மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி? பதிலடிகொடுக்கத் தயாராகும் எதிரணி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரதி தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அந்த கூட்டணியின் பிரதான கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்படும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதனை நிர்மாணிப்பதற்கான அரசியல் குழுக்களுடன் ஏற்கனவே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பேச்சுக்கள் வெற்றிகரமான மட்டத்தில் உள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் அதிகார தளம் வீழ்ச்சியடையாமல் அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கும், எதிர்வரும் தேர்தலை திடமாக எதிர்கொள்வதற்கும் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவினால் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த புதிய கூட்டணியின் மூலம் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு பொதுஜன பெரமுன தலைமைத்துவத்தை வழங்கும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தடிகம பகுதியில் அண்மையில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்ச இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மகிந்த தரப்பில் இருந்து பிரிந்து சென்ற சுயாதீன அரசியல்கள், இதற்கு எதிரான பிரசாரத்தை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை இனப்படுகொலை; ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம்” – ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கை இனப்படுகொலைகள் நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாததை ஏற்க முடியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை; இனியும் தாமதிக்காமல் அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் இந்தியாவின் நிலை வரவேற்கத்தக்கது; ஆனால், போதுமானதல்ல.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 51-ஆவது கூட்டத்தில் நேற்று உரையாற்றிய இந்திய தூதர், ”ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 13-ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துதல், மாகாண அவைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல், நீண்டகாலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் மாகாண அவைகளுக்கு உடனே தேர்தல் நடத்துதல் ஆகியவற்றின் மூலம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், அளவிடக்கூடிய முன்னேற்றம் எதையும் இலங்கை அரசு எட்டவில்லை” என்று குற்றஞ்சாட்டினார். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு; இதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கையில் சிங்களர்கள் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும்; இலங்கை ஆட்சியாளர்களின் மனதில் இருந்து சிங்கள பேரினவாத உணர்வையும், தமிழர்கள் வெறுப்பு மனநிலையையும் அகற்ற முடியாது என்ற சூழலில் இலங்கை இனச்சிக்கலுக்கு தனித்தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது. ஆனால், அதற்கான அரசியல் மற்றும் சட்டரீதியான பயணம் மிக நீண்டது என்பதால், அதுவரை ஈழத்தில் வாழும் தமிழர்கள் கண்ணியமாகவும், சுதந்திரமாகவும் வாழ வகை செய்ய வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பெருங்கடமை இந்தியாவுக்கு உண்டு என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியிருப்பது மனநிறைவை அளிக்கிறது.

ஆனால், இந்த வலியுறுத்தல் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத் தந்து விடாது என்பதை இந்தியா உணர வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஓரளவாவது அதிகாரத்தை வழங்குவதற்கான 13-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், 1987-ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செய்யப்பட்டதாகும். இந்தியா நினைத்திருந்தால் 13-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை அடுத்த சில ஆண்டுகளில் செயல்படுத்தி தமிழர்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுத்திருக்க முடியும். ஆனால், அதன்பின் 35 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை; அரைகுறை அதிகாரங்களுடன் ஏற்படுத்தப்பட்ட மாகாண அவைகளும் முடக்கப்பட்டு விட்டன. வடக்கு – கிழக்கு மாநிலங்களின் இணைப்பும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இப்படியாக ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான இந்தியாவின் முயற்சி ஒரு செ.மீ கூட நகராமல் முடங்கிக் கிடக்கிறது.

