21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சிகளுக்கிடையில் பொது இணக்கம் ஏற்பட்டுள்ளது – மனோ

21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாக கட்சிகளுக்கு இடையில் பொது இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தலைமையில் இன்று இடம்பெற்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தின் போது இந்த இணக்கம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்ற இணக்கமும் எட்டப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி மட்டுமே பாதுகாப்பு அமைச்சு பதவியை வகிக்கலாம் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழ் முன்னணியை உருவாக்க வேண்டும்; சொல்ஹெய்ம் வலியுறுத்தல்!

‘தமிழ்த் தேசியவாத அரசியல் தரப்புகள் அர்த்தபூர்வமான மாற்றங்களுக்காக பொதுவான தமிழ் முன்னணியை உருவாக்க வேண்டும்’, – இவ்வாறு நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொருளாதார நெருக்கடி மற்றும் இனப்பிரச்னைக்கு கூட்டுத்தீர்வுகளை காண்பதற்கு சிங்கள, முஸ்லிம்கள் மத்தியில் உள்ள முற்போக்கான தரப்புக்களை நோக்கி நேசக்கரங்களை நீட்டுங்கள் என்பதும் இந்த தருணத்தில் தமிழ்த் தேசியவாத அரசியலுக்கான எனது ஆலோசனை என்றும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலையில் இயங்கும் சிந்தனைக்கூடம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில், அவரிடம் ‘தற்போதைய தருணத்தில் தமிழ் தேசியவாத அரசியலுக்கான உங்கள் ஆலோசனை என்ன? இந்த நெருக்கடிகள் காரணமாகஇலங்கை அரசியலில் ஆழமான மாற்றங்கள் ஏற்படும் என கருதுகின்றீர்களா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

இவற்றுக்கு பதிலளித்த அவர்,

‘அமைதியான வழிமுறைகைளை தொடர்ந்தும் பின்பற்றுங்கள் -அர்த்த பூர்வமான மாற்றங்களுக்காக பொதுவான தமிழ் முன்னணியை உருவாக்குங்கள்,

பொருளாதார நெருக்கடி மற்றும் இனப்பிரச்னைக்கு கூட்டுத்தீர்வை காண்பதற்கு சிங்கள, முஸ்லிம்கள் மத்தியில் உள்ள முற்போக்கான தரப்புகளை நோக்கி நேசக்கரங்களை நீட்டுங்கள்’,என்றார்.

மேலும், இலங்கை விவகாரத்தை உன்னிப்பாக அவதானிப்பவர் என்ற அடிப்படையில் ராஜபக்ஷ பரம்பரையின் எதிர்பாராத வீழ்ச்சி குறித்த உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

‘ராஜபக்ஷக்களின் வீழ்ச்சியின் வேகம் பல அவதானிகளுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. அவர்கள் மிகப்பெரும் பெரும்பான்மையை பெற்று மூன்று வருடங்களே ஆகின்றன. அதிகாரத்தை ஒரே குடும்பத்திடம் அதிகளவு குவித்தமையும், பொருளாதாரத்தை திறமையற்ற விதத்தில் கையாண்டமையும் இந்த வீழ்ச்சிக்கு காரணம். கோவிட் பரவலால் சுற்றுலாப்பயணிகள் வராததால் பெருமளவு வருமானத்தையும், வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் வருமானத்தையும் அவர்கள் இழந்தனர். அந்த வகையில் அவர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.

இறுதியில் வாழ்க்கை செலவீனங்கள் நாளாந்தம் அதிகரித்ததும் எரிபொருள் பற்றாக்குறையையும் இலங்கையர்கள் தாங்கிக்கொள்ள முடியாத விடயங்களாகக் காணப்பட்டன’ – என்றார்.

