தமிழகம், கேரளாவில் சிறப்பு தேடுதல்! – விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் மீட்பு

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் உட்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய புலனாய்வு முகமையால் இன்று தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கின்றன.

தமிழகம் மற்றும் கேரளாவில் ஏழு இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்திய தேசிய புலனாய்வு நிறுவனத்தின் தகவல்படி விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள், கையடக்க தொலைபேசிகள், சிம் அட்டைகள் உட்பட ஏழு மின்னணு சாதனங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

ஏப்ரல் மாதத்தில், இந்திய கடலோர காவல் படையினர் 300 கிலோகிராம் ஹெராயின், ஐந்து துப்பாக்கிகளுடன் ஆறு இலங்கையர்களை கைது செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய சந்தேகநபர் பாகிஸ்தான் பிரஜை என்றும் அவருக்கு புலிகளுடன் நேரடி தொடர்பு இருப்பதாகவும் இந்திய பாதுகாப்பு படையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

மூன்றாவது நாளாக 150 ஐ கடந்த கொரோனா மரணங்கள்

நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 160 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் அவர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,935 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 350,693 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 307,345 ஆக அதிகரித்துள்ளது.

மதுரை ஆதீனம் சிவபதமடைந்தார்

மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் உடல் நலக்குறைவால் நேற்று வெள்ளிக்கிழமை(13-08-2021) இரவு சிவபதமடைந்தார்.

சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த மதுரை ஆதீனம் கடந்த ஆகஸ்ட்- 09 ஆம் திகதியன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை(12) தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்ட அவருக்கு நேற்று(13) வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கைச் சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் நேற்று இரவு-9.15 மணியளவில் சிகிச்சை பலனின்றிச் சிவபதமடைந்தார்.

தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான சைவத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம்.மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கியவர் மதுரை ஆதீனம்.

சிறந்த தமிழ்ப் புலமையும், பன்மொழிப் புலமையும், கணீர் என்ற குரல் வளமும், பேச்சாற்றலும் மிக்கவராக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் திகழ்ந்தார்.

காஞ்சி சங்கர மடத்துக்கு நேர் எதிரான ஆதீனமாக ஓர் நவீன வரலாற்றைத் தொடங்கி வைத்த சைவப் பெரியார் குன்றக்குடி அடிகளாரைப் போல வடமொழி எதிர்ப்பு, வைதீக எதிர்ப்பு போன்ற தமிழ்மண்ணுக்கே உரிய சிந்தனைகளை கொண்டவராக இறை பணியாற்றியவர்.

தமிழ்மொழி, மண், மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தவர் மதுரை ஆதீனம்.

இதேவேளை, கடந்த-2019 ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் இளவரசராக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளால் முடிசூட்டப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தான் மதுரை ஆதீன மடத்தின் 293 ஆவது மடாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளதாக மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

செஞ்சோலை படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்: அஞ்சலி செலுத்த வந்த உறவினர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

முல்லைத்தீவு செஞ்சோலை பகுதியில் 2006 ஆம் ஆண்டு இதே நாளில் இலங்கை விமானப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 54 மாணவிகள் உட்பட 61 பேரின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் இடம்பெறும் நிலையில், அஞ்சலி செலுத்துவதற்காக படுகொலை இடம்பெற்ற செஞ்சோலை வளாகத்துக்கு சென்ற மாணவிகளின் பெற்றோர் இராணுவம் மற்றும் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று காலை செஞ்சோலை வளாகத்துக்கு செல்லும் வள்ளிபுனம் இடைக்கட்டு வீதி முழுவதும் இராணுவம் ,பொலிஸார் ,புலனாய்வாளர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் வழமையாக நினைவேந்தல் இடம்பெறும் பகுதிக்கு படுகொலை செய்யப்பட்ட தங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பெற்றோர் சிலர் இராணுவம் ,பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்த விடாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பூக்கள், மாலைகளோடு அஞ்சலி செலுத்த வந்த பெற்றோர் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றுள்ளனர். மேலும் அந்த வீதியால் செல்பவர்கள் பொலிஸார் ,இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டனர்.

Share

Posted in Uncategorized

தமிழ்த் தலைமைகளின் பலவீனமே வெளித் தீர்மானங்களுக்கு காரணம்-ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ்த் தேசியம் சார்பு தலைமைகளின் ஒற்றுமை இன்மை காரணமாகவே தாயகத்துக்கு வெளியே தமிழரை மையப்படுத்திய தீர்மானங்கள் வெளிவருகின்றன. இது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. வருகின்ற தீர்மானங்கள் தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள் சம்பந்தன், கஐேந்திரகுமார், விக்கினேஸ்வரன் பேன்றவர்களே. இதுதான் தற்போதைய யதார்த்தம் என வடக்குமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் தரப்பில் அரசியல் தலைமைகள் பலமாக ஒரு நிலைப்பாட்டில் இல்லை என்ற உண்மையை தாயகத்திற்கு வெளியே வருகின்ற தீர்மானங்கள் வெளிப்படுத்துகின்றன என்ற கசப்பான உண்மையை கூறித்தான் ஆகவேண்டும்.