பன்னாட்டு அவைகளிலும், இரு தரப்பு பேச்சுகளின் போதும், 13-ஆவது அரசியலமைப்புச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று இந்தியா இதுவரை நூறு முறை வலியுறுத்தியிருக்கும். இப்போது 101-ஆவது முறையாக வலியுறுத்துவதால் மட்டும் எந்த பயனும் ஏற்பட்டுவிடாது. மாறாக, இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து ஈழத்தமிழர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்தையாவது பெற்றுத்தர வேண்டும்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, அதன் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட இந்தியாவைத் தான் நம்பியிருக்கிறது. இத்தகைய சூழலில், 13-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் அம்சங்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். அவற்றில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் தான் உதவிகளை வழங்க முடியும் என்று நிபந்தனை விதிப்பதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்திய இந்தியா, அங்கு நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தண்டிப்பது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. இலங்கை இனப்படுகொலைகள் நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாததை ஏற்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையில் இழைக்கப்பட்ட பொருளாதார குற்றம் தொடர்பில் ஐ.நா பேரவையில் கவனம்

இலங்கையில் இழைக்கப்பட்ட பொருளாதார குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆணையாளரின் அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பொருளாதார குற்றம் தொடர்பிலான குற்றச்சாட்டு ஆணைக்குழுவிற்கு அப்பாற்பட்ட விடயமென நேற்றைய அமர்வின் போது வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

அனைத்து மக்களினதும் மனித உரிமைகளை பாதித்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வினை வழங்குவதாக இருந்தால், ஊழல் மோசடிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் அண்மையிலும் இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் ,பொருளாதார குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை அழிக்க வேண்டாம் – ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்

தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கவேண்டாம் சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை இல்லாது செய்யவேண்டாம் என ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதேஅவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தீவகத்தை பொறுத்தவரையில் ஆழ்கடல் மீன்பிடியை விட களப்பு கடலை நம்பி தொழில் செய்கின்றவர்களே அதிகம்.

இவர்களது வாழ்வாதாரத்தை யாரும் சிந்திப்பதாக தெரியவில்லை.

கடலட்டை வளர்ப்பு என்பது அந்நியச் செலாவணியை ஊக்குவிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. தீவகப் பகுதிகளில் கடலட்டை பண்ணைகளை உருவாக்குவதற்கான இடங்கள் சீன நாட்டுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மீன் வளங்கள் பெரும்பாலும் இல்லாமல் போகும் என்பதுடன் களப்பு கடலை நம்பி தொழில் செய்பவர்கள் பாதிப்படைவார்கள். இதனை கடற்றொழில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.

கடலட்டை பண்ணை அமைக்க அனுமதிக்கும்போது அப்பகுதியை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடாமல் அனுமதிக்கப்படுவதுடன், அவர்கள் இடத்தை அடையாளப்படுத்தி விட்டு செல்கின்றார்கள். நேரடியாக அரசாங்கத்திடம் அனுமதி எடுத்து விட்டு வருகின்றார்கள்.

இது தொடர்பாக மக்களுக்கு எதுவும் தெரியாது. ஆகவே எமக்கு தகவல் தெரிந்தவுடன் இதனை ஊடகங்கள் ஊடாக தெரிவித்து எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம் – என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க தலைவர் மடுத்தின் பெனடிக், கடலட்டை வளர்ப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் கடற்றொழிலாளர்களை அது பாதிக்கும் என்றும் கடலட்டை பண்ணைக்கான அனுமதி வழங்ப்படுகின்றது என்றார்.

கடல் தொடுவாய்களை மறைத்து கடலட்டை பண்ணைகள் கட்டப்படுவதனால் மீன்வரத்து குறைந்து கடற்றொழிலாளர்கள் பாதிப்பை எதிர்கொள்வார்கள்.

செயற்கை தொழில்களால் இயற்கை தொழில்கள் தீவகத்தில் பாதிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை.சீனாவுக்கு எங்களுடைய கடல் வளத்தை கொடுப்பதை முற்றும் முழுதாக நாங்கள் விரும்பவில்லை. எங்களிடம் வளம் இருக்கின்றது.

இன்னொரு நாட்டிடம் அதனை கொடுத்து வளத்தை பெற வேண்டிய அவசியமில்லை. வெளிநாட்டுக்கு வளங்களை கொடுத்து நாங்கள் இன்னொரு நாட்டிடம் வளங்களை பெற வேண்டிய அவசியம் இல்லை தீவக மக்களிடமும் எமது பகுதி புலம்பெயர்ந்த மக்களிடம் இதற்கான வளங்கள் இருக்கின்றன.

