திருகோணமலை வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு ரெலோ சீருடைத் துணிகள் வழங்கியது

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசம் இலங்கை துறைமுகத்துவாரத்திற்குச் செல்லும் வழியிலுள்ள வாழைத்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய அதிபரினால் தெரிவு செய்து தரப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு திருகோணமலை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) அமைப்பினரால் பாடசாலை சீருடைத் துணிகள் இன்று (03-04-2021) பிற்பகல் மூன்று மணிக்கு வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் அச்சீருடைகளைத் தைத்துக் கொடுப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த தையற்காரர் ஒருவருக்கு அதற்குரிய மொத்தப் பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான ரூபா 18 000 பணத்தை தமிழ் ஈழ விடுதலை இயக்க பிரித்தானிய கிளையின் உறுப்பினர்,ரெலோ ஆரம்பகால உறுப்பினர் கந்தளாயைச் சேர்ந்த குட்டி அண்ணன் அவர்கள் வழங்கி வைத்தார். இதில் ரெலோ நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர், திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் சார்ள்ஸ்,ரெலோ திருகோணமலை மாவட்ட வெளிநாட்டுத் தொடர்பாளர் மணியும் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்க மாவட்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்பேற்றிருந்தனர்.

Posted in Uncategorized

மட்டக்களப்பு மாவட்டத்தின் இனப்பரம்பலைக் குறைப்பதற்கான நடவடிக்கை, ரெலோ செயலாளர் நாயகம் ஜனா பா.உ குற்றச்சாட்டு.

சிவில் பாதுகாப்புப் படையினர் மரமுந்திரிகையை நட்டு இரண்டு இரண்டு ஏக்கராக ஒருவரைப் பராரிப்பதற்கும் விட்டிருப்பதைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் அந்த நபர்களுக்கே அவை பிரித்துக் கொடுத்து இங்கு ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தின் இனப்பரம்பலைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகவே தோன்றுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய தினம் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு பிரதேசத்தில் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரையில் மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்ளப்படுவது குறித்த களவிஜயம் மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு கிராம சேவகர் பிரிவில் கந்தர்மல்லிச்சேனை என்கின்ற மேய்ச்சற்தரைப் பிரதேசத்தை இன்று நாங்கள் பார்வையிட வந்திருக்கின்றோம். ஏற்கனவே நாங்கள் பண்ணையாளர்களுடன் இந்தப் பிரசேத்தைப் பார்வையிட்டோம். இது தொடர்பில் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தோம். இது சம்மந்தமாகப் பட்டிப்பளைப் பிரதேச செயலாக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராய்ந்து இப்பிரதேசத்திலே சட்டவிரோதமாக நடைபெறும் மரமுந்திரிச் செய்கையை நிறுத்த வேண்டும். காலம் காலமாக இப்பிரதேசம் பண்ணையாளர்களினால் மேய்ச்சற்ரையாகப் பாவிக்கப்பட்டுவந்த பிரதேசம். இது தொடர்ந்தும் மேய்ச்சற்தரையாகவே பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறான மேய்ச்சற்தரைப் பிரசேத்தில் மரமுந்திரிச் செய்கை என்பது நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலே முடிவெடுக்கப்பட்டது. அம்முடிவு பிரதேச செயலாளரின் ஊடாக மாவட்ட வனஇலாகா திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டும் தற்போது நாங்கள் வருகை தந்து பார்க்கின்றபோது மேற்படி மரமுந்திரிகைச் செய்கை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதனைப் பார்க்கும்போது ஒன்று எங்களுக்கு விளங்குகின்றது. கடந்த காலங்களில் மரமுந்தரிகைச் செய்கையை ஊக்குவிப்பதென்று சொல்லி மட்டக்களப்பில் வடக்கு மற்றும் மண்முனைப் பற்றுப் பிரதேசங்களில் ஒருவருக்கு மூன்று ஏக்கர் மரமுந்தரிச் செய்கைக்குக் கொடுத்ததைப் போன்று தற்போது இந்த தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரையை அபகரித்து சுமார் ஆயிரத்து ஐநூறு ஏக்கரில் மரமுந்திரிச் செய்கை பண்ணப்பட்டு எமது அண்மித்த மாவட்டமான அம்பாறை மாவட்டப் பெரும்பான்மையின மக்களுக்கு இது பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவே எமக்குத் தோணுகின்றது.