யுத்தத்துக்கு பிந்திய இலங்கை முடிவற்ற விதத்தில் நிச்சயமற்றதாக – ஸ்திரமற்றதாக காணப்படுகின்றது. 2015இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் இலங்கை யில் ஜனநாயக கட்டமைப்புகள் மீண்டும் வலுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது, எனினும் 2019 இல் ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தவுடன் அது முழுமையாக தோல்வியடைந்தது, நாடு தற்போது மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ? இலங்கை ஏன் தொடர்ந்தும் அரசியல் ரீதியில் நோயுற்றதாக காணப்படுகின்றது? என்ற கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

‘பல தசாப்த கால நெருக்கடிகளுக்கு பின்னரும் சிங்கள – பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் கொள்கையில் சிறுபான்மை தமிழர்கள் முஸ்லிம்களுக்கான சுயாட்சி என்ற விடயத்துக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. அனைத்து மக்களுக்கும் ஏற்ற விதத்தில் இந்த விவகாரத்துக்கு தீர்வை காணவேண்டும் என இலங்கை பிடிவாதம் பிடிக்கின்றது.

இதற்கப்பால் சிங்கப்பூரின் லீ குவான் யூ அல்லது இந்தியாவின் நரேந்திரமோடி போன்றவர்கள் வழங்கிய தொலைநோக்குடன் கூடிய தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய தலைவர்கள் இலங்கைக்கு கிடைக்கவில்லை. ஸ்திரமான அபிவிருத்தியடையும் பொருளாதாரம் அனைவருக்கும் நன்மையளிக்கும். அரசாங்கங்கள் நிதியை செலவிடுவதை மாத்திரம் முன்னெடுக்கமுடியாது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு உறுதியான தனியார துறையை கட்டியெழுப்பவேண்டும், வரவு – செலவுதிட்டத்தை சமப்படுத்தக்கூடிய வரிகளை அறிமுகப்படுத்தவேண்டும்’, என்றார்.

இதேபோல, ‘ரணில் விக்கிரமசிங்கமீண்டும் ஆளும் அரசியலில் நுழைந்துள்ளார். இதனை எப்படி பார்க்கிறீர்கள் – சமாதான அனுசரணையாளர் என்ற அடிப்படையில் நீங்கள் அவருடன் நெருங்கிபணியாற்றினீர்கள் – விமர்சனங்களிற்கு அப்பால் தற்போதைய நெருக்கடியை கையாளக்கூடியவர் அவர்தான் என சிலர்கருதுகின்றனர். பொருளாதார நிலையை ரணில் விக்கிரமசிங்கவால் திறமையான விதத்தில் கையாள முடியும் என நீங்கள் கருதுகின்றீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு,

‘மிகவும் நெருக்கடியான தருணத்தில் எனது நண்பர் ரணிலுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். ரணிலை விட தற்போதைய பொருளாதாரத்தை சிறப்பாக புரிந்துகொள்ளக் கூடிய – பேச்சுக்களில் சிறப்பாக ஈடுபடக் கூடிய வேறு ஒரு தற்போதைய இலங்கை தலைவரை நினைத்துப் பார்ப்பது கடினம். இதற்கு அப்பால் ரணில் ஒரு சிறந்த பண்பார்ந்த மனிதர்.

ஆனால், ராஜபக்ஷக்களை வீழ்த்தியவர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு அவர் இன்னமும் நீண்டதூரம் செல்ல வேண்டும். இலங்கையின் இளைஞர்களின் கரிசனைகளை செவிமடுப்பதற்கும், நீண்ட கால தீர்வுகளுக்கு அவர்களின் பலத்தை உள்வாங்குவதற்கும் அவர்களை நோக்கி ரணில் விக்கிரமசிங்க தனது நேசக்கரத்தை நீட்டவேண்டும் – என்றும் கூறினார்.

