அரச தலைவர் கோட்டாபயவின் அறிவிப்பை மீறி இருவர் கைது

பொதுமக்களின் போராட்டங்களுக்கு எந்த தடையும் ஏற்படுத்தப்படவில்லை என அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச அறிவித்த நிலையில், நாட்டில் போராட்டங்களை நடத்த முடியாது எனக் கூறி கைது செய்யப்பட்ட இரண்டு சிறு வர்த்தகர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் ( 20) ஐக்கிய சுயதொழில் தொழிற்சங்கத் தலைவர் சார்ள்ஸ் பிரதீப் உள்ளிட்ட இருவரை தலா 50,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.

அரச தலைவர் கோட்டபாய ராஜபகச் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச்செயலாளரிடம் பொது மக்களின் போராட்டங்களில் தனது அரசாங்கம் தலையிடாது எனக் கூறியிருந்தார்.

நாடு முடக்கப்பட்டுள்ளபோதிலும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டதைப் போலவே தங்களையும் வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கவேண்டும் எனக் கோரி கோட்டை புகையிர நிலையம் முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ஐக்கிய சுயதொழில் வர்த்தகர் சங்கம், ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களையும் கோட்டை பொலிஸார் கைது செய்தனர். தான் கொரோனா சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி போராட்டத்தை முன்னெடுப்பதாக பொலிஸாரிடம் சார்ள்ஸ் பிரதீப் குறிப்பிட்டபோதிலும், , “அவ்வாறு செய்ய முடியாது” என அங்கு வந்த பொலிஸ் அதிகாரி குறிப்பிடும் காணொளி ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த இருவரும் சுகாதார விதிகளையும், தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தையும் மீறி ஆரர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்ய விரும்புவதால் இரண்டு சந்தேகநபர்களையும் சிறை வைக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தங்கள் வாடிக்கையாளர்கள் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறாத வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த பின்னர், இரண்டு சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத் தலைமையகத்தில், பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டாரஸை சந்தித்த, அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச போராட்டக்காரர்கள் மீது முன்னரைப் போன்று தடியடி, நீர்த்தாரைத் தாக்குதல் போன்றவற்றை நடத்த, தன்னுடைய ஆட்சியின் கீழ் ஒருபோதும் அனுமதியில்லை எனவும், போராட்டக்காரர்களுக்கென்றே, தன்னுடைய அலுவலகத்துக்கு முன்னால் தனி இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அரசாங்கம் சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் வரவேற்கத்தக்கது – சுரேஷ் பிரேமச்சந்திரன்

அரசாங்கம் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு சொன்னபடி உண்மையாகவும் நேர்மையாகவும் எதிர்காலத்தில் செயற்படுமாக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அதனை அவர்கள் செய்யமாட்டார்கள். இதனை கடந்த கால வரலாறு தெளிவுபடுத்துகின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்று 2 வருடங்களாகும் நிலையில் முதன்முறையாக ஐ.நாவின் பொதுச் செயலாளரை சந்தித்து பல்வேறுபட்ட விடயங்களை கலந்துரையாடியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

இதன்போது தடுப்பில் உள்ள தமிழ் இளைஞர்களை விடுவித்தல், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஐ.நாவுடன் இணைந்து செயற்படுவோம் என்றும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக பல மில்லியன் ரூபா நஷ்டஈடாக வழங்குவது தொடர்பாகவும், அவர்களுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உள்ளக ரீதியாக புலம்பெயர் தமிழர்களை உள்ளடக்கி பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளதாகவும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ச்சியாக ஜனாதிபதியில் இருந்து கீழ் மட்டம் வரை வெளிநாடுகளுக்கு கொடுக்கின்ற செய்திகள் என்பது மிக மிக தவறான பிழையான செய்திகளாகவே காணப்படுகின்றன.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக கடந்த 3 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களில் பங்கேற்ற பெற்றோர்கள் பலர் இறந்துவிட்டார்கள். ஆனால் இன்னும் கூட அவர்களை அழைத்து காணாமலாக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்ன நடந்தது என்பது பற்றி பேசுவதற்கு ஜனாதிபதி தயாராக இல்லை.

