“இராணுவச் சீருடை அணியவேண்டாம்” சீனத்தூதரகத்திடம் பாதுகாப்புச் செயலர் கோரிக்கை!

திஸ்ஸ மஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள், இராணுவ சீருடை அணிந்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்நிலையில் எதிர்காலத்தில் அவ்வாறான இராணுவச் சீருடையை அணிய வேண்டாம் என்று குறித்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தும்படி, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன சீன தூதரகத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீன நாட்டின் இராணுவச் சீருடையுடன் அவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில் பாதுகாப்பு செயலாளர் சீனத் தூதரகத்திடம் நேற்று விளக்கம் கோரியிருந்தார்.

இதன்படி குறித்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது.

எனினும் அந்த சீருடை, சீனாவின் ஒரு நிறுவனத்துக்கு உரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் அவ்வாறான இராணுவச் சீருடையை அணிய வேண்டாம் என்று குறித்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தும்படி, பாதுகாப்பு செயலாளர் சீனத்தூதரகத்திடம் கோரியுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பலில் மர்ஜான் தனது ஆசனத்தை பசிலுக்கு அர்ப்பணிக்கிறார்!

முன்னாள் அமைச்சரும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ,நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்காக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது பலீல் மர்ஜான் தனது ஆசனத்தை பசிலுக்காக அர்ப்பணிக்கவுள்ளதாக உள்ளூர் அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான முகம்மது பலீல் மர்ஜான் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க ஒப்புக் கொண்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தி லீடரிடம் தெரிவித்தார்.

பிரபல தொழிலதிபரான முகம்மது பலீல் மர்ஜான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பராவார், அதனால் அவருக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டது.

பசில் ராஜபக்ஷவுக்கு நீண்ட காலமாக நாடாளுமன்றத்திற்கு வர உதவிய முஸ்லிம் நபர் ராஜினாமா செய்வதை பிரதமர் ஆரம்பத்தில் மறுத்த போதிலும், நாடாளுமன்ற செயல்முறைக்கு அவர் அளித்த பங்களிப்பு மிகக் குறைவு என்பதை விளக்கி அவர் அவ்வாறு செய்ய ஒப்புக் கொண்டதை ஏற்றுக்கொண்டார்,

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜூலை 08 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார், அதே நாளில் பொருளாதார விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராகவும் பதவியேற்பார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் பல பாடங்களும் நிறுவனங்களும் பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட வுள்ளதாக உள்நாட்டு அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சுப் பதவியை பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்ற 24 மணி நேரத்திற்குள் எரிபொருள் விலையை மீண்டும் குறைப்பதாக சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மாகாணசபையையாவது காப்பாற்ற எம்மவர்கள் ஒன்றிணையவேண்டும்! இன்றேல் அநாதையாவோம் என்கிறார் ரெலோ செயலாளர் ஜனா எம்.பி.

1983ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தின் பின்னர் போராட்ட இயக்கங்கள் அமோகமாக வளர்ந்திருந்தன. போராட்ட குணாம்சங்கள் உள்ள இளைஞர்கள் வடகிழக்கில் நிரம்பியிருந்தார்கள்.

ஆனால் இன்று அந்த நிலை மாறி 1983க்கு முன்பு இருந்த நிலையை விட மோசமான நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.

இந்த கட்டத்தில் உண்மையிலேயே தமிழ் மக்களை தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் எங்களது சுயகௌரவத்தை,கட்சியின் வளர்ச்சியை, சுயநல தனி மனித எண்ணங்களை விடுத்து ஒன்றாக இணைந்து தற்போதைய நிலைமையில் எங்களது பிரதேசத்தையும், மக்களையும்,1 மாகாணசபை முறைமையையும் காப்பாற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

மாகாணசபையை அரசியல் தீர்வு என முழுமையாக ஏற்காவிட்டாலும் அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றோம். அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள உண்மையிலேயே தமிழ் மக்களை, தமிழ் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் ஒன்றிணைய வேண்டும்.

அப்போதைய மூன்று போராட்ட இயக்கங்கள் ஆரம்பத்தில் ஈ.என்.எல்.எப் ஐ உருவாக்கி இருந்தாலும், அதன் இறுதிக் கட்டத்திலே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதில் சேர்ந்திருந்தார்கள்.