மனோவை சந்தித்த போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள்

“தம்பி, இந்நாட்டில் ஜனாதிபதியாக, பிரதமராக நாம் துடிதுடிக்கவில்லை. அப்படி துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள். இந்நாட்டில் ஜனாதிபதியாக. பிரதமராக எமக்கு தகுதி இல்லாமல் இல்லை. அவை நிச்சயமாக எமக்கு இருக்கின்றன. ஆனால், நாம் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுள்ள எமது மக்களை விடுவிக்கவே இன்று துடிக்கிறோம்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்த போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் குழுவிடம் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி- அனைத்து கட்சி போராளிகள் குழு சந்திப்பு, இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் இல்லத்தில் நிகழ்ந்தது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரமும் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டார். இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், காலிமுகதிடல், “அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) தூதுக்குழுவினக்கும் இடையில் எனது இல்லத்தில் நிகழ்ந்தது. இந்த சந்திப்பில் திகாம்பரம் எம்பியும் கலந்துக்கொண்டார். அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) சார்பில், விபீதக பொத்துவகே, நிராஷான் விதானகே, மனிஷ் கலப்பத்தி, கெலும் அமரதுங்க ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் நடைபெற்ற பேச்சுகளின் போது, தொடர்ந்து தமுகூ-அகபோ இடையில் பரஸ்பர தொடர்புகளை பேணி செயற்படுவது என்று முடிவானது. மலையக மக்கள், இலங்கை தேசிய தளத்தில் உள்வாங்கப்படுவது தொடர்பான, தமுகூ யின் மலையக அபிலாஷை ஆவணமும் அனைத்து கட்சி போராளிகளுக்கு வழங்கப்பட்டது.

இவர்களிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நான் எடுத்து கூறியது, “தம்பி, நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் ஆக வேண்டும் என துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள்”

“தமிழர்களாகிய எங்களுக்கு உணவு இல்லை, மின்சாரம் இல்லை,.. என்பவை பழகிப்போன பிரச்சினைகள். போர் காலத்தில் பல்லாண்டுகளாக தமிழ் மக்கள் இப்படி வாழ்ந்தார்கள். மலை நாட்டில் போர் இல்லாமலேயே நம் மக்கள் தோட்ட சிறைகளுக்குள் இப்படிதான் வாழ்கிறார்கள்.”

“கலவர காலங்களில் எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எம் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆகவே இவை எமக்கு சகஜம். ஆகவே புதிய இலங்கையை உருவாக்குவோம். இவை அனைத்திற்கும் தீர்வு தேடுவோம். மாற்றத்தை கொண்டு வர சொல்லிவிட்டு, நீங்கள் ஓரமாய் ஒதுங்கி நிற்காதீர்கள். அந்த தேடலில் நீங்களும் நேரடியாக பங்களியுங்கள். அந்த தீர்வு உணவு, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றுக்கு அப்பால் இருக்க வேண்டும்.”

“மலையக தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோட்டங்களில் பின்தங்கி வாழ்கின்றனர். அவர்களை தேசிய தளத்தில் உள்வாங்க அரசு இயந்திரத்தில் பெரும் தயக்கம் காணப்படுகிறது. அதை நாம் முறியடிப்போம். நீங்களும் உதவ வேண்டும்.”

இவற்றுக்கு, அனைத்து கட்சி போராளிகள் (அகபோ) சார்பில் பதிலளித்த பேச்சாளர் கெலும் அமரதுங்க கூறியதாவது, “நாம் உங்களை தேடி வந்து சந்தித்தமைக்கு காரணம் உண்டு. ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளையும், ஜனநாயக கட்சிகளையும் நாம் சந்திக்கிறோம். இன்று விலகி போக இருந்த கோதாபய ராஜபக்ச, ரணில் விகிரமசிங்கவின் உள்நுழைவால் கொஞ்சம் மூச்சு வாங்குகிறார். நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நீங்கள் கூறுவது போன்று, உணவு, மின்சாரம் ஆகியவற்றுக்கு அப்பால் ஆனது. அதில் நாம் இந்நாட்டின் அனைத்து இன, மத மக்களுடன் பயணிக்க விரும்புகிறோம். நாம் பலரை சந்தித்தோம். மாற்றத்துக்காக எம்மை நேரடியாக பங்களிக்கும்படி இதுவரை யாரும் கூறவில்லை. நீங்கள்தான் திறந்த மனதுடன் அதை கூறுகிறீர்கள். உங்களுடன் தொடர்புகளை பேண விரும்புகிறோம். மலையக தமிழ் மக்களையும் நாம் சரிசமமாக கவனத்தில் எடுப்போம்.”

Posted in Uncategorized

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: பிணையில் விடுவிக்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் 09 பேர் விளக்கமறியல் நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணை வழங்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் 09 பேரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டது.

