13வது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அண்ணாமலை

இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பா.ஜ. கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்குகின்றது. எரிபொருள் மருந்து மற்றும் பண உதவி போன்ற பல்வேறுபட்ட உதவிகளை இந்த அரசாங்கத்திற்கு இந்திய அரசு வழங்கி வருகின்றது.

அதேபோலத்தான் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு நமது இந்திய நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரால் அண்மைய இலங்கை விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் நடைமுறைத்தப்படும் சாத்தியம் உள்ளது.

அதே போல இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நிலையானது விரைவில் சுமுகமான நிலையை எட்ட இறைவன் அருள் புரிய வேண்டும். அதேபோல் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வருவோருக்கு கடுமையான சட்டங்களை பிரயோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்.

இலங்கை மக்களை தமிழ் மக்களை தொப்புள் கொடி உறவுகளை மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் நேசக்கரம் நீட்டி பார்க்கின்றோம்.

தென் இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்கள் பாதிப்பினை எதிர்நோக்குகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அது உண்மைதான். அது கட்டாயமாக தீர்க்கப்பட வேண்டிய விடயம்தான். ஆனால் சிறையில் இருப்பதற்காக எந்த இந்திய மீனவனும் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதில்லை ஏதோ ஒரு தவறால் வருகின்றார்கள். அது தொடர்பில் உரிய கவனம் எடுக்கப்படும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்றைய தினம் சந்தித்தார்.

இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இரண்டு மணி நேரம் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சீ.வீ.கே.சிவஞானம், த.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, இது சம்பிரதாயபூர்வமான சந்திப்பு என தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்- ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் கடிதம்

இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறும் கோரி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.​

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என்றும் கூறி உள்ளார்.

தமிழக அரசு விரும்பினால் இலங்கையில் பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளை ஒருங்கிணைக்க தலைமைச் செயலாளரை அனுப்பி வைக்கலாம் என்றும் ஜெய்சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(மாலைமலர்)

யாழ் வந்துள்ள தமிழக பாஜக தலைவர் நல்லூரில் வழிபாடு!! நல்லை ஆதீனத்தையும் சந்தித்தார்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்றையதினம் வழிபாட்டை மேற்கொண்டார்.

இன்று காலை 9 மணிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவருடன் யாழிற்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் வருகை தந்தனர்.

ஆலய வழிபாட்டிற்கு பின்னர் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட்டார் தமிழக பாஜக கட்சி தலைவர்

யாழில் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்டார் பாஜக அண்ணாமலை

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை இன்று காலை 10 30 மணியளவில் இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்டார்.

இதன்போது கலாச்சார மத்திய நிலையத்தின் அமைக்கப்பட்டிருக்கின்றன விசேட வசதிகள் தொடர்பாகவும் அதன் திறன்கள் தொடர்பாகவும் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் விளக்கம் அளித்தார்.

இதன்போது தமிழக பாஜக மாநில தலைவர் கு.அண்ணாமலை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தேர்தல் வெற்றிக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டன – கொழும்பு பேராயர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான தகவல்களை அறிந்திருந்தும் தேர்தல் வெற்றிக்காக அவை மறைக்கப்பட்டதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் நேற்று(01) இடம்பெற்ற விசேட ஆராதனையொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிபோதே கர்தினால் ஆண்டகை இதனைக் கூறினார்.

இந்த விசேட ஆராதனையில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆயர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய மே தினக் கூட்டம் – மக்கள் அலையால் நிரம்பியது சுதந்திர சதுக்கம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் ஏற்பாடு செய்திருந்த மே தினக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு – கெம்பல் பார்க் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி ஆரம்பமானது.

பின்னர் அங்கிரருந்து பொரளை சென்று , பொரளையிலிருந்து கொழும்பு – தேசிய வைத்தியசாலை சந்தியூடாக தாமரை தடாக பிரதேசத்தைக் கடந்து சுதந்திர சதுக்கம் வரை பேரணி சென்றது. ‘சுதந்திரத்திற்கான போராட்டம்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகளான மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவுப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்ரஸ் என்பனவும் , அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்களும் இதில் கலந்து கொண்டன.

ஆயிரக்கணக்கான மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டமையால் சுதந்திர சதுக்கத்திற்குச் செல்லும் வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பின.

இதனால் இன்று மாலை 4 மணியின் பின்னர் அவ்வழியூடான சகல போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்தது. பாரிய மக்கள் கூட்டம் காணப்பட்டமையால் அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

’74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ – 3 மாவட்டங்களில் ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ’74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் 3 பிரதான மாவட்டங்களில் மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

அதற்கமைய முதலாவது கூட்டம் மாத்தறை மாவட்டத்தில் இடம்பெற்றது. ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது. இதே வேளை அநுராதபுரம் மாவட்டத்தில் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையில் இடம்பெற்றது.

ஜே.வி.பி.யின் பிரதான கூட்டம் கொழும்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. கொழும்பு – மாளிகாவத்தை பகுதியிலிருந்து பேரணியாக புறக்கோட்டை புகையிரத நிலையம் வரை சென்று அங்கு கூட்டம் இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனா ஒத்துழைக்காவிடின் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு கேள்விக்குறியாகலாம் – இலங்கைக்கு எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடியும் மேலோங்கியுள்ளது. இதனால் உண்மையான பொருளாதார பிரச்சினைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன.

இந்திய நிதியுதவிகள் மே மாதத்துடன் முடிவடைகின்றமையால் நாட்டின் உண்மையான பிரச்சினைகள் இனிமேல் தான் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறிப்பாக எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் இலங்கை எதிர்கொண்டுள்ள கடும் நெருக்கடிகளே எதிர்வரக் கூடிய பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமாகும்.

