ஈழத் தமிழர்க்கு விடியல்: தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு-“கோட்டாபய வீட்டுக்குப் போ” போராட்டத்திற்கு ஆதரவு

கடந்த 9ம் திகதி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் ’ஈழத் தமிழர்க்கு விடியல் – தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் இலங்கையில் நடைபெற்ற இனவழிப்புக்கு சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு ,பொருளியல் நெருக்கடியால் பெரும் அவலத்திற்கு உள்ளாகியுள்ள சிங்களர்கள், ஈழத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், “கோட்டபய வீட்டுக்குப் போ” எனக் கிளர்ந்தெழுந்து நடத்திவரும் போராட்டத்திற்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் ’ஈழத் தமிழர்க்கு விடியல் – தமிழ் மக்கள் கோரிக்கை மாநாட்டிற்கு தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இனவழிப்புப் போரை நிறுத்த வலியுறுத்தி தன்னுயிரை ஈகம் செய்த ஈகியர்கள் முத்துக்குமார், முருகதாசுக்கு மலரஞ்சலி மூலம் வீரவணக்கம் செலுத்தப்பட்டு, மாநாட்டு உரைகள் தொடங்கின.

தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு நோக்கவுரை ஆற்றினார். அதை தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர் பாரி மைந்தன் மாநாட்டு தீர்மானங்களை வாசித்து அரங்கத்தில் உள்ளோரது ஏற்பைப் பெற்றார்.

பின்னர் தீர்மானங்களை அடியொற்றி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் அ.சா. உமர்பாரூக், தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், பச்சைத் தமிழகத்தைச் சேர்ந்த அருள்தாஸ், திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், பேராசிரியர் மணிவண்ணன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக் குமரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திமுகவின் செய்தி தொடர்பாளர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் நெடுமாறன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர்.

மாநாட்டின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கீழே காண்க.

தீர்மானங்கள் :

1.ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்புக் குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் செய்த கோடாபய ராசபக்சே, மகிந்த இராபக்சே உள்ளிட்ட சிங்கள ஆட்சித் தலைமைகள், சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா, கமல் குணரத்னா, ஜகத் ஜெயசூர்யா உள்ளிட்ட படைத் தலைமைகளை, 2002 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் நாளுக்கு முன்னர் புரிந்த குற்றங்களையும் உள்ளடக்கக் கூடியதான இலங்கை தொடர்பான அனைத்துலகக் குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று சிறப்பாக அமைக்கப்பட்டோ, அன்றேல் குறைந்தது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, கூண்டிலேற்ற வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

2.2014 ஆம் ஆண்டு வடமாகாணசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படியும், 2021 ஆம் ஆண்டு சனவரியில் தமிழ்த் தலைவர்களும் குடிமைச் சமூக பிரதிநிதிகளும் சேர்ந்து ஐ.நா. உறுப்பரசுகளுக்கு அனுப்பிய மடலின்படியும் 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானத்தின்படியும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக செய்யப்பட்ட மேற்சொன்ன பன்னாட்டு சட்டமீறல்கள் தொடர்பில் எவ்வித உள்நாட்டுப் பொறுப்புக் கூறலுக்கும் சிறிலங்கா அரசு வழிசெய்யாத நிலையிலும் ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையிலும் இனியும் காலந்தாழ்த்தாமல் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

3.இலங்கை அரசு ஐ. நா. பேரவையில் உறுப்பு வகிக்கத் தொடங்கிய 1955 ஆம் ஆண்டு திசம்பர் 14ஆம் நாளுக்கு முன்னதாகவே, இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான அனைத்துலக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது. இதனால், இந்த ஒப்பந்தத்தின் சட்ட ஆளுகைக்கு அந்த நாடு 1951 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள் தொடக்கம் உட்பட்டிருக்கிறது. அந்த நாளில் இருந்து இலங்கையின் ஆட்சி மற்றும் படைத் தலைமைகள் மட்டுமல்ல அந்த நாட்டிற்கு பொறுப்பான அரசும், ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் எதிராகப் புரிந்த இன அழிப்புக் குற்றத்தை பன்னாட்டு நீதிப் புலனாய்வுக்கு தவறாது உட்படுத்திடவேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

4.ஐரோப்பிய வல்லரசிய ஆளுகைக்கு முன்னிருந்தஇறைமையை மீட்டுக்கொள்ளும் உரிமையின் பாற்பட்டும், பெரும்பான்மைத் தமிழீழ மக்களின் மக்களாணை பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பாற்பட்டும், அளப்பரிய ஈகங்களுடன் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக மெய்ந்நிலை அரசொன்றை நடத்தியவர்கள் என்ற வகையிலான இறைமையின் பாற்பட்டும், இனவழிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈடுசெய் நீதி என்ற பன்னாட்டு நடைமுறையின்பாற்பட்டும் இறைமையை மீட்டுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும்வகையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி இலங்கைத் தீவின் இனச்சிக்கலுக்கு அரசியல் தீர்வு காணவேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