கடற்றொழில் அமைச்சரிடம் இது தொடர்பாக முறையிட்ட போதும் அதையும் மீறி கடலட்டை பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

Posted in Uncategorized

இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி தமது அபிலாஷைகளை நிறைவேற்ற சிலர் முயற்சி – சீனா

இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி தமது அபிலாஷைகளை நிறைவேற்றும் சில தரப்பினரின் முயற்சிகளை தாம் எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜெனீவாவிலுள்ள சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் ஜு இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, சமூக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ் சிறுபான்மை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்காமை குறித்து தான் கவலையடைவதாக விவாதத்தில் கலந்துகொண்ட இந்திய பிரதிநிதி இந்திரன் மணிபாண்டே தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் – கனடா தமிழ் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கனடாவின் தமிழ் அமைப்புகளும் ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதியும் கூட்டாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான முதன்மை நாடுகளின் குழுவில் கனடா காணப்படுவதால் இலங்கை தொடர்பான தீர்மானத்தை உருவாக்குவதில் கனடா முக்கிய பங்கை வகிக்கின்றது என கனடா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான முதன்மை நாடுகளின் குழுவில் கனடா காணப்படுவதால் கனடாவை சேர்ந்த குழுக்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வு குறித்தும் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளிற்கு பொறுப்புக்கூறுவதில் தொடர்ச்சியாக தோல்வியேற்படுவது குறிpத்த எங்கள் கரிசனையை தெரியப்படுத்துவதற்காக உங்களிற்கு இந்த கடிதத்தை எழுதுகின்றோம்,என தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன

கனடா பிரதமருக்கான கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கை தமிழ் சமூகத்தின் பெரும்பான்மையான தரப்பினரும் இலங்கையை ஐநா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டிய அவசர நிலைமை தொடர்பில் இலங்கை தொடர்பான முதன்மை நாடுகளை தொடர்புகொண்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் இந்த அமர்வில் ஐநா தீர்மானங்களை இலங்கை நிறைவேற்றியுள்ளதா என்பது குறித்து மதிப்பிடப்படும். 2021 ம் ஆண்டு மார்ச் மாத அறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்தபடி மனித உரிமைகளிற்கான ஐக்கியநாடுகளின் நான்கு முன்னாள் ஆணையாளர்களும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அறிக்கைகளை வெளியிட்ட 9 அறிக்கையாளர்களும் இலங்கை தொடர்பான ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த அனைத்து உறுப்பினர்களும் பரிந்துரைத்தபடி இலங்கயை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கும் வலுவான தீர்மானத்தை 13 வருடங்களி;;ற்கு முன்னர் குற்றங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்காக சமர்ப்பிக்குமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கும் நடவடிக்கைக்கு குறைவான நடவடிக்கை எதுவும் எங்கள் மக்கள் எதிர்கொண்ட பாரிய அநீதிக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்துவிடும் என கனேடியர்களாகிய நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கும் நடவடிக்கைக்கு குறைவான நடவடிக்கைகள் இலங்கை அதிகாரிகளும் பாதுகாப்பு படையினரும் எந்த தயக்கமும் இன்றி இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக பாரிய அநீதிகளில் ஈடுபடும் நிலையை ஏற்படுத்தும்.

Posted in Uncategorized

அலி சப்ரியின் கருத்துக்கு கடும் கண்டனம்!

ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு தமக்கு சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் றஞ்சனா ஆகியோர் சற்று முன்னர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு இலங்கை தொடர்பான விடயத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை தொடர்ச்சியாக கோரிவரும் எமக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எந்த விடயமும் முன்வைக்கப்படாமையானது கவலையளிக்கிறது. இதேவேளை, இந்த கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணையை தொடர்பான தீர்ணம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்துக்கிறோம்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்புக்களாக நாம் இன்று 13 ஆண்டுகளாக போராடி எந்த தீர்வும் இல்லாது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பித்த தொடர்ச்சியான போராட்டம் இன்று 2015 ஆவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில் ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்தானது எமது உணர்வுகளை புரந்தள்ளி அரசை பாதுகாப்பதாக அமைந்துள்ளதோடு குறித்த கருத்துக்கு கடும் கண்டணத்தையும் வெளியிட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கை குறித்து இந்தியா கடும் அதிருப்தி13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து

அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துதல் ஆகியவற்றின் ஊடாக இனப்பிரச்சினைக்கு உரியவாறான அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எவையும் எட்டப்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய இந்தியா, மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மாகாணசபைத்தேர்தல்கள் விரைவாக நடாத்தப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது.

இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 17 பக்க எழுத்துமூல அறிக்கையின் சாராம்சம் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பினால் வாசிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

அதன்படி அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துதல் ஆகியவற்றின் ஊடாக இனப்பிரச்சினைக்கு உரியவாறான அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டைப் பூர்த்திசெய்வதில் குறிப்பிடத்தக்களவிற்கு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் இந்தியா சார்பில் உரையாற்றிய பிரதிநிதி கரிசனையை வெளிப்படுத்தினார்.

மேலும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான நீதி, சமாதானம், சமத்துவம் மற்றும் சுயகௌரவம் ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடியவாறான அரசியல் தீர்வை வழங்குவதே இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடாக இருந்துவருகிறது என்று குறிப்பிட்ட அவர், தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியானது கடன்களை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் பொருளாதாரத்தின் மட்டுப்பாடுகள் மற்றும் அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்பவற்றைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மாகாணசபைத்தேர்தல்கள் விரைவாக நடாத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்ட இந்தியப்பிரதிநிதி, அதன்மூலம் அனைத்து இலங்கையர்களாலும் சுபீட்சமான எதிர்காலத்தை முன்னிறுத்திய தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ளமுடியும் என்றும், எனவே இவ்விடயத்தில் இலங்கை உடனடியானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மீள்பிரயோகம் தொடர்பில் கடும் அதிருப்தி : இலங்கைக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த சீனா, ரஷ்யா, மாலைதீவுகள்

பயங்கரவாத்தடைச்சட்டத்தின் மீள்பிரயோகம், அமைதிப்போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் உள்ளடங்கலாக மிகமோசமடைந்துசெல்லும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய உறுப்புநாடுகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்வதிலும் மிகச்சொற்பளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டின.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று (12) திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது.

இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 17 பக்க எழுத்துமூல அறிக்கையின் சாராம்சம் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பினால் வாசிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

நெதர்லாந்து

அதன்படி பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் இலங்கை அடைந்துள்ள தோல்வி மற்றும் சிவில் அரச செயற்பாடுகளில் அதிகரித்துள்ள இராணுவமயமாக்கல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசியலமைப்பு மறுசீரமைப்பின் ஊடாகவோ அல்லது புதிய அரசாங்கத்தின் மூலமோ இன்னுமும் தீர்வு காணப்படாமை குறித்துக் கரிசனையை வெளிப்படுத்திய நெதர்லாந்து நாட்டின் பிரதிநிதி, தற்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடியின் விளைவாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை மக்களுக்குத் தனது அனுதாபத்தையும் வெளிப்படுத்தினார். அதுமாத்திரமன்றி கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் என்பன தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதும் ஊழலை இல்லாதொழிப்பதும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பின்லாந்து

அதேவேளை அண்மையில் மாணவ செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்வதற்குப் பயங்கரவாத்தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய பின்லாந்து நாட்டின் பிரதிநிதி, அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்வதற்குப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறும் வலியுறுத்தினார். மேலும் தற்போது இலங்கை பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதை ஏற்பதாகத் தெரிவித்த அவர், இருப்பினும் இந்நெருக்கடிகள் அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் சவால்களை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதி, கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளடங்கலாக மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்படல் மற்றும் நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படல் என்பவற்றின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