ஏனெனில் இந்த மரமுந்திரிச் செய்கையிலே குறிப்பிட்டவர்களது பெயர்களைப் பதிவு செய்து இரண்டு ஏக்கர் வீதமாக அவர்களைப் பராமரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. ஒட்டுமொத்தமாக இந்த சிவில் பாதுகாப்புப் படை மரமுந்திரிகையை நட்டு இரண்டு இரண்டு ஏக்கராக ஒருவரைப் பராரிப்பதற்கும் விட்டிருப்பதைப் பார்க்கும் போது எதிர்காலத்தில் அந்த நபர்களுக்கே அந்த ஏக்கர்களை பிரித்துக் கொடுத்து இங்கு ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்தி மட்;டக்களப்பு மாவட்டத்தின் இனப்பரம்பலைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகத் தான் நாங்கள் இதனைக் கண்கூடாகப் பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல்: சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் விசேட கலந்துரையாடல்!

மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேண்டுகோளின் பேரில், அலரி மாளிகையில் குறித்த கலந்துரையாடல் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த தயாசிறி ஜயசேகர, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அதேபோன்று பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த பசில் ராஜபக்ஷ, ஜி.எல்.பீரிஸ், சாகர காரியவசம் உள்ளிட்டோரும் பங்பேற்றிருந்தனர்.

ஆனால் குறித்த பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இதுவரை எந்ததொரு தகவலையும் இரு கட்சிகளும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இந்த அரசு சிங்கள மக்கள் மத்தியில் பலவீனமடைவதாலேயே மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுகின்றது ரெலோ செயலாளர் நாயகம் ஜனா பா.உ

இந்தக் கொடூரமான ஆட்சி, ஒட்டுமொத்த சிங்கள மக்களினாலும் கொண்டு வரப்பட்ட ஆட்சி, இன்று சிங்கள மக்கள் மத்தியிலேயே பலவீனமடைந்து கொண்டு வருகின்றது. எனவே மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான அறிகுறியாகக் கூட இது இருக்கலாம் என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

மறைந்த ஓய்வு நிலை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறும் திங்கட் கிழமையை அரசு துக்க தினமாக அங்கீகரிக்கா விடினும் தமிழ் பேசும் மக்கள் இதனை துக்கநாளாக அனுள்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒடுக்கப்பட்ட தமிழினத்திற்காக ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகின்றோம். தமிழ் மக்கள் மீது நடந்த அநீதியைத் தட்டிக் கேட்டது மட்டுமல்லாது 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திலே முள்ளிவாய்க்காலில் இலட்சக் கணக்கான எமது மக்கள் கொல்லப்பட்டதற்கு ஐநா மனித உரிமைப் பேரவைக்கு ஒரு சாட்சியாளராக இருந்திருக்கின்றார். அந்த வகையில் எமது இனம் அவருக்கு கடமைப்பட்டதாக இருக்கின்றது, அந்த அடிப்படையில் அவருக்காக எமது கண்ணீர் அஞ்சிலியைச் செலுத்துகின்றோம்.

அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் திங்கட்கிழமையை அரசு துக்கதினமாக அனுஸ்டிக்க வேண்டும் என்று எமது கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். அரசு அதற்குச் செவிசாய்க்கின்றதோ இல்லையோ நாங்கள் தமிழ் பேசும் இனம் எதிர்வரும் திங்கட்கிழமையை எமது இனத்தின் துக்ககரமான நாளாகப் பிரகடணப்படுத்தி முடிந்தளவு எமது வீடுகளிலும், வியாபாரா நிலையங்களிலும் வெள்ளைக் கொடிகளையோ, கறுப்புக் கொடிகளையோ பறக்க விட வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.

நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் பொதுஜனப் பெரமுன கட்சியினர் இந்த நாட்டின் ஆட்சியை நடத்திக் கொண்டு வருகின்றார்கள். 1987ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த மகாணசபை முறைமை முற்றாக நிராகரிக்கப்பட்டு ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதிகளின் ஆளுமையின் கீழ் ஆட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருகின்றது. கடந்த ஜெனீவா கூட்டத் தொடரின் போது கூட மாகாணசபைத் தேர்தல்கள் முறையாக நடாத்தப்பட்டு முழு அதிகாரங்களும் பரவலாக்கப்பட்டு அந்த அந்த மாகாண மக்களின் கைகளிலே அந்த அந்த அரசுகள் கையளிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் மேலோங்கியிருக்கின்றன. அவ்வடிப்படையில் மாகாணசபைத் தேர்தல்கள் மிக விரைவாக நடைபெற வேண்டும்.

மாகாணசபைத் தேர்தல் எந்த முறையில் நடைபெற வேண்டும் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. தேர்தல்கள் ஆணையகம் பழைய முறைப்படி மாகாணசபைத் தேர்தலை நடாத்தி புதிய அரசியலமைப்பினூடாகப் புதிய தேர்தல் முறையைக் கொண்டு வரலாம் என்று ஆலோசனை கூறியிருக்கின்றார்கள். ஜெனீவா கூட்டத்தொடரின் போது ஜுலை மாதமளவில் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறும் என்று கூறியிருந்தாலும். இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே மாகாணசபைத் தேர்தலைக் கலப்பு முறையில் எழுபதுக்கு முப்பது என்ற அடிப்படையில் நடத்துவதற்கு விரும்புகின்றார்கள் என்ற கருத்து தெரிவிக்கப்படதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அவ்வாறு எழுபதுக்கு முப்பது என்ற கலப்பு முறையிலே அந்தத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமாக இருந்தால் அந்தச் சட்டம் மீண்டும் பாராளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு பலதரப்பட்டவர்களாலும் விவாதிக்கப்படும் போது இந்த ஆண்டிலே இந்தத் தேர்தல் நடைபெறவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை இதைத்தான் இந்த அரசாங்கமும் விரும்புகின்றதோ தெரியவில்லை.

ஏனெனில் இந்தக் கொடூரமான ஆட்சி, ஒட்டுமொத்த சிங்கள மக்களினாலும் கொண்டு வரப்பட்ட ஆட்சி, இன்று சிங்கள மக்கள் மத்தியிலேயே பலவீனமடைந்து கொண்டு வருகின்றது. எனவே இந்தத் தேர்தலைப் பிற்போடுவதற்கான அறிகுறியாகக் கூட இது இருக்கலாம். எதுவாக இருந்தாலும் மாகாணசபைத் தேர்தலகள் மிக விரைவில் நடத்தப்பட்டு அந்த அந்த மாகாண மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய ஒரு சூழலை இந்த அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

Posted in Uncategorized

நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்! மாகாண சபையைத்தான் எதிர்க்கிறேன்!-சரத் வீரசேகர

தமிழ் மக்களுக்கு தான் எதிரானவன் அல்லன் எனவும் மாகாணசபை முறைமையையே எதிர்ப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “மாகாண சபை முறைமைக்கு சரத் வீரசேகர ஆகிய நான் எதிரானவனே. இதனை அன்றும் எதிர்த்தேன், இன்றும் எதிர்க்கிறேன், நாளையும் அதே கருத்தைத்தான் கொண்டுள்ளேன். அது இந்தியாவால் எமக்குப் பலவந்தமாகத் திணிக்கப்பட்ட ஒன்று.

மாகாணசபை முறைமை என்பது ஒரு தேவையற்றதாகும். மத்திய அரசாங்கம் என்பது ஒன்றுதான். ஒன்பது மாகாணசபைகள் காணப்படும்போது அந்த ஒன்பது மாகாண சபைக்கும் தனியான நிர்வாகம் காணப்படும். அவ்வாறு ஒன்பது மாகாணத்திற்கும் தனியான நிர்வாகம் இருக்க முடியாது.

