எரிபொருள் விநியோக பிரச்சினையை தீர்க்க ஓமானிடம் உதவிகோரும் இலங்கை அரசாங்கம்

இலங்கையின் எரிபொருள் விநியோக பிரச்சினையை தீர்ப்பதற்காக 3.6 பில்லியன் டொலர் நிதியுதவியைப் பெற இலங்கை அரசாங்கம் ஓமான் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டவுள்ளது.

குறித்த நிதியுதவிக்கு ஓமான் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இரு நாடுகளும் இந்த திட்டத்தை தொடர கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவலை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது வரைபில் உள்ள இந்த ஒப்பந்தம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து வருட சலுகை மற்றும் 20 வருடங்களில் குறித்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையிலும் நிபந்தனைகளை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

12 மாத காலத்திற்கு எரிபொருளை வாங்கும் வகையில் 3.6 பில்லியன் டொலர் நிதி உதவி இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என குறிப்பிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டார்.

அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவுடன் எரிபொருள் கொள்வனவிற்காக நிதியுதவியை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்கின்றது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு

இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு உள்நாட்டு போரின் போது காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த சந்திப்பு இடம்பெறும் என கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது, காணாமல் போனவர்களைக் கண்டறிய அரசாங்கம் மேற்கொண்ட மந்தமான முயற்சிகள் குறித்து கவலை வெளியிடப்பட்டது.

மேலும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணையில் அரசாங்கம் வெளிப்படையாக இழுத்தடிப்பை செய்கின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் விஜயம் ஒக்டோபர் 5 ஆம் திகதி நிறைவுபெறுவதற்கு முன்னர், காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்துள்ள குறித்த தூதுக்குழு, கடந்தவாரம் சிவில் சமூக குழுக்கள், எதிர்க்கட்சிகள், சிறுபான்மை சமூக பிரதிநிதிகள் மற்றும் வெளிவிவகார, தொழிலாளர் மற்றும் நீதி அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன ?

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தினை வந்தடைந்த அவரை வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே நேரில் சென்று வரவேற்றிருந்தார்.
இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் வெளிவிவகர அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
எதிர்வரும் ஐந்தாம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருக்கவுள்ள அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டிக்குச் செல்லவுள்ளார்.
இதன்போது தலதாமளிகையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதோடு சமயத் தலைவர்களையும் சந்திப்பார்.
அதனைத்தொடர்ந்து நுவரெலியா சீத்தா எலியவுக்குச் செல்வதோடு, இந்திய வீடமைப்பு திட்டத்தினை கையளிக்கும் நிகழ்வில் பங்கெடுப்பார் என்று திட்டமிடப்பட்டிருந்தபோதும் காலநிலை காரணமாக அந்த விடயம் நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியைத் தொடர்ந்து திருகோணமலைக்குச் செல்லவுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அங்கு இந்திய நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களைப் பார்வையிடவுள்ளார்.
பின்னர், அங்கிருந்து பிற்பகலளவில் யாழ்ப்பாணம் செல்லவுள்ள அவர், செட்டிக்குளத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தினை அங்குராப்பணம் செய்யவுள்ளதோடு, பருத்துறையில் ஏற்பாடாகியுள்ள பாடசாலை நிகழ்வொன்றிலும் பங்கேற்கவுள்ளதோடு, அதனையடுத்து வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸைச் சந்தித்துக் பேச்சுக்களை நடத்தவுள்ளவர் மாலை ஆறரை மணியளவில் யாழில் உள்ள விடுதியொன்றில் இராப்போசன விருந்துடன் முக்கிய பிரதிநிதிகளையும் சந்திக்கின்றார்.
இந்தச் சந்திப்பில், வடமாகாண சபையின் தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் எம்.பி., ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ்.மேயர் மணிவண்ணன் உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், சமயத்தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாளை திங்கட்கிழமை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரை இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அத்துடன், ஆளும் தரப்பின் முக்கிய அமைச்சர்கள், மற்றும் பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ள அவர், நாளை திங்கட்கிழமை பிற்பகலளவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், செயலாளர் ஜயநாத் கொலம்பகே உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
மேலும் குறித்த தினத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன், துறைசார் நிபுணர்கள், வர்த்தகத்துறையினர் உள்ளிட்டவர்களிடத்திலும் பேச்சுக்களை அவர் மேற்கொள்ளவுள்ளார். திங்கட்கிழமை அன்று நெருக்கடியான நிகழ்ச்சி நிரல் காணப்படும் பட்சத்தில் மறுதினமான செவ்வாய்க்கிழமை சந்திப்புக்களை தொடரவுள்ளார்.
மேலும், ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இந்திய வெளிவிவகார செயலாளராக பதவி ஏற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும். இதன்போது இருநாடுகளுக்கு இடையில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தல், இந்திய நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை விரைவு படுத்தல், எதிர்காலச் செயற்றிட்டங்கள், முதலீடுகள் தொடர்பில் அவர் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அழைப்பிலேயே இந்த உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அமெரிக்காவால் அரசாங்கத்துக்குள் வெடித்துள்ள அதிர்வு – பங்காளி கட்சிகள் எடுத்துள்ள முடிவு

