ப்ரிக் என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது பசுமை முயற்சிகளை ஊக்குவிக்க அரசாங்கம், வர்த்தகம் மற்றும் சிவில் சமூகத்தில் உள்ள தலைவர்களுடன் இணைந்து செயற் படுகிறது. இது சீன சுற்றுச்சூழல் அமைச்சால் மேற்பார்வை செய்யப்படுவதுடன் அதற்கெனசொந்த செயலகமொன்றையும் கொண்டுள்ளது.
சொல் ஹெய்ம் சமீபத்தில்டபிள் யூ ஆர் ஐ அலுவல்களுக்காக சென்னையில் இருந்தார். போரின் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகள் எவ்வாறு உலகிடம்தொடர்பு கொண்டார்கள்என்பது பற்றியும் நோர்வே மற்றும் சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை பிரபாகரன் நிராகரித்த விதம் குறித்தும் அவர் த வீக்கிடம் உரையாடியுள்ளார்

பேட்டி வருமாறு ;

கேள்வி; போரின்இறுதிக் கட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது?
பதில்; என்னிடம்விசேடமான தகவல்கள் எதுவும் இல்லை. போரின் கடைசி சில நாட்களில், இலங்கையின் வட கிழக்கில் ஒரு சிறிய பகுதியில் விடுதலைப் புலிகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர் 2009 மே 17 அன்று-வெள்ளைக்கொடி சம்பவதிற்கு முன் – விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத் தலைவர் [சீவரத்தினம்] புலிதேவன் எங்களுக்கு அழைப்பு விடுத்து அவரும் புலிகளின் அரசியை பிரிவு தலைவர் [ பாலசிங்கம் ] நடேசனும், இலங்கைப் படைகளிடம் சரணடைய விரும் புவதாகவும்அதில் நாங்கள்சம்பந்தப்படவேண்டும் என்றும் கூறினார்.. அதற்கு தாமதமாகிவிட்டது என்றுநாங்கள் சொன்னோம்
யுத்தத்தை சமாதானமான முறையில் முடிவுக்கு கொண்டுவர பல சந்தர்ப்பங்களில் நாங்கள் முன்மொழிந்தோம். ஆனால் அப் போது எங்களால் அதிகம் செய்ய முடியவில்லை, ஏனென்றால் நாங்கள் களத்தில் இல்லை. ஆனால், விடுதலைப் புலிகளின் சரணடையும் எண்ணம் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவிடம் தெரிவிப்பதாக உறுதியளித்தோம். மேலும் அன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதியிடமும் தெரிவித்தோம். எனவே, நடேசனும் புலிதேவனும் சரணடையும் எண்ணப்பாட்டை அரசாங்கம் நன்கு அறிந்திருந்தது.

கேள்வி; விடுதலைப் புலிகள் சரணடைய விரும்பியதாக நீங்கள் கூறுகிறீர்கள். பிரபாகரனும் அதை விரும்பினார் என்று அர்த்தமா?
பதில்;அவர்கள் பிரபாகரனைபற்றி க் குறிப்பிடவில்லை. புலிதேவன், நடேசன் என்று மட்டும் குறிப்பிட்டார்கள். பிரபாகரன் அதே இடத்தில் இருந்தாரா அல்லது வேறு எங்காவது இருந்தாரா என்பது எங்களுக்குத் தெரியாது. அதன்பின் நடேசனும் புலிதேவனும் கொல்லப்பட்டதாக எங்களுக்குச் செய்தி கிடைத்தது. அவர்கள் படைகளிடம் சரணடைந்து தூக்கிலிடப்பட்ட காட்சிதான் பெரும்பாலும் சாத்தியமாகும். ஆனால், நிச்சயமாக, நாங்கள் இதற்கு சாட்சியாக இருக்கவில்லை.

கேள்வி ; ஆனால் அவர்கள் ஏன் சரணடைந்தார்கள்? வேறு வழியில்லையா?
பதில்; அது தீர்க்கமான முடிவாக இருந்தது. அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டும் அல்லது சரணடைய வேண்டும்.