மேலும் பயங்கரவாத்தடைச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக முடிவிற்குக்கொண்டுவரப்படுவதுடன் அச்சட்டம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுவிஸ்லாந்து

இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் விளைவாகப் பெருமளவானோர் அத்தியாவசியப்பொருட்களின் தட்டுப்பாட்டுக்கும் உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்கும் முகங்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் சுவிஸ்லாந்து கரிசனையை வெளிப்படுத்தியது.

அதுமாத்திரமன்றி வட, கிழக்கு மக்கள் மிகநீண்டகாலமாக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வலியுறுத்திவருகின்ற போதிலும், இவ்விடயத்தில் இன்னமும் மிகச்சொற்பளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய சுவிஸ்லாந்து பிரதிநிதி, அதுகுறித்தும் அமைதிப்போராட்டக்காரர்கள்மீதான தாக்குதல்கள் குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பிரான்ஸ்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என்றும், குறிப்பாக நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை வலுப்படுத்துவதுடன் சிவில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதி வலியுறுத்தினார்.

ஜப்பான்

பயங்கரவாத்தடைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கென முன்மொழியப்பட்ட திருத்தங்களை வரவேற்பதாகத் தெரிவித்த ஜப்பான் பிரதிநிதி, இருப்பினும் நாட்டில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கு மேலும் பல முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அத்தோடு நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

ரஷ்யா

நல்லிணக்கத்தை உறுதிசெய்வதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பித்திருப்பதாகவும், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின்போது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் பேரவையில் ரஷ்யா சுட்டிக்காட்டியது.

சீனா

மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதிலும் பயங்கரவாத செயற்பாடுகளை எதிர்ப்பதிலும் இலங்கை முன்னேற்றகரமான வகையில் செயற்பட்டுவருவதாகச் சுட்டிக்காட்டிய சீனப்பிரதிநிதி, இலங்கையின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தன்மை ஆகியவற்றைத் தாம் வலுவாக ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் அதற்கேற்றவாறு அமையவில்லை என்றும், இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை எந்தவொரு தரப்பினரும் தமக்குச் சாதமான முறையில் பயன்படுத்திக்கொள்வதற்கு முயற்சிக்கக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

அமெரிக்கா

சட்டத்தின் ஆட்சி, நீதியை நாடுவதில் அனைவருக்கும் சமத்துவமான வாய்ப்பு, முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை என்பன ஜனநாயகக்கட்டமைப்பின் முக்கிய தூண்களாகும் என்றும், எனவே இலங்கையானது முதலாவது நடவடிக்கையாக நாட்டில் நீண்டகாலமாக நிலவும் ஊழலையும் தண்டனைகளிலிருந்து விலக்கீடுபெறும் போக்கையும் முடிவிற்குக்கொண்டுவரவேண்டும் என்று அமெரிக்காவின் பிரதிநிதி வலியுறுத்தினார்.

பிரிட்டன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46ஃ1 தீர்மானத்திற்கு அமைவாக பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் மிகச்சொற்பளவிலான முன்னேற்றங்களே அடையப்பட்டிருப்பதாகக் கரிசனை வெளியிட்ட பிரிட்டன், கடந்த 2020 ஆம் ஆண்டு உறுதியளிக்கப்பட்டவாறு உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று உருவாக்கப்படாத நிலையில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் நடவடிக்கை தொடரவேண்டும் என்று வலியுறுத்தியது.

கனடா

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகள் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேலும் மோசமடையச்செய்யும் என கனடா அதன் கரிசனையை வெளிப்படுத்தியது.

ஜெனீவாவில் இலங்கைக்கு காத்திருக்கின்றது அதிா்ச்சி!-ரெலோ பேச்சளா் சுரேந்திரன் செவ்வி

இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடா் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை விவகாரம் இதில் முக்கியமாகப் பேசப்படவுள்ளது.