5.முள்ளிவாய்க்கால் படுகொலையோடு தமிழின அழிப்புக்கான தடைகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக தமிழீழத்தில் தொடர்ந்துநடைபெற்றுவரும் கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பை (Structural Genocide) தடுத்து நிறுத்துவதற்குப் பன்னாட்டுப் பாதுகாப்பு பொறியமைவு (International Protective Mechanism) ஒன்றை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத் தாயகத்தில் ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

6.மாந்தவுரிமைகளுக்கான ஐநா. உயராணையர் மிசேல் பசலே 2021 சனவரியில் கொடுத்த பரிந்துரைகளான – போர்க் குற்றங்களுக்கான சான்றுகளைப் பாதுகாத்தல், சிறிலங்காவில் பன்னாட்டுக் குற்றங்கள் செய்தவர்கள் மீது ஐ.நா. உறுப்பரசுகள் எல்லைகடந்த மேலுரிமைக் கோட்பாடுகளின்படி (Universal Jurisdiction) அந்தந்த நாட்டு நீதிமன்றங்களிலும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தல், பயணத் தடை விதித்தல், சொத்துகளை முடக்குதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

7.தமிழர் தாயகப் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் இலங்கையின் வடக்குகிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள சிங்களப் பெரும்படை உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

8.போரின் முடிவில் சிங்களப் படையினரிடம் கையளிக்கப்பட்டோர் உள்ளிட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட 19,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கு வழிசெய்ய பன்னாட்டுப் பொறுப்புக்கூறல் பொறியமைவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

9.போர்க் கைதிகள் உள்ளிட்டதமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

10.தொல்லியல் பணிகள், மகாவலி வளர்ச்சித் திட்டம், வனத்துறை, வன விலங்குகள் துறை, சுற்றுலாத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் ஊடாக தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதும் தமிழர்களின் வரலாற்று மரபுவழித் தாயகம் என்பதற்கான சான்றுகளை அழிப்பதும் தமிழ்ச் சிற்றூர்களின் எல்லைகளை மாற்றியமைப்பதும் மக்களின இயைபை ( demographic composition) மாற்றிக் கொண்டிருப்பதும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

11.தமிழர்களின் வரலாற்று மரபுவழித் தாயகம் என்பதை ஏற்று வடக்குகிழக்கு மாகாணங்களை இணைத்துகுடியியல் ஆட்சியை அங்கு நிறுவும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

12.இலங்கையின் வடக்கும் கிழக்கும் ஈழத் தமிழர்களினமரபுவழி தாயகம் என்பதை இந்திய அரசு திட்டவட்டமாக அறிந்தேற்க வேண்டும். தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கொள்கைகளுக்கு முரணான தீர்வு எதையும் இந்திய அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழர்கள் மீது திணிக்கக் கூடாது என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

13.தமிழீழ மக்களின் அரசியல் வேணவாக்களைத் துச்சமாக மதித்தும் சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழின அழிப்பு என்ற கட்டத்தை அடைந்துவிட்டதை பொருட்படுத்தாமலும் இந்திய அரசு 13 ஆம் சட்டத்திருத்தத்தை ஓர் அரசியல் தீர்வென்று தமிழீழ மக்கள் மீது திணிப்பதற்கு செய்துவரும் முயற்சிகளை தமிழ்நாட்டு மக்கள் சார்பில் இம்மாநாடு உறுதியாக மறுதலிக்கிறது.

14.இந்திய அரசு மேற்சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில்ஐ.நா.உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் முயற்சிகள் எடுக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

15.தமிழ்நாடு அரசு மேற்சொன்ன கோரிக்கைகளை ஏற்கும்படி இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், உலக நாடுகளிடமும் ஐ.நா உறுப்பரசுகளிடமும் ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டுவதற்கு ஆவன செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

16. தமிழீழத் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தமிழ் உலகத்திலும் தமிழ் மக்களும் அவர்தம் அமைப்புகளும் தலைமைகளும் மேற்சொன்ன கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு ஒன்றுபட்டுநின்று உறுதியோடு போராட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
சிறப்பு தீர்மானம்:

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக்கடியால் பெரும் அவலத்திற்கு உள்ளாகியுள்ள சிங்களர்கள், ஈழத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், “கோட்டபய வீட்டுக்குப் போ” எனக் கிளர்ந்தெழுந்து நடத்திவரும் போராட்டத்தை இம்மாநாடு வாழ்த்துகிறது. அதேநேரத்தில் , இப்போராட்டம் ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் என்பதாக முடிந்து போய்விடக் கூடாது. பொருளியல் நெருக்கடிக்கு வித்திட்ட சிங்கள பெளத்தப் பேரினவாத ஒடுக்குமுறை அரசியலுக்கு முடிவுகட்டி, தேசிய இன சிக்கலுக்கு குடியாட்சியத் தீர்வு காண்பதில்தான் இலங்கை தீவில் உள்ள மக்களினங்களின் இருப்பும் நல்வாழ்வும் எதிர்காலமும் அடங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு அனைத்து தரப்பாரும் அதை நோக்கி பாடுபட வேண்டும் என இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் திருச்சபை சார்ந்த தமிழினத்தை வேதனைக்கு தள்ளியுள்ளது-அருட்தந்தை மா.சத்திவேல்

