நவம்பர் முதல் அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளை ஆரம்பம்?

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்து அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று (08) தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாளின் தரத்தை எந்த விதத்திலும் மாற்றி அமைப்பதற்கு ஒரு போதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக மாணவர்களுக்கு பாடத்தை உள்ளடக்கி பரீட்சைக்கு தயாராவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பாடசாலை நாட்காட்டியில் வருடத்திற்கு 210 நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட்ட போதிலும், 2020 ஆம் ஆண்டில் 65 நாட்கள் மட்டுமே பாடசாலைகளை நடத்த முடிந்தது. 2021 ஆம் ஆண்டில் மேல் மாகாணத்திலுள்ள மாணவர்களுக்காக 5 நாட்கள் மாத்திரமே பாடசாலைகள் நடத்தப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது பாடசாலைகளில் பாடத்திட்டங்கள் எந்த அளவுக்கு முடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மாகாண மட்டத்தில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

முகாம்களில் இருந்து கனடாவுக்கு தப்பி ஓட்டிய இலங்கை அகதிகள்!

இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தமிழக கியூ பிரிவு பொலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென் மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கி இலங்கைத் தமிழா் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்தனராம்.

மாலைத்தீவு மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் இவா்கள் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக, சா்வதேச பொலிஸாரிடம் சிக்கினராம்.

மாலைத்தீவு அருகே உள்ள டிக்கோ காா்சியா என்ற தீவு அமெரிக்கா நாட்டின் வசம் உள்ளது. அமெரிக்காவின் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவில் அத்துமீறி இவா்களின் படகு நுழைந்ததாகக் கூறி அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

இதுவரை இந்தியத் தூதரகத்துக்கு இது குறித்து எந்தவிதமான தகவலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து 64 அகதிகள் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்ப முயன்றக வந்த தகவலையடுத்து க்யூ பிரிவு பொலிஸாா் தென் மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தி உள்ளனா். ஆனால், தற்போது வரை இந்த 64 போ் யாா் என்பதை உளவுத்துறை பொலிஸாரால் உறுதி செய்ய முடியவில்லை. அதேநேரத்தில் கடற்பரப்பில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படும் 64 நபா்களின் விவரங்களைப் பெறுவதற்காக தமிழக காவல்துறை சா்வதேச பொலிஸாா் உதவியை நாடி இருக்கிறது.

Posted in Uncategorized

கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

4 அத்தியாவசிய பொருட்களுக்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சீமெந்து, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளை நீக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

13ஐ முழுமையாக அமுல்படுத்த  மாகாண சபைத் தேர்தலை  நடத்த வேண்டும்  – இரா.துரைரெட்ணம்

சிறுபான்மையினரின் அதிகாரப்பரவலாக்கல், பங்கீடு சம்பந்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசை வலியுறுத்தியதற்கு இந்திய அரசினை வாழ்த்துகின்றோம். அதே நேரத்தில்  13ஆவது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் உடடியாக நடத்த வேண்டும்  என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதற்குப்பிற்பாடு கடந்த ஒரு மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியான இராஜதந்திர அழுத்தத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மனித உரிமை ஆணைக்குழுவினுடைய அழுத்தங்கள்,  இலங்கை அரசாங்கத்தின் சிறுபான்மை மக்கள் தொடர்பான செயல்வடிவங்களை முன்நகர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் வெளிநாடுகள் சம்பந்தமான இராஜதந்திரச் செயற்பாட்டில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.  இந்தியா 13ஆவது திருத்தத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் உறுதியான நிலைப்பாட்லுள்ளமை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கிறது. புலம்பெயர் சக்திகளுடன் ஜனாதிபதி அவர்கள் பேசப்போவதாகக் கூறியிருக்கிறார்.

இவ்வாறான விடயங்களை வைத்துப்பார்க்கும் போது இலங்கை அரசு சம்பந்தப்பட்ட விடயத்தில் சில மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இலங்கை அரசின் இந்த மாற்றங்கள், அவதானிப்புகள் ஊடாக சிறுபான்மைத் தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட விடயங்களிலும், சிறுபான்மை மக்கள் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட விடயத்திலும்  ஜனநாயக ரீதியான செயற்பாட்டிலும் மாற்றங்களைக் கொண்டுவந்து சிறுபான்மையினரினரை வெல்லவேண்டும்.

கடந்த வாரம் இலங்கைக்கு இந்தியாவின் சிரேஸ்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வருகை தந்து இலங்கை- இந்திய அரசுகளுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளை நடத்தி பல விடயங்கள் குறித்து ஆராய்ந்தாலும், குறிப்பாக சிறுபான்மையினரின் அதிகாரப் பரவலாக்கல், பங்கீடு சம்பந்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டமைக்கு நாங்கள் இந்திய அரசினை வாழ்த்துகின்றோம். பாரட்டுகின்றோம்.

