ரணில்: கடைசி ஆளா? – நிலாந்தன்

நாடாளுமன்றத்தில் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே ஒரு உறுப்பினர்,அதுவும் தேர்தலில் தோற்றதால்,தேசியப் பட்டியல்மூலம் உள்ளே வந்தவர்,நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.இது ஆசியாவின் அதிசயம் மட்டுமல்ல உலகத்தின் அதிசயமும்தான்.தாமரை மொட்டுக்குத் தலைமை தாங்கும் யானைக்கும், யானைக்குத் தலைமை தாங்கும் தாமரை மொட்டுக்கும் இடையிலான போட்டியில் யானை ஜெயித்திருக்கிறது.எனவே அது எல்லா விதத்திலும் தாமரை மொட்டுக்குக் கிடைத்த வெற்றிதான்.ரகசிய வாக்கெடுப்பு என்பது திருடர்களுக்கு வசதியானது.”அரகலய”போராட்டக்காரர்கள் கூறுவதுபோல, திருடர்களே வெற்றியைத் தீர்மானித்திருக்கிறார்கள்.

ரணிலை முன்னிறுத்தியதன்மூலம் ராஜபக்சக்கள் தங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாதுகாத்துக் கொண்டு விட்டார்கள்.இது முதலாவது வெற்றி.இரண்டாவது வெற்றி,போராட்டத்தைப் பிசுபிசுக்கச் செய்யலாம் என்பது.பதவியேற்ற அடுத்தநாளே ரணில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்.எனினும் இது ஒரு முழுமையான முறியடிப்பு நடவடிக்கை அல்ல. ஒருவிதத்தில் குறியீட்டு வகைப்பட்ட எச்சரிக்கை எனலாம். ஜனாதிபதி செயலகத்தின் முன்பகுதியைக் கைப்பற்றி வைத்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களே அகற்றப்பட்டிருக்கிறார்கள்.அதேசமயம் கோட்டா கோகம கிராமத்தைச் சேந்த கூடாரங்கள் பெருமளவுக்கு அகற்றப்படவில்லை.

ஜனாதிபதி செயலகத்தை சில தினங்களில் கையளிக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபடும் தரப்புகள் சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தன என்றும்,நள்ளிரவுத் தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிகிறது.

இது கிட்டத்தட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தை ஒத்தது. தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமது பிரதான கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்டபின் அந்த வெற்றியின் உற்சாகத்தால் புதிய கோரிக்கைகளை முன்வைத்து ஒரு தரப்பு தொடர்ந்து போராட்டக் களத்தில் நின்றது. மிஞ்சி நின்ற அந்தத் தரப்பை தமிழக அரசு பலத்தை பிரயோகித்து துரத்தியது.

எனினும் காலி முகத்திடல் போராட்டம் சற்று வித்தியாசமானது. போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி பெறவில்லை. ரணிலை முன்னிறுத்தி ராஜபக்சக்கள் தப்பிவிட்டார்கள்.அதுமட்டுமல்ல போராட்டத்தின் இறுதி வெற்றியைத் தடுக்கும் ஒருவராக ரணில் ஜனாதிபதியாக மேலெழுந்து விட்டார்.ராஜபக்சக்களை பிரதியீடு செய்யும் ரணிலை அகற்றுவதற்காக தொடர்ந்து போராடப் போவதாக போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கனவே தன்னுடைய வீடு எரிக்கப்பட்டதாலும்,தனக்கு மிகவும் விருப்பத்துக்குரிய வளர்ப்பு நாய் கொல்லப்பட்டதாலும்,ரணில் தனிப்பட்ட முறையில் மனமுடைந்து காணப்பட்டவர்.நள்ளிரவுத் தாக்குதலை ஊக்குவித்த காரணிகளில் அதுவும் ஒன்றா?

