மக்களை சிரமங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பொறுப்பை ஏற்றேன்-ரணில்

இலங்கை மக்களை எதிர்காலத்தில் அவர்கள் எதிர்நோக்கவுள்ள சிரமங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பொறுப்பை ஏற்றேன் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமராக இன்று மாலையில் பதவியேற்றுக் கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரணில். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் நடவடிக்கைகளை தனியாக தம்மால் முன்னெடுக்க முடியாது என்றும் ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் உதவிகள் அத்தியாவசியம் எனவும் தெரிவித்தார்.

மேலும் “மூன்று வேளைகளும் உணவு உட்கொள்ளும் வகையிலான பிரஜைகளாக இலங்கையர்கள் இருக்க வேண்டும். இலங்கை ரூபாவிற்கு பெறுமதி இருக்க வேண்டும். அத்துடன், இளைஞர்களுக்கு எதிர்காலமொன்று இருக்க வேண்டும்.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை. திங்கட்கிழமை அளவிலேயே அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளும்.

”கோட்டா கோ கம“ மீது நான் கை வைக்க மாட்டேன். அதனை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். காவல்துறையினரும் அதற்கு எதையும் செய்ய மாட்டார்கள்” என்றார்.

அதே நேரம் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,

கேள்வி:- ரணில் கோ கம என்ற ஒரு போராட்ட வடிவம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தற்போது கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. அது குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில் :- ரணில் கோ கம என்று ஒன்று உருவாக்கவில்லை. ரணில் கோ ஹோம் கம என்ற உருவாக்கி, எமது வீட்டிற்கு முன்பாக இருந்தனர். அது பிரச்னையாகியது. இந்த இடத்தில் ஒன்று மாத்திரமே உள்ளது. கோட்டா கோ கம என்ற அமைப்பு மாத்திரமே உள்ளது. ஏனையோருக்கும் கோ ஹோம் என கூற முடியும் அல்லவா?”

கேள்வி:- நாட்டில் தற்போது அரசியல் ஸ்திரமற்ற நிலைமை ஒன்று காணப்படுகின்றது. இதற்கு நிரந்தர தீர்வொன்று கிடைக்குமா?

பதில் :- ஆம்… ஆம்..

கேள்வி:- பெரும்பான்மை தொடர்பில் ஏதாவது பிரச்னை வருமா?

பதில் :- இல்லை. இல்லை.. பெரும்பான்மை தொடர்பில் பிரச்னை இல்லை. பெரும்பான்மை காண்பிக்கின்றேன்.

கேள்வி:- நாடாளுமன்றத்திற்குள் எவ்வாறு பெரும்பான்மையை காண்பிப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து பெரும்பான்மை கிடைத்துள்ளதையா நீங்கள் கூறுகின்றீர்கள்?

பதில்:- எனக்கு இரண்டு பக்கங்களிலும் பெரும்பான்மை உள்ளது. நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் இன்று துன்பங்களை அனுபவித்து வருவதை நிறுத்த வேண்டுமா? இல்லையா? நீங்கள் கூறுகின்றீர்கள், குறுகிய அரசியலை நடத்துவதற்காக மூன்று வேளைகளிலும் உணவு உட்கொள்ளா விட்டாலும் பரவாயில்லை. எமக்கு பெட்ரோல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எமக்கு டீசல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எமக்கு மின்சாரம் இல்லை என்றாலும் பரவாயில்லை. இந்த அனைத்தையும் நான் பெற்றுக்கொடுப்பேன், நாடாளுமன்றத்திலுள்ள அனைவரது ஆதரவுடனும் இதனை நான் பெற்றுக்கொடுப்பேன்.