இந்த விடயங்களை உணர்ந்து முழநாட்டுக்கும் நன்மை பயக்கக்கூடிய மூன்று இனத்துக்கும் நன்மை பயக்கக் கூடிய எல்லா மாகாண சபைகளுக்கும் நன்மை பயக்கக்கூடிய 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அழுல் படுத்துவதற்கான செயல்வடிவங்களை இலங்கை. அரசாங்கம் முன்கொண்டு செல்ல வேண்டும். அதன் ஒரு கட்டமாக மாகாண சபைத் தேர்தல் நடத்தபட வேண்டும்.

அந்தத் தேர்தலை நடத்தி மக்களாட்சி அமுல்படுத்தப்படும் போதுதான் 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்தக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்படும். குறிப்பாக வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் 13 ஆவது திருத்தச்சட்டம், சுயாட்சி, தமிழீழம் எனப் பல கருத்துக்கள் நம் மத்தியில் முட்டி மோதினாலும், தற்சமயம் 13ஆவது திருத்தச் சட்டத்தையேனும் அமுல்படுத்தினால் சிறுபான்மையினர் நன்மை பெறுவார்கள் என்ற நிலையில். இலங்கை அரசாங்கம் 13ஆவது திருத்தச் சட்டத் தை அமுல்படுத்துவதற்கும் வடக்குக் கிழக்கிலுள்ள அரசியல் கட்சிகள்  அதன் ஆரம்ப கட்டத்துக்கு செயல் வடிவத்தைக் கொடுப்பதற்கும்; மாகாண சபைத் தேர்தல் நடைபெற வேண்டும்.

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தொடர்பாக விமர்சனங்கள் இருந்தாலும் தற்சமயம் 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற தொனி சமூகத்தின் மத்தியில் வேரூன்றுகின்றது.

அத்தோடு மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துவதற்கு வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்புகளை நல்கி மாகாண சபையின் ஊடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு செயல் வடிவம் கொடுக்க கேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று தெரிவித்தார்.

தேர்தல் திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு கூடியது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.

புதிய திருத்தத்தின் ஊடாக ஸ்திரமான அரசாங்கமொன்று உருவாக்கப்படுவதும் மற்றும் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியது.

நாட்டில் உள்ள சகல பூகோள எல்லைகளையும் அடிப்படையாகக் கொண்ட பிரதிநிதித்துவம் புதிய திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும். விருப்பு வாக்கு முறையின் ஊடாக தமக்குத் தேவையான மக்கள் பிரதிநிதிகளை வாக்காளர்களால் தெரிவுசெய்ய முடியும். வாக்குச் சீட்டுக்கள் மக்களால் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் சுட்டிக்காட்டியது. தேர்தல் முறையின் ஸ்திரத்தன்மை அவசியமானது என்றும், இது வாக்காளர்களின் கோணத்திலிருந்து பார்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை நாட்டுக்குப் பொருத்தமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் நேற்று (07) பரிந்துரைத்தது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் ஊடாக பொது மக்களின் நியாயமான பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும், இந்த முறையின் கீழ் சகல வாக்குகளுக்கும் மதிப்பை வழங்க முடியும் என்றும் அக்கட்சி தெரிவித்தது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை மாற்றியமைக்காது அதில் காணப்படும் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்குப் புதிய திருத்தங்களின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தமது நிலைப்பாடு எனப் பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டது.

விசேட பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தது. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தேர்தல் முறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என அக்கட்சி தெரிவித்தது. விகிசாதாரப் பிரதிநிதித்துவ முறை நாட்டுக்கு மிகவும் பொருத்தமானது என்றும், இதன் ஊடாக மக்களின் வாக்குரிமை பலப்படுத்தப்படும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றுக்குமான மூன்று தேர்தல்களுக்கும் விகிசாதாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.

பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் பரிந்துரைகளை முன்வைத்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குறிப்பிடுகையில், விகிசாதாரப் பிரதிநிதித்துவமே நாட்டுக்குப் பொருத்தமானது எனத் தெரிவித்தது. விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கோட்பாடுகள் மாற்றப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் நிறைவேற்று ஜனாதிபதி முறையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் தெரிவித்தார்.

பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார். தேசியப்பட்டிலியலில் 50சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் எனவும் அவர் பாராளுமன்ற விசேட குழுவில் சுட்டிக்காட்டினார்.

தீர்மானம் எடுக்கும் மட்டத்தில் சகல சந்தர்ப்பத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அரசியல் கலாசாரத்தில் உள்ள வேறுபாடு காரணமாக அரசியலில் பெண்களின் பங்களிப்புக் குறைவடைந்துள்ளது என்றும் அவர் குழுவில் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, எம்.யு.எம்.அலி சப்ரி ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற விசேட குழுவின் அடுத்த கூட்டம் இன்று (08) பிற்பகல் இடம்பெறுவதாக இக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

Posted in Uncategorized

நவம்பரில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பையும் வாக்கெடுப்பையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிருபமா ராஜபக்ஷவின் கணவருக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பாக வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை உத்தரவிட்டார்.

இந்த நிலையிலேயே, அவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாக அந்த ஆணைக் குழுவின் அதிகாரி ஒருவர் கூறினார்.