அந்த நான்கு இயக்கங்களும் மிகக் குறுகிய காலம் நன்றாகப் பயணித்தாலும் போராட்ட இயக்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பிளவுற்று பல உயிர்களையும், மிகத் திறமையான போராட்ட வீரர்களையும், போராட்டத் தலைவர்களை இழந்தோம்.
இறுதியில் தமிழ் மக்கள் இந்த இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டு மிகவும் மோசமான நிலையிலே இருக்கின்றார்கள்.

தற்போது போராட்டம் வடக்கு கிழக்கிலே இல்லாவிட்டாலும் அந்தக் காலத்தில் போராட்ட இயக்கங்களாக இருந்தவர்கள் அரசியற் கட்சிகளாக மாறியிருக்கின்றார்கள்.
தேர்தல்கள் பலவற்றில் போட்டியிட்டு அங்கத்தவர்களாகவும் இருக்கின்றார்கள். அதே போன்று மிதவாதக் கட்சிகளும் வடக்கு கிழக்கிலே தேசியத்தைக் கருத்தாகக் கொண்டு செயற்படுகின்றார்கள்.

ஆனால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, அவர்களது உடைமைகள் கபளீகரம் செய்யப்பட்டு, கலாச்சாரங்கள் மழுங்கடிக்கப்பட்டு மிகவும் மோசமாக இருக்கும் இந்தக் காலகட்டத்திலே தமிழ்த் தேசியத்தை விரும்பும் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய ஒரு தேவை எமக்குள்ளது.

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட மத்திய அரசாங்கத்தினால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் எதிர்காலத்தில் மாகாணசபை முறைமை இருக்குமோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது. இந்த மாகாணசபையைத் தமிழ் மக்கள் தங்களது அரசியற் தீர்வு என முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றார்கள்.

அந்த வகையில் அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணிப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தீர்மானம்

கொவிட் தொற்று நிலைமையால் நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பு மற்றும் அந்நிய செலாவணிச் சந்தைக்கு ஏற்படக்கூடிய எதிர்மறையான பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு ஒரு சில பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய வெளியகப் பரிவர்த்தனைகளை நிறுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் கட்டளை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளைகள் செல்லுபடியாகும் காலம் 2021 யூலை மாதம் 01 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளதால், அந்நிய செலாவணிச் சந்தையில் ஏற்படக்கூடிய ஆபத்து நேர்வைக் குறைப்பதற்கும் நிதிப்பிரிவின் நிலைபேற்றுத்தன்மையைப் பேணவும் குறித்த கட்டளைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கி கருத்துத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அந்நிய செலாவணி வெளியகப் பரிமாற்றலின் அடிப்படையில் ஒரு சில மட்டுப்பாடுகள்/தடைகள் விதிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை தொடர்ந்தும் 2022 ஜூலை மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 06 மாத காலத்திற்கு நீடிப்பதற்காக நிதி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு HRW வலியுறுத்து!

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என இலங்கை அரசை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இன்று வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 16 கைதிகளுக்கு இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றபோதும், கடுமையான இந்தச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான கடப்பாட்டை இலங்கை நிறைவேற்றவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தனது உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்றாவிட்டால் அந்நாட்டுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்பி. பிளஸ் வரிச் சலுகையை இரத்துச் செய்யவுள்ளதாக அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் வெசாக் பூரணை தினமாக ஜூன் -24 ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேர் உட்பட 94 பேர் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் பெரும்பாலும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது. சித்திரவதை மூலம் பலவந்தமாகக் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் இவர்கள் பலர் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான பாதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ததுடன், சக அரசியல்வாதியைக் சுட்டுப் படுகொலை செய்த குற்றத்துக்காக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது அரசியல் கூட்டாளியான துமிந்த சில்வாவுக்கும் இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தார்.

நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது அரசியல் கூட்டாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பளித்தமையானது இலங்கையின் சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அத்துடன், பொதுமன்னிப்பளிக்கும் அதிகாரம் தனிப்பட்ட விறுப்பு-வெறுப்புக்களின்பால் பயன்படுத்தப்படுகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கூறினார்.

2019 -இல் பதவியேற்றதிலிருந்து ராஜபக்ச அரசு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாட்டைத் தூண்டுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாஃப் ஜஸீம் ஆகியோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக அதை இன்னும் மோசமானதாக்குவதற்கான நடவடிக்கைகளை கோட்டாபய ராஜபக்ச எடுத்துவருகிறார்.