திம்பு பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பில் பல கட்சிகள் இயக்கங்களாக இருந்தாலும் தீர்மானத்தை ஒரே முடிவாக எடுத்தமையால் சிங்கள அரசாங்கத்தால் ஏமாற்ற முடியாது பின்வாங்க வேண்டிய நிலை உருவானது இது வரலாற்று உதாரணம். தற்போதைய சூழ்நிலையிலும் இவ்வாறான நிலை தமிழர் தரப்புக்கு அவசியமானது இதனை தமிழ்த் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்மையில் ரெலோ இயக்கம் இதனை மையமாகக் கொண்டுதான் ஒரு பொதுத் தளத்தில் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச வருமாறு அழைப்பு விடுத்தது இதனை அகில இலங்கை தமிழ் காங்கிரசை தவிர ஏனைய தரப்புக்கள் உத்தியோக பூர்வ கலந்துரையாடல்களை மேற் கொண்டுள்ளனர் ஆனால் இனத்தின் விடுதலைக்காக கஐேந்திர குமார் அணி பொதுத் தளத்திற்கு வரவேண்டும்.

விடுதலைப்புலிகள் பலமாக இருந்த போது வெளித் தீர்மானங்களுக்கு மாறாக புலிகளின் கோரிக்கையை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகளே முதன்மைப் படுத்தப்பட்டன. ஆனால் புலிகளின் ஆயுதபலத்தை விரும்பாத சக்திகள் மறைமுக நிகழ்ச்சி நிரலில் புலிகளை அழிக்க உதவினர்.

ஆனால் தற்போதைய சூழலில் தமிழ்த் தலைமைகள் ஐனநாயக பலத்தை திரட்டுவதன் மூலமே மீண்டும் அதிகார சக்திகளை தமிழர் விடையத்தில் திரும்பிப் பார்க்க வைக்க முடியும். அதற்கு முன்னோடியாக அனைவரும் பொதுத் தளத்திற்கு வந்து ஈழத் தமிழர்கள் சார்ந்த பொது நிலைப்பாட்டை தீர்மானமாக எடுத்து அதிகார சக்திகளுக்கு வழங்கி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் இதுவே காலத்தின் கட்டாயம்.

தமிழ்த் தலைமைகள் விமர்சனங்களையும் ஏற்றத் தாழ்வுகளையும் விட்டு ஒரு பொதுத் தளத்தில் கலந்துரையாட முன் வரவேண்டும் இதனை தவிர்த்தால் வெளிச் சக்திகள் தங்களது நலன்களை மையமாகக் கொண்டு பல்வேறு தீர்மானங்களை கொண்டு வருவதை தடுக்க யாராலும் முடியாது .

Posted in Uncategorized

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அவசர அழைப்பு

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அவசர கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை (16) கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

தற்போதைய கொரோனா நிலைமையில் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

Posted in Uncategorized

3 யுவதிகள் உட்பட 155 பேர் கொரோனாவுக்கு பலி!

நாட்டில் நேற்றைய தினம் (12) 155 கொவிட் மரணங்கள் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்…

இவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட 3 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,775 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 347,500 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 304,628 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியதாக இந்திய ஊடகம் தகவல்!

31 வயதான தமிழகத்தின், மண்டபம் மீனவர் ஒருவர் புதன்கிழமை கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையின் தாக்குதலில் காயமடைந்துள்ளார் என த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கோவில்வாடி பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் வடக்கு கடல் பகுதியான பாக்ஜலசந்திக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் இந்திய கடல் எல்லை அருகே மீன் பிடித்தபோது ரோந்துகப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்து, மண்டபம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்துள்ளனர்.

அத்துடன் இலங்கை கடற்படையினர் கண்ணாடி போத்தல்கள் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன், சில படகுகளின் மீன்பிடி வலைகளையும் வெட்டி கடலில் வீசியதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கையின் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தை நிறுத்தியது ஸ்காட்லாந்து காவல்துறை!

உலகளாவிய கண்காணிப்பு குழுக்களின் விமர்சனங்கள் காரணமாக, இலங்கையின் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தை ஸ்காட்லாந்து காவல்துறை நிறுத்தியுள்ளது.

டைம்ஸ் யுகே இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

நியூயார்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், பொறுப்பு மற்றும் சீர்திருத்தத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை இலங்கைக்கான உதவித் திட்டங்களை நிறுத்தி வைக்க, கடந்த வாரம் ஸ்கொட்டிஷ் தேசியப் படையிடம் கோரியிருந்தது.

சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவல் உள்ளிட்ட தொற்றுநோய்களின் போது இலங்கையில், காவல்துறை துஷ்பிரயோகங்கள் அதிகரித்திருப்பதாக உலகளாவிய கண்காணிப்பு அமைப்பு, குற்றம் சுமத்தியிருந்தது.

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்: மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமான குறைந்தளவானோர் மாத்திரமே பூஜைகளில் பங்கு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நல்லூர் ஆலய முன்வாசலில், ஆலய நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிஸாரின் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொடியேற்ற நிகழ்வினை, பொதுமக்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.