Posted in Uncategorized

தமிழ் பரப்பிலிருந்து பாராளுமன்றுக்குத் தெரிவானவர்கள் நிதானமாகச் சிந்தித்து முடிவை எடுக்கவேண்டும் – ஜனா

சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவும், தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும், ராஜபக்ச சகோதரர்களையும் காப்பாற்றக் கூடியவராக ரணிலைச் சிந்தித்து நியமித்திருக்கிறார். ஏதிர்க்கட்சியை உடைக்க எண்ணியிருக்கிறார், ஆனால், வருகின்ற பாராளுமன்ற அமர்வில் ஓன்றுக்கு மேற்பட்ட பிரதமர் வேட்பாளர்கள் களமிறங்கவிருக்கும் நிலையில் தமிழ் பரப்பிலிருந்து  பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்;, நான் உட்பட மிகவும் நிதானமாகச் சிந்தித்து  முடிவை எடுக்கவேண்டும் என்பது என்னுடைய அவா என்று பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றைய அரசியல் கள நிலவலரம் தொடர்பில் அவருடைய அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்தும் தெரிவித்த அவர்,

தற்போதைய நிலையில், மக்களுக்குத் தேவையானது என்னவோ, ஆனால் நாட்டில் நடந்து கொண்டிருப்பபவை வேறு விதமாக இருக்கிறது. இன்று மக்கள் கோட்டா கோ ஹோம் என்று ஜனாதிபதியைப் பதவி விலகுமாறும், வீட்டுக்குச் செல்லுமாறும் கேட்கின்றார்கள். ராஜபக்ச குடும்பத்தையே அரசியலைவிட்டு ஒதுங்குமாறும். ஆவர்கள் கடந்த காலங்களில் நாட்டில் கொள்ளையடித்த பணங்களைத் திருப்பித் தருமாறும் கேட்கின்றார்கள். ஆனால் அதற்கு மாறாக, அரசாங்கம் மாறிக் கொண்டிருக்கிறது. இந்த ஜனாதிபதிதான் இருக்கின்றார்.

இந்த ஜனாதிபதி அவரின் தேர்தல் பிரச்சாரத்தின் போதே  வருமான வரியைக் குறைப்பதாகச் சொல்லியிருந்தார் இந்த நாட்டின் முதலாளித்துவ, முதலாளிமாருக்கு சலுகைகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறியிருந்தார். அந்த வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் வரியை 8 வீதமாகக் குறைத்தார். இதனால், இந்த நாட்டுக்கு வரவேண்டிய வருமானம் பின்தள்ளப்பட்டது.

அதற்கும் மேலாக விவசாயிகளின் வயிற்றிலே கையை வைத்தார். இந்த உரப் பிரச்சினையால், மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயச் செய்கை மாத்திரமல்ல ஒட்டுமொத்த நாட்டின் வேளாண்மைச் செய்கை, பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, மரக்கறிச் செய்கை அனைத்தும் விளைச்சலை குறைத்தது. அதனால் உணவுப் பொருள்களைக்கூட வெளிநாட்டிலிருந்து கொண்டுவரவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதற்கும் மேலாக இந்த ஜனாதிபதி  இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை வருகின்றது என்று தெரிந்திருந்தும்  சர்வதேசத்திடம், குறிப்பாக சர்வதேசத்திடம் செல்லாமல் விட்டது மிகப்பெரும் தவறு. இதை கடந்த பாராளுமன்ற அமர்வில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த அலி சப்றி இந்த அரசாங்கம் விட்ட தவறை, ஏற்றுக் கொண்டிருந்தார்.