கேள்வி; பிரபாகரனும் சரணடைந்ததாக செய்திகள் வந்துள்ளன?.
பதில்;எனக்கு அந்த விட யம் தொடர்பாகஎதுவும் தெரியாது.. ஆனால் எனக்குக் கிடைத்த உறுதியான தகவல் என்னவென்றால், அவருடைய இளைய மகன், அப்போது 12 வயது,இலங்கை படைகளால் பிடிக்கப்பட்டார்என்பதாகும்.. அந்த ஒளிநாடா அவர் இலங்கை இ ராணுவ வீரர்களுடன் இருப்பதை தெளிவாகக் காட்டியது, பின்னர் அவர் காணாமல் போனார். எல்லா சாத்தியக்கூறுகளிலும், அவர் சரணடைந்த பிறகுகொல்லப்பட்டதற்கான சகல சாத்தியக்கூறுகளும் உள்ளன . நிச்சயமாக ஒரு போர் குற்றம்.

கேள்வி; பிரபாகரனின் இறுதி தருணம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
பதில்;அதற்கு என்னிடம் பதில் இல்லை. என்ன நடந்தது என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழர் தரப்பு அல்லது இலங்கை இ ராணுவம் முன் வந்து உண்மையை சொல்ல வேண்டும்.

கேள்வி ;ஆனால் விடுதலைப் புலிகள் உங்களைத் தொடர்பு கொண்டதாக நீங்கள் சொன்னீர்கள்.
பதில்;அவர்கள் எங்களை அணுகியி ருந்தனர்., ஆம். ஆனால் பிரபாகரன் பற்றிய எந்த தகவலும் எங்களிடம் இல்லை. போரின் கடைசி சில மாதங்களில் புலிதேவன் மற்றும் நடேசன் , அவர்களுடன்தொடர்புகொண்டோம் அவர்களூடாகவே பிரபாகரனுடன் தொடர்புகொள்ளப்பட்டது.. கேபி (புலிகளின் தலைவர் குமரன் பத்மநாதன்) சிங்கப்பூரில் உள்ள விடுதலைப் புலிகளின் வெளியுறவுக் கொள்கைப் பேச்சாளராக இருந்ததால், அவரை ஒஸ்லோவுக்கு அழைத்தோம்.
கேபி வர ஒப்புக்கொண்டார், அவர் [பிரபாகரனை] சிங்கப்பூரில் இருந்து நோ ர்வேக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். ஆனால் பிரபாகரனின் உத்தரவின் பேரில் அந்த சந்திப்பு கடைசி நிமிடத்தில்இ ரத்து செய்யப்பட்டது. எனவே பல உயிர்களைக் காப்பாற்றக்கூடியதாக , போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஏற்பாடுசெய்ய பிரபாகரன் தொடர்ந்து மறுத்துவிட்டார்.

கேள்வி;2009 மே 17 அன்று விடுதலைப் புலிகள் உங்களைத் தொடர்பு கொண்டதாக நீங்கள் சொன்னீர்கள். அன்றைய தினம் நிலைமைஎவ் வாறு இருந்தது? பிரபாகரன் எங்கே இருந்தார்?
பதில்; 2009 மே 17 க்கு முன்னர், போருக்கு ஒரு ட முடிவைக் கண்டறிவதற்கான ஒழுங்கை மேற்கொள்வதே எங்களுக்கு முக்கிய பிரச்சினையாக இருந்தது. விடுதலைப் புலிகள் தோற்றுப்போவார்கள் என்பது மிகத் தெளிவாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ், சிங்கள மக்களின் உயிரைக் காப்பாற்ற நினைத்தோம். ஐ. நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.
இந்திய அல்லது அமெரிக்க கப்பல்கள், ஐ.நா. கொடியை பறக்கவிட்டு, போர் வலயத்தில் இருந்து பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலி உறுப்பினர்களை வெளியேற்றும் என்பது ஒப்பந்தம். சரணடைந்தவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்யப்படும். இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் [இறுதியில்] அவர்கள் செய்யவில்லை. கடைசி வரை போராட விரும்பினார்கள்

