ரஞ்சன் விடுதலை விவகாரத்தில் அரச தலைவர் அசண்டையீனம் : ஐ.நாவை நாடுகிறது எதிரணி

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியிடம் மனு ஒன்றை கையளித்தனர்.

மனுவை கையளிப்பதற்காக இன்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு சென்ற போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை கூறியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுதலை வழங்குவது சம்பந்தமாக அரச தலைவர் கவனம் செலுத்தவில்லை என்பதால், அவரை விடுதலை செய்து கொள்வதற்கான இவ்வாறான தலையீடுகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க, ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக சிறையில் இருக்கவில்லை. கருத்து வெளியிடும் போது நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டில் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

குற்றங்களுடன் தொடர்பில்லாத அரசியல்வாதி என்ற வகையில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பை வழங்க முடியும். எனினும் அரசதலைவர் அது குறித்து கவனம் செலுத்தவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை அதிகாரிகளின் ஆய்வுக்கு அனுமதி மறுப்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை அதிகாரிகள் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.

திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தண்டனைக் காலம் முடிந்தும் தங்களை விடுதலை செய்ய தமிழக அரசு மறுப்பதாகவும்இ மேலும் ஆய்வுக்கு அனுமதி மறுப்பு தெரிவிப்பதாகவும்இ அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் குற்றம்சாட்டி பல்வேறு கட்டப் பேராட்டங்களை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் நடவடிக்கையால் சில வெளிநாட்டு கைதிகள் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

Posted in Uncategorized

தமிழ்க்கட்சிகளின் கூட்டுக்கோரிக்கை இந்தியா செய்யப்போவது என்ன?

– அகிலன்

இந்தியா செய்யப்போவது என்ன: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைப்பதற்காக தமிழ்க் கட்சிகளால் தயாரிக்கப்பட்ட கடிதம் ஒருவாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களால் கையொப்பமிடப்பட்டுள்ளது. இரண்டு மாத காலத்துக்கும் அதிகமாகத் தொடர்ந்த இழுபறிகள், சர்ச்சைகளுக்குப் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது தமிழ்க் கட்சிகளால் தயாரிக்கப்பட்ட ஆவணம் இறுதியாக்கப்பட்டு கையொப் பங்களும் பெறப்பட்டன. கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் மூலமாக இது இப்போது இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படுகின்றது.

ரெலோ முன்னெடுத்த இந்த முயற்சி தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கியமான ஒரு நகர்வு. இலங்கையை மையப்படுத்தி இடம்பெறும் வல்லரசு நாடுகளின் ஆதிக்கப் போட்டியைப் பயன்படுத்தக்கூடிய ஒரு நகர்வு. தேசியக் கட்சிகள் எனச் சொல்லக்கூடிய கட்சிகளைப் பொறுத்தவரையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் இதில் இணைந்திருந்தமை முக்கியமான ஒன்று.

13 ஆவது திருத்தம்

அரசியலமைப்பில் ஏற்கனவே இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுதான் இதன் பிரதான இலக்கு. தற்போதைய சர்வதேச – உள்நாட்டு அரசியல் நிலைமைகளின் அடிப்படையில் நடைமுறைச் சாத்தியமானதும், அவசியமானதும் என்ற அடிப்படையில்தான் இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் காய்நகர்த்துவது என்ற முடிவை ரெலோ எடுத்ததாகத் தெரிகின்றது.

13 ஆவது திருத்தம் தமிழ்க் கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பது உண்மைதான். 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கை மூலமாக 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு மாகாண சபைகள் அமைக்கப்பட்டபோது, விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் தமிழர் தாயகத்தில் இருந்தது. மிகவும் பலமான – உறுதியான கட்டமைப்புக்களை அவர்கள் வைத்திருந்தார்கள். இதற்கான தலைமை அவர்களிடமிருந்தது. மக்களின் ஒட்டுமொத்த ஆதரவை அவர்கள் பெற்றிருந்தார்கள். அந்த நிலையில், இலங்கை – இந்திய உடன்படிக்கையை புலிகள் நிராகரித் திருந்தாலும், இந்தியாவின் நல்லெண்ண முயற்சிகளுக்கு ஆதரவளித்து ஆயுதங்களை கீழே போடுவதாக பிரபாகரன் சுதுமலையில் வைத்து அறிவித்தார்.