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிறுவனத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்திற்குள் பூதாகரமாக வெடித்திருக்கும் பிரச்சனையை அடுத்து அரசாங்கத்திலுள்ள பங்காளிக் கட்சிகளின் 10 தலைவர்கள் 05ஆம் திகதி மீண்டும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

கொழும்பில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.

இதன்படி ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார , தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச, தூய ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர , லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி அசங்க நவரத்ன, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த குழு அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை  சந்தித்து யுகதனவி மின் நிலைய பிரச்சனை பற்றி கலந்துரையாடியபோதிலும் சாதகமான உடன்பாட்டை எட்ட முடியவில்லை.

இதனையடுத்து இவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து இது குறித்து கலந்துரையாட முடிவு செய்தனர், ஆனால் கடந்த வார இறுதி வரை அமெரிக்கா சென்ற ஜனாதிபதி நாட்டுக்கு திரும்பாததால், அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலைக் கோருவதற்காக தயாரிக்கப்பட்ட கடிதம் இன்னும் அனுப்பப்படவில்லை, முன்னதாக தயாரிக்கப்பட்ட கடிதம் திருத்தப்பட்டு நாளை மறுநாள் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என்று ஒரு பங்காளிக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

கோட்டாபயவின் அறிவிப்பு வேடிக்கையானது – கலாநிதி தயான் ஜயதிலக

தமிழ் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக  தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய குழுவினரின் செயற்பாடுகள், மற்றும் அதனுடன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்களையே முன்வைத்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் எனக் கூறினார், ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லாத ஒருவர், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுப்பது என்பது கேள்விக்கு உட்படுத்தும் கருத்துக்களாகும்.

தேசிய ரீதியில் அனைத்தையும் கையாள்வதாக கூறிக்கொண்டு தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காது யார்? எவர்? என்று தெரியாத புலம்பெயர் அமைப்புகளுடன் பேசுவேன் எனக் கூறுவது யதார்த்தத்திற்கு அப்பால் பட்ட காரணியாகும்” என அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

இந்திய வெளியுறவு செயலாளர் யாழ் விஜயம்

இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா யாழ். மாவட்டத்திற்கு இன்று (03) விஜயம் செய்ய உள்ளார்.

இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ளார்.

​​இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

அதேபோல் இலங்கையின் வெளியுறவு செயலாளருடன் அவர் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிங்களவர்களாக மாற்றப்பட்ட தமிழர்கள் – பகிரங்கமாக வெளிவந்த பின்னணி

முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக்கின் கூற்றுப்படி, துணை இராணுவக் குழு, காணாமலாக்கப்பட்ட இளம் சிறுவர் சிறுமிகளை மலேசியா, மாலைத்தீவு மற்றும் இந்தியாவுக்கு அடிமை வேலை மற்றும் பாலியல் அடிமைகளாக அனுப்பியது.