கேள்வி;விடுதலைப் புலிகள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் தனி ஈழம் இருந்திருக்குமா?
பதில்;தனி ஈழம் இருந்திருக்காது, ஆனால் அவர்கள் அனைவரும் உயிருடன் இருந்திருப்பார்கள். ஒரு சமஷ்டி கட்டமைப்பு இருந்திருக்க கூடும்.

கேள்வி;பிரபாகரன் எப்படிப்பட்டவர்?
பதில்;அவர் ஒரு கவர்ச்சியான ஆள் அல்ல. மொழித் தடை இருந்தது; எங்களால் அவருடன் அவரது மொழியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் ஒரு தொலைநோக்கு தலைவர் என்பதை விட ஒரு இராணுவ மனிதராக இருந்தார். 2001 இல் யாழ் குடாநாட்டை இழந்தாலும் சரி அல்லது பண்டாரநாயக்க விமான நிலையத்தை அழித்தாலும் சரி, நிச்சயமாக ராஜீவ் காந்தி, லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும் பலரின் படுகொலைகள் இராணுவக் கண்ணோட்டத்தில் இருந்து வந்தவை.
விடுதலைப் புலிகள் கடற்படை மற்றும் விமானப் படையுடனான உலகின் முதலாவது கிளர்ச்சிக் குழுவாகும். அவரது வாழ்க்கையின் பிற்பகுதி வரை, அவர் முற்றிலும் புத்திசாலித்தனமான இராணுவத் தலைவராக இருந்தார் என்று என்னால் சொல்ல முடியும். இருப்பினும், அவரது அரசியல் பார்வை அவரது இராணுவ புத்திசாலித்தனத்துடன் ஒத்துப்போகவில்லை. அவர் இந்தியாவை நன்கு புரிந்து கொள்ளவில்லை; அவர் உலகின் ஏனைய பகுதிகளைப் பற்றி புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவை நன்றாகப் புரிந்துகொண்டிருந்தால், ராஜீவ் காந்தியைக் கொன்ற தவறை இழைத்திருக்கமாட்டார் .
இந்த விடயங்கள் அனைத்திலும்அன் டன் பாலசிங்கம் [பத்திரிகையாளர் மற்றும் மூலோபாயவாதி] சொல்வதை அவர் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் பாலசிங்கம் இறந்த பிறகு [2006 இல்], புலிகள் தளத்தை இழக்கத் தொடங்கினர். பிரபாகரன் சகல பிரச்சினைக்கும் இராணுவத் தீர்வு உண்டு என்று நம்பினார் என்று நினைக்கிறேன்.

கேள்வி; சமாதானநடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கியதாக நீங்கள் கூறுகிறீர்களா?
பதில்;கடந்த சில மாதங்களைத் தவிர, இலங்கையில் இந்தியா எப்போதும் சமாதானதிற்காகவே இருந்தது. ராஜீவ் காந்தி (கொலை) காரணமாக இந்தியா விடுதலைப் புலிகள் மீது சந்தேகம் கொண்டிருந்தது. ஆனால் இந்தியா தொடர்ந்துசமாதானப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து ஆதரவையும் அளித்து வந்தது.பின்னர் 2008க்குப் பிறகு இந்தியாவின் மனநிலை மாறியது. இலங்கை அரசு போரில் வெற்றிபெற முடியும் என்று [இந்தியா] நினைத்தது அதுவே முதல் முறையாகும்.. அதன் பின்னரே இந்தியா அவர்களுக்கு அனைத்து உளவுத்துறை ஆதரவையும் வழங்கியது.