போராட்டங்களின் பின்னணிகள் மேற்கு நாடுகள் நின்றன. சில விமர்சகர்கள் கூறுவது போல மேற்கத்திய தூதுவர்கள் போராட்டத்திற்கு நிதியுதவி வழங்கினார்கள் என்ற சூழ்ச்சிக் கோட்பாட்டை இக்கட்டுரை நியாயப்படுத்தவில்லை.ஆனால் போராட்டங்களுக்கு மேற்கத்திய தூதரகங்களின் ஆசீர்வாதம் இருந்தது.இப்பொழுதும் ரணில் விக்ரமசிங்கவின் முறியடிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கு நாடுகள், கொழும்பில் உள்ள ஐநா தூதரகம் போன்றன கருத்துத் தெரிவித்துள்ளன.ஆனால் முன்பு ராஜபக்சவுக்கு எதிராக பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளை இம்முறை பயன்படுத்தவில்லை.

இதுதான் அரசியல்.சீனாவுக்கு விசுவாசமான ராஜபக்சக்களை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை போராட்டக்காரர்களைத் தடவித்தடவி உற்சாகமூட்டினார்கள்.ராஜபக்சக்கள் அகற்றப்பட்டதன் விளைவாக மேற்கிற்கு விசுவாசமான ரணில் ஜனாதிபதியாகிவிட்டார்.இப்பொழுது எந்தப் போராட்டங்களை மேற்கு ஆசீர்வதித்ததோ,அதே போராட்டங்களை அவர்களுடைய விசுவாசியை வைத்துக் கையாள வேண்டிய ஒரு நிலை.

போராட்டங்களின் இதயமாகக் காணப்பட்ட இடதுசாரி மரபில் வந்த ஜேவிபி, முன்னிலை சோசலிசக் கட்சி,அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போன்றவற்றை மேற்குநாடுகள் இந்தியா போன்றன எச்சரிக்கை உணர்வோடுதான் அணுகின.இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த தரப்புகள் இலங்கைத்தீவின் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதையோ அல்லது தீர்மானிக்கும் சக்திகளாக வருவதையோ மேற்குநாடுகளும் அனுமதிக்காது,இந்தியாவும் அனுமதிக்காது. எனவே ரணிலுக்கு எதிரான அரகலயவை ஏதோ ஒரு விதத்தில் முறியடிக்க வேண்டிய தேவை மேற்குக்கும் உண்டு.

அரகலயவை நீர்த்துப்போகச் செய்வதும் பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாகத் தணிப்பதும் ஒன்றுதான்.ஏனென்றால் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாகத்தான் அரகலய தோற்றம் பெற்றது.எனவே பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாக வேணும் வெற்றிகரமாகக் கையாண்டால்,நடுத்தர வர்க்கத்தின் கொதிப்பையும் கோபத்தையும் தணிக்கலாம். ரணில் பதில் ஜனாதிபதியாக வந்த கையோடு அந்த மாற்றத்தைக் காட்டவிளைந்தார்.எரிவாயு கிடைக்க தொடங்கியது,எரிபொருள் வரத் தொடங்கியது,மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது.

ரணில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் ஐ.எம்.எஃப் வெளியிட்ட அறிக்கையும் மத்தியவங்கி ஆளுநர் தெரிவித்த கருத்துக்களும் அந்த வகையிலானவைதான்.மத்தியவங்கியின் ஆளுநர் இப்பொழுது கூறுகிறார் 5 மாதங்களுக்குள் நிலைமை தேறிவிடும் என்று.ஆனால் சில கிழமைமைகளுக்கு முன் ரணில் கூறினார்,பொருளாதாரத்தை நிமிர்ந்துவதற்கு குறைந்தது நான்கு ஆண்டுகள் தேவை என்று ஐ.எம்.எஃப் கூறியதாக. அதிலும் குறிப்பாக முதலாவது ஆண்டு மிக நெருக்கடியான ஆண்டாக அமையும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.ஆனால் இப்பொழுது மத்திய வங்கியின் ஆளுநர் கூறுகிறார் நாலைந்து மாதங்களில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று. மொத்தத்தில் ரணிலைப் பலப்படுத்துவதற்காக மேற்குநாடுகளும் ஐ.எம்.எஃப்பும் இலங்கைத்தீவை நோக்கி உதவிகளைப் பாய்ச்சத் தொடங்கிவிட்டன.பங்குச் சந்தையும் அண்மை நாட்களில் மாற்றத்தைக் காட்டுகிறது.ரணிலை பலப்படுத்துவதுதான் அவர்களுடைய ஒரே குறிக்கோள்.ரணிலை பலப்படுத்துவதென்றால் பொருளாதாரத்தை தற்காலிகமாகவேனும் நிமிர்த்த வேண்டும்.பொருளாதாரத்தை தற்காலிகமாக நிமிர்த்திவிட்டால் போராட்டத்திற்கான காரணங்கள் வலுவிழுந்துவிடும்.