ஆனால், அரசாங்கம் மாகாணசபை முறையை வேண்டுமெனத் தீர்மானிக்குமானால் அந்தத் தீர்மானத்தினை நான் எதிர்க்கப்போவதில்லை.

வடக்கில் மாகாணசபை இல்லாது போய் மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. தற்பொழுது அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது. கடந்தமுறை ஆட்சியிலிருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் மத்திய அரசாங்கத்தால் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் அரைவாசி நிதியினைப் பயன்படுத்தாது திறைசேரிக்குத் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலைமைதான் இங்கே காணப்படுகின்றது.

ஆகவே, மாகாண சபை என்பது மக்களுக்குப் பிரயோசனமான ஒரு விடயமாக அமைய வேண்டும். எனினும், வடக்கு மக்கள் மாகாண சபையினை விரும்புகின்றார்கள். அதுவொரு அரசியல் காரணமாக இருக்கலாம். ஆனால், சரத் வீரசேகர ஆகிய நான் தனிப்பட்ட ரீதியில் மாகாணசபை முறைமைக்கு எதிரானவனே.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தீர்மானித்தால் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஏற்றவாறு நான் செயற்படத் தயாராக உள்ளேன். எனினும், நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை மீது எவருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது – ஜயநாத் கொலம்பகே

சில மேற்குலக நாடுகள் தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மனித உரிமைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. தற்போதைய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அதனை இலக்கு வைத்து அதற்கெதிரான நடவடிக்கைகள் சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படுகிறன. எவ்வாறிருப்பினும் எந்த காரணியை அடிப்படையாக் கொண்டும் இலங்கை மீது எவருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என்று வெளியுறவுகள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகளால் முன்வைக்கப்படுகின்ற பிரதான குற்றச்சாட்டுக்களான நல்லிணக்கம் , பொறுப்பு கூறல் மற்றும் காணாமல் போனார் விவகாரம் உள்ளிட்டவற்றுக்கு வெகுவிரைவில் பதிலளிக்கப்படும் என்றும் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் கூறிய விடயங்கள் சுருக்கமாக வருமாறு,

ஐ.நா. விவகாரம்

இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றனவா என்பதற்கான ஆதாரங்கள் உள்ளனவா? 2012, 2013, 2014 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளிலேயே இலங்கைக்கு எதிரான பிரேரணை ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அதனை இலக்கு வைத்து ஏன் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று ஐ.நா.விடம் கேள்வியெழுப்புகின்றோம். இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தவறானவையாகும். இலங்கை மீது யாருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது.

கொவிட் சடலம்

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு சுகாதார மற்றும் மருத்துவ ரீதியிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டது. பின்னர் அந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டமையும் மருத்துவ ரீதியிலான காரணிகளின் அடிப்படையிலாகும். இவை அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அல்ல. அதற்கமைய இதுவரையில் சுமார் 69 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தில் சில சமூகத்தினர் கவலையடைந்திருந்தமையை நாம் புரிந்து கொள்கின்றோம். அதற்கு எதிராக நாம் வாதாடவில்லை. எனினும் தற்போது அந்த தீர்மானத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம்.

சிறுபான்மை மக்கள்

சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் தான் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் சகல இன மக்களுக்காகவும் செயற்படுவதாகவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால் நீங்கள் ஒரு கருத்தை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கிறீர்கள். நான் சகல மக்களுக்குமான ஜனாதிபதி என்றே அவர் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அத்தியாவசியமானது. 2015 – 2019 காலத்தில் காணப்பட்ட இரு கட்சிகளை பிரதானமாகக் கொண்ட தேசிய அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் மூலம் நாம் சிறந்த பாடத்தைக் கற்றுக் கொண்டுள்ளோம். எதிர்வரும் சில வாரங்களில் உண்மையான பின்னணியை அறிந்து கொள்ள முடியும்.

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அது தொடர்பில் என்னால் கருத்து தெரிவிக்க முடியாது.