கத்தோலிக்க மதத்தலைவர்களின் தலைமையில் திருச்சபையின் மக்களால் ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தமது திருச்சபை சார்ந்த தமிழினத்தை வேதனைக்கு தள்ளியுள்ளது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (11.04) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோத்தா கோ ஹோம் என தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராகவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் நாட்டின் பல பாகங்களிலும் போராட்டம் தொடரும் நிலையில் கிறிஸ்தவ கத்தோலிக்க மதத்தலைவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமையும் திருச்சபையின் மக்களால் அவர்கள் புனித நாளான குருத்தோலை ஞாயிறு பல்வேறு இடங்களில் கோட்டா கோ ஹோம் பாணியில் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்தப்பட்டது.

இவர்களின் தேசியக்கொடியும் முன்வைத்த கோஷங்களும், பதாகைகளும் அவர்களின் நடுநிலையை மட்டுமல்ல கிறிஸ்தவ மத இறை சிந்தனையின் இருண்ட தன்மையை வெளிப்படுத்துவதோடு தமது திருச்சபை சார்ந்த தமிழினத்தையும் வேதனைக்கு தள்ளியுள்ளது என்றே கூற வேண்டியுள்ளது.

இந்த நாட்டை ஆட்சி புரிந்த அனைத்து கட்சிகளும் பௌத்த சிங்கள இன மத மக்களை தவிர்ந்த ஏனைய இனத்தவர்களையும் மதத்தவர்களையும் சமத்துவம் அற்றவர்களாக, அந்நியர்களாக பார்த்ததோடு அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்றே செயல்பட்டு அரசியல் யாப்பையும் தயாரித்து அதன் அடையாளமாகவே தேசியக் கொடியை வடிவமைத்து பாதுகாத்து வருகின்றனர். இத்தகைய கொடியை உயர்த்திப் போராட்டம் நடத்துவது இவர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை என்பதா? அல்லது தங்களையும் ஏமாற்றி தங்கள் பக்தியை நிர்வாணப்படுத்த முயற்சிக்கின்றார்கள் என்று சிந்திப்பதா?

வடகிழக்கு மக்களும் மலையக மக்களும் பல தசாப்தங்களாக இன அழிப்பிற்கு உட்பட்டு வருவதோடு குறிப்பாக 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இந்த நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலைக்கும் இன அழிப்பிற்கும் முகங்கொடுத்து நீதி கேட்டு சர்வதேசத்தின் கதவுகளை தட்டி கொண்டிருக்கின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடுவோர், அரசியல் கைதிகள் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கும் உறவுகள், இராணுவம் கையகப்படுத்திய காணிகளை மீள பெற்றுக்கொள்ள காத்திருப்போர் வீதிகளில் நிற்க, வடகிழக்கில் பௌத்த மயமாக்கல், இராணுவ மயமாக்கல் தொடர்ந்திட அவற்றிற்கு எதிராக நீண்ட காலமாக போராட்டம் தொடர்கின்றது.

அத்தோடு நீண்டகால யுத்தத்திற்கான செலவீடுகளும் தொடர்ந்து இராணுவத்தை பாதுகாப்பதற்கான பெருமளவான நிதி ஆண்டுதோறும் விரயமாக்கி வருவதோடு யுத்த காலத்தில் பல மில்லியன் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாயிருப்பது போன்ற விடயங்களும் இக்கால திருச்சபைத் தலைவர்கள் வெளிக் கொண்டுவர தயங்குவது ஏன்?

மேலும் 2019ஆம் ஆண்டு உயிர்ப்பு தின குண்டுத் தாக்குதல் காரணமாகவே கடவுள் நாட்டை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளார் என்பதோடு இந்த வருடம் உயிர்ப்பு தின தினத்தோடு நாட்டின் பிரச்சினைகள் முற்றுப் பெற்றுவிடும் என்பது இவர்களின் அரசியல் பொருளாதார குருட்டுத் தன்மையை மட்டுமல்ல கடவுள் பற்றிய இவர்கள் சிந்தனையின் மலட்டுத்தன்மை கொண்டதாகவே உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இவர்களின் கூற்றுப்படி 2019ஆம் ஆண்டு குண்டுத்தாக்குதல் மட்டுமே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம். கடவுள் அதற்காகவே தண்டிக்கின்றார் என்றால் வடகிழக்கில் நடந்த யுத்தத்தையும், இனப்படுகொலையையும், உறவுகள் காணாமலாக்கப்பட்டதையும், அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறையில் வாடுவதையும், நிலம் பறிக்கப்பட்டு சுதந்திரமிழந்த மக்களாக தமிழர்கள் வாழ்வதையும் கடவுளை ஏற்றுக் கொள்கிறாரா? அடிமட்ட மக்கள் நாளாந்த உணவுக்கு கையேந்துவதும் கடவுள் விருப்பமா? எனும் கேள்வியையும் கேட்க தோன்றுகின்றது.