 

எனினும்,போராடும் தரப்புக்களுக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று ரணில் சிந்திப்பதாகத் தெரிகிறது.இத்தாலிய அறிஞரான க்ரொம்சி கூறுவது போல…நாடாளுமன்றம்,ஜனநாயகம் என்றெல்லாம் வெளித் தோற்றத்துக்குக் காட்டப்படும்.ஆனால் அரசுக்கு ஆபத்து என்று வரும்போது நாடாளுமன்றத்தின் பின் மறைந்து நிற்கும் ராங்கிகள் வெளியில் வரும்.அதுதான் கடந்த வியாளன் நள்ளிரவு நடந்ததா?பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும் ரணில் காயப்பட்ட படையினரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்ததும், ஜனாதிபதியாக வந்ததும் படைத்தரப்பைச் சந்தித்ததும் அதைத்தான் காட்டுகின்றன.அதாவது ராஜபக்சக்கள் ரணிலை ஒரு முன்தடுப்பாக முன் நிறுத்தியதன்மூலம் தமது இரண்டாவது இலக்கையும் அதாவது அரகலயவைத் தோற்கடிப்பது என்ற விடயத்தில் வெற்றிபெறத் தொடங்கி விட்டார்களா?

ரணில் பதில் ஜனாதிபதி ஆகியதும் போராட்டக்காரர்கள் உஷார் அடைந்தார்கள்.ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் பாசிச சக்திகள் உண்டு என்று அவர் கூறினார்.எனவே அரகலய தன்னை தற்காத்துக் கொள்ள முற்பட்டது. ஏற்கனவே அவர்கள் கட்சித் தலைவர்களை சந்திக்கத் தொடங்கி விட்டிருந்தார்கள்.ஜனாதிபதி தேர்தலையொட்டி கட்சிகளுடன் சந்திப்பை வேகப்படுத்தினார்கள்.அவர்கள் ஒரு புதிய கட்சியை உருவாக்கப் போவதாகவும் ஓர் அறிவிப்பு வந்தது.ஆனால் அது போராட்டத்துக்குள் ஊடுருவிய சிலரின் பொய்யான அறிவிப்பு என்று போராடும் அமைப்புகள் தெரிவிக்கின்றன. ராஜபக்சக்கள் ரணிலை முன்னிறுத்தியதும் அரகலய முன்னெச்சரிக்கை உணர்வோடு தற்காப்பு நிலைக்குச் செல்லத்தொடங்கியது.எந்த அரசியல் கட்சிகளை போராட்ட களத்தில் அனுமதிக்க மறுத்தார்களோ,அதே கட்சிகளை அவர்கள் சந்தித்தார்கள்.எந்த மக்கள் பிரதிநிதிகளை அவர்கள் திருடர்கள் என்று விழித்தார்களோ அவர்களைச் சந்தித்தார்கள்.

எனினும் அரகலயவின் முன்னெச்சரிக்கையோடு கூடிய தற்காப்பு நடவடிக்கைகளை மீறி ரணில் தாக்குதலைத் கொடுத்திருக்கிறார். ராஜபக்சக்கள் செய்யத்துணியாத ஒன்றை அவர் செய்திருக்கிறார்.ஏனென்றால் ராஜபக்சக்களின் பலம் உள்நாட்டில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத உணர்வுதான்.அவர்கள் எப்பொழுதும் உள்நாட்டில் பலமான தலைவர்கள். வெளியரங்கில் பலவீனமானவர்கள்.அதனால்,உள்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பியதும் அவர்களுடைய சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத் தளம் ஆட்டங்காணத் தொடங்கியது.அரகலயவின் பின்னணியில் மேற்குநாடுகள் நிற்பதும் அவர்களுக்குத் தெரியும்.எனவே தப்பிச் செல்வதைத் தவிர ராஜபக்சங்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. ஆனால் ரணிலின் விடயத்தில் நிலைமை வேறு.அவர் உள்நாட்டில் மிகவும் பலவீனமானவர்.வெளியரங்கில் மிகப் பலமானவர்.மேற்கு நாடுகள் மத்தியில் அவருக்கு கவர்ச்சி அதிகம். அந்தத் துணிச்சல் காரணமாகத்தான் அவர் அரகலயவின் மீது கை வைத்திருக்கிறார்.