காணாமல் போனோர் விவகாரம்

2015 இல் இலங்கை அரசாங்கத்தால் இனை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 பிரேரணைக்கமைய காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் அமைக்கப்பட்டது. அதற்கமை காணாமல் போனதாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

காணாமல் போனதாகக் கூறப்படுபவர்களது உறவினர்களால் ஏன் பொலிஸ் நிலையத்திலோ அல்லது ஜனாதிபதியிடமோ முறைப்பாடளிக்க முடியும். அவர்களால் முறைப்பாடளிக்கப்பட்டால் அதற்கேற்ப சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறுபவர்கள் ஒரு சிலருடைய தேவைக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

காணாமல் போனோல் , பொறுப்பு கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு 2009 – 2015 க்கு இடைப்பட்ட காலத்தில் 3 ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. எனினும் 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவற்றின் செயற்பாடுகளை தொடர முடியாமல் போனது. எவ்வாறிருப்பினும் ஜனாதிபதியால் தற்போது மீண்டும் இது தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

சர்வதேச நாடுகளின் தேவை

சில நாடுகள் அவற்றின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மனித உரிமைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. எனினும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் பெருமளவான நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வோம்.

2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இம்முறை இலங்கைக்கு எதிரான வாக்குகளில் ஒன்று குறைவடைந்துள்ளது. 14 நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தன. எனவே காலப்போக்கில் ஏனைய நாடுகளின் தீர்மானங்களிலும் மாற்றங்கள் ஏற்படும். எனவே வெகுவிரைவில் நல்லணிக்கம் , காணாமல் போனோர் மற்றும் பொறுப்புகூறல் என்பவற்றுக்கான பதிலை வழங்குவோம்.

ஆன்மீக உடை தரித்த துணிச்சலான போராளி ஐாேசப் ஆண்டகை -ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

இறைபதம் அடைந்த முன்னாள் மன்னார் மாவட்ட ஆயர் இராஐப்பு ஐோசப் அவர்கள் உண்மையில் சீருடை தரிக்காத ஆன்மிக உடை தரித்த போராளி என்றால் மிகையாகாது.

ஈழத் தமிழர் வரலாற்றில் அவரது பணிகள் மகத்தானவை விடுதலைப் போராட்ட காலங்களில் அரசபடைகளால் நடைபெற்ற அட்டூழியங்களை துணிச்சலாக வெளி உலகிற்கு தன்னால் இயன்ற வரை ஊடகங்கள் வாயிலாகவும் சர்வதேச அமைப்புக்கள் மூலமாகவும் வெளிப்படுத்தியவர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை உதவிகளை பெற்றுக் கொடுப்பதில் தன்னால் இயன்ற பணிகளை ஒன்றிணைத்தவர் கொள்கைக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை விட உறுதியாக உண்மையாக செயலாற்றியவர்.

இறுதிப்போரில் நடைபெற்ற அனைத்து மனிதப் படுகொலைகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான கணக்கெடுப்பை ஒன்று திரட்டி சர்வதேச அரங்கிற்கு அம்பலப்படுத்தியதுடன் தானே போரின் சாட்சியாக பதிவு செய்தார்.

மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களில் 2009 ஆண்டிற்கு முன்னர் மதிப்பிற்குரிய ஆண்டகை அவர்கள் ஆற்றிய பணிகள் பலவற்றை நேரில் பார்கக் கூடிய சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைத்தது. ஆனால் அவர் இறைபதம் அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் சுகவீனம் அடைந்து மக்கள் பணியாற்ற முடியாத நிலையில் இருந்த போதும் அவரைப் பார்க்க இரண்டு சந்தர்ப்பங்கள் கிடைத்தது ஆனால் அவர் பணியாற்றிய அளவிற்கு யாராலும் முடியவில்லை என்ற நிலைதான் இன்றுவரை தொடர்கிறது.