தற்போதைய கிறிஸ்தவ கத்தோலிக்க தலைவர்கள் வடகிழக்கில் எத்தனையோ கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டும் காணாமலாக்கபட்டும் இருக்கையில் குறைந்தது அவர்களையாவது சிந்திக்க தவறுவது ஏன்? இவர்களின் சிந்தனையில் தெற்கின் கிறிஸ்தவ கடவுள் வேறு , வட கிழக்கு கிறித்தவர்களின் கடவுள் வேறு என்றா கூறுகின்றனர்?

கிறிஸ்தவ தலைவர்கள் ஒடுக்கப்படும் மக்களை பிரித்தும் ஒடுக்கப்பட்டவர்கள் தான் யாரால் கொடுக்கப்படுகிறோம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தாமல் இருப்பதும் அவர்கள் பற்று வைத்திருக்கும் கடவுளுக்கும் அவர்களின் திருமறை போதனைக்கும் எதிரானதே.

இவ்வருட உயிர்ப்பு தினத்திற்கு முன் நிறுவன திருச்சபையும் அதன் அமைப்புகளும் தலைமைத்துவங்களும் மீண்டும் திருமுழுக்குப் பெற வேண்டும். உண்மைக்கு திரும்ப வேண்டும். கிறிஸ்துவின் வாழ்வு மற்றும் உயிர்ப்பு வெளிச்சத்தில் எழுந்து நாட்டில் பிரச்சினைகளை அணுகி வரலாற்று ரீதியில் புரையோடிப் போயுள்ள அரசியல் பொருளாதார பிரச்சினைக்கு காரணமானவர்களை அடையாளப்படுத்தி வடகிழக்கு, மலையக மக்களினதும் உரிமைகளுக்காக குரல் எழுப்பி பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே ஒடுக்கப்படும் அனைத்து மக்களினதும் கோரிக்கையும் வேண்டுகோளுமாகும் என அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

 எம்.பி.களை மனசாட்சிபடி வாக்களிக்க கோர வேண்டும் – மனோ கணேசன் யோசனை 

ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20ம் திருத்தத்தை அகற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவோம். இதற்கான வாக்கெடுப்பில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்க கோருவோம். 225 எம்.பி.களில் மனசாட்சிபடி வாக்களிக்கும் எம்.பி.கள் யார், மனசாட்சியை மறந்துவிட்டு வாக்களிப்பவர்கள் யார் என்பதை  அவர்களுக்கு வாக்களித்த மக்களும், வெளியே போராடும் மக்களும் அறிந்துகொள்ளலாம்.

முதலில் இவரது அதிகாரங்களை பிடுங்க வேண்டும். அதைவிடுத்து இவருக்கு கீழே “காபந்து” அரசு அமைத்தால், அது “கால்பந்து” அரசாகவே அமையும்  என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது டுவீட்டர் தளத்தில்கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,  

நம்பிக்கை இல்லா பிரேரணையை விட இதுதான் ஜனாதிபதியை நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப கோரும் கோஷத்தின் அடிப்படை இதுதான். எமது கட்சி உட்பட, இந்நாட்டில் எதிரணி அரசியல் கட்சிகள் கோருவது இதைதான். சமூக சிவில் அமைப்புகள் கோருவது இதைதான். வெளியே தெருக்களில் போராடும் மக்கள் கோருவதும் இதைதான்.

நம்பிக்கை இல்லா பிரேரணையையிலும் கையெழுத்திடுவோம். அதையும் கொண்டு வருவோம். ஆனால், அதைவிட 21ம் திருத்தத்தை கொண்டு பிரதானமாக கொண்டு வருவோம்.

நம்பிக்கை இல்லா பிரேரணை என்பது ஜனாதிபதியின் அரசாங்கத்துக்கு எதிரானது. அது வெற்றி பெற்றால், புதிய அமைச்சரவை இந்த ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவின் கீழேயே அமைய வேண்டும். அதை செய்ய முடியாது. அது நடைமுறை சாத்தியமற்றது.