ஆனால் இது ஒரு விஷப்பரீட்சை.ஏனெனில் அரகலியவின் பின்னணியில் இடதுசாரி மரபில் வந்த,ஏற்கனவே பலமான நிறுவனக் கட்டமைப்புகளை கொண்டுள்ள,அமைப்புகளும் கட்சிகளும் உண்டு.ஏற்கனவே இருதடவை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு தோற்கடிக்கப்பட்ட அனுபவம் உண்டு.பலமான தொழிற்சங்கங்கள் உண்டு.இவற்றின் தொகுக்கப்பட்ட விளைவாக ரணிலை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று பார்க்க வேண்டும்.ரணில் இப்பொழுதும் உள்நாட்டில் பலவீனமான தலைவர்தான்.

 

பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாகத் தணிப்பதன்மூலம் அரகலியவை இல்லாமல் செய்யலாம் என்று ரணிலும் மேற்கு நாடுகளும் சிந்திக்கும். ஆனால் முறைமை மாற்றத்தை கேட்டு அரகலய புதிய வடிவம் எடுக்குமாக இருந்தால் அது நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை பாதிக்கும். இதைப் பொழிவாகச் சொன்னால், ரணில் அரகலயவை எப்படிக் கையாள போகிறார் என்பதுதான் நாட்டின் அடுத்தகட்ட அரசியலைத் தீர்மானிக்கப் போகின்றது.அரகலயவின் விளைவாகத்தான் அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பே கிடைத்தது.இக்கட்டுரை எழுதப்படும் கணம் வரையிலும் அரகலயவவின் வெற்றிக் கனிகளை ரணில் தன்னுடைய சட்டப்பைக்குள் போட்டுக் கொண்டு விட்டார்.

நாடாளுமன்றத்தில் தாமரை மொட்டுக்கட்சி தொடர்ந்தும் பலமாகக் காணப்படுகிறது.அதனால் மாற்றத்தைக் கேட்கும் மக்களுக்கு ஒரு தோற்ற மாற்றத்தைக் காட்டும் ஒரு உத்தியாக அரசியல் சங்கீதக் கதிரை விளையாட்டை அக்கட்சி கடந்த மூன்று மாதங்களாக விளையாடி வருகிறது. இந்த சங்கீதக் கதிரையில் கடைசியாக அமர்த்தபட்டவர்தான் ரணில்.ஆனால் அதுதான் சங்கீதக் கதிரை விளையாட்டின் கடைசிக் கட்டம் என்று எடுத்துக் கொள்ள தேவையில்லை.கிரேக்கத்தில் பொருளாதார நெருக்கடிகளின்போது ஐந்து ஆண்டுகளுக்குள் ஏழு தடவைகள் அரசாங்கம் மாறியது.இலங்கைத் தீவில் கடந்த சுமார் இரண்டரை ஆண்டு காலப் பகுதிக்குள் ஒன்பது தடவைகள் அமைச்சரவை பகுதியளவோ அல்லது முழுமையாகவோ மாற்றப்பட்டிருக்கிறது.ஐந்து நிதி அமைச்சர்கள் வந்துவிட்டார்கள்.மூன்று பிரதமர்கள் வந்துவிட்டார்கள்.ஒரு புதிய ஜனாதிபதியும் வந்துவிட்டார். இதுதான் கடைசி மாற்றமா இதற்குப் பின்னரும் மாற்றங்கள் இடம் பெறுமா என்பதனை ரணிலுக்கும் அரகலயவுக்கும் இடையிலான மோதல்தான் தீர்மானிக்கப் போகிறதா?

Posted in Uncategorized

சர்வகட்சி அரசாங்கத்தால் தினேஷின் பதவி பறிபோகுமா?

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதற்கமையஇன்னும் இரண்டு வாரங்களில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் பாராளுமன்றத்தில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.