தற்போது தமிழ் மக்கள் அந்தளவுக்கு பலமான நிலையில் இல்லை. அதாவது பேரம்பேசும் பலம் ஒப்பீட்டளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. பலமான ஒரு தலைமை தமிழ் மக்களிடம் இல்லை. இந்தியப் பிரதமருக்கான கடிதத்தைத் தயாரிக்கும் விவகாரத்திலேயே இதனைத் தெளிவாகக்காண முடிந்தது. உண்மையில் இது தமிழர்களுக்கு மட்டும் பிரச்சினையாக இருக்கவில்லை. இந்தியாவுக்கும் பிரச்சினையாக இருந்தது. அதாவது, பலமான தமிழ்த் தலைமை ஒன்றில்லை என்ற நிலையில், இலங்கையைக் கையாள்வதில் புதுடில்லியும் தடுமாறியது.

தமிழரசு – ரெலோ

அரசியல் ரீதியாக இலங்கையைக் கையாள வேண்டுமானால், பலமான ஒரு தமிழர் தலைமை – ஒன்றிணைந்த குரலில் கோரிக்கையை முன்வைக்கக்கூடிய தலைமை அவசியம் என புதுடில்லி கணக்குப் போட்டது. பல சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் அதனை அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால், தமழரசுத் தலைமையைப் பொறுத்தவரையில் அதற்கான முன்னெடுப்பு ஒன்றைச் செய்யக்கூடிய நிலையில் அது இருக்கவில்லை.

இந்தியா-செய்யப்போவதுஇந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இதற்கான முன்னெடுப்பை ரெலோ மேற்கொண்டது. தமிழ்த் தேசியக் கட்சி களைப் பொறுத்தவரையில் தேர்தல் அரசியலை மையப்படுத்திய கட்சிகளாகவே அவை உள்ளன. கூட்டமைப்பின் பிரதான கட்சியாக தன்னையே எப்போதும் முன்னிலைப் படுத்தும் செயற்பாட்டில் தமிழரசுக் கட்சி இருந்துள்ளது. ஆனால், இதற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியை முன்னெடுக்கத்தக்க யாரும் அங்கிருக்கவில்லை. அதனால்தான், ரெலோ இந்த முயற்சியை முன்னெடுத்தது.

இந்தியா-செய்யப்போவதுகடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு பாரிய பின்னடைவைச் சந்தித்த அதே வேளையில், கூட்டமைப்புக்குள் வலுவான ஒரு கட்சியாக ரெலோ மேலோங்கி யிருந்தது. மூன்று ஆசனங்களைப் பெற்றிருந்த ரெலோ, இந்தியப் பிரதமருக்கான கடிதத்தை அனுப்பி வைக்கும் முயற்சியையும் முன்னெடுத்தமை தமிழரசுக் கட்சிக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே குழிபறிக்கும் முயற்சிகளை தமிழரசுக் கட்சி – குறிப்பாக சுமந்திரன் மேற்கொண்டார்.

சுமந்திரனை முன்னிலைப்படுத்தாமல் இவ்வாறான ஒரு முயற்சியை தமிழ்க் கட்சிகள் இணைந்து முன்னெடுத்திருப்பது இதுதான் முதல்முறை என்பது கவனிக்கத்தக்கது.

ரெலோ முன்னெடுத்த இந்த முயற்சியின் முதலாவது கூட்டம் நவம்பர் முதல்வாரம் யாழ்ப்பாணத்திலுள்ள திண்ணை ஹொட்டலில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதாக உறுதியளித்திருந்த தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா இறுதி நேரத்தில் இதில் கலந்துகொள்வதைத் தவிர்த்தார். தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருந்த எதிர்ப்புக்கள்தான் இதற்குக் காரணம்.

இந்தியா-செய்யப்போவதுஇரண்டாவது சந்திப்பு கொழும்பில் குளோபல் ரவர் ஹொட்டலில் நடைபெறவிருந்த போது, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய சுமந்திரன், ரெலோ முன்னெடுத்த இந்த நகர்வை கடுமையாக விமர்சித்தார். மறுநாள் கொழும்பு சந்திப்பில் சம்பந்தனும் கலந்துகொண்டிருந்தார். மூன்றாவது சந்திப்புக்கு சுமந்திரனையும் அழைத்துக்கொண்டு அவர் சென்றிருந்தார். தான் கடுமையாக விமர்சித்த நகர்வில் தானும் சம்பந்தப்பட வேண்டிய நிர்ப்பந்தம் சுமந்திரனுக்கு ஏற்பட்டது.