ஏனெனில், ஜனாதிபதியின் சொந்த பொதுஜன முன்னணி கட்சி அமைச்சரவையே இவருக்கு கீழே செயற்பட முடியாவிட்டால், எதிரணியும் பங்கு பற்றும் காபந்து அரசாங்கம் எப்படி இவருக்கு கீழே செயற்பட முடியும்? அப்படியானால், அது “காபந்து” அரசாங்கமாக இருக்காது, “கால்பந்து” அரசாங்கமாகவே இருக்கும்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை, ஆதரிக்காமல், தமது மனசாட்சியை மறந்துவிட்டு பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிக்கும் எம்.பி.களை அவர்களுக்கு வாக்களித்த மக்கள் அடையாளம் கண்டு கொள்ளலாம். வெளியே போராடும் மக்களும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இந்த ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச பதவி விலகி வீட்டுக்கு போக வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த இலங்கை மக்களின் கோரிக்கை.  ஆகவே அவர் வீட்டுக்கு போகும் போது, 21ம் திருத்தத்தை, தமது மனசாட்சியை மறந்துவிட்டு எதிர்த்து வாக்களிக்கும் எம்.பி.களையும் அவருடன் துணைக்கு அனுப்பி வைக்கலாம்.

ஜனாதிபதி – சுயாதீன எம்.பிக்களுடனான சந்திப்பில் இணக்கப்பாடு இல்லை!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் எம்.பிக்களுக்கும் இடையில் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.

புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று சுயாதீன உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளது.

அத்துடன் அந்த அமைச்சரவையில் ராஜபக்சக்கள் இடம்பெறக்கூடாது எனவும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மேற்படி பிரதிநிதிகளை ஜனாதிபதி நேற்றிரவு அழைத்திருந்தார். நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் பிரதானிகள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

சுமார் இரண்டவரை மணிநேரம்வரை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இடைக்கால அரசு அமைப்பது தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரியவருகின்றது.

Posted in Uncategorized

அரசாங்கமும் தோற்றுவிட்டது எதிர்க்கட்சிகளும் தோற்றுவிட்டன நாடே தோற்றுவிட்டது?

-நிலாந்தன்.

தற்பொழுது தென்னிலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மக்கள் எழுச்சிகள் இலங்கைத்தீவின் நவீன அரசியல் வரலாற்றில் முன்னெப்பொழுதும் ஏற்படாதவை. இதற்கு முன்பு இலங்கைத்தீவு, நாடு தழுவிய வேலை நிறுத்தங்களை கண்டிருக்கிறது. தமிழ் மக்களின் சத்தியாகிரக போராட்டத்தை கண்டிருக்கிறது. தொழிற்சங்க போராட்டங்களை கண்டிருக்கிறது. ஜேவிபியின் இரண்டு ஆயுதப் போராட்டங்களை கண்டிருக்கிறது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை கண்டிருக்கிறது. தவிர கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் ஆங்காங்கே தெட்டந் தெட்டமாக நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்கள், ஒருநாள் எழுத தமிழ்கள், சில நாள் P2P போன்றவற்றை கண்டிருக்கிறது. ஆனால் தென்னிலங்கையில் இப்பொழுது நடப்பதுபோல மக்கள் தன்னியல்பாகவும் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் அரசாங்கத்துக்கு எதிராக வீதிகளில் இறங்குவது என்பது ஒரு புதிய தோற்றப்பாடு.

இம்மக்கள் எழுச்சிகளில் ஒருபகுதி எதிர்க்கட்சிகளால் ஒழுங்கு படுத்தப்படுகின்றன. மற்றொரு பகுதி தன்னியல்பானது. மக்கள் தாமாக முன்வந்து போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இந்த மக்கள் எழுச்சிகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டன.அவற்றுக்கு தலைமைத்துவம் உண்டு,வழிகாட்டல் உண்டு. ஒரு அரசியல் வழி வரைபடம் உண்டு. ஆனால் தன்னியல்பான போராட்டங்கள் அப்படியல்ல.அவற்றுக்கு தலைமைத்துவம் இல்லை.பொது சனங்களின் கோபம்தான் அந்த போராட்டங்களுக்கான உணர்ச்சிகரமான அடிப்படை. அப் போராட்டங்களில் கட்சிகளின் சின்னங்கள் இல்லை,கட்சிகளின் கோரிக்கைகளும் இல்லை. ஆனால் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பொதுவாக சிங்கக்கொடிகளோடு காணப்படுகிறார்கள்.இவர்களுக்கு தலைமைதாங்கி ஒன்று திரட்டும் மக்கள் இயக்கம் அரங்கில் இல்லை.அரங்கில் உள்ள கட்சிகளும் ஒற்றுமையாக இந்த மக்கள் எழுச்சி களுக்கு தலைமை தாங்கும் நிலை இல்லை.

இலங்கைத்தீவின் நவீன அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சிகளுக்கு இது போல ஒரு பொன்னான தருணம் கிடைக்கவில்லை. இந்த மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்கி அவற்றை அவற்றின் உச்சம் வரை கொண்டு போக எதிர்க்கட்சிகள் தயாரா?

கடந்த சில வார நிகழ்வுகளை உற்றுப்பார்த்தால், குறிப்பாக நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களை உற்றுப் பார்த்தால் எதிர்க்கட்சிகளுக்கு அவ்வாறு மக்கள் எழுச்சிகளை ஒருங்கிணைத்து புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் இல்லை என்றே தெரிகிறது.