ஜனாதிபதி அவர்கள் கடந்த கொரோனா காலத்தில் கூட உடனடியாக தடுப்பூசியை ஏற்றாமல், அவரது மந்திரிகள், அமைச்சரவையில் இருந்தவர்கள். குறிப்பாக சுகாதார அமைச்சர் அவர்கள் ஆயர்வேதத்தினையும், ஆயர்வேத மருந்துகளையும் நம்பியதனால் இந்த நாடு கொரோனாவினால் மிக மோசமாகப்பாதிக்கப்பட்டது.  சுற்றுலாத்துறையினால் வரக்கூடிய வருமானத்தை இழந்தது. அந்தவகையில் ஒரு மூடத்தனமான எதிர்காலத்தினை பற்றிச் சிந்தனையில்லாமல் எடுத்த முடிவுகள் தான் உடனடியாக இந்த நாட்டை பொருளாதாரப் பின்னடைவுக்குத் தள்ளியது.  காலி முகத்திடலில் ஜனாதிபதியை பதவியிலிருந்து விலகுமாறு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆனால் ஜனாதிபதி விலகாமல் பிரதமரை மாற்றுகின்றார். புதிய பிரதமரோ ஒட்டு மொத்த நாட்டில் ஒரு ஆசனத்தைக்கூட பெற்றுக் கொள்ள முடியாமல், முழு இலங்கையிலுமே இரண்டு வீதமான வாக்குகளைப் பெற்று தேசியப்பட்டியலில் பாராளுமன்றத்துக்கு வந்தவர். இன்று பிரதமராக ஆகியிருக்கின்றார். கடந்த காலங்களில் கூட இந்தப்பிரதமரைப்பற்றி பல விமர்சனங்கள் இருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சபையில் ஒரு வட்டாரத்தில் கூட வெற்றி பெறாது, பட்டியலில் உறுப்பினராக வந்து தவிசாளராக வந்தவரைப் போன்று இன்று ஒட்டு மொத்த நாட்டுக்கும் பிரதமராக வந்திருக்கின்றார். கடந்த காலங்களில் 5 தடவைகள் பிரதமராக இருந்திருக்கின்றார். அந்தக் காலங்களில் கூட தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வுக்கு எந்தவிதமான முடிவுகளையும் எடுக்காத பிரதமர் இன்று வந்திருக்கின்றார். அதாவது 69 லட்டம் வாக்குகளுடன்,  மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு ஜனாதிபதியையே, ஒட்டுமொத்த நாடுமே வேண்டாமென்று கூறும் பொழுது, இந்த ஜனாதிபதியவர்கள்  இந்த நாட்டு மக்களினால் ஐக்கிய தேசியக் கட்சியையே நிராகரித்திருக்கும் போது, அந்தக் கட்சியின் தலைவரை  நியமித்திருக்கின்றார். இதிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பது என்னவென்றால், சர்வதேச அழுத்தங்கள் ஜனாதிபதிக்கு இருந்திருக்கலாம் அதற்கும் மேலாக தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும், ராஜபக்ச சகோதரர்களையும் காப்பாற்றக்கூடியவராக இவரைச் சிந்தித்து நியமித்திருக்கின்றார்கள். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து உருவாகியிருக்கின்ற எதிர்க்கட்சியை உடைப்பதற்காக இருக்கலாம்.

எனவே நாங்கள் தமிழ் மக்கள் இந்த காலிமுகத்திடல்  போராட்ட விடயத்தில் எங்களைப் பொறுத்தமட்டில், எங்களது கட்சியைப் பொறுத்த மட்டில் வடக்கு கிழக்கிலுள்ள எங்களது இளைஞர்களை போராட்டத்தில் பங்குபற்ற வேண்டாமென்று கூறியிருக்கின்றோம். அது இன்று நிதர்சனமாகயிருக்கின்றது. ஏனென்றால் எங்களுக்குள்ளிருந்த சில மக்கள் பிரதிநிதிகள் வடக்குக் கிழக்கு இளைஞர்கள் இதில் பங்குபற்ற வேண்டுமென்று அறைகூவல் விடுத்திருந்தார்கள். கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடலில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை, வடக்கு கிழக்கு இளைஞர்கள் பங்குபற்றியிருந்தால், அது வேறு விதமாக மாற்றப்பட்டிருக்கலாம். ஒரு இனக்கலவரமாக மாற்றப்பட்டிருக்கலாம். 1983இல், நடந்த ஒரு கறுப்பு ஜுலைபோன்று, ஏற்கனவே எங்களுக்கு ஒரு கறுப்பு மேமாதம் இருக்கின்றது. முள்ளிவாய்க்கால் அவலம். அதே போன்றதொரு அவலம் ஏற்பட்டிருக்கும். அந்த வாய்ப்பை நாங்கள் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டதனால் தவிர்திதிருக்கின்றோம்.