தற்போது இடைக்கால அமைச்சரவையொன்று செயற்பட்டு வருவதுடன், சர்வ கட்சி அரசாங்கம் அமைந்ததும் நிரந்தர அமைச்சரவை அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை, சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சர்வகட்சி அரசாங்கத்துடன் இணைந்தால் சஜித் பிரேமதாச அல்லது அக்கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவருக்கு பிரதமர் பதவி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

அப்படியானால், தற்போது பிரதமர் பதவியில் இருக்கும் தினேஷ் குணவர்தனவின் பதவியும் பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

கோட்டாபயவை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு கையளிப்பு

சிங்கப்பூரில் தற்போது தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாகக் கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் முறைப்பாடொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவின் மனித உரிமைகள் சட்டத்தரணி யஸ்மின் சூக்கா தலைமையிலான, சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் சட்டத்தரணிகள் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.

உள்நாட்டுப் போரின் போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜெனிவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறினார் என்று அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மீறலானது, சிங்கப்பூரின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட குற்றங்கள் என்று முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீறல்களில் கொலை, மரணதண்டனை, சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதை, பாலியல் வன்புணர்வு மற்றும் பிற பாலியல் வன்முறைகள், சுதந்திரத்தை பறித்தல், கடுமையான உடல் மற்றும் மனநல பாதிப்பு மற்றும் பட்டினி ஆகியவை அடங்கும் என்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து சட்ட விரோதமான நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து சட்ட விரோதமான நடவடிக்கைகளையும் நிறுத்தி தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.சட்டத்தின் ஆட்சியை விட மிருக பலத்தின் மூலம் செயற்பட விரும்புகின்றோம் என்ற ஆபத்தான செய்தியை, இந்த நடவடிக்கைகள் ஊடாக புதிய அரசாங்கம் மக்களுக்கு அனுப்புகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாங்கத்தை ஆதரிக்க முடியாது என்ற செய்தியை இலங்கைக்கு அவர்களின் சர்வதேச பங்காளிகள் உரத்த குரலில் வலியுறுத்த வேண்டும் என்றும் மீனாட்சி கங்குலி கேட்டுக்கொண்டுள்ளார்.பதவியேற்ற ஒரு நாளுக்குப் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மேற்பார்வையில் கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினரின் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக மீனாட்சி கங்குலி குற்றம் சாட்டியுள்ளார்.

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இதனை தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய பேரவையொன்று உருவாக்கப்படும் – எதிர்க்கட்சித் தலைவர்

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய பேரவையொன்று உருவாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நாடு முன்னேற்றமடைய வேண்டும் என்பதனால் அரசாங்கத்தின் சாதகமான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என சஜித் பிரேமதாச கூறினார்.நாட்டை பயனுள்ள வகையில் மீண்டும் கட்டியெழுப்ப தேசிய ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச மீண்டும் வலியுறுத்தினார்.

அனைத்து தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் போன்றவற்றை ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் குறித்து திட்டவட்டமான புரிதலுக்கு வரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அந்தவகையில் தேசிய பேரவை ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நிறுவப்படவுள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.இதனை அடுத்து குறித்த பேரவையில் எட்டப்படும் முற்போக்கான பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

போராட்டக்காரர்கள் வெளியேற்றம்: பொலிஸ் ஊடகப்பேச்சாளர் விளக்கம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடியிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்காத காரணத்தினாலேயே அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பொதுமக்களுக்கான முடிவுகளை எடுப்பதற்கான பிரதான அலுவலக அமைப்பாகக் காணப்படும் ஜனாதிபதி செயலகத்தை நிறைவேற்று ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்க வேண்டிய பொறுப்பு தமக்குள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழ் நாட்டிலிருந்து மற்றுமொரு நிவாரண கப்பல்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வழங்கப்படும் மூன்றாம் தொகுதி உதவி பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய மக்களவை உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதியின் தலைமையில் இதற்கான நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய 74 கோடி இந்திய ரூபா பெறுமதியான உதவி பொருட்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொருட்களான அரிசி, பால்மா மற்றும் மருத்துப் பொருட்கள் என்பன இவ்வாறு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

போராட்டக்கார்கள் மீது தாக்குதல் -யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம்

காலிமுகத்திடலில் போராட்டக்கார்கள் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

போராட்டகாரர்கள் மீதான ரணில் – ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இந்த போராட்டம் தொடங்கிய நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் தொடர்கின்றது.