மலையக முஸ்லிம் கட்சிகள்

மலையக, முஸ்லிம் கட்சிகளையும் இந்த நகர்வில் இணைத்துக்கொண்டமை எதிர்பார்க்கப்பட்டதைப் போல விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. பொதுவான நிலைப்பாட்டில் அந்தக் கட்சிகள் இணைந்துகொண்டாலும், வடக்கு, கிழக்கை தாயகமாகக் கொண்ட மக்களுடைய பிரச்சினைகளிலிருந்து மலையக, முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகள் வேறுபட்டவை. அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கியதாக பொதுவான ஆவணம் ஒன்றை தயாரிப்பதில் உள்ள பிரச்சினைகள் புரிந்துகொள்ளப்படவேண்டிவை.

இந்த நிலையில்தான் அந்த இரண்டு கட்சிகளையும் உள்ளடக்காமல் இந்த ஆவணம் கைச்சாத்தாகியிருக்கின்றது. ஆனால், பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட வேண்யதன் அவசியம் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றது. இந்த முயற்சி இதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளையில், ஹக்கீமைப் பொறுத்தவரையில் அவர் எதிர்கொள்ளும் உட்கட்சிப் பிரச்சினையும் தமிழ்க் கட்சிகளுடன் அவர் இணைந்து செயற்பட முடியாமைக்கு மற்றொரு காரணம்.

இந்தியா என்ன செய்யும்?

இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவின் கரங்கள் இப்போது மேலோங்கியிருப்பது தெரிகின்றது. இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார – அந்நியச் செலாவணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா கைகொடுத் திருக்கின்றது. அதற்குப் பிரதியுபகாரமாக திருமலையிலுள்ள மேலும் சில எண்ணெய்க் குதங்களை 50 வருட குத்தகைக்கு இந்தியாவுக்குக் கொடுப்பதற்கு இலங்கை இணங்கியிருக்கின்றது.

இந்தப் பின்னணியில் தமிழ்க் கட்சிகள் பொதுவான கோரிக்கை ஒன்றில் இணங்கிவந்து ஐக்கியமான தமது நிலைப்பாட்டை இந்தியாவிடம் வெளிப்படுத்தி யிருப்பது புதுடில்லிக்கு அரசியல் ரீதியாக பலத்தைக் கொடுத்திருக்கின்றது. இந்த நிலையில், புதுடில்லியின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்?

 

திருமண சுற்றறிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு சிறீதரன் எம்.பி கடிதம்!

இலங்கையர் வெளிநாட்டவரை திருமணம் செய்யும் போது, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி சான்றிதழை பெறும் புதிய சுற்றறிக்கையை மீள் பரிசீலனைக்குட்படுத்துமாறு தேசிய பாதுகாப்புக்கான இராஜாங்க அமைச்சரான சமல் ராஜபக்ஷவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இலங்கையின் விவாகம் (பொது) கட்டளைச் சட்டத்தின் 112ஆவது அத்தியாயத்தில் குறித்துரைக்கப்பட்ட நியதிகளை மாற்றத்திற்கு உட்படுத்தி, புதிய சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இளைஞர், யுவதிகள், தத்தம் பண்பாடு, கலாசார, மரபியல் அடையாளங்களை ஒத்தவர்களை திருமணம் செய்ய முடியாத அபாய நிலையே உருவாக்கப்படும் என சிறிதரன் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சுற்றறிக்கையின் மூலம், மாதாந்த வேதனமற்ற கௌரவ பதவியை உடைய கிராமிய விவாகப் பதிவாளர்கள் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான விவாகப் பதிவை மேற்கொள்ள முடியாதென தடைசெய்து, அதற்கான அதிகாரத்தை மேலதிக மாவட்டப் பதிவாளர்களுக்கு வழங்கியிருப்பது, அவர்களை அகௌரவப்படுத்தி, உளவியல் தாக்கங்களுக்கு உட்படுத்துவதாகவும், மாதாந்த வேதனமோ, நிலையான வருமானமோ அற்ற அவர்களுக்கு, விவாகப் பதிவின் போது வழங்கப்படும் சிறு வருமானத்தை இல்லாமற்செய்வதாகவும் அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் எவையும் சிங்கள மக்களின் திருமணச் சடங்குகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக இலங்கையில் வாழும் தமிழர்களையும், புலம்பெயர் நாடுகளில் வதியும் தமிழர்களையுமே பாதிப்பதாக அமைந்துள்ளது.
ஆனால் தமிழர்களைப் பொறுத்தமட்டில் தனிமனித வாழ்வின் பிரதான அங்கமாக உள்ள திருமணம் என்பது மத, மொழி, கலாசார, பண்பாட்டு விழுமியங்களின் அடிப்படைக் கூறாக, அக்கூறுகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஓர் அடையாளமாகவே காலம்காலமாக பின்பற்றப்பட்டுவருகிறது.