சஞ்சீவ மொராயஸ் , தமித் தொடவத்த , மஹேன் வீரமன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சி வழங்குவதற்காக மன்றில் ஆஜராகியுள்ள சுமதிபால சுரேஷ் எனும் சாட்சியாளர், இதற்கு முன்னர் சாட்சி வழங்குவதற்காக மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை என்பதுடன், பின்னர் அவரை கைது செய்வதற்காக நீதிமன்றத்தினூடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மன்றில் சுட்டிக்காட்டினார்.

சாட்சியாளருக்கு அழுத்தம் விடுக்கப்படுவதால், அது தொடர்பில் விசாரணையொன்றை நடத்த கட்டளையிடுமாறு சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கில் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் விடுக்கப்படுகின்றமை தமக்கும் விளங்குவதால், விடயம் தொடர்பில் நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் சுட்டிக்காட்டினார்.

அதன் பின்னர் சாட்சிகள் விசாரிக்கப்பட்டதையடுத்து, மேலதிக வழக்கு விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Posted in Uncategorized

1.8 பில்லியன் ரூபா COVID நிதியை மருந்து இறக்குமதிக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

COVID-19 நிதியத்திலுள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தியாவசிய மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்ய வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

COVID கட்டுப்பாட்டிற்காக நன்கொடையாளர்களால் இந்த நிதி வழங்கப்பட்டதாகவும் தற்போது COVID நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், அந்த நிதியை சுகாதார தேவைக்காக பயன்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சுகாதார துறையில் துரிதமாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்து, கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

வைத்தியசாலைகளுக்கு தேவையான 234 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதுடன், உலக சந்தையில் மருந்துப்பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையை கருத்திற்கொண்டு, உள்நாட்டு மருந்து உற்பத்தியை மேம்படுத்துவதற்கு தேவையான மூலப்பொருட்களை இந்திய கடனுதவியின் கீழ் பெற்றுக்கொள்வதற்குள்ள இயலுமை தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார்.

ஒயாமடுவ மற்றும் ஹொரணை – மில்லவ பகுதிகளை மையப்படுத்தி மருந்துப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கு 12 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மருந்து உற்பத்தி நடவடிக்கைகளை எதிர்வரும் மாதங்களில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், 200 வகையான மருந்துகளை தயார் செய்வதற்குரிய உற்பத்தித்திறன் குறித்த பகுதிகளில் காணப்படுவதாகவும் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

Posted in Uncategorized

நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றம் சென்ற ரிஷாட்!

வில்பத்து, கல்லாறு பிரதேசத்தில் காடழிக்கப்பட்ட பகுதிகளை மீளக் காடுகளாக மாற்றுமாறு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.

தமக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, குறித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வில்பத்து கல்லாறு சரணாலயத்தில் காடழிப்பை மேற்கொண்டதற்காக மீண்டும் மரங்களை நடுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

மீனவர்களின் எரிபொருள் நெருக்கடியைத் தீர்க்க உதவுமாறு இந்திய துணை தூதுவரிடம் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள உதவுமாறு யாழ். இந்திய துணைத் தூதுவரிடம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரை சேர்ந்த மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 78,000 லீட்டர் மண்ணெண்ணெய்யும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 31,180 லீட்டர் மண்ணெண்ணெய்யும் தேவைப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பதற்கு உதவுமாறு செல்வம் அடைக்கலநாதன் இந்திய துணை தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

கோட்டாகோகம தொடர்பான அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

காலி முகத்திடல் கோட்டாகோகம போராட்டக்களத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அமைதிப் போராட்டம் சட்டவிரோதமான முறையில் கலைக்கப்படுவதை தடுப்பதற்கான உத்தரவை பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனெக்க அலுவிஹாரே, L.T.B.தெஹிதெனிய மற்றும் A.H.M.D. நவாஸ் ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் பொறியியலாளரும் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவருமான M.N.N.ஹமீம் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

ஜனாதிபதியை தாம் சந்தித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை “கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தாம் சந்தித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை “கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை ஜனாதிபதியிடம் சில முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையை ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர்.

மேலும் “கோட்டா கோ கம” பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர் .

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியினூடாக செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் கடந்த மே 27 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

அதற்கமைய, செயலணியின் பதவிக்காலத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீடித்து நேற்று குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி குறித்த ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட இச் செயலணியானது கடந்த காலங்களில் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.