ஐாேசப் ஆண்டகைக்கு நிகர் அவரே தான் உண்மையில் இராஐப்பு ஐாேசப் ஆண்டகை சீருடை தரிக்காத போராளியாகவும் தேர்தல் சீட்டில் நிற்காத மக்கள் பிரதி நிதியாகவும் தமிழ் இனத்திற்காக பணியாற்றினார் என்பதை வரலாறு சொல்லும் அத்துடன் தமிழர் வரலாற்றில் சிறந்த மாமனிதர்.

சபா குகதாஸ்
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்
ரெலோ இளைஞர் அணி தலைவர்

Posted in Uncategorized

புகழுடல் எய்திய ஆண்டகைக்கு எம் இதய அஞ்சலிகள்- ரெலோ

தமிழ் தேசியத்திற்காய் அஞ்சாது ஒலித்த குரல் மெளனித்து விட்டது. அதி வணக்கத்துக்குரிய ஓய்வுநிலை ஆண்டகை இராயப்பு யோசப்பு அவர்கள் தனது எண்பதாவது வயதில் பூவுடல் நீத்து புகழுடல் எய்தியுள்ளார்.

தமிழினத்தின் விடிவுக்காய் உரிமைக்காய் தொடர்ந்தும் அஞ்சாது குரல் கொடுத்து வந்த மாமனிதரின் மறைவு தமிழ் மக்களைப் பெரும் கவலை கொள்ள வைத்திருக்கிறது.

யுத்த காலத்திலே எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை துணிச்சலோடு எதிர் கொண்டதோடு மாத்திரமல்லாமல் சர்வதேச அரங்கில் எடுத்துரைத்தார். தானே அதற்கு சாட்சியமாக ஆதாரங்களை பதிவு செய்தவர். அன்னை மடுமாதாவின் ஆலய வளாகத்தை யுத்த சூனியப் பிரதேசமாக பிரகடனம் செய்து பல்லாயிரக்கணக்கான தஞ்சமடைந்த மக்களை பாதுகாத்தவர். எமது இனம் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வருகிறது, எங்கள் இனத்திற்கான விடுதலை அவசியம் என்பதை தெள்ளத்தெளிவாக சர்வதேசத்திற்கும் தொடர்ந்து வந்த அரசாங்கங்களுக்கும் துணிச்சலோடு எடுத்துக்கூறிய பெருந்தகை.

அரசியல் கட்சிகள் தனித்து பயணிப்பதை விட ஒன்றிணைவதன் அவசியத்தை வலியுறுத்தி அத்தோடு அவர்கள் ஒன்று படுவதற்காகவும் அரும்பாடுபட்டவர். விடுதலை இயக்கங்களுக்கு இடையில் இருந்த முரண்பாடுகளை தணித்து அவர்களுக்குள்ளே ஒரு சமாதான சூழ்நிலை ஏற்படுத்துவதற்கு பெரிதும் முயன்று வெற்றி கண்டவர். இறுதி வரைக்கும் பிரிந்து நிற்கும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைய வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்தி வந்ததோடு மாத்திரமல்லாமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சகல முயற்சிகளையும் எடுத்தவர்.

இன்றுள்ள ஜனாதிபதி யுத்த காலத்தில் பாதுகாப்பு செயலராக கடமையாற்றிய பொழுது ஆண்டகை எமது தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களோடு பாதுகாப்புச் செயலாளரை சந்திப்பதற்கான ஏற்பாட்டினை முன்னெடுத்து அவர் அலுவலகத்திலேயே நேரடியாகச் சென்று தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த அத்துமீறல்கள் மனித உரிமை குற்றங்கள் புரியப் படுவதாகவும் இதை கண்டிப்பதாகவும் உடனடியாக முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என நேரடியாக கண்டித்தவர். அந்தக் கணத்தில் துளியளவும் விட்டுக் கொடுப்பில்லாமல் துணிச்சலோடு செயலாளர் அதிர்ந்து போகும் அளவிற்கு தன்னுடைய கருத்தினை உறுதியாக முன்வைத்தவர்.