எனவே தமிழர்களின் இயல்பான வாழ்வில் தாக்கம் செலுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இச்சுற்றறிக்கையை மீள்பரிசீலனை செய்து, இந்நடைமுறை மூலம் தமிழர்களும், கிராமிய விவாகப் பதிவாளர்களும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சிறிதரன் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

சந்திரிகா தலைமையில் விரைவில் புதிய கூட்டணி!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணியொன்று அமைக்கப்படவுள்ளதுடன், அதில் அரசாங்கத்திலுள்ள சிலர் இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்திரிகாவின் தந்தை பண்டாரநாயக்கவின் நினைவுதின நிகழ்வு நேற்று நடைபெற்ற நிலையில் சந்திரிகா உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் அந்த நிகழ்வின் போது சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், சந்திரிக்கா தலைமையில் புதிய கூட்டணியை அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

Posted in Uncategorized

எதிர்க்கட்சித் தலைவர் நயினாதீவில் வழிபாடு!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலுக்குச் சென்று சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்

“பிரபஞ்சம்” நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

இதன்போது இன்று பிற்பகல் நாகபூஷணி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதேவேளை இலங்கை பௌத்தர்களின் பதினாறு வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப புராண ரஜமகா விகாரைக்கும் அவர் சென்றிருந்தார்.

இதன்போது விகாரையின் பிரதம தலைமை தேரர், அதி வணக்கத்திற்குரிய நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டார்

காங்கேசன்துறைக்கு சொகுசு ரயில் சேவை

கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிக்கும் பயணிகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய சொகுசு ரயில் சேவை இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ரயில் தினமும் காலை 5.10 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12.17 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கல்கிசை சென்றடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில் 10 பெட்டிகள் மற்றும் 02 பவர் என்ஜின்கள் உள்ளன.

இந்த ரயிலில் பயணிகளுக்கு வசதியான இருக்கைகள், உணவருந்துவதற்கான பகுதி, டிவி சேவை மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.

இந்த ரயிலின் சேவையைப் பெற விரும்பும் பயணிகள், ஒரு மாதத்திற்கு முன்பே ஒன்லைனில் இ-டிக்கெட்டுகளை வாங்க முடியும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட இந்த ரயிலின் பெறுமதி 2500 மில்லியன் ரூபாயாகும்.

இந்த ரயில் சேவையின் ஆரம்ப சேவை போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் கல்கிசை ரயில் நிலையத்தில் இடம்பெற்றது.

பின்னர் அமைச்சர் கல்கிசை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரை ரயிலில் பயணித்தார்.

கல்கிசை, தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கோட்டை, பொல்கஹாவெல, குருநாகல், அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம், கோண்டாவில், சுன்னாகம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய ரயில் நிலையங்களில் குறித்த ரயில் நிறுத்தப்படும்.

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு 1700 ரூபாயும், கல்கிசையிலிருந்து வவுனியாவிற்கு 1500 ரூபாயும், கல்கிசையிலிருந்து அனுராதபுரத்திற்கு 1200 ரூபாயும் அறவிடப்படுகின்றன.

Posted in Uncategorized

தமிழ் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் – இராதாகிருஷ்ணன்

இந்திய பிரதமருக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் நாம் கையொப்பமிடாவிட்டாலும், தமிழ் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அவர்களின் நடவடிக்கைக்கு எதிராக நிற்கமாட்டோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று ( ஞாயிற்றுக்கிழ்மை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,” இந்த அரசுக்குள், அரசியல் ரீதியிலும் தற்போது நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார்.

மறுபுறத்தில் மைத்திரிபால சிறிசேனவும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார். எனவே, அரசு வெகுவிரைவில் கவிழும் என்பதேயே நாட்டில் இடம்பெறும் அரசியல் சம்பவங்கள் மூலம் உணர முடிகின்றது.

எதிர்காலத்தில் புதிய கூட்டணிகள் உருவாகலாம். புதிய பயணம் பற்றி மைத்திரிபால சிறிசேனவும் கருத்து வெளியிட்டுள்ளார். அந்தவகையில் நாமும் தேர்தலுக்கு தயாராகவே இருக்கின்றோம். தேர்தலை மட்டும் எதிர்ப்பார்த்து வருபவன் தலைவர் கிடையாது, நாளை சமூகதாயம் பற்றி சிந்திப்பவனே உண்மையான தலைவர். அவ்வாறானவர்களுக்கே நாம் ஆதரவு வழங்க வேண்டும்.