ஆனால், காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இறப்பு சான்றிதழை தனது முதல் மருந்தாக கொடுக்க விரும்புவதாக அங்கஜன் கூறுகிறார். இதை நிரூபிக்க விரும்பினால், அவர் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் உயிருடன் இருக்கும் போது எடுத்த படத்தையும், இறக்கும் போது எடுத்த படத்தையும், இறந்த பின் எடுத்த படத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் 1688 ஆவது நாளாக உறவுகளைத் தேடும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதாக நாங்கள் அறிகிறோம், அவர்களில் சிலர் கடத்தப்பட்டு, பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் சிலர் இராணுவ முகாம்களில் பணியாற்றுவதாகவும், மேலும் சிலர் பிக்குகளாகவும், சிங்களவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளதாகவும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ.ராஜ்குமார்  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

மேலும் ஒற்றுமை என்பது வெறும் பேச்சு மட்டுமல்ல. ஒருங்கிணைந்த கொள்கையுடன் இணைவது தான் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கஜனின் முதல் மருந்தை நாம் எதிர்க்கிறோம். இன்று 1688ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கான எமது போராட்டம் தொடர்கிறது.

இரண்டு முக்கியமான செய்திகளை நாம் தமிழர்களுக்கு எடுத்து இயம்ப விரும்புகிறோம். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் தமிழர்களிடமிருந்து, குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து ஒரு ஒருங்கிணைந்த தீர்மானத்தை விரும்புகிறோம். யூதர்கள் பெரும்பாலானோர் தம்மிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும் கூட, தம் குறிக்கோளில் ஒன்றிணைந்தனர். இதன் விளைவாக தான் இன்று இஸ்ரேல் என்று ஒரு நாடு உள்ளது.

அதேபோல் பின்வரும் தீர்மானத்துடன் நாம் இலக்கை அடைய வேண்டும்.

தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஐ.நா கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு, பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணை, தமிழருக்கான அரசியல் தீர்வு – ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட – மீள பெறப்பட முடியாத தமிழர் தாயகத்தை அடிப்படையாகக் கொண்டது. காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தடயவியல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்துதல்.

அரசியல் தீர்வு பற்றி இலங்கை அரசாங்கத்துடன் பேசமாட்டோம் என்று வாக்குறுதி அளிக்கவும். ஏனென்றால் நாம் இன்னும் 74 வருடங்கள் ஏமாறக்கூடாது, தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை மத்தியஸ்தர்களாக நாம் பயன்படுத்த வேண்டும் மேற்கண்ட கொள்கைகளை யாரும் மீறக்கூடாது.

போரில் பாதிக்கப்பட்ட நாங்கள் இத் தீர்மானத்தை தயாரிக்க விரும்புகிறோம். இதில் தமிழ் அரசியல்வாதி மற்றும் சிவில் குடிமக்கள், குழுக்களிடமிருந்து கையொப்பங்களை சேகரிக்க விரும்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சிறிலங்காவிற்கு வாக்குறுதி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்!

சிறிலங்காவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. நேற்றைய தினம் வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஐரோப்பிய ஒன்றியக் குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவிற்கான ஐரோப்பிய ஒன்றியக் குழுவிற்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் வர்த்தகத்திற்கான பொதுப் பணிப்பாளர் நாயகமான சிரேஷ்ட ஆலோசகர் நிகோலாஸ் ஸைமிஸ் மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியாவின் பிரிவுத் தலைவர் இயோனிஸ் ஜியோகாரகீஸ் – ஆர்கிரோபோலோஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவை சிறிலங்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஆக்கபூர்வமான, நட்பான மற்றும் வழக்கமான ஈடுபாட்டுடன் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வரவேற்றார். இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் – சிறிலங்கா ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஈடுபாடுகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீளாய்வு, சிவில் சமூகத்துடனான ஈடுபாடு, நிலையான அபிவிருத்தி இலக்கு 16 முன்முயற்சி மற்றும் மனித உரிமைகள் சபையுடனான இலங்கையின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஐரோப்பிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான சிறிலங்காவின் உறவுகள் பொருளாதார மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உட்பட பரந்த அளவிலானதும் மற்றும் பரஸ்பரம் நன்மை பயப்பதுமாகும் என வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். அதுமட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக இருப்பதால் , ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையின் நேர்மறையான பங்களிப்பையும், நாட்டின் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அதன் நன்மைகளையும் வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைத்தார்.