எதிர்வரும் வாரத்தில் இந்த பிரதமர் தனக்குரிய பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிவரும். ஓன்றுக்கு மேற்பட்ட பிரதமர் வேட்பாளர்கள் களமிறங்கக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இந்த விடயத்தில் தமிழ் பரப்பிலிருந்து  பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்;, நான் உட்பட மிகவும் நிதானமாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்பது என்னுடைய அவா.

கோட்டா கோ கோம் போராட்டத்தினை வழிநடத்துகின்றவர்களோ, புதிய அரசாங்கத்தினை அமைக்கவுள்ளவர்களோ, ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளோ பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றபோதிலும் இந்த நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு முக்கிய காரணமாகவுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் யாரும் சிந்திக்கும் நிலையில் இல்லை.

2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் சட்டத்தரணிகள் இதே ரணிலை பாதுகாத்தார்கள். மீண்டும் அவ்வாறான நிலைக்கு செல்வார்கள் என்று கருதவில்லை.

தமிழ் தலைமைகள் பல தடவைகள் சூடுகண்டும் மீண்டும் மீண்டும் அடுப்பங்கரைக்கு சென்றுள்ளனர்.மீண்டும் அவர்கள் செல்வார்களானால் இன்று கோட்டா கோ கோம் போராட்டத்தினை முன்னெடுப்பதுபோன்று எங்களுக்கு எதிராக கோ கோம் என்னும் கூச்சலிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்ககூடாது.

Posted in Uncategorized

பிரதமருக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திட்டம்!

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்காக பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் இதன்போது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு அவருக்கு ஆதரவான தரப்பு திட்டமிட்டுள்ளது.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று நியமிக்கப்பட்டதை தொடர்ந்து எதிரணியினர் அவருக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி வருகின்றனர்.

இதேவேளை அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலைமையில் தனக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவளிக்கும் என்றும், இதன்படி தேவை ஏற்பட்டால் பெரும்பான்மையை காட்ட முடியும் என்றும் நேற்றைய தினம் பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கோட்டா கோ கமவில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் 35ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது

ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் ஆரம்பமான மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒரு பல எதிர்ப்புகளையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வழமைப்போன்று நேற்று இரவும் அரசாங்கத்தை வீட்டுக்குச் செல்லுமாறு கோசமெழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கொழும்பு கோட்டா கோ கமவில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 35ஆவது நாளாகவும் தொடர்கிறது.

மேலும் இதன்போது, புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.இதேவேளை நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணமான ஜனாதிபதி அதற்கு பொறுப்பு கூற வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் ரணிலுடன் இந்தியத் தூதுவர் சந்திப்பு!

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே  நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது புதிய பிரதமரின் எதிர்கால முயற்சிகளுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் தற்போதை நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

மக்கள் பிரச்சனைகளை ஆராய குழுக்களை நியமித்தார் பிரதமர்!

பொருளாதார நெருக்கடி நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய நான்கு குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக வஜிர அபேவர்தன மற்றும் பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

உரப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாகல காரியவசம் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுக்கள் குறித்த தரப்பினருடன் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கூறினார்.

Posted in Uncategorized

எங்கள் உறவுகளை கொன்றொழித்தவர்கள் இன்று சொந்த நாட்டுக்குள்ளேயே பாதுகாப்புத் தேடி ஒழிந்துகொண்டிருக்கின்றார்கள்… – த.செல்வராணி

தமிழர்கள் விட்ட கண்ணீர் இன்று இந்த அரசை ஆட்டிப் படைக்கின்றது. எங்களது உறவுகளை அழித்தவர்கள் இன்று தங்களது சொந்த நாட்டிற்குள்ளே பாதுகாப்புத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அம்பாறை மாவட்டத் தலைவி த.செல்வராணி தெரிவித்துள்ளார்.

