இலங்கையில் அன்றாட தேவைகளுக்கு செலவிட திறைசேரியில் பணம் இல்லை – பிரதமர் ரணில்

உணவு நெருக்கடி உலகளாவிய நெருக்கடியாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் நிலைமையை முன்னறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் உலக வங்கி 30 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் இலங்கையை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையல்ல எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இலங்கையில் அன்றாட தேவைகளுக்கு செலவிட திறைசேரியில் பணம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அன்றாட நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான செலவினங்களுக்காக உடனடியாக நிதியைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்

இலங்கைத்தீவில் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் தான் வன்முறையை வளர்த்தவர்கள்: சபா குகதாஸ்

இலங்கைத்தீவில் 1948 ஆண்டின் பின்னர் வன்முறையை வளர்த்தவர்கள் ஆட்சிக்குத் தொடர்ந்து வந்த சிங்கள தலைவர்களும் அவர்கள் சார்ந்த அரசாங்கமும் என்ற உண்மையைச் சிங்கள பெரும்பாண்மை மக்கள் உணரும் வரை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் தனிச் சிங்களச் சட்டத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க அரசாங்கம் கொண்டு வந்த போது பூர்வீக தமிழர்களின் தமிழ்மொழி அரசியலமைப்பு ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டதனால் அன்றைய தமிழ்த் தலைவர்கள் காலமுகத்திடலில் சாத்வீக வழி சத்தியாக்கிரக போராட்டத்தை 1956 யூன் 5 ஆம் திகதி நடத்தினர்.

இதன்போது இன்று கோட்டா கோ கோம் போராட்டத் தரப்பின் மீது எப்படி ஒரு வன்முறை ஆட்சியாளர்களினால் கட்டவிழ்க்கப்பட்டதோ இதைவிட மோசமாக அன்று தமிழ்த் தலைவர்கள் மீது இதே காலிமுகத்திடலில் பொலிஸாரினாலும் குண்டர்களினாலும் கோரமான வன்முறை மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக போராட்டம் வன்முறை மூலம் அடக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சி 1977 வரை மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் தமிழர்களின் அகிம்சைப் போராட்டங்களை வன்முறை கொண்டு அடக்கியதன் விழைவே ஆயுதப் போராட்டமாக மாறியது. உண்மையாகத் தமிழர்கள் வன்முறை மீது காதல் கொண்டு ஆயுதம் தூக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்களே தமிழர்களை ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்தார்கள்.

அதன் விளைவை இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவிக்கின்றது. அத்தகைய அவலநிலைக்கு அரசியல், பொருளாதாரத்தின் கட்டமைப்பு சீரழிந்துள்ளது. 1956 தமிழர்களுக்குச் செய்த தவறை மீண்டும் 2022 ஆட்சியாளர்கள் அதே காலிமுகத்திடலில் ஜனநாயக வழியில் போராடிய தாம் சார்ந்த சிங்கள சகோதரர்களுக்கும் வன்முறையைப் பிரயோகித்துள்ளார்கள்.

நாகரிகம் வளர்ந்த இந்த நூற்றாண்டில் மிகவும் பிற்போக்காக ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைக்க வாக்களித்த மக்களையே வன்முறை மூலம் அடக்கும் கிட்லர் ஆட்சியாளர்களை நினைக்கத் தலைகுனிவாகவும் வெட்கமாகவும் உள்ளது.

இலங்கைத் தீவில் வாழும் பல்லின மக்களையும் அவர்களது நியாயமான அபிலாசைகளையும் ஏற்றுக் கொள்ளும் அரசியலமைப்பை உருவாக்கி ஜனநாயக பண்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் ஆட்சியாளர்கள் வரும் வரை இலங்கைத் தீவில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினமானதாகும். இதனைச் சிங்கள பெரும்பான்மை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் கடன் தொகையை அடுத்த வாரம் அறிவிப்பதாக பிரதமர் தெரிவிப்பு

இலங்கை எவ்வளவு கடனை செலுத்த வேண்டும் என்பது தொடர்பில் தகவல்களை சேகரித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒருவருக்கு ஒருவர் விமர்சனங்களை முன்வைக்காமல், நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருமாறு பிரதமர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

இன்று பாராளுமன்றத்தில் நாட்டின் கடன் தொகை தொடர்பில் பிரதமரிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

இலங்கை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என அவர் வினவினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அது தொடர்பிலான முழுமையான அறிக்கையை அடுத்த வாரமளவில் தயாரிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சில தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் சில தகவல்கள் பொய்யானவை எனவும் குறிப்பிட்ட பிரதமர், இதன் காரணமாக தன்னால் சரியான தொகையை உடனடியாகக் கூற முடியவில்லை என தெரிவித்தார்.