அமைச்சருடனான கலந்துரையாடல்களில், சிறிலங்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பலதரப்பட்ட ஈடுபாட்டை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம் தூதுக்குழு, தொடர்ச்சியான ஒத்துழைப்பை உறுதி செய்தது. இந்த விஜயத்தின் போது, ஐரோப்பிய ஒன்றியம் – சிறிலங்கா கூட்டு ஆணைக்குழு செயன்முறை மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை மூன்றாம் சுழற்சி மீளாய்வு செயன்முறை (2020, 2021) தொடர்பான சந்திப்புக்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு பங்கேற்றது.

இந்த சந்திப்புககளில் 30 க்கும் மேற்பட்ட வரிசை முகவர்களைக் கொண்ட அரசாங்கத்தின் பரந்த அளவிலான பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். இந்தத் தூதுக்குழுவானது, ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கியிருந்ததுடன், இந்த விஜயம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான சிறில்காவின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாகும்.

இந்த விஜயத்தின் போது அரசாங்கத்தின் ஏனைய சிரேஷ்ட பங்கேற்பாளர்களையும் இந்தத் தூதுக்குழு சந்தித்தது. கொழும்பிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் டெனிஸ் சாய்பி, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜயந்த் கொலம்பகே   மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

பால்மாவின் புதிய விலையை அறிவித்தது இறக்குமதியாளர் சங்கம்!

பால்மா ஒரு கிலோ பக்கட்டின் விலையினை 200 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஒருகிலோ பக்கட்டின் புதிய விலை 1145 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என்றும் அந்த சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள பால் மாவை இறக்குமதி செய்வதற்கு உள்ளூர் வங்கிகள் டொலர்களை வழங்காததால், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷுக்கு பால் மா இருப்புக்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய உள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீர்வில்லாமல் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்கக் கூடாது  – வடக்கு கிழக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும்  சிவில் அமைப்புக்கள் 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான திடீர் கைதுககள் நிறுத்தப்படவேண்டும், என்பதுடன் அச்சட்டம் இல்லாமலாக்கப்படவேண்டும்,  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, கையகப்படுத்தப்படும் எமது காணிகளுக்குரிய தீர்வு, மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் எடுக்கும் பட்சத்திலேயே ஜ.எஸ்.பி வரிச்சலுகையினை வழங்க வேண்டும் என்று வடக்கு கிழக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும்  சிவில் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு கிழக்கு பாதிக்கப்பட்ட மக்களும் சிவில் அமைப்புக்களும் இணைந்து மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில்   வெள்ளிக்கிழமை (01)  நடத்தினர். இச்சந்திப்பிலேயே இக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த  திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள்,

கடந்த கால யுத்தம் நடைபெற்ற போது சம்பூர் மக்கள் 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து பத்து வருட காலமாக முகாம் வாழ்க்கையை வாழ்ந்து மீண்டும் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணிகள் அரச உடைமையாக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்படாமல் இருக்கின்றது. அதிலும் 818 ஏக்கர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டும் மீட்டுத் தரப்படவில்லை. 215 ஏக்கர் வயல் காணியில் கடற்படையினரால் முகாமிடப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் 520 ஏக்கர் காணி அனல் மின் நிலையத்திற்கென்று அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையம் நீக்கப்பட்டும் மக்களால் அக்காணிகளால் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாமல் இருக்கின்றது. சம்பூர் மக்களிள் ஜீவனோபாயத் தொழில் விவசாயமாகவே இருக்கின்றது. இருந்தும் முழுமையாக விவசாயத்தில் ஈடபட முடியாமல் இருக்கின்றது. இது இங்கு மாத்திரமல்ல அம்பாறை வரை இப்பிரச்சனை இருக்கின்றது.

அத்துடன் மக்களின் உறுதி விவசாயக் காணிகளினுள் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினால் எல்லைகல் இடப்படுகின்றது. இதனால் விவசாயிகளில் தொழில் பாதிக்கப்பட்டு வருகின்றது.