மார்ச் மாதத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இது இன, மத மற்றும் வகுப்புவாத ரீதியாக செயற்பட்டு தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதாக குற்றஞ்சாட்டப்படும் எவரையும் இரண்டு ஆண்டுகள் வரை விசாரணையின்றி சிறையில் அடைக்க வழி செய்கிறது.

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை கொழும்பில் ஒரு மோசமான சித்திரவதை தளத்தில் தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என இப்பகுதி வழக்கறிஞா் ஒருவர் தெரிவித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு மற்றும் கிழக்கில் ராஜபக்ச அரச நிர்வாகத்தின் கீழுள்ள பாதுகாப்புப் படைகளால் ஏராளமான சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என சா்வதேசத்தில் இருந்தும் உள்நாட்டில் இருந்து தொடா்ச்சியான அழைப்புக்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் மோசமான துஷ்பிரயோகங்களை ஐக்கிய நாடுகள் சபை வல்லுநர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை நீக்காவிட்டால் ஜி.எஸ்.பி + சலுகையை இரத்துச் செய்யும் தனது அறிவிப்புக்கு குறித்த ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கோரியுள்ளது.

Posted in Uncategorized

அனுமதியின்றி சீனர்கள் நாட்டுக்குள் நுழையும் சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது – சரத் பொன்சேகா

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனர்கள் இலங்கைக்குள் அனுமதியின்றி நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு உட்பட பாதுகாப்பு கட்டமைப்புக்களின் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தியதால் தேசிய பாதுகாப்பு உறுதி பெறாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

புலனாய்வுப்பிரிவு உள்ளிட்டவை வலுப்படுத்தப்பட்டு தேசிய பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தது பொய்யாகும். அவ்வாறு எந்தவொரு மாற்றமும் புலனாய்வு பிரிவில் ஏற்படுத்தப்படவில்லை. ஒரு பதவிகளில் நியமனங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதற்காக தேசிய பாதுகாப்பு வலுவடைந்துவிட்டதாகக் கூற முடியாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் கைது செய்தவர்களே தற்போதைய அரசாங்கத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். சஹ்ரானுக்கு அப்பால் இதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யாதவரை நாட்டில் அடிப்படைவாத , பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படும்.

பாதாள உலகக் குழுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறெனில் அண்மையில் ஹங்வெல்ல பிரதேசத்தில் நபரொருவரை கடத்திச் சென்று சுட்டுகொலை செய்து களனி கங்கையில் வீசியவர்கள் யார் ? தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் கூட பாதாள உலகக்குழுவினரைப் போலவே செயற்படுகின்றனர்.

அதனால் தான் பிரபாகரனை அழைத்துச் செல்வதைப் போன்று 20 குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கூட்டாக சென்று அசேல சம்பத்தை இழுத்துச் சென்றனர். இவ்வாறு செயற்படும் அதிகாரிகள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இந்த அதிகாரிகளுக்கு எதிராக நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவர்களுக்கு மாத்திரமல்ல. இலங்கைக்குள் பிரவேசித்து எமது நிலம் உள்ளிட்ட சொத்துக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டவருக்கு எதிராகவும் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ள தேசிய சொத்துக்களும் மீள பெறப்படும்.

இலங்கைக்குள் பொருளாதாரம் உள்ளிட்ட ஏனைய துறைகளில் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கதிக இடம் பாரிய ஆபத்தாகும். இவ்வாறு இடமளிக்கப்பட்டுள்ளமை சீனர்கள் அனுமதியின்றி இலங்கைக்குள் நுழையும் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளே இதற்கு காரணமாகும் என்றார்.

Posted in Uncategorized

மேலும் சில நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை வர தடை!

இலங்கையினுள் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலும் 8 நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, அங்கொலா, போட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, சுவிட்சர்லாந்து, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 நாட்களினுள் குறித்த நாடுகளுக்குச் சென்ற பயணிகளுக்கும், அந்த நாடுகளின் வழியாக வரும் புலம்பெயர்ந்த பயணிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை இந்த தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!

நேற்றைய தினம் (26) நாட்டில் மேலும் 41 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

17 பெண்களும் மற்றும் 24 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,985 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 254,828 ஆக அதிகரித்துள்ளது.

இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 221,249 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

“சிலோன் டீ” பற்றி பேசிவிட்டு, தோட்ட தொழிலாளரை மறந்த ஜனாதிபதி

ஒருநாளைக்கு ஆயிரம் என முப்பது நாளைக்கு முப்பதாயிரம் ரூபா சம்பளத்தை தோட்ட தொழிலாளர்கள் பெறுகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா, ஜனாதிபதி அவர்களே! தனது உரையில், “சிலோன் டீ” பற்றி பேசிவிட்டு, தோட்ட தொழிலாளரை மறந்த ஜனாதிபதி கோட்டாபயவிடம் இதை நான் கேட்க விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

இன்று எதிரணி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதுபற்றி மனோ எம்பி மேலும் விவரித்து கூறியுள்ளதாவது,

விலைவாசி உயர்வுக்கு கொரோனா என காரணம் காட்டும் ஜனாதிபதியால், தனது 19 மாத ஆட்சியின் முழு அலங்கோலத்தையும் கொவிட் கொரோனா என்ற திரையை போட்டு மூட முடியாது.

ஜனாதிபதி கோட்டாபயவை நினைத்து, எல்லே குணவன்ச தேரர் இன்று கண்ணீர் விட்டு அழுகின்றார். இன்னொருவரான முருத்தெட்டுவே தேரர் திட்டி தீர்க்கிறார். உண்மையில் அழ வேண்டியது அவர்கள் அல்ல, நாங்களே. ஆனால், இவர்கள் அழுது திட்டுகிறார்கள். இவர்கள்தான் இந்த ராஜபக்ச அரசாங்கத்தை உருவாக்கிய பெளத்த தேரர்கள். இவர்களின் அழுகையும், திட்டுமே இந்த அரசின் இலட்சணத்ததை படம் பிடித்து காட்டுகிறது.

இன்று இந்நாட்டில் ஆடை தொழில் ஏற்றுமதியின் எதிர்காலம் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. இவர்களின் மனித உரிமை மீறல் காரணமாக ஜிஎஸ்பி சலுகை இல்லாமல் ஆக போகிறது. இதனால், இந்த ஏற்றுமதி வருமானம் நின்று போகலாம். சுற்றுலாதுறை முழுமையாக நின்று போய் விட்டது. மத்திய கிழக்கு பணியாளர்களின் வாழ்வும், வருமானமும் இன்று கேள்விக்கு உரியதாக மாறி உள்ளது.

இந்நிலையில், இன்றும் அன்றும், என்றும் இலங்கைக்கு வெளிநாட்டு வருமானத்தை பெற்று தருவது தேயிலை ஏற்றுமதியே. இதனாலேயே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கான தனது உரையில், “சிலோன் டீ” பற்றி பேசினார். ஆனால், “சிலோன் டீ” யின் பின்னால் உள்ள உழைப்பாளிகளின் உயிர் வாழ்வு அவருக்கு மறந்து விட்டது.

தோட்ட தொழிலாளரை அப்படியே தொழில் அமைச்சர் நிமல் சிறிபால சில்வாவிடம் ஒப்படைத்து விட்டு நீங்கள் சும்மா இருக்கிறீர்கள். அவர்களை தோட்ட நிறுவனங்களிடம் பணயக் கைதிகளாக விட்டு விட்டீர்கள். உங்களை அரசில் தோட்ட தொழிலாளரை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற கட்சி குறட்டை விட்டு தூங்குகிறது.

இலங்கை சிலோன் தேயிலை தொடர்பாக பேசிய ஜனாதிபதி, இலங்கைத் தேயிலையின் பின்புலத்தில் இருக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் பேச மறந்துள்ளார். அது தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகிறோம். எப்பொழுதும் போலவே இன்றும் நாட்டில் மிஞ்சியுள்ளது, தேயிலை உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் ஏற்றுமதித் தொழில்துறை மட்டுமே.

இந்தத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் ஒரு கணமேனும் நினைத்துப் பார்த்தீர்களா என அவரிடம் நான் வினவ விரும்புகின்றேன், கவலை கொள்கிறேன். அவர் சற்றும் அது குறித்து நினைத்துப் பார்த்தது போல் தெரியவில்லை. தோட்டத் தொழிலாளர்களும் இந்த நாட்டின் பிரஜைகளே.

தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத்தருவதாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கு எத்தனை நாட்களுக்கு அந்த சம்பளம் வழங்கப்படுகிறது? நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 30 நாட்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் கிடைப்பதாக ஜனாதிபதி நினைக்கிறாரா? அவ்வாறு இல்லை. ஏழு அல்லது எட்டு நாட்களுக்கான சம்பளமே அவர்களுக்குக் கிடைக்கிறது. அதுபோல, நாளொன்றுக்கு அவர்கள் பறிக்க வேண்டிய கொழுந்தின் எடை, தோட்டத்திற்கு தோட்டம், நிர்வாகத்திற்கு நிர்வாகம் மாறுபடுகிறது. தான்தோன்றித்தனமாக அவர்கள் அதனை நிர்ணயித்துக் கொள்கின்றனர். புத்தகத்திலே குறிப்பிடப் பட்டிருப்பதைப் போன்று அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்ற எண்ணப்பாட்டிற்கமைய, அந்த நியாயம் அவர்களுக்கு கிடைக்கவில்லை, 5000 ரூபாய் உதவிப் பணமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை,

தோட்ட தொழில் துறை இது ஒரு ஏற்றுமதி தொழில். இதில் எப்படி கொரோனா வருகிறது? வருமானம்தான் வருகிறது. இதில் கிடைக்கும் அரசின் வரி வருமானம் மூலம் தோட்ட தொழிலாளருக்கு நிவாரணம் வாழங்குங்கள்.

இதேபோல் நடுக்கடலில் மிதந்த இரசாயன திரவியம் கொண்ட, தீப்பற்றிய கப்பலை யார் இங்கே இலங்கை கடலுக்குள் கொண்டு வர சொன்னது? துறைமுக மாஸ்டரா ? அல்லது உங்கள் அமைச்சரா? உங்கள் அரசா? அதில் பெருந்தொகை காப்புறுதி கிடைக்கும் என கற்பனை செய்தீர்களா?

இதனால் இன்று பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரை தோட்ட தொழிலாளரைப் போல், மீனவர்களும் நடுத்தெருவுக்கு வந்து கொண்டுள்ளார்கள். அது மன்னார் வரை போய் விட்டது. அவர்கள் வாழ்க்கை உடைகிறது. நம் கடலின் மீனவ செல்வங்கள் பேரழிவை சந்திக்கின்றன. அதேபோல் இலங்கை மக்களின் சாப்பாட்டு மேசைகளில் இன்று மீன் உணவு இல்லை. மீன் வாங்க சமைக்க எல்லோரும் பயப்படுகிறார்கள். மீன் உணவும் இல்லை. மீனவர் வாழ்வும் இல்லை.

அதேபோல், உங்கள் உரக்கொள்கை சந்தி சிரிக்கிறது. இரசாயன உரம் வேண்டாம். சேதன உரம் வேண்டும். என்ற கொள்கை பற்றி எங்களுக்கு நீங்கள் தொலைக்காட்சியில் வந்து விரிவுரை நடத்த வேண்டாம். அது எங்களுக்கு தெரியும். அதை ஒரே நாளில் செய்ய முடியாது. உலகில் நூற்றுக்கு நூறு சேதன உரத்தால், பயிர் செய்யும் நாடு என்ற ஒன்று கிடையாது.

நெல் விவசாயிகள் மட்டுமல்ல, காய்கறி விவசாயிகள், கிழங்கு விவசாயிகள், தேயிலை பயிர் என நாடு முழுக்க இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகசூல் குறைய போகிறது. இன்றைய நாளை விட, இன்னமும் சில மாதங்களில் நிலைமை மோசமடைய போகிறது. இது தொடர்பாக உங்களுக்கு யாரோ கொடுத்த இற்றுப்போன கயிற்றை நீங்கள் விழுங்கி, சாப்பிட்டு விட்டீர்கள். அதுதான் உண்மை.

ஆகவே ஜனாதிபதி கோட்டாபய அவர்களே, உங்களது பத்தொன்பது மாத அலங்கோல ஆட்சியினால், தோட்ட தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் ஆகிய அனைவரும் இன்று வாழ்விழந்து தெருவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

Posted in Uncategorized

உயிர் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரி ஷானி அபேசேகர பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர, தனதும் தன் குடும்பத்தாரினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபருக்கு விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

மூன்று பக்கங்களைக் கொண்ட அந்த கடிதத்தில், ஷானி அபேசேகர தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விரிவாக விளக்கியுள்ளார்.

அதன்படி, நியாயமாக நடந்துகொண்டு தனதும் தன் குடும்பத்தாரினதும் பாதுகாப்பை உறுதி செய்வீர்கள் என நம்புவதாகவும் ஷானி அபேசேகர பொலிஸ் மா அதிபருக்கு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சுருக்கமாக வருமாறு:

1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி பயிற்சி நிலை உப பொலிஸ் பரிசோதகரான நான் பொலிஸ் சேவையில் இணைந்தேன். கறுவாத்தோட்டம் , மருதானை பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய பின்னர் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி சி.ஐ.டி.யில் முதன் முதலாக கடமைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டேன்.