புதிய தீா்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படவிருக்கின்றது. இந்தப் பின்னணியில் இவை தொடா்பில் தமிழா் தரப்பிலிருந்து முக்கியமாகச் செயற்பட்டுவரும் ரெலோ அமைப்பின் பேச்சாளா் சுரேந்திரன் குருசுவாமி உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயக களம் நிகழ்வில் இந்த வாரம் கலந்துகொண்டு முக்கிய தகவல்களைத் தருகின்றாா்.

கேள்வி – இலங்கை தொடா்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளிவந்திருக்கின்றது. இந்த அறிக்கை தொடா்பான உங்களுடைய கருத்து என்ன? இதன் முக்கிய அம்சங்களாக நீங்கள் எதனைக் கருதுகின்றீா்கள்?

பதில் – இம்முறை மிக விபரமான ஒரு அறிக்கையை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. கடந்த மாா்ச் மாதம் கூட 11 பக்க அறிக்கை ஒன்றை அவா் வெளியிட்டிருந்தாா். கடந்த செப்டம்பா் மாதத்திலிருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடிய நிலையில் ஐந்து கட்சிகளின் சாா்பில் அறிக்கையிட்டிருந்தோம். அதற்குப் பின்னா் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளா் அலுவலகத்தின் உத்தியோகஸ்த்தா்களோடும் நாம் தொடா்ச்சியாக கலந்துரையாடியிருந்தோம். அதன் பிரதிபலனாக மாா்ச் மாத அறிக்கையில் பல விடயங்கள் உள்வாங்கப்பட்டிருந்தது. இந்த முறை உயா் ஸ்தானிகா் உத்தியோகபுா்வமாக அறிக்கையாக வெளியிட்டுள்ளாா்.

குறிப்பாக இன ரீதியான வேலைத் திட்டங்கள் வடக்கு கிழக்கில் நடைபெறுவது. மதம் சாா்ந்து மொழிசாா்ந்து மேலாதிக்கத்துடன் நடந்துகொள்வது போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குருந்துாா் மலை விவகாரம் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. அங்கு மக்கள் எதிா்கொள்கின்ற இராணுவ ஒடுக்குமுறைகள், முன்னாள் போராளிகளின் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்படுவோரின் பிரச்சினைகள் என்பவை குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவா்கள் எதிா்கொள்ளும் பிரச்சினைகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விளைவுகள் என நாம் அறிக்கையிட்ட பல உள்ளடக்கப்பட்டிருப்பதை காணமுடிகின்றது.

அதேபோல பொறுப்புக்கூறலுக்கான உள்ளக பொறிமுறை தோல்வியடைந்திருக்கின்றது என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. ஜனாதிபதியை சந்தித்தபோதும் இதனை நாம் கூறியிருந்தோம். சா்வதேச பொறிமுறை ஒன்றுக்கு அரசாங்கம் இணங்காவிட்டால் இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணமுடியாது என்பதை நாம் வலியுறுத்தியிருந்தோம். இதனைவிட இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற விடயங்களையும் ஆணையாளரின் அறிக்கை குறிப்பிடுகின்றது. மாா்ச் 21 ஆம் திகதிய அறிக்கைக்கு மேலதிகமாக இவற்றை அவா் சுட்டிக்காட்டியிருக்கின்றாா்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை இதில் அவா் ஒட்டுமொத்தமாக அறிக்கையிட்டிருப்பதும், நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அதில் சம்பந்தப்பட்டவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அவா் முதல் தடவையாக குறிப்பிட்டிருப்பதும் முக்கியமானது. இதனை ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகவே நாம் பாா்க்கிறோம்.

கேள்வி – இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் இலங்கை தொடா்பாக நிறைவேற்றப்படவிருக்கும் தீா்மானத்திலும் பிரதிபலிக்கும் என எதிா்பாா்க்கின்றீா்களா?