உலகளவில் முறைகேடாக வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பெயர் அடங்கிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பன்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியான இந்த ஆவணத்தில், இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் நடேசன் இருவரும் இணைந்து லண்டன் மற்றும் சிட்னியில் சொகுசு குடியிருப்புகளை வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் ஷெல் நிறுவனத்தை பயன்படுத்தியதாக அந்த அறிக்கை விரிவாக கூறுகிறது.

மேலும் நடேசனின் நீண்டகால ஆலோசகர், 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது ஒட்டுமொத்த சொத்தாக 160 மில்லியன் டொலருக்கும் அதிகமாக வைத்திருந்தார் என ரகசிய மின்னஞ்சல்களை மேற்கோளிட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏசியாசிட்டி டிரஸ்ட் நடேசனின் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகித்தது என்றும் இதன் சொத்து மதிப்பு சுமார் 18 மில்லியன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த இரகசிய ஆவணங்கள் குறித்து நிருபமா ராஜபக்ஷ மற்றும் நடேசன் ஆகியோர் பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பன்டோரா பேப்பர்ஸில் தமது பெயர் வெளியாகியமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுந்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே, விசாரணைகளை ஆரம்பித்து வாக்கு மூலம் பதிவு செய்துகொள்ள தற்போது திருக்குமார் நடேஷன் அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியிட்டாரா – ரவூப் ஹக்கீம்

இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்தி ஆளுனர்களின் அதிகாரத்தில் உள்ள மாகாணங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மாகாணசபை தேர்தலை நடத்தி 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு எனவும் அந்த கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்(Rauf Hakeem) தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை, தேருநர்களைப் பதிவுசெய்தல் திருத்தச் சட்டமூலம், ஊழியர் சகாய நிதிய திருத்தச் சட்டமூலம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதம் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், மாகாணசபைகள் தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதற்கு நாம் அங்கம் வகித்த கடந்த அரசாங்கமும் பொறுப்புக்கூறியாக வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

அப்போது எல்லை நிர்ணயங்கள் என்ற காரணிகளை கையில் எடுத்துக்கொண்டு காலத்தை கடத்தியது மாத்திரமல்லாமல் இறுதியாக இவற்றை கையாண்ட அமைச்சரே எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களித்த மிகப்பெரிய நகைச்சுவையும் அப்போது இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்தி ஆளுனர்களின் அதிகாரத்தில் உள்ள மாகாணங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்

நாடளாவிய ரீதியில் முன்பள்ளிகள் மற்றும் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் தலைமையில் நடைபெற்ற முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடலின் போதே முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக பாடசாலைகள் திறக்கப்படாதிருந்தமையால் முன்னாயத்தமாக சிரமதான பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

தற்போது டெங்கு பரவும் காலநிலை ஆரம்பித்திருப்பதனால் டெங்கு பெருகும் இடங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். பாடசாலைக்கு உள்வரும் பிரதான நுழைவாயில் மற்றும் வகுப்பறைகளில் தொற்று நீக்கும் திரவங்கள் சரிவரப் பயன்படுத்தப்பட வேண்டும்.

சிறு பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதனால் சுகாதார நடைமுறைகளை அவர்களுக்கு காணொளி ஊடாக காண்பிப்பதனால். சமூக இடைவெளிகள் கட்டாயமாகப் பேணப்பட வேண்டும். கழிவகற்றல் செயற்பாடுகள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக மாணவர்கள் பயன்படுத்திய முகக்கவசங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். கொவிட் தொற்றினால் ஏற்படுகின்ற அறிகுறிகள் குறித்து ஆசிரியர்கள் அதிக அவதானத்தைச் செலுத்த வேண்டும்.

குறிப்பாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகள் அவர்களது குடும்பத்தில் யாருக்காவது ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அறிதல்.

சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார பரிசோதகர் ஆகியோருடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

பெற்றோர்கள் வாகனங்கள் மூலம் பிள்ளைகளைக் அழைத்து வரும்போது அங்கு ஏற்படக்கூடிய சமூக இடைவெளிகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் உணவருந்தும் இடங்களில் அதிக சமூக இடைவெளிகள் பேணப்பட வேண்டும்.

கிணறுகள் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாதிருப்பதனால் குளோரின் இட்டு அவற்றைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

இக் கலந்துரையாடலின் போது இவ்வாறான சுகாதார நடைமுறைகளை பாடசாலைகளில் பின்பற்றச் செய்வதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அதிக அவதானம் செலுத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு?

நவம்பர் மாதத்தில் இடம்பெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை என்பன பெரும்பாலும் அடுத்த வருடம் ஆரம்பகாலம் வரை ஒத்திவைக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வியாழக்கிழமை  பாராளுமன்றத்தில் நிலையிற் கட்டளைக்கு அமைவாக கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை பூர்த்திசெய்ய வேண்டும் என்பதால் மாணவர்கள் பரீட்சைக்கு தயாராக உரிய காலம் வழங்கப்பட வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கல்வி அமைச்சின் அதிகாரிகள் தொடர்ந்து பரீட்சை திணைக்களத்துடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி பரீட்சை நடத்தப்படும் திகதி குறித்து பின்னர் அறிவிப்பார்கள் என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்

Posted in Uncategorized