அத்துடன் கடந்த 2009 ஏப்ரல் முதலாம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் சேவை செய்த பின்னர் மீள சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டு, 2019 நவம்பர் 21 ஆம் திகதிவரை அங்கு கடமையாற்றினேன்.

2020 ஜனவரி 7 ஆம் திகதி காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளரக இடமாற்றம் பெற்றதுடன், 2020 ஜூலை 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கம்பஹா நீதிமன்றில் உள்ள பீ 1536/20 எனும் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டேன்.

இதன்போது கடந்த 2020 நவம்பர் 24 ஆம் திகதி விளக்கமறியலில் இருந்த போது கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நான், பொலன்னறுவை கல்லேல்ல கொவிட் 19 தொற்று இடைத் தங்கல் முகமிலும், பின்னர் வெலிகந்த வைத்தியசாலையிலும் பின்னர் ஐ.டி.எச். வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்றேன்.

அதன்பின்னர் 2021 ஜனவரி 18 ஆம் திகதிவரை இறுதய கோளாறு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றிருந்தேன்.

இவ்வாறான நிலையிலேயே 2021 ஜூன் 16 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றம் அளித்த பிணை அனுமதிக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்டேன்.

எனது பொலிஸ் சேவையில் நான் நேர்மையாக பல விசாரணைகளை முன்னெடுத்தேன். அதனால் இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் அதிகாரிகள், பாதாள உலக குழு உறுப்பினர்கள், பயங்கரவாத குழுக்களை சேர்ந்தோரை நான் கைது செய்துள்ளேன். அவர்களுக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை உள்ளிட்டவை கிடைக்கப் பெறவும் எனது விசாரணைகள் காரணமாகின.

நான் கைது செய்யப்பட முன்னர் 2020.01.7 ஆம் திகதி இரவு 11.23 மணிக்கு எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் எனது குடும்பததாரை கொலை செய்துவிடப் போவதாக மிரட்டப்பட்டிருந்தேன். அது தொடர்பில் எனது மனைவி கடந்த 2020.01.08 ஆம் திகதி முறைப்பாடளித்திருந்தார். எனினும் அதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இதற்கு முன்னர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனுக்கு, தேசிய உளவுச் சேவை வழங்கிய அறிக்கையில் எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். அதனால் எனக்கும், எனது வீட்டுக்கும் மேலதிக அதிரடிப் படை பாதுகாப்பு முன்னாள் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனினால் வழங்கப்பட்டது.

எனினும் நான் சி.ஐ.டி.யிலிருந்து காலிக்கு இடமாற்றப்படும் போது நீங்கள் அந்த பாதுகாப்பினை பறித்தீர்கள்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர், எனக்கு இருந்த உயிர் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இரு துப்பாக்கிகளை பயன்படுத்த பாதுகாப்பு அமைச்சின் ஊடாக எழுத்து மூல அனுமதியைப் பெற்றிருந்தேன். எனினும் நான் கைது செய்யப்பட்டதும் குறித்த துப்பாக்கிகளை எனது மனைவி, பொரளை பொலிஸ் நிலையத்தில் எனது ஆலோசனைக்கு அமைய ஒப்படைத்திருந்தார்.

இந் நிலையில் தற்போது எனது உயிருக்கும், எனது குடும்பத்தாரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நான் முன்னெடுத்த விசாரணைகளில் அரசியல் வாதிகள், இராணுவ, கடற்படையினர், பொலிசார், பாதாள உலக குழு உறுப்பினர்கள், பயங்கரவாத குழுக்களை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த அச்ச்சுறுத்தல்கள் நீண்டன.

ஏற்கனவே எனது பதுகாப்பு தொடர்பில் பாதிக்கப்பட்டோர், சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பிலான பொலிஸ் பிரிவு, மனித உரிமைகள் ஆணைக் குழு, பிரதம நீதியரசர், பொலிஸ் ஆணைக் குழு, சட்ட மா அதிபர் ஆகியோருக்கும் உங்களுக்கும் முறைப்பாடளித்துள்ளேன்.

இவ்வாறான நிலையிலேயே நிலைமையை நியாயமாக ஆராய்ந்து எனதும், எனது குடும்பத்தாரினதும் பாதுகாப்பை உறுதி செய்வீர்கள் எனும் நம்பிக்கையில் இக்கடிதத்தை எழுதிகிறேன்.’ என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.