அதோடு நின்றுவிடாது எமது மக்களுடைய கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கும் மறுவாழ்வு மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கும் அயராது சர்வதேச சமூகத்தோடும் அரசியல் தலைவர்களோடும் தொடர்ந்து முன்னின்று உழைத்தவர். தமிழ் இனத்திற்காக, மதக் கோட்பாடுகளையும் கடந்து அயராது குரல் கொடுத்து வந்த அன்னார் இன்று எம்மை விட்டு பிரிந்தாலும் தொடர்ந்து தமிழ் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்பதில் ஐயமில்லை.

அன்னாரின் ஆத்மா இறைவனடியில் சாந்தி அடையப்பிரார்த்திக்கிறோம். அன்னாருக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இதயபூர்வமான அஞ்சலிகள்.

ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோ

இறுதி நல்லடக்க நாளன்று மன்னாரில் வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினம் அனுஷ்டிக்க அழைப்பு! – ரெலோ மன்னார் நகர முதல்வர்

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் இறுதி அடக்க நாளான எதிர்வரும் திங்கட்கிழமை அன்று மன்னார் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும், மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கோரியுள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்,

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இனம், மதம், மொழி கடந்து மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதியைப் பெற்றுக் கொடுக்கத் தொடர்ந்தும் குரல்கொடுத்தார்.

தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்ற பாகுபாடு இன்றி அனைவரையும் நேசிக்கும் ஒருமனிதர். ஆன்மீகத்திற்கு அப்பால் மனித நேயத்தை நேசித்தவர். காணாமல் ஆக்கப்பட்டவர், கடத்தப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இறுதி மூச்சுள்ள வரை குரல் கொடுத்தவர்.

இவரது இழப்பு ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் பாரிய இழப்பு. தமிழ்பேசும் மக்கள் ஒற்றுமையுடன் துக்க தினத்தை நினைவு கூற வேண்டிய கடற்பாட்டில் உள்ளோம்.

எனவே ஆயர் அவர்களின் இறுதி அடக்க நாளான எதிர் வரும் திங்கட்கிழமை மன்னார் வர்த்தகர்கள் கமது வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினத்தை அனுஷ்டிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்களின் தரத்தை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

உணவுப் பொருட்களின் தரத்தை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் என ரெலோ இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இறக்குமதியான தேங்காய் எண்ணெய்யில் புற்று நோய்க்குரிய இராசயணப் பதார்த்தம் உள்ளதாக வெளியான செய்தி மக்களிடையே பாரிய அச்சத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் உணவு தயாரிப்பில் பிராதான பொருள் தேங்காய் எண்ணெய்யாகும் அவ்வாறு இருக்கையில் நாடுமுழுவதும் உள்ள மக்கள் எண்ணெய்க் கொள்வனவில் பலத்த சந்தேகங்களை மனதளவில் உடையவர்களாக அச்சத்துடன் நின்மதியற்றவர்களாக மாறியுள்ளனர்.

அத்துடன் நாட்டில் பெரும்பாலான மக்கள் உணவுச் சாலைகளில் உணவினை பெற்று உண்பவர்களாக இருப்பதால் அவர்களும் பல குழப்பங்களுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி யாரிடம் முறையிடுவது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இவ்வாறான நிலையை உடனடியாக மாற்றி உணவுப் பொருட்களுக்கான உத்தரவாதத்தை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் சகல உணவுப் பொருட்களுக்குமான தர நிர்ணயம் மற்றும் சுகாதார உத்தரவாதம் போன்றவற்றை சுங்கப்பகுதியில் உறுதி செய்யக் கூடிய பக்கசார்பற்ற நிலையை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் உருவாக்க வேண்டும். தவறு நடைபெறுகின்ற போது சம்பந்தப்பட்ட தரப்பு யாராக இருந்தாலும் அதி உச்ச தண்டனையை சட்டத்தின் முன் வழங்க வேண்டும்.

கொவிட் 19 ஏற்கனவே மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் வருமானங்கள் இல்லாமல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்த நிலையில் அவலப்படும் போது அடிப்படை விடையங்களும் அரசிலாக்கப்படுமாக இருந்தால் நாடு அபாய நிலையை சென்றடையும். இதனை தவிர்க்க உடனடி நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும்.