அண்மையில் ஒரு விடயம் ஒன்றை ஜனாதிபதி கூறியிருந்தார். “காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆய்வுகளும் விசாரணைகளும் இனிமேல் தேவையில்லை என்றார்” அவர் தான் மரணச் சான்றிதழ் கொடுக்க இருப்பதாகக் கூறுகின்றார். ஆகவே காணாமலாக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மிக சூசகமாக கூறியுள்ளார் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டி இருக்கின்றது.

எனவே, ஜனாதிபதி ஐ.நாவின் செயலாளருடன் பேசிய விடயங்கள் இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக தெளிவாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் காணாமலாக்கப்பட்டோருடைய பெற்றோரின் போராட்டங்கள் சில சமயம் முடிவுக்கு வரலாம். இது தொடர்பாக சர்வதேச சமூகம் விசாரிக்க இருக்கிறதா இல்லையா என்பதை அறியலாம். ஏறத்தாழ 16,000 பேருக்கு மேற்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவார்களா நடத்தமாட்டார்களா என்பதை அறியக்கூடியதாக இருக்கும்.

காணாமலாக்கப்பட்டவர்களை கூட்டிச் சென்றமைக்கு சாட்சிகள் உள்ளன. அவ்வாறானவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதற்கான சாத்தியங்கள் இல்லை என பல உறவினர்கள் நம்புகிறார்கள். இது சம்பந்தமாக ஜனாதிபதி நாடு திரும்பியதும் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் கூற வேண்டும்.

நஷ்டஈடு கொடுப்பதாக இருந்தால் அந்த நஷ்டஈடு என்பது ஒரு சர்வதேசத் தரத்துக்கு ஏற்ப கொடுக்கப்படுமா? அல்லது இலங்கையில் 1 லட்சம் 2 லட்சம் ரூபாவை கொடுத்து அவர்களை ஏமாற்ற போகின்றார்களா என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ள விரும்புகின்றோம். நஷ்டஈடு கொடுக்கும் போது நிச்சயமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேச தரத்துக்கு ஈடாக அது வழங்கப்படவேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை. ஆகவே, இந்த விடயங்களில் தெளிவுபடுத்தினால் நஷ்டஈடு வாங்க விரும்பக்கூடிய பெற்றோர்கள் அனைவரும் எங்களுக்கு எவ்வளவு நஷ்டஈடு கிடைக்கும் என்பதை அறியக்கூடியதாக இருக்கும்.

வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதியின் ஒரே விதமான கதைகளை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிக்கின்றனர். நாங்கள் இதனை பார்ப்போமானால் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக தோற்றப்பாட்டை காட்ட முயற்சிக்கின்றது.

சாதாரணமாக 2 நாட்டு ஜனாதிபதியோ வெளிவிவகார அமைச்சரோ சந்திக்கும் பொழுது கூட்டறிக்கை விடுவது என்பது ஒரு முக்கியமான விடயமாகும். அது 2 தரப்பும் பல்வேறுபட்ட விடயங்களை ஏற்றுக்கொண்டால் ஒத்துக் கொண்டால் அவற்றை கூட்டாக வெளியிடுவர்.

இங்கு இவர்கள் என்ன பேசினார்கள் என்ற விடயத்தை மாத்திரம் ஒரு தரப்பு மாத்திரமே சொல்கிறது. அதாவது இலங்கை ஜனாதிபதியின் தரப்பு, நாங்கள் என்ன பேசினோம் அவர் என்ன பதில் சொன்னார் என்ற விடயங்களை குறிப்பிடுகின்றது.