பதில் – கடந்த முறை ஆணையாளா் தனது அறிக்கையில் சா்வதேச நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட பொறிமுறையின் அடிப்படையில் நாடுகள் குற்றவாழிகளைக் கைது செய்ய வேண்டும் அவா்கள் மீது வழக்குத தொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். அந்த விடயம் பின்னா் பேரவையின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டது. இதேபோல ஆணையாளா் குறிப்பிட்ட சாட்சியங்களைத் திரட்டுதல் என்ற விடயமும் பின்னா் பேரவையின் தீா்மானத்தில் உள்வாங்கப்பட்டது. சா்வதேச குற்றவியல் நீதின்றத்துக்குப் பாரப்படுத்த வேண்டும் என்ற அவரது பரிந்துரை பேரவையின் தீா்மானத்தில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், இம்முறை அவா் தெரிவித்திருக்கும் பல விடயங்கள் பேரவையின் பிரேரணையில் உள்வாங்கப்படும் என எதிா்பாா்க்கிறோம். அதற்கான கோரிக்கையை மனித உரிமைகள் பேரவை அங்கத்துவ நாடுகளுக்கு அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து முதல் தடவையாக அனுப்பிவைத்துள்ளோம். தமிழ்த் தரப்பினா் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்திருப்பதால், அது பிரேரணையில் உள்வாங்கப்படலாம் என்ற எதிா்பாா்ப்பு இருக்கிறது.

கேள்வி – அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஏற்கனவே ஜெனீவாவுக்கு சென்றுவிட்டாா்கள். முக்கிய சந்திப்புக்களை அவா்கள் அங்கு முன்னெடுக்கின்றாா்கள். தமிழா் தரப்பின் நகா்வுகள் எவ்வாறுள்ளன?

பதில் – அரசாங்கப் பிரதிநிதிகள் ஜெனீவாவுக்குச் செல்வதற்கு முன்னரே மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அங்கத்துவ நாடுகளுக்கும் ஓகஸ்ட் மாத முற்பகுதியிலேயே எங்களுடைய கோரிக்கைகளை நாங்கள் அனுப்பிவைத்திருக்கின்றோம். அதில் மனித உரிமைகள் பேரவை சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்தப் பிரச்சினையை பாரப்படுத்த வேண்டும் என்பதை நாம் தெளிவாகக்குறிப்பிட்டிருக்கின்றோம். அங்கு சென்றால் வீட்டோ அதிகாரம் பாவிக்கப்படும் என அவா்கள் தெரிவித்தமைக்கு, வடகொரியாவையும், சூடானையும் நாம் உதாரணம் காட்டி இவை அனைத்தும் பாதுகாப்புச் சபையின் ஊடாக சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் – நீங்கள் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை என்ற அழுத்தத்தை நாம் பிரயோகித்திருக்கின்றோம். இப்போது வீட்டோ அதிகாரம் பயன்படுததப்படும் எனப் பேசுவதை பிரதான நாடுகள் நிறுத்திவிட்டன. இதனை ஒரு பெரிய வெற்றியாக நாம் கருதுகின்றோம்.

இதனைத்தாண்டி வெளிநாடுகளில் அந்தத்ந நாடுகளின் வெளிநாட்டு அமைச்சுக்களுடனும், இங்கிருக்கும் அவா்களுடைய பிரதிநிதிகளுடனும் நாம் நேரடியாக சந்திக்கின்றோம். அத்துடன் மெய்நிகா் சந்திப்புக்கள் சிலவற்றையும் மேற்கொள்கின்றோம். பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள லிஸ் அம்மையாருடனும் இணைய வழியில் நாம் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றோம். நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பற்றில் அவா் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளாா். இதனைவிட புலம்பெயா்ந்த உறவுகளும் இது போன்ற ஆக்கபுா்வமான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றனா். அந்த வகையில் அரச தரப்பினா் ஜெனீவா செல்வதற்கு முன்னதாகவே எமது தரப்பு முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன.