Posted in Uncategorized

தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறையை ரணில் நினைவு படுத்தியுள்ளார்- காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்

கடந்த 1983ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில், தமிழர்களுக்கு எதிராக கறுப்பு ஜுலை வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

இந்த கறுப்பு ஜுலை வன்முறை நடந்தேறி இன்றுடன் 39 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. தற்போது ஜே.ஆர்.ஜெயவர்தனவின் மருமகளான ரணில் ஜனாதிபதியாக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஒப்பிடுகின்றனர்.

கறுப்பு ஜுலையில் முதலாவது கலவரம் ஆரம்பமானது, ஜுலை மாதம் 23ம் திகதி என்பதுடன், அதே திகதியை அண்மித்து மக்கள் மீது இலங்கை இராணுவம் நேற்று (22) தாக்குதல் நடத்தியதாக காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி முதல் சில வார காலத்திற்கு இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என இந்தக் கலவரத்தை இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.

திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கறுப்பு ஜுலை வன்முறை பார்க்கப்படுகிறது என்பதுடன் யாழ் நுாலகம் உள்ளிட்ட தமிழர்களின் பெரும் சொத்துக்கள் அழிக்கப்பட்டு பெருமளவிலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காலி முகத்திடல் போராட்டத்திலுள்ள இளைஞனான சத்துர ஜயவிக்ரம பண்டார, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

”ஜுலை மாதம் 23ஆம் திகதி, இந்த நினைவுகளை நாம் சற்று பின்நோக்கிப் பார்த்தால், 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி இன்று இலங்கையில் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பலவந்தமாக பதவியேற்றுக் கொண்ட, அதாவது மக்களின் விருப்பமின்றி தெரிவான ரணில் விக்ரமசிங்கவின் மாமனார், ஜுலை மாதம் 22ஆம் திகதியை அண்மித்தே அடக்குமுறையை ஆரம்பித்தார்.

மாமனார் செய்ததை, மருமகன் செய்வில்லை என்றால், அது பலனில்லை என எண்ணியிருப்பார் போலத் தெரிகிறது. நான் காணாத, அதாவது 39 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற, எமது நாட்டில் வாழக்கூடிய தமிழ் மக்கள் மாத்திரம் எதிர்நோக்கிய அடங்குமுறையை, இன்று ராணுவமயமாக்கலைப் பயன்படுத்தி மேற்கொண்டதை இன்று நாம் கண்டோம். 39 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதை, ரணில் விக்ரமசிங்கவின் மூலம் இன்று எம்மால் அவதானிக்க முடிந்தது. மாமனார் செய்ததை, மருமகனும் செய்து, இலங்கையில் மீண்டுமொரு கறுப்பு ஜுலையை ஏற்படுத்த முயல்கிறார். இலங்கையில் மீண்டும் இளைஞர்களின் உயிர்களை பலியெடுப்பதற்காகவா அல்லது இளைஞர், யுவதிகளின் கனவுகளை இல்லாது செய்வதற்காகவா இப்போது முயல்கிறீர்கள் என்றும் 30 வருட யுத்தம் எனக் கூறி தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களை மோதிக் கொள்ள வைத்து, நாட்டை இல்லாது செய்யவா முயல்கிறீர்கள் என்றும் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்க விரும்புகின்றோம்” என சத்துர ஜயவிக்ரம பண்டார தெரிவிக்கின்றார்.

நன்றி- பிபிசி தமிழ்

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பாதுகாத்துக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிப்பு

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட உடன்படிக்கைகளை முழுமையாக பாதுகாத்துக் கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது.மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி கொள்கைகளை பாதுகாப்பதற்கும் நிலையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த சில வருடங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 01 பில்லியன் யூரோக்கள் உதவி வழங்கியுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.அதில் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து இலங்கையில் பொருளாதார மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக தம்மை தொடர்ந்தும் அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளது.அமைதியாக ஒன்றுகூடுவதற்கும் பேச்சு சுதந்திரத்திற்குமான பொதுமக்களின் உரிமையை உறுதிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.