அதேவேளை, தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தன. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுவதற்கே ஆரம்பத்தில் இணக்கம் காணப்பட்டிருந்தது.

அதன்பின்னர் சமஷ்டி, சுயநிர்ணயம் உள்ளிட்ட விடயங்களும் உள்வாங்கப்பட்டன. இதனால் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆவணத்தில் கையொப்பமிடவில்லை.

ஆனாலும் தமிழ்த் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு நாம் முழு ஆதரவை வழங்குவோம். அதற்கு தடையாகவோ – எதிராகவோ நிற்கமாட்டோம்.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தால் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. 20 மூலம் அது நீக்கப்பட்டது. அதனால் ஏற்பட்டுள்ள அவல நிலையை மக்கள் இன்று உணர ஆரம்பித்துள்ளனர். இந்த உண்மையைதான் மைத்திரி இன்று கதைக்கின்றார். ஆனால் 52 நாட்கள் அவர் அரசியல் சூழ்ச்சி செய்திருக்காவிட்டால், இன்றும் அவரே ஜனாதிபதி. – என்றார்.

‘சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கும்’ சீன வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கைக்கு மீண்டும் பயணம் செய்துள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர், நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக சீன அரசாங்கம் தொடர்ச்சியாக சினோபார்ம் தடுப்பூசியினை வழங்கியமைக்காக ஜனாதிபதி நன்றியை தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வின் ஒரு பகுதியாக கடனை திருப்பி செலுத்துவதற்கான திறன் குறித்து கவனம் செலுத்தினால் அது நாட்டிற்கு பெரும் நிம்மதியாக அமையும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த சந்திப்பின் போது கேட்டுக்கொண்டுள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கு மலிவுவிலையில் சந்தைக் கடனை வழங்கும் முறையை பெற முடிந்தால் தடைகள் இன்றி தொழில்துறையை நடத்துவது இலகுவாகயிருக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சீனா எமது உயிர் தோழன் – பிரதமர் மஹிந்த

‘சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி மற்றும் புகழ்பெற்ற இறப்பர் அரிசி ஒப்பந்தத்திற்கு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையை முன்னிட்டு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீயின் பங்கேற்புடன் கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ ஆகியோர் இதன்போது இலகுரக படகு முற்றத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தனர்.

இந்நடைபாதையில் பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபடக் கூடியதுடன், காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு முன்னால் இதற்கான தற்காலிக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

நடைபாதையின் நிறைவில் வளைவான வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலோக தொங்கு பாலம் வரை பொதுமக்கள் பயணிக்கக்கூடியதுடன், தினமும் முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 6.00 மணிவரை அங்கு தங்கியிருக்கலாம்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ‘இலங்கை – சீன நட்புறவு படகோட்டப் போட்டி’ இதன் ஒரு அங்கமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கான சீன தூதுவர் அலுவலகத்துடன் இணைந்து ஆரம்பித்து வைக்கப்பட்ட போட்டிக்கான வெற்றிக் கிண்ணம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ யினால் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இதன்போது 65 எனக் குறிப்பிடப்பட்ட ‘இலங்கை-சீன நட்புறவு படகோட்டப் போட்டி’க்கான நினைவு டீ-சேர்ட் ஒன்றினை வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீக்கு பரிசளித்தார்.

கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விளையாட்டுத்திறன் இணைக்கப்பட்டமை இருநாட்டு பிரதிநிதிகளதும் பாராட்டிற்கு உட்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

சீன வெளியுறவுத்துறை அமைச்சரை அன்புடன் வரவேற்கிறேன். அவரை எங்களின் மிக நெருங்கிய நண்பராக வரவேற்கிறோம். வரலாற்று ரீதியாக இலங்கையர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிய ஒரு அரசின் பிரதிநிதியாகவும் அவரை நாங்கள் வரவேற்கிறோம்.

நமக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த உறவு நீண்ட வரலாறு கொண்டது. உலகம் முழுவதும் வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே சீன அரசாங்கம் இலங்கைக்கு வந்து வர்த்தகம் செய்ததாக சாட்சிகள் உள்ளன.