இதுபோன்ற மக்கள் எழுச்சிகளை சரியாக வழி நடத்தினால் அவை புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும். அவ்வாறு வழி நடத்தாவிட்டால் அவை திசை திருப்பப்படும்.அல்லது காலகதியில் சோர்ந்து போய்விடும்.

வழிநடத்தப்படாத மக்கள் எழுச்சிகள் திசை திருப்பப்படுமாக இருந்தால் அவை விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும். அவை வன்முறையில் போய் முடியும். அது அரசாங்கத்துக்கு படைத்தரப்பை ஏவிவிடுவதற்குரிய வாய்ப்புக்களை வழங்கக் கூடும்.அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களை கையாள்வதற்கு படைத்தரப்பை அனுப்பத் தயாரில்லை.சரத் பொன்சேகா கூறியதுபோல எட்டாம் வகுப்பு வரை படித்த சிப்பாய்களை அங்கே அனுப்பக்கூடாது என்று தீர்மானித்து அரசாங்கம் அதை செய்யவில்லை.சரத் பொன்சேகா கூறுவதற்கு முன்பே அரசாங்கம் அந்த முடிவை எடுத்து விட்டது.

ஏற்கெனவே இன முரண்பாட்டில் போர்க் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கும் படைத்தரப்பை ஒப்பீட்டளவில் அதிகம் பாதுகாத்தது இந்த அரசாங்கம்தான். போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து ஒருவர் மற்றவரை பாதுகாக்க வேண்டிய தேவை பரஸ்பரம் படைத்தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் உண்டு. கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கம் அதைச் செய்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு அரசாங்கம் படைத்தரப்பை அதன் சொந்த மக்களோடு மோத விடத் தயங்குகிறது.அதன் மூலம் படைத்தரப்பின் பெயர் மேலும் கெடுவதை அரசாங்கம் விரும்பவில்லை.

தவிர இதுபோன்ற தன்னியல்பான எழுச்சிகளின்போது படைத் தரப்பை முன்னிறுத்துவது எதிர்மறையான விளைவுகளையே தரும்.ஏற்கனவே கொழும்பில் அவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்ட முற்பட்ட ராணுவத்தின் பீல்ட் பைக் அணியைச் சேர்ந்த ஒரு சிப்பாய் போலீசாரால் தாக்கப்பட்டது விவகாரம் ஆக மாறியிருக்கிறது.

அதேசமயம் வழிநடத்தப்படாத எழுச்சிகளை அடக்க முற்படாமல் அவற்றை அவற்றின் போக்கிலேயே விட்டால், அவை ஒரு கட்டத்தில் தேங்கி நின்றுவிடும் அல்லது சோர்ந்து போய்விடும்.இதற்கு உலகளாவிய அனுபவங்கள் உண்டு.எனவே தன்னியல்பான மக்கள் எழுச்சிகளை எதிர்க்காமல் அவற்றின் போக்கிலேயே விடுவதன்மூலம் ஒரு கட்டத்தில் அவை தாமாக நீர்த்துப் போய்விடும்,சோர்ந்து போய்விடும் என்று அரசாங்கம் நம்பக் கூடும்.

இக்காரணங்களினால்தான் அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு படைத்தரப்பை அனுமதிக்கவில்லை.அனுமதிக்கப்பட்ட பொலிசாரும் பல சமயங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக காணப்படுகிறார்கள்.

ஹோமகமவில் ஊரடங்கு வேளையிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய பொலிசார் அனுமதித்தார்கள். அதனால் ஹோமாகம பொலிஸுக்கு ‘ஜெயவேவா’ என்று மக்கள் கோஷமெழுப்பியுள்ளார்கள். குருநாகலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் தமது பக்க நியாயங்களை விளக்கிக் கூறிய பொழுது ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கண்ணீர் விடுகிறார். கொழும்பில் பீல்ட் பைக் சிப்பாயை தாக்கியது ஒரு போலீஸ் அதிகாரி தான்.

எனவே இதுபோன்ற தன்னியல்பான எழுச்சிகளை படைத்தரப்பு, பொலீஸ் போன்றவற்றின்மூலம் அடக்குவதில் உள்ள வரையறைகளை அரசாங்கம் உணர்ந்து இருக்கிறது.மாறாக அவற்றை அடக்காமல் அவற்றின் போக்கிலேயே விடுவதன் மூலம் ஒரு கட்டத்தில் அவை தாமாக வேகம் தணிந்து சோர்ந்து போகக்கூடிய வாய்ப்புக்களையும் கவனத்தில் எடுத்து அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களை அதிகம் அடக்க முற்படவில்லை.

இவ்வாறு அரசாங்கம் அடக்க தயங்கும் மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கி மக்களின் கோபத்தை ஒரு அரசியல் ஆக்க சக்தியாக மாற்ற எதிர்க்கட்சிகளும் தயாரில்லை.எதிர்க்கட்சிகள் மேற்படி மக்கள் எழுச்சிகளை ஒருங்கிணைக்க முடியாதவைகளாகக் காணப்படுகின்றன. ஒருபுறம் எதிர்க்கட்சிகள் தாங்களாக கூட்டங்களையும் எழுச்சிகளையும் ஒழுங்குபடுத்தி வருகின்றன.ஆனால் தன்னியல்பான மக்கள் எழுச்சிகள் பொறுத்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒரு பொதுவான வழி வரைபடம் இருப்பதாக தெரியவில்லை.

எதிர்க்கட்சிகளால் புரட்சிகரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதனை அரசாங்கம் நன்கு விளங்கி வைத்திருக்கிறது.மக்கள் எழுச்சிகளுக்கு தலைமை தாங்கத் தவறியது மட்டுமில்லை நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிரான உறுப்பினர்களை திரட்டி ஒரு பெரும்பான்மையைக் காட்டுவதிலும் எதிர்க்கட்சிகள் இன்று வரையிலும் முன்னேறவில்லை. அரசாங்கம் அதை ஒரு சவாலாகவே எதிர்க்கட்சிகளின் நோக்கி முன்வைக்கின்றது. ஆனால் அரசாங்கம் கேட்கும் பெரும்பான்மையை காட்ட எதிர்க்கட்சிகளால் முடியாமல் இருக்கிறது அதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு.

முதலாவது காரணம் எதிர்க் கட்சிகள் மத்தியில் எல்லாரையும் ஒன்றிணைக்கவல்ல, மூன்று இன ங்களின் வாக்குகளையும் கவரவல்ல ஜனவசியம் மிக்க தலைவர்கள் குறைவாகக் காணப்படுவது.

இரண்டாவது காரணம் எதிர்க்கட்சிகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கத் தயாரில்லை.அவ்வாறு ஆட்சிப்பொறுப்பை ஏற்பதன்மூலம் தோல்வியின் பங்காளிகளாக மாறத் தயாரில்லை.இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளை யார் வந்தாலும் எடுத்த எடுப்பில் தீர்க்க முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கும் நன்கு தெரிகிறது. எனவே ஏற்கனவே தோற்றுவிட்ட அரசாங்கத்தை மேலும் மோசமாக தோல்வியுற வைப்பதன் மூலம் தமக்கு சாதகமான ஒரு நிலைமையை கனிய வைக்கலாம் என்று எதிர்கட்சிகள் கார்த்திருக்கின்றனவா?ஆனால் அரசாங்கம் எவ்வளவுதான் தோல்வியுற்றாலும் யாப்புக்குள் நின்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாமா?

மூன்றாவது காரணம் யாப்பு. இப்போதிருக்கும் நெருக்கடிகள் யாவும் ஒருவிதத்தில் யாப்பு நெருக்கடிகள்தான். யாப்புக்குள் நின்று இப்போதிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறுவது கடினம்.நாடாளுமன்றத்தை உரிய காலம் வரும்வரை கலைக்க முடியாது.நாடாளுமன்றத்தைக் கலைக்கும்வரை நெருக்கடிகளை பொறுத்துக்கொள்ள முடியாது. ஜனாதிபதி ஒன்றில் தானாக முன்வந்து பதவி விலக வேண்டும்.அல்லது அவரை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் தோற்கடிக்க வேண்டும்.எதிர்க்கட்சிகளிடம் அதற்கு வேண்டிய பலம் உண்டா? இல்லையென்றால் இந்த ஜனாதிபதியின் கீழ்தான் ஒரு இடைக்கால ஏற்பாட்டுக்கு போக வேண்டியிருக்கும். அப்படி இடைக்கால ஏற்பாட்டுக்கு போனால் அதில் ஜனாதிபதியின் தோல்வியை புதிய இடைக்கால கட்டமைப்பும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். எப்படித்தான் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இந்த பிரச்சினைக்கு யாப்புக்குள் தீர்வு கிடையாது. யாப்புக்கு வெளியே சிந்திக்க வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் தயாரில்லை.”நாங்கள் யாப்பு ரீதியிலான ஜனநாயகத்தை அதற்குரிய கட்டமைப்புக்களுக்கூடாக உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த ஜனாதிபதி முறைமையின் கீழ் இந்த ஜனாதிபதியின் கீழ் அதற்கான வழி எதுவும் முன்னாள் இல்லை” என்று சஜித் கூறுகிறார்.

மேற்கண்ட மூன்று காரணங்களின் அடிப்படையிலும் தொகுத்துப் பார்த்தால் இப்போதிருக்கும் நெருக்கடியை யாப்புக்குள் நின்று தீர்க்க முடியாது. ஆனால் யாப்புக்கு வெளியே போனால் தீர்வு உண்டு.அவ்வாறு வெளியே போகத் தேவையான துணிச்சலையும் பலத்தையும் மக்கள் எழுச்சிகளை ஒருங்கிணைப்பதன்மூலம் பெறலாம்.ஆனால் அதற்கு எதிர்க்கட்சிகள் தயாரில்லை.இதுதான் பிரச்சினை.

ஏற்கனவே தோல்வியுற்ற ஓர் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப யாப்பு தடையாக இருக்கிறது. அந்தத் தடையை உடைத்துக்கொண்டு முன் செல்ல தேவையான பலத்தை மக்கள் எழுச்சிகள் வழங்குகின்றன.ஆனால் எதிர்க் கட்சிகளும் இந்த பொன்னான சந்தர்ப்பத்தை பயன்படுத்த தயாராக இல்லை. இப்படிப்பார்த்தால்,இலங்கைதீவில் அரசாங்கம் தோற்றுவிட்டது. எதிர்க்கட்சிகளும் தோற்றுவிட்டன. மொத்தத்தில் இலங்கைதீவே தோற்றுவிட்டது. இதில் 2009இல் ராஜபக்சக்கள் சிங்கள மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த வெற்றி எங்கே?

மனித உரிமைகளும் மதித்தல், பாதுகாத்தலையும் உறுதி செய்யுமாறு ஐ.நா. நிபுணர்கள் குழு அரசாங்கத்திற்கு அழைப்பு

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் நடத்தப்பட்ட சில போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அனைத்து மனித உரிமைகளும் மதிக்கப்படுவதையும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு ஐ.நா. நிபுணர்கள் குழு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை அவசரகால பிரகடனம் மற்றும் சமூக ஊடகங்கள் மீதான தடை ஆகியவற்றால் மிகவும் கவலையடைவதாகவும் ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கூறியுள்ளது.அமைதியான முறையிலான ஒன்றுகூடல் மற்றும் போராட்டங்களின் போது கருத்து தெரிவிப்பதற்காக உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிகத்தை அதிகமாகப் பயன்படுத்துவதையும் கண்டிப்பதாக அறிவித்துள்ளது.வெளிநாட்டு கடன், ஊழல் மற்றும் கொரோனா நெருக்கடி ஆகியவற்றின் தாக்கம், நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது

“இனவரம்பில்லாமல் உதவ வேண்டும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனோ கணேசன் வேண்டுகோள்

இனவரம்பில்லாமல் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவ வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “தமிழக முதல்-அமைச்சரின் உதவி கரங்கள், எல்லா தமிழருக்காகவும் நீள்வதை நன்றியுடன் வரவேற்கும், அதேவேளை, இன்று இலங்கையில் நிகழும் ஏகோபித்த போராட்டங்களை அனுசரிக்கும் விதமாக முதல்-அமைச்சரின் சமூகநீதி கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீள வேண்டுமென கோருகிறோம்” என்று அதில் மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இலங்கையில் வசிக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழக அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகவும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை நிலவரம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த பீரிஸ்!

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, இலங்கையில் நிலவும் நிலைமை குறித்து இதன்போது அமைச்சர், இராஜதந்திரிகளுக்கு விளக்கியுள்ளார்.

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில்   இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளுக்கு மக்கள் முகம்கொடுத்துள்ளமை தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் பீரிஸ், மக்களின் கஷ்டங்களையும் அதன் அளவையும் இலங்கை அரசாங்கம் முழுமையாக புரிந்துக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இதன்படி கூடிய விரைவில் தீர்வுகள் கிடைக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய பதவி விலக வாய்ப்பு உள்ளதா? முன்னாள் தேர்தல் ஆணையாளர் கருத்து

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரும்பினால் தனது பதவியில் இருந்து விலகும் வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போது அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:

1953 ஆம் ஆண்டு பணிப் புறக்கணிப்பு போராட்டத்துக்குப் பின்னர் 69 வருடங்களில் தென்பகுதியில் பாரிய மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

மக்களின் அழுத்தத்திற்கு அமைய ஜனாதிபதி பதவி விலகினால் செயற்படுவதற்கு ஏதுவாக ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார். பாராளுமன்றத்தினால் ஒருவர் நியமிக்கப்படும் வரை பிரதமரே ஜனாதிபதியாக செயற்பட முடியும்.

இரண்டு தடவை ஜனாதிபதி பதவி வகித்து- தற்போது பிரதமராக பதவி வகிக்கும் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியுமா? என்பது குறித்தும் சிக்கல் உள்ளது.

மீண்டும் அவர் ஜனாதிபதி பதவிக்கு வர முடியாது என்றால் சபாநாயகருக்கு ஜனாதிபதி பதவியை ஏற்கும் அதிகாரம் உள்ளது என்றார் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய.

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கவேண்டும்- மட்டக்களப்பு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகரசபையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 59வது அமர்வுக்கான (49வது பொதுக் கூட்டம்) நேற்று மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்று கோரும் பிரேரணை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களினால் சபைக்கு கொண்டுவரப்பட்டதுடன் குறித்த பிரேரணை எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

Posted in Uncategorized