கேள்வி – சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை கொண்டு செல்வதுதான் உங்கள் இலக்கு எனக் கூறுகின்றீா்கள். இதற்காக உங்களிடமுள்ள உபாயம் என்ன?

பதில் – இலங்கை குறித்த பிரதான நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு சபையிலும் அங்கத்துவ நாடுகளாக இருக்கின்றன. அதாவது அமெரிக்கா, பிரித்தானியா, ஜோ்மனி ஆகிய நாடுகள் பிரதான நாடுகளாக தொடா்ந்தும் இருக்கின்றன. இவை பாதுகாப்புச் சபையிலும் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. அதனால், இந்த நாடுகளால் பேரவையில் முன்னெடுக்கப்படும் தீா்மானங்கள் பாதுகாப்புச் சபையினாலும் முன்னெடுக்கப்படும்.

புலம்பெயா் அமைப்புக்களின் ஊடாக அந்த நாடுகளில் இருக்கக்கூடிய அரசாங்கங்கள் மற்றும் கட்டமைப்புக்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாக இந்தக் கோரிக்கைகளை நகா்த்த முடியும். தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் இவ்வாறு அழுத்தம் கொடுத்தால் அது தாக்கத்தை ஏற்படுத்தும். தாயகத்தில் இருக்கக்கூடிய கட்சிகள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கைகளை முன்வைப்பதும், புலம்பெயா்ந்த நாடுகளில் இருக்கும் அமைப்புக்கள் அங்குள்ள அரசுகளிடம் இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதன் மூலமாக இந்த விடயத்தை நகா்த்துகின்ற பொறிமுறையைத்தான் நாம் கையாள்கின்றோம்.

கேள்வி – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவாா்த்தை ஒன்றை கடந்த வாரம் நடத்தியிருந்தீர்கள். ஜெனீவா கூட்டத் தொடா் ஆரம்பமாகவுள்ள நிலையில் ரணிலை காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சி இது என்ற குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில் – இது ஆதாரமற்ற – நியாயமற்ற ஒரு குற்றச்சாட்டு. சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்த வேண்டும் என்பதில் கடுமையாக உழைத்தது எமது கட்சிதான். சா்வதேச ரீதியிலும் அதற்கான ஆதரவை நாம் திரட்டியிருந்தோம். இந்த விடயத்தில் அதிகளவுக்குத் தீவிரமாகச் செயற்பட்டவா்கள் நாங்கள். ரணிலைச் சந்தித்தது அவரைக் காப்பாற்றுவதற்கான சந்திப்பல்ல என்பதை நீங்கள் அவதானித்திருப்பீா்கள்.

இந்தச் சந்திப்பின் போது பல விடயங்களை நாங்கள் கோரியிருந்தோம். அரசியல் கைதிகள் விடயத்தைப் பொறுத்தவரையில் அது தொடா்பான ஆதாரபுா்வமான ஆவணத்தை நாம் கையளித்தோம். இதேவிடயத்தை மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கயிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறல் விடயத்தைப் பொறுத்தவரையில், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலமாக இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காண முடியாது என்பதை நாம் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். அதனை ஆணையாளா் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கின்றாா். மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையிலும் அது நிச்சயமாக இடம்பெறும்.

இவற்றைவிட காணி அபகரிப்பு, இராணுவப் பிரசன்னம் போன்ற விடயங்களையும் நாம் அவரிடம் பிரஸ்தாபித்திருந்தோம். அந்த விடயங்கள் கூட ஆணையாளரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

ஆக, ரணிலைப் பாதுகாப்பதற்காக அல்ல. அவரை ஐ.நா.வில் மேலும் மாட்டிவிடுவதற்கான ஒரு தந்திரோபாய நகா்வாகத்தான் நாம் அவரைச் சந்தித்திருந்தோமே தவிர, அவரைப் பாதுகாப்பதற்கல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

Posted in Uncategorized