கடன் தொகை 10 பில்லியனாக இருந்தாலும் அதனை வழங்குவதற்கு ஒரு மில்லியன் கூட எம்மிடம் இல்லை என பிரதமர் கூறினார்.

எனவே தான் மூன்றாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விவாதம் ஒன்றை நடத்துமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்த அவர், விரைவில் அத்தகவல்களை எதிர்க்கட்சிக்கு வழங்கவுள்ளதாகவும் கூறினார்.

கடன்களை தற்போதைக்கு மீள செலுத்துவதில்லை என கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி அரசாங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பாராளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு –  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று மாலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோராதலிங்கம் , தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம கோவிந்தன் கருணாகரம்(ஜனா) ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

 

‘மே 18 தமிழனப் படுகொலை நாள்’- வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அறிக்கை

”மே மாதம், சிறிலங்காவில் முரண்பாடான உணர்வுகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது. வடக்கு -கிழக்கு தமிழினப் படுகொலைகளில் இறந்தவர்களை நினைவு கூறுகையில், தெற்கு போர் வெற்றியைக் கொண்டாடுகின்றது. கௌதம புத்தர் கூறியது போன்று மூன்று விடையங்களை மூடி மறைக்க முடியாது.

“சூரியன், சந்திரன், உண்மை”. சிறிலங்காவின் பொருளாதார – அரசியல் நெருக்கீடு தெளிவான பாடத்தைப் புகட்டி இருக்கின்றது, வன்முறை எந்தவிதத்திலும் பிரச்சினைக்குத் தீர்வாகாது, பிரச்சினைக்கான மூலகாரணியைக்கண்டு அதை நிவர்த்தி செய்வது இன்றியமையாதது. வடக்கு- கிழக்கு தமிழர்கள் மே 18ஐ தமிழினப்படுகொலை நாளாக நினைவு கூறுகின்றனர்” என்று வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்! முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது

வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இறுதி யுத்தத்தில் தனது ஒரு கையினை இழந்து பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து ஏனைய உறவுகளும் தமது உறவுகளுக்கான சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

இதேவேளை முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டுள்ளதோடு கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்த வேளையிலே அந்த மக்கள் உணவுத் தேவைக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் அவர்களது பசி போக்கியது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பல்வேறு தரப்பினராலும் வழங்கப்பட்டது

Posted in Uncategorized

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன்படி 30 வருடங்களின் பின்னர் பேரறிவாளனுக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,
சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமத்தப்படுதியது தவறு என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கில் பேரறிவாளன், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தது. பேரறிவாளன் விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கொழும்பு காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.கடந்த காலங்களில் வடக்குஇ கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பில்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன்இ தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர். அத்துடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Posted in Uncategorized

’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’

ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை விவாதிப்பதற்கான எதிர்க்கட்சிகளின் முயற்சி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் இன்று முடக்கப்பட்டதை அடுத்து பிரதமர் இந்த விளக்கத்தை வெளியிட்டார்.

பிரேரணையை  விவாதிப்பதை தோற்கடிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கத்துடன் வாக்களித்தார்.

இது தொடர்பில் பிரதமர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

இது ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு அல்ல. இது அனைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கும், அதிருப்தி பிரேரணையை உடனடியாக விவாதிப்பதற்குமான வாக்கெடுப்பாகும்.

தமது வீடுகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விவாதம் நடத்த விரும்பும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என சுமந்திரன் எம்.பியிடம் 16 ஆம் திகதி அறிவுரை கூறினேன்.

தாக்குதல்கள் மீதான விவாதத்தை இன்றே நடத்த அனுமதிருந்தால் நன்றாக இருந்திருக்கும், இன்னும் சில நாட்களில் இந்த அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அடையாள அதிருப்தி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இப்போது ஜனாதிபதியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பின் தோல்வியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அதிருப்தி பிரேரணையை பிந்தைய திகதியில் எடுத்துக்கொள்வதை தடுக்கிறார்கள்.

எதிர்கட்சிகள் சிறந்த வியூக அணுகுமுறையை முன்னோக்கிப் பயன்படுத்தினால் நல்லது. இருந்தபோதிலும், கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கான எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சுமந்திரனின் பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிப்பு

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார்.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்யமுடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அப்படியாயின், வாக்கெடுப்புக்குச் செல்வோமென தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் இலத்திரனியல் முறைமையின் கீழ் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 68  வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன. அதனடிப்படையில், பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.