அரசாங்கம் தான் சொன்னபடி எங்களிடம் உண்மையாகவும் நேர்மையாகவும் எதிர்காலத்தில் செயற்படும் ஆக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால் இதனை அவர்கள் செய்யமாட்டார்கள் என்பதை கடந்த கால வரலாறு தெளிவுபடுத்துகின்றது என்றார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் ஜனாதிபதி தெரிவிப்பு- உறவுகள் கண்டனம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ராஐபக்ச அரசின் உள்ளக பொறிமுறையை தமிழர்கள் நம்பத் தயார் இல்லை – ரெலோவின் இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

சர்வதேச நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்காக போலி நாடகம் ஒன்றை அரங்கேற்றி மீண்டும் காலத்தை இழுத்தடிக்க முயற்சிக்கிறார்கள் இதனை பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒரு போதும் நம்பத் தயார் இல்லை என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.

ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளரை ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்ச சந்தித்த போது குறிப்பிட்ட உள்ளகப் பொறிமுறை குறித்து கருத்து வெளியிடும் போதே ரெலோவின் இளைஞர் அணித்த தலைவர் இக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டபாய ராஐபக்ச ராஐபக்ச ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளரை 20/09/2021 சந்தித்த போது பல விடையங்களை வாய்மூல வாக்குறுதியாக கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை. காரணம் போர்க் குற்றங்கள் மனிதப் படுகொலைகள் இனப்படுகொலைக்கான பொறுப்புக் கூற வேண்டிய தரப்பு உள்ளகப் பொறிமுறையை கையாள முடியாது. அத்துடன் உள்ளகப் பொறிமுறை மூலம் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதாலே பாதிக்கப்பட்ட தரப்புக்கள் அனைவருமாக சர்வதேச பொறிமுறை ஊடாக நீதியான விசாரணை வேண்டுமேன கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

கோட்டபாய ராஐபக்ச பாதுகாப்பு செயலராக இருந்த போது உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தார்கள் தற்போது சர்வதேச நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்காக போலி நாடகம் ஒன்றை அரங்கேற்றி மீண்டும் காலத்தை இழுத்தடிக்க முயற்சிக்கிறார்கள் இதனை பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒரு போதும் நம்பத் தயார் இல்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது என்பது எவ்வளவு மோசமான செயல் பொறுப்புக் கூறல் இன்றி உண்மைகளை மூடி மறைக்க முயல்கிறார்கள். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களில் இராணுவத்தினர் சிவில் உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை நீதியை பெற்றுக் கொடுக்குமா? அத்துடன் உள் நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் பிரதிநிதிகளுடன் பேச முடியாது காலத்தைக் கடத்தும் கோட்டாபய வெளிநாட்டு புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் அமைப்புக்களுக்கும் தடை விதித்து விட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பது வேடிக்கையாக இல்லையா?

பாதிக்கப்பட்ட தமிழ் இனத்திற்கு உள்ளகப் பொறிமுறை மூலம் அதுவும் இந்த ராஐபச்க அரசாங்கத்தால் ஒரு போதும் நீதி கிடைக்காது சர்வதேச பொறிமுறைகள் மூலமே நீதி கிடைக்க வேண்டும். அதுவே நிரந்தர தீர்வுக்கான முடிவாக அமையும்.

 

ஐ.நா கூட்டம் நடப்பதாலேயே இராஜினாமா: லொஹான் விளக்கம்!

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் இடம்பெறும் வேளையில் அங்கு சென்றுள்ள ஜனாதிபதிக்கு நெருக்கடி ஏதும் ஏற்படாதிருக்கும் வண்ணமே தாம் இராஜினாமா அறிவிப்பை செய்ததாக விளக்கமளித்துள்ளார் லொஹான் ரத்வத்த.