‘உப்பில்லாக் கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் அவல நிலையை நினைவு கூரும் முகமாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வின் இரண்டாம் நாள் இன்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்பது இன்று பதின்மூன்று வருடங்களின் பின்னர் இலங்கையில் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்களது சொந்தங்களை, உறவுகளை, உடமைகளை அழித்தவர்கள் இன்று தங்களது சொந்த நாட்டிற்குள்ளே பாதுகாப்புத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். இருப்பதற்கு தக்க இடமில்லாமல், ஒழிப்பதற்குக் கூட இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்கள் விட்ட கண்ணீர் இன்று இந்த அரசை ஆட்டிப் படைக்கின்றது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு ‘முள்ளிவாய்க்கால் உப்பிலாக் கஞ்சி’ தயார் செய்து பிரதேச பொதுமக்களுக்கு வழங்கினர். இதனைப் பொதுமக்;களும் பெரும் ஆவலுடனும், உணர்வு பூர்மாகவும் அருந்திக் கொண்டனர்.

2009ம் ஆண்டு இறுதி யுத்த காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாகவும், அவ்வுறவுகள் பட்ட அவலங்களை பறைசாற்றும் முகமாகவும் முள்ளி வாய்க்கால் கஞ்சிவாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. குறித்த நிகழ்வானது மே 12 தொடக்கம் மே 18 வரையான காலப்பகுதிகளில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்: கொழும்பில் உள்ள இந்திய தூதர்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதும் அரசியல் ஸ்திரதன்மை ஏற்படும் நம்பிக்கை வந்துள்ளதாக இந்திய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடியையடுத்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து  புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கான இந்திய உயர் ஆணையரகம் (தூதரகம்) தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இலங்கையில் ஜனநாயக வழிமுறைகளின்படி பிரதமர் பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்,’ என்று தெரிவித்துள்ளது.

மஹிந்தவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு!

காலிமுகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 17 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்னை அடிப்படையாகக் கொண்டே இவர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்‌ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்‌ஷ, சனத் நிஷாந்த, ரோஹித அபேகுணவர்தன, பவித்திரா வன்னியாராச்சி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி அரசியல்வாதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலருக்கும் வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

”பிரபலமான அமைச்சு பதவிகளை நாங்களும் பெறலாம்”: மனோ

இந்த நிமிடம்கூட, கட்சியாக நாம் முடிவு செய்தால், மிக பிரபலமான அமைச்சு பதவிகளை பெற்று ஆட்சியில் நாம் பங்கு பெறலாம் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்திலேயே மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.
அவரின் அந்தப் பதிவு வருமாறு,
ரணில் விக்கிரமசிங்க தனிநபராக சபைக்கு வந்தார். இப்போது பிரதமர்.
எதிர்வரும் தினங்களில், அவர் ஆட்சியமைத்து, கபினட் அமைத்தால், அவருக்கு 113+ கிடைக்கலாம். அப்போது அவர் தனிநபர் அல்ல. ஆகவே ஆளட்டும்.
அவருக்கு எமது பண்பான வாழ்த்துகள்.
ரணிலுக்கு இழக்க எதுவுமில்லை. எமது ஐக்கிய மக்கள் கூட்டணி, ஆட்சி பொறுப்பை ஏற்காமைக்கு காரணம், பிரதான எதிரணியான எமது கொள்கை கோட்பாடுகள்.
நமது கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறுபான்மை கட்சி. இந்த நிமிடம்கூட, கட்சியாக நாம் முடிவு செய்தால், மிக பிரபலமான அமைச்சு பதவிகளை பெற்று ஆட்சியில் நாம் பங்கு பெறலாம். அதற்கான அழைப்பு எமக்கு எப்போதும் இருக்கிறது.
ஆனால், அதை நாம் செய்யவில்லை. மாறாக வெளியிலிருந்து பிரதமரை, எமது “முன்னாள் பிரதமரை” வாழ்த்துகிறோம்.
தற்சமயம், தமிழ் முற்போக்கு கூட்டணியாக, நாம் எதிரணியில் இருக்கிறோம். நடப்புகளை அவதானித்து பொறுப்புடன் கட்சியாக பயணிக்கிறோம்.