கேள்வி;ஆனால் இந்தியா எப்போதும்சமாதானத்துக்காக நின்றது என்று சொன்னீர்களே ?
பதில்; அதற்குக் காரணம் புலிகள் முன்பு கொடுத்த வாக்குறுதியை [போர் நிறுத்தத்தில்] காப்பாற்றவில்லை. 2008க்குப் பிறகு இந்தியா பிரபாகரனை நம்பவில்லை.

கேள்வி; யுத்தம் இன அழிப்பு அல்லது இனப்படுகொலை சம்பந்தப்பட்டது என்று கூறுகிறீர்களா?
பதில்;நான் பொதுவாக அந்த வார்த்தையை பயன்படுத்துவதில்லை. ஆனால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நிச்சயமாக நடந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் நிறுவனங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. அது மிக மிக மோசமாக இருந்தது; அது போர்க் குற்றமாகத் தகுதி பெறக்கூடும்

கேள்வி; புலம்பெயர் மக்கள் எப்பொழுதும் ஈழத்துக்காக இருப்பதால் புலிகள் மீண்டும் ஒருங்கிணைக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
பதில்;நான் அப்படி நினைக்கவில்லை. இலங்கையில் ஆயுதப் போராட்டத்திற்கான ஆர்வம் குறைந்துவிட்டது. ஆனால் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் காந்திய வழி முறைகளின் அடிப்படையில் மிகவும் வலுவான விதத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி ; ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்படவில்லை. இதனை நியாயப்படுத்த முடியுமா?
பதில்; புலிகள் தற்போது இல்லை, எனவே தடை என்பது எனது பார்வையில் குறிப்பிடத்தக்கது அல்ல. இலங்கையில் தமிழர் உரிமைகளை நிலைநாட்ட விரும்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் நியாயமான போராட்டத்தை ஆதரிப்பதே இப்போது முக்கியமானது. தலைமை இலங்கையில் இருந்தே வரவேண்டும்.

கேள்வி; இலங்கையின் தற்போதைய ஆட்சிமுறை மற்றும் மாகாண சபைகளை உருவாக்கி தமிழை அரச கரும மொழியாக்கிய 13வது திருத்தச் சட்டத்தின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்; 13வது திருத்தம் ஒரு தீர்வாக இந்தியாவால் பிரகடன ப்படுத்தப்பட்டுள்ளது . அதை பிரதமர் நரேந்திர மோடி காண்பித்துள்ளார்.. வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவில் உள்ளஏனைய தலைவர்களும் இலங்கையை அமு ல்படுத்துமாறுஇலங்கையிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். நான் அவர்களுடன் உடன்படுகிறேன்.இலங்கைத் தமிழர்கள் தங்கள் அரசியல் வெளியை விரிவுபடுத்தவும், சமாதானம் நிலைத்திருப்பதை உறுதி செய்யவும், அதிகாரப் பகிர்வுக்கு உதவவும் போராட வேண்டும். எனவே, தமிழர்களுக்கு எனது அறிவுரையானது ஒற்றுமையை பேண வேண்டுமென்பதாகும்.. மேலும் அவர்கள் முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் பொதுவான களத்தை கண்டறிய வேண்டும். உண்மையில், இலங்கையில் தமிழர்களுக்கான இடம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. அந்த வெளியை விரிவுபடுத்துவதற்கான தமிழர்களின் போராட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும்.

கேள்வி;இலங்கையில் சீன முதலீடுகள் குறித்து இந்தியாவில் கவலை அதிகரித்து வருகிறது. தெற்காசியாவில் புவிசார் அரசியல் மாற்றம் நிகழும் என்று நினைக்கிறீர்களா?
பதில் ;நாம் இலங்கையில் செயற் பட்ட போது, சீனா அங்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைகொண்டிருக்க க்கவில்லை. நாங்கள் அனைவரும் இந்தியாமீதும் , ஓரளவுக்கு அமெரிக்காமீதும் கவனம் செலுத்தினோம். அப்போது சீனாம் பெரிய முதலீடுகளை கொண்டிருக்கவில்லை .
ஆனால் இப்போது அது ஒரு கடினமான சூழ்நிலையாக இருக்கலாம். சீனா உலகில் எல்லா இடங்களிலும் முதலீடு செய்கிறது, மேலும் பெரும்பாலான நாடுகள் இந்த முதலீடுகளால் பயனடைகின்றன. எனவே, அந்த வகையில் இலங்கை ஒரு தனியானவிடயமாக இல்லை.. சீனா இந்தியாவிலும் முதலீடு செய்துள்ளது, ஆனால் அதன் ஒரேமண்டலம் , ஒரேபாதை முன்முயற்சியின் ஓரங்கமாக இல்லை.