எனினும், தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாகவும் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லையெனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான அமைச்சர் என்கிற வகையில் தமது கடமையைச் செய்யவும் சிறைக்கைதிகளின் நலன் விசாரிக்கவுமே தாம் அங்கு சென்றதாக லொஹான் கூறுகின்ற போதிலும், வெலிகடை சிறைச்சாலையில் லொஹானால் ஏற்பட்ட பதற்றம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீட்டு கதவை பூட்டி வைத்துவிட்டு விருந்துக்கு அழைக்கும் ஜனாதிபதி- கூட்டமைப்பு கருத்து – சுரேந்திரன்

புலம்பெயர் அமைப்புகளுக்கு தடை விதித்து விட்டு முதலீடு செய்ய வரும்படி அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது. இது வீட்டு கதவை பூட்டி வைத்துவிட்டு விருந்துக்கு அழைக்கும் செயற்பாட்டுக்கு ஒப்பானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ புலம்பெயர் தமிழ் சமூகம் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்,

புலம்பெயர் அமைப்புகளுக்கு தடை விதித்து விட்டு முதலீடு செய்ய வரும்படி அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது. அமெரிக்க நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ அவர்கள் சில வேடிக்கையான கருத்துக்களை நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

புலம்பெயர் தமிழ் சமூகம் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் என்று தான் வரவேற்பதாக கூறியிருப்பது வீட்டு கதவை இறுக்கி பூட்டி வைத்துவிட்டு விருந்தாளிகளை உணவருந்த உள்ளிருந்து அழைப்பது போன்ற ஒரு செயல்பாடு. புலம் பெயர் அமைப்புகள் பலவற்றை தடை செய்ததோடு வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய உறவுகள் அச்சம் அடைய கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டு இங்கு வந்து முதலீடு செய்யலாம் என்று ஐநா செயலாளர் நாயகத்திடம் தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

முதலாவதாக முதலீட்டாளர்கள் ஒரு நாட்டை நோக்கி வருவதற்கான அரசியல் மற்றும் நிர்வாகச் சூழல் மிக அவசியம் என்பதை ஜனாதிபதி உணர்ந்து கொள்ள தவறி இருக்கிறார். முதலீட்டாளர்கள் வழமையாக இவற்றையே முதலில் பிரதானமாக கருத்தில் எடுத்து முதலீடுகளை தீர்மானிப்பார்கள்.

அரச நிர்வாகத்தில் இராணுவமயமாக்கல் தொடர்கிறது. அரசியல் பிரச்சனைகள் , மனித உரிமை விடயங்கள் அரசால் தீர்வு காணப் படாமல் தொடர்கிறது. உள்ளகப் பொறிமுறை ஊடாக நியாமான தீர்வுகள் எந்த இனத்தவருக்கும் கிட்டாது என முழு நாடுமே உணர்ந்துள்ளது.

எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தால் போல அரசியல் கைதிகள் சிறைச்சாலைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சரால் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டுள்ளனர். அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க, நீதி வழங்க உள்ளக பொறிமுறை தவறியுள்ளது மாத்திரமல்ல அவற்றிற்கு அரசு துணை போவதை எடுத்து காட்டியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி ஐ.நா செயலாளர் நாயகத்திடம் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வேடிக்கையானது.
அரசு இனியும் அரசியல் தீர்வு, மனித உரிமை, நீதிப் பொறிமுறை, நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் என்பவற்றை நிலைநாட்ட சர்வதேச சமூகத்தோடு ஒத்திசைந்து இதய சுத்தியோடு செயல்படத் தவறினால் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அதள பாதாளத்துக்குள் தள்ளுவதாகவே முடியும்.