யுத்தம் முடிவுற்ற பின்னர் சமாதானம் சமாதானம் என்று தான் சொல்லுகின்றார்கள். ஆனால் எமது மக்களுக்கு அது உள்ளதா என்பது கேள்விக்குறியே. எமது கால்நடைகளுக்கான காணிகள், வாழ்வாதாரக் காணிகள் வழக்கப்பட்ட பாடில்லை. இப்போதும் வனவள அதிகாரிகள் எல்லைகள் இடுவதும், வேலியிடுவதுமாகவே இருக்கின்றனர். மக்கள் அன்றாடம் செய்யும் தொழிலைச் செயவதற்கே சுதந்திரம் இல்லாமல் இருக்கின்றது.

ஆனால் யுத்த காலத்தில் எமது மக்கள் பாதுகாத்து வந்த மணல், மலை, குளங்கள் அனைத்தையும் யாராரோ எல்லாம் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான நிலைமைகளே இங்கு தொடர்ந்து இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, கையகப்படுத்தப்படும் எமது காணிகளுக்குரிய தீர்வு. மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் எடுக்கும் பட்சத்திலேயே ஜ.எஸ்.பி வரிச்சலுகையினை வழங்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எமது உறவுகள் செயற்பட்டு வருகின்றார்கள். ஒவ்வொரு மாவட்டங்களிலிலும் எமக்கான நீதியைக் கேட்கின்றோம். அதைவிட எமது நிலங்கள் தொடர்பான பிரச்சனை பாரிய பிரச்சனையாக இருக்கின்றது. எமது உறவுகளும் காணாமல் ஆக்கப்பட்டு இல்லாத நிலையில் எமது காணிகளையும் பறிக்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இருப்பதற்குச் சொந்த நிலமில்லாமல் அனைத்து உறவுகளையும் இழந்து அவதியுறுகின்றோம்.

பல ஏக்கர் காணிகள் வைத்திருந்த நாங்கள் இன்று அரசாங்கத்தின் ஒரு ஏக்கர் திட்டம் என்று ஒன்றைக் கொண்டு வந்து எங்கள் காணிகளை அபகரிக்கின்றது. எமது உறவுகள் இல்லை என்றால் மிகுதிக் காணி யாருக்கு? ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகை தொடர்பில் தீர்மானிப்பதாக இருந்தால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடயம், அரசியற் கைதிகள் விடயம், காணி விடயம் என்பனவற்றையும் கருத்திக் கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறமான மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் சிங்கள மக்களின் திட்டமிட்ட அத்துமீறல் காலம் காலமாக அதிகரித்துக் கொண்டு வருவதும்இ நாங்கள் பல தரப்பட்டவர்களிடம் இது தொடர்பில் முறையிட்டும் எதுவுமே சரிவரவில்லை. சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளின் மேய்ச்சற்தரை ஆளுநரின் திட்டமிட்ட செயற்பாட்டினால் பறிபோகின்ற நிலைமையிலேயே இருக்கின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசியற் கைதிகள் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு தற்போதைய ஆட்சி வந்ததும் இன்னும் பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்களுக்கான எவ்வித நீதிவிசாரணைகளும் இடம்பெறாமல் இருக்கின்றது.

எனவே நிலைமைகள் இவ்வாறு இருக்கையில் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீள வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஊடக சந்திப்பின் போது, மீளக்குடியமர்ந்தவர்கள் சார்பில் சம்பூரைச் சேர்ந்த காளிதாசன் குகதாசன், கிழக்கு மகளிர் அமைப்பின் உப தலைவி  குணரெத்தினம் அந்தோனிமேரி, மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை கால்நடை வளர்ப்போர் கமநல அமைப்பின் தலைவர் குழந்தைவேல் பொன்னுத்துரை, மகன் காணாமல் போன பட்டித்திடலைச் சேர்ந்த சின்னத்தம்பி சரஸ்வதி , கிளிவெட்டி குமாரபுரம் படுகொலையில் தாயை இழந்த  கந்தப்போடி பிரபாராணி, மூதூர் அம்மன் நகரைச் சேர்ந்த பிரபு ஜனனி , இடம்பெயர்ந்து வாழும் புல்லுமலையைச் சேர்ந்த எஸ்.திலகவதி, கிளிவெட்டி குமாரபுரம் அரசரெட்ணம் நடராசா, மட்டக்களப்பு வவுணதீவு மகேந்திரன் அனுஜன் ஆகியோர் தங்களது பாதிப்புக்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர்.