உங்கள் நாட்டிலிருந்து புனித யாத்திரைக்கு வந்த ஃபாஹியன் துறவி பதித்த பதிவுகள் இன்றும் நம் வரலாற்றின் வண்ணமயமான பகுதியாகும். அன்று பாஹியன் துறவி மிகுந்த மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் எமது நாட்டுக்கு வந்ததைப் போன்று இன்றும் சீன மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இலங்கைக்கு வருகின்றனர்.

சீனா நமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை. அதனால் நமது நாடுகள் எப்போதுமே மிகவும் சாதகமான கொடுக்கல்வாங்கல்களை செய்துகொண்டிருக்கின்றன.

அன்று ஏற்படுத்தப்பட்ட இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தை நம்மவர்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். ‘எமது இரப்பர் உங்களிடமிருந்து அரிசி’. அதேபோன்று இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அப்போதைய பிரதமர் சௌசன்லாய் இலங்கைக்கு தேவையான உணவுப் பொருட்களை அனுப்பி மிகவும் மதிப்புமிக்க செய்தியை அனுப்பினார்.

‘உங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை நீங்களே உற்பத்தி செய்துக் கொள்ளுங்கள். அது சுதந்திரத்திற்கான வழி.’

நாம் அப்பாதையைக் கடைப்பிடித்தோம். இன்று உங்கள் நாடும் முழு உலகமும் ஏற்றுக்கொள்ளும் இயற்கை விவசாயத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

கொரோனா தொற்றால் அது தடைப்பட்ட போதிலும், முழு உலகிற்கு ஒரு முக்கிய முன்மாதிரியாக விளங்கவே முயற்சித்தோம்.

சௌசன்லாய் ஆரம்பித்த அணிசேரா கொள்கையை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். அந்தக் கொள்கை நம்மைப் போன்ற நாடுகளுக்குப் பெரும் பலமாக இருந்தது.

அதேபோன்று 2013 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக ஐ.நா பொதுச் சபையில் பிரேரணையை முன்வைத்த காலமும் எனக்கு நினைவிருக்கிறது. பெரிய வல்லரசாக சீன அரசு எங்களுக்காக முன்நின்றது. அது எமது நாடு போன்று ஆசிய நாடுகளின் சுதந்திரத்திற்காக சீனா செய்த மாபெரும் தியாகம் என்றுதான் கூற வேண்டும்.

உங்கள் நாடு கெரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. அந்நேரத்தில் ஒரு சீன பெண் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நம் நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைய வேண்டும் என நம் நாட்டு மக்கள் நட்புடன் பிரார்த்தித்தனர். உங்கள் நாடு கொரோனா தொற்றுநோயை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தி உலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. விரைவில் தடுப்பூசியை உருவாக்கி உலகிற்கு தைரியம் அளித்தனர். முதல் சுற்றிலேயே உங்கள் சீன தடுப்பூசியை நாங்கள் நம்பியிருந்தோம்.

அந்தத் தருணத்தில் எமது ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து எமது சார்பாக செய்த தியாகம் எமது மக்களுக்கு பெரும் பலமாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

அத்தகைய நண்பரின் எதிர்கால வளர்ச்சி குறித்து நாம் மகிழ்ச்சியுடன் பார்த்திருக்கின்றோம். சீன அரசாங்கமானது எமக்கு போன்றே உலகிற்கு அந்நாடுகளின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து உதவி செய்கிறது. நிபந்தனைகளை விதித்து தலையிடும் கொள்கை சீனாவிடம் இல்லை. எங்களைப் போன்ற நாடுகள் அத்தகைய கொள்கையையே எதிர்பார்க்கின்றன.

எனவே, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவிற்கு நாங்கள் பெருமையுடன் வாழ்த்துகிறோம். “Belt and road” என்ற எண்ணக்கரு நமது நட்பை மேலும் மேம்படுத்தும்.

வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களே, சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாம் அண்மையில் நினைவு நாணயம் ஒன்றை வெளியிட்டோம் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். நட்பின் அடையாளமாக அதைச் செய்தோம்.

அத்துடன், இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்காகவே துறைமுக நகரமொன்றை நிர்மாணிப்பதற்கு நாம் எதிர்பார்த்தோம்.

இதற்கு சீன அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் பெற்ற ஒத்துழைப்பை நினைவுகூர்வதுடன், சீன அரசாங்கத்துடனான நட்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் உங்கள் வருகையை நாம் காண்கிறோம் என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிசாந்த, தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமநாத் சீ தொலவத்த, முன்னாள் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சீன வர்த்தக பிரதி அமைச்சர் க்வான் கெமின், உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் வு ஜின்ஹொங், இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட சீன பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.