அரசாங்கத்துக்குள் பனிப்போர் ; 10 பங்காளிகள் எதிர்ப்பு

கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளிகளில் பத்து பங்காளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் தலைமையிலான பங்காளிகளே, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

கெரவலப்பிட்டிய யுகதானவி மின்நிலையத்தில் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் தீர்மானத்துக்கே அந்த 10 பங்காளிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

 

எமக்கான திறவுகோல் ரோம் சாசனத்திலேயே உள்ளது

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர, ஓம்பி-இடத்தில் அல்ல என்று, வவுனியா மாவட்டத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர், வவுனியாவில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்து தெரிவித்த போதே, இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், முதலில், சுமந்திரன் மற்றும் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தில் உறுப்பினராக வேண்டும் என்றும் பின்னர் போர்க்குற்றம் செய்ததாக நினைக்கும் எவர் மீதும் சுமந்திரன் வழக்கு பதிவு செய்யலாம் என்றும் கூறினர்.

ரோம் சட்டத்தில் இலங்கை கையெழுத்திட்ட பிறகு, எங்கள் 146,000 தமிழர்களைக் கொன்றவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு நாம் தயாராகலாம் என்றும், அவர்கள் கூறினர்.

‘மேலும், 90,000 விதவைகளையும்  50,000 ஆதரவற்றோர் மற்றும்  25,000க்கும் மேற்பட்ட தமிழர்களை காணாமல் செய்தவர்களுக்கு எதிராக வழக்கை நாங்கள் தாக்கல் செய்வோம்.

‘தமிழர்களையும் விசாரிக்க விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். நீதி பெறுவதற்கான சிறந்த வழி அவர்கள் அனைவரையும் விசாரிப்பது என்றும் கூறுகிறார். அனைத்து தரப்பினரையும் விசாரணைக்கு கொண்டு வருவதன் மூலம், சுமந்திரன் தனது  வழக்கு வலுப்பெறும் என்று கூறுகிறார்.

‘அவர் இங்கே என்ன பேசுகிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட  தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் கூறுகிறோம் சுமந்திரன் மற்றும் அவரது நண்பர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர், இலங்கையை ரோம் சட்டத்தில் கையெழுத்திடச் செய்யுமாறு வலியுறுத்துகிறோம். இந்த ரோம் சட்டத்தில் கையெழுத்திடாமல், நீதி வழங்கப்படாத நிலைமையே உள்ளது.

‘எனவே, நாங்கள் இந்தவிடயத்தில் சுமந்திரனை மழுப்ப வேண்டாம் என கேட்கிறோம், சில செயல்களைக் செய்து காட்டுங்கள்,  ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு இலங்கையைக் கோர.உங்களால் முடியாவிட்டால், தயவுசெய்து தமிழர்களை விட்டுவிட்டு உங்கள் வீட்டுக்குத் திரும்புங்கள்.

‘நீங்கள் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, நீங்கள் தமிழர் தரப்பை அழிக்கிறீர்கள். இது தமிழர்களுக்கான  நியாயம் இல்லை. சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழர்கள் தங்கள் துன்பங்களுக்கு நீதியையும் பொறுப்பு கூறலையும்  விரும்புகிறார்கள்.

‘நீங்கள் தமிழர்களின் எதிரிகள் போல் செயல்படுகிறீர்கள், எனவே உங்கள் நிலுவையில் உள்ள இராஜினாமா கடிதத்தை முடித்து எங்களை தனியாக விட்டுவிடுமாறு நாங்கள் கேட்கிறோம். நீங்கள் இப்பொழுது வெளியேறினால், நீங்கள் எங்களுக்கு  செய்த தீங்குகளை  கடவுள் மன்னிப்பார்’ என்றனர்.

விரைவில் கொவிட் தடுப்பூசி அடடை கட்டாயமாக்கப்படும் – கெஹெலிய ரம்புக்வெல்ல

இலங்கையில், கொவிட் தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவதற்கான இயலுமை குறித்து பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டிய அனைவரும் பூரணமாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டதன் பின்னரே இந்த நடைமுறை பின்பற்றப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரை, தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

இலங்கையில் இன்று 1,509 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்று இதுவரையில் 1,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 506,000 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 433,093 ஆக அதிகரித்துள்ளது.

இதே வேளை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 93 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,218 ஆக அதிகரித்துள்ளது.