எனவே, இலங்கையின் இறுதி எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் சீன கடன்களை மீள செலுத்துவதற்கான திட்டம் குறித்து பீஜிங்குடன் கொழும்பு அவசரமாக கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும் என நட்பு நாடுகள் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளன.

குறிப்பாக எரிபொருள் கொள்வனவிற்காக இந்திய நிதி உதவிகளாக 1.5 பில்லியன் டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தியாவிடமிருந்து கோரப்பட்ட எரிபொருளுக்கான சலுகைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

எஞ்சியிருப்பது உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான கோரிக்கையாகும். சுமார் 200 மில்லியன் டொலர் பெறுமதியான உரத்தை இந்தியா இன்னும் ஓரிரு வாரங்களில் அனுப்பி வைக்கவுள்ளது.

அதே போன்று தமிழ் நாட்டு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் பால்மாவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் தமிழ் நாடு அரசுடனோ மத்திய அரசுடனோ பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை. அவ்வாறு இலங்கை தனது நெருக்கடிகளை உணர்ந்து தமிழ்நாட்டிடம் கோரிக்கை விடும் பட்சத்தில் அந்த பொருட்களை அனுப்புவதற்கு மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

மேலும் இரத்த வங்கிகளுக்கு தேவைப்படுகின்ற இரத்த பாதுகாப்பு பைகளையும் இலங்கைக்கு வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. அதேபோன்று உலக வங்கியினால் கொவிட் நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியை தற்போதைய மருந்து நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் எஞ்சிய அந்த நிதியை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர இந்தியாவிடமிருந்தோ ஏனைய நாடுகளிடமிருந்தோ அத்தியாவசிய பொருட்களுக்கான கோரிக்கைகள் குறித்து அரசாங்கம் கலந்துரையாடியதாக தெரியவில்லை.

ஏனெனில் இலங்கையின் இறுதி நம்பிக்கையாகியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு கடனை மீள செலுத்தும் இயலுமை தொடர்பான அறிக்கையை இன்னும் தயார்படுத்தவில்லை.

குறிப்பாக சீனாவுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடவில்லை. அண்மையில் ஊடக சந்திப்பை நடத்திய கொழும்பிலுள்ள சீன தூதுவர் , ‘சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்லுவதாயின் உத்தேச 2.5 பில்லியன் டொலர் கடன் உள்ளிட்ட விடயங்கள் பாதிக்கப்படலாம்.’ என குறிப்பிட்டுள்ளார்.

எனவே சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்வதை சீனா விரும்பவில்லை என்பதே உண்மை. ஆனால் சீனாவின் ஒத்துழைப்பு இன்றி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதும் சாத்தியமற்றதாகும்.

ஏனெனில் இலங்கை பெற்றுள்ள சர்வதேச கடன்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஆக்க பூர்வமான சமிஞ்ஞைகளை வெளிப்படுத்த வேண்டும். அதாவது இலங்கையின் கடன் செலுத்தும் இயலுமை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் சீனாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காமை நெருக்கடியான நிலைமையை தோற்றுவிக்கும்.

எனவே கூடிய விரைவில் பீஜிங்குடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வருவது கொழும்பை பொறுத்த வரையில் சவாலான விடயமாகும். மறுபுறம் இனி ஏற்படக் கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இலங்கையிடமிருக்கும் திட்டங்கள் குறித்து சந்தேகங்களே உள்ளன.

ரஷ்யா மற்றும் சவுதி ஊடான எரிபொருள் கொள்வனவு குறித்து முன்னெடுப்புக்கள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் காரணமாக இவ்வாறு எரிபொருளை பெற்றுக் கொள்வதும் சவால் மிக்கதாகும்.

அதே போன்று சவுதியிலிருந்து கொழும்பிற்கு வரக்கூடிய எரிபொருள் மற்றும் ஏனைய சரக்கு கப்பல்களின் வருகையையும் மட்டுப்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் கொழும்பு துறைமுகத்தில் காணப்படக் கூடிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அடிப்படை சேவைகள் தொடர்பிலான பிரச்சினைகளாகும்.

எனவே மே மாதம் என்பது இலங்கையின் மிக நெருக்கடியான நிலைமையின் ஆரம்பமாக கருதப்படுகிறது. எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் மாத்திரமே ஏற்படக் கூடிய ஏனைய பொருளாதார சவால்களை ஓரளவு முகாமைத்துவம் செய்யலாம்.

அத்தியாவசிய பொருட்களை நெருங்கிய நட்பு நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்ள முடிந்தாலும் , எரிபொருளை அவ்வாறு பெற்றுக் கொள்ள முடியாது என்பதே உண்மையாகும்.

Posted in Uncategorized

இலங்கை-அலரிமாளிகையின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் காவல்துறையினரால் அகற்றம்

இன்று அலரிமாளிகையின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக் காரர்களின் கூடாரத்தை காவல்துறையினர் அகற்றியதை தொடர்ந்து மீண்டும் அந்த பகுதியில் கூடாரங்களை அமைப்பதற்காக பெருமளவானவர்கள் அலரி மாளிகை நோக்கி பேரணியாக செல்கின்றனர்.

இதையடுத்து வீதியோரத்தில் மேடை அமைக்க போராட்டக்காரர்கள் நடவடிக்கை எடுத்தனர்
இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக ‘மைனா கோ கம’ போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமது.

காலி முகத்திடலில் இருந்து மக்கள் குழுவொன்று அப்பகுதிக்கு வந்ததையடுத்து, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேவேளை, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் மக்கள் நடத்திய போராட்டம் இன்றுடன் 23 நாட்களை கடந்துள்ளது.

காலி முகத்திடலில் இன்று காலையிலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.