கேள்வி; ஆனால் எனது கேள்வி விசேடமானது அதாவது இது பிராந்தியத்தின் புவிசார் அரசியலை மாற்றுகிறதா?
பதில்;இதைப் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிலிருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன்.

கேள்வி;இப்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில்,கோத்தாபய ராஜபக்சஜனாதிபதியாக இருப்பதால், நோர்வேக்கும் இலங்கைக்கும் எவ்வாறான உறவு உள்ளது ?
பதில்;இலங்கையுடன் எமக்கு இயல்பான உறவு உள்ளது. எங்களிடம் ஒரு தூதரகம் உள்ளது, வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளன. ஆனால் சமாதான முன்னெடுப்புகளின் போது இருந்தது போன்ற விசேடமான உறவுகள் எதுவும் இல்லை. உயர்மட்ட தலைவர்களுடன் எங்களுக்கு நெருக்கமான உறவு இல்லை.

கேள்வி;நீங்கள் சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தீர்கள் . புலிகள் விவகாரம் பற்றி கலந்துரையாடினீர்களா ?
பதில்;நாங்கள் இலங்கை பற்றி பேசவில்லை. கோவிட்-19 மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி மட்டுமே பேசினோம்.

நன்றி- தினக்குரல்

Posted in Uncategorized

தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும்: இந்திய வௌியுறவு செயலாளர் வலியுறுத்தல்

இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினை அமுல்படுத்தி நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்தை கோருவதாக இந்திய வௌியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், சமாதானம், நீதி மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீரகேசரி வார வௌியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இந்திய வௌியுறவு செயலாளர் இந்த கருத்துக்களை வௌியிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் ‘அயலுறவுக்கு முதலிடம்’ கொள்கையின் பிரதான இலக்காக, இலங்கை முழுவதும் சிறப்பான அபிவிருத்திக்கான இருவழி ஈடுபாடு அமைவதாகவும் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறியுள்ளார்.

கேள்வி: ஜனாதிபதியின் செயலாளரின் தகவல்களுக்கு அமைவாக, எரிபொருளை கொள்வனவு செய்வதற்கும் தாமதமான கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக்கொள்வதற்கு இந்திய அரசாங்கத்துடன் இலங்கை பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் இந்தியாவின் பதில் என்ன?

பதில்: இலங்கையுடனான எமது பங்குடமையில் சக்தி துறைகள் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் சக்தி பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கைக்கு ​தேவையான உதவிகளை வழங்கவும் பரஸ்பர நலன்கள் அடிப்படையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் நாம் தொடர்ந்தும் ஈடுபாட்டினை கொண்டிருக்கின்றோம். எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இந்தியாவிடமிருந்து இலங்கை ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியங்கள் தொடர்பில் சாதகமான பேச்சுக்கள் இரு தரப்பு அரசாங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தொடர்பிலான கேள்விக்கு பதிலளித்த ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கையுடனான இந்தியாவின் உறவு தனித்துவமானது என கூறியுள்ளார்.

இலங்கையின் முன்னேற்றங்கள், ஏனைய நாடுகளுடனான இந்தியாவின் உறவில் இருந்து சுயாதீனமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் அதானி நிறுவனம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் மார்க்க தொடர்புகள் மேலும் வலுவடையும் எனவும் இந்திய வௌியுறவு செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized