இந்திய கடல் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறை காட்ட வேண்டும்; இந்திய வெளிவிவகாரப் பேச்சாளர்

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு குறித்து இலங்கை அக்கறையுடன் செயற்படும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரின்டம் பக்ச்சி நேற்று இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இலங்கை, பகிரப்பட்ட சூழலில் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட எங்களின் பரஸ்பர பாதுகாப்பு உட்பட எங்களின் மிகச்சிறந்த இரு தரப்பு ஒத்துழைப்பை கருத்தில் கொள்ளும் என எதிர் பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரரிவித்தார்.

கொழும்பு துறை நகர திட்டம் குறித்து எங்களின் சமீபத்தைய பாதுகாப்பு அடிப்படையில் சமீபத்தைய விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகநகர கட்டமைப்பு குறித்து இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள கரிசனைகளை கருத்திலெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டில் இல்லாவிட்டால் அதிகாரங்கள் பறிபோவதை தடுக்க முடியாது -ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்படுவது தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. மாகாணசபைக்கு சொந்தமான வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் கையகப்படுத்தும் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எமக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக தமிழர் தரப்புகளில் இருந்து குற்றம் சாட்டி அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கிறன. இந்த நிகழ்ச்சி நிரல் ஆரம்பமோ முடிவோ அல்ல. முன்னைய காலங்களில் இருந்தே தொடர்ந்தும் இப்படியான அதிகாரப் பறிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தி மெதுவாக மாகாண சபைக்குரிய பாடசாலைகளை கையகப்படுத்த மத்திய அரசு ஆரம்பித்திருந்தது. அதேபோல அபிவிருத்தி என்ற போர்வையில் காணி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. உள்ளூராட்சி சபையின் அனுமதிகள் இல்லாமலே அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. இப்போது மாகாணசபை வைத்தியசாலைகளை கையகப்படுத்துவதற்கான அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இப்படியாக ஒவ்வொரு நிகழ்வுகளும் நடக்கின்ற போது மாத்திரம் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் நடவடிக்கையையே நாம் செய்கிறோம். தீர்க்கதரிசனமாக, நாங்கள் போராடி இரத்தம் சிந்தி பெற்ற ஆகக்குறைந்த அதிகாரங்கள் கூட எங்கள் கைகளை விட்டு பறிபோவதை தடுப்பதற்கான, வரும் முன் காக்கும் நடவடிக்கையாக ஒருமித்த வேலைத்திட்டம் அல்லது ஒருமித்த நிலைப்பாடு தமிழ் தரப்பிடம் இல்லை.

தேர்தல் அரசியலை நோக்கிய கட்சி பூசல்களை முன்வைத்து செயற்படுவதனால் இருப்பவற்றை தக்கவைத்துக்கொள்ள முடியாது. நாம் இரத்தம் சிந்திப் போராடி பெற்ற, ஆகக் குறைந்த அதிகாரங்கள் இவை. நம்முடைய அரசியல் தீர்வாக மாகாணசபையையின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை நாம் கருதவில்லை. அதில் எல்லோரும் தெளிவாகவே உள்ளோம். ஆனால் இருப்பவற்றை இழந்துவிடாமல் காப்பது இனத் தலைவர்களின் கடமை.

இதன் அடிப்படையில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு தமிழர் தரப்பு வர வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை பல தடவை நாம் வலியுறுத்தி இருந்தாலும் தத்தமது பதவி, கட்சி அரசியல் நலன்களுக்காக அதற்கான பேச்சுக்களை முன்னெடுக்கும் போது சில தரப்புக்கள் தயக்கம் காட்டி வருவது வருத்தத்துக்குரிய விடயம். அதிகாரங்கள் பறிக்கப்படுவதற்கு ஒருமித்த நிலைப்பாட்டில் எதிர்வினையாற்றாது விட்டால் எவ்வித பலனுமற்ற மாகாண சபை என்று எலும்புக்கூடு தான் எங்களுக்கு மிஞ்சப் போகிறது.

அதையும் தாண்டிய கொள்கை ரீதியாக சமஷ்டி அல்லது சுயாட்சி அலகு முறையான தீர்வு திட்டத்துக்கான பேச்சு வார்த்தைகளும் அதற்கான ஆதரவுகள் சர்வதேச மட்டத்தில் வலுப்பெற்று வந்தாலும் ஏற்கனவே அரசியல் யாப்பிலும் எமது கைகளிலும் இருப்பதை இழந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். அது ஒரு தீர்வாக அல்லாவிட்டாலும் இருக்கும் உரிமையை இழக்காமல் இருப்பதற்காகவே ஒருமித்த நிலைப்பாடு அவசியமாகிறது. பட்டுவேட்டி கோரிக்கை வைத்து இருக்கிறோம் என்பதற்காக இடுப்பில் இருக்கும் துண்டு மெதுவாக உருவ படுகின்ற பொழுது அதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஏற்றுக்கொள்ள பட்ட யதார்த்தம்.

ஆகவே தமிழர் தரப்பாகிய நாங்கள் ஒவ்வொரு சம்பவத்திற்கும் பதில் அறிக்கை அல்லது பதில் நடவடிக்கை எடுப்பதை விட தீர்க்கதரிசனமாக இந்த அதிகாரங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு நமக்குள்ளே ஒருமித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் எதிர்வினையாற்றுவதன் மூலம்தான் மத்திய அரசாங்கத்தின் தலையீடுகளையோ அல்லது திட்டமிட்ட அதிகார பறிப்புகளையோ தடுத்து நிறுத்த முடியும்.

கொரோனா சூழ்நிலை இருப்பதனால் நேரடியான சந்திப்புகள் சாத்தியமில்லாத சூழல் நிலவுகிறது. மிக விரைவில் மெய்நிகர் இணையவழி ஊடாகவேனும் எப்படியான ஒருமித்த வேலைத்திட்டத்தை செயல்படுத்தலாம் அல்லது செயல்படுத்த முடியாது என்ற ஆராய்வுக்கான கலந்துரையாடலுக்கு தமிழ் தேசிய பரப்பில் செயலாற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிகளை தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி இணைந்து கொள்ள கோருகிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் – ரெலோ
தமிழ் தேசிய கூட்டமைப்பு.

உள்ளுராட்சி அதிகாரத்தை மீறி நியமனங்களை புகுத்துவதை நிராகரித்தது வலி கிழக்குப் பிரதேச சபை – ரெலோ தவிசாளர் நிரோஷ்

உள்ளுராட்சி மன்றங்களால் நியமிக்கப்படும் அட்டவணைப்படுத்தப்படாத ஆளணியை பல்பணி அபிவிருத்திச் செயலணி திணைக்களம் ஊடாக நிரப்ப முயற்சிக்கப்படுவதை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை நிராகரித்துள்ளதுடன் தொடர் அழுத்தம் காணப்பட்டால் நீதிமன்றம் செல்லவும் முடிவெடுத்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வடக்கு மாகாண திணைக்களங்களில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் பயிற்சி பெற்ற 105 பேரை ஆரம்ப நிலை சேவை தேவையின் நிமிர்த்தம் தற்காலிக அடிப்படையில் உள்வாங்குவதற்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பிரதம செயலாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களம் 40 பயிலுநர்களை முதற்கட்டமாக உள்ளராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது. இது தொடர்பில், யாழ். மாநகர சபை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு அதன் பிரதிகள் ஏனைய பிரதேச சபைகளுக்கும் முகவரியிடப்பட்டிருந்தன. இந் நிலையில் நியமனக் கடிதங்கள் எதுவும் அற்ற நிலையில் குறித்த பயிலுனர்கள் பிரதேச சபைகளுக்கு அனுப்பப்பட்டதுடன் ஏனைய வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்கு மூன்று பயிலுனர்கள் அனுப்பப்பட்டனர்.

இதனையடுத்து, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பிரதேச சபையின் கூட்டத்தினைக் கூட்டியிருந்தார்.

அக் கூட்டத்தில் தவிசாளார், உள்ளுராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்படாத ஆளணி நியமனங்களை மத்திய அரசின் தாபனங்கள் அரசியல் காரணங்களுக்காகக் கையாள்வது ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆளணி நியமனம் தொடர்பில் உள்ளுராட்சி மன்றங்களால் ஏற்கனவே பகிரப்பட்டு கேள்விக்கு இடமின்றி அதிகாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதனை தற்போது கேள்விக்குட்படுத்துகின்றனர். எமது சபைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு பகுதி பகுதியாக நாம் உரிய அனுமதிகளைப் பெற்று நேர்முகத் தேர்வுகளை நடத்தி தெரிவு செய்யப்பட்டவர்களது பெயர் விபரங்களையும் பகிரங்கப்படுத்திவிட்டோம். ஆனால் அந் நியமனங்களுக்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி தேவை என வடக்கு மாகாண சபை கருதியமையினால் அங்கு அனுப்பப் பட்டிருக்கின்றது. நியமனத்திற்குத் தெரிவானவர்கள் நியமனத்தினை விரைவுபடுத்த மனித உரிமை ஆணைக்குழுவைக்கோரியுள்ளனர்.

எனினும் அது அரசாங்கத்தின் அனைத்து ஆட்சேர்ப்புக்களையும் தற்காலிகமாக நிறுத்துதல் என்ற காரணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. எமது சபைகளில் அங்கீரிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கை உரியவாறு நிரப்ப முடியாமை காரணமாக நாம் வெளிவாரியாக சனசமூக நிலையங்கள் ஊடாகப் பணியாளர்களைப் பெற்றே மக்களுக்கு சேவை ஆற்றுகின்றோம். இவ்வாறாக சபைகளில் பலர் வருடக்கணக்கில் கடின பணியை ஆற்றிவருகின்றனர். அவ்வாறு பணியாற்றூவர்களுக்கு நேர்முகத்தேர்வில் கூட 10 புள்ளிகள் வழங்குகின்றோம்.

இவர்களின் நியமனங்களை அரசாங்கம் ஏற்பதை விடுத்து, புதிதாக முறையற்ற நியமனங்களை மேற்கொள்வதை நாம் மறுக்கின்றோம். புதிதாக வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுவதை நாம் வரவேற்கின்றோம். ஆனால் அந் நியமனங்கள் எமது சபையின் அதிகாரங்களை மீறாத வகையில் கடந்த காலத்தில் எமது சபைக்காக பணியாற்றபவர்களை தூக்கி வீசாத வகையில் அமைய வேண்டும்

ஏற்கனவே நிதி அமைச்சு ஆரம்ப நிலைசேவை வகுப்பிற்குத் தேவையான பணியாளர்களை பல்பணி அபிவிருத்திச் செயலணி வாயிலாக நியமிக்க கடந்த ஆண்டு சுற்றிக்கை வெளியிட்டிருந்தபோதும் அது உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஏற்றது என சபை கருதவில்லை. எம் மீது தொடர் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டால் நீதிமன்றம் செல்லவேண்டியேற்படும் எனவும் தவிசாளரால் எடுத்துரைக்கப்பட்டது.

இந் நிலையில் ஆளணியை நிரப்புதல் தொடர்பாக நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்றுள்ள நிலையில் புதிதாக அனுப்பப்பட்டுள்ள குறித்த பயிலுனர்களை அனுமதிப்பதில்லை. நாம் ஏற்கனவே நேர்முகத் தேர்வுகளை நடத்தியிருக்கும் நியமனத்திற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் உள்ளுராட்சி மன்றத்திற்குப் பகிரப்பட்டு இதுவரைகாலமும் தடையின்றி பிரயோகிக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்படாத நியமனங்களை அதிகாரத்தை உள்ளுராட்சி மன்றங்கள் பிரயோகிக்கஇடமளிக்கப்படவேண்டும் எனவும் இல்லையேல் பொருத்தமான நீதிமன்றத்தை நாடவும் முடிவு எடுக்கப்பட்டது. இத் தீர்மானங்களுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தவிர்ந்த சகல கட்சிகளும் ஏகமனதாக அங்கீகாரமளித்தனர்.

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தது கூட்டமைப்பு

13ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை உயர் ஸ்தானிகர் இன்று முற்பகல் இந்திய இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐந்து பேரடங்கிய குழுவினர் இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்து கலந்துயையாடியுள்ளனர்.

இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

13ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை உயர் ஸ்தானிகர் இச்சந்திப்பில் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் மற்றும் சுமந்திரன் எம்.பி. ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றனர்.

வாக்காளர் பெயர்பட்டியலை திருத்தம் செய்ய புதிய நடைமுறை

இந்த ஆண்டுக்கான வாக்காளர் பெயர்பட்டியலை புதிய முறையின் கீழ் திருத்த தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் வாக்காளர் பெயர்பட்டியலை திருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் நாட்டினுள் நிலவும் கொவிட் நிலமை காரணமாக சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாக்காளர் பெயர் பட்டியலில் வசிக்கும் இடம் தொடர்பில் அவதானித்து அதில் திருத்தங்கள் இருப்பின் மாத்திரமே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணத்தடைக்கு மத்தியில் குருந்தூர்மலை விகாரைக்கான பொது மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

நாட்டில் கொவிட் 19 தீவிர பரவல் நிலை காரணமாக பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சர்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம் பெற்று வந்த முல்லைத்தீவு குருந்தூர்மலையில் புணருஸ்தானம் செய்யப்பட்டு வரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராணுவத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 13 .06.2021 (ஞாயிற்றுக்கிழமை ) முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்சவின் பங்கேற்புடன் இடம் பெற்றுள்ளது.

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, 13.06.2021 அன்று இந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக குருந்தூர்மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே 18 அன்று குருந்தூர் மலையில் தொல்பொருள் துறை புராதன ஸ்தூபியின் அகழ்வாராய்ச்சியை முடித்த நிலையில் குருந்தாவசோக ரஜமாஹா விகாரைக்கான புணருஸ்தான பணிகள் பிரித்தோதும் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் பண்டைய சிலை இல்லமும் விரைவில் தோண்டப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த ஒருமாத காலமாக பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இறுக்கமான சுகாதார நடைமுறைகள் நடைமுறைப்படுத்த பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் நூறுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான பூசை வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே மீண்டும் மண்டபங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளது.

ஒன்று கூடுவதற்கு ஆலயங்களில் சமய நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடைகள் விதிக்கப்பட்டு கைதுகள் இடம்பெற்று வரும் நிலையில் அந்த நிலைமைகளுக்கு மாறாக குருந்தூர் மலையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே நில அளவை திணைக்களத்தால் 79 ஏக்கர் நிலங்கள் குருந்தூர் மலை தொல்லியல் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு எல்லையிடப்பட்டுள்ள நிலையில் குருந்தூர் மலை புராதன விகாரையின் பிரதான தளம் தற்போது 420 ஏக்கர் என வரையறுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கின் பாரிய சிதைவுகளை கொண்ட நிலப்பரப்பை கொண்ட பௌத்த பூமி குருந்தூர் மலை எனவும் மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் குருந்தூர் மலை விகாரைக்கான புனித பூமி தொல்பொருள் தளத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தொல்பொருள் துறை குறிப்பிடுவதாக குருந்தூர்மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் பிரதேச தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருந்தூர் மலையை சூழவும் தமிழ் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்கள் குடியிருப்பு விவசாய காணிகள் என்பன காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஷானி அபேசேகரவின் பாதுகாப்புத் தொடர்பில் லசந்தவின் மகள் அச்சம்

காவல் துறையால் நிரூபிக்கமுடியாத குற்றத்திற்கான சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சர் ஷானி அபேசேகரவும் உதவி காவல் துறை பரிசோதகர் மென்டிஸும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்தாலும் அவர்களது பாதுகாப்புத்தொடர்பான அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

“சிறிசேனவும் ரணிலும் எனது தந்தை படுகொலைசெய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை குழப்பினார்கள் – லசந்தவின் மகள்

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அகிம்சா விக்கிரமதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

காவல் துறையால் நிரூபிக்கமுடியாத குற்றத்திற்காக இலங்கையின் மிகச்சிறந்த குற்றவிசாரணை அதிகாரியான ஷானி அபேசேகர சுமார் ஒருவருடகாலம் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சர் ஷானி அபேசேகரவையும் உதவி பொலிஸ் பரிசோதகர் மென்டிஸையும் பிணையில் விடுதலை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் மனஆறுதலையும் நம்பிக்கையையும் விதைத்தாலும், அவர்களின் பாதுகாப்புத்தொடர்பில் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

ஷானி அபேசேகர மற்றும் அவரின் கீழ் பணியாற்றிய குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் அச்சமின்றி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் காரணமாகவே எனது தந்தை லசந்த விக்கிரமதுங்கவிற்கும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

இந்த அதிகாரிகள் அவர்களது தைரியமான செயற்பாடுகளின் காரணமாக பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இத்தகைய துன்புறுத்தல்களை முறியடிப்பதற்காகப் பயணிக்கவேண்டியுள்ள நீண்ட பாதையில், ஷானி அபேசேகரவின் விடுதலை என்பது முதற்படி மாத்திரமேயாகும்.

வேறு எந்தவொரு தரப்பினரும் பதிலளிக்க முன்வராத சந்தர்ப்பத்தில், நீதியைப் பெறுவதற்கான எனது பிரார்த்தனைகளுக்கு ஷானி அபேசேகரவும் அவரது அதிகாரிகளும் பதில் வழங்கினார்கள்.

வரலாற்றின் வளைவுகள் அவர்களுக்கான நீதியை உறுதிசெய்வதை நோக்கி நகர்த்திச்செல்லும் என்று முன்னெப்போதையும் விட இப்போது அதிகமான நம்புகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சி தலைவர் கூட்டம் திட்டமிட்ட வகையில் நிறுத்தப்பட்டுள்ளது: விரைவில் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளோம்..!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான தொடர்பு இல்லாமல் போயுள்ளது. பிரதமருக்கும், பங்காளி கட்சி தலைவர்களுக்கும் இடையில் ஒவ்வொரு வாரமும் இடம்பெறும் கட்சி தலைவர் கூட்டம் திட்டமிட்ட வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. கூட்டணிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விலையேற்றம் குறித்து அமைச்சரவை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விமர்சனத்திற்குள்ளாக்கி தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தயுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்திற்கு கூட்டணியின் பங்காளி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த வேளையிலும் இவர் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் ஊடகங்களுக்கு மத்தியில் கருத்துரைத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல்களில் கூட்டணியாக ஒன்றிணைந்து போட்டியிட்டோம். பொதுத்தேர்தலுக்கு பின்னர் கூட்டணியினை பலப்படுத்தும் கொள்கை திட்டங்கள் வகுக்கப்படவில்லை. மாறாக கூட்டணியை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெற்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் இடையிலான தொடர்பு அண்மை காலமாக முறையாக பேணப்படவில்லை. பிரதமர் தலைமையில் ஒவ்வொரு வாரமும் இடம்பெற்ற கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களின் கூட்டம் திட்டமிட்ட வகையில் நிறுத்தப்பட்டுள்ளது..

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் சிரேஷ்ட அரசியல் தலைவர்களை உள்ளிடக்கி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியம் என்ற கோரிக்கையை ஒன்றினைந்து முன்வைத்துள்ளோம். கூட்டணிக்குள் காணப்படும் பிரச்சினைகள் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என்றார்

இலங்கை அரசாங்கத்திற்கு செயற்பாடுகளை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் பேருந்து எதிரே மீனவர்கள் இன்று(புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை அளிக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லையில் இருந்து அருகே இந்திய இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் இடங்களான கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து துறைக்கு சொந்தமான பேருந்துகளை கடல் பரப்பில் இறக்கி வருகின்றனர்.

பேருந்துகளின் கூடுகளை கடலில் இருக்கும் போது கடல் மாசு படுவதுடன் தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும் அவர்கள் விரிக்கும் மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும், கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை கடற்பகுதிக்கும் செல்லகூடும் இதனால் படகுகள் மற்றும் வலைகளை சேதமடைந்து படகு ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனடியாக இலங்கை மீன்வளத்துறை இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

அதேபோல் நாளுக்கு நாள் உயர்ந்து டீசல் விலையால் மீனவர்கள் தங்களது படகுகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனவே மத்திய, மாநில அரசுகள் கலால்,சாலை வரிகளை நீக்கி மீனவர்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள் இலங்கை மீன் வளத்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியிருந்தனர்.

இந்த வருடத்துக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டை, வன்னி மாவட்டத்தில் பட்டினியில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு வினோ எம்.பி பிரதமருக்கு கடிதம்

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வருடாந்தம் அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படும் தலா ஒரு கோடி ரூபா நிதியினை இவ்வருடம் நிறுத்தி அந்த நிதியினை கோவிட்-19 தொற்று காரணமாகவும், பயணத்தடை காரணமாகவும் வாழ்வாதாரத்தை இழந்து பட்டினியில் வாடும் ஏழைக் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்குமாறும், இவ்வருடம் பட்டினிச் சாவுகளைத் தடுக்க இந்நிதிகளைப் பயன் படுத்துமாறும், அடுத்த வருடம் அபிவிருத்தி திட்டங்களுக்குச் செலவிடுமாறும் கோரி நிதி அமைச்சரும், பிரதம மந்திரியுமான மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

இன்று அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

எமது நாட்டில் வேகமாகப் பரவிவரும் கோவிட் – 19 தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டு, பயணத்தடை விதிக்கப்பட்டு தொற்றுப் பரவலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதாரத்துறை சார்ந்தவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு வாரா வாரம் இப்பயணத்தடைகள் ஒரு மாதம் கடந்தும் நீடிக்கப்பட்டே வருகின்றது.

இருந்த போதும் நோய்த்தொற்றின் வேகமும், மரணங்களின் வீதமும் குறைவடைவதைக் காண முடியவில்லை. இந்நிலையில் மக்களின் நடமாடுவதற்கான தடைகள் காரணமாக அன்றாடம் உழைத்து உண்ணும் ஏழைத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், பொருளாதார வலுவற்றோர் என ஏழைக்குடும்பங்கள் பட்டினிச் சாவை என்றுமில்லாதவாறு எதிர் நோக்கியுள்ளனர்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் நிதி உதவி சமுர்த்தி பயனாளிகளுக்கு மட்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி உதவித்திட்டம் பெறாத, சமுர்த்தி உதவி பெறத் தகுதியான குடும்பங்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளன.

அவர்கள் பல்வேறு விதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற 5000 ரூபாய் நிதி நிவாரணமானது கூட பொருட்களின் சமகால, நாளாந்த விலை ஏற்றத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய உதவித் திட்டமாகக் கருத முடியாது. சாதாரண குடும்பம் ஒன்றுக்கு 5000 ரூபாய் 5 நாட்களுக்குக் கூட போதுமானதாக இல்லை.

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும், கோவிட் சட்டங்களை இயற்றும் அரச அதிகாரிகளால், அரசியல்வாதிகளால் 5000 ரூபாவை மட்டும் கொண்டு தத்தமது குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா? மாதாந்த ஊதியம் பெறும் அரச, அரச சார்பற்ற ஊழியர்களினால் கூட வாழ்க்கைச் செலவை ஈடு செய்யமுடியாமல் திண்டாடுகின்றனர்.

இப்படியிருக்கச் சாதாரண, அன்றாடம் உழைத்தாலே அன்றாட ஊதியம் பெறும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட ஏழை, எளிய மக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. வறுமைக்குள் பசி, பட்டினியுடன் போராடும் சாதாரண மக்கள் மன ரீதியில் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பட்டினி காரணமாக இதர பக்க விளைவுகளுக்கும், ஏனைய நோய்களுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர். பட்டினி என்ற நோய் பரவல் தொடங்கினால் அதன் பக்க விளைவு நோய்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாமல் அது மரணத்தை மட்டுமே விட்டுச் செல்லும்.

கோவிட்டை காரணம் கூறி பட்டினி மரணங்களுக்கு அரசாங்கமோ, யாருமே காரணமாக இருந்துவிட முடியாது. இன்று வறிய குடும்பத்தைச் சேர்ந்த நாளாந்த கூலி வேலை செய்வோர் கேட்பதெல்லாம் 3 நேர உணவல்ல, பிரியாணி அல்ல. 3 வேளையிலும் கஞ்சி குடிச்சாவது உயிரோடு வாழவே கேட்கின்றனர்.

குறிப்பாக வன்னி மாவட்ட மக்களின் துயரம் மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்ததுக்கு ஒப்பானதாக இருக்கின்றது. கடந்தகால யுத்த வடுக்களிலிருந்து அவர்கள் இன்னமும் விடுபடவில்லை.

உயிர் இழப்புக்கள், சொத்தழிவுகள், இடப்பெயர்வுகள் எனப் பொருளாதார நிலையில் மீண்டெழ முடியாமல் சிக்கியுள்ளவர்கள் கொடிய நோய்த்தொற்று, பயணத்தடை காரணமாகப் பசியால் இன்று வாடுகின்றனர். தொற்றினால் இறப்பவர்களில் எத்தனை பேர் பட்டினியாலும் அதன் விளைவுகளாலும் இறக்கின்றனர் என்ற கணக்கெடுப்பு நடாத்தப்படுவதில்லை.

இதனால் இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்துக்கான எனது வன்னி மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டினை வறுமை நிலையிலுள்ள எனது மாவட்ட ஏழை மக்களின் பசி, பட்டினியைப் போக்க நிவாரணம் வழங்குவதற்காகப் பயன்படுத்துமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

வன்னி தேர்தல் மாவட்டத்தின் மூன்று நிர்வாக மாவட்டங்களுக்கும் இந்நிதியினை பகிர்ந்தளித்து அவர்களைப் பட்டினியிலிருந்தும், மரணப்பிடியிலிருந்தும் மீட்டெடுக்குமாறும் தங்களை வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அபிவிருத்தி திட்டங்களும் மக்களுக்காகவேயெனினும் அவர்கள் இப்போது உண்ண உணவோ குடிக்க கஞ்சியையோ தான் கேட்கின்றனர். அபிவிருத்தி திட்டங்களை அடுத்த வருடமும் முன்னெடுக்க முடியும்.

பன்முக நிதி ஒதுக்கீட்டைக் கையாளும்; நிதி அமைச்சர் என்ற வகையில் எனது பத்து மில்லியன் ரூபா நிதி மட்டுமல்லாமல், வன்னி மாவட்டத்தின் ஏனைய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இக் கொடிய கோவிட் தொற்றுப் பரவலால் வறுமையும், பட்டினியும் தலைவிரித்தாடுவதால் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் 2250 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டினையும் அந்தந்த மாவட்ட கோவிட் நிதிக்காக, பசிபோக்கும் நிவாரண பணிக்காக விடுவிப்பது காலத்தின் தேவை கருதிய ஓர் முன்மாதிரி நடவடிக்கை எனக் கருதுகின்றேன்.

இது அவசரமும் அவசியமும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது என நம்புகின்றேன். எனது நிதியினை விடுவித்து வன்னியிலுள்ள மூன்று மாவட்டச் செயலகங்களூடாக இடர் நிவாரண உதவியாக வறிய குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்குமாறு தங்களைத் தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.